நவீன பிராய்லர் கோழிகள்

நாமக்கல் மாவட்டப் பள்ளிகள் பல இந்த முறை நம்ப முடியாத மதிப்பெண்கள் எடுத்துள்ளன. அல்லது மாணவர்கள் அவ்வாறு எடுக்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது கூட சரியாக இருக்கும்.

இதைப்பற்றி சிறிது ஆராய்ந்தேன். பதினொன்றாம் வகுப்புப் பாடங்களே நடத்தப்படுவதில்லை எனவும் இரண்டு வருடங்கள் +2 பாடங்கள் மட்டுமே நடத்தப்படுகின்றன என்றும் தினமும் தேர்வு என்றும் அறிந்தேன்.

மாணவர்களுக்குப் புரிகிறதா என்பது முக்கியம் இல்லை எனவும் எல்லாத் தேர்வுகளிலும் நல்லா மதிப்பெண் எடுக்க வைக்கப்படுகிறார்கள் / கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்றும் அறிந்தேன். இந்தக் கொடுமை எங்கள் காலத்தில் இருந்தது உண்மை. ஆனால் நாகரிக வளர்ச்சி மிகப்பெரிய அளவில் நடந்துவிட்ட இந்த நிலையில், தொழில் நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி இருக்கும் இந்தக் கால கட்டத்தில் மாணவர்களை சொல்லொணா மன உளைச்சலுக்கு ஆளாக்குவது எந்த விதத்தில் சரி ?

ஒரு பெண் 1063 மதிப்பெண் வாங்கி மருத்துவம் கிடைக்காது என்பதால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  இப்படி மாணவர்களை அழிக்கும் கல்வி தேவையா ? இந்த மாணவி இறந்தது இந்தக் கல்வியின் தோல்வியா அல்லது இந்தக் கல்வியைப் பின்பற்ற வைக்கும் சமூகத்தின் தோல்வியா?

தன்னம்பிக்கை அளிக்காத ஒரு கல்வி, மாணவனை உயிர் போக்கிக்கொள்ள வைக்கும் ஒரு கல்வித்திட்டம், மதிப்பெண் மட்டுமே ஒரு மாணவனின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் நிலை — இது ஒரு சாதாரண பகுத்தறிவுக்கே ஒத்துவரவில்லையே?

எல்லா  மாணவர்களுமே டாக்டர், இஞ்சினீர் என்றால் மற்ற வேலை எல்லாம் யார் செய்வது ?

அவ்வளவு மாணவர்களுக்கும் பாடம் நடத்த நல்ல மருத்துவ ஆசிரியர்கள் இருக்கிறார்களா ?

படித்தேதான் ஆக வேண்டும் என்று இருந்திருந்தால் இன்று கமல் ஹாசன் என்ற உன்னதக் கலைஞன் இல்லாமல் இன்னொரு பணம் கொழிக்கும் வக்கீல் கிடைத்திருப்பார். ( அவர் கொள்கைகள் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அவரது கலை ஆர்வம் தலைவணங்க வேண்டிய ஒன்று ).

.அண்ணா பல்கலையில் தொழில் நுட்பம் படித்த கிரேசி மோகன் இன்று அவரது படிப்புக்காக அறியப்படவில்லை. அவர் கூறுகிறார் : நிறைய HOBBIES , இன்பத்துடன் செய்யும் பொழுதுபோக்குகள் வளர்த்துக்கொள்ளுங்கள்.நாளை அவற்றில் ஒன்றே உங்களுக்கு வாழ்க்கை அளிக்கும் என்கிறார்.

இன்றைக்குக் கொடி கட்டிப் பறக்கும்  எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு பொறியாளரோ மருத்துவரோ அல்லர். சுய தரிசனம் தேடி இந்தியா முழுமைக்கும் அலைந்தவர்.

நம்மை நாமே அறியாத நிலை. நம்மை அறிய முடியாத அறிவதற்கு அமைந்துள்ள  ஒரு கல்வி முறை. ஓர் சந்தைப் பொருளாதாரம் அதன் தேவைகளுக்கு சில ஆயிரக்கணக்கான மாணவர்களை பலிகடாக்களாக ஆக்குகிறது. பண்ணையில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிக்கும் சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆளாக்கப்படும் மாணவர்களும் எந்த வகையில் வேறுபடுகிறார்கள்?

பிராய்லர்  கோழியையும்  பள்ளி மாணவனையும் ஒன்றாகப் பார்க்கும் ஒரு போக்கு முன்னேறிய முற்போக்கான சமுதாயத்தின் அவலங்களில் ஒன்று.