கம்பனுக்கு முன் இராமன் ?

இந்த முறை கம்பன் பற்றிப் பேசும் முன் ஒரு அரசியல் காலத்தையும் கண்டு செல்ல வேண்டியுள்ளது. அதன் தேவை இருப்பதால் ஒரிரு வரிகள்.

1930-களில் கம்ப ராமாயணத்திற்கு எதிரான பல குரல்கள் தமிழகத்தில் எழுந்தன. தனித் தமிழ் நாடு முதலிய இயக்கங்கள் துவங்கியபோது ஒரு பொது எதிரி தேவையாக இருந்தது. அவர்கள் ஆரியர்கள் என்ற குடையின் கீழ் திரட்டப்பட்டார்கள். அவர்களில் முதலாமவன் இராமன் என்று அன்றைய சில அறிவாளர்கள் கூறினார்கள். ஏனெனில் இராமன் வட நாட்டிலிருந்து தென்னாடு மீது படை எடுத்து வந்து ஆரிய ஆதிக்கத்தைத் துவக்கினான் என்று கூறி தென்னாட்டுத் தமிழர்களைப் பாரதத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக அணி திரட்ட முயன்றார்கள். ( இந்த முயற்சிக்கு ஆங்கில அரசும் உடந்தை ).  இதற்காகக் கம்பனை இழிவு படுத்தத் துவங்கினார்கள். வசை மொழிகளை இத் தொடரில் எழுத வேண்டாம் என்பதால் அவர்கள் கூறிய வசைகளை எழுதவில்லை.

அவர்களது வசையின் சாராம்சம் இதுதான். கம்பன் தானும் வைதீகர்களால் ஒரு “ஆழ்வாராக” அறியப்பட வேண்டும் என்பதால் ராமனை மிகவும் உயர்வாகவும் , ராவணனைத் தாழ்த்தியும் தேவையில்லாமல் ஒரு வட நாட்டு வைணவக் “கடவுளை” தென்னாட்டில் நுழைத்தான். அதாவது இராமன் மற்றும் அவனது கதை தமிழ்த்தேசத்தில் இல்லை என்றும் கம்பன் தான் புகுத்தினான் என்பது தான் இவர்கள் கூற்று. ஆனால் இவை சரியா?  அப்படியானால் கம்பனுக்கு முன்பே தமிழ்த்தேசத்தில் இராமகாதை இல்லையா?

சில பழைய சான்றுகளைப் பார்ப்போம்.

கம்பன் காலம் பற்றிப் பல கருத்துக்கள் இருந்தாலும், அவன் கி.பி.11781208 ( மூன்றாம் குலோத்துங்க சோழன் ) காலத்தில் ராமாயணத்தை எழுதியிருக்க வேண்டும் என்று மா.ராசமாணிக்கனார் என்னும் தமிழறிஞர் கூறுகிறார். பொதுவாகப் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு காலம் இது.

அக நானூறு , புற நானூறு முதலான சங்க இலக்கியங்களின் காலம் குறைந்த பட்சம் கி.மு.வாகவாவது இருக்க வேண்டும். ஏனென்றால், அடியேன் அறிந்த வரை பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கைஆழ்வார்  என்னும் முதலாழ்வார்கள் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை. இவர்கள் செய்யுள் சற்று கடினமானது. பின்னர் 600 ஆண்டுகள் கழித்து வந்த திருமங்கை, குலசேகர, பெரியாழ்வார், ஆண்டாள் முதலானவர்களது பாசுரங்கள் சற்று சுலபமாகப் புரியும். அது போல் சங்க இலக்கியங்கள் முதலாழ்வார்கள் பாசுரங்கள் போன்றும் அதே பாணியில் அமைக்கப்பட்டுள்ளன. ஆக சங்க இலக்கியங்கள் ஆழ்வார் பாசுரங்களுக்கும்  முற்பட்டவை என்று அறியலாம்.

அப்படிப்பட்ட சங்க நூலான அகநானூறு இராம காதை பற்றி என்ன கூறுகிறது?

இராமன் ராவணனுடன் போர் செய்யச் செல்லும் வழியில் தனுஷ்கோடியில் ஒரு ஆல மரத்தடியில் வீரர்களுடன் அமர்ந்து ஆலோசனை செய்கிறான்.மரத்தின் மேலிருந்த பறவைகள் ஆரவாரம் செய்கின்றன. ஆலோசனை தடை படுகிறது. ஆனால் ஆல மரம் கூச்சல்களை அடக்குகிறது. பின்னர் கூட்டம் நடக்கிறது. இக்கருத்து பின்வருமாறு :

“வென்வேல் கவுரியர் தொன்முதுகோடி

முழங்கு இரும்பௌவம் இரங்கும் முன்துறை

வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த

பல்வீழ் ஆலம்”

(வெல்லுகின்ற வேற்படையைக் கொண்ட பாண்டியனுடைய பழமையான தனுஷ்கோடியில் முழங்கிக்கொண்டிருக்கின்ற பெரிய கடல் அலைகள் ஓசையிட்டுக் கொண்டிருக்கும் கடல் துறையில், வெல்லுகின்ற போர்த்திறமுள்ள இராமன் தன் நண்பர்களுடன் ஆலோசனை செய்துகொண்டிருந்தபோது பறவைகளின் ஓசையை அடக்கிய பல விழுதுகளை உடைய ஆலமரம்)

அதே காலத்ததான புறநானூறு ,”விரைந்து செல்லும் தேர் உள்ள இராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை வலிமை வாய்ந்த கைகளையுடைய அரக்கனாகிய இராவணன் கவர்ந்து சென்றான். அந்நாளில் சீதையால் கழற்றி எறியப்பட்ட ஆபரணங்கள் நிலத்தில் வீழ்ந்து ஒளி வீசுகின்றன. இவற்றைச் சிவந்த முகங்களை உடைய குரங்குகள் கண்டன,” என்னும் பொருள் படும்படி பின்வருமாறு கூறுகிறது :

“கடுந்தேர் இராமன் உடன்புணர் சீதையை

வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை

நிலம்சேர் மதர் அணி கண்ட குரங்கின்

செம்முகப் பெரும்கிளை”

சிவ பெருமான் வாழும் இமய மலையைப் பெயர்த்தெடுக்க முயன்ற ராவணன் கதை நாம் அறிவோம். அது சங்ககால நூலான கலித்தொகையில், “இமயத்தை வில்லாக வளைத்த பரமசிவன் உமையவளுடன் வீற்றிருந்தான்.அப்போது, பத்துத் தலைகளை உடைய அரக்கர் தலைவன் இராவணன் காப்புப் பொலியும் தன் வலிமையான கைகளை மலையின் கீழே புகுத்தி அதை எடுக்க முயன்றான்; எடுக்க முடியவில்லை. அதனால் மலையின் கீழ் சிக்கி வருந்தினான்”, என்னும் விதமாகப் பின்வருமாறு கூறுகிறது:

“இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்

உமை அமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக

ஐயிருதலையின் அரக்கர் கோமான்

தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை

எடுக்கல் செல்லாது உழப்பவன்போல”

ஆக, சங்க காலத்திற்கு முன்னரே தமிழ் நாட்டில் ராமாயணக் கதை பரவியிருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் சங்க இலக்கிய நூல்களில் அவை வருவதெப்படி?

பக்தி இலக்கியக் காலம் என்று கி.பி. 6௦௦-900 அறியப்படுகிறது. இக்காலத்தில் தோன்றியவை ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களின் பாசுரங்கள் மற்றும் பதிகங்கள். இப்பாசுரங்களில் இராமாவதாரம் பற்றிய பல குறிப்புக்கள் உள்ளன. உதாரணத்திற்கு சில :

காலஞ்சென்ற இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் குரலில் “மன்னுபுகழ் கோசலைதன் மணி வயிறு வாய்த்தவனே..” என்று தொடங்கும் குலசேகர ஆழ்வார் பாசுரம் நம்மில் பலர் அறிந்ததே.( சில காலம் முன்பு வரை பல வைணவக் குடும்பங்களில் இந்தப் பாடல் இல்லாமல் சிறு குழந்தைகள் தூங்காது. இப்போது Cartoon பார்க்காமல் தூங்காது). இது போன்று பதினொரு பாசுரங்களில் ராமாயணத்தையே எழுதிவிட்டார் குலசேகர ஆழ்வார். 

ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் ராமாயணத்தின் முக்கிய பாத்திரமான கும்பகருணனைத் தன் திருப்பாவை பாசுரத்தில் இப்படிக் குறிப்பிடுகிறாள் :

“கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்

தோற்றும்உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ”

இராமாயணம் அக்காலத்தில் வழக்கத்தில் இல்லாதிருந்தால் கும்பருணன் என்ற ஒரு பாத்திரத்தை மட்டும் போகிற போக்கில் ஆண்டாள் குறிப்பிடுவது எங்ஙனம்?

ஆண்டாளின் தந்தையாகிய பெரியாழ்வார், சூர்ப்பனகை மூக்கறுபட்டதைக்குறிக்கும் விதமாக பின்வருமாறு பாடுகிறார் :

“தார்கிளந தம்பிக்கு அரசீந்து, தண்டகம்

நூற்றவள் சொற்கொண்டு போகி, நுடங்கிடைச்

சூர்ப்பண காவிச் செவியோடு மூக்கு அவள்

ஆர்க்க அறிந்தானைப் பாடிப் பற ..”

( தம்பிக்கு அரசினை வழங்கி, காடு போய், ஆங்கே காற்றுப் பட்டாலும் அசைகின்ற இடையை உடைய சூர்ப்பனகையைக் காதும் மூக்கும் அறுத்தவனைப் போற்றுக..)

திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில், குகனை இராமன் குல வேற்றுமை பாராமல் தன் தம்பியாகச் சேர்த்துக்கொண்டதைப் பற்றிக் கூறும் விதமாக,

“ஏழை ஏதிலன் கீழ்மகன் என்னாது

இறங்கி, மற்றுஅவர்க்கு இன்னருள் சுரந்து

“மாமழை மடநோக்கி உன் தோழி, உம்பி எம்பி …

.. அணிபொழில் திருவரங்கத் தம்மானே” என்று பாடுகிறார்.

திருமங்கை ஆழ்வார் மேலும், வாலி, விராடன், கவந்தன் முதலியோர் இராமனின் வில்லுக்கு வீழ்ந்த கதையைப் பின்வரும் பாடலில் கூறுகிறார்:

“பைங்கண் விறல் செம்முகத்து வாளிமாளப்

படர்வனத்துக் கவந்தனோடும், படையார் திண்கை

வெங்கண் விறல் விராதன் உக விற்குனித்த

விண்ணவர்கோன் தாள் அணைவீர்”.

ஆழ்வார்கள் கம்பனுக்கு முற்பட்டவகள் என்று காட்டவே இவற்றைக் கூறினேன். ஆழ்வார்கள் திருமால் அடியார்கள். எனவே இராமனைப் பற்றி இவர்கள் எழுதுவது வியப்பில்லை.

ஆகவே நாயன்மார்கள் இராமாயணத்தைப் பற்றிக் கூறி இருப்பதைப் பார்ப்பது நல்ல முயற்சியாகத் தெரிந்தது.  சிவனடியார்களான  நாயன்மார்கள்  இருந்த காலமும் கி.பி. 500 – 900  என்று அறிகிறேன். இவர்களும் கம்பன் காலத்திற்கு முற்பட்டவர்கள். இவர்கள் கூறுவது இராமனைப்  போற்றும் விதமாக அமையாது. சிவனைப் பூசிப்பதாகவே அமையும்.இருப்பினும் இராமாயணக் குறிப்புகள் உள்ளன.

திருஞான சம்பந்தர்,

“எறியார் கடல் சூழ் இலங்கைக் கோன் தன்னை முறியார் தடக்கை அடர்த்த மூர்த்தி” என்றும் ,

திருநாவுக்கரசர்,

“தலைஒருபத்தும் தடக்கையது இரட்டிதான் உடைய அரக்கன் ஒன்கயிலை..” என்றும்,

சுந்தரர்,

“திண்தேர் நெடுவீதி இலங்கையர்கோன் திரள்தோள் இருப்பதும் நெரித்தருளி ..”,

என்றும் இராவணன் கைலாச மலையைப் பெயர்த்த கதையைக் கூறுகிறார்கள்.

இவர் தவிர , திருஞான சம்பந்தர் தேவாரத்தில் இராமன் இராவணனை அழித்துத் திரும்பியது பற்றிப் பின்வருமாறு பாடியுள்ளார் :

“மான் அன நோக்கி வைதேகி தன்னை ஓரு மாயையால்

கான் அதில் வவ்விய கார் அரக்கன் உயிர் செற்றவன்”

இவை இராமேசுவரம் பற்றிய பதிகத்தில் அமைந்துள்ளது.

ஆழ்வார்களும் நாயன்மார்களும் இராமன் பற்றிப் பல இடங்களில் கூறியுள்ளார்கள். மேலே பார்த்தவை சில சான்றுகளே.

இவைகளுக்கு முன்பே தோன்றிய ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலையும், சிலப்பதிகாரமும் கூட ராம காதையைப் பேசுகின்றன. இதில் நோக்கவேண்டியது என்னவென்றால் சிலப்பதிகாரம் சமண காவியம், மணிமேகலை பௌத்த காவியம்.

இராமன் இராவணனை அழிக்கக் கடலில் பாலம் அமைத்தான் என்னும் கருத்தை விளக்கும் விதமாக மணிமேகலை “உலக அறவி புக்க காதை”யில்,

“நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி

அடல்அரு முந்நீர் அடைத்த ஞான்று

குரங்கு கொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம்

அணங்குடை அளக்கர் வயிறுபுக்கு”  என்கிறது.

(திருமால் பூவுலகில் இராமனாகத் தோன்றி இராவணனைக் கொன்று சீதையை மீட்க இலங்கைக்குப் போகும் பொருட்டு வலிமை சிறந்த கடலில் அணை போட்டான். அந்நாளில் அணை போடுவதற்காகக் குரங்குகள் வீசிய பெரிய மலைகள் எல்லாம் வருத்தத்தைத் தரும் கடலின் வயிற்றிலே புகுந்தன)

கோவலனும் கண்ணகியும் காவிரிப் பூம்பட்டிணத்தை விட்டுப் பிரிந்தவுடன் அந்த ஊர் மக்கள், அயோத்தியிலிருந்து இராமன் காட்டுக்குப் போனவுடன் அயோத்தி மக்கள் துன்புற்றதைப்போல், துன்பம் அடைந்தார்கள் என்று  சிலப்பதிகாரம்,

“அருங்கான் அடைந்த அரும்திறல் பிரிந்த அயோத்திபோல” என்பதன் மூலம்  கூறுகிறது.

மேலும் சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் இராமாயணத்தைப் பற்றிக் கூறுவதாக ஒரு பாடல் பின்வருமாறு:

“தாதை ஏவலின் மாதுடன் போகிக்

காதலி நீங்கக் கடும்துயர் உழன்தோன்

வேத முதல்வன் பயந்தோன் என்பது

நீ அறிந்திலையோ, நெடுமொழி அன்றோ ”

( தன் தந்தையின் ஆணைப்படி, மனைவியுடன் கானகம் சென்று, மனைவியைப் பிரிந்து கடுந்துன்பத்தை அடைந்த வேத முதல்வனின் கதையை நீ அறியாயோ? நெடுநாளாக வழங்கிவரும் வார்த்தை அல்லவா? )

ஆக சிலப்பதிகார காலத்துக்கு முன்னர் பல நெடுங்காலமாகவே வழங்கிவரும் ஒரு நிகழ்வுதான் இராமனின் கதை என்பது புலனாகிறது.

மேலும் சிலப்பதிகாரம் இராமனைப் போற்றும் விதமாக,

“தாவிய சேவடி செப்பத் தம்பியொடும் கான்போந்து

சோஅரணும் போர்மடியத் தொல்இலங்கை கட்டழித்த

சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே ..”

(தன் பாதங்கள் சிவக்குமாறு தம்பியுடன் கானகம் போன, அசுரர்களின் நகரத்தைப் போரில் அழித்த சிறந்த வீரனின் பெயரைக் கேளாத காதுகள் என்ன காதுகள்?)

சிலம்பும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலம் என்னும் காலத்தில் ஏற்பட்டன. அக்காலம் சங்க காலம் மற்றும் பக்தி இலக்கியக் காலங்களுக்கு இடைப்பட்ட காலமாகும். எனவே ஆழ்வார், நாயன்மார் காலத்துக்கு முற்பட்டது. இந்தக் காலத்துக்கும் கம்பன் காலத்துக்கும் இடையே சுமார் எண்ணூறு ஆண்டுகள் உள்ளன.

இதன் மூலம் நாம் அறிவது : சங்க காலத்தில் அகநானூறு, புறநானூறு, கலித்தொகை முதலியவற்றிலும், சங்கம் மருவிய கால இலக்கியங்களான சிலம்பு மற்றும் மணிமேகலையிலும், அதன் பின்னர் பல நூற்றாண்டுகள் கழித்துத் துவங்கிய பக்தி இலக்கியக் காலங்களான ஆழ்வார் நாயன்மார் காலப் பாடல்களிலும் இராம காதை அமைந்துள்ளது. கம்பன் அதன் பின்ன முந்நூறு ஆண்டுகள் கழித்தே இராமாயணம் எழுதுகிறான்.

ஆக கம்பன் காலத்திற்கு வெகு காலம் முன்பே இராம காதை தமிழகத்தில் இருந்துள்ளது என்று அறியப் பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை என்பது அடியேன் கருத்து.

அடுத்த பதிவில், சில கம்ப ராமாயணச் சுவைகளைப் பார்ப்போம்.

கம்பர் – ஒரு அறிமுகம்

தமிழ் நாட்டில் அரசுகளால் வெளியே காட்டப்படாத, முயற்சி செய்து மறைக்கப்பட்ட ஒரு கவிஞன் உண்டென்றால் அது கம்பன் தான் என்று அடித்துக் கூறலாம். ஏனென்றால் அவன் எழுதியவை அப்படிப்பட்டவை. மனிதனைத் தெய்வமாக்கும் அல்லது தெய்வ நிலைக்குத் தூண்டும் பல இலக்கியங்கள் அவன் செய்துள்ளான். நமக்குத் தெரிந்தது “கம்ப ராமாயணம்”. இன்னும் சில உள்ளன. அவை திருக்கை வழக்கம், ஏரேழுபது, சரசுவதி அந்தாதி,சடகோபர் அந்தாதி முதலியன.

நாம் கம்ப ராமாயணத்தை மட்டும் பார்ப்போம்.

“கம்ப ராமாயணம்” என்பதே தவறான சொல்லாக்கம். கம்பன் தனது காவியத்திற்கு வைத்த பெயர் “இராமாவதாரம்”. ஒருவேளை அதனால் தானோ என்னவோ நமது தமிழரசுகள் இது வெளியே தெரியவேண்டிய அளவு தெரியாமல் மழுங்கடிக்கச் செய்தன.

கம்பன் உண்மையில் யார்? கம்பன் என்பது அவனது இயற்பெயரா? இதற்கெல்லாம் சரியான பதில் இல்லை ஆராய்ச்சியாளர்களிடம். எங்கள் ஊர் தேரழுந்தூரில் கம்பன் பிறந்ததால் ஊரில் மிகவும் வயது முதிர்ந்த பலரிடம் பல வருடங்களாகவே பேசிப்பார்த்திருந்தேன். பெயர்க்காரணம் பல கிடைத்தன. சில பெயர்க்காரணங்கள் மட்டும் குறிப்பிடுகிறேன்.

கம்பர் “நாதசுரம்” வாசிக்கும் தொழில் பிரிவினர். கம்பினால் செய்யப்பட்ட நாதசுரம் வாசிப்பதால் அந்த இசை மரபினருக்குக் “கம்பர்” என்ற பொதுப்பெயர் வழங்கி வந்திருக்கிறது. நாளைடைவில் கம்பரது இயற்பெயர் மறைந்து தொழிற்பெயரே  நிலைத்துவிட்டது என்று ஒரு கருத்து உண்டு. இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று ஆராய்ந்தேன். தற்போது தேரழுந்தூரில் ஆமருவிப்பெருமாள் கோவிலில் நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞர்கள் வசிக்கும் இடத்திற்கு சமீபத்தில் கம்பர் மேடு என்று கம்பர் வாழ்ந்த இடம் இருக்கிறது. இந்தக் காரணம் உண்மையாக இருக்கலாம். ( கம்பர் மேடு இன்று என்ன அழகில் தொல்பொருள் துறையால் பாதுகாக்கப் படுகிறது என்று இங்கே பார்க்கவும் )

இதை விட நம்பத்தகுந்த விளக்கம் ஒன்று உள்ளது. கம்பர் நரசிம்ம பக்தர். அதனால் கம்பத்தின் ( தூணின்) உள்ளிருந்து வந்த பெருமாளை மனதில் கொண்டு தன் பெயரையும் “கம்பன்” என்று மாற்றிக் கொண்டார். இதற்கு ஆதாரம் கம்ப ராமாயணத்தில் உள்ளது. கம்பர் தான் எழுதிய ராமாயணத்தில் “இரணிய வதைப் படலம்” என்று நரசிம்மர் இரணியனைக் கொன்ற கதையை எழுதியுள்ளார். இந்த இரணியன் கதை வால்மீகத்தில் இல்லை. தான் ஒரு நரசிம்ம பக்தர் என்பதால் தனது இஷ்ட தெய்வமான நரசிம்மனை ராம காதையில் கொண்டு வந்தள்ளார்.

இரண்யன் பிரகலாதனிடம் அரியைக் காட்டு என்னும் விதமாக,

“உம்பர்க்கும் உனக்கும் ஒத்து இவ்வுலகெங்கும் பரந்துகானைக்
கம்பத்தின் வழியே காணக் காட்டுதி காட்டிடாயேல்.. ”

என்று கூறுவதாக அமைந்துள்ளது. இதிலும் “கம்பத்தின் வழியே” என்று தூணைக் குறிக்கிறான்.

மேலும் வலு சேர்க்கும் விதமாக தேரழுந்தூரில் ஆமருவியப்பன் திருக்கோவிலில் கருவறையில் ஆமருவியப்பன் அருகில் பிரகலாதன் இருக்கிறார். எந்த வைணவக் கோவிலிலும் கருவறையில் பெருமாள் தவிர யாரும் இருப்பதில்லை. ஆனால் தேரழுந்தூரில் நரசிம்ம தொடர்புள்ள பிரகலாதன் எழுந்தருளியுள்ளார். இது ஒரு தொடர்பு என்றும் கொள்ளலாம். மேலும் சந்நிதியின் வெளியில் யோக நரசிம்ஹர் சந்நிதி உள்ளது. அவரது சிலை மிகவும் புராதமானது என்று பார்த்தாலே தெரிகிறது. கம்பன் மற்றும் அவரது மனைவியின் சிலைகள் ஆமருவியப்பனின் கோவிலில் ஒரு தனி சந்நிதியில் உள்ளன.

தேரழுந்தூரில் கம்பர்

ஆமருவியப்பன் திருக்கோவிலில் கம்பரும் அவர் மனைவியும்

வேறொரு விளக்கமும் உள்ளது. கம்பர் பிறந்தபோது பேச்சு வர வில்லையாம். குழந்தையைத் தற்போது கம்பர் மேடு இருக்கும் இடத்திற்கு மேற்கே உள்ள காளி கோவில் கம்பத்தின் முன் கிடத்தி இருந்ததாகவும் அதன் பின்னர் பேச்சு வந்ததாகவும் ஒரு கதை இருக்கிறது. தற்போதும் அவ்விடத்தில் “கம்பர் காளி” என்று ஒரு காளி கோவில் இன்றும் உள்ளது.

சிவ பெருமானுக்குக் “கம்பன்” என்ற பெயர் உண்டு என்றும் சில தமிழ் அறிஞர்கள் கூறுவர். சுந்தரர் சிவ பெருமானைப் பாடும்போது ,”கண்ணும் மூன்றுடைக் கம்பன்”, “கங்கையாளின் கம்பன்”, ” கூத்தன் கம்பன்” என்று பாடுகிறார். சிவ பெருமானுக்கு ‘ஏகாம்பரன்” என்ற பெயர் உண்டு என்பதால் அது மருவி ‘ஏகம்பன்’ என்றும் “கம்பன்” என்றும் ஆனதாகக் கூறுகிறார் காலஞ்சென்ற தமிழ் அறிஞர் வையாபுரிப் பிள்ளை.

கம்பர் இளமையில் கரும்புக் கொல்லையைக் கையில் கம்புடன் காத்ததால் கம்பர் என்று அழைக்கப்பட்டார் என்கிறார் செல்வ கேசவ ராய முதலியார் என்னும் தமிழ் அறிஞர்.

இப்படிப் பல கதைகள் , இலக்கியச்சான்றுகள் இருந்தாலும் இதுதான் உண்மை என்று அறியமுடியவில்லை.

கம்பர் எப்படி ராமாவதாரம் எழுதினர் ? 10,000 பாடல்களுக்கு மேல் எழுதுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் ஒரு மனிதன் வேறு வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு வேறு ஒரு மொழி சார்ந்த மூலக்கதையை எழுதவேண்டுமென்றால் அவனிடம் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் பற்றி எந்தக் கவலையும் இருந்திருக்க முடியாது. ஆக கம்பன் பெரும் செல்வந்தனா என்று ஆராய்ந்தால் அது இல்லை. “சோழ நாடு சோறுடைத்து” என்று சொன்னாலும் சோறு கிடைக்க வேண்டுமே!

கம்பனுக்கு அந்தக்காலத்திலேய ஒரு ஸ்பான்சர் கிடைத்தார். அவர் தேரழுநதூருக்கு சில மைல்கள் தொலைவில் இருந்த திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல். பெயரைப் பார்த்தால் சைவராக இருந்திருக்க வேண்டு ( சடை சிவ பெருமானைக் குறிப்பது).இருந்தும் அவர் கம்பரின் தமிழ்ப் புலமையைக் கண்டு வைணவ நாயகனான ராமனைப் பற்றி ராமகாதை எழுதப் பொருளுதவி வழங்கியுள்ளார். இதைக் கம்பனே பின்வருமாறு கூறுகிறார்.

“தோமறு மாக்கதை சடையன் வெண்ணை நல்லூர் வியின் தந்ததே ”

( சடையப்ப வள்ளல் வாழ்ந்த வெண்ணை நல்லூரில் தங்கி இருந்து, குற்றமற்ற இப்பெருங்காப்பியத்தைப் பாடி முடித்தேன் )

சடையப்பர் சிவனைப் பற்றிப் பாடச் சொல்லி இருக்கலாமே! அந்நாளில் சைவ வைணவ பேதம் இருந்துள்ளது என்பது கம்பனின் இந்தப் பாடல் மூலம் தெரிகிறது

“அரன் அதிகன், உலகளந்த

அரி அதிகன்,  என்றுரைக்கும் 

அறிவில்லோர்க்குப் பரகதி அடைவரிய

 பரிசே போல் “

( சிவன் தான் பெரியவன்; இவ்வுலகை அளந்த திருமால்தான் பெரியவன்; என்று கூறுபவர்கள் அறிவற்றவர்கள்; அவர்கள் கடவுளையே வெறுப்பவர்கள்; அவர்களுக்கு உயர்ந்த கதி இல்லை; உயர்ந்த கதியை அடைய முடியாது )

கம்பனுக்கு ராம காதையைப் பாடவே விருப்பம். வால்மீகியால் உந்தப்பட்டான். எனவே கவியின் விருப்பத்திற்கிணங்க சடையப்பர் ராமாயணம் எழுத உதவியுள்ளார். ஆக, சமயம் சாராத ஒரு அணுகுமுறை சடையப்பரால் பின்பற்றப்பட்டது என்று அறிகிறோம். அக்கால மாந்தரின் வள்ளல்தன்மை வியக்க வைக்கிறது.

சரி, கம்பன் ஏன் ராமனைப் பாட வேண்டும் ? பணம் கிடைக்கும் என்பதற்காகவா ? இல்லை. அவனே கூறுகிறான் இவ்வாறு :

“ஆசைபற்றி அறையல் உற்றேன் மற்றுஇக்

காசுஇல் கொற்றத்து இராமன் கதை அரோ ”

( நான் ராமாயணத்தை யாருடைய தூண்டுதலின் பேரிலும் பாடவில்லை.குற்றமற்ற வெற்றியை உடைய இராமன் வரலாற்றில் உள்ள ஆசையினால் பாடினேன் )

தேரழுந்தூரில் பிறந்த கம்பன் வெண்ணை நல்லூரில் எழுதிய நூல் திருவரங்கத்தில் அரங்கேற்றப்பட்டது. திருவரங்கன் சந்நிதி அருகில் நரசிம்மர் சந்நிதியில் பாடப்பட்டு அரங்கேற்றப்பட்டது. அரங்கேறியபின் நரசிம்ம மூர்த்தியிடமிருந்து ஒப்புதல் போல் “ஆம்” என்ற சப்தம் வந்தது என்று எழுதிவைத்துள்ளார்கள்.

இங்கேயும் நரசிம்ம பக்தனான கம்பன் தன் ராம காவியத்தை நரசிம்மர் முன்னே அரங்கேற்றினான். அவனது  பெயர்க்காரணத்திற்கு இது வலு சேர்க்கிறது.

கம்பன் அரங்கேற்றம் குறித்து ஒரு தனிப்பாடல் உள்ளது. அது பின்வருமாறு:

“எண்ணிய சகாத்தம் எண்ணூற்று

ஏழின்மேல், சடையன் வாழ்வு

நண்ணிய வெண்ணெய் நல்லூர்

தன்னிலே, கம்ப நாடன்

பண்ணிய இராம காதை,

பங்குனி, அந்த நாளில்,

கண்ணிய அரங்கர் முன்னே

கவி அரங் கேற்றினானே”

( சடையப்ப வள்ளல் சிறந்து வாழ்ந்த வெண்ணெய் நல்லூரிலே இருந்து கம்ப நாடன் எழுதிய ராமகாதை, எண்ணப்பட்ட நூற்றாண்டு எண்ணூற்றேழிலே , பங்குனி மாதம் ஹஸ்த நட்சத்திரம் நிறைந்த நாளில் அரங்கன் முன் அரங்கேறியது ).

சரி. ஒரு வள்ளல் உதவி செய்தார். கம்பன் பாடினான். இதில் என்ன செய்தி ?

கம்பன் சடையப்பரை  மறக்கவில்லை. மேலே சொன்னபடி பல இடங்களில் சடையப்பரைப் போற்றுகிறான். “நன்றி மறப்பது நன்றன்று ” என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க சடையப்பரை முடிந்தபோதெல்லாம் தன் கவிதையில் வாழ வைக்கிறான். முடிவாக, ராம ராவண யுத்தம் முடிந்து ராம பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. அப்பாட்டில் கம்பன் கூறுவதைக் கேளுங்கள் :

“அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள் ஏந்த,
பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற,
விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை
மரபுளோன் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி”

( ராம பட்டாபிஷேகத்தில், அனுமன் அரியணையைத் தாங்கினான்; அங்கதன் உடை வாள் ஏந்தி நின்றான்; பரதன் குடை பிடித்தான்;.. வெண்ணை நல்லூர்ச் சடையன் குலத்தில் தோன்றிய அவனது முன்னோர் ஒருவர் மணிமுடியை எடுத்துக் கொடுக்க, வசிஷ்டர் ராமனுக்கு முடிசூட்டினார் )

வட நாட்டில் அயோத்தியில் நடந்த பட்டாபிஷேகத்தில் வெண்ணை நல்லூர்ச் சடையப்ப வள்ளலின் முன்னோர் எப்படிச் சென்றனர் ? இப்படிப் பகுத்தறிவுடன் கேட்கலாம். ஆனால் கம்பனின் உள்ளத்தைப் பார்க்க வேண்டும் இதில். தன்னை வாழ வைத்த சடையப்பரையும், அவரது குலத்தையும் அவரது முன்னோர்களையும் தன் ஒரு வரியினால் இன்றளவும் வாழ வைத்து தன் நன்றிக்கடனைச் செலுத்தினான் கம்பன். நம் எல்லோருக்கும் வழி காட்டினான்.

அடுத்த பதிவில் “கம்பனுக்கு முன் ராமாயணம் தமிழகத்தில் இருந்ததா?” என்று பார்ப்போம்.