கிளையிலிருந்து வேர் வரை – அந்த நாளும் வந்திடாதோ !

ஈரோடு கதிரின் ‘கிளையிலிருந்து வேர் வரை’ கட்டுரைத் தொகுப்பு கிராமத்து வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து அதனை நகர (நரக ?) நாகரீகங்களில் தேடும் ஒரு கூர் பார்வையுள்ள தமிழனின் அவதானிப்பு. கொங்க தேசத்து மணம் கமழ, ஊரின் வாசனையில் நான் ஆழ்ந்து போனேன்.

பல நினைவுகள். சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவனாய் கொங்க தேச மக்களின் வாழ்வை ஓரளவு நேரில் பார்த்த காரணத்தால் ஊரின் அமைப்பு, வயலின் அருகாமை, கிணற்று நீரின் சுவை, மக்களின் பேச்சுத் தமிழ் எனக்குப் பரிச்சயமானதே. மீண்டும் சேலம், ஓமலூர், கோவைக்கு என்னை அழைத்துச் சென்றார் கதிர்.

இந்த நூல் வாழ்வை ரசித்து வாழ்ந்த ஒருவன் திடீரென்று அந்த வாழ்வு காணாமல் போய் நகரத்தின் மனிதாபிமானமற்ற, செயற்கையான சூழலில் இருக்க நேர்ந்தால் என்ன மாதிரியான எண்ணங்களில் ஆழ்வான் என்பதை நீண்ட விஸ்தீரணங்களுடன் தெரிவிக்கிறது.

45 கட்டுரைகளில் சட்டென்று மனதில் புகுந்த சிலவற்றைப் பற்றிய என் கருத்துக்கள் இங்கே :

ஆயா – பாட்டி பற்றிய கனமான பதிவு. எல்லோருக்கும் இப்படி ஒரு பாட்டி இருந்திருப்பார் தானே ? பல பழைய நினைவுகளைத் தூண்டிவிட்ட கட்டுரை.

வாழ்தல் அறம் – உயிர் வாழ்தலின் மகத்துவத்தை விளக்கும் கட்டுரை. பள்ளியிறுதி மாணவர்களுக்குத் துணைப்பாடமாக வைக்கலாம். தேர்வு முடிவு நேரங்களில் அவர்களைக் காக்கும்.

இந்தப் ‘பாவம்’ செய்யாதவர்கள்… – நிதர்ஸனச் சுட்டி. சம்மட்டி அடி.

அதிகார இறகுகள் உதிரும் தருணம் – அரசு வேலையில் இருக்கும் பணம் பிடுங்கிகளுக்கு ஒரு காப்பி கொடுத்து வைக்கலாம். பயன்படும்.

அது லீ குவான் யூகின் தேசம் – தெரிந்தது தான் என்றாலும் படிக்க சுவை.

தங்கக் கூண்டு – ‘அட ஆமாம்ல..!’ என்று சிந்திக்க வைத்த கட்டுரை.

ஓரம்போ ஓரம்போ – எங்களூரில் பாட்டில் மூடி கொண்டு வண்டி செய்து ஓட்டிய நினைவலைகளை மீண்டும் ஏற்படுத்திய நுங்கு விளையாட்டு நினைவுகள்.

கிளையிலிருந்து வேர் வரை – பொய்யாய்ப் பழங்கதையாய் கனவாய்ப் போன விவசாயம் பற்றிய ஒரு உண்மை விவசாயியின் ஆதங்கம்.

அடைகாத்த கூடு – மகிழ்ச்சியின் ஆரவாரம். கொய்யாமரம் அடை காத்தது என்று கதிர் சொல்வது என்ன ஒரு நயம் ? பொறாமைப்பட வைக்கும் வார்த்தை ஜாலம்.

நீர்த்துப்போகும் சுயம் – ஜெயமோகனின் ‘யானை டாக்டர்’ன் சிறிய ஆனால் கடுமையான சித்தரிப்பு. கோபம் தெரிகிறது.

தூக்கி எறியப்பட்ட திறவுகோல் – நகர கிராம வாழ்வுகளின் ஒப்பீடு. அக்ஷரலக்ஷம் பெறும்.

காக்கைச் சகுனம் – காக்கை கொண்டே உறவின் வருகை அறியும்  ( விஞ்ஞானத்தின் துணை அற்ற ) உலகின் மீள் பார்வை.

இந்த நூலை மூடும் போது ‘அந்த நாளும் வந்திடாதோ’ என்று எம்.எஸ். பாடுவது காதில் கேட்கிறது.

இந்த நூல் இங்கு  கிடைக்கிறது.

%d bloggers like this: