ஈன்றபொழுதில்..

‘நந்தனம் கிவ்ராஜ் பில்டிங் வருவீங்களா?’ அண்ணா சாலை D2 போலீஸ் ஸ்டேஷன் வாசலில் ஆட்டோ ஓட்டுனரைக் கேட்டேன். 

‘வரும் சார். எவ்வளவு தருவீங்க?’ 

‘நீங்க கேளுங்க’

‘இல்ல. நான் கேப்பேன். அப்புறம் உங்களுக்கு கோவம் வரும்’

‘அதெல்லாம் வராதுங்க. நீங்க கேளுங்க. கட்டினா வரேன். இல்லேன்னா நீங்க கிளம்புங்க’

‘ஆங். சரிதான். அப்டின்னா சரிதான். எல்லாரும் கோச்சுப்பாங்க. நீங்க அப்பிடி இல்ல போல. சரி 100 குடுங்க’

‘சரி கிளம்பலாம்’

‘என்ன சார். ஒண்ணுமே பேரம் பேசல்ல’

‘ஐயா, எங்கிட்ட வாங்கி நீங்க அண்ணா நகர்ல வீடா வாங்கப் போறீங்க?’ என்றவனைப் பார்த்துப் புன்னகைத்தார் டிரைவர்.

‘உங்களுக்குப் புரியுது சார். எல்லாம் வெலை ஏறிப் போச்சு. பாருங்க ஷாக் அப்சார்பர் மாட்டிக்கிட்டு வரேன். பில்லு பாருங்க.’ வழக்கமான புலம்பல் என்று எண்ணிப் பேச்சை மாற்றினேன்.

‘ நீங்க ஏன் ஓலாவுல ஓட்டலை’ என்றேன். சில காரணங்கள் சொன்னார். ஓலா ஏமாற்றுவதைச் சொன்னார். ஓலா ஆர்.டி.ஓ.வையே ஏமாற்றுவதைச் சொன்னார். 

‘எந்த ஊர் உங்களுக்கு?’ 

‘எனக்கு காஞ்சிபுரம். இன்னும் கொஞ்ச நாள் தான் ஆட்டோ. அப்புறம் நாலு மாடு கன்னுன்னு பால் வியாபாரம். நான் யாதவன். பெருமாள் படியளக்கறார்’ என்றார்.

‘சரிதான். அதென்ன கொஞ்ச நாள்?’ என்றேன் ஆவலில்.

‘இல்ல. பொண்ணு ஜுடிசியல் சர்வீஸ் பரீட்சை பாஸ் பண்ணனும். அதுக்கப்புறம் ஆட்டோ ஓட்ட மாட்டேன்’ என்றதும் தூக்கி வாரிப் போட்டது.

‘என்னது ஜூடிஷியல் சர்வீஸா?’

‘ஆமாம் சார். பொண்ணு அம்பேத்கார் லா காலேஜில கோல்டு மெடல். இப்ப காஞ்சிபுரத்துல ப்ராக்டீஸ். ஜுடிசியல் சர்வீஸ் பரீட்சைல மூணு மார்க்குல போயிடுச்சு. திரும்பவும் எழுதறா. அவ மட்டும் டிஸ்டிரிக்ட் கோர்ட்டுல ஜட்ஜ் ஆயிட்டா, அப்புறம் ஏழு வருஷத்துல ஹைகோர்ட். அதுக்கு தான் நான் வெயிட் பண்றேன்’ 

‘உங்க பேரு மாணிக்கம் (எ) பாட்சாவா?’ என்று கேட்க நினைத்தேன். இன்னும் ஆச்சரியங்கள் உள்ளனவா என்று தெரிந்துகொள்ள ‘ஆமாம், உங்க பொண்ண லா படிக்க வைக்கணும்னு எப்பிடி தோணிச்சு?’ என்றேன் சீட்டில் சாய்ந்தபடி, ஒரு நீண்ட ப்ளாஷ்பேக்கை எதிர்பார்த்து. 

‘நல்லா கேட்டீங்க. மொதல்ல ஆட்டோ டிரைவர்னா ஒரு அவமரியாதை தான். முக்கியமா போலீஸ். அடா, வாடா, தே..பயலேன்னு கூப்பிடுவாங்க. அப்பப்ப இண்டிகேட்டர ஒடைக்கறது, மேல கைய வெக்கறதுன்னு மனுஷனாவே மதிக்க மாட்டானுங்க. மேல எல்லாம் சொல்லிப் பலனில்ல. சரி. சட்டத்துக்குதான் இவனுங்க பயப்படுவானுங்கன்னு பொண்ண சட்டம் படிக்க வெச்சேன். சிஸ்டத்துக்குள்ள இருந்துகிட்டு அதை சரி பண்ணணும். அது தான் வழின்னும் நினைச்சு பொண்ண படிக்க வெச்சேன். இப்ப ஐயர் வக்கீல்லாம் எம் பொண்ணு பேசற இங்கிலீஷ் பார்த்து எழுந்து நிக்கறாங்க. எம் பொண்ணு பேச ஆரம்பிச்சா உக்காந்து கேக்கறாங்க. லாட்டின் இங்கிலீஷ்ல எம்பொண்ணு பேசினா ‘வெல் டன்’ ந்னு சொல்லி பாராட்டறாங்க. எனக்கு பொருமையா இருக்கு. போற போது என்ன கொண்டு போகப்போறோம்? நல்லது செஞ்சுட்டுப் போகணும். நல்ல வக்கீலக் குடுத்திருக்கேன். நாளைக்கே நல்ல ஜட்ஜ் கிடைப்பாங்க. நாடு நல்லா இருக்கணும். அவ்வளவுதான்.’

Venkatesan Autoமாணிக் பாட்சா, மாணிக்கம்  தோன்றி மறைந்தார். 

‘உங்கள போட்டோ எடுத்துக்கலாமா? உங்களப்பத்தி எழுதலாமா?’ 

‘நல்லா எழுதுங்க. நாலு ஆட்டோ டிரைவர் படிச்சுட்டு தம் புள்ளைங்கள நல்லா படிக்க வைக்கட்டும்’ என்றவரின் முகத்தில் ‘ஈன்ற பொழிதில் பெரிதுவக்கும்’ தந்தை தெரிந்தார்.

‘சரி சார். பே பண்ணுவீங்களா?’ என்றபோது தான் பணம் தராமல் மயக்கத்திலேயே கீழிறங்கியதை உணர்ந்தேன். 

 இம்மாதிரியான பெற்றோர்களாலும் அவர்தம் சுமையை உணர்ந்து கற்றுத் தேறும் பிள்ளைகளாலுமே வாழ்கிறது பாரதம். 

பி.கு.: FC, Running FC என்று இரு வேறு முறைகளில் Fitness Certificate வழங்கப்படுவதைப் பற்றி அவர் சொன்னதை எழுதினால் RTO அலுவலகம் சண்டைக்கு வரும்.

ஆட்டோ அட்டூழியங்கள் – தொடரும் கதை

ஆட்டோ ஓட்டுபவர்கள் விதிகளை மதிக்காதவர்கள்  என்று நான் கூறினால் ‘இல்லை, எல்லாரும் அப்படி இல்லை, ஏதோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு அனைவரையும் குற்றம் சொல்லக் கூடாது’ என்று குதிப்பவரா நீங்கள் ?

அப்படியேன்றால் தொடர்ந்து படியுங்கள்.

தாம்பரம் என்ற நாட்டிலிருந்து தாம்பரம்-சானடோரியம் என்ற மிக நீண்ட 5 கி,மீ தூரம் உள்ள நாட்டிற்குப் போக இன்று மாலை முயன்றேன். ஷண்முகம் சாலை- ஜி.எஸ்..டி. சாலை சந்திப்பில் உள்ள ஆட்டோ கழகத்தில் கேட்டுப் பார்த்தேன் ( ஆட்டோ கழகம்- Auto Stand ). சுமார் 25 ஆட்டோக்களைக் கேட்டேன்.

ஆட்டோ எண்களைக் குறித்துக்கொண்டேன். அவர்களிடம் சென்று ‘சானடோரியம் வருவீர்களா” ?

‘போகலாம் சார், 120 ரூபா ஆகும்’

‘மீட்டர் போடுவீங்களா ?’

‘மீட்டர் எல்லாம் வராது சார். ஒரே பேச்சு 100 ரூபாய். வரீங்களா?’

‘இல்லெ, வெறும் 4 கிலோ மீட்டர் கூட இருக்காது. 100 எல்லாம் ரொம்ப அதிகம். மீட்டர் போடுங்க’.

‘இன்னா சார், மீட்டர் எல்லாம் கிடையாது. 100 ரூபாய் தான்.’

பல ஆட்டோ டிரைவர்கள் மீட்டர் என்றவுடன் மேலும் கீழும் பார்த்துச் சென்றனர்.

ஆனால் ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுனரும் மீட்டர் போட மறுத்துவிட்டனர்.

சரியென்று ஜி.எஸ்.டி. சாலை கடந்து தாம்பரம் ரயில் நிலையம் சென்றேன்.

அங்கு இருந்த ஆட்டோ ஓட்டுனர் இருவரிடம் பேசினேன்.

120 ரூபாய் ஆகும்’.

‘மீட்டர் போடுவீங்களா ?’

‘அது சரி. மீட்டர் போடறேன், ஆனால் பார்க்கிங்க் செலவு ( Parking Charge ) ரூ.30 தருவீங்களா ?’

Image

பின்னர் வெறும் ரூ.15 செலவில் நாங்கள் மூவரும் தாம்பரத்திலிருந்து சானடோரியத்திற்கு ரயிலில் வந்து சேர்ந்தோம். ஆட்டோ ஓட்டுபவர்கள் நமக்காக ஒட்டுகிறார்களே தவிர நாம் அவர்களுக்காக இல்லை என்று மனைவியும் ஒத்துழைத்தாள்.

100 ரூபாய் கொடுக்கமுடியாமல் இல்லை. ஆனால் கொள்கை என்று ஒன்று இருக்கிறதே. ஆட்டோ அட்டூழியத்திற்கு இடம் கொடுக்க மனம் இல்லை.

இதில் நாம் பார்க்க வேண்டியது  :

மீட்டர் போடுவது கட்டாயம் என்பதை ஆட்டோ ஓட்டுனர்கள் ஒரு சதவீதம் கூட மதிப்பதில்லை.

மீட்டர் போட வேண்டும் என்று கூறுபவர்களை ஏதோ மன-நலமில்லாதவனைப் போல் பார்க்கிறார்கள்.

மக்களும் மீட்டர் போட வேண்டும் வற்புறுத்துவதில்லை என்று தெரிகிறது.

இந்த ஆட்டோ ஓட்டுனர்களைக் காவல் துறையும் கண்டுகொள்வதில்லை என்பதை நேரே பார்த்தேன்.

ஒருவேளை கொட நாட்டில் மீட்டர் போடுகிறார்களோ என்னவோ !

மனம் வெதும்பி அத்துணை எண்களையும் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டேன். வேறென்ன செய்ய ?