பெற்ற நெருப்பு – ஒரு சங்கப்பாடல் பார்வை

அழகியல் என்பது சற்று நெருடலானது, கழிவிரக்கம் ஏற்படச் செய்வது. நமது மனதை பெரிய சம்மட்டியால் அடிப்பது போன்ற உணர்வு ஏற்படச் செய்வது. வயல் சூழ்ந்த தஞ்சைத் தரணியில் குளிர்ந்த காற்று முகத்தில் அறையும்படி பயணம் செய்யும் போது திடீரென்று ராஜஸ்தான் பாலைவனமும் அதன் வெயிலும் முகத்தில் அடித்தால் எப்படி இருக்கும் ? அப்படிப்பட்ட ஒரு மனச் சுமையை ஏற்படுத்திய பகுதி ‘பெற்ற நெருப்பு’.

வெகு சில எழுத்துக்களே படித்தவுடன் மிகுந்த மன எழுச்சியையும் உத்வேகத்தையும் அளிக்கும். படித்து முடித்தவுடன் நீண்ட மன அமைதியையும் உள்ளப் பூரிப்பையும் அளிக்கும். இத்துடன் மிகுந்த அழகியல் அம்சங்களுடன் படித்தவுடன் மிகுந்த களிப்பும் கொடுக்கும் எழுத்து ஜெயமோகனுடையது. மேல் சொன்ன அனைத்தையும் அளித்த அவரது ஒரு நூல் ‘சங்கச் சித்திரங்கள்’.

பல சங்கப் பாடல்களைப் பற்றி நடைமுறைக் கதைகளுடன் விளக்கும் விதம் வெகு அருமை. அவர் சொல்லும் நிகழ்காலத்தில் நடைபெற்ற பல நடப்புகள், சங்கப்பாடலை நன்கு உள்வாங்கிக் கொள்ள உதவுகின்றன. சங்கப்பாடலை நன்கு உள்வாங்கும் வண்ணம் அவர் எளிய தமிழில் கவிதையும் எழுதுகிறார்.

ஆக அமர்க்களமான அவரது நூல் இது. விஷ்ணுபுரம், அறம் தொகுப்புக்குப் பின் அவரது மிக உன்னதமான படைப்பு இந்த நூல்.

அதிலும் ‘பெற்ற நெருப்பு’ என்னும் தலைப்பு என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இந்தப் பகுதியில் அழகியல் என்பது சற்று நெருடலானது, கழிவிரக்கம் ஏற்படச் செய்வது. நமது மனதை பெரிய சம்மட்டியால் அடிப்பது போன்ற உணர்வு ஏற்படச் செய்வது. வயல் சூழ்ந்த தஞ்சைத் தரணியில் குளிர்ந்த காற்று முகத்தில் அறையும்படி பயணம் செய்யும் போது திடீரென்று ராஜஸ்தான் பாலைவனமும் அதன் வெயிலும் முகத்தில் அடித்தால் எப்படி இருக்கும் ? அப்படிப்பட்ட ஒரு மனச் சுமையை ஏற்படுத்திய பகுதி ‘பெற்ற நெருப்பு’.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத்தன் தலைப் பிள்ளையைப் பலி கொடுத்த தந்தை அதைப் பெருமையுடன் சொல்கிறார். அவரது கனவில் அவன் கையில் துப்பாக்கி ஏந்தி சிரித்தபடி வருகிறான் என்று. ஆனால் அவன் தாயோ ‘என் பாலகன் பள்ளிக்குச் செல்லும் அரை டிரவுசர் அணிந்து ஏதோ சொல்ல வருகிறான். எனவே சாய் பாபாவிடம் சென்று அவன் என்ன சொல்ல வருகிறான் என்று தெரிய வேண்டும்’ என்கிறார். தாய் வயிறு பற்றி எரிகிறது.

கவனிக்கப்பட வேண்டிய ஒன்று :  இவரது மகன் தன்னை மாய்த்துக்கொள்ளும் நாள் முன்பு இரவு உணவு அருந்த ‘தலைவரிடம்’ இருந்து அழைப்பு வந்ததாம்.

இந்த நிகழ்வுக்கு ஏற்ற சங்கப்பாடலை ஜெயமோகன் சுட்டுகிறார். ஔவையார் என்னும் புலவர் எழுதிய புறநானூற்றுப் பாடல் இதோ :

‘வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்

தன்னோர் அன்ன இளையோர் இருப்ப

பலர்மீது நீட்டிய மண்டையென் சிறூவனைக்

கால்கழி கட்டிலிற் கிடப்பித்

தூவெள் ளறுவை போர்ப்பித் திலதே’

இப்பாடலைத் தற்காலத்திற்கு ஏற்றாற்போல் புரிந்துகொள்ள ஏதுவாக ஜெயமோகன் படைக்கும் கவிதையில் தாய் தன் இறந்துபோன மகனை நினைத்து அவன் இறப்புக்குக் காரணமான தலைவனை வெந்து பாடுவது போல் அமைந்துள்ளது.

‘வெள்ளாட்டு மந்தை போல

அவனைப் போன்ற இளைஞர்

கூடியிருந்தபோதும்

பலருடைய தலைக்கு மேலாக

மன்னன் நீட்டிய கள்மொந்தை

என் சிறுவனை இதோ

காலில்லாத கட்டிலில் கிடத்தி

தூய வெள்லாடையால்

போர்த்தியிருக்கிறது’

தாயின் குமுறல் பீறிட்டு வர, மன்னனை ‘யுத்த வெறி’யைக் கள் வெறியாக உருவகப் படுத்தி, தூய வெள்ளாடையால் கால் இல்லாத கட்டிலில் கிடத்தியுள்ளான் மன்னன் என்று கழிவிரக்கத்துடன் பாடுவது போல் உள்ளது.

இப்பாடலில் ‘மன்னன்’ யார் என்றும் ‘கள் மொந்தை’ என்ன என்பதும் நீங்கள் அறிந்திருக்கலாம். வெள்ளாட்டு மந்தை என்று அவர் உருவகப்படுத்துவது ஏதுமறியா இளம் பாலகர் கூட்டத்தை என்றும் நீங்கள் ஊகித்திருக்கலாம்.

படித்தவுடன் இருபது நிமிடங்கள் அசைவற்று அமர்ந்திருந்தேன். மொத்த மனமும் சாறு பிழியப்பட்ட கரும்ம்புச் சக்கை போல் தளர்ந்து இருந்தது.

%d bloggers like this: