மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலோ ரயில் நிலையத்திலோ இறங்கி ‘ஸார்’ வீட்டுக்குப் போகணும்’ என்றால் வண்டிக்காரர்கள் மறு பேச்சு பேசாமல் உங்களை அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள். ஸார் வீட்டிற்குப் போகணும் என்றால் பேரம் கூட பேச மாட்டார்கள்.
ஸார் – அப்படித்தான் அவரை அழைப்போம். எங்கள் தமிழ் ஆசிரியர் அவர். சக ஆசிரியர்கள் கூட அவரை ‘ஸார்’ என்று தான் அழைப்பார்கள். ஏனோ அப்படி அமைந்துவிட்டது.
அவரது வகுப்பு வரும் நாளில் ரொம்பவும் சேட்டை செய்யும் ரங்கு கூட அமைதியாக இருப்பான். நெற்றியில் விபூதி இட்டுக்கோண்டு வருவான்.
கடைசியாக போன வருஷம் தான் அவரைப் பார்த்திருந்தேன். ஒவ்வொரு வருஷம் லீவில் இந்தியா வரும்போதும் அவரைப் பார்க்காமல் இருந்ததில்லை. நேற்று தான் லண்டனிலிருந்து வந்தேன். ஸாரைப் பார்க்க இன்று வந்துவிட்டேன்.
அவரிடம் பாடம் கேட்டது என்னவோ இரண்டு வருஷம் தான். 11, 12ம் வகுப்புக்கு மட்டும் அவர் வருவார். ஆனால் பள்ளி முடிந்து இந்த இருபது வருஷம் ஆன பின்னும் ‘ஸார்’ என்றால் என் நினைவில் அவர் மட்டுமே வருகிறார்.
அன்று ரங்கு ஏதோ சேட்டை செய்திருந்தான். ஸார் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கிளாஸ் முடிந்தவுடன் ரங்கு அழுதபடியே அவரின் பின்னால் சென்று மன்னிப்புக் கேட்டான். ரங்கு மன்னிப்பு கேட்டது அவன் வாழ் நாளில் அவர் ஒருவரிடம் தான் என்று நாங்கள் பேசிக்கொண்டோம்.
வகுப்பில் அவர் வந்தவுடன் எல்லாரும் எழுந்து நின்று ‘உலகம் யாவையும்..’ என்ற கம்பராமயண கடவுள் வாழ்த்துப் பாடல் பாட வேண்டும். பிறகு தான் வகுப்பு துவங்கும். ஆனால் பக்கத்துக் கிளாசில் ‘ஆய கலைகள்..’ என்று தொடங்கும் சரஸ்வதி பற்றிய கம்பன் பாடல் பாடச் சொல்வார். இது பற்றி நாங்கள் அவரிடமே கேட்டோம். பரம வைஷ்ணவரான அவர் சொன்ன பதில் எல்லாரையும் வாயடைக்கச் செய்தது. ‘இதோ பாருங்கோ, ‘ஆய கலைகள்..’ சரஸ்வதியப் பத்தி மட்டும் குறிப்பிட்டு இருக்கு. இந்த கிளாசுல 30 பேர் இருக்கிறீர்கள். உங்களோட காதர் பாட்சாவும் இருக்கான். அவனுக்கு ‘ஆய கலைகள்..’ பாடறது சிறிது சங்கடம். அவா சம்பிரதாயத்துல அல்லா ஒருத்தரத் தவிர வேற யாரையும் சேவிக்க மாட்டா. ‘உலகம் யாவையும்..’ பாட்டு பொதுவானது. கம்பன் எழுதினது தான். ஆனாலும் எந்தக் கடவுளையும் குறிப்பிடல்ல இல்லையா? பக்கத்து கிளாசுலே எல்லாரும் இந்துக்கள். அங்கே ‘ஆய கலைகள்..’ பாடறதுல பாதகம் இல்லை”, என்றார்.
மனிதர் இத்தனை உன்னிப்பானவரா என்று வியந்தோம்.
அவர் வகுப்பில் பாடம் நடத்தப்படுவது ஒரு 20 நிமிஷம் இருக்கும். மிச்ச 30 நிமிஷம் இலக்கிய உரை. கம்பன், வள்ளுவர், இளங்கோ, பிசிராந்தையார், நச்செள்ளையார் தொடங்கி பாரதியார் வரை எல்லாரும் வந்து சென்று விடுவார்கள். வகுப்பு முடிந்த பின்னும் ஒரு வித மயக்கத்தில் பலமுறை இருந்திருக்கிறேன். இவ்வளவு ஞானம் இருந்தும் இவர் ஏன் இன்னும் பள்ளியில் வேலை செய்கிறார் என்று. அவரிடமே ஒரு முறை கேட்டு விட்டேன். ‘சின்னப் பசங்கள்ளாம் அர்ஜுனன் மாதிரி. புத்தி தடுமாறுகிற வயசில் நல்ல விஷயங்களை அவர்கள் காதில் போட்டுவிட வேண்டும். விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தால் ஒரு ஆயிரம் விஷயத்தில் ஒரு அஞ்சு அவன் காதுக்குள்ளே போகும். ஒண்ணு ரெண்டு அவன் புத்தியை எட்டும். அவன் வாழ்க்கை சிறப்படையும். குறைந்த பட்சம் தப்பு செய்யாமல் இருப்பான். அதுக்குத்தான் பள்ளிக்கூடமே சரின்னு இருந்துட்டேன்”, என்று சொல்லிவிட்டு , ‘வள்ளுவர் என்ன சொல்றார் தெரியுமா கேள்வி ஞானம் பத்தி ?”, என்று தொடர்ந்தார்.
அவர் வகுப்பு பலருக்கு வாழ்க்கையை மாற்றி அமைக்க உதவியுள்ளது. சொர்ணலட்சுமி என்று ஒரு மாணவி. செட்டியார் வீட்டுப் பெண். நல்ல பெரிய இடம். ஆனால் திருமண வாழ்வு சரியாக இல்லை. சில முறை தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளாள். ஆனால் ஒவ்வொரு முறையும் ஸார் நடத்திய ‘அசோக வனத்தில் சீதை பட்ட கஷ்டங்கள்’ பற்றிய பாடம் நினைவுக்கு வந்து அவளைக் காப்பாற்றியுள்ளது. பாடத்தில் ஒன்று இரண்டு பாடல்கள் தான் இருக்கும். ஆனால் ஸார் தனது பாண்டித்யத்தால் கம்பன், வால்மீகி என்று பலரது பார்வையில் சீதை பட்ட துன்பங்களை எங்கள் கண் முன் நிறுத்தியுள்ளார்.
நன்றாக நினைவு உள்ளது. கண்ணகி பற்றிய அவரது ஒரு வகுப்பு. ‘தேரா மன்னா செப்புவது உடையேன்..’ என்று சிலப்பதிகாரப் பாடல் பாடி அவர் வகுப்பு நடத்திய போது எங்கள் கண் முன் கண்ணகி நிற்பதைக் கண்டோம். அவ்வளவு உணர்ச்சியுடன் நாங்கள் ஒரு பாடத்தைக் கவனித்ததில்லை.
அவருக்கு இருந்த ஆழ்ந்த படிப்பு அவருக்கு வாழ்வின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொடுக்கவில்லை. அவர் உதவித் தலைமை ஆசிரியராகவே கடைசியில் ஓய்வு பெற்றார் என்று நினைக்கிறேன். நன்றாக நினவு இருக்கிறது. அவரை விட அனுபவம் குறைவான ஒரு ஆசிரியரைத் தலைமை ஆசிரியராகப் பணி அமர்த்தியது அரசு. அவர் கண்டு கொள்ளவில்லை.
என் தந்தை இது பற்றி அவரிடன் கேட்ட போது, “இப்போ எச்.எம். பதவி வராம இருக்கறதே நல்லது. ‘அஷ்டப்பிரபந்தத்தில் ஆழ்வார்களின் தாக்கம்’ என்று ஒரு டாக்டரேட் பண்ணிண்டு இருக்கேன். அதுக்கு இது இடைஞ்சலா இருக்கும்’, என்று கூறியுள்ளார். ஓய்வு பெறுவதற்கு ஓராண்டு முன்னர் டாக்டரேட் முடித்தார். ‘மனுஷன் கீழே விழற வரைக்கும் படிச்சுண்டே இருக்கணும்’ என்று அடிக்கடி கூறுவார்.
ஒரு சீசனில் ‘துளசிதாஸ் ராமாயணம்’ புரிய வேண்டும் என்பதற்காக 50 வயதில் இந்தி கற்றுக் கொண்டார். ஆனாலும் அவரது இளமைப் பருவம் குறித்து எனக்குத் தெரியாமலேயே இருந்தது.
மெடிக்கல் காலேஜ் சேர்ந்த போது அவரிடம் சொல்லிவரச் சென்றேன். ரொம்பவும் சந்தோஷப்பட்டார். ‘படிச்சுட்டு நம்ம ஊருக்கே டாக்டரா வந்துடுப்பா’ என்றார் வெகுளியாக.
95-ல் மும்பையில் எனக்கு ஒரு மருத்துவமனையில் வேலை கிடைத்தது. அப்போது பார்த்து அவர் ஒய்வு பெற்று ஒரு மார்கழி மாதம் மும்பைக்கு ‘திருப்பாவை’ பற்றி உபன்யாசம் செய்ய வந்திருந்தார். ‘தனியா இருக்கேன். நீ முடிஞ்சா நான் இங்கே இருக்கற வரைக்கும் என்னோடயே தங்கிக்கோயேன்’ என்று கேட்டார். அந்த வாய்ப்பு எனக்குப் பல படிப்பினைகளைத் தரப்போவதை நான் உணர்ந்திருக்கவில்லை.
விடியற்காலை அவரது திருப்பாவை’ உபன்யாசம். வழக்கம் போல ஆண்டாள் முதல் அனைத்து ஆழ்வார்களும், சங்கப் புலவர்களும், வள்ளுவரும், பாரதியும், நாராயண பட்டத்ரீயும் அவரது நாவில் வந்து வெளுத்து வாங்கினர். மக்கள் அந்த மாதிரி மழையில் நனைந்தது இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
ஒரு நாள் இரவு அவருடன் அறையில் தங்கியிருந்த போது தான் அவரது இளமைப் பருவம் பற்றிப் பேசினார்.
“என்ன எப்பவும் போல ஒரு ஏழைப் பிராம்மணக் குடும்பம். அப்பா வேத பாராயணம். சொற்ப வருமானம். ரெண்டு தம்பி ஒரு தங்கை. ஒரு பருவத்துக்கு அப்புறம் தருமபுரம் தமிழ்க் கல்லூரில ‘புலவர்’ பட்டத்துக்காக படிச்சேன். அப்பா தவறிட்டார். ஆதீனத்துல தங்கறதுக்குக் காசு கிடையாது. சாப்பாடும் போட்டா. தமிழ் படிச்சேன். பல நேரங்கள்ளே சமயல்காரன் சாப்பாடு இல்லேன்னுடுவான். ஆதீனக் குளத்துத் தண்ணீர் தான் அன்னிக்கி.
பசங்க ஒண்ணா இருந்தா படிக்க முடியாதுன்னு அரை மைல் தள்ளி ஒரு அரச மரம் அடியிலே படிச்சிண்டிருப்பேன். வந்து பார்த்தா சாப்பாடு இருக்காது. வடிச்ச கஞ்சி மட்டும் இருக்கும். அன்னிக்கி அது தான் ஆகாரம். தம்பி முனிசிபல் பள்ளியில் ஹாஸ்டலில் படித்துக்கொண்டிருந்தான். வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று ஹாஸ்டலில் போடும் பொங்கலும் வடையும் கொண்டுவந்து தருவான். தான் சாப்பிட மாட்டான். அவனும் வாரச் சாப்பாடுதான் சாப்பிட்டுக்கொண்டிருந்தான் ( வாரம் முழுவதும் ஒவ்வொருவர் வீட்டில் சாப்பிடுவது, ஹாஸ்டலில் தங்கிக்கொண்டு படிப்பது ).
ஆனால் எனக்கு வாழ்க்கை குடுத்தது ஆதீன காலேஜ் தான். படிச்சு பரீட்சை எழுதினேன். மாகாணத்துலே முதல்லே வந்துட்டேன்ன்னு சொன்னா. நான் நம்பல்லே. அப்புறம் பேப்பர்லே வந்தது. அப்புறம் வாத்தியார் வேலை. பிறகு பி.ஏ., எம்.ஏ, அப்புறம் பி.எச்.டின்னு போயாச்சு.
ஆனா சரஸ்வதி உன் நாக்குலே இருக்காடா என்று அகோர தீக்ஷிதர் சொன்னார். அது போலவே எது படிச்சாலும் ஒரு தடவையிலேயே பதிஞ்சுது. நன்னா பேசவும் வந்துது.
ஒரு தடவை ஸ்கூல் லீவு. மத்தியானம் கொஞ்சம் கண்ணை மூடிண்டிருந்தேன். ஒரு குழந்தை வந்து வந்து ‘நாக்கை நீட்டு, நாக்கை நீட்டுன்னு சொல்றமாதிரியே இருந்தது. குழந்தை தலைலே மயில் தோகை வெச்சிண்டிருந்தது. கொஞ்ச நாள் கழிச்சு ஒரு மலையாள நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன். சுவற்றில் ஒரு படம் இருந்தது. குருவாயூரப்பன் அப்பிடின்னு சொன்னார். குழந்தை முகம் அப்படியே. அப்பத்தான் குருவாயூரப்பன்னு ஒரு தெய்வம் இருக்கறதே தெரியும்.
அந்த வாரமே குருவாயூர் போனேன். முதல் முறையா ‘நாராயணீயம்’ பாராயணம் பண்ணினேன். இது ஏதோ தெய்வ சங்கல்பம்னு தோணித்து. அதுலேர்ந்து இன்னிக்கி வரை சுமார் ஒரு ஆயிரம் முறை பாராயணம் பண்ணியிருப்பேன்”, என்றார். உடல் நிலை சரி இல்லாதவர்கள் வீட்டுக்குப் போய் நாராயணீயம் பாராயணம் செய்வார். அவர்கள் உடல் நலமடைவதை நேரில் கண்டுள்ளேன்.
அது மட்டும் அல்ல, அவருக்கு வால்மீகி ராமாயணம், கம்பன், துளசி ராமாயணம் என்று பலதும் தெரிந்திருந்தது. ஊரில் எந்தப் பட்டி மன்றம் என்றாலும் இவரைத்தன் நடுவராகப் போடுவார்கள். கம்பனில் ஆழ்ந்த ஆர்வம் இருந்ததால் தான் பிறந்த தேரழுந்தூரில் கம்பனுக்குக் கோட்டம் கட்ட வேண்டும் என்று அரசிடம் போராடி அதனைக் கட்ட வைத்தார்.
வருடம் தோறும் அந்த ஊரில் கம்பன் விழா நடத்தி மு.மு.இஸ்மாயில், கீரன், செல்வகணபதி முதலியோரை அழைத்துப் பட்டிமன்றம் நடத்தினார். கீரனும் இவரும் ஆதீனக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள்.
மேலும் தொடர்ந்தார்,” என்ன, அங்கீகாரம் இல்லை. வருஷத்துக்கு ஒரு புஸ்தகம் போடுவேன். எல்லாம் கம்பன் பத்தித் தான். போட்ட புஸ்தகத்தை எடுத்துண்டு நான் உபன்யாசம் பண்ற எடத்துலே எல்லாம் தூக்கிண்டு போவேன். ஆனா விக்காது. போட்ட முதல் நஷ்டம் தான். நாம தெரிஞ்சுண்டது நாலு பேருக்கு போய்ச் சேரணும்னு ரொம்ப கஷ்டப்பட்டேன். இன்னும் பட்டுண்டிருக்கேன். இப்போ ரிடையர் ஆகியாச்சு. இப்பவும் புஸ்தகத்தைத் தூக்கிண்டு போறேன். எனக்குப் பணம் வேண்டாம். புஸ்தகம் விக்கற பணத்துலே 75 % தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவில் திருப்பணிக்குன்னு வெச்சிண்டிருக்கேன்”, என்று சொல்லி சற்று நிறுத்தினார்.
புஸ்தகங்கள் அனைத்தும் ஆராய்ச்சி நூல்கள். ‘பரகாலன் கண்ட பரிமள அரங்கன்’, ‘அருள்மாரி கண்ட ஆமருவியப்பன்’, ‘வைணவம் தந்த வளம்’ – என்று பல வகையான ஆராய்ச்சி நூல்கள். ஆனால் வாழ்வின் எல்லாத் தரப்பும் பரிபூரணமாக வணிக மயமான நிலையில், மக்களைச் சொல்லியும் குற்றமில்லை. வெறும் பணத்தை மட்டுமே தேடிக்கொண்டிருக்கும் அவர்களால் இந்த ஆய்வுகளைப் படிக்க முடியாது தான். அதனால் புஸ்தகங்களைக் கொள்வார் இல்லை. இருந்தாலும் விடாது அவர் புஸ்தகங்களுடன் உபன்யாசம் செய்துகொண்டிருந்தார்.
ஒருமுறை ‘தமிழ் சாரல்’ என்று ஒரு அமைப்பு அவரை ‘பரமக்குடி’ வரச்சொல்லி அழைத்திருந்தது. அன்று அமாவாசை. முந்தைய நாள் இரவே கிளம்பி பரமக்குடி சென்று சேர்ந்தார். கூடவே கட்டுக் கட்டாகப் புஸ்தகம். ஒரு வழியாக ‘தமிழ் சாரல்’ எங்கே இருக்கிறது என்று தேடி அலைந்துள்ளார். அமாவாசை என்பதால் குளித்து முன்னோர் கடன் ( தர்ப்பணம் ) செய்யாமல் எதுவும் சாப்பிடுவதில்லை. நேரம் மதியம் ஆகிவிட்டது. கடைசியாக வீட்டைக் கண்டுபிடித்தார். அது ஒரு ஒதுக்குப் புறமான ஓட்டு வீடு. வாசலில் ‘தமிழ் சாரல்’ என்று ஒரு ஒற்றைப் பலகை தொங்கியது. உள்ளே இருந்து கைலி கட்டிக்கொண்டு ஒரு நடுத்தர வயது ஆள் ‘என்னா வேணும்?’ என்று கேட்டபடி வந்துள்ளார். விபரம் சொன்னதும், ‘ஓ, நீங்களா ? ஒரு அரை மணி இருங்க. வரேன்’, என்று சொல்லிச் சென்றார். பின்னர் வந்து ‘வாங்க, போகலாம்’ என்று கூட்டம் ஏற்பாடு ஆகியிருந்த இடத்திற்குக் கூட்டிச் சென்றார். கடற்கரை ஓரம் வெற்றுத் திடல். வெயில் தகிக்கிறது.
‘இதான் சாமி, இங்கேதான் பேசப் போறீங்க. அதோ பாருங்க ஸ்பீக்கர் கட்றான் பாருங்க”, என்றார். சுற்று முற்றும் யாருமே இல்லை. தர்ப்பணம் செய்யவில்லை. சாப்பிடவில்லை. அப்படியே மாலை ஆகியுள்ளது. கூட்டம் துவங்க வேண்டிய நேரம். எண்ணி நான்கு பேர் வந்துள்ளனர். ‘ஐயா, நேரம் போகப் போக ஆள் வரும்’ என்று விழா நடத்துபவர் கூறியுள்ளார். ஸாருக்கு மயக்கமே வந்துவிடும் போல் இருந்துள்ளது. நாள் முழுவதும் சாப்பிடாததால் தலை சுற்றியுள்ளது. அரை மணி நேரம் கழித்து இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டுவிட்டு அடுத்த பஸ் ஏறி மறுநாள் ஊர் வந்து சேர்ந்துள்ளார். சரியாக 36 மணி நேரம் பட்டினி. இப்படியாகிலும் கம்பன் புகழ் பரப்ப அலைய வேண்டுமா என்று கேட்டேன். ‘ஏதோ ‘தமிழ்ச் சாரல்’னு பேர் சொன்னான். சரி ஏதோ இலக்கியத் தொடர்பா இருக்கும்னு நினைச்சு அமாவாசைன்னு கூட பார்க்காம ரொம்ப கஷ்டப்பட்டுப் போனேன். சாப்பாடு இல்லே. ‘சரி, உங்கடவங்க இங்கே இருக்காங்கன்னு சொல்லி சந்த்ரஹாசன்னு ஒருத்தர் வீட்டுக்குக் அழைச்சுண்டு போறேன்னான். வேண்டாம்ப்பா, ஆளை விடுன்னு சொல்லி பஸ் பிடிச்சு வந்துட்டேன். புஸ்தகம் போட்டாச்சு நாலு பேர் கிட்டே போய்ச் சேர வேண்டாமா?’, என்றார்.
இது கூட பரவாயில்லை. தமிழ்ப் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது. நல்ல தமிழ்ப் பேராசிரியர்கள் தேவைப்பட்டுள்ளனர். வைணவம் குறித்து குறிப்புக்கள் பெற இவரிடம் வந்த பலர் நல்ல நிலையில் இருந்தாலும் இவரது பெயர் அனுப்பபட்டபோது முன் எடுத்துச் செல்லவில்லை. பல காரணங்கள் கூறினார்கள். உண்மையான காரணம் இவர் சார்ந்த சாதி என்று அவர் அறிந்திருந்தார். சாதி காரணமாகத் தமிழ் நாட்டில் பல வாய்ப்புகள் இவருக்கு அளிக்கப்படவில்லை.
தமிழ் நாட்டில் மட்டும் தான் அப்படி. பரோடா, மைசூர், நாக்பூர், தில்லி என்று பல இடங்களில் இவருக்கு நல்ல மரியாதை இருந்தது. இவரது உபன்யாசத்திற்கு தமிழ் நாடு சார்ந்த மத்திய அரசு அதிகாரிகள் தவறாமல் வருவார்கள்.
‘ஜாதியால கௌவரம் கிடைக்கல்லேன்னு சொன்னா அது சரியா இருக்காது. ஜாதிக்குள்ளேயும் அப்பிடித்தான். அதல்லாம் உள்ளே போனா ரொம்ப நன்னா இருக்காது’, என்று நிறுத்திவிட்டார்.
வைணவர்களுக்குள் இருந்த தென்கலை, வடகலை பேதத்தைத்தான் குறிப்பிடுகிறார் என்று எனக்குத் தெரியும். இவர் எழுதிய ஒரு புஸ்தகத்தை ஒருமுறை காஞ்சிப் பெரியவர் முழுவதும் படித்து ஆசீர்வதித்தார் என்று கூறி ஆனந்தப்பட்டார்.
காஞ்சி ஆச்சாரியார் அந்த நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளதால் அதில் குற்றம் கண்ட சில பெரியவர்கள் பற்றிக் குறிப்பிட்டார்.
‘இவா யாருக்குமே ஆன்மீகம்னா என்னன்னே தெரியல்ல’, என்று மனம் வருந்திப் பேசினார். “ராமாயணம் பத்தி பேசும்போது எதுக்கு ‘நாராயணீயம்’ எல்லாம் போகணும்னு கேக்கறா ? குருவாயூர் பத்திப் பேசக்கூடாதாம். ஏன்னா அது ஆழ்வார் பாடினது இல்லையாம். இங்கே ஆழ்வார் பாடின கோவில்கள் ஒரு விளக்கு ஏத்தற வசதி கூட இல்லாம இருக்கு. அங்க குருவாயூரப்பனை மலையாளம் பேசறவா எல்லாம் எப்படி கொண்டாடறா தெரியுமா ? இங்கே ‘ராமானுச தயா பாத்ரம்’ பாடினா தென்கலை சண்டைக்கு வரான். ‘ஸ்ரீசைலேச தயாபாத்ரம்’ பாடினா வடகலை சண்டைக்கு வரான். இவனுன்கள்ளாம் கோவிலுக்கு வர்ரதே சண்டை போடத்தான் போல இருக்கு. ஒரே துவேஷம். அப்பிடி இருக்கலாமாம் ஆனா குருவாயூரப்பன் பத்திப் பேசக்கூடாதாம்.
இன்னொண்ணு தெரியுமா ? திருக்குறள் பரம வைஷ்ணவமான புஸ்தகம். அதை நம்மவா படிக்கறதே இல்லை. நாஸ்தீகாள்ளாம் அது பத்திப் பேசறதால அதுவும் நாஸ்தீகப் புஸ்தகம்னு நினைச்சுக்கறா. வள்ளுவர் சொன்னதை விட யாரும் வைஷ்ணவம் பேசல்லே’ என்று திருக்குறள் பற்றி புதிய பரிணாமம் கொடுத்தார். உபன்யாசங்களில் அடிக்கடி திருக்குறள் வரும். தமிழ் ஆசிரியர் அல்லவா ? சரளமாக வரும்.
மனித வாழ்வின் பல அர்த்தமற்ற செயல்களை ஆழ்வார் பாசுரங்கள் கொண்டு தீர்க்க முனைந்தார். அதனால் பல பெரிய புள்ளிகளின் எதிர்ப்புக்கு ஆளானார். தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிகமாக ஆழ்வார் பாசுரங்களையும், திருக்குறளையும் பயன் படுத்தியதால் சம்பிரதாயம் சார்ந்த வைணவக் குழுக்களில் புறக்கணிக்கப்பட்டார். தமிழுக்கு இவ்வளவு செய்கிறாரே என்று தமிழ் அமைப்புக்கள் போற்றியதா என்றால் அங்கே அவர்கள் ஜாதி பார்த்தார்கள். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல் ஆனது அவரது கதை.
1992-ம் ஆண்டு எப்படியோ ‘நல்லாசிரியர்’ விருது கொடுத்துவிட்டார்கள். அவருக்கே ஆச்சரியம் தான்.
அந்த வருடம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் தன் மகனுக்கு ‘தமிழ்ச் சான்றோருக்கான’ இட ஒதுக்கீட்டில் பொறியியல் இடம் கிடைக்க வேண்டி அவரும் அவரது தம்பியும் இனி ஏறாத படியில்லை. கடைசிவரை இழுத்தடித்து இறுதியில் ரூ.25,000 கேட்டார்கள். அவரிடம் அவ்வளவு பணம் இல்லை என்பதை விட தான் அவமானப்படுத்தப்பட்டதாகவே உணர்ந்தார்.
அந்த இடம் அரசியல் பின்புலம் உள்ள ஒரு ‘தமிழ்’ அறிஞர்’ பேரனுக்குக் கொடுக்கப்பட்டது என்பது வேறு கதை.
அவரது உபன்யாசங்கள் எங்கு நடந்தாலும் ஏதாவது புதுமையாகச் சொல்வார். சென்னையில் ஒருமுறை ‘குரு’ என்ற பதத்திற்கு விளக்கம் அளித்தார். குரு என்பவன் நம் உடலின் இடைப் பகுதி போன்றவர். இடுப்புக்கு மேல் பரமாத்மா; இடுப்புக்கு கீழே உள்ளது ஜீவாத்மா; ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைப்பது இடைப் பகுதி; குரு என்பவர் அப்படி இடை போன்றவர்கள்; கீதையை உபதேசித்த கண்ணனும் ஒரு குருவே; அவனை ‘கீதாசார்யன்’ என்று அழைக்கிறோம் என்று கூறி ஒரு நிமிடம் நிறுத்தினார்.
‘இதற்கு என்ன ஆதாரம் என்று நீங்கள் கேட்கலாம். கண்ணன் இடையர் குலம். இங்கே இடையர் என்றால் சாதி அல்ல; குரு, ஆச்சாரியன் என்ற அளவில் பார்க்கவேண்டும். இதற்கு சமீப கால உதாரணம் கூட உண்டு. ‘எங்கிருந்தோ வந்தான் இடை சாதி நான் என்றான்’ என்று பாரதி இந்த நூற்றாண்டில் இதையே கூறினார்’, என்று பேசினார். கூட்டம் எழுந்து நின்று கை தட்டியது.
மும்பையில் மாதுங்காவில் ஒரு சிறந்த சொற்பொழிவு. ‘பகுத்தறிவு இல்லாதவர்கள்’ பற்றி ஒரு வித்தியாசமான விளக்கம் கொடுத்தார். ‘உலக வாழ்வு சார்ந்து பொருள் தேடும் முயற்சிக்கு மட்டுமே தனது அறிவைப் பகுத்து அளித்துவிட்டு ஆன்மீகத் தேடலுக்குத் தேவையான அறிவில்லாதவன் எவனோ அவனே பகுத்தறிவில்லாதவன்’, என்று கூறி அசத்தினார். அப்போது தான் ‘பகுத்தறிவு’ பற்றி சில தமிழகத் தலைவர்கள் வாய் கிழிந்து கொட்டியிருந்தார்கள்.
அதே உபன்யாசத்தில் ஆண்டாள் திருப்பாவை பற்றிய ஒரு பேச்சு வந்தது. ‘மார்கழித் திங்கள்..’ என்று தொடங்கும் பாடல் பற்றிப் பேசத் துவங்கினார். அதில் ‘பறை’ என்ற ஒரு சொல் வந்தது. அதற்கான விளக்கம், அந்தச் சொல் திருப்பாவையில் வேறு எங்கெல்லாம் வருகிறது, வேறு எந்த ஆழ்வார்களெல்லாம் அந்தச் சொல்லைப் பயன் படுத்தியுள்ளார்கள், அவற்றின் பொருள், ஒவ்வொன்றின் வரலாறு என்று பல விஷயங்கள். கூட்டம் வாய் பிளந்து ஆச்சரியத்தில் அமர்ந்திருந்தது.
ஒருமுறை பள்ளியில் கவிஞர் கண்ணதாசனுக்குப் பாராட்டுவிழா நடந்தது. அதில் இவர் பேசியுள்ளார். ‘வீடு வரை உறவு’ பாடல் பட்டினத்தார் பாடல் தழுவிக் கவிஞர் எளிமையாகப் பாடினார் என்று பேசினார். கூட்டத்தில் சலசலப்பு. ஏற்புரை ஆற்றிய கண்ணதாசன், ‘இதுவரை நான் பட்டினத்தார் பாடலை அடியொட்டியே எழுதினேன் என்று யாருக்கும் தெரியாது. இம்மாதிரி ஒரு ஆசிரியர் உங்கள் பள்ளியில் இருப்பது பள்ளிக்குப் பெருமை’ என்று பாராட்டியுள்ளார்.
இப்படிப் பல சம்பவங்கள்.
அடுத்த முறை அவரை நான் சந்தித்தபோது,” என்னப்பா நீ லண்டன்லேயே வேலைல இருக்கியாமே? ஏன் இங்கே மாயவரத்துல எல்லாருக்கும் உடம்பு நன்னா இருக்கா?” என்று கேட்டது ரொம்ப நாள் மனதில் இருந்தது. மாயவரத்தில்
ஒரு கிளினிக் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
வேலை, திருமணம், குழந்தைகள் என்று சில வருடங்கள் அவருடன் தொடர்பில் இல்லை.
போன வருடம் வந்திருந்த போது அவருக்குப் பக்கவாதம் வந்திருந்தது. வைத்தியம் செய்துகொண்டிருந்தார்கள். நல்ல முன்னேற்றம் தெரிவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஆனால் அவரால் வாய் பேச முடியவில்லை. வலது கை வர வில்லை. பதினெட்டு நூல்கள் எழுதிய கை எழுதவில்லை; பல பல்கலைக்கழகங்களில், ஆன்மீக மேடைகளில் இறைவன் புகழையும் தமிழின் அருமையையும் பேசிய நாக்கு பேசவில்லை.
அப்போதுதான் அவர் ஐந்து வருடம் முயன்று ஒரு மகத்தான நூல் ஒன்று எழுதியிருந்தார். ‘திருமால் திகழும் 108 திவ்யதேசங்கள்’ என்று 108 திவ்யதேசம் பற்றிய ஆழ்வார்கள் பாடல்கள் கொண்ட ஆய்வு நூல். பெரு முயற்சி செய்து எழுதியிருந்தார். ஆனால் பதிப்பாளர் வெறும் 15,000 ரூபாய்க்கு காப்புரிமையை எழுதி வாங்கிக்கொண்டுவிட்டார் என்று தெரிந்து கொண்டேன். ‘பெருமாள் என்ன கொடுக்கறாரோ அதை வாங்கிக்க வேண்டியது தான்’ என்று தனது நிலைப்பட்டைக் கூறியிருந்தார் என்று தெரிந்துகொண்டேன். இதைப்பற்றி அவரிடம் கேட்டேன். புரிந்துகொண்டார். இடது கையை ஆட்டி ,’இது ஒரு விஷயமே இல்லை’ என்பது போல் ஏதோ சொன்னார்.
அந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு இவரது தம்பி கடும் முயற்சி செய்து காஞ்சீபுரத்தில் ஏற்பாடாகியிருந்தது. ‘ஹிந்து நாளிதழில்’ அழைப்பெல்லாம் கூட வந்து விட்டது. விழாவிற்கு இரண்டு நாள் முன்பு பக்கவாதம் ஏற்பட்டு அப்பொல்லொ மருத்துவமனியில் சேர்க்கப்பட்டார். விழா நடக்கவில்லை.
அதன் பிறகு இப்போதுதான் பார்க்க வருகிறேன்.
வீட்டின் உள்ளே நுழைந்த என்னை அவரது மகன் வரவேற்றார். ‘ஸார் எப்படி இருக்கார்?’ என்று கேட்டேன்.
‘சந்தோஷமாத்தான் இருப்பார்னு நினைக்கிறேன். ரூம்லெ போய்ப் பாருங்கோ’, என்றார் அவர் மகன்.
உள்ளே சென்றேன்.
உண்மை தான். ஸார் சந்தோஷமாகவே தெரிந்தார்.
சிரித்தபடியே இருந்தார் மாலை போட்ட படத்தில்.
இப்போதெல்லாம் மயிலாடுதுறையில் ‘ஸார்’ என்றால் வண்டிக்காரர்களுக்குத் தெரிவதில்லை.