வாழ்க நீ எம்மான்

Govind New

இந்தப் படத்தில் உள்ளவரை நீங்கள் எங்கேனும் கண்டால் ஓடி ஒளிய வேண்டாம். மத மாற்றம் செய்பவரோ, அறிவு ஜீவியோ, இடதுசாரி எழுத்தாளரோ அல்லர். இப்படியெல்லாம் தோற்றமளிப்பதால் உங்கள் மனதில் ஓடி ஒளிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது இயல்பே.

இவர் மத மாற்றம் செய்பவர் அல்ல.

ஆனால் மன மாற்றம் செய்வார்.

ஏனெனில் பலரது வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியவர் இவர்.

அவர் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் சில:

வாழ்வின் கடை நிலையில் உள்ள, பாலியல் வன்முறைக்கு உள்ளான, குடும்பத்தினராலேயே பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட 18 – 26 வயதுகளில் உள்ள சுமார் 120 பெண்களுக்குத் திருமணம் செய்ய உதவி செய்துள்ளார். தனது காலஞ்சென்ற மனைவியின் பெயரில் தான் துவங்கிய ‘சௌபாக்கியா‘ என்ற அறக்கட்டளையின் மூலம் இந்த நல்ல பணியைச் செய்துள்ளார்.

சரி. இது மட்டுமா ? பட்டியல் நீளுகிறது.

தனது ‘Educate’ என்ற இன்னொரு அறக்கட்டளையின்  மூலம் தெருவில் பிச்சை எடுக்கும், குப்பை பொறுக்கும், இன்ன பிற வழிகளில் வன்முறைகளுக்கு ஆளான 4  முதல் 15 வயதில் உள்ள சிறுவர்களுக்கு ‘HOPE‘  முதலிய நிறுவனங்களின் உதவியுடன் ஆரம்பக் கல்வி அளிக்கிறார். ஒரு வருடத்திற்கு பத்துப் பிள்ளைகளுக்குக் கல்விச் செலவை ஏற்றுக்கொள்கிறார். சில மிகவும் வசதி குறைந்த, சமூகத்தின் அடித்தளத்திற்கு மிக அருகில் உள்ள ஏழைச் சிறுவர்களுக்கு உறைவிட வசதிக்கும் நிதி அளிக்கிறார்.

முடிந்ததா என்று கேட்கிறீர்களா ? அது தான் இல்லை.

தானே முனைந்து கர்நாடக மாநிலத்தின் சில கிராமங்களின் பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துகிறார். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புப் பிள்ளைகள் ஒரே வகுப்பறையில் அமர்ந்து பாடம் கேட்கவேண்டிய நிலையில் இருந்த சில கிராம அரசுப் பள்ளிகளுக்குச் சென்று அவர்களுக்குத் தன்னாலான கல்விச் சேவை அளிக்கிறார்.

இத்தனைக்கும் இவர் சில நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் இருக்கிறார். வாரத்தில் இரண்டு நாட்கள் மும்பையில் ஒரு வெளி நாட்டு நிறுவனத்தின் நிதி ஆலோசகர், நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் வேலை. இவை போக வாரத்தில் எப்படியும் ஒரு நாளாவது ஏழைப் பிள்ளைகளின் கல்விக்காகத் தன் நேரத்தை செலவழிக்கிறார்.

இவர் வேலை பார்த்த சில நிறுவனங்கள் – மைக்ரோசாப்ட்(Microsoft)), சன் மைக்ரோ சிஸ்டம்ஸ்(Sun Micro Systems), வி.எம்.வேர் (VMware). கல்வியால் கணக்காளரான (Chartered Accountant ) இவர்  தேர்ந்த மேலாண்மை ஆலோசகரும் கூட.

இவரது சேவையைப் பாராட்டி இவரை ‘கல்வியின் முன்னோடி’ என்று கர்நாடக அரசு விருது அளித்து கௌரவித்துள்ளது. பல உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு ஏழை மக்களின் கல்வி நிலையை எடுத்துரைக்கும் விதமாக அவர்களுக்குப் பயிற்சிகள் அளித்துள்ளார்.

இவரால் வாழ்வு பெற்ற பல பெண்கள் தங்கள் கணவர் குழந்தைகளுடன் வந்து ‘சாமி’ என்று இவரை அழைப்பதை நினைவு கூர்ந்து கண்ணீர் சிந்தும் இவர் மனிதர் அல்ல சாமியே என்று எண்ணத் தோன்றுகிறது.

ஒரு நடிகையைப் பற்றி முக நூலில் ஒரு பதிவு இட்டுவிட்டு அதற்கு எத்துனை ‘விருப்பங்கள்’ (Like) விழுகிறது என்று கணக்கிடும் எண்ணற்ற மக்களிடையே இப்படியும் ஒரு ஆசாமி வலம் வருவது ‘இறைவன் மனிதன் உருவில்’ ( ‘Dheivam Manushya Roopena’) என்ற வசனத்தை மெய்ப்பிக்கிறது.

பாரதியின் வாக்கின்படிக் வாழ்த்துவதானால்,”வாழ்க நீ எம்மான் இவ்வையத்து நாட்டிலெல்லாம்..” என்று கூறலாம்.

சரி. இவரைப்பற்றி இன்று ஏன் ?

இன்று இவர் என் இல்லம் வந்திருந்து கௌரவப்படுத்தினார்.

எனக்கும் இவருக்கும் தொடர்பென்ன ?

பள்ளியில் படிக்கும் போது இவர் என் வகுப்புத் தோழர். இவரது பெயர் கோவிந்த் தேசிகன். இவருடன் படித்த ஒரே காரணத்தால் எனது  வாழ்வு கடைத்தேரியது என்று நினைக்கிறேன்.

ஏமாந்த சோணகிரி

தலைப்பைப் பார்த்த உடனே உங்களுக்குப் புரிந்திருக்குமே, இந்த முறை தன்னைப்பற்றித்தான் பேசப்போகிறான் என்று. உங்கள் ஊகம் சரிதான். ஆனாலும் முடிவில் தெரியும் என்னையும் சேர்த்து யார் எல்லாம் ஏமாந்த சோணகிரி என்று.

இன்று எப்படி யாரை ஏமாற்றலாம் என்று ஒரு குழு அலைந்துகொண்டே இருக்கிறது என்று நமக்குத் தெரியும் . உதாரணாமாக  அரசியல் தலைவர்கள். எப்படி ஏமாற்றலாம் என்று ரூம் போட்டு யோசிப்பது என்பது இவர்களுக்குப் பொழுதுபோக்கு.

ஏமாற்றுபவர்கள் ஒரு புறம் இருக்கட்டும். ஏமாறுபவர்கள் பற்றி என்னசொல்வது?

காலை எழுந்ததில் இருந்து இன்று எப்படி ஏமாறுவது, யார் யாரிடம் எல்லாம் ஏமாறலாம் என்று ஒரு பட்டியல் போட்டுக்கொண்டு  தினமும் ஏமாறுவதையே ஒரு வேலையாகக் கொண்டுள்ளவர்கள் இவர்கள்.

இன்று எப்படியாவது யாரிடமாவது ஏமாநதே தீருவது என்பது ஒரு கொள்கையாகிப் போனவர்கள் எப்படியெல்லாம்  ஏமாறுகிறார்கள் ?

முதலில் காலை எழுந்தவுடன் டி.வி.யில் ஜோசியம்.  இந்த மாதம் உங்கள் நிலை போய், வாரம் போய் இப்போது இந்த நாள் உங்களுக்கு  எப்படி இருக்கும் என்று ஆரம்பிக்கும் பொய்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். இதை விரும்பிப் பார்த்து ஏமாந்து போகும் திறமை சாலிகள் முதல் தரம்.

கல்யாணம் செய்துகொண்டு வேண்டுமென்றே ஏமாறுபவர்கள் அனேகம்பேர் என்பதால் அவர்களைப் பற்றிப் பேச வேண்டாம் (வீட்டில் அடுத்தவேளை சோறு கிடைக்காது என்பதும் ஒரு காரணம். வெளியில் சொல்ல வேண்டாம்)

முதல் முறை ஏமாந்த பிறகு, அலுவலகத்தில் “திறனாய்வு” – அப்ரைசல் என்று ஏமாற்றுவார்கள். அப்ரைசல் என்றாலே கையில் கப்பரை என்று தெரிந்தும் ஏமாறுவது இது. ஏமாற்றுகிறோம் என்று அவர்களுக்கும் தெரியும். ஏமாறுகிறோம் என்று இவர்களுக்கும் தெரியும்.  இருவருக்குமே தெரியும் என்று மனித வளத்துறைக்குத் தெரியும். இருந்தாலும் இந்த சம்பிரதாய ஏமாறல்களும் ஏமாற்றுதல்களும் வருடாவருடம் நடக்கும் ஒன்று.

ஆடித் தள்ளுபடி மாதிரி அன்றாடத் தள்ளுபடி விற்பனை அமோகமாக இருக்கும் மால்களில் உள்ள படித்த முட்டாள்கள் மூன்றாவது. உடனடியாக ஒரு ஐ-பேட் வாங்கினால் ஒரு கைப்பை  இலவசம் என்றால் உடனே ஓடிச் சென்று வரிசையில் நிற்கும் கூட்டம் இது. சில நாட்களுக்கு முன்பு மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் முன் விடியற்காலையில் ஒரே அடி தடி. போலீசெல்லாம் வந்தது. என்னவென்று பார்த்தால் முதல் இருபது பேருக்கு ஐந்து டாலர் சலுகை விலையில் ஒரு பூனை பொம்மை தருகிறார்களாம். கிட்டி என்று பெயர். பூனைக்கும் பர்கருக்கும் என்ன தொடர்பு என்று பகுத்தறிவெல்லாம் கேட்கக்கூடாது. மெக்டோனல்ட்ஸ் ஓர் அமெரிக்க சாப்பாட்டுக் கம்பெனி. அது செய்தால் சரியாகத்தான் இருக்கும். ஒரு வேளை ” இந்தப் பூனையும் பர்கர் சாப்பிடுமா?” என்று எண்ணியிருப்பார்கள் போலே. இந்த மக்களை என்னவென்று சொல்வது?

நாளிதழைப் புரட்டினால் பக்கம் பக்கமாக விளம்பரம். ஒரு வாளி வாங்கினால் ஒரு கிண்ணம் இலவசம் என்று. கடையின் முன் முண்டி அடித்துக் கூட்டம். வாளி நமக்குத் தேவையா அதனுடன் ஒரு கிண்ணம் எதற்கு என்ற யோசனை எதுவும் இல்லாமல் கூட்டம் அலைபாயும். இப்படி ஏமாந்தவர்களை என்ன வகையில் சேர்ப்பது ?

தேர்தலில் ஓட்டுப் போட்டு ஏமாந்து போவது காலம் காலமாக நடந்து வருகிறது. அதனை யாரும் ஏமாற்றம் என்று கருதுவதில்லை. அதனை இன்னொரு பெயர் சொல்லி அழைக்கிறார்கள். அது தான் ஜனநாயகம்.

அடுத்தபடியாகத் தங்கம் வாங்கியே ஏமாறுவது என்று ஒரு குழு அலைந்துகொண்டிருக்கிறது. செய் கூலி இல்லை, சேதாரம் இல்லை என்று விளம்பரம் பார்த்த உடனே படை எடுக்க வேண்டியது. தேவையோ தேவை இல்லையோ வாஙகிப் போட்டுக்கொண்டே இருப்பது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த நகைகளைப் போட்டுக்கொண்டு தெருவில் நடமாட முடியாது. வாங்கி வந்து வங்கிப் பெட்டகத்தில் பாதுகாக்க வேண்டும். அதற்கு வருடா வருடம் கட்டணம் அழ வேண்டும். இப்படி ஏமாறுகிறோம் என்று தெரியாமலே ஏமாறுவது இது.

எல்லாவற்றையும் விட பெரிய ஏமாற்று வேலை – கை பேசிகள் (Cell Phone). பேசுவதைத் தவிர எல்லாம் செய்ய உதவும் ஒரு கருவி. விளம்பரங்களில் அதைத் தண்ணீர்த் தொட்டிக்குள் போடுகிறார்கள். விதம் விதமாகப் படம் எடுக்கிறார்கள். தொலைகாட்சி பார்க்கிறார்கள். ஆனால் பேசுவது மட்டும் இல்லை. இதற்கு வருடாவருடம் போய் இப்போதெல்லாம் மாதாமாதம் அடுத்தடுத்த மாடல்கள். இவற்றை விற்கும் தொலைத் தொடர்புக் கம்பெனிகள் அளிக்கும் அதிகப்படியான வசதிகள் என்ற பெயரில் ஏமாற்றும் வித்தை இருக்கிறதே – அப்பப்பா- ஆ.ராசாவிற்குக் கூட தெரியாது அவ்வளவு வித்தை. இவை எல்லாம் ஏமாற்று என்று தெரியாமலே நம்மவர் அதில் இரண்டு வருட ஒப்பந்தம் என்று மாட்டிக்கொள்வது தான் விதியின் விளையாட்டு என்பது.

நான்கு வருடம் முன்பு எங்கள் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்ய ஒரு ஊழியர் ஊரிலிருந்து வந்திருந்தார். அவரது நிறுவனத்தில் நல்ல நிலையில் உள்ளவர். ஏனோ தெரியவில்லை அன்று ஊருக்குச் செல்லும் முன் முஸ்தபா சென்றுள்ளார். யார் பார்க்கப் போகிறார்கள் என்று ஒரு கை பேசியை சட்டைப் பையில் சொருகிக்கொண்டு வெளியேறப் பார்த்தார். பிடிபட்டார். இன்று சிறையில். பத்து  வருட கணினிப் பொறியாளர். வெறும் இரு நூறு வெள்ளி மதிப்புள்ள ஒரு கை பேசியைத் திருடினார். இதைப் போதாத காலம் என்பதா? அவர் அன்று காலை பார்த்த தொலைக்காட்சி ஜோசியத்தில் “அதிருஷ்டம் இன்று உங்கள் பக்கம்” என்று கூறியிருந்தார்கள் என்றார் அவரது இன்னொரு நண்பர். ஜோசியத்தை நம்பி ஏமாந்துபோன கதை இங்கே.

ஜாதகம் பார்த்தே ஜோலி முடிந்து போன மனிதர்கள் பலர். செவ்வாய் தோஷம் முதல் இன்சாட்- 1 A தோஷம், ஜலதோஷம் என்று இவர்கள் தோஷம் பார்த்துப் பார்த்துக் கல்யாணம் செய்யும் முன்னர் இவரது பெண்கள் நொந்து நூலாகி விடுவார்கள். “சோதிடம் தனை இகழ் “என்று பாரதி பாடினான். நம்மவர்கள் பாரதியார் பாடலையே இளையராஜா இசையில் வைரமுத்து எழுதியதாகவே கருதுபவர்கள். பாரதியாவது ஒன்றாவது ?

அது இருக்கட்டும். நான் ஏமாந்த கதை பல உண்டு. அதில் ஒன்று.

பொறியியல் படித்தபின் சென்னையில் வேலை தேடி வெயிலில் வெந்து அலைந்த 90களின் துவக்க காலத்தில் ஒரு மின்னியல் வடிவமைப்புக் கம்பெனியில் ( Electrical Design Company ), பல முறை நேர் காணலுக்கு அழைத்து  விதம் விதமாக Transformer களை வடிவமைத்து வரையச் சொன்னார்கள். நானும் ஒரு ஆர்வக் கோளாறில் பணம் ஊதியம் இல்லாமல் கணினியில் Auto Cad  என்னும் மென் பொருளில் வடிவமைபுப் படங்கள் போட்டுக் கொடுத்தேன். ஒரு இரண்டு வாரம் கைச் செலவு செய்து கொண்டு வேலை பார்ப்பது போல் அவர்களுக்குப் படம் போட்டுக் கொண்டிருந்தேன். எப்படியும் வேலை கிடைத்து விடம் என்பதால் ஒரு பட வரையாளர் ( Draughtsman ) செய்ய வேண்டிய வேலையை முழு மூச்சாகச் செய்துகொண்டிருந்தேன். அடுத்த வாரம் அந்த அலுவலகம் சென்றால் அந்தக் கணினியில் வேறொருவர் படம் வரைந்து கொண்டிருந்தார். அவர்தான் அந்தக் கம்பெனியின் பட வரையாளராம். இரண்டு வாரம் லீவில் சென்றிருந்தாரம்.அந்த வேலையை என்னிடம் வாங்கியிருந்தார்கள். சம்பளம் என்று ஒன்றும் தரவில்லை. பொறியாளர் வேலையிடம் காலியானவுடன் சொல்லி அனுப்புவதாகக் கூறிவிட்டார்கள். வெளியில் சொல்வது வெட்கக்கேடு என்பதால் ஏதோ காரணம் சொல்லி உறவினர்களிடம் சமாளித்தேன்.

ஆக எல்லாருமே ஏமாந்த சோணகிரி தான். என்ன, ஏமாறும் அளவு தான் வித்தியாசப்படும். மற்றபடி எல்லாரும் ஒரே தரம் தான்.

மெளனம்

மெளனம் —

வாழ்வில் பல பதில் தெரியாத பொழுதுகளில் நம்மை ஆட்கொள்வது.

சில நேரங்களில் பதில் தெரிந்தும்  திமிரின் காரணமாக ஒரு ஆயுதமாகப் பயன்படுவது மெளனம்.

சிந்திக்க முடியாதவர்கள் பதில் தேட முயற்சிக்காமல் சோம்பிக் கிடக்கும் ஒரு நிலை மெளனம்.

வாழ்வின் நகராத துளிகளில் அயராது தாக்கும் அன்றாடப்போர் வீரர்களின் விடுமுறைக் கணங்கள் பேசும் பாஷை மெளனம்.

ஆட்சியாளர்கள் கயவர்கள் என்றிந்தும்  அவர்களையே மீண்டும் தேர்ந்தெடுத்து அல்லல் படும்போது கடைப்பிடிக்கும் விரதம் மெளனம்.

கலை என்ற பெயரில் கலாச்சாரம் காக்கும் வீரர்கள் போர்வையில் திரையில் நிகழ்த்தும் அருவருப்புக் களியாட்டம்  கண்டு புழுக்கத்துடன் அமர்ந்திருக்கும்  சாதாரண மனிதனின் மொழி.

இலக்கியம் என்று நாயகிகள் உறுப்பளவு சார்ந்த செய்தி பரப்பும் நாளிதழ்கள் காணும்போது சாதாரண மனிதனின் மொழி.

பல நேரம் சாஹித்ய, பத்ம,கலை மாமணி விருதுப்பட்டியல் கண்டு அவமானத்தால் குறுகி நிலம் நோக்கிப் பேசும் உண்மைக்கலைஞன் மொழி.

கோயில் பல சென்று வரம் வேண்டி வந்துதித்த வாரிசு, ‘முக்கியக் குழந்தை’ என்று ஓரங்கட்டப்படும்போது தகப்பன் பேசும் மொழி.

பேருந்தில் கால் கடுக்க பயணித்து  உயிருடன் மீண்டு கோயில் வாயிலில் அரசாங்க வழிப்பறி  தாண்டி கடவுளை சேவிக்கும் வேளையில் காரில் வந்த பண-பக்தர் நேராக மூலவர் பக்கம் நிற்கும் போது சாதாரண மனிதனின் மூச்சு.

கடவுளைக்காட்டும் வித்தை தெரிந்த வார்த்தை ஜால சித்தர், மூச்சை இழுத்து விடும் ‘கலை’ கற்றுக்கொடுக்க சொத்தைக் கேட்கும் தருணத்தில் சா.மனிதன் இதயக்குரல் மெளனம்.

தமிழ் வளர்த்த லட்சியத் தலைவர் நடத்தும் பள்ளியில் சேர்க்க லட்சங்களைக் கேட்டபோது லட்சியம் அழிந்த சா.மனிதன் ஓலம் மெளனம்.

வேறுபாடு அறியாப்  பருவத்தில் சாதி மாறுபாடு புகட்டிப் பள்ளியில் சேர்த்து பின்னர்  ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ பாடம் படிக்கும் சா.சிறுவன் குழப்பக் கேள்வி மெளனம்.

விளையாடி,கூத்தாடி, உறவாடிப் படித்துக் கல்லூரி விண்ணப்பம் நிரப்பும் நேரம் சாதி சொல்ல வேண்டிய நிலையில் சா.மாணவன் நிலை மெளனம்.

சான்றோர் என்றெண்ணி முன்மாதிரியாக் கொண்டார் சான்றாண்மை தவறி நிற்கும் தேர்தல் சமயத்தில் சா.மனிதன் மொழி மெளனம்.

அவ்வுலக  வாழ்விற்கு வழிகாட்டும்  ஆன்மீகப் பெரியவர் இவ்வுலக வங்கிக் கணக்கைத் தீர்த்த போது சா.மனிதன் குரல் – மெளனம்.

கள்உண்ணாமை அதிகாரம் வகுத்த வள்ளுவன் சிலை கீழ் அரசு மதுபானக் கடை காணும் சா.மனிதன் குரல்  – மெளனம்.

கல்வியில் தோற்ற சமூக விரோதத் தம்பிகள், தலைவர் உருக்கொண்டு தேர்தலில் கை கூப்பும் நேரம் சா.மனிதன் மறுமொழி – மெளனம்.

போராடிப் போராடி இறுதிவரை போராடி வாழ்வு முடியும் நிலையில் சா.மனிதன் மெளனம் –  அவன் மொழி.