இந்த வாரம் ஒரு பெரும் இடி முழக்கத்தில் சிக்கிக் கொண்டேன். துவக்கத்தில் அமைதியாகத் துவங்கியது போகப்போக பெரும் இடியாக மாறி என் சிந்தனையைச் சிதறடித்து பட்டென்று ஓய்ந்தது. ஆனால் அந்த இடி முழக்கத்தின் பாதிப்பு நீங்க கொஞ்ச நேரம் ஆனது. இடியைத் தொடர்ந்து சுகமான ஒரு மழை பொழிந்தது. இவை இரண்டும் இந்த வார நிகழ்வுகள்.
இடி என்று சொன்னது திரு.ஸ்டாலின் குணசேகரன் என்ற ஒரு அதிசய மனிதனின் சொற்பொழிவை. ஈரோடு புத்தகத் திருவிழா நடத்தும் அவர் அமைதியாக ஆனால் தெளிவாக ஒரு கலாச்சாரப் புரட்சி செய்துவருகிறார். தொலைக்காட்சி, கணினி விளையாட்டு, வன்முறையும் விரசமும் மட்டுமே கொண்ட திரைப்படங்கள், படிப்பு என்னும் பெயரில் நிகழும் அறிவு பலாத்காரம் , தெருமுனை அரசு மதுக்கூடம் என்று தமிழகச் சிறார் வீறு நடை போடும் இக்காலத்தில், பள்ளி தோறும் சென்று மாணவர்களை அழைத்துவந்து, ஈரோட்டில் ஆண்டு தோறும் பத்து நாள் உற்சவம் போல் புத்தகத் திருவிழா நடத்தும் திரு.குணசேகரனை என்னவென்பது ?
பிள்ளைகளுக்கு உண்டியல் வழங்கி அதன்மூலம் அவர்கள் சேர்க்கும் பணத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்குப் புத்தகங்கள் அளிக்கும் மனிதரை என்னவென்பது ?
ஆரம்பப் பள்ளியில் சேர்க்கவே பல ஆயிரங்களை ரொக்கமாகக் கேட்கும் இந்தக் கால வணிகக் கல்வி முறையில் ஒவ்வொரு பள்ளியாக ‘இலக்கிய மன்றக் கூட்டம்’ நடத்தி மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கம் ஏற்படுத்தும் திரு.ஸ்டாலின் குணசேகரன் ஒரு சிறந்த முன்னுதாரணம்.
வீதி தோறும் விளக்கு பூஜை நடத்துவது போல் வாசகர் வட்டங்கள் நடத்துங்கள் என்று அறைகூவல் விடுக்கிறார். இருபது பேருக்கு மேல் கூடாமல் அதே நேரம் கூடும் அனைவரும் அந்த மாதம் தாங்கள் படித்த நூல் பற்றிப் பேசுங்கள் என்று வழிகாட்டுகிறார்.
‘வீடுதோறும் நூலகம் அமைப்போம்’ என்கிறார்.
வழக்குரைஞரான இவர் ஆறு வருடம் தன் தொழிலைப் புறந்தள்ளி ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ என்ற நூல் எழுதியிருக்கிறார். இது தற்போது மூன்று பாகங்கள் வந்து ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்படுகிறது. தனது நூலின் விதை எது என்று கேட்டபோது தனது நான்காம் வகுப்பு நாட்களில் தனது கல்வி நிலையத்தின் தாளாளரும் தியாகியுமான திரு.மீனாட்சிசுந்தர முதலியார் அவர்களைக் கூறுகிறார். எழுபத்தைந்து வயதிலும் திரு.முதலியார் அவர்கள் நான்காம் வகுப்புப் பிள்ளைகளுக்கு வாரம் ஒரு முறை காந்தியடிகளின் ‘சத்திய சோதனை’ நூலைப் படித்துக் குழந்தைகள் புரிந்துகொள்ளும் வண்ணம் கதைகள் சொல்வாராம். அதுவே ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ நூல் எழுத விதையானது என்றார் திரு.குணசேகரன்.
எப்படியாகிலும் சிறுவர்கள் மனதில் வாசிப்புப்பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஆணித்தரமாக எடுத்துரைக்கும் இவர் பிள்ளைகளுக்கு இளமையிலேயே சிக்கனத்தையும் போதிக்க வேண்டுமென்கிறார். உழைப்பின் உயர்வை உணர்த்தவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்.
சிங்கப்பூரில் நேதாஜியின் நினைவிடத்தைப் பார்வையிட்டு வந்த அவர் நேதாஜியின் உணச்சியுடனே பேசியது தான் நான் ‘இடி இடித்தது’ என்றேன்.
மிக நீண்ட நாள் கழித்து ‘தேசியம்’ பேசும் ஒரு தமிழரைப் பார்த்துப் பேசியதில் மனம் நிறைந்தது.
இடி சரி. மழை ?
அடுத்ததாகப் பேசிய பேரா.தி.இராசகோபாலன் அவர்கள் ‘படைப்பவனும் படைக்கப்படும் பொருளும்’ என்ற தலைப்பில் தமிழ் மழை பொழிந்தார். இளங்கோவில் தொடங்கி, கம்பனில் ஊறி, ஆங்கிலப் புலவன் கீட்சில் (Keats) நுழைந்து, பாரதியில் திளைத்து, பாரதிதாசனில் உறவாடி, பட்டுக்கோட்டையில் இளைப்பாறி, கண்ணதாசனில் பயணித்துக் கடைசியில் வைரமுத்துவில் நிறுத்தினார். என்ன ஒரு விஷய ஞானம் ?
இளந்தூரலுடன் கூடிய ஆரவாரமற்ற ஒரு மழையில் நனைந்தால் அந்த இன்பமே தனி. பேரா.தி.ராசகோபாலன் அவர்களின் பேச்சு அப்படி இருந்தது.