மன்னனும் மடலும் – பேருரை

இந்த உரையைப் போன்றே மாதந்தோறும் கோவிலில் திருமால் குறித்த ஆன்மீகச் சொற்பொழிவுகள் நடைபெற சிங்கப்பூர் அரசின் இந்து அறக்கட்டளை வாரியம் முடிவெடுத்துள்ளது. அறிஞர்கள் பெருமளவில் பங்குபெற வேண்டும்.

‘மன்னனும் மடலும்’ பேருரையில் இன்று முனைவர்.செல்லக்கிருஷ்ணன் திருமங்கையாழ்வாரின் ‘சிறிய திருமடல்’ பற்றி உரையாற்றினார்.
 
வைணவத்தில் திருமாலை வழிபடும் ஐந்து நிலைகளைச் சொல்லி, அர்ச்சையில் நிறுத்தினார். திருமங்கையாழ்வார் 82 திவ்யதேசங்களைப் பாடியுள்ளார். அவரே நமக்கு அர்ச்சாவதாரத்தின் பெருமையை அதிக அளவில் சொல்லிச் சென்றார் என்று இணைத்தார் செல்லக்கிருஷ்னன்.
 
பெண்கள் மடல் ஏறுவது வழக்கம் இல்லை. வள்ளுவரும் இதையே சொல்கிறார். ஆனால், பரகால நாயகி பாவத்தில் திருமங்கைமன்னன் சிறிய திருமடலில் தனக்கும் பெருமானுக்குமான நெருக்கத்தை வெளிப்படுத்துகிறார்.
 
இராமன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தான் என்று சிறிய திருமடல் சொல்கிறது. ஆனால் இராமாயணம் இலக்குவன் அறுத்தான் என்கிறது. இந்த முரணை வியாக்யான கர்த்தர்கள் ‘இலக்குவன் இராமனின் கை போன்றவன். எனவே இராமன் அறுத்தான் என்பது சரியே’ (வாம ஹஸ்தம்) என்று நிறுவினார்.
 
தற்போது அவரது உரையின் காணொலி தயாராகிக்கொண்டிருக்கிறது. கிடைத்ததும் வெளியிடுகிறேன்.
 
இந்த உரையைப் போன்றே மாதந்தோறும் கோவிலில் திருமால் குறித்த ஆன்மீகச் சொற்பொழிவுகள் நடைபெற சிங்கப்பூர் அரசின் இந்து அறக்கட்டளை வாரியம் முடிவெடுத்துள்ளது. அறிஞர்கள் பெருமளவில் பங்குபெற வேண்டும்.
 
சிங்கப்பூரில் நான் பங்கெடுக்கும் இறுதி நிகழ்ச்சியாகத் திருமங்கையாழ்வார் குறித்த சொற்பொழிவு நடந்தது அடியேன் செய்த பேறு.திருமங்கையாழ்வார் சொற்பொழிவு

உங்கள் புழைக்கடை

‘உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்’ என்னும் பாசுரத்தில் ஆச்சார்ய லக்ஷணம் பேசப்படுகிறது.

‘செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோவில் சங்கிடுவார் போதந்தார்’ என்னும் பிரயோகம் காவி உடை சந்நியாசிகளைப் பற்றிய ஆழ்ந்த பொருளுடைய ஒன்று.

வெளிப்படைப் பொருள்: செங்கல் ( காவி) உடை உடுத்திய, வெண்மையான பற்களை உடைய சந்நியாசிகள் தத்தமது கோவில்களுக்குச் செல்கின்றனர். செல்லும் பொது தங்களது சங்கை முழங்கிக்கொண்டு செல்கின்றனர். எனவே பொழுது விடிந்து விட்டது என்பதை உணர்வாயாக.

உள்ளுறைப் பொருள்: ஆச்சார்யர்களது வெளித்தோற்றம் அழுக்குடையதாகத் தெரிந்தாலும் அவர்களது உள்ளம் தூய்மையானது. ‘செங்கல் பொடிக்கூறை’ என்பது அவர்களது வெளித்தோற்றத்தையும், ‘வெண்பல் தவத்தவர்’ என்பது அவர்களது அழுக்கடையாத உள்ளத்தையும் குறிக்கிறது. ‘வெண்பல்’ என்பது ஞானத்தைக் குறிப்பதாகவும் கொள்வது சம்பிரதாயம்.

சில பாடல்களுக்கு முன் வந்த ‘புள் அரையன் கோவில் வெள்ளை விளி சங்கு’ என்பதும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. பொழுதே விடியவில்லை என்றால் கோவிலில் இருந்து சங்கொலி எப்படி எழும் என்னும் கேள்வி எழலாம். அதற்கான விடை இன்றைய பாடலில் – சந்நியாசிகள் சங்கம் ஒலிக்கிறார்கள்.

‘புழைக்கடை’ (வீட்டின் பின்புறம்), ‘வாவி’ (பெரிய கிணறு, சிறிய குளம்) என்னும் அரிய தமிழ்ச் சொற்கள் நம் கண்களைப் பனிக்கச் செய்கின்றன. நாம் இழந்துள்ள எத்தனையோ விஷயங்களில் இவ்வரிய சொற்களும் சேர்த்தி.

#ஆண்டாள் #திருப்பாவை

ஆழ்வார்கள் 'மானுடம்' பேசவில்லையா?

எழுத்தாளரைப் புகழுங்கள், அதற்கு ஆழ்வார்களை ஏன் இழுக்கிறீர்கள்? 2016ல் கவிதை எழுதும் ஒருவரும் கி.பி.800ல் பாடல் பாடிய ஆழ்வார்களும் ஒப்பு நோக்கத் தக்கவர்களா? ஆழ்வார்களின் மன நிலை என்ன என்பதை நீங்கள் அறிந்ததுண்டா?

சமீபத்தில் ஒரு நிகழ்வில் ‘ஆழ்வர்கள் மானுடம் பற்றிப் பாட மறுக்கிறார்கள்’ என்றும் ‘மானுடம்’ பற்றி ஒரு கவிஞர் எழுதுகிறார் என்று அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் ஒரு பேச்சாளர் பேசியுள்ளார்.

எழுத்தாளரைப் புகழுங்கள், அதற்கு ஆழ்வார்களை ஏன் இழுக்கிறீர்கள்? 2016ல் கவிதை எழுதும் ஒருவரும் கி.பி.800ல் பாடல் பாடிய ஆழ்வார்களும் ஒப்பு நோக்கத் தக்கவர்களா? ஆழ்வார்களின் மன நிலை என்ன என்பதை நீங்கள் அறிந்ததுண்டா?

ஒரு உதரணம் சொல்கிறேன். திருமங்கையாழ்வார் திருமாலைத் தரிசிக்க தேரழுந்தூர் என்னும் ஊருக்கு வருகிறார். கையில் வில்லுடன் ராஜ அலங்காரத்துடன் அரசன் நிற்கிறான். ‘எம்மைப் பாடுங்கள்’ என்று ஆழ்வாரைக் கேட்கிறான். ‘மானுடரை நான் பாடுவதில்லை’ என்று சொல்லி ஆழ்வார் திரும்புகிறார். ஒரு இடத்தில் அவரால் நகர முடியவில்லை. தனது கால்கள் விலங்கினால் கட்டப்பட்டு இருப்பது போல் உணர்கிறார். திரும்பிப் பார்த்தால் இறைவன் ‘தேவாதிராஜன்’ என்னும் பெயருடன் நின்றுகொண்டிருக்கிறான்.

தந்தை காலில் பெருவிலங்கு தாளவிழ நள்ளிருட்கண்
வந்த எந்தை பெருமானார் மருவிநின்ற ஊர்போலும்
முந்தி வானம் மழைபொழியும் மூவாஉருவின் மறையாளர்
அந்தி மூன்றும் அனலோம்பும் அணியார்வீதி அழுந்தூரே.

என்று பாடுகிறார். இதில் மானுடம் பாடவில்லை என்பதால் திருமங்கையாழ்வார் மனிதர் இல்லை என்று ஆகிறதா? இறையைப் பாடுபவர்கள் மானுடர்களைப் பாடுவது இல்லை என்பது அக்கால ஒரு அறம்.

திருஇந்தளூர் என்னும் திவ்யதேசம். இதே ஆழ்வார் அங்கும் செல்கிறார். பாம்பணையில் துயிலும் பரிமள அரங்கன் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. கோவில் மூடியிருக்கிறது. ஆழ்வார் பாடுகிறார் :

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து; அடியோர்க்கு
தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு,
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்!
வாசி வல்லீர் இந்தளூரீரே! – வாழ்ந்தே போம் நீரே!

‘உம்முடைய அழகுக்கு நான் அடிமை என்கிற உண்மையை நீ அறிந்தும் எனக்குக் காட்சி கொடுக்காமல் கதவை மூடிக்கொண்டுள்ள நிலையில் நீரே வாழுந்து போங்கள்’ என்று நேரிடையாகப் பாடுகிறார். அப்படிப்பட்டவர்கள் ஆழ்வார்கள்.

தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் ஒரு பாசுரம்:

அமரவோர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதி
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்களேனும்
நுமர்களைப் பழிப்பராகில் நொடிப் பொழுதோர் ஆங்கே
அவர்கள் தான் புலையர் போலும் அரங்கமா நகருளானே

நான்கு வேதங்களை ஓதிய அந்தணர்களில் தலைவராக இருப்பினும், இழி நிலையில் உள்ள உங்களைப் பழித்து ஒரு சொல் சொன்னாலும் அந்த அந்தணரே புலையராக ஆவார் என்று சொன்னீரே அரங்க மாநகர் அப்பனே’ என்னும் பொருளில் பாடுகிறார். இந்த இடத்தில் மானுடப் பார்வை, சமூக நீதி இல்லையா?

இன்னொரு பாசுரம்:

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தானிலாத சண்டாள சண்டாளர்களாயினும்
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் தன் அருளில்
கலந்தார் தம் அடியார் தம் அடியார் எம் அடிகளே

‘சாதிகள் அனைத்திலும் கீழானதிலும் எந்த நன்மையையும் இல்லாத சண்டாளர் சாதியில் பிறந்து அவர்களில் இழிந்த சண்டாளராக இருந்தாலும், வலக்கையில் சக்கரம் ஏந்தியுள்ள திருமாலின் அடியவர் என்று அறிந்தால் அவரின் அடியாரின் அடியார் யாரோ அவருக்கு நான் அடிமை’ என்று கூறுகிறார் ஆழ்வார். இதில் மானுடம் இல்லையா?

பெரியாழ்வார் பாசுரம் ஒன்று:

அண்டக் குலத்துக் கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டக் குலத்தை எடுத்துக்களைந்த இருடிகேசன் தனக்கு
தொண்டக் குலத்திலுள்ளீர் ! அடிதொழுது ஆயிரம் நாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்த்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே

உங்கள் பழைய குலத்தை விட்டு இன்று தொண்டர் குலத்தில் ஒன்று கூடி, நாராயணனுக்குப் பல்லாண்டு பாடுவோம்’ என்னும் பொருள் பட அமைகிறது இப்பாசுரம். மானுட ஒருமை இங்கு பேசப்படவில்லையா ?

மேடைகளில் பிதற்றுவது இருக்கட்டும். பிதற்றுவது உங்கள் உரிமை. ஆனால் படித்துவிட்டுப் பிதற்றுங்கள். படித்தது போல் நடிக்காதீர்கள். கொஞ்சமாவது படியுங்கள்.

என்னைப்பற்றிய பிம்பங்களை நான் உருவாக்கிக் கொள்வதில்லை. பிம்பங்களுக்காக வாழ வேண்டியிருக்கும் என்கிற பயம் தான் காரணம். ஆனால் சில பிம்பங்கள் உருவானால் தான் பல வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட, ஒரு விதமான பொது நம்பிக்கைகள் உள்ள கூட்டங்களில் அவர்களுக்கு ஏற்றவாறு நடிக்க / பேச வேண்டியுள்ளது. அப்படி நடிப்பதால் பல கதவுகள் திறக்கின்றன என்பதை உணர்கிறேன்.

நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு இல்லை. கதவுகள் மூடியே இருக்கின்றன.

கதவுகள் திறக்கும் வரை பிதற்றுபவர்கள் பிதற்றட்டும்.

சிறுபுலியூர்க் கிளி சொன்ன செய்தி

கண்ணன் சேஷாத்ரி ‘அருமா கடலமுதன்’ பற்றிப் பேசினாலும் பேசினார் இந்த முறை அவசியம் சிறுபுலியூர்  என்ற தீர்மானத்துடன் தேரழுந்தூரிலிருந்து ஒரு நாள் மாலை கிளம்பினேன். தம்பி தான்  சாரதி.

பச்சை வயல்கள் சூழ்ந்த தேரழுந்தூர்- திருவாரூர் சாலையில் உள்ளது சிறுபுலியூர்.கோவில் வாசலுக்கு வந்தவுடன்  தனியான ஒரு தீவிற்கு வந்தது போல இருந்தது.

எங்கும் பேரமைதி.எங்களையும் பெருமாளையும் தவிர சில நூறு கிளிகள் மட்டுமே. அவற்றின் பேச்சில் எங்களைப்பற்றிப் பேசிக்கொள்வது போல் இருந்தது.

மூச்சு விடுவதில் பிரச்சினை உள்ள ஒரு வயதான அர்ச்சகர் பாசுரம் சேவித்துக் கற்பூரம் ஏற்றினார். சின்ன திருமேனி. கிருபாசமுத்திரப் பெருமாள் (எ) அருமா கடலமுதன். சயனத்தில் இருந்தார்.

Sirupuliyurதாயார் சந்நிதி தனியாக. யாரும் இல்லாமல் ‘திரு மா மகள்’ என்னும் பெயருடைய தாயார் மோனத்தில் ஏகாந்தமாக எழுந்தருளியிருந்தார்.அந்தப் பேரமைதி வேறோர் இடத்தில் இல்லை.

maattu vandiசந்நிதியில் இருந்த ஒரு பழுதடைந்த பழைய சாராட்டு வண்டி (மாட்டு வண்டி?) வளமான பழைய காலத்தை நினைவு படுத்தியது. அது ஏன் அங்கு நிற்கிறது என்று கேட்கலாம் என்றால் சன்னிதியில் யாரும் இல்லை. ஆமாம். அர்ச்சகருக்கு மாதத்துக்கு ரூ.40 சம்பளம் கொடுத்தால் யார் தான் வருவார்கள்?

ஒரு வழியாகப் பிராகாரத்தைச் சுற்றி வந்தால் ‘இங்கெல்லாம் யாரு சாமி வர்றாங்க? உங்களை மாதிரி வெளியூர் ஆசாமிங்க வந்தாத்தான் உண்டு’ என்றபடி வந்த அற நிலைய ஊழியர் வறுமையின் பிரதிநிதியாக இருந்தார். ‘சம்பளம்  மூணு மாசம்  பாக்கி’ என்றார் கோவில் காவலர். அர்ச்சகரை விட இவருக்குக் குறைவாகவே இருக்கும். அதுவும் பாக்கி. அறம் நிலையாத்துறை வாழ்க.

வறுமை இருந்தாலும் காவலர் முகத்தில் இறைப்பணி செய்யும் பெருமை தெரிந்தது.

ஊரில் ஒரு வாரம்  தங்கினால் ஏழெட்டு விஷ்ணுபுரம் நாவல்கள் எழுதிவிடலாம். அவ்வளவு அமைதி, இறை உணர்வு. தத்துவ விசாரணை செய்ய உகந்த திவ்யதேசம்.

‘கிஞ்சித்காரம் டிரஸ்ட்’ உபயத்தில் கோவிலில் பல வேலைகள் நடந்துள்ளது தெரிந்தது.

கோவிலை விட்டு வெளியே வரலாம் என்று த்வஜஸ்தம்பம் அருகில் நின்று அரை இருளில் மீண்டும் அமுதனைச் சேவிக்க எத்தனித்தேன். சொல்லி வைத்தது போல் அத்தனை கிளிகளும் கத்தின. ‘பார், பார், பாராளும் எங்கள் பெருமாளைப் பார்’ என்று சொல்வது போல் இருந்தது.

கோவில் வெளியில் ஒரு நாய்க்குட்டியும் சில குருவிகளும் ‘ஓடிப்பிடித்து’ விளையாடிக் கொண்டிருந்தன. கட்டப்பட்ட பசு மாடுகள் திரும்பி ஒரு முறை பார்த்து பின்னர் மீண்டும் வைக்கோல் தின்னத் துவங்கின.

காரில் ஏறும் போது தாழப் பறந்த ஒரு கிளி என் தலை மீது வந்ததும் ‘கீ கீ’ என்று கத்தியது. அது என்ன சொன்னது என்று தெரியாவிட்டாலும் ஏதோ ஆசீர்வாதம் என்று உணர்ந்தேன். ‘ஊர்க்காரர்கள் தான் வரவில்லை, ஏதோ நீயாவது வந்தாயே’ என்று சொல்லியிருக்கலாம். அல்லது ‘ஊருக்குப் போய் அருமா கடல் அமுதனைப் பற்றி வெளியில் சொல். மக்களை வரச் சொல். அருள் வழங்கப் பெருமாள் காத்திருக்கிறார்’ என்பதாகவும் இருக்கலாம்.

உங்களுக்குத் என்ன தோன்றுகிறது? இல்லையெனில் கிளி சொன்னது என்னவென்று  ஆண்டாளிடம் தான் கேட்கவேண்டும்.

ஒரு முறை சிறுபுலியூர் சென்று வாருங்கள். இல்லை இந்தப் பாசுரத்தையாவது பாடுங்கள். தமிழ் கொஞ்சுகிறது.

‘கருமாமுகிலுருவா, கனலுருவா புனலுருவா
பெருமாள் வரையுருவா, பிறவுருவா, நினதுருவா
திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அருமா கடலமுதே உனதடியே சரணாமே’

கம்பனைப் பாடும் சிங்கைக் கண்ணன்

கண்ணன் சேஷாத்ரி
கண்ணன் சேஷாத்ரி

‘அருமா கடலமுதே’ என்ற ஆச்சரியமான தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தினார் கண்ணன் இன்று தனது கம்ப ராமாயணத தொடர் சொற்பொழிவில். மாதவி இலக்கிய மன்றத்தின் 50வது நிகழ்வில் இன்றைய கண்ணனின் சொற்பொழிவில் அருமையான பாசுர விளக்கங்களும் கம்பனின் சுவையுடன் சேர்ந்து அக்கார அடிசில் போல் அமைந்தது அவரது பேச்சு.

சிறுபுலியூர் என்னும் சோழ நாட்டுத் திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள ‘கிருபாசமுத்திரப் பெருமாள்’ பற்றிய அந்தப் பாசுரம் இதுதான் :

கருமாமுகிலுருவா, கனலுருவா புனலுருவா
பெருமாள் வரையுருவா, பிறவுருவா, நினதுருவா
திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அருமா கடலமுதே உனதடியே சரணாமே

‘குக தரிசனம்’ என்னும் தலைப்பில் கம்பன், வால்மீகி, ஆழ்வார்கள் மூவரும் குகன் இராமனைக் கண்டடைந்ததை எப்படிப் பார்த்தனர் என்று முக்கோணப் பார்வையில் விளக்கினார் கண்ணன்.

கடவுள் பற்றி நாகூர் ஹனீபாவின் பாடலையும் விட்டு வைக்கவில்லை அவர்.

ஒரு சில சுவையான பகுதிகள் பின்வருமாறு :

இறைவன் நம்மைக் காண்பதற்காக நாம் கோவிலுக்குச் செல்கிறோம். ஏனெனில் அவன் பால் சுரந்து தேங்கியுள்ள பசுவைப் போன்றவன். கன்று வந்து அருந்தாததால் .மடி நிறைந்த பாலுடன் பசு துன்புறுவது போல இறைவன் நமக்காக அருட்பாலுடன் காத்திருக்கிறான். கன்றாகிய நாம் அப்பாலை அருந்தினால் இறைவனுக்கு அதுதான் இன்பம். நமக்கும் தானே !

இராமனிடம் சரணாகதி அடைந்தவர்கள் மூவர். சுக்ரீவன் கிஷ்கிந்தைக்காகச் சரணடைந்தான். வீடணன் இராவணனிடமிருந்து தப்புவதற்காகச் சரணடைந்தான். பரிசாக இலங்கையைப் பெற்றான். ஆனால் எந்தப் பலனையும் எதிர்பாராமல் சரணாகதி அடைந்தவன் குகன் ஒருவனே. அதற்காக இராமன் அவனுக்கு ‘அலைகள் சூழுலகெலாம் உன்னுடையதே’ என்று இந்த உலகத்தையே அளித்தான்.

முடிவில் தனக்குத் தமிழார்வம் அளித்த தன் இளமைக்கால ஆசிரியர்களை நினைவுகூர்ந்து தனது குரு வணக்கத்தைத் தெரிவித்தார் கண்ணன். அந்தப் பண்பு அவரைக் காக்கும்.

இவர் வெகுதூரம் செல்லப்போகிறார். சிங்கையில் கம்பனைப் பற்றிப் பேசுவதே குறைவு. அவற்றுடன் ஆழ்வார்களையும் ஒப்பிட்டுப் பேசிய பாங்கு அருமை. ஒரு தேர்ந்த உபன்யாசகராக ஆவதற்கான அத்தனை அறிகுறிகளும் தெரிகின்றன.

குழந்தைகள் நடனம்
குழந்தைகள் நடனம்

கண்ணனைச் சிங்கைத் தமிழ் அமைப்புகள் சரியாகப் பயன் படுத்திக்கொள்ள அந்த அருமாகடலமுதன் அருள் செய்வானாக. மாதவி இலக்கிய மன்றத்தின் வழியாக இவ்வகையான நல்ல நிகழ்வை அளித்த அதன் தலைவர் திரு.கோவிந்தன் அவர்களுக்கு இன்று பிறந்த நாள். இறைவன் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் அளிப்பானாக.

பாதை

‘ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். ஒரு பெரிய மாமரம் இருக்கு. சில பூச்சிகள் அதோட இலைய சாப்பிடறது. சிலது மாம்பூவுல இருக்கற தேனை சாப்பிடறது. சிலது பழத்த சாப்பிடறது. சில பறவைகள் மரத்த ஓட்டை போட்டு அதுக்குள்ள இருக்கற புழுக்கள சாப்பிடறது. ஆனா மரம் ஒண்ணுதான்.

வாடகைக் காரின் முன் பெரும் மக்கள் திரள். கூட்டம் நகராமல் நின்றிருந்த்து. விமான நிலையம் விட்டு வெளியே வந்தவுடனே இந்தியாவை உணரத் துவங்கினேன். ‘கட்சிக் கூட்டம் ஸார். சாவடிக்கறானுக’, என்று அங்கலாய்த்தார் ஓட்டுனர்.

எங்கு பார்த்தாலும் சிவப்புக் கொடிகள் அருவாள் சுத்தியல் சின்னத்துடன். ‘மதவாத எதிர்ப்பு’, ‘நில உரிமைச் சட்டம்’ என்று எழுதப்பட்ட பதாகைகள் எங்கும் தென்பட்டன. கொடி ஏந்தியவர்களில் பெரும்பாலும் வயதானவர்களும் சில முதிய பெண்களும்.

தூரத்து மேடை மேல் என் வயதொத்த ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். பேச்சின் சாயலில் எங்கள் ஊர் வாடை அடித்த்து. உற்றுப் பார்த்தேன். முகம் பரிச்சயமாக இருந்தது. காரை விட்டுக் கீழே இறங்கினேன். சந்தேகத்துடன் மேலும் கண்களை இடுக்கிப் பார்த்தேன். கொடி பிடித்திருந்த ஒரு இளைஞி சொன்னார்,’தோழர் ஆராவமுதன் பேசறார், தோழர். அனல் தெறிக்குது பாருங்க’.

ஒரு நிமிடம் என் கால்கள் பஞ்சு போல ஆவதை உணர்ந்தேன். ஆராவமுதன். எப்படிப்பட்டவன் அவன் ? சிவப்புச் சட்டை அணிந்து சிம்மம் போல் ‘முதலாளித்துவத்தை’ கிழித்துக்கொண்டிருந்த அமுதனை நம்ப முடியாத கண்களுடன் உற்றுப் பாத்தேன்.

ஆம். அவனே தான். நெற்றியில் அதே காயத் தழும்பு. பள்ளியில் காற்பந்து விளையாடிய போது கீழே விழுந்து ஏற்பட்ட விழுப்புண். நான் தான் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். இருபத்தைந்து வருடங்கள் கழிந்தாலும் பழைய நினைவுகள் அப்படியே மீண்டு வந்தன.

வகுப்பில் என் பென்ச்சிற்கு அடுத்த பலகை அமுதனுடையது. அவனை அப்படித்தான் நான் அழைப்பேன்.

அவன் பட்டாச்சாரியாரின் மகன். நல்ல வரும்படி. நில புலன்களும் நிறைய. அடுத்த வேளை உணவு பற்றியோ எதிர்காலம் பற்றியோ கவலை கொள்ளத் தேவை இல்லை என்றால் கலை, இலக்கியம், இசை எல்லாம் கைவரும் போல. அவனுக்கு அப்படித்தான் நடந்தது.

பள்ளியின் அனைத்துப் பேச்சுப் போட்டிகள், காற்பந்துப் போட்டி, நாடகம் என்று வெளுத்து வாங்கினான் அமுது. படிப்பிலும் சூரன் தான். பாரம்பரியம் காரணமாகப் பாசுரங்கள் அத்துப்படி. சில வேளைகளில் தனியாக சைக்கிளில் சென்று வரும்போது பாசுரங்களை நல்ல ராகத்தில் பாடிக்கொண்டே வருவான்.

எனக்கு அமுதனைக் கண்டு சற்று பொறாமையும் உண்டு. எதையும் ஒரு முறை படித்தாலே நினைவில் நிறுத்தும் ஆற்றல் பெற்றிருந்தான். எத்தனை நாள் கழித்துக் கேட்டாலும் அப்படியே சொல்வான். நிறைய வாசிப்பான். தடை செய்யப்பட்ட நூல்கள் என்று சொல்லி சில சிவப்பு அட்டை போட்ட நூல்களை அடிக்கடி படிக்கத் துவங்கினான்.

சிவப்பு நூல்களில் பல, உயர்தர ஆங்கிலத்தில், நல்ல வழுவழுப்பான அட்டை போட்டு ரஷ்ய வெளியீடுகளாக இருந்தன. பலமுறை நான் அந்நூல்களின் தாள்களைத் தடவிப் பார்த்ததுண்டு. நம் நாட்டுத் தாள்கள் ஏன் இவ்வாறு இருப்பதில்லை என்று எண்ணியதுண்டு. அவற்றைப் பார்க்கும் போது என் பள்ளி நூல்கள் செவலைப் பிள்ளைகள் போல் தோன்றும்.

இப்போது பார்த்தால் முழுநேர இடதுசாரி அரசியல்வாதி போல் பேசிக்கொண்டிருந்தான் அமுது. நேராக மேடையின் கீழே சென்று நின்றுகொண்டேன். அவன் என்னைப் பார்க்கவில்லை. வீராவேசமாக மத்திய அரசைச் சாடிக்கொண்டிருந்தான். அங்கு காரியஸ்தர் போல் தோற்றமளித்த ஒருவரிடம் என் அறிமுக அட்டையைக் கொடுத்து அமுதனிடம் கொடுக்க்ச் சொன்னேன். அதில் ‘மாயவரம்’ என்று எழுதியிருந்தேன்.

அன்று இரவே வந்து சந்திக்கும்படி அழைப்பு வந்தது. உணவருந்தத் தயாரக வருமாறு அவனது உதவியாளர் என்று சொல்லிக்கொண்ட ஒருவர் தொலைபேசியில் தெரிவித்தார்.

அமுதனைச் சந்திக்கச் சென்ற இடம் குரோம்பேட்டையில் ஒரு பழைய தொழிற்சங்கக் கட்டடம். அதற்கு எப்படியும் எண்பது வயதாவது இருக்கும். உள் அறையில் முப்பது வயதான மின்விசிறி சப்தத்துடன் வயதான கிழவர் நடப்பது போல் சுற்றிக்கொண்டிருந்தது. எந்நேரமும் விழுந்துவிடும் என்று தோன்றியது. அதன் கீழ் குறைந்தது அறுபதாண்டுகள் பழமையான மர மேஜையின் பின் வெள்ளை சட்டை போட்டு சிரித்தபடியே அமர்ந்திருந்தான் அமுதன்.  நெற்றியில் திருமண் இருந்ததற்கான தடயமே இல்லை. முழுவதுமாக மாறியிருந்தான் அவன்.

இருபதாண்டுப் பயணங்கள் குறித்துப் பேசினோம். உணவு முடிந்து சற்று சாவதானமாகத் தொடர்ந்தோம்.

‘ஏண்டா இப்படி ஆயிட்டே ? அப்பா ஒண்ணும் சொல்லலையா ?’, என்றேன்.

மிகப் பெரிய ஆற்றைத்தடுத்து நிறுத்தியுள்ள மாபெரும் அணையின் மதகைத் திறந்தது போல் அடுத்த ஒரு மணி நேரம் பேசினான்.

‘நீ கேக்கறது புரியறது. ஏண்டா நாஸ்திகவாதம் பேசற, பட்டாச்சாரியார் பரம்பரை ஆச்சேன்னு கேக்கறே’.

‘உனக்கு ஞாபகம் இருக்கா நம்ம ஸார் கிளாசுல எனக்கும் அவருக்கும் நடந்த வாக்குவாதங்கள் ? அதுதான் ஆரம்பம்’, என்று துவங்கினான்.

ஸார் எங்கள் தமிழாசிரியர். இலக்கியங்களில் கரைகண்டவர். அவருடன் அமுதன் பலமுறை வகுப்பில் தர்க்கவாதம் புரிந்திருக்கிறான். ‘தாஸ் கேப்பிடல்’ மற்றும் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் நூல்கள், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா முதலிய மார்க்சீய சிந்தனையாளர்களின் கருத்துக்களை அவன் வகுப்புக்குக் கொண்டு வருவான். அதற்கு ஸார் பதிலளிப்பார். சில புரிந்தும், பல புரியாமலும் நாங்கள் கேட்டபடி அமர்ந்திருப்போம்.

ஒன்று மட்டும் புரிந்தது. அமுதன் போன்ற ஆழ்ந்த ஞானமும் வாசிப்பும் தர்க்க அறிவும் உள்ள மாணவன் இடது சாரிகள் பக்கம் விழுந்துவிடாமல் இருக்க வேண்டும் என்று பிரம்மப்பிரயத்தனம் மேற்கொண்டார் ஸார்.

‘ஞாபகம் இருக்கு. ஸார் அவ்வளவு பேசியுமா நீ இப்படி ஆயிட்டே ?’, என்றேன் நான்.

‘ஸார் என்னடா சொன்னார் கீதையப் பத்தி நான் கேள்வி கேட்டப்ப ?’, ஆவேசமாக்க் கேட்டான் அமுதன்.

நன்றாக நினைவில் இருந்தது. அன்று வகுப்புக்கு சற்று முன்னதாகவே வந்துவிட்டார் ஸார். அவரிடம் கீதையின் சாரம் சொல்லும் ஒற்றைச் செய்தி என்ன?’ என்று கேட்டான் அமுதன்.

‘ஏன், சந்தேகமே இல்லாம சரணாகதி தத்துவம் தான்,’ என்றார் ஸார்.

இருபத்தைந்து ஆண்டுகள் கடந்தும் அந்த உரையாடால் என் நினைவில் இருந்தது. ஒரு சாதாரண வகுப்பறை மாபெரும் தத்துவ விவாதத் தளமாக ஆன அந்த நாளை என்னால் மறக்க முடியாது. அமுதனும் ஸாரும் நிகழ்த்திய அந்தத் தர்க்க வாதம் வெகு நேரம் நீண்டது. ஆங்கில ஆசிரியரும் அதில் கலந்துகொண்டார் என்றால் அதன் ஈர்ப்பு எவ்வளவு என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

‘சரணாகதிங்கறது நம்ம வைஷ்ணவாள்ளாம் சேர்ந்து கீதைக்குப் போட்டிருக்கிற தத்துவ விலங்கு ஸார். கீதை அதுக்கு மேலேயும் போறது’, என்றான் அமுதன்.

‘உண்மை தான். சரணாகதி இரண்டாவது அத்யாயமான சாங்கிய யோகத்துலேயே இருக்கு. ஆனால் அதற்கு அப்புறம் மேலும் பல அத்யாயங்கள்ள கர்ம யோகம், ஞான யோகம் எல்லாம் சொல்றார். இருந்தாலும் வெகு ஜனங்களால ஞான யோகமெல்லாம் சாதகம் பண்றது கஷ்டம் இல்லையா?’ அதனால சரணாகதித் தத்துவமான ‘சர்வ தர்மான் பரியஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ ங்கற சுலோகம் ஒண்ணு மட்டும் போதும்னு சொல்றேன். லௌகீகமான பொருளாதாரம் சார்ந்து வாழற மக்களுக்கு ஏத்தது ஞான யோகம் இல்லை. பக்தி தான், சரணாகதி தான். ஏதோ வயத்தக் கழுவிக்கணும், குடும்பத்தைக் காப்பாத்தணும் அதோட பெருமாள் விக்ரஹம் முன்னே ஒரு புஷ்பம் போட்டு ‘நாராயணா நீயே சரணம்’னு ஒரு வரி சொல்லிட்டு அவன் மத்த லௌகீக வாழ்க்கைக்குப் போகணும். அதனால பக்தி யோகம் மட்டுமே கலியுகத்துக்குப் போறும். அதனால சரணாகதி ஒண்ணே கீதையோட சாரம்னு சொல்றேன். மக்களால அனுஷ்டிக்க முடியாத ஞான யோகத்துனால அவாளுக்கு என்ன பலன்?’, என்றார் ஸார்.

ஸாரின் வாதம் சரியாகவே பட்டது எனக்கு.

ஆனால் அமுதன் மேலும் தொடர்ந்தான்.

‘ஆனா ஸார், அப்போ பக்தி யோகத்தையும் சரணாகதி தத்துவத்தையும் கடைசிலே வைக்காமல் ஏன் முன்னாடியே சாங்கிய யோகத்துல வெச்சிருக்கார்? பக்தி, சரணாகதி இதெல்லாம் கடந்து அப்புறம் அடையவேண்டிய உயர் நிலையே கர்ம யோகமும் ஞான யோகமும்ங்கறதால தானே ? அதோட, சாதாரண மக்களால சரணாகதி தத்துவம் தாண்டி யோசிக்கத் தெரியாதுங்கறீங்களா?’, என்று கேள்வி எழுப்பினான் அமுதன்.

ஸாரைத் தாக்குவது போல் தோன்றியது எனக்கு. இதற்கு அவர் பதில் அளிக்காமல் அவனை அமரச் செய்யவேண்டும் என்று எண்ணினேன். ஆனால் ஸார் மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பது போல் புன்முறுவல் பூத்தபடியே அதற்கும் பதிலளித்தார்.

‘அமுதா, நீ சொல்றது நல்ல பார்வை. ஒரு ஆராய்ச்சியை இப்படித்தான் பண்ணணும். நான் சொல்ல வந்தது இது தான். கி.பி. ஆறு, ஏழு நூற்றாண்டுகள்ல மக்கள் கிட்டே சிந்தனாசக்தி அதிகம் இருந்தது. ஆதி சங்கரர் அத்வைத ஞானத்தைப் பரப்பின நேரம். அப்பவே உடம்பு வேற, ஆன்மா வேறன்னு சாதாரண மக்களுக்குப் புரிஞ்சு அதுனால சமணம், பௌத்தம்னு பல சம்பிரதாயங்களோட வாதம் எல்லாம் பண்ணியிருக்கா. அந்த மக்கள் கிட்ட போய் ஞான யோகம், மோட்ச சந்நியாச யோகம் எல்லாம் பேசலாம்.அவாளால அதை மேல எடுத்துண்டு போக முடியும்.

ஆனால் அதுக்கப்பறம் பக்தி இலக்கிய காலம் வந்தது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் என்ன சொல்லியிருக்கா ?

‘அந்தி மூன்றும் அனல் ஓம்புதலை விட உன் திருவடி போதும்’னு பேசறா. அதுக்கும் மேல மோட்சமே வேண்டாம். உன் நாமத்தையே சொல்லிண்டு பூலோகத்துலயே இருந்துடறேன். உதாரணத்துக்கு இந்த பாசுரம் தெரியாதா உனக்கு ?

“பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே”

நாம சங்கீர்த்தனம் மட்டுமே போரும்னு அவாளே சொல்றா. சாதாரண மக்கள் உய்யறதுக்கு பகவானோட நாமத்தைச் சொன்னாலே போறும்னு அப்பவே ஆயிடுத்து. ஆக, சாதாரண லௌகீக மக்கள் ஞானம், மோட்சம் எல்லாம் முடியாதுன்னு ஆழ்வார்களூக்கே தோணியிருக்கு.

அது மட்டும் இல்லை. பக்தி இலக்கியக் காலத்துக்கு அப்புறம் வந்த இராமானுஜர், எல்லாரும் மோட்சம் போக ஒரே வழின்னு நாராயண நாமத்தை மக்களுக்கு உபதேசிக்கிறார். ஆனா அவரேதான் கீதைக்கு பாஷ்யமும் எழுதறார். அவர் என்னோட பாஷ்யத்தின் படி படிச்சு மோட்சத்துக்குப் போங்கோன்னு ஏன் சொல்லவில்லை ? அவரே ஏன் சாணாகதியை வலியுறுத்தறார்?’, என்றார் ஸார்.

‘இராமானுஜர் சாமானிய மக்களின் அறிவைக் கம்மியா எடை போட்டார் என்கிறீர்களா ஸார்?’, என்று கேள்வி எழுப்பினான் அமுதன்.

ரொம்பவும் அதிகபிரசங்கியாக இருக்கிறானே என்று பட்டது எனக்கு. ஆனால் ஸார் அப்படி நினைக்கவில்லை.

‘அப்படி இல்லை. இராமானுசர் சாதாரண மக்களும் மோட்சம் நோக்கிப் போறதுக்கு என்ன வழின்னு யோசிச்சார். ஞானம், யோகம் என்று பாதை கடினமாக இருந்தால் மக்கள் திசை மாறி விடுவர். மேலும் ஜாதி அமைப்பும் அவர்கள் உய்வதற்கு வழி செய்யவில்லை. ஆகவே எல்லாருக்கும் புரியட்டும்னு ‘நாராயண’ நாமத்தை எல்லாருக்கும் உபதேசித்தார். இங்கே ரொம்பவும் சாதாரணமா சமூகத்துல கீழ் நிலைல இருக்கறவாளும் கரை ஏறணும்கற சம தர்ம இரக்க மனசு காரணம். அவாளுக்கு அறிவில்லேன்னு அர்த்தம் இல்லை.

ஞான மார்க்கம் வழியா மேலேற கல்வி வேணும். கல்வி கத்துண்டு எல்லாரும் படிச்சு ஞானம் அடைய ரொம்ப தலைமுறை ஆகும். உடனடியா ஒரு சமத்துவமும் உயர்வும் வேணும்னா எல்லாருக்கும் ‘அஷ்டாட்சரம்’ ( ஓம் நமோ நாராயணாய ) உபதேசம் பண்ணனும்னு செஞ்சார்’, என்றார் ஸார்.

சிறிது நீர் அருந்திவிட்டு மேலும் தொடர்ந்தார்.

‘அவர் காலத்துக்கப்புறம் வைஷ்ணவம் ரெண்டாச்சு. ஆப்கானிஸ்தான் அங்கிருந்தெல்லாம் படை எடுப்பு. அப்புறம் வெள்ளைக்காரா வர வரைக்கும் ஒரே களேபரம், பஞ்சம், பட்டினி. அதுக்கப்புறமும் பஞ்சம். இதிலெல்லாம் மக்களோட தேடல்கள் எல்லாம் பாழாப்போய் வெறும் சோற்றுப் பிண்டங்களாக மனிதர்கள் வாழ ஆரம்பிச்சா.

தேச விடுதலைக்குப் பிறகும் மக்கள் சாப்பாட்டுக்கு வழி செய்யற வேலைக்குத் தான் போனா. ஆத்ம விசாரம், ஞான மார்க்க முயற்சிகள் என்று எதுவும் இல்லை. ஏன்னா வெள்ளைக்காரா கொண்டுவந்த அடிமை அறிவுக் கல்வி மக்களை மர மண்டைகளா ஆக்கிடுத்து. இன்னும் அப்படித்தான் இருக்கு.

ஆகையால ‘கீதை மோட்ச சந்நியாச யோகம் போதிக்கற ஞானத் தேடலை முன் வைக்கறது, அதனால் எல்லாரும் அந்த வழியே போங்கோ’ன்னா அதைப் படிக்கறவனும் படிக்க மாட்டான். அதுனாலதான் இராமானுஜர் சொன்ன மாதிரி நானும் ‘சரணாகதி தத்துவமே கீதையின் சாரம்’னு சொல்றேன்’, என்று நிறுத்தினார்.

அமுதன் எழுந்து நின்று கை கூப்பினான். நாங்கள் அனைவரும் எழுந்து நின்று செய்வதறியாது விழித்தோம். சிலரது கண்களில் கண்ணீர், ‘எப்பேர்ப்பட்ட வியாக்கியானம்!’ என்று.

சன்னதம் கொண்டவர் போல் மேலும் தொடர்ந்தார். அவர் கண்களில் ஒரு தீவிர ஒளி தென்பட்டது.

‘ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். ஒரு பெரிய மாமரம் இருக்கு. சில பூச்சிகள் அதோட இலைய சாப்பிடறது. சிலது மாம்பூவுல இருக்கற தேனை சாப்பிடறது. சிலது பழத்த சாப்பிடறது. சில பறவைகள் மரத்த ஓட்டை போட்டு அதுக்குள்ள இருக்கற புழுக்கள சாப்பிடறது. ஆனா மரம் ஒண்ணுதான். கீதை அந்த மாமரம் போன்றது. யாருக்கு எப்படி சாப்பிடப் பிடிக்கிறதோ அப்பிடி சாப்பிடலாம். ஆனா எல்லாராலும் சுலபமா சாப்பிடறதுக்காக ‘சரணாகதி’ங்கற பழத்தை சாப்பிடுங்கோன்னு நான் சொல்றேன்’, என்று கூறி நாற்காலியில் அமர்ந்தார். ஆங்கில ஆசிரியர் கண்களில் நீருடன் எழுந்து நின்று கை தட்டினார்.

‘கடைசியா ஒரு கேள்வி ஸார்’, என்றான் அமுதன்.

‘நன்னா கேளு. ‘கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப்படாத செவி’ன்னு வள்ளுவர் சொல்றார். நீ கேட்கற கேள்விகளைப் பார்த்தா விவேகானந்தர் உன் ரூபத்தில் மீண்டும் வந்திருக்கிறாரோன்னு தோண்றது,’ என்றார்.

அமுதன் நெகிழ்ச்சியுடன் கேட்டான். ‘இந்த சாப்பாட்டுக் கல்வி பத்திக் கவலைப் படாமல் மேற்கொண்டு ஞான யோகம் தேடி நான் போகக் கூடாதா? இந்த லௌகீகக் கல்வியால எனக்கு ஒரு பயனும் இல்லையோன்னு தோண்றது,’ என்றான்.

ஸார் மௌனமானார்.

‘லௌகீகக் கல்வி எல்லாருக்கும் ஆனது. அதைக் கத்துக் கொடுக்கத் தான் நான் சம்பளம் வாங்கறேன். அதனால இதிலிருந்து வெளியே போய் ஞானத்தைத் தேடுன்னு என்னால சொல்ல முடியாது. முதல்ல நான் ஞானம் நோக்கிப் போறேன். அப்புறம் உனக்கு வழி காட்டறேன். அது வரைக்கும் நீ கொஞ்சம் பொறுமையா மேல படிச்சுண்டு இரு’, என்று ஒரு கையைத் தூக்கி ஆசி வழங்குவது போல் சொல்லிவிட்டுச் சென்றார்.

ஆனால் அதற்கும் அமுதனின் இன்றைய நிலைக்கும் என்ன தொடர்பென்று புரியவில்லை. கேட்டேன்.

‘சரிதான். தொடர்பில்லை தான். ஆனால் பதினாறு வருஷம் நான் கல்கத்தாவுல பல்கலைக் கழகத்துல தத்துவப் பேராசிரியரா இருந்தேன். போன வருஷம் மாயவரம் வந்தேன்.

எத்தனையோ மாணவர்களுக்கு அறிவுக்கண் திறந்து வெச்ச அவர், கை கால் இழுத்து, பாரிச வாயு வந்து நிலை குலைஞ்சு கிடந்தார்.

காரல் மார்க்ஸ் சொன்ன முதலாளித்துவ அரசுகள் அவரைக் கண்டுக்கலை. வணிக நோக்குல மட்டுமே செயல் படற பெரிய மருத்துவமனைகளால அந்த அறிவுச் சுடருக்கு சேவை செய்ய முடியல்ல. பணம், பணம்னு பிடுங்கித் தின்னானுங்க மருந்துக் கம்பெனிகள் எல்லாம். பதினாறு வயசுல எனக்கு ஆத்மா, உடல், பிரபஞ்சம்னு அறிவுக்கண்ணைத் திறந்த அவருக்கு, என்னால பணத்தால ரொம்ப ஒண்ணும் பண்ண முடியல.

அப்போ முடிவெடுத்தேன். இந்த தத்துவம்,விசாரம் எல்லாம் நம்ம நாட்டுக்கு இப்ப மட்டும் இல்லை, எப்பவுமே தேவை இல்லை. ஸார் சொன்ன மாதிரி சோத்துக் கல்வி, சோத்துக்கான வாழ்க்கைன்னு இருக்கற நாட்டு மக்கள் மத்தியில  அந்த மாதிரி விசாரமெல்லாம் வர்ரதுக்கு இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகும். சாமானிய மக்கள் செத்த அப்புறம் மோட்சம் அடையறாளா இல்லையாங்கறது இப்ப அவசியம் இல்லை. வாழறச்சே தினம் தினம் செத்து செத்து வாழாம இருக்காளாங்கறது தான் முக்கியம். இது தான் இப்போ இருக்கற ஒரே தேவை. அதுக்கு சுரண்டல், மேலதிகாரம் எல்லாம் போகணும். இந்த முதலாளித்துவ அமைப்புகளால இயக்கப்படற அரசுகளும் வணிக நிறுவனங்களும் அழியணும். அதுக்கான முயற்சியே தேவைன்னு இதிலே முழுசா இறங்கிட்டேன்’, என்றான்.

ஸார் இருந்தால் ஒப்புக்கொள்வார் என்று தோன்றியது.

மொத்த அபத்தங்களின் பேருருவம்

பசு வதைத் தடை நல்லது தான். தர்ம சம்பிரதாயம், கலாச்சார விஷயமாக மட்டும் இல்லாமல் புவி வெப்ப மயமாதலையும் தடுக்க உதவும் என்பது வரை சரியான ஒரு முடிவாகவே நான் நினைக்கிறேன்.

ஆனால், பசு வதை மட்டும் தடை என்பது என்ன தர்மம் ? ஆடு, கோழி முதலானவற்றை வதை செய்வது நல்லதா ? அவையும் ஜீவராசிகள் தானே ? அவற்றின் வதையும் தடுக்கப்பட வேண்டியது அல்லவா ?

இப்படித்தான் ஜெயலலிதா ஆடு, கோழி முதலியவற்றைப் பலியிடத் தடை விதித்தார். ஜாதி அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு வந்தவுடன் அதைத் தொடர்ந்து சில தேர்தல் தோல்விகளும் வந்ததால் அதைக் கைவிட்டார்.

ஒட்டகம் பலியிடப்பட வேண்டும் என்று சில மதத்தினர் கேட்கின்றனர். ஒட்டகப் பலியை ராஜஸ்தான் அரசு நிறுத்தியதைத் தொடர்ந்து சிலர் தடையை நீக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

நாம் உட்கொள்ளும் உணவை இறைவனுக்குப் படைப்பது நமது பண்பாடு. அவரவர் உட்கொள்ளும் உணவை அவரவர் இறைவருக்குப் படைப்பது என்று நமது பாரதப் பண்பாட்டில் உள்ளது.

“அவரவர் தம தமது அறிவு அறி வகைவகை அவரவர் இறையவர் என அடி உடையவர்கள் அவரவர் இறையவர் குறைவிலர் ” என்று நம்மாழ்வார் கூறுகிறார்.

மக்களின் மன நிலைக்கு ஏற்ப அவரவரது இறைவர்கள் அமைகிறார்கள் என்கிறார் அவர். மக்களின் அறிவு, அவரது பழக்க வழக்கங்கள் இவற்றிற்கு ஏற்ப அவர்களது இறைவர்களும் அமைகின்றனர். மக்களின் இயல்புகளுக்கு ஏற்ப அவர்களது இறைவர்களின் இயல்புகளும் அமைகின்றன. மாமிச உணவு உட்கொள்பவர்களின் இறைவர்களும் மாமிசம் உண்கின்றனர். அவ்வளவே.

இந்த நாட்டில் இறை வழிபாடோ, இறைத் தன்மையோ, ஆன்மீக உணர்வோ, ஆன்மீகப் புரிதல்களோ இல்லாத, இவை எதுவுமே தேவை இல்லை என்று பிதற்றுகிற அரசியல் கூட்டங்கள் மலிந்து வருகின்றன. இவை முற்போக்கு என்னும் பெயரில் வாதிடுகின்றன. இவற்றிற்கு ஆங்கில நாளேடுகள் ஆதரவளிக்கின்றன.

ஒட்டக பலி தேவையா அல்லது பசு வதைத தடை நீக்கம் தேவையா என்பது அல்ல இந்தப் பதிவின் வாதம். போலி மதச்சார்பின்மையின் பெயரில் நடைபெறும் ஊடக வெறியாட்டங்களின் மீது ஒரு வெளிச்சப் பார்வை ஏற்படுத்துவதே இப்பதிவின் நோக்கம்.

புலால் உண்ணாமையை வற்புறுத்திய வள்ளுவரைத் தெய்வமாக வழிபடும் நமது நாட்டில் மாடு அறுக்கும் போராட்டம், கோழி அறுக்கும் போராட்டம் என்று பெரியவர்கள் என்று தங்களை அறிவித்துக்கொள்பவர்கள் தெரிவிக்கிறார்கள். பெரியவர்களின் அழகு பல் இளிக்கிறது.

இந்த அறிவிப்புகள் போதாது என்று தாலி அறுக்கும் போராட்டம் என்று ஒன்றை அவர்கள் சொல்கிறார்கள். பகுத்தறிவைப் பறை சாற்றுகிறார்களாம். மொத்த அபத்தங்களின் பேருருவம் அது.

அறுப்பது, கழற்றுவது, கொளுத்துவது என்பதெல்லாம் போக ஏதாவது உருவாக்கியுள்ளார்களா என்று பார்த்தால் னாங்கு வரிகளுக்கு மேல் தமிழ் படிக்க முடியாத இரு தலைமுறைகளை உருவாக்கியுள்ளார்கள். இலக்கியம் என்பது இன்று ஒன்றரை அடி நக்கல் சொற்றொடர்களாகவும், முகநூலில் வடிவேலுவின் பல விதமான படங்களாகவும் பரிமளிக்கிறது என்பதே நமது தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சியாக உள்ளது.

கவிதை என்ற பெயரில் இப்படி எழுதினால் புதுக்கவிதை என்று பாராட்டி விருது வழங்கும் ஒரு கூட்டமாக தமிழச் சமுதாயத்தை உருவாக்கியதை விட இப்பெரியவர்கள் என்ன செய்தார்கள் என்று புரியவில்லை.

‘கூவம் நதிக்கரையினிலே’ நூலில் சோ புதுக்கவிதையைக் கேலி செய்து ஒரு கவிதை எழுதினார்:

‘கரப்பான் பூச்சி
பக்கெட்டில் விழுந்தது.
பக்கெட் என்ன செய்யும் ?
யோசிக்கிறேன். கரப்பான்
பூச்சிதான் என்ன செய்யும் ?’

இப்படி எழுதிவிட்டு இதில் சமுதாயப் பார்வை உள்ளது, சமூகக் கோபம் உள்ளது என்றெல்லாம் பிதற்றுவதை கவிதை அறிதல் என்று சில குழுக்கள் கொண்டாடுகின்றன. நமது தரத்தை இவ்வளவு கீழே கொண்டு சென்றதைத் தவிர முற்போக்கு முன்னணி என்ன செய்தது ?

இதைப்பற்றி எல்லாம் எழுதினால் சனாதனி என்று சொல்வார்கள் என்பதால் பலரும் இதை எல்லாம் எழுதுவதில்லை. எனக்கு இந்த பயம் இல்லை. நான் சனாதனியாகவே இருந்துகொள்கிறேன். ஊருக்கு நல்லதும் உண்மையும் சொல்வது மட்டுமே ‘ஆ..பக்கங்களின்’ தர்மம்.

பழைய கணக்கு – நூல் விமர்சனம் – ரெங்கபிரசாத்

உலகில் என்றும் பழைய கணக்காகப் பார்க்கப்படும் மானுடம் என்ற பண்பிற்குப் பின்னால் பயணிக்கிற புத்தகம்தான் “பழைய கணக்கு“.

மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு, நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது படைப்பாளியின்  கடமை. அதை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளார். படிபவர்களை சம்பவங்களோடு ஒன்றிவிடச் செய்துவிடுகிறார்.

இவை வெறும் கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்டு வேயப்பட்ட கதையோ அல்லது நினைவுகூறலோ அல்ல. தான் கண்டு , கேட்டு , உணர்ந்த ஆளுமைகளின் வாழ்வியல் அனுபவங்களை, சாதனைகளை,  சிந்தனைகளை எழுத்துமுலமாக ஆவணங்களாகத் தந்துள்ளார் ஆசிரியர். நிஜத்திலும் , நினைவிலும் வாழும் எதார்த்த மனிதர்கள் ஒவ்வொருவரும் நம் கண்முன்னே வந்து போகிறார்கள்; ஆவணப்படம் காண்பது போல அவர்களின் வாழ்வும் செயல்பாடுகளும் காட்சிகளாக விரிகின்றன. வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் நூலாசிரியர் தன் கருத்துகளை ஆங்காங்கே விதைக்கவும் தவறவில்லை.

அறம் , சமுதாயக் கோபம் , வாழ்க்கையின்  ஓட்டத்தில் நாம் அவதானிக்க மறந்த , மறுத்த விடயங்கள் மூலம்   நம்மை நகர்த்திச் செல்லும் இந்நூல் படிக்கக் களைப்பு தராமல் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் நடைதான். சமூக சிந்தனையோடு தனக்கே உரிய எள்ளல் பாணியில் அவர் காட்டும் இடங்கள் நகைச்சுவையே என்று தோன்றினாலும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை.

உபகாரம் என்ற கதையில் நூலாசிரியரின் சமுகப் பார்வை மூலம் சமூக முரண்களை அழகாகப் படம்பிடித்துக் கட்டியுள்ளர். //வாப்பா இருந்திருந்தால் இதே வயது தான் இருக்கும் அவருக்கும் // என்று தன் தந்தையை ஒப்பிட்டு பார்க்கும் போது , அங்கே மேலோங்கி நிற்ப்பது மனித நேயம் மட்டுமே . இராமனைப் பார்க்கக் கானகத்திற்கு பரதன் வந்தான், முனிவர்கள் வந்தார்கள் ஆனால் யாரும் இராமன் காட்டில் உணவிற்கு என்ன செய்வான் என்று நினைத்து அவனுக்கு உணவு கொண்டு வரவில்லை. குகன் ஒருவன் தான், இராமனுக்குத் தேவைப்படுமே என்று உணவு கொண்டு வந்தான். ஆகையால்தான் கம்பர் – ” உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்” என்று குறிப்பிடுகிறார். உபகாரம் கதையில் இதைப் போன்ற நிகழ்வைப் பார்க்கலாம் .

பெரிய தாக்கத்தை உண்டுபண்ணிய கதைகள் ‘மாயவரம்’ , ‘சார் விட்டுக்குப் போகணும்’. இந்த கதையின் பாதிப்பு , அடுத்த முறை என் வயது ஒத்த மாயவரம் ஊர் மனிதரைப் பார்த்தால் என்னுடைய அடுத்தகேள்வி, ‘உங்களுக்கு சாரைத் தெரியுமா?’ என்பதே. குருபக்திக்கு ஒருநல்ல உதாரணம் . நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக இதுபோன்ற ஆசிரியரைக் கடந்து சென்றுதான் இருப்போம் , மனிதனின் கையாலாகாத தன்மை கன்னத்தில் அறைவது போல் இருந்தது என்று குறிப்பிடும்போது,  இயற்கைக்கு முன் மனிதனின்  ஆளுமை எவ்வளவு குறைவு என்பதை  உறுதிப்படுத்துகிறது. இதயம் கனத்தது.

ஒரு தேரின் கதை – காரணப்பெயரான தேர்-அழுந்தூர் (செலுத்திய தேர் செல்லாமல் அழுந்திய காரணத்தினால் தேர்-அழுந்தூர் ) அதன் காரணத்தை இழந்து, பின்பு மீண்ட கதை. ஒற்றுமை மற்றும் விடமுயற்ச்சியின் பலன் பற்றி விளக்குகிறது. புறத்தில்  சில நேரங்கள்மட்டும் எரிந்த தீ , அகத்தில் அணைவதற்க்கு  ஐம்பது ஆண்டுகாலம் தேவைப்பட்டு இருக்கிறது.

‘கொஞ்சம் வரலாறு , கொஞ்சம் சுவாசம்’ கதை – நூலாசிரியரின் தார்மீக கோபத்தின் வெளிப்பாடாகத் தெரிகிறது . வரலாறு படைத்த தமிழினம்  அதை ஆவணப் படுத்தியது குறைவு அல்லது ஆவணப் படுத்தி இழந்தது  அதிகம். //இந்த தளத்தின் மேல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சுந்தர சோழனோ, பராந்தகனோ நின்றிருக்கலாம்//. அந்த தார்மீக கோபத்தின் நியாயங்களைப் பங்குபோட்டு கொஞ்சம் மன உறுத்தலோடு தான் இந்தக் கதையைக் கடக்க முடிந்தது. அமரர் சுஜாதா சொன்ன செய்திதான் நினைவில் நின்றது . கோயில் தூண்கள் சிலவற்றைத் தொட்டுக்கொண்டு, நம் முன்னோர்கள் கால்வைத்து ஏறியபடிகள் மீது நடந்துகொண்டு நாங்கள் இருவரும் இந்தக் கருத்தைப் பரிமாறிக்கொண்டோம். அப்போது எங்கள் முன்னோர்கள் தங்களின் குழந்தைகளைப் பார்ப்பது மாதிரி உணர்ந்தோம். அது ஒரு உன்னத அனுபவம்.

ஒளிரும் மகத்தான ஆளுமைகளைத் தனது எழுத்தில் ஆவணப்படுத்திய ஆமருவி தேவநாதன் பாராட்டிற்குரியவர். அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

மனித நேயம் தேவைப்படும் வரை இதுபோன்ற கணக்குகளும் தேவைப்பட்டுக்கொண்டுதான்  இருக்கும் .

வாழ்த்துக்கள் , தொடரட்டும் உங்கள் கணக்குப் பயணம்.

ஈ.வெ.பெரியாழ்வார் வாழ்க

குலசேகர ஆழ்வார் அரங்கனைப் பற்றி ஒரு பாசுரம் பாடினார்.

“திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும் கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே”

ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள பெருமாளைக் கண்களால் ஸேவிக்கும் நாள் எந்த நாளோ ? என்று கேட்பது போல் பாடியுள்ளார் ஆழ்வார்.

இன்னொரு பாடல் உண்டு. அது திருமலைத் தெய்வத்தைப் பற்றியது :

“செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே ”

‘திருமலையில் உன் கோவில் வாசலில் ஒரு படியாக இருந்து உன் பவள வாய் அழகைக் காண வேண்டும்’ என்று ஆழ்வார் வேண்டுகிறார்.

ஆழ்வார்களை அப்படியே கொஞ்ச நேரம் விட்டுவிட்டு நேரடியாக விஷயத்திற்கு வருவோம்.

என்னை வாழ வைத்தவர் பெரியார். ஆம். உண்மை தான். என் தற்போதைய வாழ்க்கைக்குக் காரணம் பெரியார்.

இங்கு நான் பெரியார் என்பது ஈரோடு வெங்கட்ட ராமசாமி நாயக்கர் என்னும் பெரியாரைத்தான் சொல்கிறேன். அவர் மட்டும் இல்லை எனில் நான் நல்ல நிலையில் இருந்திருக்க முடியாது. என் சுயமரியாதையை இழந்து நின்றிருப்பேன்.
ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. நான் மட்டும் அல்ல, இன்னும் பலர் இன்று நல்ல முறையில் வாழக் காரணம் பெரியார் தான். நாளை பலரும் நல்ல வாழ்க்கை அடையக் காரணமும் அவரே தான்.

நினைத்துப் பாருங்கள். 70 ஆண்டுகளுக்கு முன் இருந்த பிராமண சமூகம் எப்படி இருந்தது ? உட்பூசல்களும், வடிகட்டிய மூட நம்பிக்கைகளும், அரசு வேலை அல்லது அடுப்படி வேலை என்கிற வட்டத்துக்குள் மட்டுமே இருந்த சமூகமாக இருந்தது அது. கணவனை இழந்த அச்சமூகப் பெண்கள் இருந்த நிலை என்ன ? இன்று அந்த சமூகம் இருக்கும் நிலை என்ன ? பிராமணர்களை ஒன்றுபடுத்தியது பெரியார். உட்பூசல்களால் பிளவுபட்டிருந்த சமூகம் ஓரளவு ஒன்றானது.

தற்போது யானைக்கு எந்த ‘திருமண்’ போடுவது என்று எந்த வாசுதேவாச்சாரியாரும் கோர்ட்டுக்குப் போவதில்லை. இரண்டு காரணங்கள் : ஒன்று, யானைகள் இல்லை. இரண்டு, கோர்ட்டுக்குப் போக வேண்டியவர்கள் அமெரிக்கா போய்விட்டார்கள். இரண்டாவதற்கான காரணம் பெரியார்.

எண்ணிப் பார்க்க வேண்டும் பிராமணர்கள். இன்று பன்னாட்டு வங்கிகளிலும், ஆப்பிள், கூகிள், நாஸா முதலான நிறுவனங்களில் நல்ல நிலையில் இருக்கும் இவர்கள், பெரியார் இல்லாதிருந்தால் என்ன நிலையில் இருந்திருப்பார்கள் ? தமிழக அரசு நிறுவனம் அல்லது அலுவலகம் ஏதாவதில் எழுத்தர் பணி செய்துகொண்டிருப்பார்கள். அல்லது புரோகிதம் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள். இந்த உலகளாவிய பரந்த நிலை கிடைத்திருக்குமா ?

பெரியார் இருந்ததால் கல்வியில் அவர்கள் 100க்கு 110 மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அந்த உத்வேகம் யார் கொடுத்தது ? யாரால் அமைந்தது அந்த உந்து சக்தி ? பெரியாரை மறக்கலாமா ?

ஆங்கிலத்தில் ‘Complacency’ என்று சொல்வர்கள். ‘Comfort Zone’ என்னும் வளையத்திற்குள் இருந்துகொண்டு சுகமாக இருந்திருப்பார்கள் அல்லவா ? ஆனால் பிராமணர்களின் அந்த ‘Comfort Zone’ஐ உடைத்தெறிந்தவர் பெரியார்.

யாருமே வழிபடாத பிள்ளையாரை உடைத்து, அதனால் வீதிக்கு ஒரு பிள்ளையார் கோவில் ஏற்படுத்த உத்வேகம் அளித்தவரை மறக்கலாமா ? நன்றி மறக்கலாமா ? மறப்பீர்களா ? மறப்பீர்களா ? (‘அம்மா’ பணியில் வாசிக்கவும்)

பாம்பை அடிக்காமல் விட்டுவிட வேண்டும் என்று சொல்லி அதனால் பாம்புகளை வாழவைத்த அந்த மகானை மறக்கலாமா ? ஆனால், பாம்பை விட்டு உங்களை அடிக்கச் சொன்னதால் தானே நீங்கள் வேறு மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் சென்று வாழ்க்கையில் வேறூன்றினீர்கள் ? அந்த மகானின் உபகாரத்தை மறக்கலாமா ?

யார் கதையும் வேண்டாம். என் தந்தையார் தனது சாதியின் காரணமாக அலுவலகத்தில் மேலே செல்ல முடியாமல் ஒரே இடத்தில் சில பத்து ஆண்டுகள் ஸ்திரமாக இருந்ததால் தானே நானும் என் தம்பியும் ஒரே பள்ளீயில் ஸ்திரத்தன்மையுடன் படித்தோம். மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த பலருக்கு நல்ல கல்லூரிகள் கிடைக்கக் கண்டு,
அதனால் மிகுந்த பொறுமையைக் கையாளும் மனவுறுதியை அளித்த மகானை மறக்க முடியுமா ?

அவர் ஆசீர்வாதம் இல்லை என்றால் கடந்த 20 ஆண்டுகளில் ஜப்பான், சிங்கப்பூர், அமெரிக்கா என்று இந்த கீழ் மத்தியதர வகுப்பைச் சார்ந்த நான் சென்று பணிபுரிந்திருக்க முடியுமா ?

ஒன்றும் வேண்டாம். வெறும் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே கற்றிருக்க வேண்டிய எனக்கு, இன்று ஹிந்தி, ஓரளவு மராட்டி, ஜப்பானிய மொழி என்று பரிச்சயம் ஏற்பட்டு இருக்க முடியுமா ? குமாஸ்தா வேலை செய்திருக்க வேண்டிய நான் இன்று கணிப்பொறியில் எழுதுகிறேன். காரணம் யார் ? அந்த மகான் அல்லவா ?

‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்றே கற்றும் பழகியும் வந்த நான், பள்ளியிறுதியாண்டு முடிந்தபின் ‘சாதி என்பது என்ன?’ என்பதை உணர்த்திய அந்தப் பகலவனை மறக்க முடியுமா ? கண் திறந்தவரை தூஷிக்கலாமா என்ன ?

பிட்ஸ்பெர்க் ஸ்ரீநிவாசர் கோவிலுக்குச் செல்லும்போதெல்லாம் பெரியாரை நினைக்க வேண்டாமா ? டெக்ஸாசில் மீனாட்சியைத் தரிசிக்கும் போதெல்லாம் ராமசாமியாரை எண்ண வேண்டாமா ? அவர் இல்லை என்றால் அமெரிக்கர்கள் ஸ்ரீநிவாசரையும் மீனாட்சியையும் கண்டிருப்பார்களா ? அல்லது ஸ்ரீனிவாசப் பெருமாள் அமெரிக்கா பார்த்திருப்பாரா ?

இந்த ஏப்ரல் மாதம் டெக்ஸாஸ் ( டல்லாஸ் ) போயிருந்தபோது அவ்வூர்ப் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர உற்சவம் நடந்து கொண்டிருந்தது. நான்கு பேர் பஞ்சகச்சம் உடுத்தி ஆழ்வார் பாசுரம் ஸேவித்துக் கொண்டிருந்தனர். அமெரிக்காவில் ஆழ்வார் பாசுரம் ஒலிக்கச்செய்வது சுலபமா ? சர்க்கரைப் பொங்கலுடன் புளியோதரையும் கிடைத்தது. அன்னமிட்டவரை நான் மறக்கலாமா ?

109-வது திவ்யதேசமாக அமெரிக்காவை ஆக்கியவரை மறக்கலாமா ?

வைக்கம் என்னும் ஊர் இருக்கிறது என்பதை உலகுக்குக் காட்டிய உத்தமர் அல்லவா அவர் !

இதெல்லாம் போகட்டும். ‘காங்கிரஸ் ஒழியவேண்டும்’ என்று தீர்க்க தரிசனத்துடன் ஆசீர்வாதம் செய்த மகான் அல்லவா அவர் ! இப்போது அது நிறைவேறியுள்ளதே. அவரைப் பாராட்ட மனம் இல்லையே உங்களுக்கு !

அவருக்கு இருந்த நகைச்சுவை உணர்வு யாருக்கு உண்டு ? கடவுள் இல்லை என்று சொன்னார். ஆனால் அதே சமயம் அனைவரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்றும் சொன்னார். சிரிக்காமல் சொன்னார். பூசாரிகளை ஏசினார். ஆனால் அனைவரும் பூசாரிகள் ஆக வேண்டும் என்றும் சொன்னார். இன்றும் அதே நிலை தான் அவரது வழி வந்தவர்களும் கையாள்கிறார்கள். ஒரே விஷயத்தில் இரண்டு நிலைகள் எடுப்பதில் குருவுக்கு சிஷ்யன் சளைத்தவன் இல்லை என்று உணர்த்துகிறார்கள். அந்தக் குருவை மறக்கலாமா ? மன்னிக்கவும். ‘குரு’ என்பது வடமொழி. ஆகவே ‘டீச்சர்’ என்று தமிழ்ப்
படுத்திப் படிக்கவும்.

‘பறைச்சி இரவிக்கை போடுவதால் தான் துணிப்பஞ்சம் வந்தது’ என்று அரிய உண்மையைக் கண்டுபிடித்தார். நோபல் பரிசுக்குரிய அந்தக் கண்டுபிடிப்பைப் பாராட்ட வேண்டாம், தூஷிக்காமல் இருக்கலாமே ஸார்,

ஆனால் ஒன்று. ‘தி.மு.க. வை ‘கண்ணீர்த்துளிகள்’, ‘கூத்தாடிகள் கழகம்’ என்று ஒளிவு மறைவில்லாமல் சொன்னார். அந்த நேர்மை எனக்குப் பிடிக்கும். இதையும் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

திருக்குறள் பற்றி அவர் செய்யாத அர்ச்சனை இல்லை. அப்படித் தமிழ் வளர்த்தார்.

அது போகட்டும். கண்ணகியை ‘தே**யாள்’ என்று வாழ்த்தினார். என்னே உயர்ந்த மரபு !

எது எப்படியோ, எனக்கும் இன்னும் பலருக்கும் நல்ல வாழ்க்கை அமைய உதவினார். அவர் தமிழைத் திட்டியதால் எனக்கு ஆழமாகத் தமிழ் படிக்க ஆர்வம் பிறந்தது. இராமனையும் கம்பனையும் வசை பாடியதால் நான் அவர்களில் ஆழ்ந்தேன்.
ஹிந்தியை எதிர்த்ததால் அதைப் பேசக்கற்றுக் கொண்டேன். ‘பூணூலை அறுப்பேன்’ என்று சொன்னதால் அது பற்றியும் ஆன்மீகம் பற்றியும் மேலும் படிக்கத் துவங்கினேன்.

அவர் ஒழிக்க நினைத்த அனைத்தும் தழைத்தோங்கியது – காங்கிரஸ் தவிர.

இத்தனை நையாண்டி செய்தாலும் அவரிடம் எனக்குப் பிடித்தது சில உண்டு.

நேர்மை. மனதில் இருந்ததை மறைக்கமல் அப்படியே பேசும் பாங்கு. இறுதி வரை தனது நம்பிக்கையில் உறுதி.

அவர் கடவுள், வேதம், புராணம் குறித்துச் சொன்னது எதுவும் புதிதல்ல. அனைத்தும் ‘ஸார்வாகம்’ என்னும் பிரிவில் உள்ள இந்திய ஞான மரபே. ஆகவே ‘ஸார்வாகர்’ களின் ஒரு அவதார முனிவராகவே அவரை நான் பார்க்கிறேன்.

விபீஷணனைக் கண்காணிக்க ரங்கநாதனாக தெற்கு பார்த்துப் பள்ளிகொண்டுள்ளார் பெருமாள். ஸ்ரீரங்கம் ரங்கநாதரைப் பீரங்கி கொண்டு பிளக்க வேண்டும் என்று சொன்னவர் இன்று அதே கோவிலுக்கு முன்னர் பதிமூன்றாவது ஆழ்வாராக
நின்றுகொண்டிருக்கிறார். பூலோக வைகுண்டத்தில் பெருமாளை ஸேவித்தபடியே இருக்க எல்லாருக்கும் கொடுப்பினை இருக்காது. கோவிலுக்கு உள்ளே செல்ல அரசு காசு கேட்கிறது. செலவும் மிச்சம், புண்ணியமும் லாபம் என்று வாசலிலேயே நிற்கிறார்.

கட்டுரையின் துவக்கத்தில் படித்த குலசேகர ஆழ்வாரின் வேண்டுதல் என்ன ? கோவில் வாசலில் கல்லாய், படியாய் இருக்க வேண்டும் என்று வேண்டுகிறார். அவருக்குக் கிடைக்கவில்லை; இவருக்குக் கிடைத்துள்ளது அந்த பாக்கியம்.

எனவே ஆழ்வாரான பெரியார் திருவடிகளில் தெண்டனிட்டு வணங்குகிறேன்.

பி.கு: பிராமணர்கள் என்ற பிரிவினர் இந்திய சமூகத்தில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்தார்கள். இப்போது அனைவரும் வைசியரே. அனைவரும் ஏதாவது தொழில் மட்டுமே செய்கிறார்கள் – ஒன்று பொருளை விற்கிறார்கள் அல்லது அறிவை விற்கிறார்கள். இரண்டும் இல்லாதவர்கள் அரசியலில் சேர்கிறார்கள். எனவே இக்கட்டுரையில் ‘பிராமணர்கள்’ என்ற சொல்லை ‘மூதாதையர் பிராமணர்களாக இருந்தவர்கள்’ என்ற பொருளில் புரிந்துகொள்ளவும்.

பெரியாழ்வாரும் பகுத்தறிவும்

‘சார் சாமி தரிசனம் ஆளுக்கு பத்து ரூபாய். சாமியை கிட்டே காமிப்போம். தர்ம தரிசனம் இருக்கு. நாப்பது அடிக்கு முன்னே நிக்க வப்போம். அங்கேருந்து சாமி பாத்துக்குங்க, எப்படி வசதி ?”

இது திருப்பதி திருமலையில் நடந்த சம்பாஷணை அல்ல. மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவிலில் நடந்தது.

ஆக, காசு கொடுத்தால் இறைவனின் கிட்டே அனுமதிப்பார்கள் – சுமார் ஐந்து அடி தூரத்தில், தொட்டுவிடும் தூரத்தில் இறைவன். ஆனால் பணம் இல்லை என்றால் விலக்கி வைத்துவிடுவார்கள். தூரத்தில் இருந்தே இறை அருள் பெற வேண்டியது தான்.

விசேஷம் என்னவேன்றால் விமானத்தில் வேறு இரு பெருமாள்கள் உள்ளனர். சனிக்கிழமைகளில் அவரைத் தரிசிக்க தனியாக இருபது ரூபாய் தர வேண்டும்.

அரசின் கொள்ளையில் இது விசேஷக் கொள்ளை.

இதற்கும் திரைப்படத்திற்கும் ஒரு ஒற்றுமையும் ஒரு வேற்றுமையும் உள்ளன. இரண்டிலும் உள்ளே இருப்பதைப் பார்க்கப் பணம் வசூல் செய்கிறார்கள். இது ஒற்றுமை. வேற்றுமை பின்னால் வருவது. திரைப்படம் பார்க்க அதிகப் பணம் கொடுத்தால் தூர அமர்ந்து பார்க்கலாம். கோவிலில் அதிகப் பணம் கொடுத்தால் பெருமாளைக் கிட்டே இருந்து பார்க்கலாம்.

ஒரு கோவில் பாழ்பட்டுக் கிடந்தால் அரசின் அற நிலையத் துறை அருகில் எட்டிக் கூடப் பார்க்காது. ஆனால், அதனை  நல்லவர்கள் நான்கு பேர் சேர்ந்து பாடுபட்டுப் புனரமைத்தால் அதன் பின் சிறிது கூட்டம் வந்தால் உடனே ‘ஆமை புகுந்த வீடு’ போல் அரசு  நுழைந்துவிடும். “கழுகுக்கு மூக்கில் வேர்ப்பது போல” என்று கூறுவது கூட சரியானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்படித்தான் தேரழுந்தூர் என்னும் ஊரில் கோவிலின் புஷ்கரணி (குளம்) பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் விளையாடும் மைதானமாகவே சில பத்து ஆண்டுகள் இருந்தது. பின்னர் நல்லவர்கள் சிலர் சேர்ந்து புஷ்கரணியைச் சீரமைத்தனர். தண்ணீர் நிரம்பியது. பாசியையும் அழுக்குகளையும் நீக்க மீன் வாங்கி விட்டனர். நீரும் சுத்தமானது. அக்கம்பக்கத்து வீடுகளில்  நிலத்தடி நீர் அளவு உயர்ந்தது.

இது வரை சரி. பிறகு தான் வந்தது வினை.

அரசு நுழைந்தது. மீன் ஏலம் விட வேண்டும் என்றும், கோவில் தங்களது ‘அற நிலையத் துறை’ கட்டுப்பாட்டில் இருப்பதால் மீன் ஏலம் நடத்தவும் அதன் வருவாயும் அரசுக்குச் சொந்தமானது என்றும் கூறினர்.

எப்படி இருக்கிறது கதை ? “காத்திருந்தவன் மனைவியை நேற்று வந்தவன் அடைந்த கதை” உங்களுக்கு நினைவு வந்தால் நான் பொறுப்பல்ல.

சரி.தேரழுந்தூருக்கும் மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவிலுக்கும் என்ன தொடர்பு ?

இரண்டும் ஆழ்வார் பாடிய திவ்யதேசங்கள். அது தவிர இன்னொறு ஒற்றுமை – அரசு.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பெரியாழ்வார் மதுரை வந்தார். அப்போது கூடல் அழகர் பெருமாள் உற்சவம் நடந்துகொண்டிருந்தது. பெருமாள் கம்பீரமாக வாகனத்தில் எழுந்தருளிக்கொண்டிருந்தார்.

நாமாக இருந்தால் ‘எனக்கு சென்னைக்கு டிக்கெட் கிடைக்க வேண்டும், கோச்சடையான் வெளிவர வேண்டும், நயந்தாரா நன்றாக இருக்க வேண்டும்’ என்று நாட்டுக்குத் தேவையானதை வேண்டிக்கொண்டிருப்போம்.

ஆனால் அவர் பெரிய ஆழ்வார் அல்லவா ?

எனவே “நன்றாக இருக்க வேண்டும், பல நூற ஆண்டுகள் வாழ வேண்டும்” என்றெல்லாம் வேண்டிக்கொண்டார்.

இதில் என்ன பெரிய விஷயம் என்கிறீர்களா ?

அவர் வேண்டிக்கொண்டது தனக்காக அல்ல; தான் நன்றாக இருக்க வேண்டும் என்று அல்ல.

“இவ்வளவு அழகாக எழுந்தருள்கிறீர்களே பெருமாளே, யார் கண்ணும் படாமல் நீங்களும், உங்கள் சங்கு, சக்கரம் முதலிய ஆயுதங்களும் உங்கள் திருமார்பில் வாழும் இலக்குமியும் நன்றாகப் பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். அதனை ஒரு பாடலின் மூலம் பதிவும் செய்தார். “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணி வண்ணா, உன் சேவடி செவ்வி திருக்காப்பு..” என்று தொடங்கும் பாசுரத்தில் பதிவு செய்தார். இன்றும் வைணவத் திருத்தலங்களில் முக்கியமாகப் பாடப்படும் பாடல் இது.

இப்போதைய ‘கவிஞர்களாக’ இருந்திருந்தால் தங்களுக்கு ஒரு அரசவைக் கவிஞர் பதிவியோ வேறு ஒன்றும் இல்லை என்றால் ஒரு வாரியத் தலைவர் பதவியாவது கேட்டிருப்பார்.

என்ன செய்வது, பெரியாழ்வாரது பகுத்தறிவு அவ்வளவு தான்.

பிழைக்கத் தெரியாத மனுஷன் அவர்.

%d bloggers like this: