“அடடா என்ன ஒரு பெருமாள் சேவை ? பெருமாள் என்ன அழகு ? ஒரு முத்தங்கி அலங்காரம் பண்ணியிருந்தாளே, அவா கைக்கு ஒரு காப்பு பண்ணிப்போடணும் ”
“என்ன ஒரு கூட்டம் ! ஏழு மணி நேரம் நிக்க வெச்சு நிக்க வெச்சு அப்புறம் உள்ளே விட்டான். ஆகா, பெருமாள் என்ன சேவை ? சரியா ஒரு நிமிஷம் கூட சேவிக்க முடியல்லே; ஆனால் என்ன ஒரு சேவை தெரியுமா ? ”
“லட்டுக்கே ரெண்டு மணி நேரம் ஆச்சுன்னா பாத்துக்கோயேன்”
“எனக்குத் தெரியாது, எவ்வளவு கூட்டம் இருந்தாலும் எனக்கு வி.ஐ.பி. பாஸ் உண்டு. பெருமாளுக்கு அஞ்சு அடி கிட்டே அஞ்சு நிமிஷம் நின்னேன். என்ன ஒரு அனுபவம் தெரியுமா ? எப்போ போனாலும் எனக்கு வி,ஐ,பி. பாஸ் கிடைக்கும்”
“பெருமாள் என்ன எப்போ பார்க்கணும்னு நினைக்கறாறோ அப்போவெல்லாம் கூப்பிடுவார். ஒரு கார் டிரைவ். அங்கே இருப்பேன். பெருமாள் கிட்டே அஞ்சு நிமிஷம் நிப்பேன். மத்தவங்கள்ளாம் ‘ஜருகிண்டி ஜருகிண்டி’னு போயிண்டே இருப்பா”
“மதுரை மீனாட்சியைப் பார்க்கணும்னா ஒரு போன் போதும். நேரே கர்ப்பக்கிருகம் கிட்டே கொண்டு விட்டுடுவான். அம்மாவைப் பார்த்துண்டே எத்தனை நேரம் வேணும்னாலும் நிக்கலாம். ஈ.ஓ. நம்ம தோஸ்து இல்லையா ?”
“அதோ பெருமாள் கையில் இருக்கே ‘வைர அபயஹஸ்தம்’, அது நான் செய்ததாக்கும்”
இப்படியெல்லாம் பேசுபவர்கள் கவனத்திற்கு :
கீழே உள்ள படங்களைக் கொஞ்சம் பாருங்கள்.
நமது கோவில்கள் இறை காட்சி சாலைகள் அல்ல. அம்மையையும் அப்பனையும் அலங்காரம் செய்துவிட்டு அவர்கள் அழகைப் பார்த்து வியக்கவும், இவர்கள் அருகில் நின்று படம் பிடித்துக்கொள்ளவும் அவர்கள் என்ன அருங்காட்சிப் பொருட்களா ? நினைத்துப் பாருங்கள். இவர்கள் இந்தப் பூமி துவங்கி சில நூற்றாண்டுகள் கழித்து இந்த மண்ணில் வந்தவர்கள். நமது முன்னோடிகள். பல நூற்றாண்டுகள் கண்டவர்கள். பல வரலாறு அழிந்து பல வரலாறு உருப்பெறுவதைப் பார்த்தவர்கள். நமக்குப் பின்னும் நடக்கவிருப்பதை உணர்ந்தவர்கள்.
‘தான்’ என்ற அகந்தையில் இறுமாந்திருந்த பல சக்கரவர்த்திகள் மண்ணைக் கவ்வக் கண்டவர்கள். ‘உலகமே என் காலடியில்’ என்று எண்ணி பல வன் செயல்கள் புரிந்த மானிட வன விலங்குகளைப் பார்த்து நகைத்தவர்கள். ஒரு வேளை நம்மைப் பார்த்தும் அப்படியே நகைக்கிறார்களோ என்னவோ !
பல கோவில்கள் வெறும் புற்றாக இருந்து வளர்ந்து தற்போதைய நிலையை அடைந்துள்ளன. இந்த புற்று – கோவில் பயணம் நடந்த நேரம் சில ஆயிரம் ஆண்டுகள். ஆக இந்தச் சில ஆயிரம் ஆண்டுகளில் வாழ்ந்த, வீழ்ந்த மாந்தர் கதை அறிந்தவர்கள் இவர்கள்.

ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். நீங்கள் உற்று நோக்கும் இந்தக் கல்வெட்டை செதுக்கியது யார் ? இதை செதுக்கச் சொன்னவன் யார் ? நீங்கள் நிற்கும் கருங்கல் தளம். இந்தத் தளத்தின் மேல் ஆயிரம் ஆண்டுகள் முன்னால் ஒரு சுந்தர சோழனோ, பராந்தகனோ நின்றிருக்கலாம். அல்லது அவர்களுக்குச் சில ஆயிரம் ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த முதற்சோழப் பரம்பரையினர் இருக்கலாம். இந்த வரலாறை நினைத்துப் பாருங்கள்.

இந்த பிராகாரத்தைப் பாருங்கள். எத்தனை கல் தச்சர்கள் கை வண்ணம் தெரியுமா இது ? எத்தனை கல் தச்சர்கள், மரத்தச்சர்கள், சிற்பிகள் ஒருங்கிணைந்து கட்டிய வரலாறு என்று எண்ணிப்பார்த்தீர்களா ? அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இதன் அருகில் தான் எங்கோ குடில்கள் அமைத்து கோவில் கட்டி முடியும் வரை வாழ்ந்து வந்தனர் என்பதை எண்ணிப்பார்த்தீர்களா ?அவர்கள் குழந்தைகள் இதன் அருகில் தான் ஆயிரம் வருஷம் முன்னர் விளையாடியிருக்கின்றனர். சில நிமிஷம் இந்த நிகழ்வுகளைக் கண் மூடி எண்ணிப் பாருங்கள். உங்களது டாம்பீகங்களின் அற்பத்தனத்தை உணர்வீர்கள்.

சற்று நிமிர்ந்து பாருங்கள். அதோ அந்த கோபுர வாயில். அதன் அடியில் இருக்கும் வளைந்த கல் தூண் எப்படி கட்டப்பட்டது தெரியுமா ? சற்று யோசித்துப் பாருங்கள். இந்த வளைந்த கல் வாயில் தூக்கி நிறுத்தப்பட்ட போது இங்கே நிகழ்ந்த ஆரவாரம் உங்கள் காதுகளில் கேட்கிறதா ? தோரண வாயில் நிறுத்தப்பட்ட பின் நடந்த கொடிக் கம்பம் நிறுத்த விழாவுக்கு மன்னன் யானை மீதேறி வந்தானே, அதை நினைத்துப் பாருங்கள்.
இதோ, இதுதான் அந்தக் கொடிக்கம்பம். ‘த்வஜஸ்தம்பம்’ என்று வட மொழியில் கூறுவர். இதன் கீழ் தான் ஓதுவார்கள் திருமுறைகளை ஓதிக்கொண்டிருந்தனர். மக்கள் மெய் மறந்து கண்களில் நீர் வழியக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
அந்த விழா இதே இடத்தில் தான் நடந்தது. சைவ மறைகள் ஒதப்பட, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கினர். காவிரியில் இருந்து யானை மீது கொண்டுவரப்பட்ட புனித நீர் யாக சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. வேள்விகள் முடிந்தபின் நீரை சிவாச்சாரியார்கள் கும்பங்களின் மேல் ஊற்றினர். குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. மன்னன் மகிழ்ச்சியில் சிற்பிகளுக்கும் தச்சர்களுக்கும் முத்து மாலைகளும், தங்க நகைகளும் பரிசளித்தான். பலருக்கு அருகில் இருந்த நிலங்களைத் தானமாகக் கொடுத்தான்.
மன்னன் அத்துடன் நிற்கவில்லை. ஆடுதுறை, மேக்கிரிமங்கலம், ஆனை தாண்டவபுரம் முதலிய ஊர்களின் நிலங்களை கோவிலுக்கு ‘நிவந்தனம்’ எழுதிவைத்தான். திறமையான வேத விற்பன்னர்களுக்கு ‘சர்வ மான்ய அக்ரஹாரம்’ என்னும் பெயருடைய பகுதியை அளித்தான்.
இந்தக் கல்வெட்டு சொல்லும் செய்தி இது.
கோவில் கட்டிய மன்னனின் பெருந்தன்மை என்ன ? இன்னொரு கோவில் கட்டும் அளவிற்கு செல்வங்களைப் பணியாளர்களுக்குக் கொடையளித்தான். கோவிலும் ஊரும் விழாக் கோலத்தில் பல நாட்கள் இருந்தன, விழா முடிந்து பல நாட்கள் கழித்தும் மக்கள் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள்.
இந்தக் கோவில் இவ்வாறு கட்டப்படவேண்டிய தேவை என்ன ? பழையாறையில் இருந்த குந்தவைப் பிராட்டி சிவனுக்கான மண் கோவில்களை எல்லாம் கற்கோவில்களாகக் கட்டிக்கொண்டிருந்தார் அல்லவா ? அவற்றைக் ‘கற்றளி’ என்று அழைத்தனர். அப்படி அவரது எண்ணப்படி மண்ணிலிருந்து கல்லான கோவில் தான் இது. இதன் குடமுழுக்குதான் நடந்தது. ஆம். ராஜராஜனின் சகோதரி குந்தவை இருந்தாளே, அவளே தான்.
அந்த மன்னனும் அவனது பரிவாரங்களும் நின்றுகொண்டிருந்த இடத்தில் இப்போது நீங்கள் நின்றுகொண்டிருக்கிறீர்கள்.
இன்னொன்று தெரியுமா ? கோவில் கட்டியபின் பல முறை இப்பகுதியில் சிறிதும் பெரிதுமாகப் பல போர்கள் நடந்துள்ளன. உறையூரிலும் பழையாறையிலும் இருந்த சோழனின் அரண்மனைகள் அழிந்தன. ஆனால் பழையாறை அருகில் உள்ள இந்தக் கோவில் அப்படியே இருக்கிறது.
அவனது பெருந்தன்மையில் கொஞ்சமேனும் உங்களுக்கு வேண்டாமா ?
அந்த இடத்தில் நின்று கொண்டு நயந்தாராவின் நயங்களைப்பற்றிப் பேசுவது நியாயமா ?
கோவில் உண்டியலில் பத்து ரூபாய் போட்டுவிட்டு அம்பாளிடம் பல ஆயிரம் ரூபாய் பெறுமான வர்த்தகம் பேசுவது தர்மமா ?
கோவிலில் நின்று அதன் வரலாற்றை நினையுங்கள். அதனைக் கட்டிய மன்னனின் எண்ண ஓட்டங்களை எண்ணிப் பாருங்கள். தன் பெயர் ஓரிடத்திலும் வராமல் அம்மையப்பனின் பெயர் மட்டுமே வெளியே தெரியும்படி தன் செல்வங்கள் கொண்டு கட்டிய கோவில் சுவர்களில் உங்கள் காதல் வரலாறு எழுதியே ஆக வேண்டுமா ?
நீங்கள் அலுவலகத்தில் பெறப்போகும் சில நூறு ரூபாய் சம்பள உயர்வுக்கு இறைவனிடமும் இறைவியிடமும் இந்த மகோன்னதமான இடங்களில் பேரம் பேசுவது சின்னத்தனம் இல்லையா ? தெய்வம் சும்மா விடுமோ இல்லையோ கோவிலைக் கட்டிய கல் தச்சர்களின் ஆன்மா உங்களை மன்னிக்காது. ஏனெனில் அவர்கள் தங்கள் குடும்பம், உறவு, உணவு, கேளிக்கை மறந்து உயிரைக் கொடுத்து கட்டியவை இந்தத் தூண்கள்.
அப்படியே உள்ளே நடந்து ஒரு செவ்வைக்கிழமை மாலை வேளையில் அம்மன் சன்னிதி செல்லுங்கள். யாரும் உடன் வேண்டாம். நீங்களும் அம்பாளும் மட்டும். அந்தத் திரி விளக்கின் ஒளி மட்டுமே. பச்சை உடுத்தி அம்பாள் மோனத்தில் உங்களைப் பார்ப்பது தெரிகிறதா ? சற்று உற்று கவனியுங்கள். காதைக் கொஞ்சம் தீட்டிக்கொள்ளுங்கள். அதோ ஒரு ஓதுவார் மெதுவாகப் பாடுவது கேட்கிறதா ? அவர் இந்த நூற்றாண்டா என்றெல்லாம் ஆராயாதீர்கள். அது தேவை இல்லை. அவர்களுக்கும் அவர்கள் ஓதும் திருமுறைக்கும், ஏன் இந்த அம்பாளுக்கும் கூட காலம் எல்லாம் இல்லை.
இன்று நேற்று இல்லை. சில ஆயிரம் ஆண்டுகள் பல தலைமுறைகள் ஓதுவார்கள் பாடிய பதிகங்கள் இந்தச் சுவர்களில் பட்டு எதிரொலித்தபடி இருந்துள்ளன. அவற்றை நீங்கள் கூர்ந்து கேட்டால் உணரலாம். ஓதுவார்களின் ஆன்மாக்கள் கோவில்களை விட்டு அகலுவதில்லை.
எந்தத் தேவையும் இல்லாமல், எந்த வேண்டுதலும் இல்லாமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அம்மையின் முன் நின்று பாருங்கள். அந்த அமைதி. வேறேங்கும் கிடைக்காது அது.
இதை விடுத்து அம்பாள் முன் வெற்று ஆர்ப்பட்டம் தேவையா ? கோவில் ஊழியருக்குப் பணம் கொடுத்து அம்மையின் அருகில் நிற்பதால் நீங்கள் அடையப் போவது என்ன ? கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அத்துடன் குந்தவையைப் பற்றியும் நினைத்துப் பாருங்கள். ஒரு சின்ன ஒப்பீடு செய்ய்யுங்களேன் உங்களைக் குந்தவைப் பிராட்டியோடு. அவள் இப்படிச் செய்திருப்பாளா என்று ?
கோவிலில் உற்சவ சமயங்களில் உங்களுக்கு முதல் மரியாதை என்றோ, ‘முதல் தீர்த்தம்’ என்றோ ஏதாவது ஒன்று இருந்தால் அது பற்றி இன்னொரு முறை யோசியுங்கள். நீங்கள் அதற்குத் தகுதியானவரா என்று எண்ணிப்பாருங்கள். நியாயமாக அந்தக் கல் தச்சனின் குடும்பமோ, சிற்பியின் குடும்பமோ பெறவேண்டியது அது. ‘முதல் தீர்த்தம்’ அல்லது மரியாதை என்று சண்டை பிடிக்கும் முன்னர் குந்தவையையும் பரந்தகனையும் கரிகாலனையும் நினைக்கலாம். அவர்கள் செய்ததில் இந்தக் கோவிலுக்கு நீங்கள் செய்தது தூசியில் அடங்குமா ? நினைத்துப் பாருங்கள்.
கோவில்களின் தெய்வ வடிவங்கள் நீங்கள் அவர்களைப் பார்ப்பதற்காக நிற்கவில்லை. அவற்றின் பார்வை உங்கள் மீது பட வேண்டும் என்றே நிற்கின்றன. ஆக அங்கே உங்கள் படாடோபங்கள் தேவையா ? உங்களது பட்டுப் பீதாம்பரங்கள் அந்த வரலாற்றின் முன் நிற்குமா ?
இந்தக் கோவில்களுக்குச் செல்ல நீங்கள் எம்.பி.ஏ. எல்லாம் படித்து கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றவேண்டிய தேவை இல்லை. ஆண்டு சந்தா என்ற பெயரில் ஒரு சில கார்ப்பரேட் சாமியார்களின் ஐந்து நட்சத்திர வாழ்க்கையைச் சுமக்க வேண்டியதில்லை. ‘கிரியைகள்’ என்ற பெயரிலோ அல்லது ‘காய கல்பப் பயிற்சி’ என்ற பெயரிலோ வருத்திக்கொள்ள வேண்டியதில்லை.
வெறுமனே பாசுரங்களையும் பதிகங்களையும் உங்களுக்கு மட்டுமே கேட்கும்படிப் பாடினாலே போதும்.
செல்லுங்கள், மயிலாடுதுறையிலிருந்து பத்து மைல் தொலைவில் உள்ளது இந்த வேதபுரீஸ்வரர் கோவில். தேரழுந்தூர் என்னும் வைணவ திவ்யதேசத்தில் வேதபுரீஸ்வரரும் தனக்கென தனியாக ஒரு கோவில் கொண்டுள்ளார். ஊரின் கிழக்கே உள்ளது இந்தக் கோவில்.
திருஞானசம்பந்தர் இக்கோவிலைப் பாடியுள்ளார். ஒரு புறம் பெருமாள் கோவிலும் மறுபுறம் சிவன் கோவிலும் இருந்ததால் எந்தப்பக்கம் செல்வது என்று தேர்முட்டியில் இருந்த விநாயகரிடம் வழி கேட்டதால் அவர் ‘வழி காட்டி விநாயகர்’ ஆனார். இன்றும் இவரும் அருள்கிறார்.
“வானே மலையே யெனமன் னுயிரே தானே தொழுவார் தொழுதாள் மணியே ஆனே சிவனே அழுந்தை யவரெம் மானே யெனமா மடம்மன் னினையே ” என்று கொஞ்சம் வரலாற்றை சுவாசித்து வாருங்கள்.
0.000000
0.000000
Like this:
Like Loading...