கல்வியின் நிலை

ஊழலுக்காகச் சிறை சென்றுதிரும்பி வந்த உத்தமர் ஒருவரை, அவர் சிறை செலும் முன்னர் பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் சென்று சந்தித்து வந்தனர். என்ன பேசிக்கொண்டிருப்பார்கள் ? அவருக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? என்று யோசித்ததுண்டு.அதற்கான விடை கிடைத்தது.

முன்னேறியதாக அறியப்படும் வகுப்பைச் சேர்ந்த அறிவியல் பேராசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். முனைவர் பட்டங்களின் தரம், அவர்கள் எடுத்துக் கொள்ளும் தலைப்புகள், ஆராய்ச்சிப் பணிக்கான மாநிலத் தேர்வின் தரம், மத்தியத் தேர்வின் தரம், சுய நிதி வகுப்புகள் துவங்க நடக்கும் பேரங்கள், அரசுப் பணியில் உள்ள கல்லூரி ஆசிரியர்களின் பணி இட மாற்றங்களின் ரூபாய் மதிப்பு, முனைவர் பட்டங்கள் திருடு போவது, பி.காம். வகுப்புகள் துவங்கக் கல்லூரிகள் காட்டும் ஆர்வம், துணை வேந்தர் நியமனப் பொருளாதாரம் என்று பலதைப் பற்றியும் தெரிந்துகொண்டேன்.

அடிப்படை அறிவியல் (Fundamental Science) துறையில் அரசின் மெத்தனம் ஏன் என்று தெரிந்துகொண்டேன். பல நுணுக்கங்கள் உள்ளன.நுழைவுத் தேர்வுகள் வரவிடாமல் செய்வதில் உள்ள பொருளாதார அரசியல் பிரமிக்க வைக்கிறது.

மேற்சொன்னவற்றை வைத்து 500 பக்க நாவல் எழுதமுடியும். அவ்வளவு தகுடுதத்தங்கள், சிறுமைகள், கீழ்மைகள், மிரட்டல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள், சாதி அடிப்படையிலான துவேஷங்கள், NAAC தரச்சான்று பெறுவதில் உள்ள கல்வி சாரா நடைமுறைகள் எல்லாம் குமட்டலை வரவழைக்கின்றன.

இவை முன்னேறியதாகப் பறைசாற்றப் படும் மாநிலத்தில் நடக்கும் அவலங்கள். மற்ற மாநிலங்களின் நிலை பற்றி ஊகிக்கலாம்.பாரதத்தில், அதுவும் முன்னேறிய அந்த மாநிலத்தில் இருந்து அறிவியலுக்கான நோபல் பரிசுக்குச் சாத்தியமே இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டேன்.

பெரிய அளவிலான வருத்தம் மட்டுமே மிஞ்சியது.

குழந்தைகளைத் தெய்வம் தான் காக்க வேண்டும்

2017-ஜூன்
10ம் வகுப்புத் தேர்வில் அந்தக் குழந்தை 500ற்கு 480+ எடுத்திருந்தாள். தமிழகத்தின் நகராட்சி சார்ந்த ஊர். ‘என்ன படிக்கலாம்?’ என்று கேட்டிருந்தாள். அவளுக்கு அறிவியலில் நாட்டம் இல்லை என்று சொல்லியிருந்தாள்.
வணிகவியல், சமூகவியல் படிக்க அறிவுறுத்தினேன். பின்னர் சி.ஏ. ஏ.சி.எஸ். (அ) முனைவர் பட்டப் படிப்புகள் பயில வாய்ப்பு என்று 2 மணி நேரம் சொல்லியிருந்தேன். மொழிகளில் அதிக நாட்டம் இருந்ததால் ‘தமிழ் படி, நல்ல தமிழாசிரியர்கள் கிடைப்பதில்லை. ஆராய்ச்சிக்கும் வாய்ப்புள்ளது’ என்றும் சொல்லியிருந்தேன். தமிழோடு நெருங்கிய தொடர்புடைய குடும்பம் அது என்பதால் இயல்பாகவே ரத்தத்தில் தமிழ் உள்ள பெண் அவள்.
பள்ளிக்குச் சென்றவளிடம் தலைமை ஆசிரியர்,’ 10வதுல ஸ்கூல் பர்ஸ்ட் வந்துட்டு காமர்ஸ் போறியா? பயாலஜி குரூப் போ. படிச்சு ஸ்கூலுக்கு ரேங்க் எடுத்துக் குடு’ என்று சொல்ல, குழந்தையும் சரியென்று தலையாட்டிவிட்டது.
கெமிஸ்றி புரியவில்லை, பிசிக்ஸ் ஆசிரியருக்குச் சொல்லித் தரத் தெரியவில்லை->புரியவில்லை,தமிழும் கணிதமும் மட்டும் விரும்பிப் படித்தாள்.
+1ல் சரியாகப் பயிலாததால் ஆசிரியர்களிடம் திட்டு. ’10வதுல எப்படி மார்க் வாங்கின?லக்கா?’என்பது போன்ற கேலிப் பேச்சுக்கள்.
சொல்லமுடியாமல் தவித்துள்ள குழந்தைக்கு அடிக்கடி தலைவலி வந்துள்ளது. ஓட்டை மருத்துவர்கள் அனாசின் முதல் அமிர்தாஞ்சன் வரைகொடுத்துள்ளார்கள்.மைக்ரேன் என்று சொல்லி அதற்கும் மருந்துகள்.
தலைவலி குறையவில்லை.
யோகாவிற்கு அனுப்பலாம் என்று முடிவாகி, ஶ்ரீஶ்ரீ யோகாமையத்தில் சேர்ந்தாள்.அந்த மையத்தின் தலைவி குழந்தையைப் பூரணமாக ஆராய்ந்து, இவள் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறாள் என்று தோன்றுகிறது எனச் சொல்ல, அடுத்து அக்கு பிரஷர் மையம். சிகிச்சை பலனின்றி மன நல மருத்துவர்.
தீர ஆராய்ந்த மருத்துவர் குழந்தைக்கு உடல் உபாதைஒன்றுமில்லை. மனம் சார்ந்த அழுத்தம் என்று விளக்கியுள்ளார்.அதுவரையாரிடமும் பேசாத அப்பெண் குழந்தை,மருத்துவரிடம் பள்ளி, படிப்பு, தேர்வு, இவை சார்ந்த அழுத்தங்கள் என்று சொல்லியுள்ளது.
‘உங்களுக்குக் குழந்தை முக்கியமென்றால் பாடத்தைத் திணிக்காதீர்கள்’ என்னும் அறிவுரையுடன்,விளையாட்டு,பொழுதுபோக்கு, விருப்பமான பாடம்,இசை-என்று இருக்கும்படிச் சொல்லியுள்ளார் மருத்துவர்.
குடும்பம் பெரும் கவலையில் உள்ளது.
ஆசிரியர்களே/பள்ளித் தாளாளர்களே/பெற்றோரே:
  1. குழந்தைகள் இன்னது படிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டால் அதில் தயவு செய்து குறுக்கிடாதீர்கள்.
  2. முடிந்தால், உங்களுக்குத் தெரிந்தால் வழி காட்டுங்கள்.
  3. உங்கள் பள்ளி மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டிப் பிள்ளைகளைப் பலியாக்காதீர்கள்.
தமிழ் நாட்டுப் பிள்ளைகள் அபிமன்யூவைப் போல் ஒரு வியூகத்தில் சிக்கியுள்ளார்கள். எல்லாத் திசைகளில் இருந்தும் தாக்குதல்கள். வெளிவர வழி தெரியாமல் பிள்ளைகள் திணறுகிறார்கள். பள்ளிகள் தங்கள் சுய லாபத்திற்காகவும், பெற்றோர் தத்தமது சுய பெருமைக்காகவும் பிள்ளைகளின் ரத்தத்தையுறிஞ்சுகிறார்கள்.
2018 – மே
குழந்தையை ஒரு வாரமாகப் பள்ளிக்கு அனுப்பவில்லை என்று அவளது தாய் சொன்னார். தலைவலி குறைந்தபாடில்லை. வேறு ஊருக்குச் சென்று வரலாமே என்று பேசிப்பார்த்தேன்.
‘அடுத்த வாரம் வீக்லீ டெஸ்ட் இருக்கே. மார்க் வரல்லேன்னா?’ என்கிறாள் குழந்தை.
தெய்வம்தான் துணைநிற்க வேண்டும். வேறொன்றும் சொல்வதற்கில்லை.

நவீன பிராய்லர் கோழிகள்

நாமக்கல் மாவட்டப் பள்ளிகள் பல இந்த முறை நம்ப முடியாத மதிப்பெண்கள் எடுத்துள்ளன. அல்லது மாணவர்கள் அவ்வாறு எடுக்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது கூட சரியாக இருக்கும்.

இதைப்பற்றி சிறிது ஆராய்ந்தேன். பதினொன்றாம் வகுப்புப் பாடங்களே நடத்தப்படுவதில்லை எனவும் இரண்டு வருடங்கள் +2 பாடங்கள் மட்டுமே நடத்தப்படுகின்றன என்றும் தினமும் தேர்வு என்றும் அறிந்தேன்.

மாணவர்களுக்குப் புரிகிறதா என்பது முக்கியம் இல்லை எனவும் எல்லாத் தேர்வுகளிலும் நல்லா மதிப்பெண் எடுக்க வைக்கப்படுகிறார்கள் / கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்றும் அறிந்தேன். இந்தக் கொடுமை எங்கள் காலத்தில் இருந்தது உண்மை. ஆனால் நாகரிக வளர்ச்சி மிகப்பெரிய அளவில் நடந்துவிட்ட இந்த நிலையில், தொழில் நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி இருக்கும் இந்தக் கால கட்டத்தில் மாணவர்களை சொல்லொணா மன உளைச்சலுக்கு ஆளாக்குவது எந்த விதத்தில் சரி ?

ஒரு பெண் 1063 மதிப்பெண் வாங்கி மருத்துவம் கிடைக்காது என்பதால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  இப்படி மாணவர்களை அழிக்கும் கல்வி தேவையா ? இந்த மாணவி இறந்தது இந்தக் கல்வியின் தோல்வியா அல்லது இந்தக் கல்வியைப் பின்பற்ற வைக்கும் சமூகத்தின் தோல்வியா?

தன்னம்பிக்கை அளிக்காத ஒரு கல்வி, மாணவனை உயிர் போக்கிக்கொள்ள வைக்கும் ஒரு கல்வித்திட்டம், மதிப்பெண் மட்டுமே ஒரு மாணவனின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் நிலை — இது ஒரு சாதாரண பகுத்தறிவுக்கே ஒத்துவரவில்லையே?

எல்லா  மாணவர்களுமே டாக்டர், இஞ்சினீர் என்றால் மற்ற வேலை எல்லாம் யார் செய்வது ?

அவ்வளவு மாணவர்களுக்கும் பாடம் நடத்த நல்ல மருத்துவ ஆசிரியர்கள் இருக்கிறார்களா ?

படித்தேதான் ஆக வேண்டும் என்று இருந்திருந்தால் இன்று கமல் ஹாசன் என்ற உன்னதக் கலைஞன் இல்லாமல் இன்னொரு பணம் கொழிக்கும் வக்கீல் கிடைத்திருப்பார். ( அவர் கொள்கைகள் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அவரது கலை ஆர்வம் தலைவணங்க வேண்டிய ஒன்று ).

.அண்ணா பல்கலையில் தொழில் நுட்பம் படித்த கிரேசி மோகன் இன்று அவரது படிப்புக்காக அறியப்படவில்லை. அவர் கூறுகிறார் : நிறைய HOBBIES , இன்பத்துடன் செய்யும் பொழுதுபோக்குகள் வளர்த்துக்கொள்ளுங்கள்.நாளை அவற்றில் ஒன்றே உங்களுக்கு வாழ்க்கை அளிக்கும் என்கிறார்.

இன்றைக்குக் கொடி கட்டிப் பறக்கும்  எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு பொறியாளரோ மருத்துவரோ அல்லர். சுய தரிசனம் தேடி இந்தியா முழுமைக்கும் அலைந்தவர்.

நம்மை நாமே அறியாத நிலை. நம்மை அறிய முடியாத அறிவதற்கு அமைந்துள்ள  ஒரு கல்வி முறை. ஓர் சந்தைப் பொருளாதாரம் அதன் தேவைகளுக்கு சில ஆயிரக்கணக்கான மாணவர்களை பலிகடாக்களாக ஆக்குகிறது. பண்ணையில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிக்கும் சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆளாக்கப்படும் மாணவர்களும் எந்த வகையில் வேறுபடுகிறார்கள்?

பிராய்லர்  கோழியையும்  பள்ளி மாணவனையும் ஒன்றாகப் பார்க்கும் ஒரு போக்கு முன்னேறிய முற்போக்கான சமுதாயத்தின் அவலங்களில் ஒன்று.

தவறு எங்கே ?

41வயது மணி கடலூர்க்காரர். 30வயது விக்ரம்- இருவரையும் உங்களுக்குத் தெரியுமா? தெரிந்திருக்க நியாயமில்லை.அவர்கள் தற்போது உயிருடன் இல்லை. இலங்கை விஷயமாக தங்களையே கொளுத்திக்கொண்டவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார் என்ற வாலிபர் தானும் தீக்குளித்தார். இவர்கள் சாதித்தது என்ன ? இன்னும் சில ஆண்டுகளில் வெறும் புள்ளி விவரமாய்ப் போவார்கள் இவர்கள். இவர்களது குடும்பங்கள் என்ன செய்கின்றன ? இவர்களை நம்பி இருந்த தாய் தந்தையர் எப்படி இருக்கிறார்கள் ? அவர்கள் செய்த பாவம் என்ன? இப்படி மிகவும் உணர்ச்சி வசப்படுவதில் தமிழர்கள் முன்னணியில் நிற்பது ஏன் ?
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ்க் குடி இன்று வெந்து தணிவதில் யாருக்கு என்ன லாபம்?
நம் கல்வி முறையில் தவறா? வளர்ப்பு சரி இல்லையா? சமூக முன் உதாரணங்கள் சரியானவர்கள் இல்லையா? அறிவு வளர்ச்சி அவ்வளவு தானா? எங்கோ தவறு நடக்கிறது.