சிங்கப்பூர் வாசக நண்பர்களே,
அடியேனின் சிங்கப்பூர் வாசம் விரைவில் நிறைவுறுகிறது. பணி இட மாற்றம் வேண்டி ஒன்றரை ஆண்டுகட்கு முன் விண்ணப்பித்திருந்தேன். விரைவில் பாரதம் செல்கிறேன்.
கடந்த 9 ஆண்டுகளாக சிங்கப்பூர் எனக்கு அபரிமிதமான ஆதரவையும், ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்து, எனது வாழ்வில் நீங்காத இடம் பிடித்துவிட்டது. சிங்கை வரும் வரை, ஒரு நாட்டில் கூட இரண்டாண்டுகளுக்கு மேல் தங்கியதில்லை. பல தீபாவளிகள், பொங்கல்கள் விமானப் பயணத்திலேயே நடந்திருந்தன. ஆனால், சிங்கை வந்த பிறகு, ஒவ்வொரு பண்டிகையும் குடும்பத்துடனே இருக்கும் படி நடந்தது. பெரும் மன அமைதியையும், வளத்தையும் ஏற்படுத்தியது சிங்கப்பூர்.
பொருளியல் முன்னேற்றம் மட்டும் அன்று. இலக்கிய உலகிலும் எனக்கு நல்ல வாய்ப்பளித்தது சிங்கப்பூர். அது வரை ஆங்கிலத்திலேயே எழுதி வந்த நான், தமிழில் எழுதத் துவங்கினேன். காரணம்: சித்ரா ரமேஷ் அளித்த ஊக்கம். வாசகர் வட்டம், இலக்கிய வட்டம், தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம், வளர் தமிழ் இயக்கம், பேச்சாளர் மன்றங்கள், வசந்தம் ஒளிவழி என்று எனக்குக் கிடைத்த வாய்ப்புகள் ஏராளம்.
இவற்றால் உந்தப்பட்டு, சங்கப்பலகை வாசகர் வட்டம் துவங்கினேன். முடிந்த அளவு பங்களித்தேன். பல சிறப்பான இலக்கிய, பண்பாட்டுப் பேச்சுகள் நிகழ்ந்தன. தேசிய நூலக வாரியம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மற்றொரு வீடாகவே திகழ்ந்தது.
சங்கப்பலகையைத் தேர்ந்த பேச்சாளரும், தமிழாசிரியருமான நண்பர் ஒருவர் தொடர்ந்து நடத்துவார். விரைவில் அது தொடர்பான அறிவிப்பைத் தேசிய நூலக வாரியம் வெளியிடும்.
எனது மூன்றாவது நூலின் (‘நான் இராமானுசன்’) அனைத்துத் தரவுகளும் விக்டோரியா தெரு தேசிய நூலகத்திலேயே கிடைத்தன. நூலகத்திற்கும் அதை அளித்த இந்த நாட்டின் முன்னோடிகளுக்கும் நன்றி.
நான்கு நூல்கள் வெளியிட்டேன். பிள்ளைகள் நல்ல கல்வி பெற்றனர். கோவில்கள் ஆன்மிக வாழ்விற்கும் வழி வகுத்தன. ஆனாலும் பாரதம் செல்ல வேண்டிய நேரம் வந்துள்ளது.
பல நண்பர்களை / ஆன்றோர்களை விட்டுச் செல்ல மனம் வலிக்கிறது. கண்ணன் சேஷாத்ரி, சித்ரா ரமேஷ், சிவானந்தம் நீலகண்டன், அழகுநிலா, பாரதி, விஜயபாரதி, ஹரிகிருஷ்ணன், அ.கி.வரதராசன், சுப.திண்ணப்பன், அன்பழகன், செல்லகிருஷ்ணன், மாதங்கி, ஜெயந்தி சங்கர், கன்னா சிங், சபாபதி, மீனாட்சி சபாபதி, ராஜ்மோகன், உஷா சுப்புசாமி, ஏ.பி.ராமன், புருஷோத்தமன், ராம்குமார் சந்தானம், ரங்கபிரசாத் கோபாலகிருஷ்ணன், கல்பனா நாகேஸ்வரன், விஜய குமார், தேசிய நூலகத்தின் நிர்மலா, அருண் மகிழ்நன், அலுவலக நண்பர்கள் என்று இப்படி எத்தனையோ பேர் என்னை வழி நடத்தியுள்ளனர். அனைவருக்கும் நன்றி.
பாரதி ஷாகாவின் உடன்பிறப்புகள் – ராஜா, உதயகுமார், ஜோதிகுமார், மதன், கேசவ ராமன், காளிராஜன் மற்றும் பலர். இவர்களுக்கும் எனது நன்றி.
என்றும் நினைவில் இருந்து நீங்காது சிங்கப்பூர். அதன் 75வது பிறந்த நாளில் பங்கெடுக்க வேண்டும் என்று விருப்பம். இறையருள் இருந்தால் பார்க்கலாம்.
வாழ்க நாடு, வளர்க மாந்தர், ஓங்குக செல்வம், பெருகுக அமைதி. நன்றி.