இராமானுசர் – ஒரு செய்தி

ராமானுஜரைப்பற்றி திரு.கருணாநிதி வசனம் எழுதி ஒரு திரைக் காவியம் வர இருக்கிறது. என்ன செய்வது ? மாநில முதல்வராக இருந்த போதே திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் இவர். இப்போது வேறு வேலை ஒன்றும் இல்லை. குடும்பத்தைப் பார்க்கலாம் என்றால் ஒரே குளறுபடி. வீட்டின் ஒவ்வொரு அங்கத்தினரும் நவக்கிரஹம் போல் ஒவ்வொரு திசை நோக்கி இருக்கின்றனர்.
என்ன தான் செய்வார் மனுஷன் ? கதை எழுதத் துவங்கிவிட்டார்.
விரைவில் நல்ல நகைச்சுவையுடன் கூடிய மெகா தொடர் காணீர், காணீர், காணீர்.

இதை சிலர் எதிர்க்கின்றனர். அதுதான் புரியவில்லை. இராமானுசரைப் பற்றி திரு.கருணாநிதி எழுதினால் என்ன ? ‘நான் இராமானுசரின் ஆன்மீகத்தையும், அவரது இறைக் கொள்கைகளையும் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் பிராமண வகுப்பினராக இருந்தாலும் அவரது சமூக நீதிக் கொள்கைகள் எனக்கு ஏற்புடையவையே’, என்றெல்லாம் கூறியுள்ளார் திரு.கருணாநிதி. நல்ல நகைச்சுவை உணர்வுடன் பேசக்கூடியவர் அவர். அவரது அச்சுவையை இராமானுசர் பற்றிய அவரது எழுத்தில் விரைவில் காணலாம்.

அடுத்த ஆண்டு வெளிவர இருக்கும் எனது ‘நான் இராமானுசன்’ நூலிற்கு திரு.கருணாநிதியின் இந்த வசன நாடகம் ஒரு நல்ல விளம்பரமாக அமையும் என்று எண்ணுகிறேன். இரண்டையும் ஒப்பீடு செய்ய ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் நினைக்கிறேன்.

இறை அருள் இருப்பின் நூல் வெளி வரும்.

முற்போக்கு வியாதிகள் கவனத்திற்கு..

டி.ஸி.எஸ். நிறுவன பெண் ஊழியர் பாலியல் வன்முறையில் இறந்துள்ளார். சில மிருகங்கள் செய்துள்ள அட்டூழியம் இது.

  1. இந்த மிருகங்களுக்கு மரண தண்டனை விதித்தால் அது நிறைவேற்றப்பட வேண்டுமா கூடாதா ?
  2. இந்த மிருகங்களுக்கு மனித உரிமைகள் உண்டா இல்லையா ?
  3. இவர்களின் சமுதாய, பொருளாதாரப் பின்னணியைப் பார்த்துப் பின்னரே தான் அவர்களை தண்டிக்க வேண்டுமா ?
  4. மென்பொருள் எழுதும் அமெரிக்க ஆதிக்கம் உள்ள ஒரு நிறுவனத்தில் பணி புரிந்ததால் அந்தப் பெண்ணிற்கு வாழ உரிமை கிடையாதா ? கம்ரேடுகள் என்ன சொல்கிறார்கள் ?
  5. அருந்ததி ராய், ஞானி, ராம்சந்திர குஹா, கருணாநிதி, ‘பேராசிரியர்’ கனிமொழி, என்.ராம் போன்ற தலை சிறந்த முற்போக்கு ‘சிந்தனையாளர்கள்’ என்ன திருவாய் மலர்ந்து அருள்கிறார்கள் ? குற்றவாளிகளைத் தண்டிக்கலாமா கூடாதா ?

வழக்கம் போல் வாய் மூடி மௌனியாக இருக்க உங்களுக்கு லெனின், ஸ்டாலின், மாவோ, சே குவேரா முதலிய தெய்வங்கள் அருள் புரிய வேண்டுகிறேன்.

ராவணன் – சில கேள்விகள்

இலங்கையில் சீதைக்குக் கோவில் கட்ட பாரதீய ஜனதா கேட்டுள்ளது.( அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடித்து விட்டார்கள் அதனால் சீதைக்குக் கோவில் இலங்கையில் ). இந்த சீதைக் கோவில் வந்தாலும் வந்துவிடும் ஆனால் ராமர் கோவிலுக்கு “மதச்சார்ற்ற” முற்போக்கு மாந்தர் ( போலிகள் என்று படிக்கவும் ) எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.

அது ஒரு புறம். சீதை கோவிலுக்கு முன் இலங்கையில் ராவணனுக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று “ராவண பாலய” என்ற பௌத்த இயக்கம் கேட்டுள்ளது. அதுவும் இந்தியா கட்டித் தர வேண்டுமாம். ராவணன் இலங்கையின் நாயகனாம். அதனால் அவனுக்குக் கோவில் வேண்டுமாம்.

ராவணன் உண்மையில் நல்லவன் தான். சாம வேதத்தில் ஒரு பெரிய பண்டிதன். சிவ பெருமான் இவன் சாம வேதம் இசைத்தால் தன் நடனத்தை மறந்து கேட்பான் என்று இதிஹாசம் கூறுகிறது.

அதுவும் தவிர அவன் பெரும் போராளி. “வாரணம் பொருத மார்பன்” என்று கம்பர் அவனை வருணிக்கிறார். ( வாரணம் – யானை ).

இந்த ராவண கோவில் கோரிக்கை கவனிக்கப் பட வேண்டியது.

  • கடவுள் இல்லை என்று கூறும் தமிழ்த் தலைவர்கள் தாங்கள் ராவணன் இனம் என்று கூறுவர். ஆரியனான ராமன் திராவிடனான ராவணனை வென்றது ஆரிய ஆதிக்க வெறி என்று பகுத்தறிவு பகருவர். ராவணன் குழுமம் என்று தமிழ் நாட்டில் ஒரு கூட்டம் உள்ளது. இந்தத் திராவிடத் தமிழ்த் தலைவர்கள் ராவண கோவிலுக்கு என்ன சொல்லப் போகிறார்கள் என்று கவனிப்பது நல்ல  நகைச்சுவையாக இருக்கும்.
  • ராவணன்  புலஸ்திய முனிவரின் மகன். எனவே அவன் அந்தணன். சாம வேதத்தில் தேர்ந்தவன். இவனத் தங்கள் முன்னோர் என்று கூறும் தி.க. முதலிய “பகுத்தறிவு” சிங்கங்கள், தாங்கள் அந்தண மரபினர் என்று கூறுவரா?  ( ராமன் அந்தணன் அல்லன் )
  • ராமாயணம் பொய், ராமன் கடவுள் இல்லை, ராமன் எந்தக் கல்லூரியில் படித்தான் என்று கேட்ட “பண்பாளர்கள்”, தங்களை ராவண இனம் என்று கூறுவது பகுத்தறிவில் எந்தக் காண்டத்தில் பொருந்தும் ?
  • ராமாயணம் இல்லை அது பொய். ராமன் இல்லை அவன் கட்டுக்கதை. ஆனால் ராவணன் உண்மை. நாங்கள் அவனது இனம் என்பது தற்போது வடிவேலு காமெடியை விட நல்ல தமாஷ்.
  • சிதம்பம், ஸ்ரீரங்கம் கோவிலை உடைக்க வேண்டும் என்று முழங்கிய பகுத்தறிவுப் பகலவன்கள் ராவணனுக்குக் கோவில் கட்டுவதை வரவேற்பார்களா ? அதற்கு இந்திய அரசு பணம் செலவிடும் பட்சத்தில், ராமர் பாலம் ராமர் கட்டியது தான் என்று ஆகாதா ? அப்போது “பகுத்தறி”வின்  நிலை என்ன ?

இப்படியெல்லாம் லாஜிக் கேள்விகள் கேட்காமல் “உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக” மானாட மயிலாட கண்டு தமிழ் வளர்ப்போம்.

பகுத்தறிவு பொங்கி வழிந்தது

புதிய போப் தேர்வு குறித்து கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் அவர் வாழ்த்தியுள்ளார். சகுனமே சரி இல்லையே. போப்பை ஆண்டவர் ரட்சிக்கட்டும். அது போகட்டும். பகுத்தறிவுப்படி கடவுள் தான் கிடையாதே, போப் வந்தால் இவருக்கு என்ன ? போனால் இவருக்கு என்ன ? ஓஹோ, ஹிந்துக்களுக்குத்தான் கடவுள் கிடையாதோ! கிறிஸ்தவர்களுக்கு கடவுள் உண்டோ! அதானே பகுத்தறிவு!

இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்

Image

பெயர்                           :  மு.கருணாநிதி

வயது                           :  ஓய்வு பெரும் வயது அல்ல ( இந்திய அரசியலில்)

தொழில்                      : கதை எழுதுவது (தேர்தல் அறிக்கை என்றும் கூறலாம்)

உப தொழில்               : போராட்டம் நடத்துவது

தினமும் செய்வது    : பிள்ளைகளுக்குள் சண்டை விலக்கல்

பொழுதுபோக்கு        : அவ்வப்போது முதலமைச்சராக இருப்பது

விரும்பும்

பொழுதுபோக்கு       : பொதுக்குழு கூட்டுவது

வாழ்நாள் சாதனை  : குடும்பப் பராமரிப்பு

சமீப சாதனை           : தமிழ் ஈழ ஆதரவு (சிரிப்பு வராமலே)

வாழ்நாள் தமாஷ்     : 15 நிமிட உண்ணாவிரதம்

மிகச்சிறந்த  தமாஷ் : தனித் தமிழ் நாடு அடைந்தது

நல்லா மனிதர். குடும்பப் பொறுப்புள்ளவர். குடும்பத்தினர் சண்டை போடாமல் பார்த்துக்கொள்ள பல அரசியல் போராட்டங்கள் நடத்துவார்.தமிழ் நாட்டின் பிரச்சினைகள் தீர கடிதம் எழுதியே சாதனை படைத்துள்ளார். கடிதம் எழுதுவதோடு அவர் கடமை முடிந்து விடும். சொந்த பிரச்சினைகள் என்றால் தவறாமல் டெல்லி செல்வார் ( சக்கர நாற்காலியில் இருந்தாலும் ).

பொழுதுபோக்க பல முறை முதலமைச்சர் பதவியில் இருந்துள்ளார். அப்போது பொழுது போக்க பாராட்டு விழாக்களில் பங்கு கொண்டுள்ளார்.இது வரை ஆக அதிகமான பாராட்டு விழாக்களில் பங்கு பெற்றதற்காகவும் ஒரு பாராட்டு விழா நடந்தது.அதற்க்கும் தலைமை தாங்கினார் என்றும் ஒரு பேச்சு.

உலகத் தமிழர்களின் தலைவராக இவரை அண்ணாவும் பெரியாரும் கனவில் வந்து நியமித்ததால் அயராது உழத்துக்கொண்டே இருக்கிறார். தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தைக் கண்டாலே இவரது தலைமைப்பண்பை அறியலாம்.

தான் பதவிக்காலத்திற்குள் தமிழ் மொழியைக் காத்தே ஆக வேண்டும் என்பதால் செம்மொழி மாநாடு நடத்தினார்.அதன் பிறகு தமிழ் மொழி செவ்வாய்க் கிரகம், நிலா முதலிய வேற்று கிரகங்களிலும் பேசப்படுகிறது என்று அறிந்து மனம் மிகவும் ஆனந்தப்படுகிறது.

சோழச் சக்கரவர்த்திகளுக்குக்பிறகு கவி பாடும் புலவராக இருக்கும்  ஒரே தலைவர் இவரே.

கலைத்துறையில் தனது வாரிசாக அவ்வையாரின் அவதாரமாம் கவிஞர் கனிமொழியைத் தமிழ் நாட்டிற்கு அளித்துள்ளார்.

அரசியலில் வாரிசாகவும் தனது சேவையைத் தொடரவும் தனது மகன்களான  இரு சிறந்த கல்வி மான்களை நாட்டிற்கு அளித்துள்ளார். இருவரும் தமிழகத்திற்கும் இந்தியத் திருநாட்டிற்கும் ஆற்றி வரும் பணி அளவிடமுடியாதது.

பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சியின் அறிகுறியாகத் தன் மகன் ஸ்டாலின் 60 ம் கல்யாணத்தை தாலி கட்டிக் கொண்டாடுவதைக் கண்டு ஆனந்தப்பட்டார். அவரது பகுத்தறிவுப் பற்றைக் கண்டு கண் கலங்காதவர் எவரும் இல்லை.