எதிர்கால இந்தியா ?

busday-1சில வாரங்கள் முன்பு சிங்கபூர் சாங்கி விமான நிலையத்தின் கழிவறை ஒன்றின் வாயிலில் ஒரு தமிழ் இளைஞன் தலை குனிந்தவாறு நின்றிருந்தான். என்னவென்று விசாரித்தபோது தான் ஒரு பட்டதாரி இளைஞன் என்றும் ஆனால் குடி நுழைவுத் தாளை நிரப்பத் தெரியவில்லை என்றும் உதவுமாறும் கேட்டான். ஆச்சரியமும் வருத்தமும் மேலிட அவனிடம் பேசியதில் அவன் ஒரு இளங்கலை பொருளாதாரப் பட்டதாரி என்றும் தற்போது தான் சென்னையில் இருந்து வேலை நிமித்தமாக வந்துள்ளதாகவும் தெரிவித்தான். கொத்தனாரின் உதவியாளன் போன்ற வேலை என்றும் கை நிறைய ரூபாய் பதினைந்தாயிரம் கிடைக்கும் என்றும் அதற்காக இந்தியாவில் ஒரு தரகரிடம் ருபாய் ஒரு லட்சம் கொடுத்து அதன்மூலம் வந்துள்ளதாகவும் தெரிவித்தான்.

இந்த நிகழ்ச்சியின் பாதிப்பு நீங்கும் முன்னர் சென்னையின் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் என்றும் ஒரு மாணவர் மருத்துவமனையில் அனுமதி என்றும் அறிந்து கொண்டு இந்த இரு நிகழ்வுகள் ஏன் என்று சற்று யோசித்தேன். அதன் பலன் பின் வருமாறு:

பேருந்தில் தொங்குவோர், பேருந்தின் மேல் ஏறி ஆட்டம் போடுவோர், பள்ளி மற்றும் கல்லூரிகளின் வாயில்களில் நின்றபடி பெண்களை வம்புக்கிழுப்போர், குழுவாகச் சேர்ந்து கொண்டு பிறிதொரு குழவினரைத் தாக்குவோர், பள்ளி கல்லூரிகளை புறக்கணித்துவிட்டு கேட்க முடியாத வசைகளைத் தம் மொழி அகராதியில் சேர்த்துக்கொண்டு திரை அரங்குகளில் காலம் கழிப்போர், ஆசிரியரை மட்டம் தட்டியும் ‘அவன் இவன்’ என்றும் மரியாதை இல்லாமல் பேசுவோர், வீட்டுக்கு அடங்காமல் சுற்றித் திரிவோர் – இவர்களை நீங்கள் அடிக்கடி சந்தித்திருக்கலாம். பொதுவாக இவர்கள் நகரங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் ( இல்லை இடம் கிடைத்தும் செல்லாமல் ) மாணவர்கள் என்று அறியப்படுவார்கள்.

பேருந்துகளில் அடங்காமலும் சமூக உணர்வு இல்லாமலும் உரக்கப்பே சியும் பாட்டும் கூத்துமாக கூட்டமாகத் திரியும் மாணவர்களைக் கண்டு பயணிகளும் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் கண்டும் காணாமலும் இருந்து வருவர் என்று நாம் அறிவோம். பல நேரங்களில் சக பயணிகளுடன் தகராறு செய்பவர்களாகவும் இவர்கள் அறியப்படுகிறார்கள்.

பேருந்து தினம் என்று ஒரு நாளைக் குறித்துகொண்டு அன்று அரசுப்பேருந்தின் மேல் ஏறிக்கொண்டு உயிருக்கு ஆபத்தாக இவர்களது ஆட்டமும் பாட்டமும் சக பயணிகளை மட்டும் அல்ல பார்க்கும் எல்லோரையும் அச்சமுற வைக்கிறது. நீதிமன்ற உத்தரவுகளை எல்லாம் தாண்டியும் இந்த பேருந்து தினம் நடக்கிறது என்றால் இந்த ‘மாணவர்’ சக்தியைப் புரிந்துகொண்டிருக்கலாம்.

இப்படிச் செயல் படுவோரின் பூர்வீகத்தை நாம் சற்று ஆராய்வோம்.இவர்களில் பெரும்பாலோர் அரசுக் கல்லூரிகளில் பயில்வோராகவும், குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவராகவும் இருப்பர். பெற்றோர் ஆட்டோ ஓட்டுனர் அல்லது கூலி வேலை செய்பவராகவோ வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்களாகவோ – அதாவது அவர்கள் ஒரு நாள் வேலைக்குச் செல்லவில்லை என்றால் அந்த நாள் ஊதியம் இல்லாதவராகவே இருப்பர்.இவர்களது கனவு தம் பிள்ளைகளைத் தாங்கள் படும் கஷ்டங்கள் இல்லாமல் நல்ல வேலையில் அமர்த்திப் பார்க்க வேண்டும் என்பதே.அதற்காக வருத்தமுற உடல் உழைப்பு செய்து தங்கள் மகன்களின் கல்லூரிக் கதவுகளைத் திறந்து விடுவர்.

எப்படியாவது நமது இன்னல்கள் தீராதா, அதற்கு நம் பிள்ளைகளின் கல்வி உதவாதா என்ற ஒரு நேர்மையான எதிர்பார்ப்பு அல்லது ஏக்கம் இருப்பது இயற்கை தானே? அந்த எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது இந்த மாணவர்களுக்குத் தெரியாதா ? அவ்வளவு அறியாமையிலா இருக்கிறார்கள் இவர்கள் ? இவ்வாறு தங்கள் பெற்றோர் தங்களைப் படிக்க வைக்க எவ்வளவு உழைக்கிறார்கள் என்று அறியாதவரா இந்த சிறுவர்கள்? இல்லை.அங்கே தான் இருக்கிறது சமூக நீதி அல்லது அநீதி.

இந்தக் குடும்பங்களின் சமூகப் பொருளாதார நிலைமைகள் கொஞ்சம் விரும்பத்தக்கவையாக இருக்காது.இவர்கள் பெரும்பாலும் சென்னை அல்லது மற்ற பெரு நகரங்களை அடுத்துள்ள சிற்றூர்களில் இருந்தோ அல்லது அந்த நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் இருந்தோ வருகிறார்கள்.

தாங்கள் இருக்கும் இடங்களில் இல்லாத சில சுதந்திரங்கள் தங்களுக்குக் கல்லூரிகளில் கிடைத்துவிட்ட மாதிரி இவர்கள் நினைத்துக் கொண்டு தான் தோன்றித்தனமாக நடக்க ஆரம்பிக்கிறார்கள். இந்த புது சுதந்திரம் இவர்களைப் பெண்களின் முன்னாள் ஒரு நாயகர்களாகக் காண்பிக்க உதவுகிறது. ஏன் என்றால் அவர்களது நாயகர்களும் சினிமா சார்ந்தே இருப்பதாலும் சினிமாத்தனமாகவே இருக்கத் துவங்குகிறார்கள். தங்கள் சினிமா நாயகர்கள் கதாநாயகிகளைப் பின்தொடர்ந்து செல்வதைப்போல் நிஜ வாழ்விலும் இந்த மாணவர்கள் நடந்துகொள்ளத் துவங்குகிறார்கள்.இதன் விளைவே இந்த பேருந்து தினம் மற்றும் இன்ன பிற சேட்டைகள். சினிமா நாயகர்களின் வில்லுக்கு இவர்கள் அம்பாகத் தங்கள் வாழ்க்கையை இழக்கிறார்கள்.

ஆனால் இவர்கள் ஏன் சினிமா நாயகர்களைத் தங்கள் முன் மாதிரியாகக் கொள்கிறார்கள்? வேறு யாரும் இல்லையா என்றால் அதற்கும் அவர்களைச்சொல்லிப் பயன் இல்லை. அவர்களின் ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சியும் திரைப்படமும் தானே. இந்த வர்க்க மாணவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தைக் கழிக்க நல்ல நூலகங்கள் அவர்கள் வசிக்கும் இடத்தில் இருப்பதில்லையே. எனவே அவர்கள் பள்ளி முடிந்ததும் செல்வது திரைப்படம் அல்லது தொலைகாட்சி. அதில் அவர்கள் காண்பது இந்த அரை வேக்காட்டு நாயகர்கள் நடத்தும் ரசனையற்ற கேளிக்கைக் கூத்துக்கள் தானே. அதையே பார்ப்பவன் வேறு எப்படி வளர்வது?

சரி, வீட்டிலோ வெளியிலோ நல்ல மாதாந்திரப் பத்திரிகைகளே இல்லையா என்றால் அது இன்னமும் பாழாய்ப்போன ஒரு உலகம். நடிகைகளின் உடல் உறுப்புக்கள் நல்ல முறையிலேதான் இருக்கின்றன என்று தினமும் வாசகர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய ஒரு காலத்தின் கட்டாயத்தில் இருக்கின்றன இந்தப் பத்திரிக்கைகள்.எனவே அந்தப் பத்திரிக்கைகளைப் படித்தால் நம் மாணவன் மனதில் பதிவது என்ன?

இப்படி ஒரு உலகத்தில் வாழும் ஒரு சிறுவன் பள்ளியில் திருந்தலாமே என்றால் அது ஒரு கண்ணாம்பாள் படம் போல் ஒரே சோக மாயம். அரசுப் பள்ளி என்பதால் ஆசிரியர்களைக் கேள்வி கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை. பள்ளிக்கு ஆசிரியர்கள் வருவதே ஒரு பெரிய வரலாற்று நிகழ்வாக உள்ளது. அப்படி எப்பபோதாவது வந்தாலும் அவர்களிடமிருந்து நன்நடத்தையைக் கற்றுக்கொள்வது எப்படி ? அவரே பல தீய செயல்களிலும் ஈடுபடுபவராக இருந்தால்? எல்லா ஆசிரியர்களும் அப்படி இல்லை என்றாலும் பெரும்பாலனவர்கள் அப்படித்தான் என்பது வருத்தப்படவேண்டிய ஒன்றாக உள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது.

ஆசிரியர் நிலை பற்றி உடன் படாதவர்கள் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். நம் பெற்றோர் படித்தது அரசுப் பள்ளிகளில் தானே.அவர்கள் 1960ற்கு முற்ப்பட்ட காலத்தினர் என்றால் அவர்கள் காலத்தைய ஆசிரியர்கள் போல் தான் இப்போது உள்ளவர்களும் உள்ளனரா என்று எண்ணிப் பார்த்தாலே போதும்.

ஆக பெற்றோரும் வேலை நிமித்தமாக வெளியே சென்று விடுகிறார்கள்,பள்ளிகளும் சரியில்லை, பள்ளிகளின் மூலம் உண்டாகும் நண்பர்களும் அப்படியே என்று வாழும் வழி முறையே ஒரு காலித்தனமாக இருப்பின் அந்த மாணவன் கல்லூரியில் சேர்ந்ததும் பெரும் மாற்றம் பெற்றுவிடுவான் என்று நினைப்பது மட்டும் எப்படி சாத்தியமாகும்?

உதாசீனப்படுத்த வேண்டிவர்களை உதாரண புருஷர்களாகக் கொண்டால் அவனது வாழ்க்கை என்னவாகும்? உதாரண புருஷர்களின் அட்டை உருவங்களுக்குப் பால் அபிஷேகம் செய்ய இவர்கள் நான் முந்தி நீ முந்தி என்று திரை அரங்குகளில் போட்டி போடும் போது அவர்கள் தாய் தந்தையரின் கனவுகளுக்கும் சேர்ததுதான் பால் ஊற்றுகிறார்கள். அதோடு சேர்த்து தங்களின் வாழ்க்கைக்கும் சேர்த்து ஊற்றிக் கொள்கிறோம் என்ற உணர்வே இவர்களிடம் இல்லை என்பது ஒரு சாபக்கேடு. அந்த ஒரு மணித்துளி தான் ஒரு நாயகனாக இருக்க வேண்டும்.அவ்வளவே.

சாதிகள் இல்லை என்று பாடம் படித்து பின்னர் சாதியின் பெயரால் நடைபெற்ற சட்டக்கல்லூரி மாணவர் வன்முறை சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தேறியது. புத்தகம் ஏந்த வேண்டிய கைகளில் கொலை வாளையும் உருட்டுக் கட்டைகளையும் கண்டோம்.

இந்த மாணவரகளை நம்பியே பல அரசியல் கட்சிகளும் உள்ளன என்பது இந்த விகாரங்களில் மிக முக்கியமான விகாரம். உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாகப் பேசுவதும் ஏதுமறியா மாணவர்களைத் தூண்டி விட்டு போராட்டம் என்று உணர்சிகளையே பிரதானமாக வைத்து மாணவர்களைத் தங்கள் அரசியல் வாழ்விற்கு வேண்டிய பலி ஆடுகளாக ஆக்குவதும், கல்லூரிகளை அவர்களின் பலி பீடங்களாக்குவதும் அரசியல் கட்சிகளின் கை தேர்ந்த கலையாகி விட்டது. இந்தச் சூழலில் தான் போராட்டங்களின் போது இம் மாணவர்கள் தீக்குளிப்பது தற்காலங்களில் அன்றாட வழக்கமாக ஆகி விட்டது.

சிந்திக்கும் திறன் மழுங்கடிக்கப்பட்ட இந்த மாணவர்கள் அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் ஏன் தீக்குளிப்பதில்லை என்று கேள்வி கேட்பதில்லை. கேள்வி கேட்காதவரை அரசியலாளர்களுக்கு நன்மை. கேள்வி கேட்டே பழக்கப்படாத இந்த மாணவர் சமுதாயம் இவர்களின் அரசியல் சடு குடுவிற்கு ஏற்ற ஒரு களமாக உள்ளது என்பது அவர்களது வாழ்க்கையின் நிதர்சனங்களில் ஒன்று. ஒரு காலத்தில் வேள்வித்தீயில் ஒளிர்ந்த தமிழகம் இன்று இந்த மாணவர்களின் உணர்ச்சித் தூண்டுதல்களின் பெயரால் அரங்கேரும் உடல் தீப் போராட்டங்களினால் ஒளிர்வது ஒரு வெட்கக்கேடு. அதிலும் அந்தத் தீயில் குளிர் காயும் அரசியலாளர்கள் எண்ணிக்கை வளர்ந்து வருவது நம் நாட்டின் பல சாபக்கேடுகளில் ஒன்று.

இப்படிக் கல்லூரிகளைத் தாண்டி வரும் இளைஞர்கள் வேலை தேடும் படலம் மிகவும் பரிதாபமானது. ஒருவாறு பட்டதாரியானாலும் அவர்கள் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமைகள் இல்லாததால் வேலைச் சந்தையில் பின்தங்கியே இருக்கிறார்கள். பல போராட்டங்களுக்குப் பிறகு மிகவும் சாதரணமான வேலைகளில் சேருகிறார்கள். அவர்களின் வாழ்க்கைப் போராட்டம் அங்கே துவங்குகிறது. அவர்கள் பெற்றோரின் வாழ்க்கைப் போரட்டம் முடிவுறும் என்று எதிர்பார்ப்பில் இருந்தால் அவையும் தொடரும் நிலையிலேயே இருக்கிறது.

இளமையில் கட்டுப்பாடற்ற வாழ்க்கை, கல்லூரிகளிலும் அவ்வாறே, பின்னர் முட்டி மோதி ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்தாலும் வேலை இடங்களிலும் மற்றவரோடு ஒத்துப் போக முடியாமலும் தான் என்ற அகந்தையிலும், திரையுலக நாயகர் நாயகிகளின் நினைவில் நிகழ் வாழ்வைத் தொலைத்துப் பின்னர் சுமந்தே திரிய வேண்டிய ஒரு பாரமாக வாழ்வை மேற்கொள்ளும் இந்த இளைஞர்கள் மனதில் முன்னேற்றம், சுய மதிப்பீடு, தன்னம்பிக்கை இவை எப்படி குடி கொள்ளும் ?

இந்த நிலையில் எதிர்கால இந்தியா எங்கே இருக்கிறது?

%d bloggers like this: