
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறுகளில் இந்திய நேரம் காலை 6:30-8:00 ‘உயர் வள்ளுவம்’ வகுப்பெடுக்கிறார்கள். கம்பவாரிதியால் பயன்பெற்றுவரும் பல நூறு பேர்களில் அடியேனும் ஒருவன்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் திருப்புகழ் பதிகத்தைப் பண் சேர்த்து இசைக்கிறார்கள். தமிழே சுவை. அதில் திருப்புகழ் என்னும் பஞ்சாமிர்தம் சேர்த்து, அதில் பண் என்னும் தேனையும் கலந்து அளிக்கிறார்கள். வார இறுதிக் காலை வேளைகளில் என்ன ஒரு இனிமை!
திருக்குறள் பாயிரம், தொகுப்புரை, இரண்டு குறட்பாக்களுக்கான பரிமேலழகரின் உரைக்கான விளக்கம், அவற்றில் வரும் இலக்கணக் குறிப்புகள், ஒப்பு நோக்க வைக்கும் கம்பராமாயணச் செய்யுள் வரிகள், சில நேரம் திருமுறைகளில் இருந்தும், மூதுரை முதலிய பழந்தமிழ் இலக்கிய நூல்களில் இருந்தும் மேற்கோள்கள் என்று பிரதி வாரமும் காலை நேரம் அருமையாகத் துவங்குகிறது.
தவிரவும், சுமார் 20 மணித்துளிகள் கேள்வி பதில் நிகழ்வு. உலகெங்கிலும் இருந்து கேள்விகள், அனுபவக் குறிப்புகள் என்று பலரும் பேசுவர். பலரது வாழ்க்கையை இந்தக் குறள் வகுப்பு மாற்றியமைத்துள்ளதைப் பயன்பெற்றவர்களின் வாயிலாகவே அறிந்துகொள்கிறேன்.
இன்று சிங்கப்பூரில் இருந்து பேசிய தமிழக உடல் உழைப்பாளர் ஒருவர் தான் பெண்களின் மீதான அதீத காமம் உட்பட தீய பழக்கங்கள் அனைத்திற்கும் அடிமையாக இருந்ததையும், அவற்றையெல்லாம் விடுத்துத் தற்போது பரிமேலழகருக்குக்கோவில் கட்டும் எண்ணத்துடன் முயன்றுவருவதாகவும், தன் கிராமத்திலும் தன் வீட்டிலும் அனைவரும் குறள் பயில ஏற்பாடு செய்துள்ளதாகவும் மனமுருகித் தெரிவித்தார்.
இவ்வாறும் பல முறை பலர் பேசியுள்ளனர் என்றாலும், இந்த அன்பரின் குரல் வள்ளுவரின் வாழ்வாங்கு வாழும் தன்மையை உணர்த்துவதாக இருந்தது.
அவசியமான இரு பயணங்கள் வந்தன. எனினும், வகுப்பு நடைபெறுவதால், பயண நேரத்தை ஒத்திப் போட்டேன் என்பதில் எனக்குப் பெருமை. கம்பவாரிதி நமக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம். பயன்படுத்திக்கொள்ள வேண்டியது நம் கடமை.
இப்படியான குறள் நெறியைப் பயிலும் வாய்ப்பு தமிழர்களுக்குக் கிட்டியுள்ளது. மற்றைய மொழிகளில் இருந்து மொழிபெயர்த்துத் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. உலகமே வியக்கும் குறள் எழுதப்பட்ட மொழியே நம் தாய்மொழியாகவும் அமைதுள்ளது நமது நல்லூழ் தவிர வேறென்ன?
ஜூம் செயலி எண்: 846 5100 5685 சனி, ஞாயிறு காலை 6:30-8:00