குழந்தையும் தென்னை மரமும்

நண்பரின் ஏழு வயதுப் பெண் குழந்தை அழுதுகொண்டே வந்தது. “மிஸ் தப்பு போட்டுட்டாங்க “, என்று கேவிக் கேவி அழுதபடி தன் விடைத்தாளைக் காட்டியது. “தென்னை மரத்தின் பாகங்களின் பயன் என்ன?” என்பது கேள்வி. அதற்குக் குழந்தை எழுதிய பதில் தவறு என்று ஆசிரியர் போட்டிருந்தார்.

சரி குழந்தை என்ன எழுதி இருக்கிறாள் என்று பார்த்தேன். நான் எதிர் பார்த்தது – தென்னை ஈர்க்குச்சி துடைப்பம் செய்யவும், ஓலை கூரை வேயவும், தேங்காய் உணவுக்கும், தேங்காய் எண்ணை எடுக்கவும் பயன் படும் என்று எதிர்பார்த்திருந்தேன்.

குழந்தை அதை எழுதவில்லை. அவள் எழுதிய விடை இதுதான்:

“தென்னை மரத்தில் இனிப்பான இளநீர் இருக்கும். அது கெடாமல் இருக்க அதைச் சுற்றி ஓடு இருக்கும். அதன் பேர் கொட்டாங்குச்சி தேங்காய். தேங்காய் எல்லாம் கனமாக இருக்கும். அதை பிடித்துக்கொள்ள மட்டைகளும் ஓலைகளும் இருக்கும். இது எல்லாம் ரொம்ப கனமாக இருப்பதால் அதைத்தாங்க ஒரு பெரிய மரம் இருக்கும். அந்த மரம் விழாமல் இருக்க தடிமனான் வேர்கள் இருக்கும். மட்டைகளுக்கு  மேல் குருவி கூடு கட்டுவதால் நிழல் அளிக்க ஓலைகள் இருக்கும். இதுதான் தென்னை மரத்தின் பாகங்களின் பயன்கள்”.

அரண்டு போனேன் நான். இயற்கையை இயற்கையாகவே பார்க்க என்ன ஒரு கள்ளம் கபடம் இல்லாத உள்ளம் வேண்டும் ! வயதான பின் மனிதன் இயற்கை தந்துள்ள எல்லாம் அவனுக்காகவே படைக்கப்பட்டுள்ளது என்று எண்ணுகிறான். ஆனால் குழந்தை அதனை இயற்கையாகவே பார்க்கிறது. எதையும் தனக்கானதாக நினைக்க மறுக்கிறது.

குழந்தை எழுதியது அதனது பார்வையில் சரிதானே ! இதை ஆசிரியர் எப்படி உணர்ந்துகொள்வாரோ?

வாழ்க்கை அனுபவமே வாழ்க்கையின் லட்சியம் என்று அறியானால் ஏதோ ஒன்றின் பின்னே ஓடும் மனிதன் தான் வாழ்வை வாழ்வதில்லை. இலக்கை அடையும் போது “அடச்சீ இவ்வளவு தானா இது? இதற்காகவா இத்தனை அவதிப்பட்டேன்?” என்று எண்ணுகிறான்.

இப்படியெல்லாம் நினைக்காமல் ஒரு குழந்தை ஒவ்வொரு நொடியும் வாழ்கிறது. ஒவ்வொரு கணமும் அதற்கு ஒரு புதிய அனுபவம் ஏற்படுகிறது. அதை அனுபவிக்கிறது. அதனாலேயே குழந்தை எதையும் அனுபவித்துச் செய்கிறது போலே.

இன்னொரு அனுபவம் ஏற்பட்டது வேறொரு குழந்தையுடன். மகனின் பள்ளிக்குச் சென்றிருந்தேன். ஆசிரியரின் சின்ன மகளும் அவருடன் வந்திருந்தது. ஒரு ஐந்து வயது இருக்கும். சில காகித படங்களை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது. என்னைப் பாரத்து சிரித்தது. பின் அருகில் வந்து,” Do you want this?”, என்று மலையாள வாசனையுடன் கேட்டது. அதன் கையில் பல சின்னச் சின்ன பூக்களின் படங்கள். நான்,”நீயே வைத்துக்கொள், விளையாடு”, என்றேன். அதற்கு அவள்,“Don’t worry. I have so many stickers like this. You take one. What will I do with many stickers ? I will not cry if you take one“, என்று அதே மழலையுடன் கூறி என் கையில் ஒரு படத்தைத் திணித்தது. இன்றுமட்டும் அதைக் கைப்பேசியின் உள் அட்டையில் ஒட்டி வைத்துள்ளேன். ஒவ்வொருமுறை அந்தப்படத்தைப் பார்க்கும்போதும் அந்தக்குழந்தையின் மன ஏற்றமும் நமது தாழ்வும் உணர்வேன்.

வாயடைத்து நின்றேன் நான். எல்லாமே நமக்கே வேண்டும் என்று என்னும் பெரியவர்கள் உலகத்தில், என்னிடம் நிறைய உள்ளது, இவ்வளவும் வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன்? நீ ஒன்று வைத்துக்கொள், நான் அழமாட்டேன் என்று சொல்ல என்ன ஒரு பெருந்தன்மை வேண்டும் ?

குழந்தையாகவே இருந்திருக்கலாம் போல் இருந்தது.

( முதல் நிகழ்வு நண்பர் ஒருவரின் முகநூல் செய்தியைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்டது)

%d bloggers like this: