RSS

Tag Archives: சிங்கப்பூர்

சங்கப்பலகை 12 அழைப்பிதழ்

சிங்கப்பூர் சங்கப்பலகை வாசகர் வட்டத்தின் 12வது அமர்விற்கு அழைக்கிறேன். செப்டம்பர் 29, மாலை 4:30-7:30, விக்டோரியா தெரு தேசிய நூலகத்தில் நடக்கிறது.

‘தமிழிலக்கியங்கள் காட்டும் இந்திய அறிதல் முறைகள்’ என்னும் தலைப்பில் எழுத்தாளர், சிந்தனையாளர் திரு.அரவிந்தன் நீலகண்டன் சிறப்புரை ஆற்றுகிறார். இவர் ‘உடையும் இந்தியா’, ‘இந்திய அறிதல் முறைகள்’, ‘ஆழி பெரிது’ முதலிய பல ஆராய்ச்சிக் களஞ்சியங்களைப் படைத்திருக்கிறார். ஸ்வராஜ்யா என்னும் நாளேட்டில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

பின்னர் சிலை மீட்பாளரும், இந்தியத் தொல்லியல் வல்லுனருமான திரு. விஜயகுமார் அவர்கள் எழுதிய ‘The Idol Thief’ என்னும் நூல் வெளியாகிறது. உண்மை நிகழ்வுகளைக் கொண்டுள்ள இந்த நூல், விஜயகுமார் நமது சிலைகளை மீட்டுக் கொடுக்க எடுத்துக்கொண்டுள்ள முயற்சிகளையும், சிலைக் கடத்தல் தொடர்பாக, இவரது முயற்சியால் கைதாகியுள்ள உலகச் சிலைக் கடத்தல் புள்ளிகள் பற்றியும் விவரிக்கிறது. உலக அளவில் பெரும் வெற்றி பெற்ற இந்த நூல், தற்போது சிங்கையில் வெளியாவது சங்கப்பலகைக்குப் பெருமையே.

பின்னர் நூல் ஆய்வுகள், பேச்சாளர்களுடன் கலந்துரையாடல் என்று அறிவுப் பிரவாக நிகழ்வுகள் பல நடைபெற உள்ளன.

நாள்: செப் 29, சனிக்கிழமை, மாலை 4:30 – 7:30

இடம்: தேசிய நூலகம், விக்டோரியா தெரு.

தவறாது வந்து தமிழ்ச்சுவை பருக அழைக்கிறேன்.

 

 

 

Tags: ,

உருவாய் அருவாய்

*திருமதி.சுபா செவ்வாய்க் கிழமை ராகு கால பூஜைக்கு சிங்கப்பூர் ருத்ரகாளியம்மன் கோவிலுக்குச் சென்றார். 15 பேர் பூஜைக்கு வந்திருந்தனர்.
ஒரு தம்பதி பூஜைக்கு எவ்வளவு பேர் வந்துள்ளனர் என்று எண்ணிவிட்டுக் கோவிலின் நிர்வாகியான மூத்த பெண்மணியிடம் ‘எல்லாரையும் கொஞ்சம் இருக்கச் சொல்லுங்க, நான் இதோ வரேன்’ என்று சொல்லிச் சென்றார்.பூஜை முடிந்து பெண்கள் அமர்ந்திருந்தனர்.
‘ரொம்ப நேரம் ஆயிட்டா, ஆமாவா?’ என்றபடியே வெளியில் சென்ற தம்பதிகள் அவசர அவசரமாகக் கோவிலுக்குள் வந்தனர். கையில் பெரிய பை.
‘பூஜைக்கு வந்தவங்கள்ளாம் வரிசையா வாங்க,’ என்று அழைத்து, வந்திருந்த ஒவ்வொரு சுமங்கலிக்கும் ஒரு புடவை, வெற்றிலை, பாக்கு, பூ என்று வைத்துக் கொடுத்துள்ளார். 15 பெண்களுக்கும் ஆச்சரியம், இன்ப அதிர்ச்சி.
கொடுத்து முடித்தவுடன் அந்தப் பெண், மூத்தபெண் நிர்வாகியின் காலில் விழுந்து ஆசி வாங்கியுள்ளார். ‘நல்லா இருப்பீங்க,’ என்றவாறே அவரது நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்து ஆசீவத்தித்த அந்த மூத்த நிர்வாகி,’ ஏதாவது நேர்த்திக் கடனா? உங்க பேர் என்ன?’ என்று கேட்க, காலில் விழுந்த பெண், ‘அம்மன் கிட்ட ஒரு வேண்டுதல். ஒண்ணொண்ணா நிறைவேறிக்கிட்டே வருது. அதான் நேர்த்திய செலுத்தலாம்னு வந்தோம்,’ என்றார். கண்கள் பனிக்க.
‘அம்மன் கடாட்சம் உங்களுக்கு என்னிக்கும் உண்டு. உங்க பேரென்னம்மா?’ இது மூத்த நிர்வாகி.
‘பாத்திமா அஹமது’
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
மதம் வேறுபடுத்துகிறது. பண்பாடு இணைக்கிறது. பண்பாடு மதங்களைக் கடந்தது. சிங்கப்பூர் அதை நமக்கு உணர்த்துகிறது.
*பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் எங்கள் பகுதியில் வசிக்கும் இந்தியர்.
 

Tags: ,

அஸ்திவெறுப்பு (அ) நாகரிகம்

அஸ்தி கரைத்தல் என்பது நமது நீத்தார் கடன்களில் தலையாய ஒன்று. உலக வாழ்வை நீத்தவரது ஸ்தூல சரீர எச்சங்கள் இயற்கையின் கூர்களோடு ஒன்றி இரண்டறக் கலப்பது என்பதிலும், அஸ்தி ( மீதம் இருப்பது ) என்பது ( ஜடப் பொருள் ), இயற்கையில் உள்ள ஜடப்பொருட்களுடன் கலப்பது என்பதிலும் இருந்து எழுந்து வரும் கருத்தாக்கம்.
பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியும் அப்படியானதே. முன்னர் நேரு, காந்தி, இந்திரா காந்தி முதலானவர்களின் அஸ்தி தேசத்தின் பல இடங்களில் தேசத்தின் நீர் / மண் இவற்றுடன் ஒன்றாக்கப்பட்டது.
காந்திஜியின் அஸ்தி சிங்கப்பூர் வரை எடுத்து வரப்பட்டு கரைக்கப்பட்டது. சீனப் பெரும்பான்மையான சிங்கப்பூரில் ஒரு மஹாத்மாவின் அஸ்தி கரைக்கப்பட்டதை எந்த மதத்தினரும் / நாகரீகத்தினரும் எதிர்க்கவில்லை. தங்கள் நாட்டில் ஒரு மஹானின் அஸ்தி கரைந்ததை இன்றும் நினைவுகூர்கிறார்கள். அதற்காக புல்லர்டன் ஹோட்டல் அருகில் உள்ள க்ளிப்போர்டு பியர் பகுதியில் நினைவகமும் ஏற்படுத்தியுள்ளனர்.
கிழக்கத்திய சம்பிரதாயங்கள் இந்திய சீன ஜப்பானிய தேசங்களை உள்ளடக்கியவை. பெயர்களில் வேறுபட்டிருந்தாலும் ஆத்மா குறித்த நம்பிக்கைகள், பல உருக்களில் உள்ள இறை ஒருமை, தத்துவ வளர்ச்சி மற்றும் கட்டமைத்தல் முதலியவற்றில் ஒன்றுபட்டே உள்ளன.
வாஜ்பாயின் அஸ்திக்கு நாகாலாந்தில் உள்ள நம்பிக்கை சார்ந்த எதிர்ப்புகள் நமது பண்பாட்டிற்குச் சிறிதும் தொடர்பில்லாத ஒரு (அ)நாகரிகத்தின் வெளிப்பாடே என்பதை உணர்ந்துகொள்ள பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை.
 

Tags: , ,

சிங்கப்பூர் ஆவணி அவிட்டம் 2018

சிங்கப்பூர் தக்ஷிண பாரத ப்ராம்மண சபா(SDBBS) வழக்கம் போல் இந்த ஆண்டும் யஜுர் உபாகர்மாவுக்கென்று மிகச்சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. நான் மூன்றாவது கோஷ்டியில் (10 மணி) பங்கு பெற்றேன். 900 பேர் வந்திருந்ததாகத் தெரிவித்தார்கள். அதற்கு முன்னர் 2 கோஷ்டிகள் முடிந்துவிட்டிருந்தன. காமோகார்ஷீ ஜபம் முதல், காண்டரிஷி தர்ப்பணம், இறுதியில் வேத ஆரம்பம் வரை நிறுத்தி நிதானமாக சபா வாத்யார் மைக் மூலம் நடத்தி வைத்தார். சங்கல்பம் செய்து வைக்கும் போது பூர்ணா புஷ்களாம்பா ஸமேத தர்மஸாஸ்தா துவங்கி, இனி ஒரு ஸ்வாமி இல்லை என்னும் படியாக அனைவரையும் வேண்டிக்கொண்டு செய்துவைத்தார். பரமேஸ்வரப் ப்ரீர்த்தியர்த்தம் சொன்னவுடன் நாராயணப் ப்ரீர்த்தியர்த்தம் சொல்லத் தவறவில்லை. தலை ஆவணி அவிட்ட வடுக்கள் ஹோமம் செய்தனர். சில வாண்டுகள் ஹோமம் செய்யும் அண்ணன் அருகில் கள்ளப்பூணுல் போட்டுக்கொண்டு வால்த்தனம் செய்துகொண்டிருந்தன. சின்ன வேஷ்டி கட்டிக்கொண்டு தவழ்ந்து வந்து பஞ்ச பாத்திரங்களில் விஷமம் பண்ணிக்கொண்டிருந்த சின்னக் கண்ணனைத் துரத்திக் கொண்டு அவன் அம்மா ஓடிக்கொண்டிருந்தாள். சபாவில் ஸம்ஸ்க்ருத வகுப்புகள், ருத்ரம், சமகம் வகுப்புகள் துவங்குகிறார்கள். பாரதி வேதம் வளர்த்த தமிழ் நாடு என்று பாடினான். இப்போது இருந்தால் சிங்கப்பூரைப் பாடியிருப்பான். சிங்கப்பூரில் யஜுர் உபாகர்மா இன்னும் எனக்கு எத்தனை முறை வாய்த்திருக்கிறது என்று தெரியவில்லை. சிரத்தையுடன் செய்கிறார்கள். வாழ்க வளமுடன்.

Avani Avittam Singapore

 

Tags: , ,

பிரதமர் மோதியின் சிங்கப்பூர்ப் பயணம்

மாணவர்களே, பிரதமர் மோதியின் சிங்கப்பூர்ப் பயணம் குறித்துப் பார்ப்போம்.

பிரதமர் மோதி 2018ல் சிங்கப்புர் ஷாங்ரி லா கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுவார் என்று 2017 செப்டம்பரில் முடிவானது. ஷாங்ரி லா கூட்டம் உலகப் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கொருமுறை கூடிப் பேசும் நிகழ்வு. தற்போதைய கொந்தளிப்பான தெற்கிழக்காசியச் சூழலில் பிரதமரின் பேச்சு மிகவும் எதிர்பார்க்கப் பட்ட ஒன்று.

சூழல் இது தான்: சீனா தனது அதிகாரத்தைப் பல வகைகளிலும் காட்டத் துவங்கிவிட்டது. தென்சீனக் கடல் முழுதுமே தனக்குச் சொந்தம் என்று கூறி, அக்கடற் பகுதியில் உள்ள தீவுகளை ஆக்கிரமித்து, புதிய தீவுகளை உருவாக்கி, அதில் தனது விமானப் படையின் விமானங்களையும் தரை இறக்கியுள்ளது. இதனால் வியட்னாம், பிலிப்பன்ஸ், தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், மலேசியா, இந்தோனேசியா முதலிய நாடுகள் அமைதியிழந்துள்ளன.

அத்துடன் சீனா மற்ற நாடுகளான இலங்கை, சூடான், திஜோப்தி முதலான நாடுகளில் துறைமுகங்கள் கட்டப் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளது. அந்த நாடுகள் திருப்பித் தர இயலாத கடன்கள் அவை. கட்டத் தவறினால் துறைமுகங்கள் சீனாவிடுடையவையாகும் அபாயம். இதனால் இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல், மலாக்கா நீர்வழி முதலானவை சீனாவின் ஆதிக்கத்தில் வீழும் அபாயம், இவ்வழிகளில் நடக்கும் வணிகம் முழுவதும் சீனாவின் கைக்குச் செல்லும் விபரீத நிதர்ஸனம். இவற்றால் இவ்வழியில் உள்ள நாடுகள் பெரும் கலக்கத்தில் உள்ளன.

வட கொரியா என்னும் துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி சீனா அமெரிக்காவையும் ஜப்பானையும் பலமுறைகள் பணியவத்துள்ளது. இக்கட்டுரை எழுதப்படும் நிலையில் வட கொரிய – அமெரிக்க சந்திப்பு நிகழுமா என்னும் கேள்வி உள்ளது. அமெரிக்கா சீனாவையே இந்த ஸ்திரத்தன்மையற்ற நிலைக்குக் காரணம் என்று சொல்லியுள்ளது.

டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றவுடன் அமெரிக்காவின் படைகள் தெற்காசியாவில் இருந்து வெளியேறும் என்றும் டி.பி.பி. என்னும் அட்லாண்டிக் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாகவும் அறிவித்ததை அடுத்தும் சீனாவின் ஆதிக்கம் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது.

சீனா தனது சோஷலிசப் பொருளாதாரத்தை விடுத்துச் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தால் பெரிதும் வளர்ச்சி அடையும் என்றும், அதனால் அதன் தலைக்கனம் அதிகரித்து தெற்காசிய நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைய வாய்ப்புள்ளது என்று 1970களிலேயே தீர்க்கதரிசனத்துடன் தெரிவித்தார் சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ. அதனால் ஆசியான்(ASEAN) என்னும் தெற்காசிய னாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவைக் கொண்டுவரப் பெரிதும் பாடுபட்டார். இந்தியாவைச் சீனாவுக்கான Counter Weight என்று சரியாகக் கணித்த தீர்க்கதரிசி லீ, இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தார். சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பனிப்போரில் குளிர் காய்ந்துகொண்டிருந்த இந்திரா காந்தி  லீயின் பேச்சிற்கு மசியவில்லை. லீ இது குறித்துத் தன் நூலில் குறிப்பிடுகிறார்.

Modi_LKY

Media compares Modi with Lee Kuan Yew

இந்த நேரத்தில் லீயின் மதி நுட்பம், ஹென்றி கிஸ்ஸிஞ்சரின் செயல் திறன் இரண்டுமாகச் சேர்ந்து அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸனைச் சீனாவிற்கு அழைத்துச் செல்கிறது. அதுவரை பேசாத இரு துருவங்கள் பேசிக்கொள்கின்றன. பின்னர் சீனாவில் டெங் ஜியாபெங் பதவியேற்கிறார். சிங்கப்பூரின் லீ குவான் யூ அவருக்கு மதியுரை அளித்துச் சீனாவைக் கம்யூனிசப் போக்கிலிருந்து சந்தைப் பொருளாதாரத்திற்கு மாற்றுகிறார்.

பின்னர் 1991ல் சோவியத் யூனியன் உடைகிறது, உலகம் ஒரு துருவப் பார்வைக்குள் அடியெடுத்து வைக்கிறது. இந்தியாவின் நரசிம்மராவ் Look East Policyயை முன்வைக்கிறார். இந்தியா நிர்வாக, பொருளாதாரச் சீர்திருத்தப் பாதையில் பயணிக்கிறது. சிங்கப்பூரின் பிரதமர் கோ சொக் தொங் அவர்களின் சீரிய முயற்சியால் இந்தியா ஆசியான் நோக்கி நகர்கிறது.

பிரதமர் வாய்பாய் கோ சோக் தோங் சந்திப்பு, பின்னர் 2005ல் CECA – Comprehensive Economic Cooperation Agreement – என்னும் ஒப்பந்தம் என்று இந்திய-சிங்கப்புர் வர்த்தகப் புரிந்துணர்வுகள் நடைபெறுகின்றன. தடையற்ற வர்த்தகம் என்னும் நிலை நோக்கி இரு நாடுகளும் நகர்கின்றன. 2018ல் பிரதமர் மோதியின் சிங்கப்பூர் வருகையில் CECAவின் இரண்டாவது தளம் கையெழுத்தானது. 30 பொருட்களுக்கான சுங்கத் தீர்வை குறைப்பு, வர்த்தகம் அதிகரிப்பு என்று பலமுனைகளில் ஒத்துழைப்பு சீரடையப் பெரு முயற்சி என்று நடந்தேறியது.

ஷாங்ரி லா கூட்டத்தில் பிரதமர் மோதி ஆசியான் கூட்டமைப்பின் தேவை, கடல்வழிப்பதைகளில் அனைத்து நாடுகளுக்கும் உரிமை, நாடுகளிடையேயான சச்சரவுகளை நீதிமன்றங்கள் மூலம் தீர்த்துக் கொள்ளுதல், நரசிம்ம ராவ் சொன்ன ‘கிழக்குப் பார்வை’, ஆசியானிக்கான இந்தியாவின் உறுதுணை என்று தெற்காசிய நாடுகளுக்குத் தெம்பளிக்கும் வகையில் பேசினார். சிங்கப்பூர் மருவதற்கு முன் இந்தோநேசியா சென்று அங்கு சபாங் துறைமுகம் அமைக்க உதவி செய்ய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோதி சொல்லாமல் சொன்னது என்ன?

 1. தென்சீனப் பகுதி அப்பகுதியின் அனைத்து நாடுகளுக்கும் உரிமையுள்ள பகுதி.
 2. அனைவருக்கும் வர்த்தகம் செய்ய உரிமை உண்டு.
 3. யாருக்கும் ஏகபோக உரிமை இல்லை ( சீனாவிற்குச் செய்தி)
 4. ஆசியான் கூட்டமைப்புக்கு இந்தியா உறுதுணை செய்யும்
 5. அமெரிக்கா இப்பகுதியில் இருந்து விலகினாலும், நாங்கள் இருக்கிறோம்
 6. அமெரிக்க சந்தை(TPP) இல்லாவிட்டாலும் எங்கள் நாட்டுச் சந்தை உள்ளது

பாரதம், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் இவை இணைந்த நாற்கரக் கூட்டு (Quadrilateral Alliance) என்ற ஒரு பார்வை உள்ளது. இது சீனாவிற்கெதிரான பாதுகாப்பு அரண். சீனாவின் OBOR – One Belt One Road – திட்டத்திற்கு எதிரான / இணையான ஆனால் சீனாவைச் சாராத ஒரு வணிக, ராணுவக் கூட்டு இது. இதற்கும் சிங்கப்பூரின் பங்களிப்பு தேவையே. ஏனெனில் ஆப்பிரிக்காவில் துவங்கி மலாக்கா கடல் வழி வரையில் உள்ள பாதையில் சிங்கப்பூர் சிறப்பான பொருளியலுடன் இயங்கும் துறைமுக நகரம். ஆகவே இதன் உதவியும் தேவை என்பது வெளிப்படை.

இது தவிர, சிங்கப்பூருடனான ஒப்பந்தங்கள் பல கையெழுத்தாயின. சிங்கப்பூர் – இந்திய வர்த்தகம் கடந்த ஓராண்டில் 14% அதிகரித்து 25பில்லியன் டாலர் என்று உயர்ந்துள்ளது. இது 2005ல் 16.6 பில்லியன் என்று இருந்து, 2017ல் 25 பில்லியன் என்று உயர்ந்துள்ளது. இத்துடன் இந்தியாவில் சிங்கப்பூர் முதலீடு 36.3 பில்லியன் டாலர் ( உலக நாடுகளில் அதிக அளவில் இந்தியாவில் முதலீடு செய்துள்ள நாடுகளில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தில் உள்ளது).

கவனிக்க வேண்டியது : சிங்கப்பூர் முதலீடு  2014ல் 22.7 பில்லியன் டாலர். 2017ல் 36 பில்லியன் டாலர். இது மிக கூர்ந்து நோக்கத்தக்கது.

இது தவிரவும், சிங்கப்பூர் ஆந்திர மாநிலத்தில் அமராவதி நகரை வடிவமைத்து வருகிறது. FinTech என்னும் வங்கித் தொழில் நுட்பத்துறையில் சிங்கப்பூர் இந்தியாவுடன் நல்ல பயனளிக்கும் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இந்தியாவின் Smart Nations திட்டத்திற்கு சிங்கப்புர் மிகச் சிறந்த அறிவுரைகளையும் ஒத்துழைப்பையும், அனுபவ அறிவையும் வழங்கிவருவதும் அறிந்ததே. இது தவிரவும் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் சிங்கப்பூரின் Hyflux நிறுவனம் குடிநீர் தொடர்பான பணிகளில் உதவி வருவதும், இந்தியத் துறைமுகங்கள் மேம்பாட்டிற்குச் சிங்கப்பூரின Keppel Corporation தனது மதியுரைகளை வழங்கி வருவதும் நாம் அறிந்ததே.

நான்யாங் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் (NTU) இந்திய முதலீட்டாளர் 4 மில்லியன் டாலர் வழங்கியுள்ளார். இதனால் NTUவிற்கும், IIT-Madras, IISc-Bangaloreற்கும் தொடர்பு ஏற்பட்டு, மாணவர்கள் மூன்று பல்கலைகளையும் இணைத்த முனைவர் பட்டப் படிப்புக்களைப் பெறவியலும். இதுவும் மோதியின் பயணத்தின் போது நடந்த ஒன்று.

narendra-modi-and-lee-hsien-loong-2

PM Modi and PM Lee Hsien Loong

சிங்கப்பூரில் NETS என்னும் பணப் பரிமாற்றச் சேவை உள்ளது. கடைகளில் இதன் மூலம் அட்டைகளைக் கொண்டு பணம் செலுத்தவியலும். இந்தியாவில் அவ்வாறே RuPay என்னும் வழிமுறை உள்ளது. இனி NETS அட்டைகளின் வழி இந்தியாவிலும், RuPay அட்டைகளின் வழி சிங்கப்பூரிலும் பணப் பரிமாற்றச் சேவை, பொருட்களை வாங்குதல் முதலிய சேவைகளைப் பெறலாம். இதனால் Visa, MasterCard முதலான அமெரிக்க நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய சேவைக் கட்டணத்தைத் தவிர்க்கலாம். இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது மிகவும் பயனளிக்கும் சேவையாகும். இதுவும் பிரதமர் மோதியின் வருகையின் போது நிகழ்ந்த ஒன்று. (பிரதமர் சிங்கப்புர் லிட்டில் இந்தியாவில் உள்ள இந்திய மரபுடமைக் கழகத்தில் ஒரு ஓவியத்தைத் தனது RuPay அட்டை மூலம் வாங்கினார்)

இம்முறை கையெழுத்தான சில ஒப்பந்தங்கள்:

 1. இந்தியத் தாதிமைப்(Nursing) படிப்புக்கான அங்கீகாரம்
 2. இணையப் பாதுகாப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம்
 3. போதைப் பொருள் தடுப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம்
 4. பாதுகாப்புத் துறை – புரிந்துணர்வு ஒப்பந்தம்
 5. Enterprise Singapore – National Skills Development Corp கூட்டியக்க ஒப்பந்தம்

சிங்கப்புரில் தாதியர்களுக்கான தேவை பெரிய அளவில் உள்ளது. ஆகவே இந்தியாவில் தாதிமைப் பயிற்சி / அனுபவம் உடையவர்கள் பலருக்குச் சிங்கப்புரில் வேலைக்கான ஏற்பாடு தாதியர்களுக்குப் பெருத்த உவகையளிக்கும்.

இந்திய Start-up நிறுவனங்கள் தற்போது 4760 உள்ளன. இது உலகில் மூன்றாவது எண்ணிக்கை. இந்த நுறுவனங்களுக்கான துவக்க நிதி 2016ல் 4.06 பில்லியன் அமெரிக்க டாலர். ஆனால் 2017ல் 13.7 பில்லியன் அமெரிக்க டாலர் என்று அதிகரித்துள்ளது. இந்த மாபெரும் Start-up கூட்டியக்கத்தைச் சிங்கப்பூர் பயன்படுத்திக் கொள்ள உள்ளது. தனது Start-up நிறுவனங்கள் இந்திய Start-upகளுக்கான பங்குச் சந்தையைப் பகிர்ந்துகொள்ளவும், அவற்றுடன் இணைந்து செயலாற்றவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. சுமார் 10,000 நிறுவனங்கள் என்றூ உயர வாய்ப்புள்ளது என்று சிங்கப்புரின் வர்த்தக அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

நான்யாங் தொழில் நுட்பப் பல்கலையில் நேர்காணலில் பிரதமர் சிறப்பான மதியுரை வழங்கினார். இந்திய-சிங்கப்பூரிய மாணவர்களிடையே ஹேக்கத்தான் (Hackathon) நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்றும், அதனால் பல புதிய புத்தாக்கச் சிந்தனைகள் உதயம் ஆகும் என்றும் சொன்னார். இம்முறை சிங்கப்பூரில் மென்பொருள் நிறுவனங்களில் நடைமுறையில் உள்ள ஒன்று. ஆனால் இரு நாட்டு மாணவர்களின் அறிவுத்திறத்திற்கும் விருந்தாய் அமைந்தது இந்த மதியுரை.

இந்தியக் கடற்படைக் கப்பல்களுக்கும், நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் சிங்கப்பூர் எரிபொருள் மற்றும் பராமரிப்புச் சேவைகளை அளிக்கவிருக்கிறது. வியத்னாம் பகுதியில் உள்ள ONGC நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறுகளுக்கான பாதுகாப்புப் பணிகளுக்காகவும், ஆப்பிரிக்கக் கண்டம் முதல் மலாக்கா கடல் வழி வரையிலான கடல்வழிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இந்தியக் கடற்படைக்கு இச்சேவை மிகவும் பயனளிக்கும்.

ஷாங்ரி லா கூட்டத்தில் பிரதமர் மோதி கடல் வழி / வான் வழிப் பாதுகாப்பு குறித்துப் பேசியதையும், அமெரிக்க அரசு பசிபிக் கமாண்ட் (PACOM) என்னும் தனது பிரிவை இந்தோ-பசிபிக் கமாண்ட்(US Indo-Pacific Command) என்று மாற்றி அமைத்துள்ளதையும் ஒப்பு நோக்கினால் உலகம் செல்லும் திசையும் அதில் இந்தியாவின் முக்கிய நிலையும் புரியும்.

இவை குறித்து மேலும் கேள்விகள் இருப்பின் கேளுங்கள்.

பேஸ்புக்கில் இணைந்திருக்க :

https://www.facebook.com/amaruvidevanathan

தரவுகள்:

 1. http://www.thejakartapost.com/academia/2018/05/30/indian-pm-modis-oleh-oleh.html
 2. https://www.straitstimes.com/singapore/lets-have-indian-and-singapore-students-take-part-in-joint-hackathon-modi-to-pm-lee
 3. https://www.straitstimes.com/singapore/modi-in-spore-for-three-day-official-visit
 4. https://www.businesstimes.com.sg/government-economy/singapore-startups-to-gain-faster-access-to-indias-startup-ecosystem
 5. https://www.republicworld.com/world-news/south-asia-news/on-pm-modis-visit-india-and-singapore-sign-8-mous-heres-all-you-need-to-know
 6. http://theindependent.sg/modi-does-a-lee-kuan-yew-to-stamp-out-corruption-in-india/
 7. India Rising – Ravi Velloor

 

 

 

 

Tags: , , , , , ,

சங்கப்பலகை அமர்வு 8

சங்கப்பலகை வாசகர் வட்டத்தின் 8வது அமர்வு இன்று சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடைபெற்றது. எழுத்தாளர் மாதங்கி வரவேற்புரை வழங்க, கலைகமள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் ‘தெரிந்த பாரதி, தெரியாத செய்திகள்’ என்னும் தலைப்பில் பேருரை ஆற்றினார். ஆமருவி தேவநாதன் நன்றி கூற, விழா இனிதே நிறைவுற்றது.  புதிய வாசகர்கள் பலரும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் திருமதி.ஞானம் அவர்க்ளும், தினமலர் இதழாளர் திரு.புருஷோத்தமன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு.ஆண்டியப்பன் முதலியோரும்  பங்கேற்றனர். 40 வாசகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி, மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. சில காணொளிகள்:

எழுத்தாளர் மாதங்கி அவர்கள் ஆற்றிய வரவேற்புரை.

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்கள் ஆற்றிய ‘தெரிந்த பாரதி, தெரியாத செய்திகள்’ சிறப்புரை.

 

 

Tags: ,

‘ஸே ஸே’

தொடந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் நேற்று சிங்கப்பூர் எம்.ஆர்.டி. ரயிலில் நிற்கக் கூட இடம் இல்லை. மழை வேறு. ஊட்ரம் பார்க் நிலையத்தில் 25 வயது மதிக்கத்தக்க, நீல விழிகள் கொண்ட ஐரோப்பியப் பெண் கைக்குழந்தையுடன் ஏறினாள். கூட்டத்தில் ‘பிராம்’ வண்டியை நுழைக்க பெரும் முயற்சி தேவைப்பட்டது. வயதானவர்கள் / கர்ப்பிணிப்பெண்கள் அமரும் 2 இருக்கைப் பகுதியில் அமர்ந்தாள்.

‘சமஸ்கிருதத்திற்கான போராட்டம்’ நூலில் ஆழ்ந்திருந்த என் பாதத்தில் எதோ அழுத்தத்தை உணர்ந்தேன். அருகில் நின்றிருந்த சீன முதியவர் – 80 வயது இருக்கலாம் – தன் ஊன்றுகோலை என் காலில் வைத்து அழுத்திக்கொண்டிருந்தார். மெதுவாக இறக்கி வைத்தேன். அவருக்குத் தான் அப்படிச் செய்தது கூட தெரியவில்லை. அந்த முதியவரின் ஒரு கால் நிலை இல்லாமல் ஆடிக்கொண்டிருந்தது.

அப்போதுதான் கவனித்தேன். அந்தப்பெண் ஒரு இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள். அவள் இருந்த பகுதியில் யாரும் நிற்கக்கூட இல்லை எனபதையும் உணர்ந்தேன். ‘ஒரு இடத்தில் அமருங்கள்’ என்று அந்தப் பெரியவரிடம் சொன்னேன். அவர் சீனத்தில் ஏதோ சொன்னார். ‘அடுத்த ஸ்டேஷனில் இறங்கப்போகிறேன்’ என்பதாக இருக்கலாம் என்று ‘சமஸ்கிருதத்திற்கான போராட்ட’த்தில் ஆழ்ந்தேன்.

10 நிமிடங்கள் கழித்துப் பார்த்தேன். பெரியவர் இன்னும் நின்று கொண்டிருந்தார்.அந்தப் பெண் 2 இருக்கைகளில் அமர்ந்திருந்தாள்.

ஒரு இடத்தைக் காலில் செய்யுமாறு சொல்ல, பொறுக்க முடியாமல் ஒரு அடி முன்னேறினேன். பெரியவர் என் கையைப் பிடித்து ஏதோ சொன்னார். சீனம் புரியாததால் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. ‘யாரும் ஒன்றும் சொல்லாமல் இப்படி நிற்கிறார்களே’ என்று கோபம் மேலிட, அப்பெண்ணைப் பார்த்தேன்.அவள் பெரிய துணியால் மூடியபடி குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டிருந்தாள்.

பெரியவர் இப்போது என் கை பிடித்து மீண்டும் எதோ சொன்னார். கடைசியில் ‘ஸே ஸே’ ( நன்றி) என்றது புரிந்தது. ‘நான் போக வேண்டியவன். நிற்கலாம். குழந்தை வாழ வேண்டியது. அது சௌகர்யமாக உண்ணட்டும்’ என்பதாக ஏதாவது சீன / கிழக்காசிய அறமாக இருக்கலாம் என்று நினைத்துகொண்டேன்.

நான் இறங்கும் இடம் வந்தது. பெண் இன்னமும் இரு இருக்கைகளில் அமர்ந்திருந்தாள். குழந்தை அவள் மடியில் சௌகர்யமாகத் தூங்கிக்கொண்டிருந்தது. பெரியவர் ‘ஸே ஸே’ என்றார்.

நடைமேடையில் இறங்கிய பின் பெரியவரைப் பார்த்தேன். பற்கள் இல்லாமல் பளீரென்று சிரித்தார். அவரது ஒரு கால் இன்னமும் ஆடிக்கொண்டிருந்தது.

 

Tags:

சங்கப்பலகை -4 நிகழ்வுகள்

‘கம்பன் காட்டும் கணைகள்’ என்னும் அ.கி.வரதராஜனின் நூல் ஆய்வுடன் இன்றைய சங்கப்பலகை நிகழ்வு துவங்கியது. திருமதி.சிவசங்கரி செல்வராஜ் வாலமீகி ராமாயணத்தையும் கம்பனையும் வரதராஜனாரின் நூல் வழியாக ஒப்பிட்டுப் பேசினார். சிவசங்கரி துளசி ராமாயணத்தையும் உள்ளிழுத்து, வாலி வதம் குறித்த ஒப்புமைப் பார்வையை முன்வைத்தார். பக்தி இலக்கியங்களில் ஆழ்ந்த ஞானம் உடைய இந்தப் பேச்சாளர் அமைதியாகவும், ஆழமாகவும் பேசியது மனதிற்கு நிறைவாக இருந்தது.

பின்னர் பேசிய தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அவர்கள் தமிழ் பிராமி கல்வெட்டெழுத்துக்கள் வழியாக நீண்ட தமிழக வரலாற்றைப் பற்றி உரையாற்றினார். பிராமி எழுத்துக்கள் ‘கிராஃபிட்டி என்கிற குறியீட்டுக் காலத்திற்கு அடுத்த, மொழி வளர்ச்சியின் அடி நாதம்என்று சொல்லத்தகுந்த காலகட்டத்தை உணர்த்தியதை உணர முடிந்தது. தமிழ் வட்டெழுத்து வருவதற்கு முந்தைய காலகட்டத்தை பிராமி எழுத்துக்கள் காட்டி நின்றன. இந்த எழுத்துக்கள் வழியாக சமண, பௌத்த, ஆஜீவக சமயங்கள் திகழ்ந்த தமிழக நிலபகுதிகள் யாவை என்று படங்களின் ஊடாக திரு சாந்தலிங்கம் விளக்கியது நம்மை பிராமி எழுத்துக் காலத்தில் சில நிமிடங்கள் கொண்டு சென்றது.

எத்தனை சமணப் பள்ளிகள்? அப்பள்ளிகளுக்கு எத்தனை தமிழ் மன்னர்கள் கொடை அளித்திருக்கிறார்கள்? சமணத் துறவிகளுக்கான கல் படுக்கைகள் எங்குள்ளன? அவற்றில் எழுதப்பட்ட பிராமி எழுத்துக்கள் மூலம் நாம் அறியும் செய்திகள் யாவை? பிராமி எழுத்துக்களை எப்படிப் படிப்பது ? என்று 1 மணி நேரத்திற்கும் மேலாக திரு.சாந்தலிங்கம் அவர்கள் ஆற்றிய உரை, தமிழர்களுக்கு மிக முக்கியமான உரை என்பதில் ஐயமில்லை. சித்தன்னவாசல், பல குடைவரைக் கோவில்கள் என்று பயணித்து, பிள்ளையார்பட்டியில் உள்ள விநாயகர் சிலையில் கொண்டு முடித்தார் திரு.சாந்தலிங்கம். ஆஜீவக, சமண மரபுகள் பற்றிய பிராமி எழுத்துக்கள் என்று துவங்கிய அவரது பேச்சு, திருப்பரங்குன்றத்தில் தவ்வை வழிபாடு வரை பயணித்து, மிக செறிவான தொல்லியல் சார்ந்த வரலாற்று, சமய, வாழ்வியல் செய்திகளை ஆதாரத்துடன் நிறுவுவதாக இருந்தது.

இறுதியாகப் பேசிய முனைவர்.கௌசல்யா ‘சிலம்பு காட்டும் பெண்கள்’ என்பது பற்றி ஆழ்ந்த, செறிவானதொரு உரையை நிகழ்த்தினார். சிலம்பு வழியாக அக்காலத்துப் பெண்களின் வாழ்வியல், குலங்கள் சார்ந்த பெண்களின் குணாதிசியங்கள், பெண்களுக்கான பொதுவான நிலைகள், அறங்கள் என்று பன்முகத்தன்மை கொண்ட பார்வையாக இருந்தது அவரது உரை. பெண்களை ஆய மகளிர், அந்தண மகளிர், மறவர் மகளிர், கணிகையர் என்று பிரித்துக்கொண்டு அவர்களது தனித்தன்மைகளையும், பிரிக்காமல் பொதுவாக மகளிர் சார்ந்த பார்வை என்பதாக அவர்களுக்கான பொது இயல்புகள் என்று சிலம்பு என்ன காட்டுகிறது என்பதை கௌசல்யா கூறியது, தேர்ந்த இன்னொரு ஆய்வாளர் ஒருவர் சிங்கை தமிழாய்வுத் துறையில் இருக்கிறார் என்பதை உணர்த்தியது. கண்ணகி குறித்த ‘பேசா மடந்தை’ என்னும் தொடர் பற்றிய இவரது பார்வை போற்றுதலுக்குரியது.

திடீரெனப் பேச வந்த ஆசிரியர் முத்துக்கிருஷ்ணன், எந்த தயாரிப்பும் இன்றி சிலம்பைப் பொழிந்தார். ‘தேரா மன்னா..’பாடல் கூறி, ” கண்ணகி பேசா மடந்தை அல்லள்” என்று நிறுவினார் முத்துக்கிருஷ்ணன்.

வாசகர் ராகவன் கம்ப ராமாயணத்தில் வாலி வாதம் பற்றிய பரிணாமப் பார்வை அளித்தார். வரதராஜனின் நூல் அனைவருக்கும் அளிக்கப்பட்ட்து. அத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

 

Tags: ,

குழந்தைகளை வாழ விடுங்கள் ப்ளீஸ்

நண்பரின் மகள் சுதா பூப்டைந்தாள். இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்று நீங்கள் நினைக்கலாம். நான் அப்படி நினைக்கவில்லை. சுதா தொடக்கப்பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கிறாள்.

பெருக்கல் வாய்ப்பாடு பயிலத் துவங்கிய குழந்தை அது. என்ன புரிந்து கொள்ளும்? இப்படிக் கடந்த சில வருடங்களில் இரண்டு மூன்று நிகழ்வுகள் நடந்துவிட்டன. ஏன் இப்படி?

நண்பர் இந்தியர். அவர் அமெரிக்காவில் சில வருடங்கள் பணியில் இருந்த போது சுதா பிறந்தாள். பின்னர் சிங்கப்பூருக்கு மாற்றலாகி வந்துவிட்டார். ஆனால் அமெரிக்க படாடோபம் கொஞ்சமும் குறையவில்லை. அவர் குடும்பத்துடன் வாரத்தில் இரு முறையாவது மெக் டொனால்ட்ல் அசைவம்  உண்பார். வேளை கெட்ட வேளையில் பிட்சா என்னும் பிசாசையும் அவ்வப்போது உண்பது வழக்கம். போதாத குறைக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து முதலிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால் வகைகளை மட்டும் பயன்படுத்துவார்கள். வழக்கமாக வாங்கும் அந்த பிராண்ட் கிடைக்கவில்லை என்றாலும் ஆஸ்திரேலியா பால் எதுவாக இருந்தாலும் வாங்குவார்கள்.

சமீபத்தில் பதப்படுத்தப் பட்ட பாலினால் மனித உடலில் ஹார்மோன்களின் அளவுகள் தாறுமாறான அளவில் அதிகரிக்கின்றன என்று பசு ஆர்வலர் நண்பர் சசி குமார் சொன்னது நினைவுக்கு வந்தது. ஒருவேளை இதனால் கூட இருக்கலாம் என்றும் குழ்ந்தை சுதா விஷயத்தில் நினைக்கத் தோன்றுகிறது.

நேற்று வரை 8-9 வயதுப் பிள்ளைகளுடன் ஓடி விளையாடிய குழந்தை, புரியாத வயதில், தடுமாற்றங்கள் நிறைந்த அணுகுமுறைகளுடன் இனி பயணிக்க வேண்டி இருக்கும் என்று நினைக்கும் போது மனம் ஒரு நிலையில் இல்லை.

பதப்படுத்தப்பட்ட பால், மரபணு மாற்றப்பட்ட தானியங்கள், செயற்கை உரம் – இன்னும் என்னென்னவோ மாற்றங்களுடனும், அவற்றால் என்ன பின் விளைவுகள் ஏற்படும் என்று அறியாமலேயே அவற்றைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள நமது கையறு நிலை நம்மைப் பார்த்து ஏளனம் செய்கிறது.

சின்னக் குழந்தையாக இருக்கும் போதே உதட்டுச் சாயம் பூசுகிறார்கள். அதில் உள்ள வேதியல் பொருட்கள் பற்றி இணையத்தில் தேடினால் மனம் கொதிப்படைகிறது. தெரிந்து பல வேதியல் பொருட்கள், தெரியாமல் என்னென்ன உள்ளனவோ. குழந்தைக்குப் பள்ளியில் இடைவெளி நேரத்தில் உண்ண ‘உடனடி நூடூல்ஸ்’ ,’கப் நூடூல்ஸ்’ என்று வழங்குகிறார்கள். ஒரு பிளாஸ்டிக் டம்ளர் அளவு நூடூல்ஸ் உள்ளது. அதில் வெந்நீர் ஊற்றுகிறார்கள். இரண்டு நிமிடத்தில் நூடூல்ஸ் தயார். குழந்தை உண்கிறது. இதில் என்ன விஷங்கள் உள்ளனவோ தெரியாது.

அது தவிர உடனடி-மருதாணி என்றொரு வழக்கம் கிளம்பியிருக்கிறது. மருதாணி இலை பறித்து, அரைத்து இட்டுக்கொள்வது என்று இல்லாமல், பழுப்பு நிறத்தில் ஒரு பொடியைத் தண்ணீரில் கரைத்து இட்டுக்கொள்கிறார்கள். இல்லை, உடலில், கையில் வரைந்து கொள்கிறார்கள். என்னென்ன விஷ ஊற்றுகள் உடம்பினுள் செல்கின்றனவோ!

இந்தக் கண்றாவிகள் தவிர தோலின் நிறத்தை மாற்றுகிறோம் என்று சொல்லி என்னென்னவோ மாவுக்கலவைகளை உடலில் அப்புகிறார்கள். குழந்தையையும் விடுவதில்லை.

உடம்பின் உள் செல்லும் உணவு முதல், வெளியில் தடவும் மாவு வரை தொலைக்காட்சியில் கண்டதை நம்பி என்னவென்றே தெரியாமல் எடுத்துக்கொள்ளும் இந்த ‘முற்போக்கு-பெற்றோர்’களால் சுதா போன்ற குழந்தைகள் தங்கள் பிள்ளைப் பருவத்தை விரைவில் தொலைத்துவிடுகின்றன.

இவற்றைப் பற்றிப் பேசினால் பழமைவாதி என்கிறார்கள். அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன். குழந்தைகளை குழந்தைகளாக இருக்கவிடுங்கள். போதும்.

 

Tags: ,

சிங்கப்பூர் 'சங்கப்பலகை' முதல் அமர்வு – நிகழ்வுகள்

அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களுமாக 26 பேர் வந்திருந்த ‘சங்கப்பலகை’ முதல் அமர்வு, பல சிந்திக்க வைக்கும் பேச்சுக்களுடன் சிறப்பாக நடைபெற்றது. 86 வயது இளைஞரும் தமிழ் ஆர்வலருமான திரு.ஏ.பி.ஆர் ஐயா வந்திருந்து ஆசிர்வதித்தார். திரு.செல்வம் கண்ணப்பன், திரு.புகழேந்தி முதலான ஆர்வலர்களும், விழாவில் ஆதரவாளர் திரு.பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்தது பெரும் ஊக்கம் அளித்தது. ‘நான் இராமானுசன்’ நூலின் கன்னட மொழிபெயர்ப்பாளர் ஹரிணி அவர்களும் வந்திருந்தார்.

பாவை சீயர் –  மாதங்கி

பாலகாண்டம் – நவீன கவிதை – கண்ணன் சேஷாத்ரி

 

நாட்டுப் பசு – சசி குமார்

 

அதிபதி – புகழேந்தி

 
1 Comment

Posted by on November 19, 2016 in Writers

 

Tags: , , ,

 
%d bloggers like this: