‘இராமனுக்கு ஒரு தம்பி, இராவணனுக்கும் ஒரு தம்பி’ என்னும் தலைப்பே வியப்பளிப்பது.
உடன் பிறந்த தம்பியர் மூவர் தவிர குகன், சுக்ரீவன் மற்றும் வீடணன் என்று சேர்த்துக்கொண்ட தம்பியர் மூவர். ஆக இராமனுக்கு ஒரு தம்பி என்று சொல்வது எங்ஙனம் ? அதே போல் இராவணனுக்கு இரு தம்பியர் அல்லவா ? ஆக அவனுக்கும் ஒரு தம்பி என்று எப்படிச் சொல்வது ? ‘உம்’ விகுதி ஏன் ?
பேரா.சொ.சொ.மீ.சுந்தரம் அவர்கள் தன் சொற்பொழிவில் இதற்கான விளக்கம் அளித்தார். அவரது பேச்சில் இருந்து நான் பெற்ற சில முத்துக்களைப் பார்க்கலாம்.
கோசலை இராமனைப் பெற்றாள். கைகேயி பரதனைப் பெற்றாள். ஆனாலும் கம்பன் சுமித்திரையையே ‘தர்மத்தின், அறத்தின் வடிவானவள்’ என்று கூறுகிறான். ஏனெனில் சுமித்திரை இலக்குவன், சத்ருக்னன் என்ற இருவரையும் பெற்று முறையே இராமனுக்கும் பரதனுக்கும் உதவி செய்ய அனுப்பினாள்.
இராமன் மற்றும் அவனது தம்பிகள் 12 மாதங்கள் தாயின் வயிற்றில் வளர்ந்தனர். அது எப்படி ? நம்மைப் போன்ற மனிதர்கள் தந்தையின் வயிற்றில் 2 மாதங்களும் தாயின் வயிற்றில் 10 மாதங்களும் இருக்கிறோம். ஆனால் இராமனும்
அவனது தம்பிகளும் பாயசத்தின் விளைவாகப் பிறந்தவர்கள். எனவே அவர்கள் தத்தமது தாய்மார்களின் வயிற்றில் 12 மாதங்கள் இருந்துள்ளனர். எனவே அத்தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளைப் பிரிவது நம்மைக்காட்டிலும் சோகமே.
தருமம் என்றும் தனித்து நிற்பது. அதன் தனிமையைத் தீர்த்தவன் அனுமன். அது போல் தருமத்தின் வடிவாகவே இருப்பவள் சுமித்திரை.
இராமன் கானகத்திலிருந்து திரும்பி வந்த போது அவனது வயது 38. 12 வயதில் திருமணம். பின்னர் 12 ஆண்டுகள் அயோத்தியில் வாசம். ஆக, கானகம் போகும் போது வயது 24. காட்டில் 14 ஆண்டுகள் கழிந்தது. ஆக, போர் முடிந்து
திரும்பிய போது வயது 38.
குகன், சுக்ரீவன், வீடணன் முதலியோர் இராமனை விட வயதில் பெரியவர்கள். ஆயினும் அவரைத் தம்பியர் என்று இராமன் ஏற்றுக்கொண்டான்.
‘அல்லையாண்டமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச ..’ என்கிற பாடலில் இருளையே வடிவ நிறமாகக் கொண்ட இராமனும் அவளும் ( சீதை ) கல்லின் மேல் உறங்கினார்கள். ஆனால் இலக்குவன் உறங்காமல் ‘வில்லை ஊன்றிய
கையோடு ‘ கண்களில் நீர் தளும்ப காவல் நின்றிருந்தான் என்று குகன் பரதனிடம் கூறுவதாக அமைத்துள்ளார் கம்பர்.
சீதையை வெறுமெனே ‘அவள்’ என்று சொன்னது மாற்றான் மனையை வருணிக்காத உயர்ந்த பண்பை உணர்த்துகிறது.
14 வருடம் உண்ணாமல், உறங்காமல், நைஷ்டிக பிரும்மச்சாரியாக இருப்பவனால் தான் இந்திரசித்து மாள்வான் என்பது வரம். இலக்குவன் அது போலவே இருந்தான். இலக்குவன் இல்லாவிட்டால் இராமனாலுமே இந்திரசித்தனை வென்றிருக்க
முடியாது.
இலக்குவனே சிறந்தவன் என்று பரதனே ஒப்புக்கொள்கிறான் என்று கம்பன் கூறுகிறான். குளத்தில் நீர் இருக்கும் வரை மீனும் பாசியும் இருக்கும். ஆனால் பாசி, நீர் வற்றியவுடன் மேலும் இரண்டு மூன்று நாட்கள் வாழும். ஆனால் மீனோ நீர்
பிரிந்தவுடன் தானும் இறந்துவிடும். சீதை கூட இராமனை விட்டு 12 மாதம் பிரிந்தாள். ஆனால் இலக்குவன் ஒரு கணம் கூட பிரியவில்லை. அவன் மீன் போன்றவன் என்று ‘நீருள எனின் உள மீனும் நீலமும் ..’ என்கிற கம்பன் பாடல் இதனை உணர்த்துகிறது.
எனவே இராமனுக்கு ஒரு தம்பியே என்பது பொருத்தமே.
‘நித்யத்திவம்’, ‘நித்ரைத்வம்’ என்ற பதப் பிறழ்வால் கும்பகருணன் உறங்கும் வரம் பெற்றான். ஆனால் மிகப்பெரிய வீரம் கொண்டவன் கும்பன்.
‘செம்பு இட்டுச் செய்த இஞ்சித் திரு நகர்ச் செல்வம் தேறி,
வம்பு இட்ட தெரியல் எம்முன் உயிர் கொண்ட பகையை வாழ்த்தி,
அம்பு இட்டுத் துன்னம் கொண்ட புண்ணுடை நெஞ்சோடு, ஐய!
கும்பிட்டு வாழ்கிலேன் யான் -கூற்றையும், ஆடல் கொண்டேன்’ என்க
ிற பாடல் மூலம் யமனையும் கண்டு அஞ்சாத வீரம் கொண்டவன் கும்பன் தெரிவிக்கிறான் கம்பன்.
அப்படிப்பட்ட வீரன், இராமனுடன் யுத்தம் செய்யும் போது களவியல் அரக்கன் ( இராவணன்) பின்னே பிறந்ததால் வந்த கடைமை தீர நான் போரிடுகிறேன். என் தம்பியாகிய வீடணனுக்கு நீ அளித்த மௌலி எனக்குத் தேவை இல்லை. ஆகவே
என்னால் உன் பக்கம் வர முடியாது என்று இராமனிடம் கும்பன் கூறுவது நோக்கத்தக்கது. கட்சி மாறுவதற்கு வாய்ப்பு இருந்தாலும் மாறாது தனது ‘செஞ்சோற்றுக் கடன்’ தீர்த்தான். ஆகவே உயர்ந்து நின்றான்.
‘இராவணன் மேலது நீறு..’ என்று இராவணனை சைவம் ரொம்பவும் உயர்த்திச் சொல்கிறது. அப்படிப்பட்ட இராவணன்
‘வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
தாரணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங்கையோடு இலங்கை புக்கான்” என்று இராவணன் போற்றப்படுகிறான்.
சீதையைக் கொணரும் வரை, இராவணன் எந்தப் போரிலுமே வெறும் கையுடன் இலங்கை ஏகியதில்லை. ஆனால் இராம இராவணப் போரில் அவ்வாறு நிகழப்போவதில்லை. இம்முறை யாரும் இலங்கை திரும்பிச் செல்லவே போவதில்லை.
சங்கரன் கொடுத்த வாளும், யானை தந்தங்கள் புகாத மார்பும், நாரத முனிவர்களுக்கு இணையாகக் கல்வி பேசும் நாவும், சாம வேதத்தில் அதிகாரியாகவும் இருந்தாலும், மாற்றான் மனை விழைந்ததால் இராவணன் அழியப்போகிறான். ஆனாலும் நான் அவனுடன் கிடந்து சாவேனே தவிர இடம் மாற மாட்டேன் என்று ( ‘தம்பியர் இன்றி மாண்டு கிடப்பனோ
தமையன் மண் மேல்?’ ) கும்பன் சூளுரைக்கிறான்.
பரமேஸ்வரனுக்கும் இராவணேஸ்வரனுக்கும் மட்டுமே ‘ஈஸ்வரன்’ என்ற அடைமொழி உண்டு. இராவணன் அவ்வளவு உயர்ந்தவன். ஆனாலும் தன் ‘சிட்டர் செயல் செய்யாமையாலும், குலச்சிறுமை செயல்’ செய்ததாலும் வீழ்ந்தான்.
சனீஸ்வரன் என்பது தவறு. சனை + சரன் = மெதுவாகச் செல்பவன் என்று கொள்ள வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் இரண்டரை ஆண்டுகள் இருந்து மெதுவாகச் செல்வதால் ‘சனைச்சரன்’. ஆக சனீஸ்வரன் என்பது தவறான பயன்பாடு.
இராமனது கட்சி அறக்கட்சி – இராமன் சந்தன மரம்; அவனைச் சுற்றி இருப்பவர்கள் மல்லிகைக் கொடி போன்றவர்கள். இராவணன் கட்சி மரக் கட்சி – அதுவும் கருவேல மரம். அவனைச் சுற்றியுள்ளவர்கள் கருவேல மரத்தைச் சுற்றிய மல்லிகை அல்லது ரோஜா போன்றவர்கள். எனவே நீ இராமனிடமே இரு என்று வீடணனிடம் கூறினான் கும்பன்.
‘கருத்திலா இறைவன் தீமை கருதினால் அதனைக் காத்து
திருத்தலாமாகில் நன்றே திருத்தலாம் தீராதாகில்
பொருத்துறு பொருள் உண்டாமோ பொரு தொழிற்குரியராகி
ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க்கு உரியதம்மா ‘
என்று இராவணனைத் திருத்த முடியுமானால் திருத்தலாம். ஆனால் அவன் திருந்தாவிட்டால் அவனை விட்டு விலகாது, உணவு அளித்தவருக்கு முன்னரே இறந்து நமது கடமையை நிறைவேற்றுவது வேண்டும் என்பது போல, இராவணனுக்கு முன்னமேயே இறந்து போவது என் கடன்’ என்று கும்பன் வீடணனிடம் கூறுவதாக அமைத்துள்ளார்.
இத்துணை நல்ல குணங்களைக் கும்பகருணனிடம் கண்ட இராமன் ‘வள்ளல் மலர்க்கரம் விதிர்ப்புற்றான்’ என்று அவனது கைகள் நடுங்க நின்றிருந்தான் என்று கம்பன் கும்பனின் பெருமை பேசுகிறான்.
ஆனால் கும்பனே இலக்குவனின் பெருமையைப் பின்வருமாறு பேசுகிறான். இராமனிடம் கும்பன் பேசுவது :
‘அண்ணலே, நீ எனக்கு ஒரு வரம் கொடுக்க வேண்டும். நான் மாண்டு விடுவேன். பின்னர் இராவணன் வருவான். ஆனால் அவன் முன்னால் வீடணனை நிறுத்தாதே. வீடணன் உயிர் காக்க வேண்டுமானால் மூன்று வழிகள் தான் உள்ளன. ஒன்று
உன் தம்பியின் அருகில் வீடணனை நிறுத்து. அல்லது உன் பின்னர் நிறுத்து. அல்லது அனுமனிடம் நிறுத்து. வேறு எங்கு ந
றுத்தினாலும் என் அண்ணன் வீடணனைக் கொன்று விடுவான் என்று ‘உம்பியைத்தான், உன்னைத்தான், அனுமனைத்தான்…’ என்று வரிசைப்படுத்திச் சொல்கிறான்.
இவ்விடத்தில், இராமனின் வீரத்திற்கு முன்னர் இலக்குவனின் வீரம் வைக்கப்படுகிறது கவனிக்கத்தக்கது. அத்துடன் கும்பன் வீடணனுக்கு நல்ல அண்ணனாகவும், இராவணனுக்கு நல்ல தம்பியாகவும் இருப்பதைக் காண முடிகிறது.
தான் செய்யாத தவறுக்கு, தன் அண்ணன் தெரிந்தே செய்த தவறுக்குத் தன் உயிரைத் தியாகம் செய்தான் கும்பன். அது போலவே இலக்குவனும் தன் உயிர்த்தியாகம் செய்ய முன்வந்தான். இராவணன் வீடணனை நோக்கி ஒரு வேல்
வீசுகிறான். யாராலும் தடுக்க முடியாது. வீடணனைக் காக்க அனுமன் முன் செல்லகிறான். அவனைக் காக்க இராமன் தான் முன் செல்கிறான். அண்ணனின் உயிரைக் காக்க இலக்குவன் முன் செல்கிறான். ஆக அண்ணனைக் காக்க
இலக்குவனும் உயிர் துறக்க முயன்றுள்ளான்.
இராமன் ‘பித்ரு வாக்ய பரிபாலனம்’ செய்யக் கானகம் ஏகினான். ஆனால் இலக்குவனோ ‘மாத்ரு வாக்ய பரிபாலனம்’ செய்யக் கானகம் ஏகினான். ஏனெனில், சுமித்திரையின் ஆணை அப்படிப்பட்டது.
சுமித்திரை கூறுகிறாள் :’ மன்னனும் நகர்க்கே வந்திடில் வா அன்றேல் முன்னம் முடி என்றனள் வார் விழி சோர நின்றாள்’, என்கிறார். இராமன் கானகம் சென்று நகர் திரும்பினால் நீ வா. இல்லையாகில் முன்னமே இறந்துவிடு என்று
ஆணை இடுகிறாள். சொல்லிவிட்டுக் கண்ணீர் உகுத்து நிற்கிறாள் சுமித்திரை. இந்த அண்ணையின் ஆணையினால் தான் இலக்குவனும் கானகம் சென்றான்.
கைகேயி அப்படி அல்லள். தசரதனிடம் இராமன் கானகம் செல்ல வரம் வாங்கியபின், இராமனுக்கு என்று மரவுரி இரண்டு அனுப்புகிறாள். குறிப்பாக இலக்குவனும் செல்ல வேண்டும் என்று கூறுகிறாள். ஏனெனில், கோபத்தில்
இலக்குவன் பரதனுக்குத் தீங்கு செய்துவிட வாய்ப்புள்ளது என்று கருதுகிறாள். இத்துணை தீயவளான கைகேயியை,’ தீயவையாவினும் சிறந்த தீயாள்’ என்று கம்பனே கோபத்தில் சொல்வது போல் அமைத்துள்ளான்.
அது என்ன 14 ஆண்டுகள் ? பொதுவாக 12 ஆண்டுகள் ஒருஇடத்தில் இருந்தால் அனுபவப் பாத்யதை ஏற்பட்டுவிடும். எனவே பரதன் 12 ஆண்டுகளாவது ஆட்சி செய்தால் அயோத்தியில் அவனை அசைக்க முடியாது. எனவே இராமன்
வந்தாலும் வராவிட்டாலும் பரதனுக்கு அயோத்தி சொந்தமாகிவிடும் என்பதே கணக்கு. அடுத்த யுகத்தில் துரியோதனனும் 12 ஆண்டுகள் கானகம், ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் என்று பாண்டவர்களுக்கு விதிக்கிறான்.
கையேயி ,
‘ஏய வரங்கள் இரண்டின், ஒன்றினால், என்
சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது’ எனப் புகன்று, நின்றாள் –
தீயவை யாவையினும் சிறந்த தீயாள் ” என்று கூறுகிறாள்.
இவ்விடத்தில் ‘சீதை கேள்வன்’ என்றே இராமனைக் கூறுகிறாள். எந்த மாமியாருக்குமே ‘மகன் என்றால் இஷ்டம், மருமகளின் கணவன் என்றால் கஷ்டம்’ என்பது நடைமுறை. எனவே, ‘இராமன் ஒன்றால் போய் வனம் ஆள்வது..’ என்று சொன்னால் தாய்ப்பாசம் வந்துவிடும் என்பதால், தன் மருமகளின் கணவன் என்று இராமனைக் கூறுகிறாள், தீயவை யாவினும் சிறந்த தீயாளாகிய கைகேயி.
பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்கள் இராமனின் ஒரு பக்குவத்தை உணர்த்துகிறார். எல்லா யுத்தமும் முடிந்து, பட்டாபிஷேகம் நடக்கையில் தசரதன் இராமனின் முன் தோன்றுகிறான். வரம் அருள்கிறான். அப்போது இராமன் தசரதன்
மட்டுமே தரக்கூடிய வரமாகவும் இருக்க வேண்டும், இராமன் மட்டுமே பெற முடியும் வரமாகவும் இருக்கக் கூடியதான ஒரு வரத்தைக் கேட்கிறான். கம்பன் வாக்கில் இதோ :
‘தீயள் என்று நீ துறந்த தெய்வமும் தெய்வத்தின் மகனும் தாயும் தம்பியுமாய் வரம் தருக..’
‘தந்தையே, தீயவள் என்று நீவீர் பழித்த என் தெய்வமாகிய கைகேயியும், அவளது மகனாக
ய பரதனும் முறையே எனக்குத் தாயும் தம்பியுமாக ஆவதற்கு வரம் தருக’ என்று மிகுந்த அறிவாற்றலுடன் கேட்கிறான்.
இவ்வளவும் இன்னமும் இன்னும் பல சுவைகளும் அருவியாய்ப் பெருக, கம்பரசம் தூய்த்தோம் இலக்கிய வட்ட நிகழ்வில் நேற்று.
தவறுகள் ஏதாகிலும் இருந்தால் அவை என் அறியாமையால் விளைந்தவையே.