கமலஹாசனின் மஹாபாரத கருத்துக்களால் அவர் சந்திக்கும் வழக்கு பற்றிய ஜெயமோகனின் கருத்து கண்டனத்திற்குரியது.
ஆமாம். இந்த ஞான மரபில் நாஸ்திகம் உண்டுதான். சார்வாகம், லோகாயதம் இங்கிருந்தே தோன்றின. ஜாபாலி முனிவரையும், அவைதீக மதஸ்தர்களான பௌத்தரையும் ஜைனரையும் போற்றும் பண்பாடு நம்முடையது. அதற்காக ஒரு நடிகர், வெளி நாட்டுத் திரைப்படங்களைத் திருடி நடிக்கும் நடிகர், பெரிய பண்பாட்டு அறிவுஜீவி போல் மஹாபாரதத்தையம் அதைக் கொண்டாடும் நாட்டையும் இழித்துரைப்பாராம். அதை எதிர்த்து வழக்கு போடக்கூடாதாம். போட்டால் முல்லாவாம்.
வழக்கு தானே போட்டார்? வன்முறையில் இறங்கினாரா என்ன? வழக்கு போடுவது ஜனநாயக வழிமுறை தானே ? அதில் என்ன தவறு கண்டார் ஜெயமோகன்?
‘பெண்ணை வைத்து சூதாடிய நூலைக் கொண்டாடிய தேசம்’ என்றார் கமலஹாசன். அந்த நூலில் ஒரு பெண்ணை இழிவு படுத்தியதற்காக மூண்ட மாபெரும் போர் பற்றியும் வருகிறது. மாற்றான் மனைவியைக் கவர்ந்ததால் அழிந்த மன்னனைப் பற்றியம் ஒரு நூல் இருக்கிறது. அது இராமாயணம். அதையும் இந்த நாடு கொண்டாடுகிறது. அது அந்த நடிகருக்குத் தெரியவில்லை அல்லது தெரியாதது போல் நடிக்கிறார்.
கமலஹாசனுக்காக சுய தர்மத்தை அடகு வைக்க வேண்டிய தேவை சாதாரண மனிதனுக்கு இல்லை. எனவே வழக்கு போடுகிறான். வழக்கு தான் போடுகிறானே தவிர கமலஹாசனின் வீட்டை முற்றுகை இடவில்லை; அவரை அவமதிக்கவில்லை; வன்முறை இல்லை. ஒரு ஜனநாயக நாட்டில் மனம் புண்பட்ட ஒருவன் செய்வது தான் என்ன?
வழக்கு இழுத்தடிக்கும் என்கிறார். ஆகவே வழக்கு தவறாம். இனிமேல் ஒரு கொலை நடந்தாலும் வழக்கு போட வேண்டாமா?
ஆட்சி அதிகாரம் வந்ததால் தெம்பு வந்துள்ளது என்கிறார் ஜெயமோகன். இது தான் முல்லாத்தனம். ஆட்சி ஏற்பட்டுவிட்டதால் 2ஜி வழக்கை மூடி விடலாமா?
பல இன சமூகங்கள் வாழும் நாட்டில், ஒரு சாராரையும், அவர்களது நம்பிக்கைகளையும் இழிவு படுத்திப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கும், வெளி நாட்டுத் திரைப்படங்களைத் திருடிப் படம் எடுக்கும் ஒரு நடிகர், பெருவாரியான மக்களின், ஒரு பெரும் கலாச்சாரத்தின் வெளிப்பாடான ஒரு இதிகாசத்தை அருவருப்பான சொற்களால் சாடுவது தவறில்லை; ஆனால் அதை எதிர்த்து ஒரு மடாதிபதி வழக்கு தொடர்வது தவறு. அதற்காக அவருக்கு எதிராக வழக்குகள் போட வேண்டும், அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பது தான் தாலிபன் சிந்தனை வெளி.
சிந்தனைத் தெளிவும், இந்து ஞான மரபுகளில் ஆழ்ந்த பயிற்சியும், மொழி வளமும் கைவரப் பெற்ற ஜெயமோகனின் தடுமாற்றம் அதிர்ச்சியளிக்கிறது. சினிமாவுக்காக சுயத்தை இழப்பது என்ன மாதிரியான அறம் என்று தெரியவில்லை.