மார்க்சீய நோக்கில் வைணவம் – அறிமுகம்

அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன தொடர்பு என்று கேட்பது உண்டு. உண்மையில் தொடர்பு உண்டு. இஸ்லாமியர்கள் பிறைச் சந்திரனை வைத்தே ரம்ஜான் நோன்பு இருக்கிறார்கள். ஆக தொடர்பு இருக்கிறது.

அது போல் கார்ல் மார்க்சிற்கும் வைணவத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

சமீபத்தில் நான் வேறு ஏதோ தேடப்போக, “வைணவம்- மார்க்சீயப் பார்வை” என்ற நூல் கிடைத்தது. வேறு எங்கே? நமது சிங்கை தேசீய நூலகத்தில் தான். தோத்தாத்திரி என்னும் கம்யூனிச சார்புள்ள பேராசிரியர் ஒருவரது ஆய்வு நூல் அது.

சங்க காலம் தொடங்கி சமீப காலம் வரை வைணவம் என்னும் வாழ்க்கை வழிமுறை அல்லது மதம் தமிழ் நாட்டில் என்னென்ன செய்தது? எப்படி வளர்ந்தது ? அதன் வளர்ச்சிக்கும் தமிழகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பு என்ன? நில உடைமைக் கொள்கை ( feudalism ) வளந்ததற்கும், விவசாயம் பெருகியதற்கும் வைணவத்தின் வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பு என்ன ?  என்கிற நோக்கில் ஆராய்கிறது இந்நூல்.

பல மார்க்சீய எழுத்தாளர்களை மேற்கோள் காட்டுகிறார் ஆசிரியர். கூடவே நாதமுனிகள், இராமானுசர், பிள்ளை லோகாச்சாரியார், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகன், பல ஆழ்வார்கள், வைஷ்ணவ குருபரம்பரை நூல்கள், பல மணிப்பிரவாள  கிரந்தங்கள் என்று இந்த நூலாசிரியர் பரவலாகப் படித்து எழுதியிருக்கிறார்.

ரொமீலா தாப்பர், சட்டோபாத்யாயா, பேரா.நா.வானமாமலை  போன்ற கட்டாய கம்யூனிஸ ஆஸ்தான வித்வான்களின் மேற்கோள்களும் உள்ளன.

இடதுசாரிகளுக்கே உண்டான அணுகுமுறைகள் இருந்தாலும், வைஷ்ணவத்தில் இவ்வளவு ஆழ்ந்து படித்து எழுதியுள்ளது பேராசிரியரின் ஆராய்ச்சியைக் காட்டுகிறது.

சில அனுமானங்கள் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அந்த இடங்களில் சிறு அவசரம் தெரிந்தது. அது இடதுசாரிகளுக்கே உள்ள ஒரு போக்கு. அதனால் பாதகமில்லை.

பல நாட்கள் கழித்து ஒரு அறிவார்ந்த தற்கால ஆராய்ச்சியைப் படித்த திருப்தி ஏற்பட்டது.  அதுவும் தமிழில் இது போன்ற நூல்கள் வருவது குறிஞ்சிப்பூ மலர்வது போன்றது.

உங்களை விடுவதாக இல்லை. விரைவில் இது குறித்து சில பதிவுகள் எழுதவுள்ளேன்.

%d bloggers like this: