‘சிங்கப்பூர் ஆஃப்ஷோர் அக்கவுண்ட்ல இருக்கற ஒன்றரை கிராண்ட், சாங்கி பார்க்ல காண்டோ, அடையார்ல போட் கிளப் வீடு, ஏ.ஐ.ஜி.ல கேஷ் டெபோசிட்ஸ், எஸ்.ஜி.எக்ஸ்.ல செக்யூரிட்டீஸ் அக்கவுண்ட், எஸ்.பி.ஐ. இன்னபிற சில்லறை லட்சங்கள், தேரழுந்தூர்ல வீடு .. அடடா இப்பிடி எதுக்குமே உயில் எழுதாமப் போயிட்டியேடா.’யாரோ அருகில் இருந்து சொல்வது போல் ஒலித்தது. மனசாட்சியாக இருக்கலாம்.
அடித்த 103 டிகிரி ஜுரத்தில் நான் தான் சொன்னேனா, இல்லை யாரோ அருகில் இருந்து சொன்னார்களா என்று தெரியவில்லை. அதுவும் ராத்திரி 2 மணிக்குப் பினாத்தினால் நினைவு எப்படி இருக்கும் ?காலம் முடிந்துவிட்டதா? இனிமேல் அவ்வளவுதானா? வீட்டிற்குள் வைப்பார்களா இல்லை நேரே… இன்னொரு மனம் கேட்டது. பதில் தான் இல்லை.
எப்டியாவது எழுந்து இந்த உயில் சமாச்சாரத்தை முடிச்சுடலாமே. ப்ளீஸ். எழுந்திருக்கப்பார்ரா ஆமருவி. எழுந்திரு. எஸ்.யூ.கேன். எஸ்.யூ.கேன். ஒபாமா தோன்றிச் சொன்னார்.
நீங்களே வக்கீல் தானே. சார், நீங்க கொஞ்சம் எழுதிடறீங்களா? டயம் முடிஞ்சுடும் போல இருக்கே.’அப்பாரண்ட்லி நீங்க ப்ராப்பர்ட்டீஸ் டாக்குமெண்ட்ஸ் மூணு காப்பி கொடுங்க. மிஷல் செக் பண்ணி சொல்லுவா. ஒரு வாரத்துல முடிச்சுடலாம்.’
‘ப்ளீஸ். இன்னிக்கே முடிஞ்சுடும் போல இருக்கே. ஒரு வாரமெல்லாம் தாங்காதே’ ஹீன ஸ்வரத்தில் கெஞ்சியது யாரோ எங்கோ சொல்வது போல கேட்டது.
‘அது பரவாயில்ல. ஆஸ் பர் அமெரிக்கன் லா, வீடியோ வில் ஈஸ் வாலிட். இப்ப ஒரு வீடியோ எடுத்துக்கலாம். இவர்கிட்ட ஒரு ஆத்தரைசேஷன் சைன் வாங்கிக்கலாம். அப்பறம் ஃபில் பண்ணி நோட்டரைஸ் பண்ணிக்கலாம். ஹௌ ஈஸ் தட்?’ என்று கேட்டுத் தனது நட்சத்திரப் புன்னகையை உதிர்த்தார்.
‘யோவ், இங்க உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கேன். எல்லா எலும்பு மேலயும் லாரி ஓடின மாதிரி வலிக்குது. என் கைய வெச்சே கேஸ் அடுப்ப பத்தவைக்க முடியும் போல கொதிக்குது. சீக்கிரம் எழுதிக்குடுய்யா’
‘ஆக்சுவலி, த பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ் தான் அமெரிக்க கான்ஸ்டிட்யூஷனோட ஆதார நம்பிக்கை. யூ நோ. ஃபவுண்டேஷனல் பிலீஃப். ஈவன் மிஷல் வில் அக்ரீ. வோண்ட் யூ டியர்?’
‘யோவ், பொண்டாட்டிய அப்பறம் கொஞ்சிக்கோய்யா. சீக்கிரம் எழுதுய்யா.’ நான் சொல்வது காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.
ஒருவேளை முடிந்தேவிட்டதா? நான் எங்கே கிடக்கிறேன்?
‘அந்த ப்ராப்பர்டீஸ் சொல்லுங்க?’ ஒபாமா கேட்பது புரிந்தது.
‘சிங்கப்பூர் ஆஃப்ஷோர் அக்கவுண்ட்ல இருக்கற ஒன்றரை கிராண்ட், சாங்கி பார்க்ல காண்டோ, அடையார்ல போட் கிளப் வீடு, ஏ.ஐ.ஜி.ல கேஷ் டெபோசிட்ஸ், எஸ்.ஜி.எக்ஸ்.ல செக்யூரிட்டீஸ் அக்கவுண்ட், எஸ்.பி.ஐ. இன்னபிற சில்லறை லட்சங்கள், தேரழுந்தூர்ல வீடு’ தடவித் தடவிச் சொன்னேன்.
‘போறுமே. தேரழுந்தூர் தவிர மத்ததெல்லாம் சம்பாதிக்க வேண்டாமா? எழுந்து புழுங்கரிசிக் கஞ்சிய சாப்டுட்டு, கனவை கண்டினியூ பண்ணுங்கோ’
அடிக்கடி கேட்ட குரலாக இருந்தது.
ஒபாமாவும் மிஷலும் இருந்த இடத்தில் உள் துறை மந்திரி நிற்க, புழுங்கல் அரிசிக் கஞ்சிக்கு வாய் திறந்தேன்.
பி.கு.: பிரதமர் மோதி இரண்டு வாக்ஸின் கொடுத்தாரோ, பிழைத்து இதை எழுதுகிறேன். வாழ்க நீ எம்மான். PMO India