அடிப்படை வசதிகளை நோக்கிப் பல நாடுகள் பயணிக்கும் வேளையில் அறிவு

Image

அடிப்படை வசதிகளை நோக்கிப் பல நாடுகள் பயணிக்கும் வேளையில் அறிவு பூர்வமாக நாட்டை நகர்த்துவது பற்றி யோசிக்கிறது சிங்கப்பூர்.

தேசீய நூலக வாரியம் உலக அளவில் ஆகச் சிறந்த ஒரு நூலக நிர்வாகம் என்பது நாம் அறிந்ததே.

Read Singapore என்ற பெயரில் இந்த ஆண்டின் வாசிப்பு அனுபவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முனைந்துள்ளது சிங்கை அரசு. Nurturing a nation of Readers – வாசிக்கும் ஒரு நாட்டைப் பேணுதல் என்பது நோக்கம்.

இவ்வாண்டின் தலைப்பு “ஒரே வானம்”. ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் என்று நான்கு அங்கீகரிக்கப்பட்ட மொழி ஆசிரியர் படைப்புகள் இடம் பெரும்.

இந்த ஆண்டு தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆக இவ்வருடம் அவர் எழுதியுள்ள நூல்கள் பற்றிய ஆய்வுகள், கலந்துரையாடல்கள், நேர் காணல்கள் ஆகியன இருக்கும்.

ஜெயமோகன் படைப்புகள் வாசிக்க தனி உணர்வு வேண்டும். வாசித்தபின் ஏற்ப்படும் உணர்வு தனி. ஆனால் வாசிக்கும்போது நிகழும் உணர்வுகள் – அவை தனி. அனுபவித்தால் தான் தெரியும்.

வாசகர்களே, முடிந்தவரை ஜெயமோகன் நூல்களைப் படித்துத் தயாராகிக் கொள்ளுங்கள். எழுத்தாளரைச்  சந்திக்கும்முன் அவரது அலைவரிசைக்குத் தயாராகிக்கொள்ளுங்கள்.

இரவில் ஒரு தரிசனம்..

இரவு பத்தரை மணி அளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்.

சிங்கப்பூரில் உணவுச் சந்தைகள் ஆக அதிகம். அவற்றைக்கடந்துதான் வீடு வந்து சேர வேண்டும்.  வீட்டை நெருங்கும்போது  ஒரு உணவுச்சந்தையில் சில கச முசா. எப்போதுமே வெள்ளிக்கிழமை அங்கு கோலாகோலமாக இருக்கும்.  பெரியவர்கள்  பலர்  பீர் உற்சாக  பானம் அருந்தி உணவு அருந்தும் வழக்கம் உண்டு. வேறுபாடு இல்லாமல் உணவு அருந்துவார்கள். அங்கு ஒரு தொலைக்கட்சிப்பெட்டி இருக்கும். அதில் பல நேரங்களில் சீன நாடகங்கள் ஒளிபரப்பாகும்.

ஆனால் இன்று அந்த இடத்தில் உரத்த குரலில் சத்தம். வியப்புடன் நோக்கும் பல உணவு அருந்தும் கண்கள். சத்தம் வந்த திசையை நோக்கினேன். ஒரு உணவு பறிமாறும் ஊழியர் போல் இருந்தவரை  நான்கு பேர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டிருந்தார்கள். முதலில் நண்பர்கள் அடித்து விளையாடுகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவ்வாறு இல்லை என்பது அடுத்த கணம் புரிந்தது.

அதற்குள் அந்த ஊழியர் கீழே விழுந்துவிட்டார். கிடைத்தது சந்தர்ப்பம் என்று நால்வரும் காலால் உதைத்தார்கள்.

வியப்பு. ஆச்சரியம். சிங்கையில் வன்முறை ? அதைவிட வியப்பு அதன் பார்வையாளர்கள். ஒரே ஒருவர் மட்டும் விலக்குவது போல் தெரிந்தார்.

யார் மீது தவறு என்று தெரியாமலும் அவர்கள் பேசும் பாஷை புரியாமலும் நிலை கலங்கிக் குழம்பினேன். என்ன செய்வது என்று புரியவில்லை.

பின்னர் ஆனது ஆகட்டும் என்று விலக்க முயற்சித்தேன், கையில் அலுவலகக் கணினியோடு. பாஷை புரியவில்லை. அதற்குள் முதலில் விலக்க முயற்சித்தவர் ஊழியர் கையைப் பிடித்து வெளியே இழுத்துவிட்டார்.

“ஓடு .. திரும்பிப் பார்க்காமல் வேறு பக்கம் பார்த்து ஓடு “, என்று ஆங்கிலத்தில் சொன்னார். அது அவர் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. அடி பலம். நிலைமை புரியாமல் அங்கேயே நின்றார் அவர். ஊழியர் கண் சிவந்து இருந்தது.

இதற்குள் யாரோ போலீசை அழைப்பது போல் உணர்ந்தேன்.அது எனது நினைவா அல்லது உண்மையாக நான் கேட்டதா என்று தெரியவில்லை.

ஒரு நிமிடம் கழிந்தது. சரியாக ஒரு நிமிடம். அதற்குள் நால்வரில் ஒருவன் “வா, தனியாக வா, ஒரு வழி பண்ணுகிறேன்’ என்று ஆங்கிலத்தில் கத்திக்கொண்டு இருந்தது கேட்டேன். முஷ்டியை உயார்த்திப் பேசினான்.

அடுத்த நிமிடம் அந்த நால்வரும் மறைந்தனர். மாயம் இல்லை. பின்னால் பார்த்தேன் சிங்கபூர் போலீஸ். ஒரு காவல் தலைவர் மற்றும் இரு பெண் காவலர்கள். போலீஸ் கார் விளக்குகள் மின்ன நின்றிருந்தது. எப்போது தகவல் தெரிந்தது? எப்படி அவ்வளவு விரைவில் வர முடிந்தது?  இந்த வன்முறை நிகழ்வே ஒரு மூன்று நான்கு நிமிடங்கள் தான்.

நிகழ்வை காவலர்களிடம் விளக்கினேன். இன்னும் சிலரும் மலாய் பாஷையில் பேசினார்கள். அதற்குள் அடிபட்ட ஆளுக்கு ஒரு பெண் ஒரு கோப்பை ஐஸ் தண்ணீர் கொடுத்தார். காவலர் அவரிடம் விபரங்கள் வாங்கிக்கொண்டார்கள். முழுதும் மலாய் பாஷையில் இருந்ததால் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. ( பேசப்படுவது மலாயா அல்லது சீனமொழியா என்று அறிந்துகொள்ளும் அளவிற்கு என் பகுத்தறிவு வளர்ந்துள்ளது ).

ஒன்று நிச்சயம். வன்முறையாளர்களைப் பிடித்துவிடுவார்கள். இவர்களுக்குச் சட்டம் ஒழுங்கு தலையாய ஒன்று. தண்டனையும் பாரபட்சமில்லாமல் கிடைக்கும். தயை தாட்சண்யம் இல்லாமல் தவறுக்குத் தண்டனை கிடைக்கிறது என்பது பல சமூகக்குற்றங்கள் குறைய வழி செய்துள்ளது. இது தவிர எல்லா இடங்களிலும் “Low Crime does not mean No crime. Stay alert” என்று எழுதி வைத்துள்ளார்கள்.

இரண்டு விசயங்கள் கவனிக்க வேண்டும் :

  1. சண்டை நடந்துகொண்டிருக்கும் போதே யாரோ தகவல் சொல்லி உடனேயே காவல் அதிகாரிகள் வந்தார்கள் ( எல்லாம் முடிந்து சுபம் போட்டபின் வராமல் ).
  2. காவலரைக்கண்டதும் ஒரு நொடியில் வன்முறையாளர் மறைந்தனர். காவல் துறை யின் நேர்மையில் எவ்வளவு நம்பிக்கை இருந்தால் அவர்கள் பயந்து ஓடியிருக்க வேண்டும்? ( நான் யாரு தெரியும்லே, எங்க மாமா யாரு தெரியும்லே எல்லாம் இல்லை )

“ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்

அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்”  என்பது சிங்கப்பூருக்குப் பொருந்தும் என்று இந்த அளவு நாட்டைக் கொண்டுவந்துள்ள இதன் முன்னோடித் தலைவரைப் பற்றி எண்ணிக்கொண்டே வந்தேன். நாடு விடுதலை அடைந்தபின் கொண்டுவந்த முதல் சட்டம் “அரசுப்பணியாளர் நேர்மைச் சட்டம்” ( Public Servants Integrity Act ).

வீடு வரும் வழியில் முதுகு சற்று வலித்தது. தடவிப்பார்த்தேன். கைகலப்பில் யாருக்கோ விழவேண்டிய அடி எனக்கு விழுந்திருக்கிறது. ஆனால் அடியின் வலி பெரியதாகத் தெரியவில்லை.

சிங்கப்பூர் வாசகர் வட்ட நிகழ்வுகள்

சென்ற வாரம் சிங்கப்பூர் வாசகர் வட்டம் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி. வாசிப்பில் நமது கடந்த கால நிகழ்வுகளின் தொனி ( nostalgia) என்பது தலைப்பு.

மிக நிறைவாக இருந்தது இந்த நிகழ்ச்சி. நன்றி திருமதி.சித்ரா ரமேஷ்.

பேச்சாளர்கள் பலரின் பேச்சுக்கள் மிகவும் ரசிக்கும்படி இருந்தன. பலவற்றுடன் என்னைத் தொடர்பு படுத்திப் பார்க்க முடிந்தது.

திருமதி.சித்ராவின் பேச்சு மனிதன் தனது பேராசைக்காகவும், சுயநலத்துக்காகவும் செய்யும் செயல்களால் மற்ற உயிர் இனங்கள் படும் பாட்டை கண் முன் நிறுத்தியது. இயற்கையை இயற்கையாக விட வேண்டியது தானே என்ற அவரது கேள்வி நியாயமானது தானே ? ஜெயமோகனின் ‘யானை டாக்டர் ‘ படிக்க வேண்டும்.

திருமதி அழகு நீலாவின் பேச்சு மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது. எல்லார் வீட்டிலும் இப்படி ஒரு சேட்டை செய்யும் ஒருவர் இருக்கிறார். வணிக ரீதியான இந்த உலகம் அவர்களை உதவாக்கரைகள் என்று உதாசீனப்படுத்தி முத்திரை குத்தி இருப்பது உண்மை. இயல்பாகப் பார்த்தால் அந்த மாதிரி மனிதர்களால் இயற்கைக்கு ஒரு கெடும் நிகழ்வதில்லை, மாசு படுவதில்லை.வெற்றி பெற்றவர்களால் மாசு அடைகிறது என்பது வேண்டுமானால் உண்மை.

திருமதி.பாரதியின் பேச்சில் பதின்மவயதின் புரிதலின்மை தெரிந்தது. இந்த வயதின் தனிமைப்படுதலை எதிர்ப்பதாகக் கூறியது அருமை.

திரு.குமாரின் பேச்சு பல பேருக்குப் பல பழங்கால நினைவுகளை வரவழைத்திருக்கும். எல்லாராலும் எல்லா வற்றையும் சொல்ல முடியாது. ஆனால் குமார் கூறியது போல் பல நிகழ்வுகள் நமது வாழ்விலும் நடந்திருக்கும் என்பது உண்மை.

திரு.ஷாநவாஸ் பேச்சு ஆசிரிய இழப்பை முன்னிறுத்தியது.

திரு கண்ணபிரான் பேச்சு அனுபவ உண்மைகளை உணர்த்தியது.ஒரு முன்னோடி சமுதாயத்தின் உணர்வுகள் பளிச்சிட்டது.

மிக நல்ல ஒரு ஞாயிறு மதிய வேளை நடந்து முடிந்தது.

அடுத்த வாரம் எழுத்தாளர் ஞானியுடன் ஒரு கலந்துரையாடல்.

%d bloggers like this: