'தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு' – வாசிப்பு அனுபவம்

nayakதெலுங்கு கீர்த்தனைகள் பாடுவதைக் குறை சொல்லும் பெரியவர்கள் படிக்கவேண்டிய நூல் ‘தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு’. குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களின் உழைப்பு, சிரத்தை, எழுத்து – அனைத்தும் கண்களில் நீர் வரவழைக்கின்றன.

தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் பணியில் இருந்த இந்நூலாசிரியர், தன்முனைப்புடன் பல ஊர்களுக்குப் பயணித்து, அங்குள்ள சிதைந்த கோவில்கள், கல்வெட்டுகள் முதலியவற்றை வாசிக்கிறார். சில தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளில் இருக்கின்றன. அவற்றை அந்தந்த மொழி வல்லுனர்கள் துணை கொண்டு வாசித்தறிந்து இதுவரை தஞ்சை நாயக்க மன்னர்கள் ஆட்சி பற்றிய 140 ஆண்டுக்கால வரலாற்றை ஐயந்திரிபற  நிறுவுகிறார்.

அவரது உழைப்பு மெய்சிலிர்க்க வைப்பது; ஊக்கம் ஆச்சர்யம் ஏற்படுத்துகிறது.

விஜயநகர மன்னர்கள் ஆட்சியில் கிருஷ்ணதேவராயரின் தம்பியில் தொடங்கி அவர்கள் ஆசியுடன் எப்படி தஞ்சையில் நாயக்கர் ஆட்சி உருப்பெறுகிறது, அவர்களது வாரிசுகள், அதற்கான ஆதாரங்கள், அவர்கள் ஆட்சியில் நடைபெற்ற அறப்பணிகள், அதற்கான ஆதாரங்கள், பல்வேறு கோவில்களில் நிறுவப்பட்டுள்ள நாயக்க மன்னர்களின் சிலைகள், அவை மூலம் உறுதிப்படும் உண்மைகள், கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் மூன்று மன்னர்களிடம் பணி செய்து பல அறச்செயல்கள் நிகழக்காரணமான கோவிந்த தீட்சிதர், அவர் கால அரசர்களான செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், விஜயராகவ நாயக்கர் ஆகியோர் செய்த பணிகள் – ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டப்புரட்ட கண்களில் நீர் நிறைந்து நூலின் மேல் விழுந்துவிடுமோ என்று கவனமாகப் படிக்க வேண்டியிருந்தது.

தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட நாயக்க மன்னர்கள் தமிழ்க் கோவில்களுக்கும், சைவ வைஷ்ணவ சம்பிரதாயங்களுக்கும் செய்த தொண்டுகள், மருத்துவச் சாலைகள் ஏற்படுத்தி அவற்றை நிர்வகிக்க செய்த ஏற்பாடுகள் – ஒவ்வொன்றும் ஆழ்ந்த பெருமூச்சுடன் படிக்க வேண்டியவை.

கன்னட பிராமணரான கோவிந்த தீட்சிதர், நாயக்க மன்னர்களின் மதியுரை அமைச்சராகவும், சிறந்த இலக்கியகர்த்தராகவும், சைவ வைஷ்ணவ பேதம் இன்றி அனைத்துக்கோவில்களுக்கும் தொண்டு செய்யும் பரந்த உள்ளம் கொண்டவராகவும் வெளிப்படுகிறார். இன்று கும்பகோணம் மகாமகக் குளம், சாரங்கபாணி கோவில், மயிலாடுதுறை துலாகட்டம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் முதலியன இப்பெரியவரின் தொண்டுகளில் சில.

அந்த நாளிலேயே போர்த்துகீசிய / டச்சு வணிகர்கள், வந்து வியாபாரம் செய்தது, கிறித்தவ மதமாற்ற நிகழ்வுகள் என்று பல உண்மைகள் தெரியவருகின்றன.

கோல்கொண்டா, பீஜப்பூர் சுல்தான்களின் படையெடுப்புகள், மதுரை நாயக்க மன்னர்களின் சூழ்ச்சிகள், மராட்டிய மன்னர்களின் படையெடுப்பு என்று பரந்து விரிகிறது இந்த நூல்.

ஒவ்வொரு கல்வெட்டிலும், சாசனத்திலும் கடைசியாக இந்தப் பொருள் தரும் வாசகம் தென்படுகிறது : ‘இந்த தர்ம காரியத்திற்கு ஹானி விளைவிப்பவன் காசியில் காராம்பசுக்களைக் கொன்ற பாவத்தில் போவான்’.

இறுதியில் மூன்றாம் தலைமுறை மன்னரான விஜயராகவ நாயக்கரும் அவரது மகனும் அவர்கள் நம்பிய முகமதிய தளபதிகளால் தஞ்சாவூரில் தெருவில் வைத்து வெட்டிக் கொல்லப்படும் செய்தியைப் படிக்கும் போது நெஞ்சு அடைப்பது உறுதி.

வாழ்வில் ஒருமுறையாவது படிக்க வேண்டிய நூல்.

சிங்கப்பூர் நூலகத்தில் இங்கு கிடைக்கிறது.