ஐயங்கார் கதைகள், ஐயங்கார் பற்றிய நாவல்கள் தமிழில் குறைவே. அனேகமாக இல்லை என்றே சொல்லலாம். அந்த இடத்தை விஜயலக்ஷ்மி சுந்தரராஜன் எழுதிய ‘ஆலமரம்’ நிரப்புகிறது.
படிமங்கள், நிலைகள், குழப்பங்கள், குறியீடுகள், மிகை எழுத்துகள் என்று எதுவும் இல்லாமல், நேரடிக் கதை சொல்லல் ஆசிரியரின் பலம்.

மாங்கொல்லை என்னும் தஞ்சை கிராம ஐயங்கார் மிராசுதார் குடும்பம், சுமார் 120 ஆண்டுகளில், வந்து நிற்கும் இடத்தைப் பற்றியதே இந்த நாவல். மிராசு சிதைந்து சீரழிந்து சின்னாபின்னமாகித் தெறித்து விழ, தெறித்த ஒவ்வொரு துளியும் எங்கே என்ன செய்தது என்பதே கதை. ‘Period Novel’ என்னும் சட்டகத்துக்குள் வரும் இந்த நீண்ட நெடிய 957 பக்க நாவல், சில இடங்களில் ஆழ்ந்து, மெதுவாகவும், பல இடங்களில் ஓட்டப்பந்தயம் போலவும் ஓடி நிற்கிறது.
தஞ்சை கிராம பிராமண மிராசுகளின் வாரிசுகள் மேற்கொண்ட இடப்பெயர்வுகள அன்னாளைய வரலாற்று நிகழ்வுகளுடன் பின்னப்பட்டுக் காட்டப்படுகின்றன. நாவல் முழுவதும் தஞ்சை – சென்னை, சென்னை – தில்லி, சென்னை – அமெரிக்கா என்று மக்கள் சென்றுகொண்டே இருக்கிறார்கள். நாம் கண்கூடாகக் காணும் ஒன்றுதான் என்றாலும், இலக்கிய வடிவில் ஆவணப்படுத்தல் போல் உள்ள இந்த நாவல் பிராமண இடப்பெயர்வைச் சுட்டும் முறையில் முதன்மையானது.
தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த தமிழ் வைணவ பிராமணர்களும், ஸ்மார்த்த பிராமணர்களும் கல்வியைப் பற்றுக்கோலாகக் கொண்டு வாழ்க்கையில் மேலேறிச் செல்வது நாம் பலரது வாழ்விலும் கண்ட ஒன்றுதான். அது நாவலில் கண்கூடாகக் காட்டப்படுகிறது. மிராசு வாரிசுகள் கல்வி இல்லாமல் அழிவதும் அல்லது வாழ்க்கையில் முன்னேறாமல் தத்தளிப்பதும், அவ்வாறு கல்வியைப் பற்றிக் கொண்டவர்கள் மேலேறிச் செல்வதும் நாவலில் மட்டும் அல்லாமல் யதார்த்த வாழ்விலும் நிகழும் உண்மைகள்.
கல்வி இல்லாத செல்வம் தரும் அழிவை வாசு பாத்திரமும், செல்வத்துடன் கூடிய நல்ல கல்வி தரும் மேன்மையை மைதிலி பாத்திரமும் சுட்டுகின்றன.
பாரத விடுதலைப் போர் பற்றிய செய்திகளும் அவ்வப்போது வந்து செல்கின்றன. போராட்டத் தியாகிகளுக்கு தமிழ் வைஷ்ணவக் குடும்பங்களில் இருந்த / இல்லாத மரியாதையும் நமக்குத் தெரிவிக்கிறது நாவல்.
ஐயங்கார் விஷயங்கள் பலதும் சரியான முறையில் சொல்லப்பட்டுள்ளன. நான்கு முறை சேவிக்கும் வடகலை ஐயங்கார் வழக்கம், ஒரு முறை / இரண்டு முறைகள் சேவிக்கும் தென்கலை ஐயங்கார் வக்கம், பஞ்ச சம்ஸ்காரம் என்னும் சங்கு-சக்கர தீட்சை முறை, அதைப் பெற்றவர்கள் மட்டுமே திவசம் முதலிய தினங்களில் தளிகை பண்ண அனுமதிக்கப்படும் பண்பாடு, ஐயங்கார் இல்லங்களில் தளிகை பண்ணப்படும் பக்ஷணங்கள், சாத்துமுது ( ரஸம் ) வகைகள் என்று நாவல் முழுவதும் இவை அனைத்தும் மீண்டும் மீண்டும் வந்து செல்கின்றன.
ஊரின் காவல் தெய்வத்தின் பரிவார தேவதாந்திரம் (வீரன்) ஒன்றின் சிலையை வீட்டின் பின் வைத்த நிகழ்வுடன் துவங்கும் நாவல், முடிவதும் அந்தத் தேவதையின் இடத்தில் தான். இந்த முறை நாவலுக்கு ஒரு முழுமையை அளிக்கிறது. காவல் தெய்வங்களுக்கு வைஷ்ணவ இல்லங்களில், வழக்கங்களில் இடம் இல்லாமை சுட்டப்படுவது அருமை. சமாஸ்ரயணம் பெற்ற ஶ்ரீவைஷ்ணவர்கள் தேவதாந்திர வழிபாட்டில் ஈடுபடாமல் இருப்பது இன்றும் தொடரும் வழக்கமே.
கல்விப் புலன் அதிகம் உள்ள பாத்திரங்கள் வந்து சென்றாலும், அவர்களிடம் தத்துவப் பார்வைகள் முற்றிலும் இல்லாமல் இருப்பது ஒரு வியப்பே. சித்தாந்தக் கலந்துரையாடல்கள் துளிக்கூட இல்லாமல் அக்கால வைஷ்ணவ மிராசுக் குடும்பங்கள் வாழ்ந்துள்ளன என்பது சிறு நெருடலே. ஆனாலும், படிப்பறிவு அதிகம் இல்லாத மிராசுகளுக்கும் அவர்தம் மனைவிகளுக்கும் சித்தாந்தம் தெரியாமல் இருக்கவே வாய்ப்புண்டு என்றும் எண்ணிக்கொள்ளலாம்.
மிராசுகள் தம் மனைவியரை விட்டு, தஞ்சாவூரில் பரத்தை மகளிர் சகவாசம் கொள்வதும் நாவல் மூலம் அறிகிறோம். அக்கால சமூக ஒழுக்கங்களில் ஒன்றாகவே இது சொல்லப்பட்டாலும், அது தொடர்பான ஒரு தலைக்குனிவு இருந்ததையும் நாவல் காட்டுகிறது. அக்காலப் பெண்கள் கணவர்களிடம் அடிபடுவது அமோகமாக நடக்கிறது. அது ஏதோ சாதாரணமான ஒரு நிகழ்வாகச் சொல்லப்படுகிறது என்றாலும், தற்காலத்தில் அம்மாதிரியான சித்திரத்தை நினைத்துப் பார்ப்பது சிரமமாக உள்ளது.
யாரும் வசிக்காத பெரிய வீட்டை சம்ஸ்க்ருத பாடசாலைக்கு எழுதி வைக்கலாம் என்று வரும் ஒரு கட்டம், சுஜாதாவின் ‘கு.சி. பாடசாலை’ விஷயத்தை நினைவுபடுத்துகிறது. விறகு அடுப்பில் தளிகை பண்ணிக் கொண்டிருந்த குடும்பம் குமுட்டி அடுப்பிற்கு முன்னேறி, இறுதியில் காஸ் அடுப்பிற்கு வந்ததையும் நாவல் சுட்டுகிறது.
சுமார் பதினைந்து பேரின் மரணத்தை ஆவணப்படுத்தும் இந்த நாவலை வாசித்து முடித்தவுடன் நீண்டதொரு மௌனமே மிஞ்சியது.
வாழ்ந்த குடும்பம் வீழ்ந்த கதை என்று ஒரு சொல்லாடலில் கடந்து செல்லலாம் என்றாலும், இந்த நாவல் தமிழ்ச் சூழலில் வேறு யாரும் தொட்டுப் பார்க்காத ஒரு சரடைப் பிடித்து செல்கிறது. ஐயங்கார் கதையை எத்தனை பேர் வாசிக்கப் போகிறார்கள் என்பதால் இல்லாமல், பொதுவாகவே பிராமண எதிர்ப்பை ஓர் வாழ்க்கை வழிமுறையாகக் கொண்டுள்ள தமிழ் இலக்கியச் சூழலில் இம்மாதிரியான நாவலுக்கு இடமே இல்லை என்பது நிதர்ஸனமே.
தமிழகத்தில் அதிகம் அறியப்படாத நாவலாக ‘ஆலமரம்’ திகழ்வது தற்காலக் கீழ்மைகளில் ஒன்று என்று கடந்துசெல்ல வேண்டியது தான்.
நாவல்: ஆலமரம். ஆசிரியர் : விஜயலக்ஷ்மி சுந்தரராஜன். பக்கங்கள்: 957. மணிமேகலைப் பிரசுரம். விலை: ரூ 420.