தமிழகத்தின் முதுகெலும்பான வேளாண்மையின் மூல ஆணி வேர் போன்றவர்கள் வேளாளர்கள். அதிலும் கொங்கு வேளாளர்கள் கடும் உழைப்பாளிகள். நமது பாரத ஆன்மீகப் பாரம்பர்யத்தைக் கட்டிக்காப்பதில் பெரும் பங்காற்றியவர்கள்.
அத்தகைய மக்களை இழிவு படுத்தும் நூல், அவர்களை வருத்தப்படுத்தும் நூல் எவ்வளவு பெரிய இலக்கியமாக இருந்தாலும் அது எனக்குத் தேவையில்லை.
என் மக்களை இழிவு படுத்தும் முற்போக்குப் பாவனை எனக்குத் தேவையில்லை, பழைய பஞ்சாங்கமாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.
எடுத்ததற்கெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கும் பெண் ஈய வியாதிகள், மாதொருபாகன் விஷயத்தில் எங்கே போனார்கள்? அந்த நாவலில் பெண்கள் இழிவு படுத்தப்படவில்லையா?
சபரி மலையில் பெண்கள், சனீஸ்வரன் கோவிலில் பெண்கள் என்று தொலைக்காட்சி காமெராக்களுக்கு முன்னால் போராட்டம் நடத்தும் நவ நாகரீகப் பெண் உரிமையாளர்கள், மாதொருபாகன் விஷயத்தில் ‘கஜினி’ ஸ்டைலில் பெண்ணுரிமை மறந்துவிட்டார்கள் போல.
ஒரு வேளை கண்டாங்கி சேலை அணிந்து, முதுகொடிய வேளாண்மை வேலை பார்க்கும் திருச்செங்கோட்டுக் கொங்கு வேளாள மகளிருக்குக்கெல்லாம் பெண்ணுரிமை இருக்காதோ? ஜீன்ஸ் பேண்ட்டும், டாப்சும் அணிந்து ‘ஸ்டார்பக்ஸ்’ல் காப்பி குடித்தால் தான் பெண்ணுரிமை வருமோ என்னவோ! பகுத்தறிவுப் பகலவன்களுக்கும் , இடதுசாரி இரண்டும் கெட்டான்களுக்குமே வெளிச்சம்.
பெருமாள் முருகனுக்கு (FoS – Freedom of Speech) கிடையாதா? பேச்சுரிமை கிடையாதா? என்கிறார்கள்.
கிடையாது என்றே சொல்வேன்.
எப்படி நமது முஸ்லீம் சகோதாரர்களையும் அவர்களது புனித நூலையும் இழிவுபடுத்த சல்மான் ரஷ்டி, தஸ்லிமா நஸரீன் முதலானவர்களுக்கு உரிமை இல்லையோ, ஹிந்து சமூகத்தை இழிவுபடுத்த வெண்டி டோனிகர், எம்.எப்.ஹுசைன் முதலானவர்களுக்கு உரிமை இல்லையோ, அது போல பெருமாள்முருகனுக்கும் நமது வேளாண் சமூகத்தையும் அவர்களது வழிபாட்டையும் இழிவுபடுத்த உரிமை இல்லை.
‘பேச்சுரிமை கட்டற்றதல்ல’ என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. வரைமுறைகளுக்கு உட்பட்டே உரிமைகளை உறுதி செய்கிறது நமது அரசியலமைப்புச் சட்டம்.
தர்க்கம் நமது பண்பாட்டுக் கட்டுக்குள் உள்ளது. வாதம் நமது பாரத ஞான மரபின் அம்சம். அவை தத்துவ அளவில் பல ஆயிரம் ஆண்டுகள் நடைபெற்று வந்துள்ளன. எனது ‘நான் இராமானுசன்’ நூலிலும் தத்துவ விவாதம் உள்ளது. ஆனால் அது இனங்களை இழிபடுத்தும் அளவு செல்ல அனுமதிக்க முடியாது.
மாதொருபாகன் நூலுக்குப் பின் உள்ள அரசியலை நாம் கவனிப்போம்.
திருச்செங்கோடு கோவில் தேர்த்திருவிழா பிரசித்திபெற்றது. 14 வகையான கொங்கு வேளாள மக்களின் குடும்ப விழாவாக இது இருக்கிறது. நாட்டுக் கவுண்டர், மொளசி கண்ணன் கோத்திர கவுண்டர், வேட்டுவக் கவுண்டர், வன்னியர், வஸ்வகர்மா, முதலியார் என்றெல்லாம் பல சமூகங்கங்கள் ஒன்றிணைந்து தங்களது மண்டபங்களில் கட்டளைகள் மூலம் செய்யும் திருவிழா இது. சமூக ஒற்றுமை இதனால் வலுப்படுகிறது. இந்த விழாவில் பெண்கள் பெருமளவில் பங்கு பெறுகின்றனர்.
ஆனால் மாதொருபாகன் நூல் சர்ச்சைக்குப் பின் பெண்கள் இந்த விழாவில் பங்கெடுக்கத் தயங்கினர். அவர்களிடம் பேசி அவர்கள் அவசியம் பங்கெடுக்க வேண்டியது பற்றி எடுத்துரைக்க வேண்டியிருந்தது.
ஒற்றுமையான சமூகத்தைக் குலைக்க வேண்டிய அவசியம் யாருக்கு இருக்கமுடியும்?
இவர்கள்:
அந்நிய மத மாற்றுச் சக்திகள், அவர்களிடம் கூலி பெற்று நாட்டைக் காட்டிக்கொடுக்கும் இடதுசாரி, போலி பகுத்தறிவு திராவிட இயக்கங்கள், இவர்களின் கையிலிருந்து வாங்கி உண்டு முற்போக்கு எழுத்தாளர் போர்வையில் உலாவரும் சமூகக் கொலைஞர்கள்.
வயிறு நிறைய உணவு உண்டபின் ‘அன்னதாதா சுகீ பவ’ என்று சொல்வது நமது பாரம்பரியம். ‘இந்த அன்னத்தை அளித்தவன் நலமாக வாழட்டும்,’ என்று மனம் நிறைந்து வாழ்த்துவது பாரத மரபு.
ஆனால் பெருமாள்முருகனும் அவரது ‘முற்போக்கு’ நண்பர்களும் சொல்ல வேண்டிய மந்திரம் வேறு:
‘நாம் சாப்பிடும் இந்த அரிசியில் நாம் இழிவு படுத்திய வேளாளப் பெருங்குடி மக்களின் குருதியும் வியர்வையும் கலந்துள்ளன. இருந்தாலும் பரவாயில்லை. பிழைப்பு என்று வந்துவிட்ட பிறகு, யாருடைய குருதியோ யாருடைய வியர்வையோ. எதுவாக இருந்தாலும் அதையே உண்டு அவர்களுக்கே துரோகம் செய்வோம். ஏனெனில் இதுதான் எமது இடதுசாரி, போலி பகுத்தறிவுவாத சித்தாந்தம். அந்த சித்தாந்தம் வாழக் கடவது.’
பாரதி சொன்னான் : ‘படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான் ஐயோவென்று போவான்’ .
நான் சொல்கிறேன்: சமூக ஒற்றுமையை, மக்கள் மானம் மரியாதையை, நாட்டின் நன்மையைக் குலைப்பவர்கள், அவர்கள் என்ன முற்போக்காக இருந்தாலும், பெரும் போக்கில் போவார்கள்.