வைணவம் – பண்டைய அந்தணர்

வைணவம் தொடரில் முக்கிய பாத்திரமான  அந்தணர்கள்  பற்றிப் பார்ப்போம். ஏனெனில் இன்றைய நிலையில் வைணவர்கள் என்றாலே ஐயங்கார் என்கிற பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரு தோற்றம் உள்ளது. மற்ற அனைவரும் சைவர்கள் போலவும், ஐயங்கார் பிரிவினர் மட்டுமே திருமால் தொண்டர்கள் போலவும் பார்க்கிறோம். ஐயங்கார்கள் அந்தணர்கள் என்பதால் முதலில் பொதுவாக அந்தணர்கள் பற்றிப் பார்த்துவிட்டு பிறகு வைணவம் குறித்து நுழைவோம்.

நேரே விஷயத்திற்கு வருகிறேன்.  அந்தணன்  பார்ப்பனனா?   கம்பன் பற்றிப் படித்துக்கொண்டிருந்தபோதும் அது விஷயமாக வேறு நூல்களைப் பார்த்தபோதும் இந்த அந்தணன் என்ற சொல் பலமுறை தென்பட்டது.

சங்க இலக்கியங்கள் என்று பார்த்தேன். அவற்றில் அந்தணன், பார்ப்பனன் என்று இரண்டும் தென்பட்டன. சிலப்பதிகாரமும் அப்படியே. பக்தி இலக்கிய காலகட்டமான ஆழ்வார்கள் நாயன்மார்கள் காலத்திலும் அவர்கள் பாட்டில் அந்தணர் என்பதே அதிகம் தென்படுகிறது. வேதியர் என்பதும் இருக்கிறது.

சரி. இப்போது இதற்கு அவசியம் என்ன? மோடி, பொருளியல், பணவீக்கம், ரஜினியின் அடுத்த படம், நடிகை திரிஷாவின் சிரிப்பு என்று உலகம் நகர்ந்துகொண்டிருக்கும்போது அந்தணன் எக்கேடு கெட்டால் என்ன? தமிழ் இலக்கியங்களில் என்ன இருந்து தொலைத்தால் என்ன என்று சிலர் கேட்கலாம்.

வரவிருக்கும் வாரங்களில் வைணவம் குறித்தும், ஆழ்வார்கள் குறித்தும் காணவேண்டிய நிலையில், வைணவத் தத்துவங்களுக்குள் புகும் முன்னர், அந்தணர்கள் எவ்வாறு சங்க காலம் தொட்டு பாரதி காலம் வரை சமய மற்றும் மொழி, கலாச்சாரம் சார்ந்த கருத்தியல்களில் இரண்டறக் கலந்துள்ளனர் என்று அறிந்துகொள்ளவேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு அவர்கள் தொழில்கள்  என்ன, அவர்களின் சமுதாயம், கல்வி, கலாச்சாரம், அரசு  சார்ந்த பங்களிப்பு என்ன என்று தெரிந்து கொண்டு மேலே செல்வது பயனளிக்கும்.

அந்தணன் என்பதன் பொருள் என்ன ? இவையே பொருள்களாக ஒரு தமிழ் அகராதி கூறுகிறது : செந்தண்மை உடையவன், வேதத்தின் அந்தம் அறிந்தவன், முனிவன், கடவுள், வியாழன், சனி.

‘அந்தம்’ என்பது முடிவு என்று அறிவோம். வேதத்தின் அந்தம் வேதாந்தம். அதனை அறிந்தவன் வேதாந்தி.

அதுபோல் ‘அந்தம்’+’அனன்’ = அந்தணன் என்று தெரிகிறது. முடிவை அறிந்தவன். முடிவான பிரம்மத்தை அறிந்தவன். பிரம்மத்தை அறிந்தவன் பிராம்மணன் என்று கூறுவதிலிருந்து அந்தத்தை அறிந்தவன் அந்தணன் என்று வந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

இன்னொரு பொருளும் தெரிந்தது. சற்று இலாகியம் சார்புள்ளது.

அந்தணன் = ”அம்’ + ‘தண்’ + ‘அனன்’ என்று பிரிக்க முடிகிறது.

அம் = அழகு;  தண் = குளிர்ச்சி ; அனன் = கொண்டவன்.

ஆக, அழகும் குளிர்ச்சியையும் கொண்டவன், வெம்மை இல்லாதவன் என்ற பொருளிலும் வருகிறது.

சரி. ஆதாரம்?

எப்பொழுதும் போல் வள்ளுவர். அவர்  கூறுகிறார்:

“அந்தணன் என்போன் அறவோன் மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்”

எல்லா உயிர்களிடத்திலும் உள்ளத்தால் செம்மைத்தன்மை ( கோபம் முதலிய கடுங்குணங்கள் ) இல்லாதிருந்து அற வழியில் நடப்பவன் அந்தணன். செம்மைத் தன்மை மட்டும் இல்லாதிருந்தால் போதாது ; அறவழியில் நடப்பவனாகவும் இருக்கவேண்டும். அவனே அந்தணன் என்கிறார்.

தமிழக “பண்டிதர்கள்” எப்போதும் போல் இந்த இடத்தில் ‘அந்தணன்’ என்பது கடவுள்அல்லது  நன்னெறியில் நடப்பவரே அன்றி பார்ப்பனரைக் குறிப்பது அல்ல என்று தங்கள் வரலாற்றுக்கடமையை ஆற்றியுள்ளார்கள். ஆனால் கடவுள் இல்லை என்று கூறிக்கொண்டு அந்தணன் என்றால் கடவுள் என்று கூறுவது அவர்களுக்கே ஒரு மாதிரி பட்டிருக்கும்போலே. எனவே தற்கால “பண்டிதர்கள்”,  “அறவழியில் நடப்பவர்கள்” என்பதோடு நிறுத்திக்கொள்கிறார்கள்.  (சிவபெருமானுக்கு “ஈர்ஞ்சடை அந்தணன் ” என்று கலித்தொகை பெயரிடுகிறது.  )

எப்போதும்போல் அவர்களை நிராகரித்துவிட்டு மேலே தொடர்வோம்.

அந்தணர்களின் தர்மம் என்ன ? அவர்கள் எவ்வாறு அறியப்படுகிறார்கள் ?

சங்க இலக்கியங்கள் தொடங்கி, ஆழ்வார் பாசுரங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, நாரத புராணம், திருக்குறள், சைவத்திருமுறைகள் எல்லாவற்றிலும் அந்தணனுக்கு விதிக்கப்பட்ட கடமைகள் பலவற்றில் மிகவும் அழுத்திச்சொல்வது இந்த மூன்றும்  :

வேள்வி செய்தல், வேதம் ஓதுதல், உலக நன்மை வேண்டி இறையிடம் வேண்டுதல். இந்த மூன்றும் வலியுறுத்தப்பட்டாலும் அவர்கள் ஆறு தொழில்கள் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

திருமூலர் கூறுவது இது :

“அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர், செந்தழல் ஓம்பி
முப்போதும் நியமம் செய்து, அந்தவ நற்கருமத்து நின்று
ஆங்கிட்டுச், சந்தியும் ஓதிச் சடங்கு அறுப்போர்களே”

அந்தணர் என்பவர் ஆறு தொழில் செய்யும் வகையினர். தினம் மூன்று முறை அக்னிஹோத்ரம் என்னும் தீ வணக்கம் செய்திருக்கவேண்டியவர்கள். தங்களுக்கு விதிக்கப்பட்ட நியமங்களை விடாது பின்பற்றுபவர்கள். பிறவிக்குக் காரணமான கருமங்கள் அழிய வேண்டி நற்கருமம் செய்து வாழவேண்டியவர்கள் என்கிறார்.

சரி? அது என்ன ஆறு தொழில்கள் ?

வேதம் ஓதுதல், ஓதுவித்தல், தானம் வாங்குதல், வழங்குதல், வேள்வி செய்தல், செய்வித்தல். இவை ஆறே அந்தணர் தொழில்கள். கோவில்களில் பூசை செய்வது பற்றி ஒரு பேச்சும் இல்லை.

ஆறு தொழில்கள் என்று திருமூலர் சொன்னால் போதுமா ?

நமது திருவள்ளுவர் சொல்வது :

“ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின்”

மன்னன் ஆட்சியின் தன்மை பால் வளம் மற்றும் அந்தணர் நூலை ( வேதம் ) ஓதுதலை குறியீடாகக்கொண்டு கணிக்கப்படுகிறது தெரிகிறது. இங்கே அறுதொழிலோர் என்பது அந்தணரைக் குறிக்கிறது.

திருமூலர் மேலும்,  “செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே,” என்றும் கூறுவது நோக்கத்தக்கது. இரண்டு பாடல்களிலும் “செந்தழல் ஓம்புதல்” என்று குறிப்பிடுகிறார்.

திருமூலர் போல் செந்தழல் ஓம்புதல் பற்றிப் பலர் கூறியுள்ளனர்.

தொண்டரடிப்பொடியாழ்வார் :

“குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிக்கொள் அந்தண்மை…” என்று  அந்தண்மையையும் நீராடி மும்முறை அனல் ஓம்பும் கடமை பற்றியும் கூறுகிறார்.

திருமங்கையாழ்வார் தேரழுந்தூர் பாசுரத்தில்,

“அந்தணர் தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து அணி அழுந்தூர்”

என்று தேரழுந்தூர் வாழ் அந்தணர்கள் எழுப்பிய வேள்விப்புகை ஊர் முழுவதும் பரவி இருந்ததைக் குறிப்பிடுகிறார்.

அந்தணர் பற்றி சைவத்திருமுறைகள் பல விஷயங்கள் கூறுகின்றன.

அந்நாளில் அந்தணர் வேள்வி செய்வது இன்றியமையாததாகவும் அதனால் நாட்டிற்கு மிக்க நன்மை ஏற்படும் என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. சில உதாரணங்களைப் பார்ப்போம்.

தேவாரம் இவ்வாறு கூறுகிறது :

“வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையுந் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேதம் முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே”

சோர்வை அறியாத அந்தணர்கள் ஹவிஸ் என்னும் அவியைச் சொரிந்து வேள்வி செய்தலால் மழையும் நிலமும் நன்மை அடையும், தேவர்கள் நன்மை அடைவர், இதற்கெல்லாம் முதல் நூலாய்த் திகழும் வேதமும் நிலைபெறும். அவ்வாறு செய்யாவிட்டால், இந்த நன்மைகள் கிட்டா.

மேலும் கூறும்போது :

“ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத் துண்ணுவர்”, என்று ,

முத்தீ வேள்வி செய்கின்ற, அரிய வேதத்தை ஓதுகின்ற அந்தணர் மறுமை நலம் வேண்டி பிறர்க்கும் இட்டு உண்பர் என்று குறிப்பிடுகிறார்.

இன்னொரு பாடலில் ,

“அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததின் உட்பொரு ளான” என்று

அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயின் உள்ளே நமக்குத் துணையான இறைவன் உறைந்துள்ளான் என்று கூறுகிறார் ஞானசம்பந்தர்.

இத்தகைய அந்தணர் வாழ்வாங்கு வாழவேண்டும் என்று சம்பந்தர் தேவாரம் கூறுகிறது :

“வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே”

அந்தணர் வாழ்க, தேவர் வாழ்க, பசுக்கூட்டங்கள் வாழ்க, மழை பொழிக, அதனால் வேந்தன் வாழ்க, தீயவை எல்லாம் அழிக …இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக என்று வாழ்த்துகிறார்.

இதில் காணவேண்டியது, அந்தணர்களைப் பற்றிக்கூறும் போது பசுக்களைப் பற்றியும் கூறுகிறார். அந்தணர் வேள்வி செய்வதால், ஆநிரைகள் வளரும், மழை பெய்யும், மக்களும் மன்னனும் வாழ்வார்கள் என்று அந்நாளில் நம்பினர்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரிக்கும்போது அக்கினி தேவனிடம் ,

“ஆவும் ஆனிரைப் பார்ப்பன மக்களும் பெண்டிரும் பிணியுடையீரும்”

ஆகிய இவர்களை விடுத்து மற்றதை எரிப்பாயாக என்று ஆணை இடுகிறாள். இங்கும் அந்தணரும் பசுக்களும் ஒருங்கே கூறப்பட்டுள்ளனர்.

“கோ-ப்ராம்மண்ஸ்ய..” என்ற சமஸ்கிருத பதமும் பசுவையும் அந்தணர்களையும் ஒருசேரக் கூறுகிறது. ஒரு வேளை பசு மாட்டின் பாலில் இருந்து கிடைக்கும் நெய்யைக் கொண்டு வேள்வி செய்வதால் பசுமாடுகளையும் அந்தணர்களையும் ஒருங்கே கருதியிருக்கலாம் என்று நினைக்கிறேன்..

ஒரு மாதத்தில் மூன்று மழை பெய்யும் என்பது பண்டைய விதி.

ஏன் மூன்று மழை என்று விவேக சிந்தாமணி கூறுகிறது:

“வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை
நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை
மாதர் கற்புடைய மங்கையர்க்கோர் மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே!”

வேதம் ஓதும் வேதியர்களுக்காக ஒரு மழையும், நீதி நெறி தவறாத மன்னனுக்கோர் மழையும், கற்புடைய மாதருக்காக ஒரு மழையும் என்று ஒரு மாதத்தில் மூன்று மழை பெய்துள்ள காலம் இருந்துள்ளது.

அடுத்த பதிவில் அந்தணர் அல்லது பார்ப்பனர் பற்றி மேலும் சில பழைய நூல்கள் கூறுவதையும், அவர்களுக்கான கடுமையான விதிகள் பற்றியும் வட மொழி நூல்கள் கூறுவதையும்  பார்த்துவிட்டு வைணவத்திற்குள் செல்வோம்.

%d bloggers like this: