Sri Vaishnava Brahmins of Tamil Nadu – review

Sri Vaishnava Brahmins of Tamil Nadu
Sri Vaishnava Brahmins of Tamil Nadu

வரலாற்றுப் பேராசிரியர் முனைவர் இராஜகோபாலன் தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை நூலாக வடித்துள்ளார். நூலின் பெயர் ‘Sri Vaishnava Brahmins of Tamil Nadu’ (தமிழக ஶ்ரீவைஷ்ணவ அந்தணர்கள்). முனைவர் பட்டம் 1993லும்  நூல் வடிவம் 2014லிலும்  நிகழ்ந்துள்ளன.

தமிழகத்தில் வைஷ்ணவத்தின் துவக்கம் எப்போது நடந்தது, அதற்கான புறச்சான்றுகள் யாவை, பின்னர் நடந்த பிற மதங்களின் தாக்கங்கள், ஆதி சங்கரரின் அத்வைத சித்தாந்தம், சைவ நெறி, ஆழ்வார்களின் காலங்கள்ள், ஆழ்வார்கள் காட்டிய வைஷ்ணவ நெறி, பின்னர் தோன்றிய ஶ்ரீவைஷ்ணவம், அதற்குக் காரணமான ஶ்ரீமத் இராமானுஜர் என்னும் உடையவர், அவர் ஏற்படுத்திய சீர்திருத்தங்கள், பின்னர் தோன்றிய ஆச்சார்யர்களான வேதாந்த தேசிகர் மற்றும் மணவாள மாமுநிகள், இந்த இருவரும் செய்த செயற்கரிய செயல்கள், இவர்களுக்குப்பின்னர் தோன்றிய கலை வேறுபாடுகள், அதனால் தொடுக்கப்பட்ட வழக்குகள், ஶ்ரீவைஷ்ணவ மடங்கள், அவை ஆற்றியுள்ள அரும்பணிகள், ஶ்ரீவைஷ்ணவ சமுதாயத்தில் தோன்றிய அரசியல் வல்லுனர்கள், எழுத்தாளர்கள், நீதிபதிகள், கலைஞர்கள், ஶ்ரீவைஷ்ணவர்களின் தற்போதைய நிலை, இதற்குக் காரணமான திராவிட இயக்கம் மற்றும் அதன் தலைவர்கள், இடஒதுக்கீடும் அதன் தாக்கங்களும், இடஒதுக்கீட்டை ஶ்ரீவைஷ்ணவ அந்தணர்கள் சமாளித்த விதம், தற்காலத்தில் ஶ்ரீவைஷ்ணவர்கள் குடியேறியுள்ள இடங்கள், ஆற்றும் பணிகள் என்று ஒரு களஞ்சியத்தை நூல் வடிவில் அளித்துள்ளார் ஆசிரியர்.

வரலாற்றை மட்டும் காட்டாமல், ஒவ்வொரு நிகழ்விற்குமான காரணிகள், அக்காரணிகளைச் சுட்டும் பிற ஆசிரியர்களின் நூல்கள் என்று பெரும் உழைப்பைத் தந்துள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு பக்கத்திற்கும் மேற்கோள்கள், அவற்றுக்கான சுட்டிகள், ஆதாரங்கள் என்று சுமார் பத்தாண்டு உழைப்பு தெளிவாகத் தெரிகிறது. நூல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

நூலின் சிறப்பம்சம்: இந்த ஆராய்ச்சிக்குப் பயன்பட்ட பிற நூல்கள், ஆராய்ச்சி அறிக்கைகள் முதலியன. இந்தத் தொகுப்பில் 136 நூல்கள் மற்றும் அறிக்கைகள் சுட்டப்பட்டுள்ளன. இவை தவிரவும் பல பத்திரிக்கைச் செய்திகளும் காட்டப்பட்டுள்ளன.

நூல் வேண்டுவோர் ஆசிரியரைப் பின்வரும் அலைபேசியில் தொடர்புகொள்ளலாம்: +91-94440-14584.

பி.கு.: ஆசிரியர் 83 வயது முதியவர். எனவே இந்திய மாலை நேரங்களில் அழைக்கவும்.

இராமானுசர் கட்டிய கோவில் – முன்னேற்றம்

இராமானுசர் கட்டிய சோழங்க நல்லூர் வேணுகோபாலன் கோவிலின் அவல நிலையைப் பற்றி செப்டம்பர் 2, 2018 அன்று இங்கே எழுதியிருந்தேன். என் உடன் பணியாற்றும் பாலாஜி, Pracharam.in மூலம் பல ஶ்ரீவைஷ்ணவ கைங்கர்யங்கள் செய்துவரும் ஶ்ரீமான் வீரராகவன், இன்னும் பல தொண்டர்கள் மூலம் நேற்று ஶ்ரீஜயந்தி உரியடி உற்சவம் நடை பெற்றது. கோவிலும் விரைவில் புனருத்தாரணம் செய்யப்பட இருக்கிறது.

இத்தொண்டில் பங்கேற்ற அடியார்கள், அடியேன் எழுதியதைப் பரப்பி, அனைவரும் தெரிந்துகொள்ளச் செய்த வாசகர்கள் எல்லாருக்கும் சிரம் தாழ்ந்த கைகூப்பு.

ஏதோ நாம் செய்கிறோம் என்று நினைக்க வழியில்லை. அவன் நடத்திக் கொள்ள நினைத்தான். ஒரு அணில் போல் நான் பயன்பட்டேன். ஜாம்பவான், அனுமன், இலக்குவன் என்பது போல் பாலாஜி, வீரராகவன் முதலானோர் பயன்பட்டனர். இல்லை. அவன் அப்படிப் பயன்படுத்திக் கொண்டான். அவ்வளவுதான்.

வாசகர்களுக்குச் சில படங்கள். முடிந்தால் ஒருமுறை சென்று வாருங்கள். கண்ணனின் அருளுடன் உடையவரின் கருணையையும் பெற்று வரலாம்.

கோவில் தொடர்பான உதவிகள் செய்ய விழைவோர் ஶ்ரீமான் பாலாஜியைத் தொடர்புகொள்ளவும்.  வீரராகவன் சம்பத்தைத் தொடர்பு கொண்டு அவரது பிரச்சாரப் பணிகளுக்கும் உதவலாம். (+91 9655219245).

வீரராகவன் பற்றி முன்னர் நான் எழுதிய பதிவு இங்கே.

உரியடி தொடர்பான சில படங்கள்.

 

திருமண் கிராமம்

தமிழ் நாட்டில் திருமண் தயாரிக்கும் கிராமம், அதன் இன்றைய நிலை.

உங்களுக்குத் திருமண் இட்டுக் கொள்ளும் வழக்கம் உள்ளதா? இருந்தால் மேலே படியுங்கள். இல்லையென்றால் அவசியம் படியுங்கள்.

ஶ்ரீவைஷ்ணவச் சம்பிரதாயத்தில் மிக முக்கியமானது ‘பஞ்ச சம்ஸ்காரம்’ (5 சம்ஸ்காரங்கள்). அதில் முதலாவதாக வருவது திருமண் காப்பு (புண்ட்ரம்).   ஊர்த்துவ புண்ட்ரம் என்று உடலில் 12 இடங்களில் இட்டுக்கொள்ளப்படும். ஒவ்வொரு திருமண் காப்பிற்கும் ஒரு நாரயண நாமம். ஆக, பன்னிரண்டு பெயர்கள் ( அச்சுத, மாதவ, கேசவ…).

இந்தத் திருமண் தயாரிப்பில் தானே நேரடியாக ஈடுபட்டார் ஶ்ரீமத்இராமானுஜர் என்று குருபரம்பரை அறிவிக்கிறது.

செய்யாறு அருகில் ஜடேரி என்னும் கிராமத்தில் திருமண் தயாரிப்பையே தங்களது ஒரே தொழிலாகக் கொண்டு செய்துவருகின்றனர் ஊர் மக்கள். காரணம் அந்த ஊரில் உள்ள வெள்ளை மண். திருமண் தயாரிக்க அடிப்படையான மண் அது.

அவர்கள் 80-100 கட்டிகள் கொண்ட பாக்கெட்டை ரூ 20ற்கு விற்கிறார்கள். வெளியூர்களில் அது ரூ 120 என்று விற்பனையாகிறது. மக்களுக்குப் பெரிய வருமானமெல்லாம் இல்லை.

ஊரில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் பூஜை வேண்டாம் ஐயா, ஒரு விளக்கேற்றக் கூட ஆஸ்திகர்கள் இல்லை. ஊர் மக்களே அவ்வப்போது சுத்தம் செய்து, விளக்கேற்றி வருகின்றனர். மனோரம் தாஸ் என்னும் ஆர்வலர் ஜடேரிக்குச் சென்று பார்த்து வந்தார். அன்று புரட்டாசி சனிக்கிழமை. சிறுவர்கள் கோவிலைச் சுத்தம் செய்து, விளக்கேற்றி வைத்திருந்தனர்.

மக்கள் செய்யும் தொண்டைக் கண்டு மனம் உருகிய மனோரம் தாஸ் பண உதவி செய்ய முன்வந்தார். ஊர் மக்கள் வாங்க மறுத்துவிட்டனர். ‘எங்களுக்குப் பெருமாள் ஏதோ படியளக்கறான். ஆனா, பெருமாளுக்குப் படியளக்க எங்களால முடியல்ல. முன்னெல்லாம் பக்கத்து ஊர்லேர்ந்து ஐயர் வந்து பூஜை பண்ணுவார். இப்ப வயசாயிட்டு. அதால வர்றதில்லை. நாங்களே ஏதோ முடிஞ்ச போது சுத்தம் பண்ணி விளக்கேத்தறோம்,’ என்று சொன்ன ஊர் மக்களைக் கண்டு மனமுருகி நிற்கிறார் தாஸ்.

 

ஊரில் உயர் நிலைப் பள்ளி இல்லை என்பதால் பிள்ளைகள் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று செய்யாறில் படித்து வருகின்றனர்.

ஊரில் ஒரு வயதானவரிடம் பேச்சுக் கொடுத்த போது அவர் சொன்னது: ‘நீங்க எல்லாம் சுத்த வேஸ்டங்க. எங்கியோ கோவில் கட்றேன்னு போறீங்க. பெரிய கோவிலா இருந்தா அங்க போறீங்க. எங்கள மாதிரி சின்ன ஊர்ல இருக்கற சாமியும் பட்னி நாங்களும் பட்னி.  நாங்க ஒண்ணும் கேக்கலை. எங்க பசங்களுக்கு நம்ம மதத்தோட கதைகளச் சொல்றதுக்கு ஆளில்ல. எங்களுக்கும் ரொம்ப தெரியாது. ஏதோ கூலி வேலைக்குப் போறோம், நாமக்கட்டி செய்யறோம், வயித்தக் கழுவிக்கறோம். ஆனா, எங்களுக்குப் பின்னால இந்த வேலை செய்யவும் ஆள் இருக்காது,’ என்று சொல்லி நிறுத்தினார். லேசாக விசும்பல் சப்தம்.

‘ஏன் அப்படிச் சொல்றீங்க?’ என்றார் நண்பர்.

‘இப்ப க்ரிஸ்டியன்ஸ் வர ஆரம்பிச்சுட்டாங்க. பைபிள் கதையெல்லாம் எங்க பசங்களுக்குச் சொல்றாங்க. எங்க காலத்துக்குப் பிறகு சிரமம் தான்’ என்றவரின் கண்களில் நீர்.

அதனால் என்ன? பரவாயில்லை. தேசிகப் பிரபந்தம் பாடலாமா கூடாதா, வடகலைப் புளியோதரையில் உப்பு எவ்வளவு போட வேண்டும் என்று சாஸ்த்ரோக்தமான கேள்விகளை நாம் கோர்ட்களில் எழுப்பிக் கொண்டு நமது மேதாவிலாசத்தைக் காட்டிக் கொண்டு ஶ்ரீவைஷ்ணவத் தொண்டு புரிவோம்.

இந்து முன்னணி, விச்வ ஹிந்து பரிஷத், சாயி மண்டலிகள், சேவா பாரதி முதலியவையாவது அவ்வப்போது இந்த கிரமத்திற்குச் சென்று பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டால் அடுத்த தலைமுறைக்குத் திருமண் கிடைக்கிறதோ இல்லையோ கிருஷ்ணர் கோவிலில் விளக்கு எரியும்.

Screen Shot 2018-10-24 at 10.00.26 PMகாஞ்சிபுரத்தில் இருந்து 40 கி,மீ. தூரத்தில் உள்ளது ஜடேரி கிராமம். செய்யாறு சென்று அங்கிருந்து ஆட்டோ வைத்துக் கொண்டு செல்ல வேண்டும். முடிந்தால் தீபாவளி அன்று சென்று கோவிலில் விளக்கேற்றி வாருங்கள். ஊர் மக்களும் அங்குள்ள கிருஷ்ணர்களும் சந்தோஷப்படுவர்.

மனோரம் தாஸ் அவர்களின் தொ.பே.எண்: +91-7758072388

 

 

உடையவர் எழுப்பிய கோவில் கட்டுரை – விளைவுகள்

‘நீங்க எழுதினது நல்ல ரீச் இருக்கு. 20காலாவது வந்திருக்கும். நான் பண்றேன், பணம் தரேன்,கோவில சுத்தப்படுத்தறேன்னு  எவ்ளோபேர் போன் பண்ணினாங்க. நான் சின்னதா கோசாலை அமைக்கறேன். ஒரு கன்னுக்குட்டிக்கு 4000 ஆகும். எனக்கு அந்த புண்ணியம் வரட்டும்,’ ‘முடிஞ்ச போது நான் போய் பிரபந்தம் சொல்லிட்டு வரேன்,’ ‘மாசம் நான் ஒரு ஆயிரம் ரூபாய அர்ச்சகருக்கு அனுப்பறேன்,’ இப்படி சுமார் 20கால். உங்கள் கட்டுரை பெரிய அளவுல போய் விட்டிருக்கு,’என்று நன்றி பெருகச் சொன்னார் பாலாஜி.
 
நண்பர்கள் வட்டத்தில் பூரண கைங்கர்யம் ஒன்றே தனது வேலையென்பதிலும்,’ஊருக்குப் போய் கைங்கர்யம் ஆரம்பிக்கணும்,படிச்சதெல்லாம் வீணாப்போயிண்டிருக்கு’ என்று அடிக்கடிசொல்லும் பாலாஜி, ஆ..பக்கங்களின் கட்டுரையைத் தூக்கிப் பேசினார்.
 
‘கட்டுரையோட பலம், அது இதுன்னு ஒண்ணும் இல்லைசார். உடையவர் தன் வேலைய நடத்திக்கறார். சும்மா சொல்லல. புஸ்தகம் எழுதினப்பவும் இப்படித்தான். அது தானா நடந்தது. இப்ப ஆஸ்திகாள் மனசுல உடையவர் புகுந்துண்டு பெருமாள் வேலைய நடத்தச் சொல்றார். நீங்க, நான், எல்லாம் கருவி. அணில் கூட இல்ல. அணில் உடம்புல ஒரு தூசி,’ என்றேன்.
 
தமிழ் நாட்டில் இருந்து ஆன்மீகத்தைப் பிரிக்க யாராலும் முடியாது. ஒரு சிலையை உடைக்கப் போக அது ஊர் முழுக்க ஆனது. கறுப்பைப் போட்டுக் கொண்டு நாஸ்திகம் பேச, அது ஊர் முழுக்க கறுப்பு கட்டிக்கொண்டு சபரிமலைக்குப் போவது என்றானது. சிவப்பும் அப்படியே. மேல்மருவத்தூர்.
 
‘உடல் மீது உயிர் வந்து ஒன்றுவது இயல்பே’என்பது தமிழிலக்கணம். இவ்விடத்தில் உடல் தமிழ்நாடு. உயிர் ஆன்மிகம். ஆன்மிகம் கரைபுரண்டு ஓடும் வரை நாடு உயிர்ப்புடன் இருக்கும்.
 
தமிழகத்தைப் பற்றிக் கவலைஇல்லை.ஆன்மீகம் காப்பாற்றும்.அது மட்டுமே காப்பாற்றும்.
இராமானுசர் கட்டிய கோவில் temple_treesகட்டுரை இங்கே.

இராமானுசர் கட்டிய கோவில்

கோகுலாஷ்டமி முடிந்ததா? சீடை, அப்பம் எல்லாம் ஆயிற்றா? சரி. இப்போது இராமானுஜரின் கோகுலக் கண்ணன் எப்படி இருக்கிறான் என்று பார்க்கலாம்.

‘1968ல பாலாலயம் பண்ணின கோவில் இன்னி வரைக்கும் முடியல. பெருமாளும் காணல,’ பாலாஜி மூச்சிரைக்கப் பேசினார்.

‘என்ன சொல்றீங்க? 1968? பாலாலயம்? இன்னுமா கோவில் வேலை முடியல?’ இது நான்.

‘ஆமாம். ராஜம் ஐயங்கார், எங்க அப்பாவோட தாத்தா பாலாலயம் பண்ணி பெருமாளை எடுத்து வெளில வெச்சார். இன்னிக்கும் பெருமாள் அங்கயே இருக்கார்.’ புதிராக இருந்தது.

‘கோவில் பழசு. 1000 வருஷம் பழசு. இராமானுஜர் கட்டினது’ சுவாரஸ்யம் அதிகரித்தது. பாலாஜி சக ஊழியர்.

‘என்னது உடையவரா? எப்ப இது?’ ஆச்சரியம் தாளவில்லை.

‘1968. ராஜம் ஐயங்கார் கோபால கிருஷ்ணன் கோவில்ல புனருத்தாரணம் பண்றதுக்கு ஆரம்பிச்சார். HR&CE அப்ரூவல் வாங்கறதுக்கு மனு குடுத்தார். அவா Archeological Survey of India கிட்ட NOC வாங்கிண்டு வாங்கோன்னு அனுப்பிட்டா. இன்னும் தொங்கிண்டிருக்கு’

‘அம்பது வருஷமாவா? சரி. எதுக்கு ASI?’

‘கோவிலுக்கு அடியில புதையல் இருக்குன்னு கிளப்பி விட்டுட்டான்கள். அற நிலையத் துறை பயந்துட்டான். ASIகிட்ட போகச்சொல்லிட்டான்.’

‘அப்புறம் என்ன ஆச்சு?’

‘நின்னு போச்சு. பாலாலயம் பண்ணின மூலவர் கோபால கிருஷ்ணன் வெளில சின்ன மண்டபத்துல இருக்கார். கூடவே ராமானுஜர், விஷ்வக்சேனர், நம்மாழ்வார் எல்லா மூலவர் மூர்த்திகளும் அங்கேயே இருக்கா.’

‘உற்சவர்?’

‘உற்சவர் என்ன ஆனார்னு தெரியல்ல. எங்க பாட்டி உற்சவரப் பார்த்திருக்கா. இப்ப அவர் எங்க இருக்கார்னு தெரியல..’

இடி மேல் இடி விழுந்தது போல் உட்கார்ந்திருந்தேன்.

‘திவ்யதேசத்தில் ஒரு குடிசையாவது கட்டிக்கொண்டு இருக்க வேண்டும்’ என்பது பகவத் இராமானுசரது கட்டளைகளில் ஒன்று. குடிசையில் வாழ்வது சுகமில்லை என்பதாலோ என்னவோ பலர் திவ்யதேசத்தில் வசிப்பதில்லை. அதனால் கோவிலும் ஊரும் ஆழும் பாழுமாய் ஆகிப்போனது. பல திவ்யதேசங்களில் நித்யப்படி தளிகைக்கே வசதியும் இல்லை, ஆளும் இல்லை என்கிற நிலை.

ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு ஒரு புதிய விளக்கேற்றி வைத்த இராமானுசர் திருவரங்கத்தின் பெரிய கோவிலில் பல சீர்திருத்தங்களை ஏற்படுத்தி, உற்சவங்கள் சரிவர நடைபெற வழிவகுத்தார். அவை மற்ற திவ்யதேசங்களிலும் நடைபெற வேண்டி 74 சிம்மாசனாதிபதிகளை நியமித்து, பல திவ்யதேசங்களுக்கும் அனுப்பி வைத்தார். அந்த ஊர்களில் பணிகள் சரிவர நடைபெற்று வந்தன. தன் காலத்திற்குப் பிறகும் உற்சவாதிகள் சரிவர நடைபெற வேண்டி ‘கோவிலொழுகு’ நூலில் பதிந்தார் என்று தெரிகிறது.

ஸ்ரீரங்கத்தில் கோரதம் அருகில் சிறிய அளவில் கோசாலை வைத்திருந்தார் இராமானுசர். பெருமாளுக்குப் பெரிய அளவில் பால், தயிர், அமுது தேவைகள் இருப்பதால் பெரிய கோசாலை அமைக்க வேண்டி ஸ்ரீரங்கத்துக்கு அருகில் காடுகள் அதிகம் இருந்த சோழங்கநல்லூர் பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கு ஒரு கோசாலை அமைத்துள்ளார்.  அடிக்கடி அங்கு சென்ற உடையவர் அவ்விடத்தில் சிறிய அளவில் வேணுகோபாலன் கோவிலும், கோசாலையும் அமைத்தார். அதைப்பற்றித் தான் பாலாஜி சொல்லிக்கொண்டிருந்தார்.

‘இராமானுஜர் கட்டின கோவில்னு ஆதாரம் இருக்கா?’

‘கோவிலொழுகுல இருக்கு’ என்ற பாலாஜியின் கண்களில் தீப்பொறி.

‘1968க்கு அப்புறம் என்ன ஆச்சு? கவர்மெண்ட்ல கேட்டீங்களா?’ நான்.

‘2014ல எங்க  பெரியப்ப இதை எடுத்துண்டு போனார். அறநிலையத் துறை திரும்பவும் ASIகிட்ட கை காட்டினான். அவனும் வந்து பிரிலிமினரி சர்வே ஒண்ணு பண்ணிட்டுப் போனான். அப்புறம் எங்க அப்பா இதுக்குப் பின்னாடி போனார். ஒண்ணும் புண்ணியமில்ல. ஒரு பதிலும் இல்ல.’

பாலாஜியின் தந்தையார் சமீபத்தில் வைகுந்தம் ஏகினார்.

‘சரி, இதுல ASIக்கு கேஸ் இருக்கா? எதுக்கு அவா வரணும்?’

‘இராமானுஜர் இங்க இன்னொரு ரங்கனாதரை பிரதிஷ்டை பண்ணினார்னு இருக்கு. அவருக்கு கோவில் இருந்திருக்கலாம். அதால கோபால கிருஷ்ணன் கோவிலுக்குப் பக்கத்துல  இல்லை அடியில ரங்கனாதர் புதைஞ்சு போயிருப்பார்னு ஒரு பேச்சு இருக்கு. அதால ஆர்க்கியாலஜி வராங்க.’

‘இதுல உண்மை இருக்கா?’

‘இருக்கு. கோவில் ஒழுகுல வரது.’

‘ஸ்ரீரங்கம் மாதிரியே இன்னொரு பெரியபெருமாள் சோழங்கநல்லூர்ல இருந்தார்ங்கறீங்களா?’

‘நான் சொல்லலை. கோவிலொழுகு சொல்றது.’ ஆச்சரியம் மேல் ஆச்சரியம். வாய் பிளந்தபடி அமர்ந்திருந்தேன்.

‘இப்ப அந்தக் கோவில் இருந்த சுவடு ஏதாவது இருக்கா?’

‘தெரியலை. தோண்டிப்பார்த்தா இருக்கலாம். கவர்மெண்ட் முயற்சி எடுக்கணும்.’

‘நிலங்கள் இருக்கா?’

‘அது விஷயமா ஆர்.டி.ஐ. போட்டேன். இழுத்தடிச்சு கடைசில அம்பது செண்ட் இருக்குன்னான். ரெவின்யூ டிபார்ட்மெண்ட் வெப்சைட்ல சுமார் 100 ஏக்கர் இருக்கும்னு போட்டிருக்கு.’

ஒவ்வொரு ஊரையும் போலவே அதே அக்கறையற்ற அறம் நிலையாத் துறை தான். தன் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுக்கு எவ்வளவு நிலம் உள்ளது என்று தெரிவிக்க வக்கில்லாத அலுவலர்கள். அரசாங்கத்தின் இரு பிரிவுகளில் இரு வேறு தகவல்கள். செயல் ஊக்கம் அற்ற ஊழியர்கள், திறமை அற்ற அலுவலர்கள், கிடந்து மடிகின்றன எம் கடவுள்கள்.

‘நம்ம பெரியவாள்ளாம் என்ன பண்றா?’

‘திரிதண்டி ஜீயர் வந்து பார்த்தார். அப்புறம் ஒண்ணும் தெரியல்ல.’

இராமானுஜர் கட்டிய கோவில் பாழ், ஹைதராபாதில் இராமானுஜருக்கு மிகப்பெரிய சிலை. சமீபத்தில் உடையவரின் 1000வது ஆண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அவரே கட்டிய கோவில் பாழ். பின் என்ன கொண்டாட்டம்?

‘கிஞ்சித்காரம் டிரஸ்ட், டி.வி.எஸ். இவாள்ளாம்?’

‘எப்பிடி அப்ரோச் பண்றதுன்னு தெரியல்ல.’

‘எவ்வளவு செலவாகும் கோவில் கட்ட?’

‘சுமார் 15 லக்ஷம். எங்க குடும்பத்துலயே எடுத்து பண்ணலாம்னு பார்த்தா அற நிலையத்துறை பர்மிஷன் அது இதுன்னு இருக்கு.’

திருப்பணி என்னும் பெயரில் கொள்ளை நடைபெறும் இன்னாளில், நல்ல மனிதர்களுக்கு வந்த துயர நிலை.

அந்தக் கோவில் இன்று சீரும் சிறப்புமாக உள்ளதை ஶ்ரீவைஷ்ணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

கோவில் எப்படி உள்ளது என்கிறீர்களா?

நல்ல ஸ்திரமாக உள்ளது. கோவில் மேல் மரங்கள் வளர வேண்டுமென்றால் கோவில் மண்டபம் ஸ்திரமாகத்தானே இருக்க வேண்டும்?

ஆண்டாள் யாரை ‘எம் அண்ணரே’ என்று அழைத்தாளோ, அன்னார் ஆசை ஆசையாய் எழுப்பிய கோவில் இன்று இந்த நிலையில் உள்ளது.

பழைய கோவில் கர்ப்பக்கிருஹம், அர்த்தமண்டபம், மஹாமண்டபம் எப்படி உள்ளன?

ரொம்ப விசேஷமாக, தமிழர்களின் அக்கறையைப் பறை சாற்றுவதாய் உள்ளது.

சரி. பெருமாள் எப்படி இருக்கிறார்?

கையில் வெண்ணெய் வைத்துக் கொண்டு ஆடியபடியே நம்மைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிறான் கோபாலகிருஷ்னன்.

gopalakrishnan_moolavar
கோபாலகிருஷ்னன்

வேறு என்ன மூர்த்திகள் உள்ளனர்?

நம்மாழ்வார், உடையரவர், விஷ்வக்சேனர், கருடன். எல்லாரும் 50 ஆண்டுகளாய் கோவிலை விட்டு வெளியே நமக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

acharyas.jpg
நம்மாழ்வார், உடையவர், விஷ்வக்சேனர்

 

sethuraman_archakar1
சேதுராமன் (85)

அர்ச்சகர் யாராவது உண்டா?

ஏன் இல்லை? 85 வயது சேதுராமன் சம்பளம் இல்லாமல் எந்த பக்தர்களும் வராமலும் கடந்த 20 ஆண்டுகளாய் ஆராதனம் செய்து வருகிறார். இந்த கோவில் அருகே தண்ணீர் இல்லாமையால் தினமும் தனது வீட்டில் இருந்து பிரசாதமும் வழியில் ஒரு இடத்தில் தீர்த்தமும் எடுத்துக் கொண்டு 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளியநல்லூர் எனும் கிராமத்திலிருந்து (மொத்தம் 14 கிலோமீட்டர் இருவழி) சிரத்தையுடன் ஆராதனம் செய்கிறார். எப்போதாவது பெருமாள் சேவிக்க இவரை குலதெய்வமாக கொண்ட ஒரு குடும்பத்தாரோ ஒரு சில உள்ளூர் மக்களோ வருவர். சில ஆண்டுகள் வரை ஒருகால பூஜைக்கு உதவி என்று அரசு அர்ச்சகருக்கு சில பத்து ரூபாய்களை அளித்து வந்தது. இப்போது அதுவும் இல்லை.

கோவிலில் ஏதாவது விசேஷங்கள் உள்ளனவா?

பாஞ்சராத்ர ஆகமக் கோவில் போல் தெரிகிறது. வெளியில் உள்ள த்வஜஸ்தம்பம், பலி பீடம் போன்றவையால் தெரிகிறது. ஆனாலும் குழப்பமே.

கோவிலுக்கு எப்படிச் செல்வது?

திருச்சியில் நாமக்கல் ரோட்டில் முக்கொம்புக்கு அணைக்கு 2 km முன்னால் சிறுகாம்பூர் உள்ளது.

சிறுகாம்பூர் மெயின் ரோட்டில் வலது புறம் திரும்பி 5 kms உள்ளே சென்றால் சோழங்கநல்லூர் மேல்நிலைப் பள்ளி வரும். அதைத் தாண்டி வலது பக்கத்தில் வரும் சிறு ரோட்டில் திரும்பி மீண்டும் வலது புறம் திரும்பினால் கோவில் தெரியும்.

திருச்சியில் நாமக்கல் ரோட்டில் முக்கொம்பு அணைக்கு 2 km முன்னால் சிறுகாம்பூர் உள்ளது.

சிறுகாம்பூர் மெயின் ரோட்டில் வலது புறம் திரும்பி 5 கிமீ உள்ளே சென்றால் சோழங்கநல்லூர் மேல்நிலைப் பள்ளி வரும். அதைத் தாண்டி வலது பக்கத்தில் வரும் சிறு ரோட்டில் திரும்பி மீண்டும் வலது புறம் திரும்பினால் கோவில் தெரியும். ஶ்ரீரங்கங்கத்தில் இருந்து 20 km மற்றும் திருவெள்ளறை கோவிலிலிருந்து 10 km தொலைவில் உள்ளது

temple_google

ஸ்ரீவைஷ்ணவர்கள் என்ன செய்யலாம்?

  1. யார் சேவாகாலத்திற்குப் போவது
  2. எவ்வளவு சன்மானம் பெறுவது
  3. நம்மாழ்வாரை எப்படி அவமதிப்பது
  4. வேதாந்த தேசிகனை எவ்வாறு தூற்றுவது
  5. மணவாள மாமுனிகளை எப்படி நிந்திப்பது
  6. கீழ்த்தரமான தொலைக் காட்சிகளில் தோன்றி தென்கலையா, வடகலையா என்று விவாதிப்பது
  7. வடகலைக் கோவிலைத் தென்கலைக் கோவிலாக மாற்றுவது
  8. புளியோதரையில் உப்பு எவ்வளவு போட வேண்டும்

என்பன போன்ற ஸாஸ்த்ர விசாரங்களில் ஶ்ரீவைஷ்ணவ சமூகம் ஈடுபடலாம்.  இந்த ஸாஸ்த்ர விசாரங்கள் முடிந்தவுடன், அறிவு நிலையில் மிக முந்தியுள்ள ஶ்ரீவைஷ்ணவ சமூகம் இந்தக் கோவில் விஷயமாக ஏதாவது செய்ய முனையலாம்.

அதுவரை உற்சவர் இல்லாமல், தளிகை இல்லாமல், நித்யப்படி ஆராதனைகள் இல்லாமல், கோபாலகிருஷ்ணன் நின்று கொண்டிருக்கட்டும்.

உண்மையான அக்கறை உள்ளவர்கள் என்ன செய்யலாம்?

பாலாஜி (+65-9083-7505, balajivenkatesan79@yahoo.com) அவர்களைத் தொடர்புகொண்டு பேசலாம். இவருக்கு அற நிலையத் துறையில் பல உதவிகள் தேவைப்படுகின்றன. கோவிலைப் புனருத்தாரணம் செய்ய அனுமதி மட்டும் வேண்டும். அற நிலையத்துறையில் உள்ளவர்கள் இந்தக் கோவில் விஷயத்தில் உதவுங்கள். காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகள் உற்சவர் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுங்கள். வரலாற்று ஆர்வலர்கள் ஒருமுறை வந்து பார்த்து ஆராய்ந்து உதவுங்கள்.

இந்தப் பதிவைப் படித்துவிட்டு அந்தக் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று யாராவது விரும்பினால் அர்ச்சகர் சேதுராமன் அவர்களைத் (+91-97875-72556, +91-85084-53768) தொடர்புகொண்டு அவரை அழைத்துக் கொண்டு சென்று வழிபடலாம். வயதானவர். வேறு ஊரில் இருக்கிறார். ஆகவே பார்த்துச் செய்யுங்கள்.

பிறந்த நாளுக்கு அட்டிகை வாங்கினேன், ஐபோன் வாங்கினேன், மரினா பே ஸாண்ஸ்ல டின்னர் போனேன் என்று பேஸ்புக் ஸ்டேட்டஸ் போடாமல், இம்மாதிரியான பணிகளில் ஈடுபடலாம்.

இந்த ஸ்ரீஜெயந்திக்கு இதையாவது செய்வோம்.  கோபாலகிருஷ்ணனைக் கண்டு வந்து காப்பாற்றுவோம்.

கோகுலாஷ்டமி / ஸ்ரீஜயந்தி வாழ்த்துக்கள்.

ஆ..பக்கங்களில் இணைந்திருக்க, https://facebook.com/aapages

வைஷ்ணவ லக்ஷணம்

வைஷ்ணவ லக்ஷணம் பற்றித் தெரிந்து கொள்ள பகவத் ராமானுஜரின் வாழ்க்கையில் ஒரு சம்பவம் :

உடையவர் சஞ்சாரமாக எழுந்தருளியிருந்த போது, அவரை ஊருக்கு எழுந்தருளப்பண்ண பல தனிகர்கள் முன்வந்திருந்தனர். உடையவர் மற்றும் அடியார் குழாத்துக்கான ஏற்பாடுகள் குறித்துப் பார்த்து வர ஒரு ஶ்ரீவைஷ்ணவரை உடையவர் அனுப்பினார். சென்றவர் திரும்பி வந்து, ‘ஒரு ஶ்ரீவைஷ்ணவன் வந்துள்ளான் என்று தெரிந்துகொள்ளாத அளவிற்குத் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்துள்ளன. ஆடம்பரமான பந்தல்களும், அலங்காரங்களும் என்று எங்கும் விழாக்கோலமாக உள்ளது,’ எனறு தெரிவித்தார்.

மறு நாள் உடையவர் தனது குழாத்துடன் அவ்வூருக்கு எழுந்தருள, ஊருக்குச் செல்ஷலும் பாதை இரண்டாகப் பிரியும் இடத்தில், அந்த ஊரை விட்டு விலகிச் செல்லும் பாதையில் சென்று அந்த ஊரில் உள்ள ஒரு குடிசையை அடைந்தார். அது பரம பக்தையான பருத்திக்கொல்லையம்மாள் என்னும் ஶ்ரீவைஷ்ணவருடையது.

ஆனால் கதவு திறக்கப் படவில்லை. உள்ளே அந்தப் பெண்மணி உடுத்திக்கொள்ள சரியான வஸ்த்ரம் இல்லாமையால் கதவைத் திறக்க முடியவில்லை என்று தெரிவிக்கும் விதமாகத் தானும் அந்தக் கதவை உள்ளிருந்து இருமுறை தட்டினாள்.

நிலைமையை உணர்ந்து கொண்ட உடையவர், தனது தலைல் இருந்த ஒரு காவி காஷாய வஸ்திரத்தை அவிழ்த்து வீட்டின் உள் எறிய, அதை உடுத்தியவண்ணம் அந்தப் பெண் உடையவர் குழாத்தை வரவேற்று இருப்பதைக் கொண்டு உபசரித்தாள்.

உடையவர் இருப்பிடத்தை அறிந்துகொண்ட தனிகர், அவசரமாக வந்து தனது விழாக்கோல வரவேற்பை ஏற்க வேண்ட, உடையவர் மறுத்து, ‘தனியாக வந்த சாதாரண ஶ்ரீவைஷ்ணவனை உணராத உங்கள் இடம் நமக்கு உகந்ததன்று’ என்று சாதித்தருளினார்.

Ramanuja
ராமானுஜர்
தவறை உணர்ந்த தனிகர் பிராயச்சித்தம் வேண்ட, ‘இன்றிலிருந்து நீர் இவ்வூர் ஶ்ரீவைஷ்ணவர்களின் ஈரங்கொல்லியாக இருந்து சேவை செய்வீர்,’ என்றார். (ஈரங்கொல்லி – வண்ணார்).

ஶ்ரீவைஷ்ணவனது பார்வையில் பகட்டும், படாடோபமும் இருத்தலாகாது என்பதைத் தனது வாழ்வின் மூலம் உடையவர் சாதித்தருளினார் என்று குருபரம்பரையில் சொல்வதுண்டு.

பாரதத்தில் கண்ணன் விதுரனின் குடிசையை நாடியதை ஒத்திருப்பதாக உடையவரின் செயல் அமைந்துள்ளது.

கழுத்து முழுக்க ஜொலிக்கும் தங்கமும், கைகளில் பிரேஸ்லெட்டும், மோதிரமுமாகத் தோன்றும் ஆண்களைக் கண்டால் ஏனோ எனக்கு இந்த நிகழ்வு நினைவிற்கு வருகிறது.

ஆசிரியர்கள்

திராவிட தேசத்தவர்கள், எந்த சம்பிரதாயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவசியம் கண்ணீருடன் நன்றி சொல்ல வேண்டியவர்கள் இருவர். 

முதலாமவர் சங்கர பகவத்பாதர்.

சங்கரர் இல்லையெனில் சிருங்கேரி மடம் இல்லை. மடம் இல்லையெனில் வித்யாரண்ய தீர்த்தர் இல்லை. வித்யாரண்யர் இல்லையெனில் ஹரிஹரன், புக்கன் இல்லை. இவர்கள் இல்லையெனில் கிருஷ்ணதேவராயர் இல்லை, விஜய நகர சாம்ராஜ்யம் இல்லை. அது இல்லையெனில் அஹோபிலம், ஶ்ரீரங்கம், திருமலை, மதுரை, சிதம்பரம் முதலான க்ஷேத்ரங்கள் இல்லை. நாயக்கர் ஆட்சி இல்லை, மன்னார்குடி, திருவண்ணாமலை, கும்பகோண க்ஷேத்ரங்கள் இல்லை, அவற்றின் கோவில்கள் இல்லை.

இன்னொருவர், பின்னர் தோன்றிய ஶ்ரீமத் இராமானுசர். அவர் இல்லையைனில் ஶ்ரீவைஷ்ணவம் மட்டுமில்லாமல், பாரதமெங்கும் பெரும் பண்பாட்டுப் புரட்சிகளும் இல்லை, ராமதாசர் இல்லை, குரு நானக் இல்லை, பாரதம் காத்த சீக்கியமும், மராட்டிய அரசுகளும் இல்லை.

மொத்தத்தில் நாம் ஒருவரும் இல்லை. 

ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர்களான இந்த இரு ஆச்சார்யர்களையும் வணங்கி, இன்றைய ஆசிரியர் தினத்தில் இவர்கள் வழியாக நமது ஆசிரியர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைப்போம்.

பி.கு 1: திராவிட தேசம் = தமிழ் நாடு + ஆந்திரம் + கேரளம் + கர்நாடகம்.

பி.கு 2: வித்யாரண்யர் ஹரிஹரனையும் புக்கனையும் சந்திக்கவில்லை, அவர் வேறு என்று ‘முற்போக்கு’பவர்கள் வேறு பாத்திரக்கடை பார்க்கவும்.

இராமானுசர் – பாதை மாற்றிய பெருமகனார்

இமு, இபி – வைணவ ஆச்ச்சாரியர்களை இப்படி இரண்டு வகையாகப் பிரிக்கலாம் – இராமானுசருக்கு முன், இராமானுசருக்குப் பின்.

இமு – நாதமுனிகள், ஆளவந்தார், பெரிய திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி.. இவர்கள் ‘அனுவிருத்தி பிரசன்னாச்சார்யர்கள்’. அடிப்படை ஞானம், அனுஷ்டானம் முதலியவை உடையவர்களுக்கு மட்டுமே உய்வதற்கான வழியை உபதேசிப்பது என்று கொண்டிருந்தார்கள். இதனை ஓரண்வழி என்றும் சொல்வர்.

இதனை ஶ்ரீமத் இராமானுசர் மாற்றினார். ‘க்ருபா மாத்ர ப்ரசன்னாச்சார்ய’ வழி என்பதாக விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை அறிந்துகொள்ள ஆசை ஒன்றே போதும் என்பதாகக் கொண்டுவந்தார். இதனால் உய்ந்தவர் பலர். திருக்கோஷ்டியூரில் அனைவருக்கும் உபதேசம் செய்து இந்த வழியைத் துவக்கி வைத்தார் உடையவர்.

இபி – 74 சிம்மாசனாதிபதிகள், தேசிகர், மணவாள மாமுனிகள், பிள்ளை லோகாச்சாரியார் முதலான இராமானுசருக்குப் பின்னர் வந்த ஆச்சாரியர்கள் இவ்வழியில் மக்களுக்கு உய்யும் வழி காட்டினர்.

இந்தப் பாதை மாற்றமே ஶ்ரீவைஷ்ணவ தரிசனத்தை மிகப் பெரிய எண்ணிக்கையிலான சாதாரண மக்களுக்கும் கொண்டு சேர்த்தது. Transformational Leadership, Pathbreaking Leadership என்று நாம் இன்று சொல்வதை 1000 ஆண்டுகளுக்கு முன் செய்து காட்டியர் எம்பெருமானார்.

இதனை ‘உபதேச ரத்தின மாலை’ என்னும் நூலில் மணவாள மாமுனிகள் இவ்வாறு சொல்கிறார்:

ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர்

ஏரார் எதிராசர் இன்னருளால் – பாருலகில்

ஆசை உடையோர்க்கு எல்லாம் ஆரியர்காள் கூருமென்று

பேசி வரம்பறுத்தார் பின்

சேரிடம்

‘வேற எதாவுது வேல்யூபிள் பொருள் காணாமப்போயிருந்தா சொல்லுங்க சார்’

காவல் ஆய்வாளரின் பேச்சு எனக்கு எரிச்சலை அளித்தது. எது வேல்யூபிள் ? எது மதிப்பில்லாதது ? அதை யார் தீர்மானிப்பது ?

‘நகை, ஐபேட், ஐபோன், வீட்டு டாக்குமெண்ட், இன்ஷ்யூரன்ஸ் பாலிஸி இப்படி ஏதாவது இருந்தா எஃப்.ஐ.ஆர். போடலாம். நீங்க சொல்றதுல ஒண்ணுமே இல்லையே. புஸ்தகம் எல்லாம் எஃப்.ஐ.ஆருக்கு ஒர்த் இல்ல ஸார்,’ என்றவரிடம் என்ன சொல்வது ?

புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ஓமலூர் செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறினால் மட்டுமே ஹாஸ்டல் கேட் எனப்படும் சேலம் அரசு பொறியியல் கல்லூரியின் விடுதி நிறுத்தத்தில் இறங்க முடியும். சில வேளைகளில் அங்கு சில பஸ்கள் நிற்பது கிடையாது.

ஹாஸ்டல் கேட்டில் இறங்கி 5-வது விடுதிக்குச் செல்ல மனத்துணிவு வேண்டும். காடு போன்று அடர்ந்த பாதையில் இரவில் நடக்கையில் ஒரு பாம்பாவது தென்படும். ஆனால் அவை ஏனோ ஹாஸ்டலுக்குள் வருவதில்லை. மெதுவாக ஓசைப்படுத்திக்கொண்டே நடந்து ஒரு வழியாக மெஸ் ஹால் எனப்படும் உணவுக்கட்டடத்தை அடைந்துவிட்டால் பிறகு 5-வது விடுதிக்கு 5 நிமிடமே நடக்க வேண்டியிருக்கும். செல்வம் அன்று ஒரு வழியாக விடுதிக்கு வந்து கதவைத் தட்டினான்.

‘காலைல மூணு மணிக்கி என்ன இழவுக்குடா வந்தே?’ என்றேன் கடுப்புடன். அவன் அறைச் சாவி என்னிடம் இருந்த்தாக்க் கண நேரத்தில் பொறி தட்டியவுடன் ‘இழவு’ என்று சொன்னதற்காக சட்டென்று நாக்கைக் கடித்துக்கொண்டேன்.

‘மச்சி, பஸ்ஸு கிடைக்கலடா. பசிக்குதுடா. ஏதாவது இருக்கா?’

‘போடா சொங்கி. நாலு நாளா மெஸ்ஸு ஸ்டிரைக். நாங்களே வயித்துல ஈரத்துணி தான்,’ என்றவனை ‘மாப்ள, அப்பிடி சொல்லாத. காலைலேருந்து ஒண்ணும் சாப்பிடல. வா டாபா போகலாம்,’ என்றான்.

‘காலை மூணு மணிக்கு டாபாவா ? எதுனா இருந்துதான் பேசுறியா?’ என்றேன். டாபா எனப்படும் நெடுஞ்சாலை உணவகங்கள் சேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில் இருந்த பஞ்சாபி உணவகங்கள். சுக்கா ரொட்டி, நான் முதலான பஞ்சாபி உணவுகளை எனக்கு அறிமுகப் படுத்தியவை அவை. ஆனால் அந்த இரவு நேரத்தில் செல்வது அபாயகரமானது. நான்கைந்து பேராக வேண்டுமானால் போகலாம்; குறுக்கு வழி உண்டு. ஆனால் அது காட்டு வழி. நரி, காட்டு நாய், பாம்பு முதலியன தென்படும்.

செல்வத்துக்கு அசாத்தியப் பசி. இருவரும் டாபாவை நோக்கி நடந்தோம். இருள் பழக சிறிது நேரமானது. காட்டின் ஒலிகள் அதிகரித்தன. தூரத்தில் நாயின் ஊளை கேட்டது.

‘வேணாம்டா, போயிரலாம்டா,’ என்ற என்னைக் கையைப் பிடித்து இழுத்தவாறு சென்றான் செல்வன்.

தூரத்து தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் பயண விளக்குகள் காற்றில் பறந்தன. வாகனங்களின் அமைப்புகள் தெரியவில்லை. சுமார் ஐநூறு மீட்டர் இருந்திருக்கலாம். மெதுவாக நெடுஞ்சாலையைத் தொட்டுவிட்டால் அங்கிருந்து நடந்து செல்வது எளிது.

செல்வம் கீழே குனிந்து தன் காலைத் தடவினான். ‘முள்ளு குத்திடுச்சு மச்சி,’ என்றவன் முகத்தில் வியர்வை தெரிந்தது. மெதுவாக நடக்கத் தொடங்கியவன் நடையில் ஒரு தள்ளாட்டம் தெரிந்தது.

‘ரொம்ப பசிக்குதாடா?’ என்றேன். அவன் ஒன்றும் சொல்லாமல் என்னைப் பார்த்தான். கண்கள் இருளில் கூட வெளிறித் தெரிந்தன. வாயில் எச்சில் ஒழுகுவது வாகனத்தின் தீற்றல் ஒளியில் தெரிந்தது.

‘என்னாச்சு மாமூ?’ என்று அருகில் செல்ல முயன்ற போது தடாலெனக் கீழே விழுந்தான் செல்வம். கை, கால் கோணியபடி வாயில் நுரை தெரிந்தது.

விஷயம் புரிந்துவிட்டது போல் இருந்தது. குத்தியது முள் இல்லை.

ஒரு வேளை பாம்போ ? இருக்கலாம். இருளில் தெரியவில்லை. எச்சரிக்கையாக தரையில் காலால் ஓங்கி அறைந்தேன்.

செல்வம் பேசவில்லை. மரக்கட்டை போல் கிடந்த அவனைத் தூக்க முயன்று தோற்றேன். எதற்கும் இருக்கட்டும் என்று அவனது இடது முட்டிக்கு மேல் என் கைக்குட்டையால் இறுகக் கட்டினேன்.

வேறு வழி இல்லை என்பதால் துணிந்து அவனது கைகளைத் தூக்கி, என் தோள் மீது சார்த்தி உப்பு மூட்டை தூக்குவது போல், பாதி தூக்கியும் மீதி இழுத்துக்கொண்டும் கல், முள் என்று எல்லாவற்றிலும் சென்றேன். ஓடினேன் என்பது சரியாக இருக்கும்.

ஒரு வழியாக நெடுஞ்சாலையை அடைந்து ஏதாவது வாகனம் நிற்குமா என்று கை காட்டிப் பார்த்தேன். கும்மிருட்டில் நான் பேய் போல் சாலையில் நிற்க, என் முதுகில் இன்னொரு பேய் போல் செல்வம். அதனாலோ என்னவோ ஒரு வாகனம் கூட நிற்கவில்லை. நேரம் கடந்துகொண்டிருந்தது. செல்வத்திற்கு முற்றிலுமாக சுய நினைவு இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக நான் அவனை இழந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது.

அப்போது வேகமாக எங்களைக் கடந்து சென்ற வெள்ளை அம்பாசிடர் கார் சட்டென்று கிறீச்சிட்டு நின்று, பின் நோக்கி நகர்ந்து  வந்து எங்கள் முன் நின்றது. உள் விளக்கு எரிந்தவுடன் பின் இருக்கையில் இருந்த வெள்ளை மீசை வைத்த பெரியவர், ‘என்ன தம்பி, வண்டீல வர்றீங்களா?’ என்றார். ‘தெய்வம் மனுஷ்ய ரூபேண’ என்று அப்பா சொல்வது நினைவுக்கு வந்தது.

காரில் மெதுவாக செல்வத்தை ஏற்றி இருபது மணித்துளிகளில் கோகுலம் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தோம். பாம்புக் கடி தான். செல்வத்தின் பாதத்தில் பாம்பின் பதிவைக் கண்டு பெரியவர்,’ நல்ல பாம்பு தம்பி. கொஞ்சம் கஷ்டம் தான்,’ என்றார். நாங்கள் சேலத்தைச் சார்ந்தவர்கள் இல்லை என்பதை அறிந்து, பின்னர் மருத்துவமனை ஊழியரிடம் ஏதோ பேசினார். சில மணித்துளிகளில் சிறப்பு மருத்துவர்கள் விரைந்து வந்தனர்.

என்னென்னவோ செய்து இரண்டு நாட்களில் செல்வம் உயிர் பிழைத்தான். ஆனால் பேச்சு வரவில்லை. ஒரு வாரம் முழுவதும் மருத்துவமனையில் இருந்தோம். பெரியவர் மாலை வேளைகளில் வந்து தினமும் பார்த்துச் சென்றார். எங்கள் உதவிக்கு என்று ஒரு மனிதரையும் அனுப்பியிருந்தார்.

செல்வத்தையும் என்னையும் ஏழு நாட்கள் கழித்து பெரியவரே கல்லூரிக்கு அழைத்துச் சென்றார். போகும் வழியில்,’ சந்தியாவந்தனம் எல்லாம் செஞ்சீங்களா தம்பி?’ என்றார். தூக்கி வாரிப் போட்டது. ‘பார்த்த உடனேயே பாப்பாரவங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். அதான் கேட்டேன். விட்டுடாதீங்க,’ என்றவர், ‘ஆமா என்ன ஊரு சொன்னீங்க? கம்பர் பொறந்த ஊருன்னீங்களே, வயசாயிடுச்சில்ல நினைவு நிக்க மாட்டேங்குது, ஏனுங்?’ என்று கேள்வியா பதிலா என்று தெரியாதபடி நயமான கொங்குத் தமிழில் கேட்டார்.

‘உங்க பேரு தம்பி ஆமருவின்னு என்ன ஒரு அழகு பாருங்க. அந்த திருமங்கை கள்ளப்பயங்க தம்பி. கள்ளன்னா ஜாதி இல்லீங்க. சரியான திருடனுங்க அவன். என்னமா எழுதிட்டுப் போயிட்டான் !’ என்று திருமங்கையாழ்வாரைத் தொட்டார். நான் மிகவும் குழம்பியிருந்தேன். பார்வையில் பிராமணராகத் தெரியவில்லை; கவுண்டராக இருக்கலாம். பேச்சு அப்படித்தான் இருக்கிறது. ஆனால் ஆழ்வார் பற்றியெல்லாம் பேசுகிறாரே !’ என்று எண்ணினேன். குழப்பம் தீரவில்லை.

கல்லூரி விடுதியில் கொண்டு விட்டு,’ ஒரு தரம் நம்ம ஊட்டுக்கு வந்து போடணு ஆமா’. கட்டளை போல இருந்தாலும் அன்பு தெரிந்தது. ‘கருப்பூர்ல வந்து ‘பண்ணை’ன்னா ஒட்டுக்க கூட்டிட்டு வந்துடுவானுங்க ஏனுங்..’ என்று சொல்லிச் சென்றார்.

மறுநாள் கல்லூரியில் முதல்வர் அழைத்தார். ‘நீங்கள் காவேரி கவுண்டருக்குச் சொந்தமா?’ என்று வினவினார். பெரியவர் முதல்வரிடம் தொடர்பு கொண்டு பேசியிருப்பார் போல என்று நினைத்தேன். அன்று மாலை எங்கள் விடுதிக்குச் செல்லும் வழியில் முட்செடிகள் அகற்றப்பட்டிருந்தன. அரசுக் கல்லூரியில் அவ்வளவு விரைவாகக்கூட வேலைகள் நடைபெற முடியும் என்று அறிந்தபோது வியப்பாக இருந்தது.

செல்வம் தேறிவிட்டான். ஒரு மாதம் கழிந்திருக்கும். நாட்டு நலப் பணித்திட்டக் குழுவில் ( என்.எஸ்.எஸ்.) கருப்பூர் சென்றோம். கல்லூரி மாணவர்கள் அனைவரையும் பண்ணை கூப்பிடுகிறார் என்று அறிந்து அவர் வீட்டிற்குச் சென்றோம். ஆரவாரமாக விளையாடியபடியே அவரது தோட்டத்தை அடைந்து உள்ளே இருந்த அவரது வீட்டிற்குச் சென்றோம். வாசலில் நிறைய காலணிகள் கிடந்தன. ஆனால் ஆள் அரவமே இல்லை. மெதுவாக உள்ளே அழைத்துச் சென்றனர். பெரிய முற்றத்தின் நடுவில் ஒரு நாற்காலியில் பெரியவர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க சுமார் இருபது ஊர்க்காரர்கள் சிரத்தையாகக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

எங்களைப் பார்த்தவுடன் ,’ அட நம்ம தம்பிங்களா, வாங்க இப்பிடி..’ என்று வாஞ்சையுடன் அழைத்து,’ செல்வம் எப்பிடி இருக்காப்புல? அடிக்கடி வந்து போடச் சொன்னேன் இல்ல?’ என்றார். அசடு வழிய நின்றுகொண்டிருந்த என் முகத்தை உற்றுப் பார்த்தார்.

‘அட ஆமா, நீங்க வைஷ்ணவங்க இல்ல ? ஐயங்காருதானே ? பாசுரம் பாடுவீங்க தானெ?’ என்று சரமாரியாகக் கேட்டார். என் நெற்றியில் இருந்த ஸ்ரீசூர்ணம் என்னும் வைணவ அடையாளம் அவருக்கு என்னை முழுமையாக நினைவூட்டியிருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

‘பாடுவேங்க ஐயா,’ என்றேன்.

‘ஆமா, அது என்ன ஊரு சொன்னீங் ? மறந்து போவுது இப்பெல்லாம்,’ என்றவருக்கு, ‘தேரழுந்தூர் ஐயா’ என்றேன். ‘ஆமா ஆமா, அந்த கம்பன் பொறந்த ஊரு தானே. நெனப்பு வந்துட்டு,’ என்று நெற்றியில் தொட்டுக் கொண்டார்.

‘இப்ப பாடுவீங்ளா?’

தட்ட முடியாமல் ,’ செங்கமலத் திருமகளும்..’ என்னும் திருமங்கையாழ்வார்ப் பாசுரம் பாடினேன். கண் விழித்துப் பார்த்தேன். அத்துனை பேரும் எழுந்து நின்றுகொண்டிருந்தார்கள். பெரியவர் என் அருகில் கை கூப்பி, கண்களில் நீர் பெருக நின்றுகொண்டிருந்தார்.

‘என்ன பாசுரம் தம்பி இது. கள்ளப்பய கொல்றானே,’ என்று நா தழுதழுத்தார். நான் குழம்பிப்போனேன். ஒரு வேளாளர், ஊரின் நாட்டாண்மை போல் தெரிகிறது அவருக்குப் பாசுரங்களில் இவ்வளவு ஈடுபாடா? பார்த்தால் படித்தவர் போலக் கூட தெரியவில்லை.

‘தம்பி, நீங்க எப்ப வேணும்னாலும் நம்மூட்டுக்கு வரலாம். முடிஞ்சா சனிதோறும் வாங்க. வந்து ஒரு நாலு பாசுரம் பாடுங்க. ஆன்ந்தமாக் கேப்போம். பருப்பும் நெய்யும் பிசஞ்சு ரசம் சோறு செய்யச் சொல்றேன். அம்மிணி செங்கமலம், தம்பிக்கு வேணுங்கறத ‘தளிகை’ பண்ணிப் போடும்மா,’ என்றார். அவரது பெண் போலும் அந்த செங்கமலம்.

ஒரு நிமிடம் உறைந்து போனேன். செங்கமலம் ஒரு பரம வைணவப் பெயர். அத்துடன் பெரியவர் ‘தளிகை’ என்று சொன்னது போல் பட்டது. ‘என்ன நடக்கிறது இங்கே ?’ என்று குழம்பியபடி நின்றிருந்தேன். தளிகை என்பது பிராமண வைஷ்ணவர்கள் ‘உணவு தயாரித்தல்’ என்னும் பொருளில் பயன் படுத்தும் ஒரு நல்ல தமிழ்ச் சொல்.

அத்தனைபேரும் என்னையே பார்த்தனர். எனக்கு அவ்வளவு பேர் என்னைப் பார்த்துப் பழக்கமில்லை. கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது.

பெரியவர் பேசினார். ‘என்ன, தம்பி கொழம்பிட்டீங்களோ ? ஏனுங் ? கவுண்டன் ஊட்டுல கறி தானே செய்வானுங்க, கெளவன் தளிகைங்கறான், செங்கமலம்னு பொண்ணு பேர் இருக்குது, அதானே, என்னங் நான் சொல்றது?’ என்று புன்சிரிப்புடன் கேட்டார். நான் வழக்கம் போல் குழப்பத்துடன் நின்றிருந்தேன்.

‘அங்கன பாருங்க தம்பி. அந்த அறைக்குப் பேர் ‘தளிகை அறை’. இதோ இந்த அறைக்குப் பேர் ‘முதலியாண்டான் உள்’. என்னோட ரூமுக்கு ‘கிருபா சமுத்திரம் உள்’னு பேர். இப்பிடி எல்லாமே விஷ்ணு தொடர்பாத்தான் இருக்கும்,’ என்றார். தலை சுற்றி விழுந்துவிடுவேன் போல் இருந்தது.

‘உள்ள வாங்க, இன்னும் பலது இருக்கு,’ என்று உள்ளே அழைத்துச் சென்றார். ‘பூஜை அறை’ போல் இருந்த ஒரு இருட்டறையில் ஒரு பெரிய மரக் கோபுரம் இருந்தது. கோவிலாழ்வார் என்று எங்கள் வீட்டில் சொல்வார்கள். கை கால்களை அலம்பிக்கொண்டு கோவிலாழ்வாரைத் திறந்தார். உள்ளே ஏராளமான சாளக்கிராமங்களும், சின்னச் சின்ன விக்கிரகங்களும் இருந்தன. ஆச்சரியத்தால் வாய் பிளந்து நின்றிருந்த என்னிடம் சுவற்றில் இருந்த ஒரு மிகப் பழைய ஓவியத்தைக் காண்பித்தார். இராமானுசர் போல் இருந்த ஒரு பெரியவரிடம் ஒரு 50 வயதான பெண்மணி ஆசி பெறுவது போல் வரையப்பட்டிருந்த்து.

‘இது இராமானுசருங்க. அம்மிணி யாரு தெரியுங்களா ? எங்க சேலத்துக் கார அம்மிணிங்க. கொங்கப்பிராட்டின்னு பேருங்க. சேலத்துலேர்ந்து ஸ்ரீரங்கம் போய், இராமானுசர் கிட்ட பஞ்ச சம்ஸ்காரம் வாங்கிக்கிட்டவங்க. பொறவு சேலம் வந்து இராமானுச சித்தாந்தத்தப் பரப்பினாங்க. அவங்களால வைஷணவனான குடும்பம் எங்க மூதாதை குடும்பம். அதால நாங்கள்ளாமும் வைஷ்ணவங்க தாங்க தம்பி,’ என்று சொல்லி, படத்தை விழுந்து சேவித்தார். ஒன்றும் செய்வதறியாமல் நானும் சேவித்தேன்.

என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள வெகு நேரம் ஆனது. வேளாளர் குலத்தின் ஒரு பெண்ணுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்த உடையவர் இராமானுசரின் செய்கையை நினைப்பதா ? கொங்குப் பிராட்டி என்னும் அந்த மாது சிரோன்மணியை நினைப்பதா ? அனைவரையும் உள்ளிழுத்து, அனைவருக்கும் இறையருள் தரும் அந்த சித்தாந்தத்தை நினைப்பதா ? என்று தெரியாமல் ஒரு மாதிரி விக்கித்து நின்றிருந்தேன்.

அதன் பிறகு அவர் சொன்னது என் அறியாமையின் உச்சத்தை எனக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. ‘பெரியாழ்வார் இருந்தாரில்லீங்களா தம்பி, அவுரு கூட இங்க சேலம் பக்கத்துல இருக்கற கொங்கனூரப் பாடியிருக்காருங்.

“கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்

எங்கும் புகுந்து விளையாடும் என்மகள்.”

பாசுரத்தின் ஒற்றை வரியைப் பாடியபோது அவரது முகத்தில் பேரமைதி ஏற்படுவதைக் கண்டேன்.

‘இராமானுசர் கொங்கனூர் வந்து இவங்களுக்கு தீட்சை கொடுத்தாருன்னும் சொல்றாங்க; இவுங்க அங்க போயி வாங்கிக்கிட்டாங்கன்னும் சொல்றாங்க. பழைய சுவடியெல்லாம் கரையான் அரிச்சுப் போயிடுச்சு. ஆனா எங்க ஊருக்கு ராமானுச சம்பந்தம் இருக்குன்னு மட்டும் தெரியுங்..’ சொல்லும்போதே அவர் பெருமகிழ்ச்சியுடன் இருந்தது தெரிந்தது.

அன்று இரவு முழுவதும் பெரியவர் வீட்டில் நிகழ்ந்த நிகழ்வுகளின் பேரதிர்ச்சி நீடித்தது. பிராமணர் அல்லாதவர் கூட வைஷ்ணவரா ? ஒரு பெண் எப்படி இராமானுசரிடம் தனியாக தீட்சை பெற்றாள் ? எப்படிப்பட்ட முற்போக்கான, முன்னேறிய சமூகமாக நாம் இருந்திருக்கிறோம் என்ற எண்ணமும் மேலோங்கியே இருந்தது.

அதன் பிறகு இரு முறை அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். ஒரு புரட்டாசி மாதம் விசேஷமான பிரபந்த கோஷ்டி எல்லாம் நடைபெற்றது. ஒரு சமயம் ஸ்ரீரங்கத்தில் இருப்பது போன்ற உணர்வு.

அந்த ஆண்டு பொறியியல் கடைசி வருடம் என்பதால் கருப்பூர் செல்லவில்லை. தேர்வுகள் முடிந்து விடுதியைக் காலி செய்த பிறகு, பெரியவரிடம் சொல்லி வரலாம் என்று கருப்பூர் சென்றேன்.

நீண்ட கூடம் உடைய அவரது இல்லத்தில், பெரிய கண்ணாடி பிரேம் போட்ட படத்தில் இருந்து வாஞ்சையுடன் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தார் பெரியவர்.

அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் செங்கமலம் அம்மாள் வந்து, ‘ தம்பி, நீங்க எப்பவாவுது வருவீங்க. அப்ப உங்க கிட்ட அப்பா இத கொடுக்கச் சொன்னாங்க,’ என்றவாறு கையளவே உள்ள சிறிய பெட்டியை என்னிடம் கொடுத்தார்.

1910ம் ஆண்டு அச்சிடப்பட்ட நாலாயிர திவ்யப்பரபந்த நூல் ஒன்று பட்டுத் துணியில் சுற்றப்பட்டு இருந்தது. கண்களில் நீர் வழிய மெதுவாக நூலைப் பிரித்தேன். மடித்து வைக்கப்பட்ட ஒரு பழுப்புக் காகிதம் தென்பட்டது.

பிரித்தேன். பெரியவர் ஒரு வரியில் எழுதியிருந்தார் :

‘பொக்கிஷம் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டது. ஆசீர்வாதம் தம்பி’

‘ஆமாம் ஸார், எஃப்.ஐ.ஆர். போட வேண்டாம். சரியான எடத்துக்குதான் அது போயிருக்கும்,’ என்ற என்னை ஆய்வாளர் வினோதமாகப் பார்த்தார்.

கண்ணனை வரவழைப்பது எப்படி ?

Kannan steps
கண்ணன் பாதம் ( பரத்ராம் பாதம்)
வழக்கமான கிருஷ்ண ஜெயந்தி தான் என்று நினைத்திருந்தோம்.  பரத்ராமின் கால் கொண்டு கண்ணன் பாதங்கள் பதித்தோம். முறுக்கு, சீடை, சீயன் என்று பட்சணங்கள் தயார். ஆனால் கண்ணன் தான் வரவில்லை.
ஆண்டாள் அழைத்தவுடன் வந்த கண்ணன் நாங்கள் அழைத்து வரவில்லை.  ஒரு தந்திரம் செய்தோம்.
ஆண்டாள் செய்ய முடியாததைச் செய்தால் வருவான் என்று ஒரு உபாயம். சொல்கிறேன் கதையை.
Food for kannan
கையளவு வெண்ணை + பட்சணங்கள
ஆண்டாள் திருமாலிருஞ்சோலைப் பெருமாளுக்கு நூறு தடா வெண்ணையும் நூறு தடா அக்கார அடிசிலும் கண்டருளப் பண்ணுவதாகப் பாடுகிறாள். ஆனால் அவளால் செய்ய முடியவில்லை.
ஆனால் 300 ஆண்டுகள் வழித்து அந்த ஊருக்கு வந்த இராமானுசர் ஆண்டாளின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார். நூறு தடா சமர்ப்பிக்கிறார். வில்லிபுத்தூரில் ஆண்டாள் அவரை ‘அண்ணரே’ என்று அழைக்கிறாள்.
எங்களால் நூறு தடாவெல்லாம் சமர்ப்பிக்க முடியாது. அதனால் ஒரு கையளவு கண்டருளப்பண்ணி அதை நூறு தடாவாக்கினோம். எப்படி ?
ஆண்டாளின் பாசுரத்தை சேவித்தோம் ( படித்தோம் ). இதோ அந்தப் பாசுரம் :
நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ
ஒரு மாற்றமும் இல்லை. இன்னுமொரு பாசுரம் சேவித்தோம். இதோ அது :
இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்நான்
ஒன்றுநூ றாயிரமாக் கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்
தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ் சோலைதன்னுள்
நின்ற பிரான்அடியேன் மனத்தேவந்து நேர்படிலே
ஒரு நிமிடத்தில் ஒரு கையளவு நூறு தடாவானது போன்ற ஒரு பாவனை ஏற்பட்டது.
வீட்டின் அழைப்பு மணி அடித்தது.
கண்ணன் வந்தான் 10 வயது கரண் வடிவில்.
கரண் பரத்ராமின் விளையாட்டுத் தோழன். சிங்கப்பூரில் இவனது முதல் நண்பனும் கூட.
krishna friend
பரத்ராமும் கரணும்

பி.கு.: கரணின் தந்தை பெயர் கண்ணன் !!

%d bloggers like this: