சில எண்ணங்கள்..

‘உன் அறிவுரையெல்லாம் மோதிகிட்ட சொல்லு. எங்களுக்கு வேண்டாம். தமிழ் நாடு எல்லாத்துலயும் முன்னோடி. நீ வாய மூடு’
‘சினிமா பத்தி எழுதுடா. ஒரு நடிகையோட கதைன்னு எழுது. #MeTooவெச்சு சுவாரஸ்யமா எழுது. சீக்கிரம் சினிமா எழுத்தாளரா ஆகலாம். காலத்துக்கு ஏத்த மாதிரி எழுதுடான்னா கேக்கமாட்டேங்கற..’

வாசகர்கள் பலவிதம். அவர்களது கருத்துகளும் அவ்வாறே.

1. ‘ரொம்ப காட்டமா எழுதறீங்க. இந்தியா வந்துட்டீங்க. கொஞ்சம் பார்த்து எழுதுங்க. சொல்றது சரிதான். ஆனா இங்க நிலைமை அப்படி.’ அக்கறையுடன் சொல்லும் பேராசிரியர் இவர்.
2.’உனக்கு திருக்குறள் மட்டும் தான் தெரியுமா? மத்ததெல்லாம் தெரியாதா? போய்ப் படி தம்பி’ இப்படி ஒரு புதியவர்.
3. ‘என்ன? திருக்குறள்ல இருக்கற ஹிந்து மதக் கருத்துக்களே உன் கண்ணுக்குத் தெரியாதா? என்னவோ சமணம், பௌத்தம்நு பேசறியே..’
4. ‘உன் அறிவுரையெல்லாம் மோதிகிட்ட சொல்லு. எங்களுக்கு வேண்டாம். தமிழ் நாடு எல்லாத்துலயும் முன்னோடி. நீ வாய மூடு’ – அடிக்கடி திட்டும் அன்பர்.
5. ‘நான் எத்தனையோ தடவை சொல்லிட்டேன். நீ திருப்பாவை, பிரபந்தம்னு மட்டும் எழுது. ஸாடையர் வேண்டாம், அரசியல் வேண்டாம். உன் ஏரியா அது இல்ல.’ பண்பட்ட சிவப் பழம் ஒரு அன்பர்.
6. ‘உன்னோட தமிழ் எழுத்த விட, இங்கிலீஷ் தடாலடியா இருக்கு. தொடர்ந்து இங்கிலீஷ்லயே எழுது’ – பல வாசகர்கள்.
7. ‘You have a subtle sense of humour and that shows in your writings. Write humour. Nothing else’ சிங்கை எழுத்தாளர் ஒருவர்.
8. ‘I am watching what you write. Though I like what you say, I don’t agree with your tenor. Be cautious’ – சுமார் 75 வயதாகும் என் பள்ளி ஆசிரியர்..
9. ‘மீத்தேன் பத்தி ஏன் எழுதல? ஹைட்ரோ கார்பன் பத்தி ஏன் எழுதல? ஃபாஸிச மத்திய அரசுக்கு ஆதரவு ஏன்? புரட்சி வெடிச்சா ஒனக்கெல்லாம் இருக்குடீ’ ‘தோழர்’ ஒருவரிடமிருந்து உள்பெட்டிச் செய்தி.
10. ‘சினிமா பத்தி எழுதுடா. ஒரு நடிகையோட கதைன்னு எழுது. #MeTooவெச்சு சுவாரஸ்யமா எழுது. சீக்கிரம் சினிமா எழுத்தாளரா ஆகலாம். காலத்துக்கு ஏத்த மாதிரி எழுதுடான்னா கேக்கமாட்டேங்கற..’ பள்ளித் தோழர் ஒருவர்

இத்தனை பேரையும் ஒருசேர திருப்திப்படுத்த முடியாது என்று அறிவேன். சில வகையறாக்களை நான் எழுதவியலாது. அதில் ஒன்று சினிமா, நடிகை, விளையாட்டு. சமீபத்திய சேர்க்கை – நிகழ்கால அதிர்வுகள். ஆனால் ஒன்று. என்ன எழுதினாலும் யாரையும் எப்போதும் காயப்படுத்தும் நோக்கம் இதுவரை இருந்ததில்லை. கருத்து ரீதியாகக் காயம் அடைந்தால் நான் பொறுப்பேற்கவியலது.

கொட்டிக்கிடக்கும் எதிர்மறைச் செய்திகள் / கருத்துகளைத் தாங்கிவரும் ஊடக வெளியில் பயனுள்ள சில செய்திகளையும், நூல்களைப் பற்றியும் சொல்லிவருகிறேன். சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ என்பதாக அவ்வப்போது தவறுகளைச் சுட்டவும் செய்கிறேன். அவ்வளவே.

வாசகர்களின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் முக்கியமானதே என்பதைத் திடமாக நம்புகிறேன். தொடர்ந்த ஆதரவிற்கும் ஆற்றுப்படுதலுக்கும் நன்றி.

விஷ்ணுபுரம்

“பொன்னியின் செல்வன்” – பல வருடங்களுக்கு முன் படித்தேன். அதன் தாக்கத்தில் இருந்து வெளிவரப் பல காலம் ஆனது. இப்படியும் எழுத முடியுமா என்ற பிரமையே சில ஆண்டுகள் நீடித்தது. பிறகு தமிழ் எழுத்தாளர் என்ற போர்வையில் வலம் வந்த சிலரது எழுத்துக்களைப் படித்து தமிழில் எழுதுதல் என்றால் “சோரம் போதல்” என்று அபாயகரமாக உணர்ந்தேன். அந்த வெற்றிடத்தை ஆங்கிலம் பெருமளவு நிறைவு செய்தது.

இந்தக் காலகட்டத்தில் ஜெயமோகன் அறிமுகமானார். ராமானுஜர் பற்றிய ஒரு எழுத்தாக்கம் குறித்து ஆராய்ச்சி செய்யும்போது ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்” தட்டுப்பட்டது. முதலில் அதை நிராகரித்தேன். கதை படிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. அந்த வயது தாண்டிவிட்டது போல் தோன்றியது.

ஆனால் ஆன்மிகத் தத்துவ ஆராய்ச்சியில் சற்று ஊன்றிப் பார்த்தபோது ஜெயமோகன் பற்றி அடிக்கடி குறிப்பு கிடைத்தது. சில இணைய ஆய்வுகளுக்குப்பின் அவரது “விஷ்ணுபுரம்” தேடினேன். சிங்கப்பூரில் சில நூலகங்களில் தேடி ஒரு இடத்தில் கிடைத்தது.

அதன் பிறகு ஒரு மூன்று வாரம் ஒரு தவம் நடந்தது. பகல், இரவு, நடு இரவு – எல்லா வேளைகளிலும் படிப்பு, மீண்டும் படிப்பு, மறு படிப்பு என்று கழிந்தது. ஒரேமூச்சாகப் படிக்க முடியவில்லை. நடுநடுவே இடைவெளி கொண்டு ஆங்கில எழுத்துக்கள் படித்தேன். தினமும் தொடர்ந்து எழுதினேன்.

“விஷ்ணுபுரம்” முடிந்தது.

என்னுள் மாற்றங்கள் நிகழ்ந்திருந்ததை உணர்ந்தேன். உலகம் புது விதமாகத் தோன்றியது. எல்லா சொற்களுக்குப்பின்னும் உள்ள எண்ணங்கள் பற்றிய ஒரு ஆராய்ச்சி, எந்த தத்துவத்தின் பின்புலம் குறித்தும் ஒரு ஆராய்ச்சி — இப்படி என் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிப் போட்ட ஒரு தத்துவ விவாத நூல் சமீபத்தில் நான் படித்ததில்லை.

அறிவார்ந்த வாதங்கள் இல்லாத ஒரு சமூகத்தில், நடிகைகளின் உறுப்புக்களை அளவிடும் கலையில் தேர்ந்த நிலையை ஒரு உன்னதமாகக் கொள்ளும் எழுத்து வியாபாரிகள் மத்தியில், தத்துவ வாதத்தை, தருக்கத்தைச் சார்ந்த ஒரு நடை முறையை, கனவு, தத்துவம், அழகியல், யதார்த்தம் எல்லாம் கலந்து மனதில் பெரும் புயலையும் எண்ணங்களில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்திய மாபெரும் எழுத்துச் சிற்பி ஜெயமோகன்.

பொறுமையும், ஆர்வமும், பிராப்தமும் இருந்தால் நீங்களும் படித்துப் பாருங்கள்.

%d bloggers like this: