முதல் பக்கம்

வாசுதேவன் நம்பூதிரி, பெயருக்கு ஏற்றாற் போல், உயர்ந்த சாதியில் பிறந்தவர். ரொம்ப உயர்ந்த சாதியாதலால் ஒரு நாளைக்கு ஒரு வேளை சாதம் மட்டும் உண்டு. அந்த ஒரு வேளைக்காக மற்ற வேளைகள் பட்டினி இருக்கும் குடும்பம். இருக்கும் என்ன இருக்கும்? இருந்து தான் ஆக வேண்டும். செந்தமிழில் சொல்வதானால் ‘சோத்துக்கு சிங்கி அடிப்பது’ – நேயர்களுக்குப் புரியலாம்.

பெரிய ஞானஸ்தன் இல்லை என்றாலும் பி.காம் இரண்டாம் ஆண்டு வரை படிக்கும் அளவுக்குப் படிப்பு வந்தது. கொஞ்ச நாள் கூட்டுறவு வங்கியில் தாற்காலிக பியூன் வேலை. பின்னர் அதற்கான தகுதிகள் இல்லையென்று சொல்லி அனுப்பிக் குஞ்சு கிருஷ்ணன் கோவிலில் வேலை கொடுத்தார்கள். குஞ்சு கிருஷ்ணனுக்கு அலங்காரம் செய்யத் தகுதி உண்டு என்று பொருள் கொள்க.

ஒரு பெண்ணும் ஆணுமாக இரு தங்க விக்கிரகங்கள் பிறந்தன. சோறிருந்தால் மட்டுமே விக்கிரகமானாலும் பளபளக்குமாதலால் விக்கிரகங்கள் வதங்கியேயிருந்தன. அறிவு மட்டும் பிரகாசமாயிருந்தால் போதும் என்று குஞ்சு கிருஷ்ணன் நினைத்தான் போல. குழந்தைகள் படிப்பில் பிரகாசித்தனர்.

பாலக்காட்டையர் மனையில் சமையல் செய்யக் கூப்பிட்டார்கள். சாரதைக்குப் போக இஷ்டம். ஆசாரக் குறைவென்று சொல்லி நம்பூதிரி சமூகக் கட்டுப்பாடு தடுத்ததால் அந்த வருமானமும் இல்லை.

தரித்ரம் பின்னாலேயே வரும் என்பதை நிரூபிக்க வேண்டி, நேராகச் சென்ற லாரி தானாகத் திரும்பி, தெருவோரம் சென்றுகொண்டிருந்த நம்பூதிரியின் காலைக் காவு கொண்டது. கையில் வீட்டில் சமைத்த சாதம் இருந்ததைக் கண்டுபிடித்த சமூகம், குஞ்சு கிருஷ்ணனுக்குக் கோவிலில் நீராடியே சமையல் செய்து நைவேத்யம் செய்யவேண்டிய நம்பூதிரி வீட்டில் இருந்து சோறு கொண்டு சென்று நைவேத்யம் செய்ததைக் கண்டு பிடித்துப் பணி நீக்கம் செய்தது.

இருந்த வேலையும், இலவச இணைப்பாய் ஒரு காலும் போன நம்பூதிரி, சாரதையின் நகையை வைத்து ஒரு பெட்டிக் கடை வைத்தார். நாற்சந்தியின் அருகில் இல்லாததாலும், உத்தமோத்தம வைசிய வியாபார யுக்திகள் கைவரப் பெறாத நம்பூதிரியின் கடையும் நொடித்து, உள்ளதும் போனது.

குடும்பம் குடியிருக்கும் சாரதையின் பூர்வீக வீட்டை விற்கலாம் என்றால் அதற்கு அவள் உடன்படவில்லை. ‘பிதுரார்ஜிதம் ஏதாவது ஒன்றாவது இருக்கட்டும், பெண் குழந்தை வேறு இருக்கிறதே’ என்ற சாரதையின் கெஞ்சலில் இருந்த நியாயம் நம்பூதிரிக்குப் புரிந்தது.

நம்பூதிரி, ஒற்றைக் காலுடன், ஊர்ப் பெரிய மனிதரான எம்.எல்.ஏ.யின் இரு கால்களிலும் விழுந்ததால் அவரது குடும்பக் கோவிலில் பட்டனானார். 200 ரூ சம்பளம்.

குழந்தைகளின் பள்ளிப் படிப்பில் நல்ல முன்னேற்றம். படிப்புச் செலவிலும் தான். நம்பூதிரி வீட்டை விற்றுவிடும் படி சாரதையிடம் கெஞ்சினார். வீடும் போனால் நடுத் தெருதான் என்பதால் சாரதை ஒப்புக்கொள்ளவில்லை.

‘வெள்ளிக் கிழமைக்குள் பணம் கட்ட வேண்டும்’ என்று பிள்ளைகள் இருவரும் சொல்ல, ‘இன்னிக்குள்ள முடிஞ்சுடும்’ என்று சொல்லிச் சென்ற நம்பூதிரி ஆசாரியின் கடையில் நல்ல மாம்பிடி போட்ட கத்தியை வாங்கினார்.

‘அப்பா வந்துட்டார்’ என்று வந்து நின்ற மகளின் கழுத்தில் கத்தியைச் சொருகிய நம்பூதிரி, இரண்டே வெட்டில் மகனையும் சாரதையையும் சாய்த்தார். மனைவி போகும் முன் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தன்னை விளக்கேற்றினார்.

‘பிச்சை எடுக்க விடமாட்டேன்’ என்று சொன்னபடியே அவர் எரிந்ததாக மறு நாள் பேப்பரில் செய்தி வந்தது, ஐந்தாவது பக்கத்தில்.

‘அரசு வேலையில் இட ஒதுக்கீடு தொடரும்’: பாஸ்வான் அறிவிப்பு. முதல் பக்கத்தில்.

——————————————–

20-10-1997 அன்று டி.ஜே.எஸ்.ஜார்ஜ் எழுதிய கட்டுரையைத் தழுவி எழுதிய கதை.

கோலம்

‘உள்ள போக முடியாது பாட்டியம்மா’ காக்கி உடை ஊழியனின் குரல் கோலப்பாட்டிக்குப் புரியவில்லை. 91 வயதில் புரிய வேண்டிய அவசியமில்லை.

‘ஏண்டாப்பா, நன்னாருக்கியா? ஒம்புள்ள என்ன பண்றான், படிக்கறானா?’

‘ஐயோ பாட்டி, அது எங்கப்பா. நான் தான் அந்தப் பையன். நல்லாருக்கேன். நீ வெளில போ, கூட்டம் சாஸ்தியா இருக்கு’ குமார் தள்ளாத குறையாகச் சொன்னான். ‘செவிட்டுப் பாட்டிக்கி எப்பிடி சொல்றது?’

‘செத்த நாழி ஆகும்கறயா? பரவால்ல, நான் நின்னு சேவிச்சுட்டுப் போறேன். பெருமாள் எனக்காக காத்திண்டிருப்பார். ‘

‘பாட்டீ… உள்ள போக முடியாது. வரிசைல நிக்கணும். 3 மணி நேரம் ஆவும். நீ போயி பொறவு வா’ மென்று முழுங்கினாலும் குரல் கணீரேன்று சொன்னான் குமார்.

‘என்ன குமார், பாட்டிய மட்டும் உள்ள விடேன். பாவம் வயசாச்சு, கூட்டத்துல நிக்க முடியாது,’ 65 வயதுக் கல்யாணி பாட்டிக்காக்க் கெஞ்சிப் பார்த்தாள். மாமியார் பிடிவாதம் அவள் அறிந்ததே.

‘மாமி, நீங்க சாதா நாள்ல வாங்க. வரிசைல நிக்க வாணாம். பாட்டிய சைடு வழியா அனுப்பறேன். ஆனா, இன்னிக்கி ஒரு டிக்கட்டு 200 ரூவா. ஸபெஷல் தரிசனம்.’ கீழே குனிந்துகொண்டு சொன்னாலும் குமாருக்கு ஏனோ மனது உறுத்தியது. ஆனலும் அற நிலைய ஆணையர் சும்மா விட மாட்டார் என்பதால் கறாராகவே நடந்து கொண்டான்.

கல்யாணி பொறுமை இழந்தாள். ‘ஏண்டா குமார், உனக்கு பாட்டியத் தெரியாது? நன்னா இருக்கறச்சே கோவில் முழுக்க கோலம் போடுவாளோல்லியோ. ரொம்ப சொல்லி, இப்பல்லாம் கோலம் போட முடியாது, வெறும சேவிக்க மட்டும் உள்ள விடுவான்னு பேசி, சமாதானம் பண்ணி அழைச்சுண்டு வந்திருக்கேன். நான் வெளிலயே நிக்கறேன். பாட்டிய மட்டும் ஸ்பெஷல் என்ட்ரன்ஸ் வழியா விடேன். கார்தால்லேர்ந்து சாரதியப் பாக்காம ஒண்ணும் சாப்பிடமாட்டேன்னு அடம் புடிச்சு வந்திருக்கா..’ கல்யாணி விடுவதாக இல்லை.

‘அது சரி மாமி. என்னிக்கோ கோவில்ல கோலம் போட்டாங்கன்னு இன்னிக்கி ஸ்பெஷலா தரிசனம் பண்ண விட முடியுமா? பணம் கட்டினவங்க கோபிக்க மாட்டாங்களா? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க,’ என்று தர்க்கத்தில் இறங்கினான் குமார்.

‘என்னடா சொன்ன?’ கல்யாணியின் குரல் உயர்ந்தது. ‘எப்பவோ கோலம் போட்டாளா? தெரியுமாடா உனக்கு? உங்கப்பா இங்க வேலைக்கு சேர்ச்சே பாட்டி கோலம் போட ஆரம்பிச்சு நாப்பது வருஷமாச்சு. போன வருஷம் வரைக்கும் போட்டிண்டிருந்தா. கூன் விழுந்ததால போட முடியலயேன்னு நாங்கள்ளாம் வேண்டாம்னு சொல்லிட்டோம்.  80 வருஷமா போட்டுண்டிருக்கா. அதோ பார், கருடாழ்வார் சன்னிதிக்குக் கீழ சிமெண்ட்ல கோலம் பதிச்சிருக்காளே அது பாட்டி போட்ட கோலத்தோட டிசைன்..’ என்று கருடன் சன்னிதியைப் பார்த்தவள் ‘பாட்டீஈஈஈ..’ என்று கத்தியவாறே ஓடினாள்.

கருடனுக்கு முன், கையில் கோலப் பொடியுடன் நின்றிருந்த பாட்டி,’ ஏண்டி கல்யாணி, எங்கடீ போயிட்ட? என்னமா பெருமாள் சேவை ஆச்சு தெரியுமா? கண்ணுலயே நிக்கறது?’ என்று கருடனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

‘பெருமாள் சேவையா? தளிகை அம்சே பண்றாளேன்னு பெருமாளுக்குத் திரை போட்டிருக்கான்னா. நீங்க எங்க பெருமாள் சேவை பார்த்தேள்?’ என்றாள் கல்யாணி சைகையில்.

21390427_10156552525697802_1788266588_o

‘நன்னாருக்கு. நீ அங்க யாரோடயோ பேசிண்டிருந்தயோன்னோ? நான் மளமளன்னு இங்க கோலம் போட ஆரம்பிச்சேன். கை கடுக்கம், கோலம் சரியா வரல்ல. இப்பிடி பண்றயே பெருமாளேன்னு கருடனப் பார்க்கறேன், சாட்சாத் பக்ஷிராஜன், அவனுக்கு மேல சங்கும் சக்கரமுமா மீசை வெச்சுண்டு உக்காண்டிருக்கான் சாரதி, பார்த்த சாரதி. அடீ வாடீ கல்யாணின்னு சொல்றதுக்குள்ள நீயே வந்துட்ட. பாரு எப்பிடி ஏள்ளியிருக்கார் பார் பெருமாள்..’ என்றாள் கோலப்பாட்டி, அமைதியாய் நின்றிருந்த கருடனைப் பார்த்தவாறு.

‘சேவை ஆயிடுத்து, வா ஆத்துக்குப் போகலாம்’ என்ற பாட்டியின் கையில் இருந்த கோலமாவுப் பொட்டலத்தை வாங்கிய கல்யாணி, கண்கள் கலங்கியபடி அதைப் பிரித்தாள். கசங்கிய பேப்பரில் பாசுரம் :

“தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,

தமருகந்த தெப்பேர்மற் றப்பேர் – தமருகந்து

எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,

அவ்வண்ணம் அழியா னாம்.”

சேரிடம்

‘வேற எதாவுது வேல்யூபிள் பொருள் காணாமப்போயிருந்தா சொல்லுங்க சார்’

காவல் ஆய்வாளரின் பேச்சு எனக்கு எரிச்சலை அளித்தது. எது வேல்யூபிள் ? எது மதிப்பில்லாதது ? அதை யார் தீர்மானிப்பது ?

‘நகை, ஐபேட், ஐபோன், வீட்டு டாக்குமெண்ட், இன்ஷ்யூரன்ஸ் பாலிஸி இப்படி ஏதாவது இருந்தா எஃப்.ஐ.ஆர். போடலாம். நீங்க சொல்றதுல ஒண்ணுமே இல்லையே. புஸ்தகம் எல்லாம் எஃப்.ஐ.ஆருக்கு ஒர்த் இல்ல ஸார்,’ என்றவரிடம் என்ன சொல்வது ?

புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ஓமலூர் செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறினால் மட்டுமே ஹாஸ்டல் கேட் எனப்படும் சேலம் அரசு பொறியியல் கல்லூரியின் விடுதி நிறுத்தத்தில் இறங்க முடியும். சில வேளைகளில் அங்கு சில பஸ்கள் நிற்பது கிடையாது.

ஹாஸ்டல் கேட்டில் இறங்கி 5-வது விடுதிக்குச் செல்ல மனத்துணிவு வேண்டும். காடு போன்று அடர்ந்த பாதையில் இரவில் நடக்கையில் ஒரு பாம்பாவது தென்படும். ஆனால் அவை ஏனோ ஹாஸ்டலுக்குள் வருவதில்லை. மெதுவாக ஓசைப்படுத்திக்கொண்டே நடந்து ஒரு வழியாக மெஸ் ஹால் எனப்படும் உணவுக்கட்டடத்தை அடைந்துவிட்டால் பிறகு 5-வது விடுதிக்கு 5 நிமிடமே நடக்க வேண்டியிருக்கும். செல்வம் அன்று ஒரு வழியாக விடுதிக்கு வந்து கதவைத் தட்டினான்.

‘காலைல மூணு மணிக்கி என்ன இழவுக்குடா வந்தே?’ என்றேன் கடுப்புடன். அவன் அறைச் சாவி என்னிடம் இருந்த்தாக்க் கண நேரத்தில் பொறி தட்டியவுடன் ‘இழவு’ என்று சொன்னதற்காக சட்டென்று நாக்கைக் கடித்துக்கொண்டேன்.

‘மச்சி, பஸ்ஸு கிடைக்கலடா. பசிக்குதுடா. ஏதாவது இருக்கா?’

‘போடா சொங்கி. நாலு நாளா மெஸ்ஸு ஸ்டிரைக். நாங்களே வயித்துல ஈரத்துணி தான்,’ என்றவனை ‘மாப்ள, அப்பிடி சொல்லாத. காலைலேருந்து ஒண்ணும் சாப்பிடல. வா டாபா போகலாம்,’ என்றான்.

‘காலை மூணு மணிக்கு டாபாவா ? எதுனா இருந்துதான் பேசுறியா?’ என்றேன். டாபா எனப்படும் நெடுஞ்சாலை உணவகங்கள் சேலம்-பெங்களூர் நெடுஞ்சாலையில் இருந்த பஞ்சாபி உணவகங்கள். சுக்கா ரொட்டி, நான் முதலான பஞ்சாபி உணவுகளை எனக்கு அறிமுகப் படுத்தியவை அவை. ஆனால் அந்த இரவு நேரத்தில் செல்வது அபாயகரமானது. நான்கைந்து பேராக வேண்டுமானால் போகலாம்; குறுக்கு வழி உண்டு. ஆனால் அது காட்டு வழி. நரி, காட்டு நாய், பாம்பு முதலியன தென்படும்.

செல்வத்துக்கு அசாத்தியப் பசி. இருவரும் டாபாவை நோக்கி நடந்தோம். இருள் பழக சிறிது நேரமானது. காட்டின் ஒலிகள் அதிகரித்தன. தூரத்தில் நாயின் ஊளை கேட்டது.

‘வேணாம்டா, போயிரலாம்டா,’ என்ற என்னைக் கையைப் பிடித்து இழுத்தவாறு சென்றான் செல்வன்.

தூரத்து தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் பயண விளக்குகள் காற்றில் பறந்தன. வாகனங்களின் அமைப்புகள் தெரியவில்லை. சுமார் ஐநூறு மீட்டர் இருந்திருக்கலாம். மெதுவாக நெடுஞ்சாலையைத் தொட்டுவிட்டால் அங்கிருந்து நடந்து செல்வது எளிது.

செல்வம் கீழே குனிந்து தன் காலைத் தடவினான். ‘முள்ளு குத்திடுச்சு மச்சி,’ என்றவன் முகத்தில் வியர்வை தெரிந்தது. மெதுவாக நடக்கத் தொடங்கியவன் நடையில் ஒரு தள்ளாட்டம் தெரிந்தது.

‘ரொம்ப பசிக்குதாடா?’ என்றேன். அவன் ஒன்றும் சொல்லாமல் என்னைப் பார்த்தான். கண்கள் இருளில் கூட வெளிறித் தெரிந்தன. வாயில் எச்சில் ஒழுகுவது வாகனத்தின் தீற்றல் ஒளியில் தெரிந்தது.

‘என்னாச்சு மாமூ?’ என்று அருகில் செல்ல முயன்ற போது தடாலெனக் கீழே விழுந்தான் செல்வம். கை, கால் கோணியபடி வாயில் நுரை தெரிந்தது.

விஷயம் புரிந்துவிட்டது போல் இருந்தது. குத்தியது முள் இல்லை.

ஒரு வேளை பாம்போ ? இருக்கலாம். இருளில் தெரியவில்லை. எச்சரிக்கையாக தரையில் காலால் ஓங்கி அறைந்தேன்.

செல்வம் பேசவில்லை. மரக்கட்டை போல் கிடந்த அவனைத் தூக்க முயன்று தோற்றேன். எதற்கும் இருக்கட்டும் என்று அவனது இடது முட்டிக்கு மேல் என் கைக்குட்டையால் இறுகக் கட்டினேன்.

வேறு வழி இல்லை என்பதால் துணிந்து அவனது கைகளைத் தூக்கி, என் தோள் மீது சார்த்தி உப்பு மூட்டை தூக்குவது போல், பாதி தூக்கியும் மீதி இழுத்துக்கொண்டும் கல், முள் என்று எல்லாவற்றிலும் சென்றேன். ஓடினேன் என்பது சரியாக இருக்கும்.

ஒரு வழியாக நெடுஞ்சாலையை அடைந்து ஏதாவது வாகனம் நிற்குமா என்று கை காட்டிப் பார்த்தேன். கும்மிருட்டில் நான் பேய் போல் சாலையில் நிற்க, என் முதுகில் இன்னொரு பேய் போல் செல்வம். அதனாலோ என்னவோ ஒரு வாகனம் கூட நிற்கவில்லை. நேரம் கடந்துகொண்டிருந்தது. செல்வத்திற்கு முற்றிலுமாக சுய நினைவு இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக நான் அவனை இழந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது.

அப்போது வேகமாக எங்களைக் கடந்து சென்ற வெள்ளை அம்பாசிடர் கார் சட்டென்று கிறீச்சிட்டு நின்று, பின் நோக்கி நகர்ந்து  வந்து எங்கள் முன் நின்றது. உள் விளக்கு எரிந்தவுடன் பின் இருக்கையில் இருந்த வெள்ளை மீசை வைத்த பெரியவர், ‘என்ன தம்பி, வண்டீல வர்றீங்களா?’ என்றார். ‘தெய்வம் மனுஷ்ய ரூபேண’ என்று அப்பா சொல்வது நினைவுக்கு வந்தது.

காரில் மெதுவாக செல்வத்தை ஏற்றி இருபது மணித்துளிகளில் கோகுலம் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தோம். பாம்புக் கடி தான். செல்வத்தின் பாதத்தில் பாம்பின் பதிவைக் கண்டு பெரியவர்,’ நல்ல பாம்பு தம்பி. கொஞ்சம் கஷ்டம் தான்,’ என்றார். நாங்கள் சேலத்தைச் சார்ந்தவர்கள் இல்லை என்பதை அறிந்து, பின்னர் மருத்துவமனை ஊழியரிடம் ஏதோ பேசினார். சில மணித்துளிகளில் சிறப்பு மருத்துவர்கள் விரைந்து வந்தனர்.

என்னென்னவோ செய்து இரண்டு நாட்களில் செல்வம் உயிர் பிழைத்தான். ஆனால் பேச்சு வரவில்லை. ஒரு வாரம் முழுவதும் மருத்துவமனையில் இருந்தோம். பெரியவர் மாலை வேளைகளில் வந்து தினமும் பார்த்துச் சென்றார். எங்கள் உதவிக்கு என்று ஒரு மனிதரையும் அனுப்பியிருந்தார்.

செல்வத்தையும் என்னையும் ஏழு நாட்கள் கழித்து பெரியவரே கல்லூரிக்கு அழைத்துச் சென்றார். போகும் வழியில்,’ சந்தியாவந்தனம் எல்லாம் செஞ்சீங்களா தம்பி?’ என்றார். தூக்கி வாரிப் போட்டது. ‘பார்த்த உடனேயே பாப்பாரவங்கன்னு தெரிஞ்சுகிட்டேன். அதான் கேட்டேன். விட்டுடாதீங்க,’ என்றவர், ‘ஆமா என்ன ஊரு சொன்னீங்க? கம்பர் பொறந்த ஊருன்னீங்களே, வயசாயிடுச்சில்ல நினைவு நிக்க மாட்டேங்குது, ஏனுங்?’ என்று கேள்வியா பதிலா என்று தெரியாதபடி நயமான கொங்குத் தமிழில் கேட்டார்.

‘உங்க பேரு தம்பி ஆமருவின்னு என்ன ஒரு அழகு பாருங்க. அந்த திருமங்கை கள்ளப்பயங்க தம்பி. கள்ளன்னா ஜாதி இல்லீங்க. சரியான திருடனுங்க அவன். என்னமா எழுதிட்டுப் போயிட்டான் !’ என்று திருமங்கையாழ்வாரைத் தொட்டார். நான் மிகவும் குழம்பியிருந்தேன். பார்வையில் பிராமணராகத் தெரியவில்லை; கவுண்டராக இருக்கலாம். பேச்சு அப்படித்தான் இருக்கிறது. ஆனால் ஆழ்வார் பற்றியெல்லாம் பேசுகிறாரே !’ என்று எண்ணினேன். குழப்பம் தீரவில்லை.

கல்லூரி விடுதியில் கொண்டு விட்டு,’ ஒரு தரம் நம்ம ஊட்டுக்கு வந்து போடணு ஆமா’. கட்டளை போல இருந்தாலும் அன்பு தெரிந்தது. ‘கருப்பூர்ல வந்து ‘பண்ணை’ன்னா ஒட்டுக்க கூட்டிட்டு வந்துடுவானுங்க ஏனுங்..’ என்று சொல்லிச் சென்றார்.

மறுநாள் கல்லூரியில் முதல்வர் அழைத்தார். ‘நீங்கள் காவேரி கவுண்டருக்குச் சொந்தமா?’ என்று வினவினார். பெரியவர் முதல்வரிடம் தொடர்பு கொண்டு பேசியிருப்பார் போல என்று நினைத்தேன். அன்று மாலை எங்கள் விடுதிக்குச் செல்லும் வழியில் முட்செடிகள் அகற்றப்பட்டிருந்தன. அரசுக் கல்லூரியில் அவ்வளவு விரைவாகக்கூட வேலைகள் நடைபெற முடியும் என்று அறிந்தபோது வியப்பாக இருந்தது.

செல்வம் தேறிவிட்டான். ஒரு மாதம் கழிந்திருக்கும். நாட்டு நலப் பணித்திட்டக் குழுவில் ( என்.எஸ்.எஸ்.) கருப்பூர் சென்றோம். கல்லூரி மாணவர்கள் அனைவரையும் பண்ணை கூப்பிடுகிறார் என்று அறிந்து அவர் வீட்டிற்குச் சென்றோம். ஆரவாரமாக விளையாடியபடியே அவரது தோட்டத்தை அடைந்து உள்ளே இருந்த அவரது வீட்டிற்குச் சென்றோம். வாசலில் நிறைய காலணிகள் கிடந்தன. ஆனால் ஆள் அரவமே இல்லை. மெதுவாக உள்ளே அழைத்துச் சென்றனர். பெரிய முற்றத்தின் நடுவில் ஒரு நாற்காலியில் பெரியவர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க சுமார் இருபது ஊர்க்காரர்கள் சிரத்தையாகக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

எங்களைப் பார்த்தவுடன் ,’ அட நம்ம தம்பிங்களா, வாங்க இப்பிடி..’ என்று வாஞ்சையுடன் அழைத்து,’ செல்வம் எப்பிடி இருக்காப்புல? அடிக்கடி வந்து போடச் சொன்னேன் இல்ல?’ என்றார். அசடு வழிய நின்றுகொண்டிருந்த என் முகத்தை உற்றுப் பார்த்தார்.

‘அட ஆமா, நீங்க வைஷ்ணவங்க இல்ல ? ஐயங்காருதானே ? பாசுரம் பாடுவீங்க தானெ?’ என்று சரமாரியாகக் கேட்டார். என் நெற்றியில் இருந்த ஸ்ரீசூர்ணம் என்னும் வைணவ அடையாளம் அவருக்கு என்னை முழுமையாக நினைவூட்டியிருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

‘பாடுவேங்க ஐயா,’ என்றேன்.

‘ஆமா, அது என்ன ஊரு சொன்னீங் ? மறந்து போவுது இப்பெல்லாம்,’ என்றவருக்கு, ‘தேரழுந்தூர் ஐயா’ என்றேன். ‘ஆமா ஆமா, அந்த கம்பன் பொறந்த ஊரு தானே. நெனப்பு வந்துட்டு,’ என்று நெற்றியில் தொட்டுக் கொண்டார்.

‘இப்ப பாடுவீங்ளா?’

தட்ட முடியாமல் ,’ செங்கமலத் திருமகளும்..’ என்னும் திருமங்கையாழ்வார்ப் பாசுரம் பாடினேன். கண் விழித்துப் பார்த்தேன். அத்துனை பேரும் எழுந்து நின்றுகொண்டிருந்தார்கள். பெரியவர் என் அருகில் கை கூப்பி, கண்களில் நீர் பெருக நின்றுகொண்டிருந்தார்.

‘என்ன பாசுரம் தம்பி இது. கள்ளப்பய கொல்றானே,’ என்று நா தழுதழுத்தார். நான் குழம்பிப்போனேன். ஒரு வேளாளர், ஊரின் நாட்டாண்மை போல் தெரிகிறது அவருக்குப் பாசுரங்களில் இவ்வளவு ஈடுபாடா? பார்த்தால் படித்தவர் போலக் கூட தெரியவில்லை.

‘தம்பி, நீங்க எப்ப வேணும்னாலும் நம்மூட்டுக்கு வரலாம். முடிஞ்சா சனிதோறும் வாங்க. வந்து ஒரு நாலு பாசுரம் பாடுங்க. ஆன்ந்தமாக் கேப்போம். பருப்பும் நெய்யும் பிசஞ்சு ரசம் சோறு செய்யச் சொல்றேன். அம்மிணி செங்கமலம், தம்பிக்கு வேணுங்கறத ‘தளிகை’ பண்ணிப் போடும்மா,’ என்றார். அவரது பெண் போலும் அந்த செங்கமலம்.

ஒரு நிமிடம் உறைந்து போனேன். செங்கமலம் ஒரு பரம வைணவப் பெயர். அத்துடன் பெரியவர் ‘தளிகை’ என்று சொன்னது போல் பட்டது. ‘என்ன நடக்கிறது இங்கே ?’ என்று குழம்பியபடி நின்றிருந்தேன். தளிகை என்பது பிராமண வைஷ்ணவர்கள் ‘உணவு தயாரித்தல்’ என்னும் பொருளில் பயன் படுத்தும் ஒரு நல்ல தமிழ்ச் சொல்.

அத்தனைபேரும் என்னையே பார்த்தனர். எனக்கு அவ்வளவு பேர் என்னைப் பார்த்துப் பழக்கமில்லை. கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது.

பெரியவர் பேசினார். ‘என்ன, தம்பி கொழம்பிட்டீங்களோ ? ஏனுங் ? கவுண்டன் ஊட்டுல கறி தானே செய்வானுங்க, கெளவன் தளிகைங்கறான், செங்கமலம்னு பொண்ணு பேர் இருக்குது, அதானே, என்னங் நான் சொல்றது?’ என்று புன்சிரிப்புடன் கேட்டார். நான் வழக்கம் போல் குழப்பத்துடன் நின்றிருந்தேன்.

‘அங்கன பாருங்க தம்பி. அந்த அறைக்குப் பேர் ‘தளிகை அறை’. இதோ இந்த அறைக்குப் பேர் ‘முதலியாண்டான் உள்’. என்னோட ரூமுக்கு ‘கிருபா சமுத்திரம் உள்’னு பேர். இப்பிடி எல்லாமே விஷ்ணு தொடர்பாத்தான் இருக்கும்,’ என்றார். தலை சுற்றி விழுந்துவிடுவேன் போல் இருந்தது.

‘உள்ள வாங்க, இன்னும் பலது இருக்கு,’ என்று உள்ளே அழைத்துச் சென்றார். ‘பூஜை அறை’ போல் இருந்த ஒரு இருட்டறையில் ஒரு பெரிய மரக் கோபுரம் இருந்தது. கோவிலாழ்வார் என்று எங்கள் வீட்டில் சொல்வார்கள். கை கால்களை அலம்பிக்கொண்டு கோவிலாழ்வாரைத் திறந்தார். உள்ளே ஏராளமான சாளக்கிராமங்களும், சின்னச் சின்ன விக்கிரகங்களும் இருந்தன. ஆச்சரியத்தால் வாய் பிளந்து நின்றிருந்த என்னிடம் சுவற்றில் இருந்த ஒரு மிகப் பழைய ஓவியத்தைக் காண்பித்தார். இராமானுசர் போல் இருந்த ஒரு பெரியவரிடம் ஒரு 50 வயதான பெண்மணி ஆசி பெறுவது போல் வரையப்பட்டிருந்த்து.

‘இது இராமானுசருங்க. அம்மிணி யாரு தெரியுங்களா ? எங்க சேலத்துக் கார அம்மிணிங்க. கொங்கப்பிராட்டின்னு பேருங்க. சேலத்துலேர்ந்து ஸ்ரீரங்கம் போய், இராமானுசர் கிட்ட பஞ்ச சம்ஸ்காரம் வாங்கிக்கிட்டவங்க. பொறவு சேலம் வந்து இராமானுச சித்தாந்தத்தப் பரப்பினாங்க. அவங்களால வைஷணவனான குடும்பம் எங்க மூதாதை குடும்பம். அதால நாங்கள்ளாமும் வைஷ்ணவங்க தாங்க தம்பி,’ என்று சொல்லி, படத்தை விழுந்து சேவித்தார். ஒன்றும் செய்வதறியாமல் நானும் சேவித்தேன்.

என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள வெகு நேரம் ஆனது. வேளாளர் குலத்தின் ஒரு பெண்ணுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்த உடையவர் இராமானுசரின் செய்கையை நினைப்பதா ? கொங்குப் பிராட்டி என்னும் அந்த மாது சிரோன்மணியை நினைப்பதா ? அனைவரையும் உள்ளிழுத்து, அனைவருக்கும் இறையருள் தரும் அந்த சித்தாந்தத்தை நினைப்பதா ? என்று தெரியாமல் ஒரு மாதிரி விக்கித்து நின்றிருந்தேன்.

அதன் பிறகு அவர் சொன்னது என் அறியாமையின் உச்சத்தை எனக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. ‘பெரியாழ்வார் இருந்தாரில்லீங்களா தம்பி, அவுரு கூட இங்க சேலம் பக்கத்துல இருக்கற கொங்கனூரப் பாடியிருக்காருங்.

“கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்

எங்கும் புகுந்து விளையாடும் என்மகள்.”

பாசுரத்தின் ஒற்றை வரியைப் பாடியபோது அவரது முகத்தில் பேரமைதி ஏற்படுவதைக் கண்டேன்.

‘இராமானுசர் கொங்கனூர் வந்து இவங்களுக்கு தீட்சை கொடுத்தாருன்னும் சொல்றாங்க; இவுங்க அங்க போயி வாங்கிக்கிட்டாங்கன்னும் சொல்றாங்க. பழைய சுவடியெல்லாம் கரையான் அரிச்சுப் போயிடுச்சு. ஆனா எங்க ஊருக்கு ராமானுச சம்பந்தம் இருக்குன்னு மட்டும் தெரியுங்..’ சொல்லும்போதே அவர் பெருமகிழ்ச்சியுடன் இருந்தது தெரிந்தது.

அன்று இரவு முழுவதும் பெரியவர் வீட்டில் நிகழ்ந்த நிகழ்வுகளின் பேரதிர்ச்சி நீடித்தது. பிராமணர் அல்லாதவர் கூட வைஷ்ணவரா ? ஒரு பெண் எப்படி இராமானுசரிடம் தனியாக தீட்சை பெற்றாள் ? எப்படிப்பட்ட முற்போக்கான, முன்னேறிய சமூகமாக நாம் இருந்திருக்கிறோம் என்ற எண்ணமும் மேலோங்கியே இருந்தது.

அதன் பிறகு இரு முறை அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். ஒரு புரட்டாசி மாதம் விசேஷமான பிரபந்த கோஷ்டி எல்லாம் நடைபெற்றது. ஒரு சமயம் ஸ்ரீரங்கத்தில் இருப்பது போன்ற உணர்வு.

அந்த ஆண்டு பொறியியல் கடைசி வருடம் என்பதால் கருப்பூர் செல்லவில்லை. தேர்வுகள் முடிந்து விடுதியைக் காலி செய்த பிறகு, பெரியவரிடம் சொல்லி வரலாம் என்று கருப்பூர் சென்றேன்.

நீண்ட கூடம் உடைய அவரது இல்லத்தில், பெரிய கண்ணாடி பிரேம் போட்ட படத்தில் இருந்து வாஞ்சையுடன் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தார் பெரியவர்.

அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் செங்கமலம் அம்மாள் வந்து, ‘ தம்பி, நீங்க எப்பவாவுது வருவீங்க. அப்ப உங்க கிட்ட அப்பா இத கொடுக்கச் சொன்னாங்க,’ என்றவாறு கையளவே உள்ள சிறிய பெட்டியை என்னிடம் கொடுத்தார்.

1910ம் ஆண்டு அச்சிடப்பட்ட நாலாயிர திவ்யப்பரபந்த நூல் ஒன்று பட்டுத் துணியில் சுற்றப்பட்டு இருந்தது. கண்களில் நீர் வழிய மெதுவாக நூலைப் பிரித்தேன். மடித்து வைக்கப்பட்ட ஒரு பழுப்புக் காகிதம் தென்பட்டது.

பிரித்தேன். பெரியவர் ஒரு வரியில் எழுதியிருந்தார் :

‘பொக்கிஷம் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டது. ஆசீர்வாதம் தம்பி’

‘ஆமாம் ஸார், எஃப்.ஐ.ஆர். போட வேண்டாம். சரியான எடத்துக்குதான் அது போயிருக்கும்,’ என்ற என்னை ஆய்வாளர் வினோதமாகப் பார்த்தார்.

சாஸனம்

வானம் திடீரென இருள் சூழ்ந்து கரிய பேருருவம் கொள்ளும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளாக மழை இல்லை. ஊர் காலியாகிவிட்டது. பெயரில் தான் தீட்சிதர் இருக்கிறதே தவிர கோவில் கருவறைக்குள் போக முடியாது. அந்தப் பரம்பரை இல்லை. முன்னோர்கள் அரசாங்க உத்யோகஸ்தர்களாக இருந்தபடியால் கோவில் கைங்கர்யங்களில் இருந்து விலக்கி விட்டார்கள்.

கோவிந்த தீட்சிதர் பரம்பரைன்னு பேர் தான். அவரது பாண்டித்யம் எங்கே ? நாயக்க மன்னர்களின் ஆட்சியையே அவர்கள் ஊரில் இல்லாத போது தானே நின்று தனியாக நடத்திய கோவிந்த தீட்சிதர் பரம்பரை என்று சொன்னால் ஆம்படையாள் தர்மாம்பா கூட ஏளனம் செய்கிறாள். ‘தீட்சிதர் பரம்பரை ஆனா சோத்துக்கு வக்கில்லை’ என்று அவளது வீட்டில் ஏளனம் செய்கிறார்கள்.

அவர்களுக்குத் தெரியாது எங்கள் பின்புலம் பற்றி. இன்றைய காலத்தில் நாற்பது வேலி நிலம் இருக்கிறது என்னிடத்தில். ஆனால் பயன் தான் இல்லை. தர்மாம்பா பல முறை சொல்லிவிட்டாள். நிலத்தை விற்று விட்டு வேறு ஊர் சென்று விடலாம் என்று. ஆனால் போக மனம் வரவில்லை.

‘என்ன ஊர் இது ! ஒரு காலத்துல பஞ்சம் பொழைக்க வந்த எடத்துல ஏதோ கொஞ்சம் எழுதப் படிக்க வந்ததால கோவிந்த தீட்சிதர் சாஸனம் பண்ணிக்கொடுத்த எடம் நாப்பது வேலி. வருஷம் தவறாம கோவிலுக்குப் படியளந்துட்டு ஆறுல ஒருபங்க நாங்க எடுத்துக்கலாம். சாஸனத்துலயே அப்பிடிதான் இருக்கு. ஆனால் விளைச்சலே ஆறுல ஒருபங்கா இருந்தா என்ன பண்றது?’ இந்தக் கேள்வியைக் கேட்டு பதில் பெற கோவிந்த தீட்சிதர் இல்லை. நானூறு வருஷ சிலாசாஸனம் இன்னும் கோவில் வாசல்ல இருக்கு. ஆனா இதெல்லாம் யார்கிட்ட சொல்லி என்ன புண்ணியம் ?’ சற்று கோவில் கோபுரம் வரை சென்று வரலாம் என்று படியிறங்கினேன்.

Govinda Dikshitar‘நாளும் ரெண்டு தடவை கோபுர வாசல் போகாட்டா இப்ப என்ன குடி முழுகிப் போயிடறது ? சிலா சாஸனமாம் சிலா சாஸனம். என்ன புண்ணியம்? ஒரு வேளை அரிசி கிடைக்குமா அதால?’ தர்மாம்பா எப்போதும் அப்படித்தான். வேறு என்ன செய்வாள் ?

‘போறது போறேள் , அமாவாசை தர்ப்பணம் பண்ணிட்டு சாப்பிடாம போக வேண்டாம். சிலாசாஸனத்தக் கட்டிண்டு அழுங்கோ, ஆனா ஒரு வாய் சாப்டுட்டுப் போங்கோ.’ நல்லவள் தான். ஆனால் என்ன வாய் கொஞ்சம் அதிகம்.

‘ராக்ஷஸ வருஷம் ஆடி அமாவாசையாகிய இன்று வீர கேஸரி அச்சுத ராயப்ப நாயக்கர் கோலோச்சிய காலத்தில் ஐயன் கோவிந்த தீட்சிதனால் எழுதப்பட்டது…’ என்று தொடங்கியது அந்த சிலா சாஸனம். அதற்கு மேல் உள்ள எழுத்துக்கள் சிதைந்து போயிருந்தன.

நானூறு வருஷங்களுக்கு முன்பு இதே ஆடி அமாவாசையின் போதுதான் இந்த தர்மம் துவங்கியது. இந்த இடத்தில் நின்று தான் கோவிந்த தீட்சிதர் இந்தப் பிரகடனத்தைச் செய்தார். பின்னர் அவர் ஆற்றிய உரை இது தான் என்று அப்பா சொல்லியிருக்கிறார்.

‘இந்த தர்மம் சந்திர சூரியர்கள் இருக்கும் அளவுக்கு நடைபெற வேண்டும். தினமும் மேற்கில் உள்ள பெருமாள் கோவிலுக்கும் கிழக்கில் உள்ள சிவன் கோவிலுக்கும் அன்னப்படி அளிக்கப்பட வேண்டும். இந்த அன்னப்படியிலேயே தெய்வங்களுக்கு நைவேத்யம் சமைக்கப்பட வேண்டும். இதற்காக ஊருக்கு மேற்கே மேக்கிரிமங்கலமும், கிழக்கே ஆடுதுறையும், தெற்கே தொழுதாலங்குடியும் உள்ள அளவில் நாற்பது வேலி நிலம், அதற்தென்று வெள்ளைக் குளம், கடகடப்பைக் குளம் என்னும் இரண்டு குளங்களும் வீர கேசரி அச்சுதப்ப நாயக்கரால் நிவந்தம் அளிக்கப்படுகிறது. இந்த தர்மத்தை எனது குடும்பத்தைச் சார்ந்த வேத நாராயண தீட்சிதர் தேரழுந்தூரில் இருந்து நிர்வஹிப்பார். விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை தனது குடும்ப பரிபாலனத்திற்கு எடுத்துக்கொள்வார். இந்த தர்மத்துக்கு ஹானி விளைவிப்போர் காசியில் ஆயிரம் காராம்பசு வதை செய்த பாவத்தை அடைவார்கள்’. அப்பா இதனைப் பல முறை சொல்லியுள்ளார்.

ஒவ்வொரு முறை நிலத்தில் இருந்து குடியானவன் நெல் அளக்க வரும்போதும் வயிறு குலுங்கி அழத் தோன்றும். நாற்பது வேலி நிலத்தின் விளைச்சல் எங்கே ? இப்போது கலி காலத்தில் இந்த வெள்ளைக்கார அரசாங்கத்தில் வருஷத்துக்கு பத்து மூட்டை நெல் விளைந்தாலே பெரியதாக இருக்கிறது. கேட்டால் மழை இல்லை என்கிறான். வாஸ்தவம் தான். தாது வருஷப் பஞ்சம், பிறகு அடுத்தடுத்த பஞ்சங்கள், மழை இல்லை என்று குடியானவனும் என்னதான் செய்வான் ?

ஆனால் கோவிலுக்கு அளக்காமல் இருப்பது எப்படி ? நிலமே அதற்காகதானே கொடுத்திருக்கிறார்கள் ? ‘கோவிந்த தீட்சிதரா வந்து கேக்கப்போறார்? பேசாம பத்து மூட்டையும் நாமளே வெச்சுண்டா என்ன? இப்பிடி போக்கத்த பிராமணனா இருக்கேளே’ என்று மனைவியும் பலமுறை சொல்லிவிட்டாள்.

ஒரு நாலு வார்த்தை இங்கிலீஷ் படிப்பு படிச்சிருந்தால் இந்த வெள்ளைகாரா கிட்ட  உத்யோகம் பார்த்திருக்கலாம். மாசம் பொறந்தா அடுப்பாவது எரியும். இப்ப அதுக்கும் வழி இல்லை. வேதம் சாதம் போடும்னு அப்பா சொன்னத நம்பி மடிசிஞ்சியா இருந்து ஒரு புண்ணியமும் இல்லை. அடுப்புல பூன தூங்கறது. தஸ் புஸ்ஸுனு இங்கிலீஷ் படிப்பு படிச்ச எல்லாரும் பட்ணம் போய் கொழிக்கறா.

ஆனா தினம் ரெண்டு தரம் சிலா சாஸனத்தைப் பார்க்கல்லேன்னா அன்னிக்கி சாதம் எறங்க மாட்டேங்கறது. எவ்வளோ பெரியவா கோவிந்த தீட்சிதர் ? அவர் பேர்லயே எவ்வளவு தர்மங்கள்ளாம் இருக்கு ? அவர் எங்க குடும்பத்த நம்பி இந்த தர்மத்த குடுத்துட்டுப் போயிருக்கார். அவருக்கு துரோகம் பண்ணச் சொல்றாளே ஆம்படையா. ஏற்கெனவே குடும்பம் நசிச்சுப் போச்சு. இன்னும் இந்த துரோகம் வேற நடந்தா வேற என்னல்லாம் நடக்குமோ ?

அச்சுதப்ப நாயக்கர் கோவிந்த தீட்சிதர நம்பி அத்தன அரசாட்சியும் கொடுத்து, அவர் பேர் கெடாம தீட்சிதர் எத்தன தர்மம் ஏற்படுத்தியிருக்கார் ? அவர் பரம்பரைல வந்த்துகாகவாவுது ஏதோ விட்ட கொற தொட்ட கொறையா இருக்கற தர்மத்த விட்டுட முடியுமா ?

ஆனா இதப்பத்தி பல தடவை யோசிச்சாச்சு. ஒரு முடிவுக்கும் வர முடியல. தர்மாம்பா கேக்கறது சரிதானே. தீட்சிதர் காலத்துல நாப்பது வேலி நிலத்துலேர்ந்து கணிசமான நெல் வந்தது. அதுல ஆறுல ஒரு பங்கு குடும்பத்துக்கு சரியா இருந்தது. இப்ப விளைச்சலே இல்லையே. விளைச்சல் இல்லாத காலத்துல என்ன பண்ணணும்னு தீட்சிதர் எழுதிவெக்கல்லியே. அதுனால வித்துடலாம்கறா தர்மாம்பா. ஒரு வகைல சரின்னுதான் தோணறது.

ஆனா மனசு ஒப்புக்கல. நானூறு வருஷமா நடந்துண்டு வந்த தர்மம் நம்மளால நிக்கலாமான்னு இன்னொரு பக்கம் மனசு கேக்கறது. தீட்சிதர் என்ன நினைச்சிருப்பார் ? சந்திர சூர்யாள் இருக்கற வரைக்கும் இந்த தர்மம் நடக்கும்னுதானே நினைச்சிருப்பார் அவர். நம்ம காலம் ஆனாலும் இந்த சிவன் கோவிலுக்கும் பெருமாள் கோவிலுக்கும் தினப்படி அன்னப்படி நடக்கும்னுதானே அவர் நினைச்சிருப்பார். அவர் எண்ணத்துல மண்ணப் போடலாமா ?

இதோ இந்த சன்னிதித் தெருவுல தானே யானை மேல ஏறி தீட்சிதரும் அச்சுதப்ப நாயக்கரும் வந்திருப்பா ? ஆழ்வார் கோவில் வாசல்ல யானைய நிக்க வெச்சு ஆரத்தி சுத்தியிருப்பளே ! அச்சுதப்ப நாயக்கர் பேரச் சொல்லி ‘வாழ்க’ கோஷம் வானைப் பிளந்திருக்குமே ! துந்துபி முழங்க பெருமாள் கோவில்லேருந்தும் சிவன் கோவில்லேருந்தும் மாலை மரியாதைகள் வந்திருக்குமே ! இவாளுக்கெல்லாம் முன்னாடி என்னோட மூதாதை வேத நாராயண தீட்சிதர் மனசெல்லாம் பூரிப்பா ‘இப்பிடி ஒரு கைங்கர்யம் நம்மளுக்கு வாச்சுருக்கே’ன்னு கண்ணீர் பெருக நின்னிருப்பாரே !அதே எடத்துல அதே பரம்பரைல வந்த எனக்கு அந்த கைங்கர்யத்த நிறைவேத்த வக்கில்லாம போய் இப்பிடி மண்ணாந்தையா நிக்கறேனே !

இப்படியாவது தெய்வ சொத்த சாப்பிட்டு உடம்ப வளர்க்கணுமா ? எங்க பரம்பரை இருந்ததுக்கு அடையாளமே இந்த நாப்பது வேலி நிலம் தானே? நிலத்தால கோவிலுக்குப் பலன் இல்லை. என்னாலயும் இல்லை. ஒரே அடியா கோவிந்த தீட்சிதருக்கும் நாயக்கருக்கும் சேர்த்து துரோகம் பண்றேனோ ? இந்த எண்ணங்கள்ளாம் தர்மாம்பாவுக்கு வரல்லையே, எனக்கு மட்டும் ஏன் ?

இதுக்கு ஒரே வழிதான் இருக்கு. இந்த மாதிரி தர்ம சங்கடத்துல வேற ஒண்ணும் பண்ண முடியாது.

‘தீட்சிதரே, இதே ஆடி அமாவாசை அன்னிக்கித்தான் நீங்கள் இந்த சாஸனத்தை எழுதி வெச்சேள். எங்க பரம்பரைல எல்லாரும் உங்க வாக்கு தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நடந்துப்பாள்னு நெனச்சுத் தான் நீங்க நிவந்தம் கொடுத்தேள். ஆனா நான், உங்க பரம்பரைக்கே லாயக்கில்லாத பாவி. படிப்பும் இல்ல, பணமும் இல்ல. ஒரு வேள சாதத்துக்கு உஞ்சவிருத்தி எடுக்கறேன். இந்த நிலைல நாப்பது வேலி நிலத்த வாங்கிக்க இன்னிக்கி அமாவாசை நல்ல நாள்னு பெரிய பண்ணை நம்மாத்துக்கு வரப்போறார். என்னால விக்கறதுக்கும் மனசில்ல. விக்காம இருக்கவும் சூழ்நிலை இல்லை. எனக்கு இத விட்டா வேற வழி தெரியல. பெருமாளே என்ன மன்னிச்சுடுங்கோ’.

ஆண்டுதோறும் கரிய மேகங்கள் சூழும் ஆடி அமாவாசை அன்று சிலாசாஸனத்தின் முன் ஊரே கூடி நின்று படையல் வைப்பது, தர்ப்பணம் செய்துவிட்டு உணவருந்தாமல் கோபுரத்தின் ஏழாவது நிலையில் இருந்து விழுந்து உயிர்விட்ட நாகராஜ தீட்சிதர்  நினைவாகத்தான் என்று ஊரில் தற்போது யாருக்கும் தெரியவில்லை.

அடுப்பு

திருமலை ஐயங்காரை உங்களுக்குத் தெரிந்திருக்காது. ஏனெனில் அவர் போய்ச் சேர்ந்து 70 வருஷங்கள் ஆகிவிட்டன. ஆனால் வீட்டில் அவரைப் பற்றி பேசாத நாளே இல்லை.

வெள்ளைத் துரைகள் எல்லாம் அடிக்கடி வந்துகொண்டிருந்த நேரம் அது. கம்பர் மேட்டைப் பிளந்து கொண்டிருந்தார்கள். நிறைய அள்ளிக்கொண்டு போனார்கள் என்று பேச்சு. அதனால் ஊரே புழுதிப் படலம் நிரம்பியதாய் இருந்தது.

திருமலை மடைப்பள்ளியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார். நெற்றியிலும் மார்பிலும் வியர்வை மழையில் நனைந்தது போல் ஓடிக்கொண்டிருந்தது. கரி வேஷ்டியில் இன்னும் கரி ஒட்ட இடம் இல்லை. அடுப்புக்கரி ஒட்டத்தானே செய்யும்? ஊரை விட்டு வந்த பின்பு சாதம் போடுவது மடைப்பள்ளி வேலை தான். ஏதோ பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில் இந்த வேலை கிடைத்ததோ ஆறு வயிறுகள் நிரம்புகின்றன. விடியற்காலை 4 மணிக்கு மடைப்பள்ளி வந்தால் முதுகு ஒடிய வடைக்கு அரைப்பது, பாத்திரம் தேய்ப்பது, அக்கார அடிசிலும் வெண்பொங்கலும் தளிகை பண்ணுவது என்று 5 மணி நேரம் போவதே தெரியாது.

பண்ணின அத்தனையும் பெருமாளுக்கு அமுது செய்யப் பண்ணிய பிறகு மத்தியானத் தளிகைக்கு ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன் இன்னொரு தடவை தீர்த்தாமாடிவிட்டு மடைப்பளியில் நுழைந்தால் வேலை முடிய மதியம் ஒரு மணி ஆகும். பெருமாள் அமுது செய்தல், பின்னர் ஊர்ப் பிரமுகர்களுக்குத் ததீயாராதனம் என்று இன்னும் ஒரு மணி ஆகும். மிச்சம் இருக்கும் பிரசாதங்களைக் கொஞ்சமாக வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போனால் ஆறு பேரின் அன்றைய சாப்பாட்டுக் கவலை தீரும். மறுநாள் மற்றுமொரு நாள்.

திருமலைக்கு வீட்டிற்கு வரவே தற்போதெல்லாம் பிடிப்பதில்லை. பெரியவள் கோமளத்திற்குப் பதினைந்து வயதாகிவிட்டது. கல்யாண வயது கடந்து மூன்று வருஷங்கள் ஆகிவிட்டது. சீரும் செனத்தியுமாக எப்படியும் ஐம்பது ரூபாயாவது ஆகும். அதெல்லாம் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. கொஞ்ச நாட்களாக இடைவிடாத சளி இருமல் தொல்லை வேறு வந்துள்ளது. என்னவென்று தெரியவில்லை.

‘நாளைக்குக் கார்த்தால பெரிய மிராசுதார் ஆத்துல திவசம். தளிகை பண்ணச் சொல்லிவிட்டிருக்கா. போனா அரை ரூபாய் கிடைக்கும். ஒரு வாரம் ஆத்துல அடுப்பு எரியும்.

மடைப்பளியில் இருந்திருந்து வேலை பார்த்தாலும் ஒரு நாளைக்கு ஒன்றேகால் அணா தான் தேறறது. என்னிக்கி இது வளர்ந்து ஐம்பது ரூபாயாறது ? என்னிக்கு கோமளத்துக்குக் கலியாணம் நடக்கறது ? எப்படி யோசித்தாலும் கோமளத்தின் கலியாணம் நடக்கறதப் போல நெனச்சு கூட பாக்க முடியல,’ என்று நினைத்தபடியே திருமலை கம்பர் மேடு தாண்டி சன்னிதித் தெரு முனையில் நின்றார்.

‘ஊரே காலியாயிண்டிருக்கு. கம்பர் மேடாவது ஒண்ணாவுது ? எப்பவோ கம்பர் இருந்து ராமாயணம் எழுதினாராம். அதனால என்ன ? வெச்சுக்க நமக்கு வக்கில்லே, வெள்ளைக்காரன் தோண்டி எடுத்துண்டு போறான். ஒண்ணேகாலணா சம்பாதிக்கற எனக்கு யார் எத தோண்டினா என்ன, எடுத்துண்டா என்ன ? மடப்பளில விறகு எரியறதானா ஆத்துல அடுப்பு எரியும். இல்லேன்னா வயறுதான் எரியும்’ என்று நினைத்துக்கொண்டு சன்னிதித் தெருவில் கால் வைத்தார்.

காலில் ஏதோ ஒட்டியது போல் இருந்தது. கீழே இருந்த கல்லில் தேய்த்தார். இன்னும் ஒட்டிக்கொண்டிருந்தது. தாள் போல் உணர்ந்தார்.

இரண்டு அடி நடந்திருப்பார். இன்னும் காலில் ஒட்டியிருந்ததை உணர்ந்தார். குனிந்து பாத்த்தைத் தடவிப் பார்த்தார். தாள் தான். ஆனால் சற்று வழவழப்பாக இருந்தது.

ஒரு காலில் நிற்க முடியாமல் அருகில் இருந்த பழைய தூண் ஒன்றில் சாய்ந்தவாறு காலில் ஒட்டியிருந்த தாளைப் பிய்த்தெடுத்தார்.

வெயிலில் அது பளீரென்றிருந்தது. சந்தேகத்துடன் கண் அருகில் வைத்துப் பார்த்தார்.  நிஜமாகவே நூறு ரூபாய்த் தாள் தான். மன்னர் படம் போட்டிருந்தது. முகம், தலை என்று எல்லாம் வியர்த்தது. புதிய வியர்வை பழைய வியர்வையை அடித்துக்கொண்டு சென்றது. வியர்வை வேஷ்டியில் பட்டு வழிந்ததில் கரிய நீர் கீழே சொட்டியது.

கையில் பாம்பைப் பிடித்தது போல் இருந்தது அவருக்கு. இவ்வளவு ரூபாய் யாரிடம் இருக்கும் ? யாரோ வெள்ளைக்காரன் பையில் இருந்து விழுந்திருக்க வேண்டும். நூறு ரூபாயை வைத்துக்கொண்டு மூன்று கல்யாணம் பண்ணலாம். இரண்டு வீடு வாங்கலாம். மாடு கன்றுகளுடன் பெரிய தொழுவங்கள் நான்கைந்து வாங்கலாம். கோமளத்தின் கல்யாணம் ஜாம் ஜாமென்று நடக்கும். சர்வமானிய எரியை ஒட்டிய நிலங்கள் பல குழிகள் வாங்கலாம். ஒரே நொடியில் தரித்திரம் தொலையும்.

‘அட, இப்பிடி ஒரு அதிர்ஷ்டமா ? பெருமாளே, விளக்கேற்றி விட்டீரே பெருமாளே. மடப்பளியில் வெந்தற்கு இப்படி ஒரு பலனா ? ஒரு நொடியில் என் கஷ்டங்கள் எல்லாமா போக்கிட்டீரே பெருமாளே,’ என்று அழுதபடியே வெயிலில் நடந்தார் திருமலை.

இடுப்பில் மடித்து வைத்துள்ள தாள் இருக்கிறதா என்று தொட்டுக்கொண்டவாறே படியேறிய அவரைக் கோமளம் வித்தியாசமாகப் பார்த்தாள்.

யாரிடமும் ஒன்றும் பேசாமல் கிணற்றடிக்குச் சென்று நான்கு குடம் இழுத்து விட்டுக் கொண்டார். ஹோமக் குண்டத்தில் நீர் ஊற்றினால் அணைந்து குளிரும் நெருப்பு போல் அவரது உடல் குளிர்ந்தது.

ஒரு நிமிஷம் பெருமாள் உள் முன் நின்றார். நூறு ரூபாயை எடுத்து பெருமாள் படத்தின் முன் வைத்து விழுந்து சேவித்தார்.

‘இவ்வளவு பணம் எப்படிக் கெடச்சுதுன்னு யாராவது கேட்டா என்ன சொல்றது ? எங்கேருந்து திருடினேன்னு யாராவது கேட்டா என்ன பண்றது ? கீழே கிடந்து எடுத்தேன்னா யாராவது நம்புவாளா ?’ என்று சிந்தித்தபடியே நின்றிருந்தார் திருமலை.

‘அப்பா, உடம்பு சரியில்லையா ? ஏன் ஒரு மாதிரி இருக்கேள்?’ என்று கேட்ட கோமளத்திற்குப் பதில் அளிக்காமல் மூடியிருந்த கையை மேலும் அழுத்தமாக மூடிக்கொண்டார்.

‘சேர்ந்தாப்போல அஞ்சு ரூபா பாத்திருக்கமா ? ஒரு தெவசத் தளிகைக்கு அரை ரூபா சம்பளம். ஒரேயடியா நூறு ரூபா வெச்சிண்டிருந்தா மடப்பளிலேருந்தும் நிறுத்திடுவாளே ஊர்ப் பெரியவாள்ளாம். ஐயோ பெருமாளே,’ என்று தனக்குத் தானே பேசிக்கொண்டு நின்றிருந்தார் திருமலை. காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாததால் தலை கிறு கிறு என்று சுற்றத் துவங்கியது.

‘முடியாது, என்னால் இதைத் தாங்க முடியாது.’

ஒரு தீர்மானத்திற்கு வந்தவராய் வேகமாக அடுப்பின் அருகில் சென்று சென்று கையில் இருந்த பணத்தை எரியும் நெருப்பில் இட்டார்.

அடுப்பு கொழுந்து விட்டு எரிந்தது.

‘சாதம் போடுடீ கோமளம்,’ என்று சொல்லி இலையில் அமர்ந்தார் திருமலை.

வண்டி சீராக ஓடவில்லை. வளைவுகளில் ரொம்பவும் சிரமப்பட்டது. மாருதி வேனை ஆம்புலன்ஸ் என்று சொல்லி மாயவரத்தில் தொழில் செய்து வந்தார்கள். ஒவ்வொரு வளைவிலும் வேகம் இழந்து மெல்லத் திரும்பி மீண்டும் வேகம் எடுத்து மறுபடியும் குறைந்து திரும்பி கர்ப்பிணிப்பெண் போல் பெருமூச்சு விட்டுக்கொண்டே சென்றது.

உள்ளே இருந்த எனக்குத்தான் தலை சுற்றியது. படுத்திருந்த ஸாருக்கு எந்த பாதிப்பும் இல்லை. மூக்கில் செருகியிருந்த ஆக்ஸிஜன் சீராக காற்றை உள்ளே அனுப்பிக்கொண்டிருந்திருக்க வேண்டும்.

அது மட்டும் அல்ல. ஸாருக்கு நினைவில்லை. அவரை மாயவரத்திலிருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தேன். அவருக்கு நினைவு தப்பிப் பல மணி நேரம் ஆகியிருந்தது.

காலை நான்கு மணி அளவில் சிறுநீர் கழிக்கச் சென்ற அவர் திரும்பவில்லை. படுக்கையில் காணவில்லையே என்று தேடிப்பார்த்ததில் அவர் பாத்ரூமில் நினைவில்லாமல் கிடந்திருக்கிறார். உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்றனர். டாக்டர் இல்லை. ஒரு பதின்ம வயது போல் தெரிந்த நர்ஸ் தூக்கக் கலக்கத்துடன் வந்து பல்ஸ் பார்த்தாள். பின்னர் யாருடனோ போனில் பேசினாள். மாயவரத்தின் பெரிய மருத்துவமனைக்குப் போகச் சொன்னாள்.

ஸாரின் மனைவிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு போன் செய்தார்.

பெரிய மருத்துவமனையில் சாரை உள்ளே தூக்கிச் செல்லக் கூட ஆள் இல்லை. இரவுப் பணி முடிந்து பணியாளர் சென்றுவிட்டார். காலைப் பணியாளர் இன்னும் வரவில்லை என்றார்கள். இரண்டு பேராகத் தூக்கி ஸாரை ஒரு கட்டிலில் கிடத்தினோம். மூச்சு இருந்தது. ஆனால் நினைவில்லை.

‘இங்கெல்லாம் படுக்க வைக்கக் கூடாது, பெரிய டாக்டர் வந்தால் சத்தம் போடுவார்’, என்றபடி வயதான நர்ஸ் பல்ஸ் பார்த்தாள்.

‘டாக்டர் எப்ப வருவார்?’

”மேல வார்டுலே இருக்கார். அஞ்சு மணி தானே ஆவுது. ஏழு மணிக்கு வருவார். கொஞ்சம் இங்கேயே இருங்க’, என்றபடி நர்ஸ் சென்றுவிட்டாள்.

பின்னாலேயே ஓடி இருக்கிறார்கள். ‘ஏம்மா இப்பிடி ஓடறீங்க. இப்போ என்ன வேணும்?’, என்றாள் நர்ஸ்.

‘இல்லே, இவருக்கு என்ன ஆச்சு ? ஏன் மயக்கமாயிருக்கார் ?’, என்றிருக்கிறார் ஸாரின் மனைவி.

‘அதெல்லாம் டாக்டர் சொல்லுவார்’.

‘டாக்டர் எப்ப வருவார்?”

‘இதோ பாருங்கம்மா விடிகாலைலே டாக்டரெல்லாம் வர மாட்டாங்க. ஏழு மணியாவது ஆகும்’.

ஒரு வழியாக டாக்டர் வந்தார். 28 வயது இருக்கும்.

‘விஷயம் கொஞ்சம் சீரியஸ் போல இருக்கு. எதுக்கும் தஞ்சாவூர் கொண்டு போயிடுங்க’, என்று சொன்னார் டாகடர்.

ஒரு மணி நேர அலைச்சலுக்குப் பின் ஆம்புலன்ஸ் போல இருந்த ஒரு மாருதி வேன் கிடைத்தது. தஞ்சாவூர் போகாமல் கும்பகோணம் ஆஸ்பத்திரி போகலாம் என்று முடிவாயிற்று.

கும்பகோணத்தில் பிரபல மருத்துமனையில் கடிந்து கொண்டார்கள். உடனே சென்னை அல்லது பாண்டிச்சேரி கொண்டு செல்லவும் என்று சொன்னார்கள். அத்துடன் ஆக்ஸிஜன் மாஸ்க் ஒன்றையும் கொடுத்தார்கள்.

இப்படியாக ஸார் ஒரு நான்கு மணி நேரமாகப் பயணப்பட்டுக்கொண்டிருந்தார்.

ஸாரின் மனைவியும் என்னுடன் மாருதி வேனில் வந்துகொண்டிருந்தார். அவருக்கு வயது 65 இருக்கலாம். ஸாருக்கு இன்னமும் வயது அதிகம்.எனக்கு ஐந்து ஆண்டுகள் பாடம் நடத்தியவர் அவர். பள்ளி முடிந்து கல்லூரி சென்று இப்போது வேலையிலும் சேர்ந்து விட்டேன். ஆனாலும் ஒவ்வொரு முறை மாயவரம் செல்லும் போதும் அவரைச் சந்திப்பேன்.

முந்தின நாள் இரவு தான் சென்னையில் இருந்து வந்திருந்தேன். மறு நாள் அவரைச் சந்திப்பதாக இருந்தேன். ஆனால் அதற்குள் இப்படி அவரைச் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை.

வேனின் ஆட்டத்திற்கு ஏற்ப அவரது தலையும் ஆடிக்கொண்டிருந்தது.

அவரது முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு சில சமயம் அவர் கண் திறந்து பார்ப்பது போல் இருக்கும். மூன்று முறை அப்படி ஆகி விட்டது.

அவரது பாதங்கள் சற்று வளைந்திருக்கும். பாதத்தின் அடியில் பல திட்டு அழுக்கு தென்பட்டது. நேற்று எங்கோ வெளியே போய்விட்டு வந்து சரியாகக் கால் அலம்பவில்லை போல் பட்டது. சற்று உற்றுப் பார்த்தேன். குதி கால் ரொம்பவும் தேய்ந்திருந்தது. இந்தப் பாதங்கள் இந்திய தேசம் முழுவதும் நடந்துள்ள தூரம் எவ்வளவு இருக்கும் என்று கணக்குப் போட முயன்றேன். எண்ணங்கள் வேறு எங்கோ சென்றன.

ஸார் எங்களுக்கு ஒரு ஆதர்ஸ சக்தி. அவரது மாணவர்கள் யாரும் அவரை அன்னியமாகப் பார்த்ததில்லை. அவர் பேசத் துவங்கினால் அமைதி உடனே எற்படும். மிகவும் அறுவையான பாடமாக இருந்தாலும் அவரது தமிழ் எங்களை உசுப்பிவிடும். கம்பன் அவரது விருப்பமான கவி. திருக்குறள் நடத்தும்போதும் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது கம்பனில் இருந்து உதாராணம் காட்டாமல் இருக்க மாட்டார்.

ஒரு முறை நான் கேட்டே விட்டேன். திருக்குறள் நடத்தும்போது கம்பனும் ஆழ்வார்களும் எதற்கு என்று. அன்று அவர் சொன்ன பதில் நெஞ்சில் ஆணி அடித்தாற்போல் இருந்தது.

‘கேள்வி சரி தான். நீங்கள் திருக்குறள் மட்டும் படித்து பாஸ் பண்ணிவிட்டு பொறியியல் படிப்பில் சேர்ந்துவிடுவீர்கள். ஆனால் நாளை ஒரு காலம் வரும். நாற்பது வயது நெருங்கும்போது வாழ்வில் ஒரு வெறுமை வரும். அப்போது கம்பனும் ஆழ்வாரும் சிலம்பும் வாழ்வின் வெறுமையைப் போக்க உதவி செய்யும். மீண்டும் ஒரு முறை இவற்றுள் செல்லத் தோன்றும். அறிமுகம் இல்லை என்றால் உள்ளே நுழைய வழியே இல்லை.

அது மட்டும் அல்ல. நமது பாரம்பரியம் பெரியது. ஆழமானது. அது திருக்குறள் மட்டும் அல்ல. அதையும் தாண்டி இன்னும் பல ஆழங்களைத் தன்னுள் கொண்டிருப்பது. இவற்றின் நுனியையாவது நீ அறிந்துகொள்ள வேண்டும். இவை இல்லை என்றால் நமக்கு முகவரி இல்லை’, என்று கூறினார்.

பள்ளி விட்டவுடன் நேரே நூலகம் செல்வார். பல அரிய நூல்களில் இருந்து குறிப்புக்கள் எடுத்துக்கொண்டிருப்பார். வட்டாரத்தில் எந்தப் பட்டிமன்றம் என்றாலும் இவர்தான். பல கோவில்களிலும் இவரது பேச்சு இருக்கும். ஆனால் ரொம்ப நாட்களாக எனக்குப் புரியாதது என்னவென்றால் தமிழ் மொழிக்கான விழாக்களில் இவர் அழைக்கப்படுவதில்லை. அந்த நாளில் ஊரை விட்டு தூரத்தில் ஏதாவது ஒரு பழைய கோவில் உள்ள ஊரில் ஏதாவது சொற்பொழிவு இருக்கும் அவருக்கு.

சில வருடங்களாக ‘அறிவோம் ஆன்மீகம்’ என்ற ஒரு அமைப்பில் மிக உயிர்ப்புடன் சிறு பிள்ளைகளுக்குத் தமிழும் ஆன்மீகமும் சேர்த்துப் புகட்டினார். சனி, ஞாயிறு மாலை வேளைகளில் ஊரின் குளக்கரை மண்டபத்தில் ஒரு இருபது பிள்ளைகளுக்கு தேவாரம், பாசுரம் என்று பாடம் நடத்துவார். திருப்பாவை ஒப்பித்தல் போட்டிகள் தன் கைக்காசு செலவழித்துச் செய்வார். இவரது பள்ளி ஆசிரியர்கள் ‘தனி வகுப்பு’ என்று சொல்லி மாணவர்களிடம் பணம் வசூல் செய்துகொண்டிருக்கும் போது இவர் மண்டபத்தில் ‘சங்க இலக்கியத்தில் திருமால்’ என்று ஏதாவது வகுப்பு எடுத்துக்கொண்டிருப்பார்.

‘நம்ம நாட்டுலெ தமிழையும் ஆன்மீகத்தையும் பிரிச்சுட்டாங்க. செக்யூலர் என்ற போர்வையில் தமிழின் ஆன்மாவை அதனிடமிருந்து பிரித்துவிட்டார்கள். இதை எப்படியாவது ஒன்று சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மொழி அழிந்துவிடும்’, என்று பல முறை சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பக்தி இலக்கியம் இல்லை என்றால் தமிழ் இல்லை. லத்தீன் மொழி சட்டத்திற்காக அறியப்படுவது. ஜெர்மன் மொழி தத்துவத்திற்காக அறியப்படுவது. ஆங்கில மொழி வியாபாரத்திற்காக அறியப்படுவது. தமிழ் ஒன்று மட்டுமே பக்திக்காக அறியப்படுவது என்ற கருத்தில் ஆணித்தரமாக இருந்தார் ஸார்.

பதவி ஓய்வு பெறும் வருடத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பள்ளியில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் யாரும் இல்லை.

மாணவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் போதிக்கக் கூடாது என்பதில் ரொம்பவும் ஆணித்தரமாக இருந்தார் ஸார். பெண்கள் கல்வியில் அதிக அக்கரை செலுத்தினார். வகுப்பில் சரியாகப் படிக்காத சில பெண்களைத் தனியாக அழைத்து கல்வியின் தேவையை அவர்களுக்கு உணர்த்தினார். இதனால் பல பெண்கள் நன்மை அடைந்தனர் என்பதைக் கண் கூடாகப் பார்த்திருக்கிறேன்.

சென்னையின் பிரபல ஆஸ்பத்திரியில் சொல்லியாகி விட்டது. அவர்கள் தயாராக் இருந்தார்கள்.

ஒருவழியாகச் சென்னை வந்து சேர்ந்தோம். உடனேயே ஐ.சி.யூ.வில் சேர்த்து விட்டார்கள்.

வேலைகள் துரித கதியில் நடந்தன. எங்கள் யாரையும் உள்ளே விடவில்லை.

சரியாகப் பத்து நிமிடத்தில் சீனியர் டாக்டர் வந்தார். அரைமணி நேரம் உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்து சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.

‘ஸீரியஸ் ப்ரைன் ஹெமரேஜ் அண்ட் ஸ்ட்ரோக். வீ ஆர் அப்சர்விங் த சிசுவேஷன். நெக்ஸ்ட் 72 ஹவர்ஸ் ஆர் க்ரூஷியல்’

மூளையில் ரத்த நாளம் வெடித்துள்ளது. இதனால் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. 72 மணி நேரம் கழித்துத் தான் எதுவும் சொல்ல முடியும். இது தான் முதல் செய்தி..

பின்னர் வந்தது தான் பேரிடி. உடனடியாக ஒரு லட்சம் கட்ட வேண்டும் என்று பில்லிங் செக்ஷனில் இருந்து சொல்லி அனுப்பினார்கள். ஸாரின் அட்டெண்டர் உடனடியாக பில்லிங் செக்ஷன் வரவும் என்று ஒலி பெருக்கியில் சொன்னார்கள்.

அப்படி இப்படி என்று இரண்டு மணி நேரத்தில் ஒரு லட்சம் புரட்டி விட்டேன். ஸாரின் மகன் அப்போதுதான் வேலைக்குச் சென்றிருந்தான். அவனிடம் அவ்வளவு பணம் இல்லை.

முதல் இரண்டு வாரம் ஸார் கண் திறக்க வில்லை. பின்னர் ஒருவாரு நினைவு வந்தது. ஆனால் பேரிடி ஒன்று வந்தது  அவருக்குப் பேச்சு வரவில்லை. வலது கையும் காலும் செயல்படவில்லை.

அவர் அபாயக் கட்டம் தாண்டி விட்டார் என்று ஒரு மாதம் கழித்து அறிவித்தார்கள். அதற்குள் பல முறை பில்லிங் செக்ஷன் சென்று வந்திருந்தேன்.

ஸார் ஆஸ்பத்திரியிலேயே இருந்தார். ஐ.சி.யூவிலிருந்து வார்டுக்கு மாற்றி விட்டர்கள். அவருக்குப் பேச்சுப் பயிற்சி அளிக்கவும், கை கால் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அன்று தொடங்கி சுமார் மூன்று மாதங்கள் அந்த ஆஸ்பத்திரியிலேயே கிடந்தோம். அவ்வப்போது ஸாரிடம் முன்னேற்றம் போல் தெரியும். அவரைப் பேசச் செய்யும் முயற்சி சற்று வெற்றி அடைவது போல் தெரியும். ஆனால் சற்று கூர்ந்து கவனித்தால் வெறும் காற்று மட்டுமே வருவது உணர முடியும். ‘இன்னும் கொஞ்சம் கத்திப் பேசுங்க ஸார்’ என்று இடைவிடாமல் கத்துவது தான் ரொம்பவும் கொடுமையான ஒன்று. உபன்யாச மேடைகளிலும், பட்டிமன்றங்களிலும் சிம்மம் போல் கர்ஜித்த அவரது குரல் வெறும் காற்றாய் வெளி வந்தது ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் விதியின் முன்னர் ஏதும் செய்ய இயலாத, கையறு தன்மை விஸ்வரூபம் எடுத்து நின்றது.

பேசுவதையும், எழுதுவதையும் நாம் எவ்வளவு இயல்பாக எடுத்துக்கொள்கிறோம் ! ஆனால் பேச்சும் எழுத்துமே மூலதனமாகக் கொண்ட ஒருவர், அதுவும் பல நூல்கள் எழுதிய ஆசிரியர் பேசவும் எழுதவுமே முடியாமல் போனால் ? இந்த நினைப்பு இதுவரை வந்ததில்லை. ஸாரைப் பார்த்ததும் மனித வாழ்வில் நமது ஆளுமை எவ்வளவு குறைவு என்பது புரியத் துவங்கியது. மனிதனின் கையாலாகாத தன்மை கன்னத்தில் அறைவது போல் இருந்தது.

பல முறை பில்லிங் செக்ஷன் சென்று வந்தேன் அல்லவா ? அவர்களிடம் பணம் கட்ட மேலும் அவகாசம் கேட்டிருந்தேன் பணம் கொஞ்சம் பெரியது. என்ன 10 லட்சம் ஆகியிருந்தது. நாளாக நாளாக அது வளர்ந்து வந்தது. ஆனால் ஸாரின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. பேச்சு அப்படியே தான் இருந்தது.

ஒரு வாரம் கழிந்தது. இந்த முறை கண்டிப்பாகச் சொல்லி விட்டார்கள். உடனடியாக 5 லட்சம் கட்டியாக வேண்டும் என்று. தெரிந்தவர்கள் எல்லாரிடமும் கேட்டோம். ஸாரின் மகனின் அலுவலகத்தில் 50,000 கொடுத்து மாதச் சம்பளத்தில் பிடித்துக்கொள்வதாகச் சொன்னார்கள். வந்தவரை லாபம் என்று வாங்கிக்கொண்டோம்.

இரண்டு வாரங்கள் கழித்துக் கடுமையான எச்சரிக்கை வந்தது. அந்த வாரத்திற்குள் 8 லட்சம் கட்டவேண்டும். இல்லாவிட்டால் மருத்துவமனை வேறுவிதமாகக் கையாளும் என்று சொன்னார்கள்.

ஸாரின் தம்பியும் நானும் தமிழ் மொழி தொடர்பான பலரிடம் ஸாரின் நிலை குறித்து உதவி கேட்டோம். பெயர் குறிப்பிட விரும்பவில்லை. பலரும் இன்று நல்ல நிலையில் தான் உள்ளனர். பெரும்பாலானவர்கள் தொலைபேசியை எடுப்பதைத் தவிர்த்தனர். சிலர் எடுத்து அனுதாபம் தெரிவித்தனர்.

இது தவிர யாரிடமும் சொல்லாமல் நான் ஒரு காரியம் செய்தேன். ஸாரின் பழைய மாணவர்களுக்கு ஒரு மின்-அஞ்சல் அனுப்பினேன். கணிசமான தொகை வந்தது. ஆனாலும் மருத்துவமனையின் யானைப் பசிக்கு சோளப்பொறி போல் இருந்தது அது. இந்த என் செய்கை ஸாரின் குடும்பத்தினரை சங்கடப்படுத்தியது. ‘ஸார் நினைவு பெற்று பேசினால் இந்த செயலை அங்கீகரிக்க மாட்டார்’, என்று ஆதங்கப்பட்டனர். உண்மை தான். ஆனால் ஸார் எழுந்து பேசவே இந்தப் பணம் தேவை இல்லையா என்று என் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். வெளியில் பேசி அவர்கள் மனதை நோகடிக்க விருப்பமில்லை.

ஒரு பக்கம் ஸாரின் நிலை. இன்னொரு பக்கம் ஸாரின் மருத்துவச் செலவு. மூன்றாவது பக்கம் அவரது குடும்பம் படும் துன்பம். சமாளிக்கமுடியாமல் தனிமையில் அழுதேன். பல மாணவர்களை உருவாக்கிய ஒரு முன்னோடி, பலரது வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தவர் இப்படிப் படுத்துக்கிடக்கிறாரே என்று என்ன சொல்வது என்றே தெரியாமல் மனதிற்குள் புகைந்துகொண்டிருந்தேன்.

அவரது கால்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். ‘

நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு; வாழி, கேசனே!’

என்று அவர் தனது உபன்யாசங்களில் சொல்லும் கும்பகோணம் ஆராவமுதன் பற்றிய ஒரு ஆழ்வார் பாசுரப் பாடல் நினைவுக்கு வந்தது.

ஸாரின் நிலை பற்றி யோசிக்கும் போது கடவுள் பற்றிய எண்ணமும் வரும். அவர் பெயரையே பாடிய இந்த வாய் இப்படிப் பேச முடியாமல் கிடப்பது என்ன ஒரு நிலை ? கடவுள் என்பது உண்மையில் இருக்கிறதா ? என்றெல்லாம் எண்ணங்கள் ஓடின.

ஆனால் இப்படி நான் நினைப்பது ஸாருக்குத் தெரிந்தால் கோபிப்பார் என்று எனக்குத் தெரியும். ‘பூர்வ ஜென்ம கர்மான்னு ஒண்ணு இருக்கே, ப்ராரப்த கர்மான்னு சொல்லுவா. அதை அனுபவிச்சே தீரணும்’, என்று அவர் பேச்சில் சொல்வது போல் பட்டது. முன்னர் ஒருமுறை அவர் எப்போதோ சொல்லியிருக்கக் கூடும்.

‘உனக்கு வேணுங்கறத நீ போய் ஏன் அவங்கிட்டே கேட்கறே ? உன்னோட மனசு சின்னது. அவனோடது பெருசு. நீயா கேட்டா சின்னதா கேப்பே. அவனா குடுத்தா பெருசா குடுப்பான். அதோட அவங்கிட்டே உனக்கு என்ன செய்யணும்னு சொல்ல நீ யாரு?’, என்பது போல் முன்பு ஒரு முறை அவர் பேசியது நினைவிற்கு வந்தது.

அந்த முரணை நினைத்து சிரித்தேன். ஸாரைத் திரும்பிப் பார்த்தேன். ஆக்ஸிஜன் குமிழ் கீழ் இருந்த அவரது கண் ஓரத்தில் சிறிது கண்ணீர் தெரிந்தது. ஒருவேளை என் மனதில் உள்ளதை உணர்ந்திருப்பாரோ என்று எண்ணியது மனம்.

ஸாரின் ஓய்வூதியம் இருந்ததால் குடும்பம் ஒருவாறு ஓடிக்கொண்டிருந்தது. உண்மையில் ஆடிக்கொண்டிருந்தது என்று சொல்ல வேண்டும். பையனுக்கு வேறு ஊரில் வேலை. ஒரு வாரத்தில் இரண்டு நாள் வேலைக்குச் சென்றுவிட்டு மீத நாட்களில் சென்னை வந்து விடுவான். அவனது குடும்பம் ஊரில் தனியாக இருந்தது. ஸாரின் மனைவி சென்னையில் உறவினர் வீட்டில் இருந்தார். தினமும் காலையில் மருத்துவமனை வந்து இரவு கடைசிப்பேருந்தில் திரும்பிச் செல்வார். இரவு ஸாருடன்  நானோ, ஸாரின் தம்பியோ இருப்போம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து அவருக்கு ஏதாவது வேண்டுமா என்று பார்த்துக்கொள்வோம்.

ஒரு முறை அவர் வந்து ஓய்வூதியப் படிவத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் அதன் பின்னர் தான் அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் ஒரு கடிதம் வந்தது. அவர் சென்னையில் இருக்கும் நிலையில், மயிலாடுதுறை சென்று கையெழுத்திட வேண்டுமாம். நிகழ் காலத்தின் இரக்கமற்ற நிலையைப் பார்த்தேன். அந்த அரசு அலுவலருக்கு நீண்ட ஒரு கடிதம் எழுதினோம்- அவரால் வர முடியாது, மருத்துவமனையில் இருக்கிறார் என்று சொல்லி எழுதி இருந்தோம். அவர்களிடமிருந்து ஒரு மாதம் கழித்து பதில் வந்தது. ‘அரசு சட்டத்தின் படி ஓய்வூதியக் காரர் இன்னனும் உயிருடனேயே உள்ளார் என்று எங்களுக்குத் தெரிய வேண்டும். ஆகவே அவர் வந்து தான் ஆக வேண்டும் …’ என்கிற ரீதியில் கடிதம் வந்தது.

‘நான் இன்னமும் உயிருடன் தான் இருக்கிறேன். ஒருவேளை போய்விட்டால் மகன் சொல்லியனுப்புவான்..’ என்கிற ரீதியில் பதில் போட்டுவிடலாமா என்று பற்றிக்கொண்டு வந்தது. ஸாரின் குடும்பம் இருக்கும் நிலையில் அவரது ஓய்வூதியம் மிகவும் அவசியமானதாக இருந்தது. அதனால் ‘கெத்து காட்டுவது’ முதலானவை வேண்டாம் என்று மனதை அமைத்திப்படுத்திக் கொண்டேன். நிதர்சனம் பல்வரிசை அனைத்தும் காட்டி நின்றது.

ஒரு நீதிபதியிடம் கையெழுத்து வாங்கி ஒருவாறு ஓய்வூதிய பிரச்சினை தீர்ந்தது.

மருத்துவமனை பயமுறுத்தியது.  ஒரு வாரம் கெடு கொடுத்தது.

உதவி கேட்டுப் படையெடுப்பு துவக்கினோம். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த ஒரு பெரிய அமைச்சர் ஒருவரிடம் இந்தக் கடிதம் கொடுத்தோம். மீண்டும் அழைப்பதாகக் கூறினார். பதில் இல்லை. சொல்லாமலேயே அவர் வீட்டுக்குச் சென்றோம். வாசலிலேயே தடுத்து வைக்கப்பட்டோம். பிறகு பார்ப்பதாகக் கூறி அனுப்பினார் அவர். இன்று வரை பதில் இல்லை.

மருத்துவமனை இருந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஒரு முன்னாள் நடிகர். அவரைச் சென்று சந்தித்தோம். மன்னிக்கவும். சந்திக்க முயற்சி செய்தோம். பல அலைக்கழிப்புகளுக்குப் பின் அவர் ஒரு நாள் காலை ‘நடைப் பயிற்சி’ செய்ய வீட்டை விட்டு வெளியே வரும் போது ஓடிச்சென்று பேசினோம். சரியாக ஒரு நிமிடம் பேசினார். ‘ இதப் பாருங்க, நான் ஒன்று செய்ய முடியும். முதல்வருக்கு ஒரு கடிதம் கொடுக்க முடியும். ஆனால் பயன் ஒன்றும் இல்லை. ஒரு வாரம் கழித்து வந்து வாங்கிக்கொள்ளுங்கள்’, என்று வேகமாகச் சொல்லி காரில் ஏறிச் சென்று விட்டார். 67 வயதான ஸாரின் தம்பியும் நானும் விதியையும் எங்கள் நிலையையும் கண்டு மயிலாப்பூர் வீதியில், சொல்லப்போனால் நடுத்தெருவில், கையாலாகத் நிலையில் நின்றுகொண்டிருந்தோம். ஸாரின் தம்பி ஒரு அரசு நிறுவனத்தில் பணி ஓய்வு பெற்றவர். சுதந்திர இந்தியாவில், தமிழ் மொழியை வாழ வைக்கவே பிறப்பெடுத்த தமிழகத்தில், தமிழ்ப் புலவர் ஒருவர் மருத்துவமனையில் கேட்பாரற்று கிடந்தார். நாங்கள் ஒன்றும் செய்ய முடியாமல் தெருவில் நின்றோம்.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஸார் அதே மயிலாப்பூரில் ஒரு கோவிலில் ‘நாராயணீயம்’ உபன்யாஸம் செய்தார். கோவிலில் ஒரே கூட்டம். பாராட்டு எல்லாம் கிடைத்தது. அதே சாலை வழியாக அவரைக் காரில் அழைத்து வந்து கொண்டு விட்டார்கள். ஆனால் அதே தெருவில் நாங்கள் செய்வதறியாது நின்றுகொண்டிருந்தோம்.

அடுத்த அஸ்திரம் தயாரித்தார் ஸாரின் தம்பி. ஒரு சமயத் தலைவரிடம் சென்று அவர் மூலமாக ஒரு முன்னாள் அரசு அதிகாரியைப் பிடித்து, அவரது மூலமாக அந்த மருத்துவமனையின் தலைவருக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். ‘உங்கள் மருத்துவமனையில் இருக்கும் ஸார் ஒரு நல்லாசிரியர் விருது பெற்றவர். 18 தமிழ் நூல்கள் எழுதியுள்ளார். பல பல்கலைக்கழகங்களில் பேருரை ஆற்றியுள்ளார். ஆகவே அவரது மருத்துவச் செலவை சற்றுக் குறைத்துக் கொள்ளவும்’, என்ற ரீதியில் பல சான்றுகள் இணைத்து மனு போல் எழுதிக் கொண்டு சென்றார். மருத்துவமனையின் தலைவரின் மகளின் உதவியாளருக்கு வேண்டியவரின் மனைவி மூலமும் சொல்லப்பட்டது. மருத்துவத்தின் செலவு ஒரு லட்சம் இறங்கியது. ஆனாலும் 18 லட்சத்திற்கு எங்கே போவது ? ஸாரும் குணம் அடையவில்லை. ஆனால் பணமோ கட்டியாக வேண்டும்.

‘நீங்கள்ளாம் படிச்சவங்க. இந்த பேஷன்ட் இப்படியே தான் இருப்பார். இங்கே இருந்து அழைத்துக்கொண்டு போகவும் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். நீங்களாகவே முடிவு செய்து கொள்ள வேண்டியது தான். இது நீங்கள் படும் கஷ்டம் பார்த்து நானாகச் சொல்கிறேன்’, என்று பீகாரைச் சேர்ந்த ஒரு மருத்துவர் சொன்னார். ஸாரைப் பார்த்துக்கொண்ட நரம்பியல் துறைத் தலைமை மருத்துவர்,’எனக்கு ஃபீஸ் ஒன்றும் வேண்டாம். என்னால் இப்படித்தான் உதவ முடியும்’, என்று தனது ஊதியம் சுமார் 1 லட்சத்தை விட்டுக்கொடுத்தார்.

இப்படியாக மொத்த செலவு 16 லட்சமாகக் குறைந்தது. இதுவும் எட்டாக் கனியே. ஆனால் 18 ஐக் காட்டிலும்  குறைவுதான். இருந்தது போனது என்று பலதையும் விற்று, கடனும் வாங்கி அவரது மகன் மருத்துவமனைப் பணம் பங்கீடு செய்தான்.

ஆனது ஆகட்டும் என்று ஸாரை மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டு வந்து விட்டோம்.

வீட்டிலேயே வைத்து வைத்தியம் செய்தார்கள்.

மூன்று ஆண்டுகள் படிக்கையிலேயே இருந்தார் ஸார். பேச்சும் வரவில்லை. அவரது பழைய பேருரைகளை அவர் காதுகளில் விழும்படி பெரிய சத்தத்தில் ஒலி பெருக்கியில் வைத்துக்கொண்டே இருந்தார்கள். அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை போல் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தார். பல முறை என்னவெல்லாமோ சொல்ல வந்தார். ஆனால் எங்களுக்குப் புரியவில்லை.

பின்னர் ஸார் மூன்று வருடங்கள் கழித்து 2010-ல் இறைவனடி சேர்ந்தார் என்று கேள்விப்பட்டேன்.

சென்று பார்க்கத் திராணி இல்லாததால் நான் போகவே இல்லை.

அதன் பிறகு நான் மாயவரத்திற்குச் செல்லவில்லை.

ஸாருடன் நடந்தபடி பாடம் கேட்ட தெருக்களிலும், அவர் நடந்த புழுதிகளிலும் நான் மட்டும் தனியாக நடக்க எனக்குத் தைரியம் இல்லை.

அனுமன் சொன்ன கதை

Hanuman Tzrதேர் கட்டியது போக மிச்சம் இருந்த மரக் கட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்தேன். பழைய எரிந்த தேரின் சில மரச் சட்டங்களும் இருந்தன. பழைய தேரின் மர ஆணிகள் நன்றாக இருந்ததால் அவற்றில் சிலவற்றைப் புதிய தேரிலும் சேர்த்திருந்தோம். இரு தேர்களுக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கட்டும் என்று அவ்வாறு செய்திருந்தோம்.

பழைய மரக்கட்டைகளை எடுத்து விறகில் சேர்க்கலாமா என்று கேட்டுக்கொண்டிருந்தார் ராமு ஆசாரி. காலில் ஆணி குத்தியது போல் இருந்தது. குனிந்து எடுத்தேன். ஒரு மரக்கட்டையில் பழைய ஆணி போன்று இருந்தது. கட்டையை எடுத்துப் பார்த்தேன். பழைய உளுத்துப்போன கட்டையாக இருக்கும் என்று நினைத்து திருப்பிப் பார்த்தேன். அது ஒரு அனுமன் வடிவம். கை சஞ்சீவி மலை தூக்கிய நிலையில் இருந்தது.

சரி எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்துச் சென்று வீட்டில் என் அலமாரியில் வைத்தேன்.

எதிர் வீட்டு கிச்சாமி ‘இது ஆயிரங்காலத்து அனுமன் வடிவம். தேரில் இருந்தது. வீட்டில் வைக்கலாமோ கூடாதோ’, என்று ஒரு குண்டு போட்டுச் சென்றான். எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு அகல் விளக்கு எற்றி வைத்தேன்.

அப்போது தான் பார்த்தேன் அதை. அனுமன் கால் அடியில் சிறிய எழுத்துக்கள். தமிழ் போலவும் தெரிந்தது.ஆனால் வடிவங்கள் புரியவில்லை.

சட்டென்று உரைத்தது. வட்டெழுத்துக்கள். அட, இவை சோழர் கால எழுத்துக்கள் ஆயிற்றே என்று பட்டது.

உடம்பில் ஒருமுறை அதிர்ந்தது.

மனதில் பல சிந்தனைகள் ஒடின.

‘யார் செய்திருப்பார்கள் இந்தச் சிலையை ? ராஜ ராஜனின் தாத்தன் வழியில் கரிகாலன் கட்டிய கோவில் என்று தெரியும். ஆனால் தேரை யார் கட்டியது என்று தெரியவில்லை.ஒருவேளை கரிகாலன் காலத்துத் தேர்ச் சிற்பமா இந்த அனுமன் ? இவன் எத்தனை சாம்ராஜ்யங்களைக் கண்டிருப்பான் ? கரிகாலன் முதல், கண்டராதித்தன், ஆதித்த கரிகாலன், பராந்தகன், அரிஞ்சயன், ராஜ ராஜன், ராஜேந்திரன் என்று எவ்வளவு பேரைப் பார்த்திருப்பான் இந்த அனுமன் ?

அல்லது இந்தச் சிற்பம் கரிகாலனுக்கு முந்தையதோ ? அவன் அதன் அழகில் மயங்கி அப்படியே தேரில் பதித்து விட்டானோ ? அப்படியென்றால் என் வீட்டில் உள்ள சிற்பம் பல நூற்ராண்டுகளைக் கண்டிருக்குமே !

அனுமனே பழைய ஆள். திரேதா யுகம் அவனது காலம். ஆனால் யுகங்கள் பல தாண்டி இன்று அவன் வடிவம் என் கையில்.

இந்த அனுமனின் எதிரில் நான் யார் ? இருபத்தொன்றாம் நூற்றாண்டின் ஒரு துளியில் நின்றுகொண்டிருக்கும் ஒரு தூசி. என் காலமே சில பத்து ஆண்டுகள் மட்டுமே. என் காலம் முடிந்த பின்னும் இந்த அனுமன் இருப்பான். அப்போது வேறொரு தூசியின் கையில்,அவனைப் பார்த்தபடி, அவனது அற்ப ஆயுளைக் கணக்கிட்டபடி மோனச் சிரிப்புடன்.

இவன் பார்த்துள்ள சம்பவங்கள் என்னவெல்லாம் இருக்கும் ? முகலாயர் ஆட்சி, வெள்ளையர் ஆட்சி, அதற்கும் முன்னர் நம்மவரின் பல வகையான ஆட்சிகள்.

இவன் இருந்த எரிந்த தேரின் வழியாக எவ்வளவு மாந்தர் சென்றிருப்பர் ? சில லட்சம் பேர் இருக்க மாட்டார்கள் ?

எத்தனை பஞ்ச காலங்களையும் வளம் கொழித்த காலங்களையும் கண்டிருப்பான் இவன் ? எதுவாக இருந்தாலும் அதே மோனப் புன்னகையுடன், நடக்கும் அத்துணை நிகழ்வுகளுக்கும் சாட்சியாக, மௌனமாக நின்றிருப்பான் இவன் ?

இவனுக்கு முன் நான் எம்மாத்திரம் ? வெறும் எண்பது ஆண்டுகள் வாழும் நான் இவனைப் பொறுத்தவரை ஒர் புழு. அவ்வளவே.

இப்படி புழுவாக இருந்தாலும் எத்தனை ஆட்டம் ஆடுகிறேன் நான் ? உசத்தி தாழ்த்தி என்ன , மேதாவி பாமரன் என்ன ? எத்துணை வெற்று ஏக்களிப்புகள் ?

இத்துணை யுகங்கள் கடந்து வந்துள்ள இவன் முன்னர் நான் எம்மாத்திரம் ?

எனக்கு முன்னர் இந்த ஊரில் இருந்த மாந்தர் கொக்கரித்த சொற்கள் என்னவாயின ? அவர்களே என்னவானார்கள் ? அவர்கள் இருந்த இடமே தெரியவில்லையே ?

சாதாரண மனிதர் இருக்கட்டும். எத்துணைத் தலைவர்கள் இருந்துள்ளனர் ? அவர்கள் இருக்கும் வரை அவர்களும் அவர்களது சூழமும் செய்யும் அளப்பரைகள் எத்துணை? இவனுக்கு முன்னர் அவர்கள் எல்லாம் யார் ?

சமுதாயத்தையே மாற்றியதாகக் கூறிக் கொண்ட அரசுத் தலைவர்கள் இப்போது இருக்கும் இடம் எங்கே ? அவர்கள் இருந்ததற்கான தடங்களே அழிந்து போய்விட்டன. ஆனாலும் இன்றும் இந்த அனுமன் என் கைகளில் நிற்கிறான்.

‘என்ன, நிலையாக இருக்கப்போவதாக எண்ணமோ? உன்னைப்போல் எத்துனை பேரைக் பார்த்திருக்கிறேன்?’என்று என்னைக் கேலி பேசுவதாகத் தோன்றியது.

அப்போதுதான் அது நடந்தது. பதுமை பேசியது.

“என்ன பார்க்கிறாய்? உன்னையும் எனக்குத் தெரியும், உன் பரம்பரையையே நான் அறிவேன். நான் அதற்கெல்லாம் முற்பட்டவன். உன் வாழ்வில் நீ பார்க்கப்போவது நான் பார்த்ததில் ஒரு நெல் மணி அளவு கூட இருக்காது.

நான் பார்த்ததில் உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். உன் தாத்தாவைப் பற்றியது. முக்கியமாக அவருக்கு என்னைப் பிடிக்கும். நான் இருந்த பழைய தேர் எரிந்த வருஷம் அவர் ரொம்பவும் மன வருத்தம் அடைந்தார். அவருக்குப் பல எதிரிகள் இருந்தனர்.

நல்ல மனுஷர் அவர். என்ன, ரொம்பவும் வெளிப்படையாகப் பேசுவார்.பேசுவது போலவே நடக்கவும் வேண்டும் என்று சொல்லி வந்தார். இதனாலேயே அவருக்குப் பல எதிரிகள் உண்டாயினர்.

உன் தாத்தாவின் தந்தை கோவிலில் கைங்கைர்யம் செய்து வந்தார். மீத நாட்களில் வேறு ஊர்களுக்கு வேத பாராயணம் செய்யச் சென்று விடுவார். பூ கைங்கர்யம், தளிகை என்றால் கூட நன்கு கற்றிருக்க வேண்டும் அப்போதெல்லாம்.

ஒரு நாள் அவரால் தளிகை பண்ண மடப்பளிக்குள் செல்ல முடியவில்லை. அதனால் உன் தாத்தாவை தளிகை பண்ண அனுப்பினார். அப்போது அவருக்கு இருபது வயது இருக்கும். பதினான்கு வருடம் வேதப் பயிற்சி முடித்து அப்போதுதான் திருக்கண்ணபுரம் பாடசாலையிலிருது திரும்பி இருந்தார்.மடப்பளிக்குள் செல்ல நந்தவனம் வழியாகச் செல்ல வேண்டும். அப்போது தான் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்ல முடியும். நந்தவனத்திற்குள் இருப்பதால் ஆள் அரவம் இருக்காது.

கிணற்றடியில் ஊர் பெருந்தனக்காரர் நந்தவனக் காவல்காரன் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டார். ஆனால் இருவரும் பேசிக் கொள்ள மட்டும் வரவில்லை என்று உன் தாத்தாவிற்குப் புரிந்தது.

பெருந்தனக்காரர் தான் ஊரில் ஆசார நியமங்களை வகுப்பவர். ஊரில் உற்சவத்தின் போது யாருக்கு முதல் மரியாதை என்பது முதல் அவர் வைப்பதே சட்டம். ஆனால் இவ்வளவு சட்டம் பேசும் அவர் காவல்காரன் மனைவியுடன் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது உன் தாத்தாவிற்கு வியப்பளித்தது.

ஆனால் உன் தாத்தா பார்த்ததை பெருந்தனக்காரர் பார்த்துவிட்டார். ஏதோ வேலை சொல்வது போல் அவளை அதட்டி அனுப்பினார்.அவரது அதட்டல் உண்மை இல்லை என்று உன் தாத்தாவிற்குத் தெரியும் என்று பெருந்தனக்காரர் அறிந்திருந்தார்.

என்ன தோன்றியதோ தெரிய்வில்லை உன் தாத்தா பெருந்தனக்காரரை ஓங்கி ஒரு அறை விட்டார். வயது சற்று கூடின பெருந்தனக்காரர் அப்படியே சுருண்டு விழுந்தார். ஒன்றுமே நடவாதது போல் உன் தாத்தா மடைப்பளி சென்றுவிட்டார்.

அதுவரை அரசல் புரசலாக இருந்தது வெளியே கசியத் துவங்கியது.

அந்த வருஷம் உற்சவம் அவ்வளவு சௌஜன்யமாக இல்லை. முதலில் இருந்தே தகராறு.

முதல் நாள் உற்சவம் அன்றே முதல் மரியாதை தனக்கே வர வேண்டும் என்று பெருந்தனக்காரர் பேசினார். எதிர்த்து யாரும் பேசவில்லை. சிறிது மௌனம் நிலவியது. யாருக்காவது மாற்றுக் கருத்து உண்டா என்று சபையில் கேட்கப்பட்டது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. சபை தேர்முட்டி ‘வழி காட்டிப் பிள்ளையார்’ மண்டபத்தில் நடந்ததால் நான் கவனித்துக்கொண்டிருந்தேன்.

சபையின் ஓரத்தில் சிறிது சல சலப்பு கேட்டது. சில பெரியவர்கள் உன் தாத்தாவைக் கையைப் பிடித்து இழுத்து அமர வைக்க முயன்றனர். “அவனைப் பேச விடுங்கள்”, என்று தலைமை பட்டர் கூறினார்.

சபை அவர் பேச ஆமோதித்தது. ஆனால் பெருந்தனக்காரர் ஆட்சேபித்தார். ‘பிரும்மச்சாரிகள் சபைகளில் பேசுவது சாஸ்த்ர விருத்தம்”, என்று கூறினார் பெருந்தனக்காரர். உன் தாத்தா தன்னை எதிர்த்துப் பேசப் போகிறார் என்று ஒருவாறு ஊகித்துவிட்டார் பெருந்தனக்காரர்.

அப்போது உன் தாத்தா கூறியது என் காதுகளில் இன்னும் ஒலிக்கிறது. அது ஒரு சிம்ம கர்ஜனை என்பேன்.

“பிரும்மச்சாரிகள் சபைகளில் பேசக் கூடாது என்பது உண்மை தான். ஆனால் ஏக பத்தினி விரதர்கள் மட்டுமே சபையில் அமர வேண்டும் என்றும் சாஸ்த்ரம் கூறுகிறது என்று சபை முன் சமர்ப்பிக்கிறேன்”, என்று சூசகமாகக் கூறினார் உன் தாத்தா.

சபை நடுவர்களில் பல ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இவர் யாரைச் சொல்கிறார் என்று கேட்டுக்கொள்வது போல் இருந்தது எனக்கு. பலர் ஏக-பத்தினிக் காரர்கள் அல்லர் என்பது அப்போது தெளிவாகியது.

உன் தாத்தா மேலும் சொன்னார்,” நான் யாரைச் சொல்கிறேன் என்று அவரவர்களுக்குத் தெரியும். எனவே முதல் மரியாதை பற்றிப் பேசுவதற்கு முன் ஒவ்வொருவரும் தாங்கள் இந்தச் சபைக்கே பொறுத்தமானவர்களா என்று கேட்டுக்கொள்வது நல்லது”, என்று மேலும் கூறினார்.

சபைக்காரர்களில் பலருக்கு முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. ஏதோ தங்கள் வரை பிழைத்தோம் என்று நிம்மதி அடைந்தனர் போல் தெரிந்தது.

அத்துடன் சபை கலைந்தது. பின்னர் அந்த வருடம் பெருந்தனக்காரருக்கு முதல் மரியாதை கொடுக்கப்படவில்லை.

பெருந்தனக்காரர் அத்துடன் விடவில்லை. கறுவிக்கொண்டிருந்தார்,

ஒருமுறை வைகாசி உற்சவத்தின் போது ஒரு வெள்ளி சந்தனக்கிண்ணம் காணாமல் போனது. அது காணாமல் போகவில்லை. தேருக்குக் கீழே பெருந்தனக்காரரின் வேலையாள் போட்டு விட்டுச் சென்றது எனக்குத் தெரியும்.

கடைசியாக வேத விற்பன்னர்களுக்குச் சந்தனம் கொடுத்தது உன் தாத்தா தான் என்பதால் அவர் பேரில் சந்தேகம் எற்படச் செய்தார் பெருந்தனக்காரர். கிண்ணத்தைத் திருப்ப வேண்டும், அத்துடன் இரண்டு ஆண்டுகள் உற்சவங்களில் ஈடுபடக் கூடாது அல்லது கம்பத்தில் கட்டி வைத்து அடி வாங்க வேண்டும் என்பதே சபை அவருக்கு அளித்த தீர்ப்பு.

ஏழைச் சொல் அம்பலம் ஏறவில்லை. உன் தாத்தா குற்றவாளி என்று தீர்ப்பு எழுதினர். வெள்ளியைத் திருப்ப வழி இல்லை. தேர் எதிரில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்தார்கள். பெருந்தனக்காரர் உட்பட நால்வர் அடிப்பது என்று முடிவானது.

தாத்தா கட்டி வைக்கப் பட்டார்.

அப்போது குடியானத் தெருவிலிருந்து பெரும் கூச்சல் கேட்டது. சுமார் இரு நூரு பேர் கையில் வேல் கம்புகளுடன் கோஷம் எழுப்பியபடி வந்தனர். அவர்களில் நந்தவனக் காவல்காரனும் தென்பட்டான். இன்னொரு பக்கத்திலிருந்து சங்கர அக்ரஹாரத்திலிருந்து வக்கீல் ராமசுப்பையர் தனது ஆட்களுடன் வந்துகொண்டிருந்தார்.

அப்புறம் என்ன ? உன் தாத்தா அவிழ்த்து விடப்பட்டார். பெருந்தனக்காரர் மீது ராமசுப்பையர் வழக்கு போட்டார். பல வழக்குகளில் மாட்டி பெருந்தனக்காரர் தன் செல்வம் எல்லாம் இழந்தார். விரைவில் ஊரை விட்டு வெளியேறினார். சில நாட்களிலேயே காலமானார்.

ராமசுப்பையர் உன் தாத்தாவின் பால்ய நண்பர். அத்துடன் அவருக்கும் பெருந்தனக்காரரிடம் சில பழைய பகைகள் இருந்தன. எல்லாம் சேர்த்து பழி வாங்கிவிட்டார் ராமசுப்பையர் என்று பேசிக்கொண்டார்கள்.

ஆனால் இதெல்லாம் ஒரு அநீதியை சமன் படுத்தவே என்று எனக்குத் தெரியும்.

இது எல்லாம் நடந்த முப்பது ஆண்டுகள் கழித்து நான் இருந்த தேர் எரிக்கப்பட்டது. அதற்கு ஐம்பது ஆண்டுகள் கழித்து நான் உன்னிடம் இருக்கிறேன்.’

“டேய், நான் தான் சொன்னேனே, ஆயிரம் வருஷம் பழசெல்லாம் வீட்டுலெ வெச்சுக்க வேண்டாம்னு. பாரு எவ்வளோ நாழியா அதையே பார்த்துண்டு நிக்கறே!”, என்று கிச்சாமி சொன்ன போது தான் சுய நினைவுக்கு வந்தேன்.

எத்தனை நேரம் நான் அப்படியே அனுமன் சிலையைப் பார்த்தபடி நின்றிருந்தேன் என்று தெரியவில்லை.

இது வரை பேசியது யார்? இந்த நிகழ்வுகள் எல்லாம் உண்மையா ? அல்லது என் பிரமையா ?

தெரியவில்லை. ஆனால் இவை அனைத்தையும் அனுபவித்தது போலவே இருந்தது.

இது போல் பல முறை நிகழப் போகிறது எனக்கு அப்போது தெரியவில்லை.

ஒரு இனிய காலைப் பொழுது ..

நான் அப்பவே சொன்னேன், இந்த காங்கிரசை நம்பாதீங்கன்னு.அவங்களுக்குக் கொள்கை, கத்திரிக்காய் ஒரு மண்ணும் கிடையாது, காலை வாரி விட்டவங்க கிட்ட போய் நிப்பாங்க, அடிக்கடி உளறுவாங்க அப்பிடின்னு.

நண்பர் நம்பலே. இல்லை. அப்படி எல்லாம் இல்லை, அவர்களுக்கு  கொள்கை பிடிப்பு உண்டுன்னு சொன்னார். தி.மு.க.வும் அப்படித்தான், அவங்களுக்கும் கொள்கைப்  பிடிப்பு உண்டுன்னு சொன்னார்.

எனக்குப் பகுத்தறிவு பத்தலை. அதனாலே புரியலை.

இப்போதான் புரியுது. கனிமொழி ராஜ்ய சபா பதவிக்கு காங்கிரஸ் ஆதரவு ஏன்னு.

காங்கிரஸ் ஒரே ஒரு கண்டிஷன் தான் போட்டது. அதாவது 2G விவகாரத்துலே ராஜா வாயைத் திறக்கக் கூடாது. பார்லிமெண்டரி கமிட்டி முன்னாடி வந்து பேசுவேன்னு சொல்லக்கூடாது. அது சரின்னா கனிமொழிக்கு ஆதரவு. எப்பூடீ ?

கலைஞர் விவரம் தெரிந்தவர். ஸ்டாலின் பதவிலே  இருக்கார். எம்.எல்.ஏ. பதவி. அழகிரி எம்.பி. பதவி. இப்போ ஊசல்லே இருக்கறது கனி தான். சரி என்ன செய்யலாம்? யோசிச்சார்.

பெரியார் கை பிடித்து நடந்தவர் ஆச்சே. இது கூடவா தெரியாது?

சின்ன மீனப் போட்டுதான் பெரியமீன எடுக்கணும்.

இப்போ சின்ன மீன் ராஜா. பெரிய மீன் கனி.

கனி இருப்பக் காய் கவர்ந்தற்றுன்னு வள்ளுவர் தெரியாமலா சொன்னார்?

போட்டாரே ஒரு  போடு கலைஞர். பள்ளிகளில் ஆங்கிலம் கூடாதுன்னு பத்திரிகைகளுக்கு ஒரு தீனி போட்டுக்கொண்டே ஜெயந்தி நடராஜனை வரவழைத்துப் பேசினார்.

பேரம் முடிந்தது. கனி ( பழம் ) நழுவிப் பாலில் விழுந்தது.

அப்போது அவ்வையார் பாடிகொண்டே வந்தார் :

“பெரிது பெரிது தி.மு.க. பெரிது

அதனினும் பெரிது அதனது ஊழல்

தலைவருக்கு வீட்டுப் பிரச்சினை

எல்லாவற்றையுவிட ஆகப் பெரிது

அதனினும் பெரிது மகளின் எதிர்காலம்

மகளின் பெருமை சொல்லவும் அரிதே”

“சே, காலங்கார்த்தாலே என்ன தூக்கம்? எழுந்து வேலைக்குப் போங்க”, என்று மனைவியின் கத்தலில் கனவு கலைந்து பல் தேய்க்க ஓடினேன்.