எத்தனை பாக்கியவான்கள் நம் தமிழர்கள்!

விஜய காந்த பண்டார சன்னிதிகள் திருவாய் மலர்ந்து அருளிய உபதேசங்களை நாம் கண்டோம். அருளாசி என்று சொல்லலாமோ என்னவோ. ஆனால் அருள் மாரி பொழிந்த விந்தைச் செயலை, அந்த அருளமுதைப் பருகிய பாக்கியம் பெற்ற பத்திரிக்கை அடியார்களை நினைக்கும் போதே நெஞ்சம் துள்ளுகிறது. என்னே ஒரு அந்தராத்மாவிலிருந்து கிளம்பிய பேரொளி அது? எத்தனை பாக்கியவான்கள் நம் தமிழர்கள்!

இளையராஜ சுவாமிகள் அருளிய ‘அறிவிருக்கா யுனக்கு’ பதிகம் என்ன ஒரு ஆன்மீகப் பேரொளியை வெளிப்படுத்தியது? அந்த பத்திரிக்கை அடியார்களும் என்ன புண்ணியம் செய்தார்களோ!

அதை விடுங்கள். சிம்பு தேசிக சுவாமிகளின் அருளாசி எப்படிப்பட்டது? என்னென்ன வார்த்தைப் பிரயோகங்கள்? அதற்கு என்னென்ன ஒலியளவைகள்! அந்தப் பதிகங்களைக் காலையில் எழுந்ததும் ஒருமுறை பாராயணம் செய்யாமல் எந்தவொரு தமிழனாவது செல்வதுண்டா? எத்தனைப் பொருள் நயமும், அழகுணர்ச்சியும் கொண்ட தமிழ்க் கவிதைகள் அவை! என்னே தமிழனின் கலைப் பாரம்பரியம்!

இவை மட்டுமா நமது கலையுலகின் பரிணாம வளர்ச்சிகள்? ‘ராத்திரியில் பூத்திருக்கும்..’ என்னும் பாடல் என்ன ஆழ்ந்த பொருள்களை, தேர்ந்த ஆன்மீக ஞானத்தை அளிக்கவல்லது! ஓராயிரம் பதிகங்கள் ஈடாகுமா இந்த ஒரு பாடலுக்கு?

‘மாங்காய் மாங்காய்’ என்று துவங்கும் ஒரு தமிழ்ப் பேரிலக்கியப் பாடல் தமிழரது பாரம்பரியத்தைப் பறைசாற்றும் அளவிற்கு ஒன்றரை அடித் திருக்குறள் செய்யுமா! என்னே நமது பாரம்பரியம்!

‘எப்படி எப்படி?’ என்று அறிவியல் பூர்வமான ஒரு கேள்வியை உதிர்க்கும் வாலிப சுவாமிகள் இயற்றிய பாடலுக்கு ஈடாகுமா கம்பர் எழுதிய ராமாயணம்! தமிழன் எதையும் ‘ஏன் எதற்கு எப்படி’ என்று கேள்வி கேட்டுப் பகுத்தறிவுடன் செயல் படுவான் என்பதைப் பறை சாற்றிய வாலிப சுவாமிகள் பாடலுக்கு புண்ணாக்குக் கவிஞன் பாரதி எம்மாத்திரம்?

அட அதை விடுங்கள் ஐயா! கவிப்பேரரசுப் பேராயர் இயற்றிய ‘சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன்..’ என்று பிரம்மனையே கேள்வி கேட்கும் தன்னம்பிக்கை எங்கள் தமிழனுக்கு மட்டுமே உண்டு ஐயா! ஷெல்லியாம், வோர்ட்ஸ்வொர்த்தாம் புண்ணாக்காம். தமிழனின் பெருமை என்னவென்று நினைத்தீர்கள்?

பிள்ளைகளுக்கு மனித உடற்கூற்றில் ஐயம் வரக்கூடாதென்று ஆனந்த விகடன், குமுதம் முதலான தமிழ் இதழ்கள் செய்துவரும் இலவச கல்(ல)விச் சேவை வேறு எந்தச் செம்மொழியிலும் உண்டா? நினைத்துப் பார்க்க வேண்டாமா?

போர்னோகிராபி என்னும் துறையே இருக்கக்கூடாதென்று தங்கள் பத்திரிக்கைகள் மூலம் அந்தச் சேவையை ஆற்றி வரும் ஜூனியர் விகடன் மற்றும் இன்னபிற இதழ்களின் தமிழ்ச் சேவையை மறக்கலாமா தமிழர்கள்? கலைமகள், தினமணி, துக்ளக் என்கிற நாலாந்தர மஞ்சள் பத்திரிக்கைகளுக்கு மத்தியில் இப்படி நக்கீரன், ஜூனியர் போன்ற தமிழ்ப் பண்பாட்டைப் பேணும் இதழ்கள் இருப்பதால் தான் நாம் ஏதோ பிழைத்து வருகிறோம்.

இதெல்லாம் இருக்கட்டும். தமிழரின் தலைமகன், அகில லோக ( ரோக?) நாயகன் கமலஹாச மஹரிஷிகள் குஷ்பு அம்மையாருடன் சேர்ந்து ‘ஓ ரங்கா ஸ்ரீ ரங்கா கொப்பரத் தேங்கா..’ என்று குடுமி வைத்துக்கொண்டு அபிநயம் பிடிக்கும் தமிழ்ச் சேவையை மறக்க முடியுமா? ஆழ்ந்த பொருள் கொண்ட, சுவாபதேசக் கருத்துக்கள் நிரம்பிய அந்தப் பாசுரங்களுக்கு எவ்வளவு வியாக்கியானம் செய்தாலும் மாளாது அல்லவா? தமிழரின் கலை உணர்ச்சியும், மொழி வளமும், கலைஞர்களின் கலைச்சேவையும் மறக்க முடியுமா? என்னே நம் பண்டாடு! அந்தப் பாடலை மார்கழி மாதம் பாடினால் அவ்வளவு புண்ணியம் அல்லவா?

ஈரோட்டுப் பாசறையின் பேரர், ஐயா இளங்கோவன் அவர்கள் பிரதமரும் முதல் அமைச்சரும் ஒரு மணி நேரம் பேசியது பற்றி ஒரு உபன்யாசம் செய்தார். என்னே அவரது பண்பாடு! என்ன இருந்தாலும் ஈரோட்டுப் பாதைக்கே உண்டான கண்ணியமும், பெருமையும் தொனிக்க அவர் பேசிய பேச்சு இருக்கிறதே, தமிழன் எந்த நாட்டிலும் தலை நிமிர்ந்து நிற்க வைக்கக் கூடிய உன்னதமான சொற்பொழிவு அது. என்ன சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவரா அவர்? குடும்பம் பேசுது சார். ‘கல் தோன்றி மண் தோன்றா..’ என்று சும்மாவா சொன்னார்கள்?

பத்திரிக்கையாளர் என்றால் அருண் ஷோரி, குருமூர்த்தி, ராம்நாத் கோயங்கா, சோ, சித்ரா சுப்ரமணியம் என்று மூளை கெட்ட பத்திரிக்கையாளர்கள் இருக்கும் போது அவர்களைப்போல் எல்லாம் நேர்மை, ஒழுக்கம், ஆராய்ச்சி என்று முட்டாள்தனங்கள் எதுவும் செய்யாமல் ‘பீப்’ பாடல் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்த இளையராஜாவிடம் கேள்வி கேட்ட அறிவாளிகள் போல் அல்லவா இருக்க வேண்டும்? 67-ற்குப் பிறகு நாம் அடைந்துள்ள பரிணாம வளர்ச்சி அல்லவா அது?

ஆழ்வார்ப்பேட்டை அருளாளரின் சன்னிதானத்தில் சரணாகதி அடைந்து,, கோபாலபுரம் குமண பாகவதரிடம் தீட்சை பெற்று, பெரிய திடல் பெரியவாச்சானிடம் ‘இதயத்தில் உள்ள முள்’ என்னும் தலைப்பில் காலக்ஷேபம் செய்வீர்களா? அதை விட்டுவிட்டு மார்கழியாம், பாசுரமாம், திருவெம்பாவையாம்.

போங்கப்பா. போய் பகுத்தறிவ வளக்கற வழியப் பாருங்க.