முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களே,
‘எப்படியாவது கொங்கு மக்களை அவமானப்படுத்த வேண்டும். மத மாற்றத்திற்குக் கடைசித் தடையாக உள்ளவர்கள் கொங்கு பிரதேச மக்கள். என்ன கொடுத்தாலும் மாற மறுக்கிறார்கள். இன்னும் கண்ணன் கூட்டம், சிவன் கூட்டம் என்று வாரம் தவறாமல் ஏதாவது விழாவைக் கொண்டாடிக்கொண்டே இருக்கிறார்கள்,’ என்கிற எண்ணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
 
சிவராத்ரி அன்று திருச்செங்கோடு சென்று அர்த்த நாரீஸ்வரருக்குக் கட்டளைகளை நடத்திவிட்டு வந்துள்ளார் உடன் பணியாற்றும் கொங்கு நாட்டு நண்பர். அந்த அளவுக்கு ஆன்மீகப் பற்றுக் கொண்டவர்கள் அம்மக்கள்.
 
ஶ்ரீவைஷ்ணவத்துடனும் நெருங்கிய உறவு கொண்டவர்கள் அம்மக்கள். கொங்குப் பிராட்டி, கொங்கிலாச்சான் என்று சுமார் 1000 ஆண்டுகள் இராமானுஜ சம்பிரதாயத் தொடர்புடையவர்கள் அவர்கள்.
 
இந்த மக்கள் சம்பிரதாயப் பற்றுடன் இருக்கும் வரை மதமாற்றம் நிகழ வாய்ப்பில்லை. எனவே இவர்களின் சம்பிரதாயப் பற்றையும், அவர்கள் கொண்டுள்ள ஆன்மீக, மத நம்பிக்கைகளையும் இழிவு படுத்த வேண்டும், அவர்களை அவர்களின் சம்பிரதாயத்தின் மீது கொண்ட நம்பிக்கையை, மரியாதையைக் குலைக்க வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டுக் கூட்டுச் சதியாகப் பெருமாள் முருகன் போன்ற எழுத்துலகச் சதிகாரர்களை ஊக்குவித்து, கொங்கு வட்டார மக்களை இழிவுபடுத்திப் பார்த்தன இடதுசாரி ஊடகங்கள், மற்றும் இடதுசாரி, மதமாற்றச் சக்திகளிடம் உணவு வாங்கி உண்ணும் அரசியல் வியாதிகள்.
 
இந்தப் பிராந்திய மக்கள் பெரும்பாலும் அதிமுக சார்பாக இருப்பதால் அவர்களை மேலும் இழிவு படுத்த வேண்டும், அத்துடன் தேசியச் சிந்தனை உள்ள பாஜகவுடன் சேர்ந்திருப்பதால் மேலும் அவமானப் படுத்த வேண்டும் என்பதற்காகவும் மேற்சொன்ன சக்திகள் ஊடகப் பண்ணையார்களிடம் பணம் பெற்று அவதூறுப் பிரச்சாரம் செய்கின்றன.
 
பொள்ளாச்சி விவகாரம் கண்டிக்கத்தக்கது. அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கைதுகள் நடந்துள்ளன. சி.பி.ஐ. என்றும் சொல்கிறார்கள். இந்த நேரத்தில் எதற்காகப் போராட்டம்? யாரை எதிர்த்துப் போராட்டம்?
 
இதே வியாபரிகள் சில நாட்களுக்கு முன் பொது இடத்தில் ஆணும் பெண்ணும் அந்தரங்கச் செயல்களில் ஈடுபடுவது அவர்களது உரிமை என்றனர். திடீரென்று எங்கிருது வந்தது மானம்? விருப்பத்துடன் திருமணம் இன்றி ‘லிவ் இன் ரிலேஷன்’ கொள்ளலாம் என்று ‘முற்போக்கு’ நீதி மன்றம் கூறியவுடன் வரவேற்று அறிக்கை விட்ட கயவர்கள் இன்று மய்யம் என்ற பெயரில் போராட்டம் என்று ஜல்லியடிக்கிறார்கள். யாரை ஏமாற்றுகிறது இந்தக் கூட்டம்?
 
ஆனால் ஒன்று. ஈரோட்டுப் பாதை என்று சொல்லிச் சொல்லியே வளர்ந்தவர்கள் இவர்கள். ‘காப்பிக்கடையில் விருப்பப்பட்டதை வாங்கி உண்பது போல பெண்கள் தங்கள் துணையைத் தேடிக்கொள்ளலாம்’ என்று முழங்கிய கயவர் தலைவரைத் தமிழர் தலைவர் என்று கொள்பவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
 
பொள்ளாச்சி நிகழ்வு அராஜகம் தான். கூப்பாடு, கதறல் தேவை தான். ஆனால், இதே கூப்பாடும், கதறலும் எல்லா நேரங்களிலும் வேண்டாமா? எங்கே போயினர் இவர்கள் அனைவரும்?
 
ராஜீவ் காந்தியையும் 17 அப்பாவித் தமிழர்களையும் கொன்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வெட்கமின்றிச் சொல்லும் நயவஞ்சகர்கள், கடத்தல்காரன் வீரப்பனைப் போராளி என்று சொல்லும் பச்சோந்திகள், நுங்கம்பாக்கம் கொலையை நியாயப்படுத்திய நரிகள், காஞ்சி ஸ்வாமிகள் விஷயத்தில் மிஷனரிகளிடம் பணம் பெற்று நடித்த ஊடக வியாபாரிகள், தேசத் துரோகிகளுக்கு வக்காலத்து வாங்கும் விதமாகப் பாக்கிஸ்தானின் மீதான தாக்குதலை இழிவுபடுத்தும் படுபாவிகள், தம்பரம் ‘கருணை இல்லம்’ என்ற பெயரில் நடந்த அக்கிரமத்தைக் கண்டுகொள்ளாத நடு நிலையற்ற நடுவர்கள்- இவர்கள் அனைவரும் சேர்ந்து சம்பிரதாயம் காக்கும் கொங்கு மக்களை இழிவுபடுத்துகிறார்கள்.
 
கே.என்.சிவராமன் என்னும் ஊடகவியலாளர் கோயம்புத்தூர் ஈஷா சிவராத்ரி நிகழ்வையும் பொள்ளாச்சி நிகழ்வையும் தொடர்பு படுத்துகிறார். இது என்ன மாதிரியான மன நிலை? கடும் வெறுப்பு, சுடர் விடாத அறிவால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை, பிரகாசிக்காத எழுத்துக்கள், உள்ளத்தில் பதிந்து கிடக்கும் தமிழ்ச் சூழ்நிலை கொடுத்த வெறுப்புப் பாலால் விளைந்த விஷத் தன்மை கொண்ட உள்ளம் என்பதைத் தவிர வேறு எப்படிப் பார்ப்பது?
 
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் தமிழகமாக இருந்த பிரதேசம், தீராவிடக் கூச்சல் காரணமாக ஏற்பட்டுள்ள பாலை நில மிகுதியால் ஆப்கானிஸ்தானை விடக் கீழே சென்றுகொண்டிருக்கிறது என்பது நிதர்ஸனம்.
 
முதல்வர் Edappadi K Palaniswami அவர்களே,ஜெயலலிதாஇருந்திருந்தால் பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட கயவர்களைஎன்ன செய்திருப்பார் என்று எண்ணிப் பாருங்கள்.அவர்களுடன் சேர்த்து அவர்களுக்கு உதவியவர்களைஎன்ன செய்திருப்பார் என்றும் எண்ணிப் பாருங்கள்.இவற்றுக்குக்கெல்லாம் ஒத்து ஊதிக்கொண்டிருக்கும் ஊடக வியாபரிகள்,மனித உரிமைக் காவலர்கள் -இவர்களுக்கெல்லாம் என்ன நடந்திருக்கும் என்றும் சற்று எண்ணிப் பாருங்கள்.நீங்கள் அடுத்த ஜெயலலிதாவாக ஆக வேண்டுமென்றால், அவர் செய்திருக்கக்கூடிய செயல்களைச் செய்யுங்கள்.சான்றோர்கள் நடந்த தமிழ் நாட்டை,விஷக்கிருமிகளிடமிருந்து மீட்டுத் தாருங்கள்.
 
சிறுவர்கள் பெண்கள் தொடர்பாக நிகழ்ந்துள்ள அனைத்து நிகழ்வுகளிலும் இதேஅணுகுமுறையைக் கையாளுங்கள்.
 
தமிழ்நாடு ஆப்கானிஸ்தானாக மாறாமல் காத்துத் தாருங்கள்.
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு.
வந்தே மாதரம்.
http://www.amaruvi.in
Advertisements

கதைல கொஞ்சம் கதை வேணும்

‘நீ தமிழ்ப் புஸ்தகங்களை ஏன் படிக்க மாட்டேங்கற?’ மத்திய அரசுப் பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு பயிலும் என் மகன் பரத்தைக் கேட்டேன்.

‘இல்லையே. டெக்ஸ்ட் புக் படிக்கறேனே’ போனில் இருந்து தலை தூக்காமலே பதில் சொன்னான்.

‘அதில்லை. லைப்ரரில வாரத்துக்கு 2 புஸ்தகம் வாங்கிப் படிக்கற. எல்லாம் இங்கிலீஷ். ஆனா, நாலு வருஷத்துல எவ்வளவு தமிழ்க் கதைப் புஸ்தகத்தைப் படிச்சிருப்பே?’ நான்.

‘ஒண்ணே ஒண்ணு’ உண்மையாகப் பதிலளித்தான். அதுவும் ‘எஸ்.ராமகிருஷ்ணன் குழந்தைகளுக்கான நாவல் ஒன்றை எழுதியிருந்தார், அதைப் படித்தே ஆக வேண்டும் என்று நான் வற்புறுத்தியதால் பாதியளவு படித்திருந்தான். ஆனால், ஆங்கில நாவல்கள் சுமார் 100 வாசித்திருக்கிறான்.

பல முறை தமிழ்க் கதைப் புத்தகங்களைப் படிப்பது பற்றி அவனிடம் பேசியிருக்கிறேன். தமிழ் நூல்கள் அவனைக் கவரவில்லை என்று தெரிந்திருந்தும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் என் பெரிய மகன் ( இவனது அண்ணன்) சொன்னது “Show me an equivalent of Harry Potter or Eragon. I will definitely read Tamil books.” பொன்னியின் செல்வனைப் படித்திருந்தவன் பேசிய பேச்சு அது.

பரத்: சொன்னா கோச்சுக்கக் கூடாது. தமிழ் புக்ஸ் இண்றஸ்டிங்கா இல்ல. அதான் காரணம்.

நான்: எதாவது உதாரணம் சொல்லேன். How could you generalise?

பரத்: ஸ்கூல் புக்ஸ்லேர்ந்தே சொல்றேன். இங்கிலிஷ் புக்கையும் தமிழையும் கம்பேர் பண்ணி சொல்றேன். ஒகேவா?

நான்: சரிதான். But the comparison should be fair.

பரத்: இங்கிலீஷ்ல Non-detailedல H.H.Munro, O Henry, R.K.Narayan இவங்களோட ஸ்டோரீஸ்லாம் வர்றது. அதுல ஒரு டெப்த் இருக்கு. ஆனா தமிழ்ல அப்பிடி இல்ல.

நான்: இன்னும் டீட்டெயில் தேவை.

பரத்: The Open Window. Saki( Munro) எழுதினது. ஒரு ஆள் வீடு பார்க்கப் போறான். அங்க ஒரு பொண்ணு அவங்கிட்ட பேய்க்கதை சொல்றா. ஜன்னல் வழியா வரும்ங்கறா. அவ அத்தையும் அதையே சொல்றா. அவன் வெளில பார்க்கறான். செத்துப் போனதாச் சொன்ன்ன மூணு பேரும், நாயும் வந்திண்டிருக்கு. ஆள் அலறி அடிச்சுண்டு ஓடறான். வந்தவங்க கேக்கறாங்க – ஒரு ஆள் ஓடினானே ஏன்னு? அதுக்கு அந்த பொண்ணு சொல்றது – அவன் நாயைப் பார்த்து ஓடியிருக்கான்.  முன்னாடி ஒரு தடவை வெறி நாய்கள் சிலது சேர்ந்து இவனைத் துரத்திண்டு வந்துதாம். ஒரு ராத்திரி முழுக்க சுடுகாட்டுல ஒரு புத குழில விழுந்து கிடந்தானாம். அதனால பயமாம்.’ இது தான் கதை. இதுல சொல்லாம சொல்றது என்னன்னா அந்தப் பொண்ணுக்கு க்ஷணப் பொழுதுல கதையை இட்டுக் கட்டிச் சொல்ற பழக்கம் உண்டுங்கறதுதான்.

கதைல எல்லாமே வெளிப்படையா இருக்கப்படாது. நாமளும் கொஞ்சம் ஊகிக்கணும். அதுதான் சரி. அதே மாதிரி ஆர்.கே.நாராயணனோட ‘The Green Blazer’, ரவீந்திர நாத தாகூரோட ‘A fest for rats’, ஓ ஹென்றியோட ‘The Cop and the Anthem’ இப்படி பல சுவாரஸ்யமான கதைகள் இங்கிலீஷ் Non-detailல இருக்கு. கதைகள்ல ஒரு ட்விஸ்ட், நிறைய ஹூமன் எமோஷன்ஸ், ஸர்ப்ரைஸ் எல்லாம் இருக்கு. இதப் படிக்கறதே ஜாலியா இருக்கும்.

நான்: தமிழ்ல ?

பரத்: ஒரு கதை வர்றது. மரம் பேசற மாதிரி இருக்கும். ஆனா ஒரே உபதேசமா இருக்கும். மரம் பேசறதுன்னா First Personல தானே பேசணும்? இங்க அப்பிடி ஆரம்பிச்சு Third Personல கண்டின்யூ ஆறது. ஒரே அக்யூசேஷன். கதை கதையா இருக்கணும். மாரல் இருக்கட்டும். ஆனா, மாரல் மட்டுமே கதை இல்லையே.

நான்: இன்னொரு கதை இருக்கா தமிழ்ல?

பரத்: இருக்கு. அது இன்னும் நன்னாயிருக்காது. ஒரு சூபி பரத்தடில இருக்கற சோகமான பணக்காரனப் பார்க்கறார். ஏன் சோகமா இருக்கேன்னு கேக்கறர். என் பணத்தையெல்லா யாராவது எடுத்துண்டு போயிடுவாளோன்னு பயமா இருக்கு, அதால சோகமா இருக்கேங்கறான். உடனே அவர் அந்தப் பனத்தை எடுத்துண்டு ஓடறார். பணக்காரன் துரத்தறான். சூபி மரத்தடியில பணத்தப் பொட்டுட்டு ஒளிஞ்சுக்கறார். ‘பணம் கிடைச்சுடுத்து, நான் சந்தோஷமா இருக்கேன்’ அப்பிடின்னு பணக்காரன் சொல்றான். சூபி வெளில வந்து ‘பார்த்தியா, வேணுங்கற அளவுக்கு மட்டுமே பணம் இருந்தா சந்தோஷமா இருக்கலாம். நான் அப்பிடித்தான் இருக்கேன்னு சொல்றார். இதுதான் கதை.

நான்: நல்ல விஷயம் தானே இருக்கு கதைல?

பரத்: பணக்காரர் ஓடும் போது ‘என் பணம் போயிடுத்தே’ந்னு கத்திண்டே பயந்துண்டே ஓடறார் இல்லியா? அந்த எமோஷன்ஸ் கடைசி வரைக்கும் Carry-forward ஆச்சா? இல்லையே. உடனேயே ‘நான் சந்தோஷமா இருக்கேன்’ங்கறார் அவர்.  ஒரு கண்டினியூட்டி இல்லை கதைல. அறிவுரை சொல்லியாகணும்னே ஏதோ எழுதின மாதிரி இருக்கு.

நான்: அப்ப, எப்படித்தான் எழுதணும்ங்கற?

பரத்: என்னப்பா இது? எங்களுக்கு மாரல் சொல்லிண்டே இருக்கற கதையெல்லாம் வேண்டாம். கதைல கற்பனை இருக்கணும். நல்ல ஆதர்ஸ் எழுதினதா இருக்கணும். தமிழ்ப் பாடப் புஸ்தகத்துல ஏதோ இவாளே இமேஜின் பண்ணிண்டு எழுதின மாதிரி, ஏதோ எழுதணுமேன்னு எழுதின மாதிரி தெரியறது.

நான்: இங்கிலிஷ் பாடப் புஸ்தகம் CBSEயோடது. தமிழ்ப் பாடப் புஸ்தகம் தமிழ் நாடு கவர்மெண்டோடது. அதால வித்தியாசம் இருக்கலாமோ?

பரத்: இருக்கலாம். எங்க கிளாஸ்ல ஹிந்தி ஸ்டூடண்ட்ஸ் இருக்கா. அவாளுக்கெல்லாம் நல்ல ஸ்டாண்டர்ட் புக்ஸ் இருக்கு. எங்களோட செகண்ட் லாங்வேஜ் புக் ( தமிழ்), தேர்ட் லாங்வேஜ் ஹிந்தி புக் லெவல்ல இருக்கு. நாங்க படிக்கற தேர்ட் லாங்வேஜ் புக் இப்ப மூணாங்கிளாஸ் ஹிந்தி பசங்களோட செகண்ட் லாங்வேஜ் புக். Eighth standard children’s second language book should not be like a third standards’s second language, right?

நான்: அப்ப என்னதான் பண்றது?

பரத்: நல்ல எழுத்தாளர்களோட கதைகள் எல்லாம் பாடப் புஸ்தகத்துல இருக்கணும். மாரல் சொல்லியே ஆகணும்னு கட்டாயம் இல்லை. நல்ல கதையா இருந்தா நாங்களே படிச்சுப்போம். அப்புறம் நாங்கள்ளாம் அன்னிக்கி இப்பிடி இருந்தோம்னு சொல்லிண்டே இருக்கற பாடங்கள் அதிகம் வேண்டாம். அவ்ளோதான்’

சம்மட்டி அடி. அவன் சொன்ன கதைகளையும் வாசித்துப் பார்த்தேன். உண்மைதான்.

குறைந்தது 3000 ஆண்டுகளாகத் தொடர்ந்து வாழ்ந்து வருகிற, கிட்டத்தட்ட எப்போதுமே வழங்கி வருகிற எழுத்து வடிவங்களை உடைய ஒரு மொழியில் இக்காலக் குழந்தைகளைக் கவரும் விதமாகக் கதைகள் இல்லை என்பது பெருங்குறையே.

கல்வியாளர்கள், ஆசிரியர்கள், அரசு – கொஞ்சம் இந்த விஷயத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள்.  குழந்தைகளுக்கான தமிழ் எழுத்தாளர்களையும் சேர்த்துத்தான்.

CBSE புஸ்தகங்கள் சரியானவை என்று சொல்லவில்லை. ஆனால், பாட நூல் கழகம் வெளியிடும் நூலை மட்டுமே பயன்படுத்த வேண்டுமா அல்லது துணைப்பாடத்திற்காக வேறு கதை / கட்டுரைத் தொகுப்புகளின் துணையை நாடலாமா என்று கல்வியாளர்கள் / அரசு கொஞ்சம் பேசி முடிவெடுங்கள். பிள்ளைகளைக் கற்பனைத் திறனற்ற மந்தைகளாக்காதீர்கள் என்பதே என் வேண்டுகோள்.

மேலும் விவரங்களுக்கு இந்தக் கதைகளைப் படித்துப் பாருங்கள்:

  1. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், வகுப்பு 8 – ‘மரத்தின் வேண்டுகோள்’ (பக் 95)
  2. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், வகுப்பு 8 – ‘மகிழ்ச்சிக்கான வழி’ (பக் 43)
  3. Orient Black Swan Literature Reader – Trail of the Green Blazer – R.K.Narayan
  4. Orient Black Swan Literature Reader – The Open Window – Saki
  5. Orient Black Swan Literature Reader – The Cop and the Anthem – O Henry
  6. Orient Black Swan Literature Reader – A feast for rats – Rabindranath Tagore

 

குழந்தைகளைத் தெய்வம் தான் காக்க வேண்டும்

2017-ஜூன்
10ம் வகுப்புத் தேர்வில் அந்தக் குழந்தை 500ற்கு 480+ எடுத்திருந்தாள். தமிழகத்தின் நகராட்சி சார்ந்த ஊர். ‘என்ன படிக்கலாம்?’ என்று கேட்டிருந்தாள். அவளுக்கு அறிவியலில் நாட்டம் இல்லை என்று சொல்லியிருந்தாள்.
வணிகவியல், சமூகவியல் படிக்க அறிவுறுத்தினேன். பின்னர் சி.ஏ. ஏ.சி.எஸ். (அ) முனைவர் பட்டப் படிப்புகள் பயில வாய்ப்பு என்று 2 மணி நேரம் சொல்லியிருந்தேன். மொழிகளில் அதிக நாட்டம் இருந்ததால் ‘தமிழ் படி, நல்ல தமிழாசிரியர்கள் கிடைப்பதில்லை. ஆராய்ச்சிக்கும் வாய்ப்புள்ளது’ என்றும் சொல்லியிருந்தேன். தமிழோடு நெருங்கிய தொடர்புடைய குடும்பம் அது என்பதால் இயல்பாகவே ரத்தத்தில் தமிழ் உள்ள பெண் அவள்.
பள்ளிக்குச் சென்றவளிடம் தலைமை ஆசிரியர்,’ 10வதுல ஸ்கூல் பர்ஸ்ட் வந்துட்டு காமர்ஸ் போறியா? பயாலஜி குரூப் போ. படிச்சு ஸ்கூலுக்கு ரேங்க் எடுத்துக் குடு’ என்று சொல்ல, குழந்தையும் சரியென்று தலையாட்டிவிட்டது.
கெமிஸ்றி புரியவில்லை, பிசிக்ஸ் ஆசிரியருக்குச் சொல்லித் தரத் தெரியவில்லை->புரியவில்லை,தமிழும் கணிதமும் மட்டும் விரும்பிப் படித்தாள்.
+1ல் சரியாகப் பயிலாததால் ஆசிரியர்களிடம் திட்டு. ’10வதுல எப்படி மார்க் வாங்கின?லக்கா?’என்பது போன்ற கேலிப் பேச்சுக்கள்.
சொல்லமுடியாமல் தவித்துள்ள குழந்தைக்கு அடிக்கடி தலைவலி வந்துள்ளது. ஓட்டை மருத்துவர்கள் அனாசின் முதல் அமிர்தாஞ்சன் வரைகொடுத்துள்ளார்கள்.மைக்ரேன் என்று சொல்லி அதற்கும் மருந்துகள்.
தலைவலி குறையவில்லை.
யோகாவிற்கு அனுப்பலாம் என்று முடிவாகி, ஶ்ரீஶ்ரீ யோகாமையத்தில் சேர்ந்தாள்.அந்த மையத்தின் தலைவி குழந்தையைப் பூரணமாக ஆராய்ந்து, இவள் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறாள் என்று தோன்றுகிறது எனச் சொல்ல, அடுத்து அக்கு பிரஷர் மையம். சிகிச்சை பலனின்றி மன நல மருத்துவர்.
தீர ஆராய்ந்த மருத்துவர் குழந்தைக்கு உடல் உபாதைஒன்றுமில்லை. மனம் சார்ந்த அழுத்தம் என்று விளக்கியுள்ளார்.அதுவரையாரிடமும் பேசாத அப்பெண் குழந்தை,மருத்துவரிடம் பள்ளி, படிப்பு, தேர்வு, இவை சார்ந்த அழுத்தங்கள் என்று சொல்லியுள்ளது.
‘உங்களுக்குக் குழந்தை முக்கியமென்றால் பாடத்தைத் திணிக்காதீர்கள்’ என்னும் அறிவுரையுடன்,விளையாட்டு,பொழுதுபோக்கு, விருப்பமான பாடம்,இசை-என்று இருக்கும்படிச் சொல்லியுள்ளார் மருத்துவர்.
குடும்பம் பெரும் கவலையில் உள்ளது.
ஆசிரியர்களே/பள்ளித் தாளாளர்களே/பெற்றோரே:
  1. குழந்தைகள் இன்னது படிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டால் அதில் தயவு செய்து குறுக்கிடாதீர்கள்.
  2. முடிந்தால், உங்களுக்குத் தெரிந்தால் வழி காட்டுங்கள்.
  3. உங்கள் பள்ளி மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டிப் பிள்ளைகளைப் பலியாக்காதீர்கள்.
தமிழ் நாட்டுப் பிள்ளைகள் அபிமன்யூவைப் போல் ஒரு வியூகத்தில் சிக்கியுள்ளார்கள். எல்லாத் திசைகளில் இருந்தும் தாக்குதல்கள். வெளிவர வழி தெரியாமல் பிள்ளைகள் திணறுகிறார்கள். பள்ளிகள் தங்கள் சுய லாபத்திற்காகவும், பெற்றோர் தத்தமது சுய பெருமைக்காகவும் பிள்ளைகளின் ரத்தத்தையுறிஞ்சுகிறார்கள்.
2018 – மே
குழந்தையை ஒரு வாரமாகப் பள்ளிக்கு அனுப்பவில்லை என்று அவளது தாய் சொன்னார். தலைவலி குறைந்தபாடில்லை. வேறு ஊருக்குச் சென்று வரலாமே என்று பேசிப்பார்த்தேன்.
‘அடுத்த வாரம் வீக்லீ டெஸ்ட் இருக்கே. மார்க் வரல்லேன்னா?’ என்கிறாள் குழந்தை.
தெய்வம்தான் துணைநிற்க வேண்டும். வேறொன்றும் சொல்வதற்கில்லை.

சோறும், அதில் உப்பும் ஒரு கேடா?

‘உனக்கு நூறு தடா வெண்ணையும் அக்கார அடிசிலும் அமுது செய்விப்பேன்’ என்று பெருமாளிடம் ஆண்டாள் சொல்லியிருந்தாள். அவளால் முடியவில்லை. அவளது உள்ளக்கிடக்கையை அறிந்து ஶ்ரீமத் இராமானுசர் தான் செய்து கணருளப் பண்ணினார். இதனால் உடையவரை ஆண்டாள் ‘எம் அண்ணரே’ என்று கொண்டாடியதாக ‘பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே’ என்று வாழித் திருநாமம் உண்டு.
21761438_10213877572434553_9110320585239853876_n
ஆனால் இன்று அவளுக்கே தளிகைகள் இல்லை என்ற செய்தி 60 வருடங்களில் தமிழகத்தை ஆண்ட அரசுகளின் அவலட்சணத்தை வெளிப்படுத்துகிறது. அறம் நிலையாத் துறையில் பணிபுரிபவர்கள் தாங்கள் சோற்றில் கை வைக்கும் தருணங்களில் ‘இந்தச் சோறு உண்ண எனக்கு எள்ளளவாவது அனுமதி உண்டா? ஆண்டாளின் சோற்றை அல்லவா நான் உண்கிறேன்? அவளைப் பட்டினி போட்டு உண்ணும் இந்த உணவு எனக்கு வேண்டாம்’ என்று சொல்ல வேண்டும். பணம் கொடுத்து வேலைக்கு வந்தவர்களிடம் இதை எதிர் பார்க்க முடியாது என்றாலும், இப்பதிவைப் படிக்கும் யாராவது ஒருவருக்காவது அந்த எண்ணம் வரலாம்.
அப்படியொரு எண்ணம் வரவேண்டியது ஏன் என்று கேட்கலாம். ‘நான் உண்ணும் உணவை அரசு அற நிலையத் துறை மூலம் அளிக்கிறது. ஆனால், துறையோ கோவிலின் சொத்தை உண்பவர்களிடமிருந்து பணத்தைப் பிடுங்காமல், கொள்ளை போக விட்டு, மற்ற வழியில் அரசு ஈட்டும் வருமானம் வழியாக எனக்கு இந்தச் சோற்றை அளிக்கிறது. அப்படியும், இந்தச் சோற்றுக்குக் காரணமான தெய்வ வடிவங்களின் வயிற்றில் அடித்துவிட்டு எனக்கு அளிக்கிறது. ஆகவே தெய்வங்களைக் கொன்று அரசு அளிக்கும் இந்தச் சோறு பிணச்சோறு. எனவே இந்தச் சோறு எனக்கு வேண்டாம்,’ என்று அவர்களின் எண்ணங்களில் தோன்றலாம் என்கிற நப்பாசை தான்.
இதெல்லாம் நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால், நாம் செய்யக் கூடியது ஒன்று உள்ளது.
சேவார்த்திகளாகக் கோவில்களுக்குச் செல்லும் போது, அங்கிருக்கும் அறம் நிலையாத்துறையினரிடம் ‘ கோவில் நிலங்கள் எவ்வளவு? வருமானம் எவ்வளவு? நித்ய மண்டகப்படி எவ்வளவு? நீங்கள் நித்யம் எவ்வளவு கண்டருளப் பண்ணுகிறீர்கள்? ஏன் குறைகிறது? உங்கள் சம்பளம் வருடாவருடம் குறைகிறதா? கோவில் வருமானம் குறைந்தால் உங்களின் வருமானத்தையும் குறைத்துக் கொள்ளலாமே..’ என்கிற ரீதியில் கேட்கலாம்.
அடுத்த முறை சோற்றில் கை வைக்கும் போது உறைக்கும், அவர்கள் சோற்றில் உப்பிட்டு உண்பவாரக இருந்தால்.

சிவகுமாரு அண்ணாச்சி ஏன் வர்ல வாத்யாரே

இன்னும் சிவக்குமாரு அண்ணாச்சி அங்கிட்டு போகாம இருக்காகளே.., அது ஏன்னு தெரில வாத்யாரே …

வெளங்காத வெறும்பயலுக, சகிக்க முடியாத சினிமா எடுக்கறவுக, பாட்டக் கேட்டா எழுந்து ஓட வெக்கறவுக, சொந்த ஊர்ல நின்னா பொண்டாட்டி கூட ஒட்டுப் போடாத உண்டியல் பார்ட்டிக, 10 வருஷமா பி.எச்.டி. படிக்கறவுக, புலிகாசத் திருடி வியாபாரம் பண்றவுக, இலங்கை இலங்கைன்னு எளவெடுத்து அங்ஙன இருந்த தம்பிகளை உசுப்பேத்தி உசுப்பேத்தி பரலோகம் அனுப்பினவுக, யாரோட சேர்ந்தாலும் அவுகள வெளங்காம செய்யிறவுக, இம்புட்டு மண்ணாங்கட்டிகளும் ஒட்டுக்கா சேர்ந்து நிக்கயில, கம்ப ராமாயணம் பாட்டு படிச்சு ராக்கெட் சயிண்டிஸ்டு டிகிரி வாங்கின சிவக்குமாரு இன்னும் வரல்லியே, அடுத்த எலிக்சன்ல நிக்க வாணாவா? சிங்கம் 3 புள்ளாண்டான் பட வசூல் பாக்க ஆளு வாணாவா? என்ன ஒரு பொறுப்பில்லாம கீறாரேன்னு ஒரு சங்கடமாக் கீது வாத்யாரே.

சொன்னா நம்ப மாட்ட. பரவாலங்காட்டியும் சொல்றேன். நம்பாளுக்கறாரே அதாம்பா ஒலக்க நாயரு ..ஐயோ ஒலக நாயிக்கரு…. என்னெளவோ அவுருக்குத் தெரியாத சயின்சா? அர்சில்ல வரமாடடேன், பயமாக்கிது, ஆயிதம் எட்த்துருவேன், வர வெக்காத, ஊர உட்டு பூடுவேன்னு பீலா உட்டுக்குனே அட்த்த பட்த்துக்கு தெரூல சமுக்காளம் விரிப்பாரே அவுருதான்.. அந்தாளு ஏன் இன்னுங்காட்டியும் வரலேன்னு ஒரே பேஜாராகி கீது வாத்யாரே

மாயாரத்துல 20 வருசமா ஓ.என்.ஜி.சி. காத்து எடுத்துகினு கீறானே அங்கிட்டு வெள்ளாம பூட்ச்சா? அத்த ஆரம்பிச்சது மணி சங்கர அய்யிரு தான? அய்யிருகிடட சொல்லி காஸ் ஏஜென்சி எடுத்த பயலுகள்ளாம் இப்ப காஸ் உடறானுகளே, அவுக பேரெல்லாம் எட்த்து உட்ரலாமான்னு தோணுது வாத்யாரே…

இர்ந்தாலும் சிவக்கொமாரு அண்ணாச்சி வராம இருக்கறதுதான் ஏன்னு புரீல வாத்யாரே.. வாயால காஸ் உட்றது வளக்கம் தானே ? இப்பிடி வராம கிறாரே மன்சன்…ஒரே பேஜாரா கீதுப்பா..

செல்போன் டவரு வெச்சா சிட்டுக்குருவி சாகுதாமா. அத்தால டவர கழட்டிடலாம். இன்னான்ற நீயி? டவரு வெக்க மட்டும் நிலத்துல இடம் குடுக்கற?

அப்ப அந்த 2ஜி கேஸ மூடிடரலாம் இல்லியா அண்ணாச்சி? டவரு இருந்தாதானே தவறு ? டவர தூக்கிட்டா ? அட பகுத்த்தறிவுல இவ்ளோ கீதே ..

ரொம்ப கெளப்பினா பாரதிராசா திரும்பவும் படம் எடுக்கறேன்னு துவங்கிருவாக. உலகம் தாங்காது கேட்டுக்க அண்ணாச்சி.

நெய்வேலில கரி எடுக்க சொல்ல கரண்டு வருது. அதால வெவசாயம் வெளங்காம போகுது. அட்த்தபடியா நெய்வேலிக்கு போயி கரண்டு கம்பியை புடிச்சு தொங்கி எதிர்ப்பு தெரிவிக்கலாம் இல்லியா. ஒலக்க நாயரு வரங்காட்டி எப்புடி ?

சரி நெய்வேலிய மூடிடடம்னு வெய்யி. அட்த்த்தாப்ல எண்ணூர் கரண்டு கம்பி கீது. பொறவு கூலிங்க் டவருக்குள்ள தொம்மு தொம்முனு குதிச்சு வீரம் காட்ட வாணாவா?

அப்பால தூத்துக்குடி? அங்கிட்டும் கரண்டு வருதே. அங்ஙன சிய்மான் அண்ணாச்சி கேராக. அவுக பாத்துப்பாக. தொங்கி தொங்கி உயிரை வாங்கறதுல அவுக ரெவலே தனிதான்.

பொறவு கூடங்குளம் இருக்கு. அங்ஙன உதயகுமாரு அண்ணாச்சி கேராறு. பரலோவம் போவ நல்ல வளியில்லா? என்ன செய்வாகளா? ஓலைல இறங்கிட மாட்டாக? வாங்குன பணத்துக்கு சாமிமாரு கணக்கு கேப்பாகல்லா?

மேட்டுர்ல தண்ணிலேர்ந்து கரண்டு எடுக்காகன்னு யாரும் சொல்லிடாதீக. ‘தண்ணி’ கெடைக்குதுன்னு நம்ம விசயகாந்து அண்ணாச்சி போயிருவாக. இருக்கத்துலயே வெஷம் இல்லாத, வெள்ளந்தியான மனுஷன் அவுக்க ஒருத்தருதேன்.

அப்ப எல்லாத்தையும் மூடிடடா அல்லாம் சரியாயிருமா?

ஆமாம்ல. ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே’ போக வாணாவா ? என்னெளவு சன் டி.வி. தெரியாது. மக்கழ் டிவி தெரியாது. டிவில வரல்லேன்னது அம்புட்டுப் பேரும் ஊட்டுக்குப் போயிருவாக..

இன்னொண்ணு. ஓ.எம்.ஆர். ரோட்டுல ஐ.டி. கம்பெனிகள்ள உக்காந்துகிட்டு நெடுவாசலுக்காக பேஸ்புக்குல போராட முடியாது. ஏன்னா அத்தனையம் வெவசாய நெலமுல்லா ? கம்பெனியை மூட வாணாமா ?

அட ஆமா. இன்னொரு ப்ராப்ளம் இருக்கு வாத்யாரே. கரண்டு இல்லேன்னா அமெரிக்கன் கான்சுலேட் மெட்றாஸ்லேருந்து போயிருவான். அப்ப எங்கிட்டு போயி காலைலேர்ந்து நிக்குறது? அமெரிக்கால உக்காந்துகிட்டு #நெடுவாசல்#வாடிவாசல் போராட மாணாவா? ஒரு தமிளனா தமிள வளக்க அமேரிக்கா போக மாணாமா? என்ன வாத்தியாரே இடிக்குதே ..

இர்ந்தாலும் சிவக்கொமாரு அண்ணாச்சி வராம இருக்கறதுதான் ஏன்னு புரீல வாத்யாரே.. நெடுவாசல்லேர்ந்து ராக்கெட் உட்டு பாக்கலாமோ ?

‘கண்ட நியூஸெல்லாம் பாக்காதீங்கன்னு சொன்னா கேட்டாதானே? தூக்கத்துல எவ்வளவு உளறல்?’ என்ற பேச்சு கேட்டு கண் விழித்தேன்

கம்பன் வாழ்த்துவான்

மாற்றம் ஒன்று தான் மாறாதது என்று நினைத்திருந்தேன். அது இல்லை என்று ஆனது இந்த முறை. ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தது தேரழுந்தூர். கம்பர் கோட்டத்தில் தனியாகக் கம்பர் நின்றிருந்தார். துணைக்கு ஒரு சில ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தத்ன.

1982ல் பெரும் பொருட்செலவில் கட்டப்பட்ட கம்பர் கோட்டம் இன்று திருமண மண்டபமாக மாறியுள்ளது. ‘கேளடி கண்மணி’யில் இருந்து பாடல் ஒலிக்க அதைக் கேட்டுக்கொண்டு நின்றிருந்தார் கம்பர். எம்.ஜி.ஆர். அரசு கம்பருக்குக் கோட்டம் அமைக்க வேண்டி உண்ணாவிரதம் இருந்த பழைய தமிழாசிரியர்களை நினைவு கூர்ந்தேன்.

1982-ல் இந்த இடம் இருந்த நிலை என்ன? என்ன படாடோபம், என்ன மேளச் சத்தம் ? கம்பருக்கு விழா எடுத்துப் பட்டி மன்றங்கள், வழக்காடு மன்றங்கள், கவிதை வாசிப்புகள் என்று புலவர் கீரன், கி.வா.ஜ, செல்வகணபதி, புலவர்.இராமபத்திரன், மு.மு.இஸ்மாயில் என்று அன்று அணிவகுத்து கம்பரமுதம் அளித்த நிலை என் நினைவில் மீண்டும் தோன்றியது. அமர இடம் இல்லாமல் மக்கள் வீதிகளில் கூட நின்றிருந்தனர். இன்று நான் மட்டும், தனி ஒருவனாக வீதியில் நின்றவாறு கம்பன் சிலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு வேளை அன்று மேடையில் பேசியவர்களும் அரூபமாக என்னுடன் நின்று கொண்டிருந்தார்களோ! இருக்கலாம். ஒரு முறை வந்தால் மீண்டும் வரச் செய்யும் ஈர்ப்பு கொண்டது தேரழுந்தூர்.

தனியான கம்பர் -  கோட்டத்தில்
தனியான கம்பர் – கோட்டத்தில்

கம்பர் கோட்டத்தில் நிற்க மனமில்லாமல் ‘கம்பர் மேடு’ என்று அழைக்கப்பட்ட கம்பர் வாழ்ந்த இடம் நோக்கிப் பயணித்தேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்றது. ஏதாவது மாறி இருக்காதா என்கிற ஏக்கம். செல்லும் போதே மனம் ‘செல்ல வேண்டாம்’ என்று அறிவுறுத்தியது. கம்பர் மேட்டுக்கு எப்போது போனாலும் மனதில் ஒரு பெருத்த சோகம் ஏற்படும். இம்முறையாவது அப்படி இல்லாமல் இருக்க வேண்டுமே என்று மனம் விரும்பியது.

நுழைய வேண்டிய சந்தை விட்டு விலகி அடுத்த சந்தில் நுழைய முற்பட்டேன். அங்கிருந்த அம்மாளிடம் கம்பர் மேடு போகும் வழி பற்றி விசாரித்தேன். என்னை மேலும் கீழும் பார்த்தவர் முகவாயைத் தோளில் இடித்துச் சென்றார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை.

கம்பர் மேடு என்று அழைக்கப்பட்ட இந்த இடம் இனி கம்பர் காடு என்று அழைக்கப்படலாம் என்று தோன்றியது. கட்டணம் வசூலிக்காத கழிப்பறையாக, பரிதாபமாக நின்றிருந்தது கம்பர் மேடு.

கம்பர் காடான மேடு
கம்பர் காடான மேடு

மாபெரும் இலக்கியமான கம்ப இராமாயணத்தை நமக்கு அளித்து, இராமனின் புகழ் பாட இன்றும் நமக்கு வாய்ப்பளித்த கம்பன் வாழ்ந்த இடம் இதுவே. மூன்று வருடங்களுக்கு முன்பு சென்ற போது இருந்ததை விட இப்போது ஒரே ஒரு முன்னேற்றம் – கம்பர் மேட்டைச் சுற்றி இரண்டடி அளவு சுவர் எழுப்பியுள்ளார்கள். அதனால் என்ன பயன் என்று தெரியவில்லை.

மூன்று வருடங்கள் முன்பு இருந்தது போலவே ஆடுகளும் நாய்களும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அப்பகுதி மக்களின் காலைக் கடன்கள் கழிப்பிடமாகக் கம்பர் மேடு இன்றும் பயன்பாட்டில் உள்ளது.  ‘கம்பன் என்னும் மானுடன் வாழ்ந்ததும்..’ என்று இறுமாந்து சொன்ன பாரதி இன்று இருந்திருந்தால் ரயிலில் தலையை விட்டிருப்பான்.

வெந்த புண்ணில் வேல்
வெந்த புண்ணில் வேல்

காயத்தில் அவமதிப்பும் சேர்வது போல ‘இந்த இடம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது- பாதுகாக்கப்பட்ட பகுதி’ என்று உடைந்து போன பதாகை உள்ளது. இங்கே என்ன கட்டுப்பாடு செய்கிறார்கள், எதைப் பாதுகாக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை மனித மிருகக் கழிவுகளைப் பாதுகாக்கிறார்களோ!

நாய்களின் காவல்
நாய்களின் காவல்

நூறு ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளை அரசு பல பெரிய வண்டிகளைக் கொண்டு வந்து இந்த மேட்டை அகழ்வாராய்ச்சி செய்துள்ளார்கள். இங்கிருந்து பல பழைய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன என்று சில ஆண்டுகளுக்கு முன் காலமான 86 வயதான என் பாட்டி சொல்லியுள்ளார். அவரது சிறு வயதில் இவை நடந்தனவாம்.

கம்பர் மேடு பகுதிக்குள் நுழைய முற்பட்ட போது அங்கிருந்த நாய்கள் என்னை விரட்டி அடித்தன. கம்பன் வாழ்ந்த இடத்திற்குக் காவல் நாய்கள் தான் போல. ‘ஓ மனிதனே, நீ பாதுகாக்கிற அழகை விட நாங்கள் நன்றாகப் பாதுகாப்போம்,’ என்று அந்த நாய் கூறுவது போல் தோன்றியது.

வால்மீகியின் இராமாயணத்தை அப்படியே எழுதாமல் தமிழ்ப் பண்பாட்டுடன் ஒட்டி நாமெல்லாம் நெஞ்சு நிமிர்த்தி நிற்கும்படி இராம காதை எழுதிய கம்பன் வாழ்ந்த இடத்தை கழிப்பிட மேடாக வைத்துள்ளது தமிழரசுகள் என்று மார்தட்டிக்கொள்ளும் அரசுகளின் தலையில் குப்பைக் கிரீடம் வைத்தது போல் என்று எனக்குத் தோன்றியது.

மதுபானம் விற்கும் அரசும் சாதீயம் பேசும் எதிர்க்கட்சிகளும் உள்ள வரை கம்பர் மேடு இப்படி இருப்பதில் வியப்பில்லை தான். ‘மு.க’வில் முடியும் எந்தக் கட்சியும் இதனைச் சரி செய்யப் போவதில்லை. திருக்குறளை வளர்க்கப் பாடுபடும் பா.ஜ.க.வின் தருண் விஜய்யின் பார்வையாவது தேரழுந்தூரின் கம்பர் மேட்டின் மீது பட வேண்டுமே என்று ஆமருவியப்பனை வேண்டிக்கொண்டேன். கம்பர் மேட்டைப் பார்த்து அழுதுவிட்டு வெளியேறினேன். ஆமருவியப்பனின் தேர் வந்துகொண்டிருந்தது. நல்ல சகுனம் என்று தோன்றியது.

ஆமருவியப்பன் கோவிலுக்குச் செல்லலாம் என்று அதனை நோக்கி நடந்தேன். முதலில் ‘தர்ச புஷ்கரணி’ என்னும் குளம் நீர் நிரம்பிய நிலையில் பார்க்கவே பரவசமாக இருந்தது. இந்தக் குளம் இருந்த நிலை என்ன ? ஆடுகளும், சிறுவர்களும் விளையாடும் இடமாக, பாழ்பட்டு இருந்த இந்தக் குளம் இன்று நீர் நிரம்பி வழிவது காணக் கண் கோடி வேண்டும். இந்தக் குளம் இப்படி மாறுவதற்குக் காரணமான மூன்று முதியவர்களுக்கு நம் தலைமுறை பெரும் கடன் பட்டிருக்கிறது.

இந்து சமய அற நிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இன்று கோவில் நல்ல நிலையில் உள்ளது. 2010-ம் ஆண்டு நடைபெற்ற குட முழுக்கு நிகழ்விற்குப் பின் பக்தர்கள் வரவு அதிகரித்துள்ளது.

குளம் முன்னர் இருந்த நிலையும் இப்போது உள்ள நிலையும்.

குளம் தற்போதைய நிலை
குளம் தற்போதைய நிலை
திருக்குளம் 2008
திருக்குளம் 2008

குளம் மட்டுமா? கோவிலும் தான். பாழ்பட்டுப் போன கோவிலைத் தூக்கி நிறுத்திய அதே மூவர் நம் வணக்கத்துக்குரியவர்கள்.  கோவில் முன்னம் இருந்த நிலையும் தற்போது உள்ள நிலையும்.

செப்பனிடப்பட்ட கோவில்
செப்பனிடப்பட்ட கோவில்

பெருமாள் கோவில் முடித்து மாலை வேதபுரீசுவரர் கோவிலுக்குச் சென்றேன். எந்த மாற்றமும் இல்லாமல், வரலாற்று நிகழ்வுகளுக்குச் சான்றாக அதே அமைதியுடன் நின்றுகொண்டிருந்தது முதற்சோழர் காலக் கோவில். ‘கொஞ்சம் வரலாறு கொஞ்சம் சுவாசம்‘ என்னும் முந்தைய பதிவு இக்கோவில் பற்றி எழுதப்பட்டதே.

வரலாற்றின் சாட்சியாக நிற்கும் வேதபுரீசுவரர் கோவில்
வரலாற்றின் சாட்சியாக நிற்கும் வேதபுரீசுவரர் கோவில்

பல ஆயிரங்கள் செலவிட்டு பாலி, ஹாங்காங் என்று விடுமுறை சுற்றுப் பயணம் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை. சில நூறுகளிலேயே நமது வரலாற்றை அறிய முடியும். ஒரு முறை சென்று வாருங்கள்.

கம்பன் வானிலிருந்து வாழ்த்துவான்.

பழைய கணக்கு – நூல் விமர்சனம் – ரெங்கபிரசாத்

உலகில் என்றும் பழைய கணக்காகப் பார்க்கப்படும் மானுடம் என்ற பண்பிற்குப் பின்னால் பயணிக்கிற புத்தகம்தான் “பழைய கணக்கு“.

மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு, நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது படைப்பாளியின்  கடமை. அதை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளார். படிபவர்களை சம்பவங்களோடு ஒன்றிவிடச் செய்துவிடுகிறார்.

இவை வெறும் கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்டு வேயப்பட்ட கதையோ அல்லது நினைவுகூறலோ அல்ல. தான் கண்டு , கேட்டு , உணர்ந்த ஆளுமைகளின் வாழ்வியல் அனுபவங்களை, சாதனைகளை,  சிந்தனைகளை எழுத்துமுலமாக ஆவணங்களாகத் தந்துள்ளார் ஆசிரியர். நிஜத்திலும் , நினைவிலும் வாழும் எதார்த்த மனிதர்கள் ஒவ்வொருவரும் நம் கண்முன்னே வந்து போகிறார்கள்; ஆவணப்படம் காண்பது போல அவர்களின் வாழ்வும் செயல்பாடுகளும் காட்சிகளாக விரிகின்றன. வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் நூலாசிரியர் தன் கருத்துகளை ஆங்காங்கே விதைக்கவும் தவறவில்லை.

அறம் , சமுதாயக் கோபம் , வாழ்க்கையின்  ஓட்டத்தில் நாம் அவதானிக்க மறந்த , மறுத்த விடயங்கள் மூலம்   நம்மை நகர்த்திச் செல்லும் இந்நூல் படிக்கக் களைப்பு தராமல் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் நடைதான். சமூக சிந்தனையோடு தனக்கே உரிய எள்ளல் பாணியில் அவர் காட்டும் இடங்கள் நகைச்சுவையே என்று தோன்றினாலும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை.

உபகாரம் என்ற கதையில் நூலாசிரியரின் சமுகப் பார்வை மூலம் சமூக முரண்களை அழகாகப் படம்பிடித்துக் கட்டியுள்ளர். //வாப்பா இருந்திருந்தால் இதே வயது தான் இருக்கும் அவருக்கும் // என்று தன் தந்தையை ஒப்பிட்டு பார்க்கும் போது , அங்கே மேலோங்கி நிற்ப்பது மனித நேயம் மட்டுமே . இராமனைப் பார்க்கக் கானகத்திற்கு பரதன் வந்தான், முனிவர்கள் வந்தார்கள் ஆனால் யாரும் இராமன் காட்டில் உணவிற்கு என்ன செய்வான் என்று நினைத்து அவனுக்கு உணவு கொண்டு வரவில்லை. குகன் ஒருவன் தான், இராமனுக்குத் தேவைப்படுமே என்று உணவு கொண்டு வந்தான். ஆகையால்தான் கம்பர் – ” உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்” என்று குறிப்பிடுகிறார். உபகாரம் கதையில் இதைப் போன்ற நிகழ்வைப் பார்க்கலாம் .

பெரிய தாக்கத்தை உண்டுபண்ணிய கதைகள் ‘மாயவரம்’ , ‘சார் விட்டுக்குப் போகணும்’. இந்த கதையின் பாதிப்பு , அடுத்த முறை என் வயது ஒத்த மாயவரம் ஊர் மனிதரைப் பார்த்தால் என்னுடைய அடுத்தகேள்வி, ‘உங்களுக்கு சாரைத் தெரியுமா?’ என்பதே. குருபக்திக்கு ஒருநல்ல உதாரணம் . நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக இதுபோன்ற ஆசிரியரைக் கடந்து சென்றுதான் இருப்போம் , மனிதனின் கையாலாகாத தன்மை கன்னத்தில் அறைவது போல் இருந்தது என்று குறிப்பிடும்போது,  இயற்கைக்கு முன் மனிதனின்  ஆளுமை எவ்வளவு குறைவு என்பதை  உறுதிப்படுத்துகிறது. இதயம் கனத்தது.

ஒரு தேரின் கதை – காரணப்பெயரான தேர்-அழுந்தூர் (செலுத்திய தேர் செல்லாமல் அழுந்திய காரணத்தினால் தேர்-அழுந்தூர் ) அதன் காரணத்தை இழந்து, பின்பு மீண்ட கதை. ஒற்றுமை மற்றும் விடமுயற்ச்சியின் பலன் பற்றி விளக்குகிறது. புறத்தில்  சில நேரங்கள்மட்டும் எரிந்த தீ , அகத்தில் அணைவதற்க்கு  ஐம்பது ஆண்டுகாலம் தேவைப்பட்டு இருக்கிறது.

‘கொஞ்சம் வரலாறு , கொஞ்சம் சுவாசம்’ கதை – நூலாசிரியரின் தார்மீக கோபத்தின் வெளிப்பாடாகத் தெரிகிறது . வரலாறு படைத்த தமிழினம்  அதை ஆவணப் படுத்தியது குறைவு அல்லது ஆவணப் படுத்தி இழந்தது  அதிகம். //இந்த தளத்தின் மேல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சுந்தர சோழனோ, பராந்தகனோ நின்றிருக்கலாம்//. அந்த தார்மீக கோபத்தின் நியாயங்களைப் பங்குபோட்டு கொஞ்சம் மன உறுத்தலோடு தான் இந்தக் கதையைக் கடக்க முடிந்தது. அமரர் சுஜாதா சொன்ன செய்திதான் நினைவில் நின்றது . கோயில் தூண்கள் சிலவற்றைத் தொட்டுக்கொண்டு, நம் முன்னோர்கள் கால்வைத்து ஏறியபடிகள் மீது நடந்துகொண்டு நாங்கள் இருவரும் இந்தக் கருத்தைப் பரிமாறிக்கொண்டோம். அப்போது எங்கள் முன்னோர்கள் தங்களின் குழந்தைகளைப் பார்ப்பது மாதிரி உணர்ந்தோம். அது ஒரு உன்னத அனுபவம்.

ஒளிரும் மகத்தான ஆளுமைகளைத் தனது எழுத்தில் ஆவணப்படுத்திய ஆமருவி தேவநாதன் பாராட்டிற்குரியவர். அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

மனித நேயம் தேவைப்படும் வரை இதுபோன்ற கணக்குகளும் தேவைப்பட்டுக்கொண்டுதான்  இருக்கும் .

வாழ்த்துக்கள் , தொடரட்டும் உங்கள் கணக்குப் பயணம்.

ஒரு மனுஷி, சில கோலங்கள்

உங்களுக்கு 70 – 80 வயதில் பாட்டி இருக்கிறார்  என்றால் நீங்கள் இந்தப் பதிவைப் படிக்க வேண்டாம். அவர்களிடம் கேட்டே நீங்கள் இப்பதிவின் கருத்துக்களைத் தெரிந்துகொள்ளலாம். இல்லை, அப்படித்தான் படிப்பேன் என்றால் தொடந்து படியுங்கள்.

உங்களில் சிலருக்கு இது மார்கழி மாதம் என்பது நினைவிருக்கலாம். ஒரு சில பழைய பஞ்சாங்கங்களுக்கு இந்த மாதத்தில் வீட்டு வாசிலில் கோலம் போடுவது வழக்கம் என்பதும் நினைவுக்கு வரலாம். ஒரு சில அசட்டு அம்மாஞ்சிகளுக்கு இந்த மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை முதலிய பாசுரங்கள் நினைவுக்கு வரலாம்.

நாம் கோலம் விஷயத்திற்கு வருவோம். வாசலில் கோலம் போடுவது தமிழர்களின் பண்பாடு என்று சொன்னால் அடிக்க வர மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். கல் மாவையும், அரிசி மாவையும் ஒன்றாகக் கலந்து அதனைக் கோலமாவு என்று அழைப்பார்கள். இதனைக்கொண்டு வீட்டு வாசலில் பல வடிவங்களில் வரைவார்கள். புள்ளிக் கோலம், நேர்க்கோலம், நெளிவுக்கோலம் என்று பல வகைகள் இருந்ததுண்டு.

அட, மறந்துவிட்டேன். கோலம் போடுவதற்கு முன்பு ‘வாசல் தெளிப்பது ‘ என்ற ஒரு பழைய கற்காலப் வழக்கமும் உண்டு. ஆனால் அதற்கெல்லாம் வீட்டிற்கு முன் வாசல் என்று ஒன்று வேண்டும். அது அகலமாகவும் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் வீடும்  சின்னதாக உள்ளது. வீட்டு வாசற்கதவைத் திறந்தால் அடுத்த வீட்டு வாசற்கதவு இடிக்கும் ‘பிளாட்’ கலாச்சாரம் பரவி விட்டதால் வாசல் தெளிப்பதாவது ஒன்றாவது ?

பரந்து விரிந்த வீடும் வாசலும் இருந்தபோது மக்கள் மனதும் அப்படியே இருந்தது. புறாக்கூண்டு போன்ற அடுக்குகளில் அடங்கிக்கொண்ட மக்கள் தங்கள் மனதும் அவ்வாறே சுருங்கக் கண்டார்கள் என்று நான் சொன்னால் ஒப்புக் கொள்கிறீர்களா ? . அத்துடன் மக்களைப் பிற்போக்குத் தனமான செயல்களைச் செய்யச் சொல்கிறேன் என்றும் சிலர் கூறலாம். ஆனால் ஒன்று, ‘ஓரினச் சேர்க்கை சரி ‘ என்று பிதற்றும் ‘முற்போக்கு’ கூட்டத்தில் நான் இல்லை என்பதால், மேலும் கோலம் பற்றித் தொடர்கிறேன்.

தமிழ்ப் பண்பாட்டின் ஒரு அங்கமாகவே கருத்தப்பட்டு வந்தது வீட்டு வாசலில் கோலம் போடுவது என்பது. கோலம் போடுவதில் வீட்டுக்கு வீடு போட்டி உண்டு. யார் முதலில் கோலம் போடுகிறார்கள், யார் வீட்டுக் கோலம் பெரியதாகவும் அழகாகவும் உள்ளது என்று பல வகைகளில் போட்டி போடுவார்கள். ‘அட, நீ எப்போது போட்டே, நான் பார்க்கவே இல்லையே !’ என்று மற்றவர் பார்த்து ஆச்சரியப்படவேண்டும் என்று விடியற்காலையிலேயே எழுந்து கோலம் போடுவது என்று ஒரு காலம் இருந்தது.

( 90 களில் பிறந்தவராக இருந்தால் உங்களுக்கு ஒரு விஷயம். ‘விடியற்காலை’ என்பது ஒரு நாளில் காலையில்  நான்கு முதல் ஆறு மணி வரை உள்ள நேரம். நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்போதுதான் நீங்கள் வேலை முடித்தோ அல்லது இணையத்தில் நேரம் செலவிட்டோ தூங்கச் செல்லும் நேரம்.)

அரிசிமாவும் கல் மாவும் கலந்து உள்ள பொடியால் கோலம் போடும் முறை ஏன் ? அதனால் வாசலில் உள்ள அணில், காக்கை, குருவி முதலியன உணவுக்காக அலைய வேண்டியதில்லை. ஈ, எறும்பு முதலியன கூட அரிசிமாவை உணவாகக் கொண்டிருந்தன. ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்று வள்ளுவர் கூறுவது இங்கு எண்ணிப் பார்க்கலாம். ‘காக்கை குருவி எங்கள் சாதி’ என்ற பாரதியும் நினைவுக்கு வரலாம்.

அதுவும் மார்கழி மாதத்தில் கோலத்தின் நடுவில் பூசணிப்பூ வைத்து அலங்கரிப்பார்கள். பல வண்ணக் கோலங்களும் உண்டு.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் கோலம் போடுவது பெண்கள் மட்டுமே. அவர்கள் காலை வேளையில் குனிந்து நிமிர்ந்து வாசலில் கோலம் போடுவதால் இடுப்புக்கு வேண்டிய உடற்பயிற்சி கிடைத்துவந்தது. பெண்களுக்குப் பிரசவ நேரங்களில் மிகவும் உதவியாக இருக்கும் இது என்று பெரியவர்கள் கூறினர். அக்காலத்தில் சுகப்பிரசவம் மட்டுமே நடந்தது என்பதையும் சேர்த்துப் பார்க்கவும். ‘சிசேரியன்’ என்னும் பணம் பறிக்கும் முறை அப்போது தோன்றியிருக்கவில்லை. மக்களும் வானத்துக் கோள்களை ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டு தங்களுக்குத் தேவையான நேரத்தில் பிள்ளை பெற்றுக்கொண்ட காலம் அல்ல அது. அவர்களுக்கு அவ்வளவு ‘பகுத்தறிவு’ வளர்ந்திருக்கவில்லை.

சரி. இவ்வளவு பீடிகை ஏன் ? விஷயத்திற்கு வருகிறேன்.

இந்தப் படத்தைப் பாருங்கள்.

சுசீலா மாமியின் மார்கழி கோலம்
வருஷம் தோறும் சுசீலா மாமி போடும் கோலம்

இது ஒரு கோலம். ராமானுசர், சங்கரர், மத்வர் என்று மூன்று ஆச்சாரியர்களின் உருவம். அவர்களுக்குக் கீழே தட்டில் வெற்றிலை, வாழைப்பழம் முதலியன. அத்துடன் சங்கும் சக்கரமும். எல்லாமும் கோலத்தில் தான்.

இது மார்கழி மாதத்தில் சென்னையில் எங்கள் வீட்டின் எதிர் வீட்டில் வசிக்கும் ஒரு 85 வயதான சுசீலா மாமி என்று அழைக்கப்படும் மூதாட்டி அம்மையார் போட்ட கோலம். இவர் மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆண்டாள் பாசுரத்திற்கும் ஏற்றாற்போல் கோலம் போடுவார். பாடலுக்கு ஏற்றாற்போல் படம் இல்லையென்றால் இம்மாதிரி பொதுவானதாகவும், புதியனதாகவும் போடுவார். இதற்காக இரவு சுமார் பதினோரு மணி அளவில் தன் வீட்டு முன்னால் சுத்தம் செய்யத் துவங்குவார். பின்னர் ஒரு மூன்று மணி அளவில் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் வாசல் தெளித்துக் கோலம் போடத் துவங்குவார். ஆறு மணி வரை போடுவார்.

அத்துடன் நில்லாமல் அந்தக் கோலத்தை மாடு, நாய் முதலியனவும், மனிதர்களும் அழிக்காமல் இருக்க கோலத்தைச் சுற்றிக் கம்புகளால் ஒரு அரண் அமைத்துவிடுவார். நாள் முழுவதும் வீட்டு வாசலில் இருந்து யாரும் கோலத்தை அழிக்காமல் காவல் காப்பார்.

இவர் போடாத தெய்வ வடிவங்கள் இல்லை. பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள், வெறும் ஆண்டாள் மட்டும், தக்ஷிணாமூர்த்தி, நந்தி மீது சிவனும் பார்வதியும், அனுமன், இராம பட்டாபிஷேகம், காளிங்க நர்த்தனம் என்று பல விஷயங்கள் பற்றி இவர் கோலம் அமையும். சென்னையில் எங்கள் பகுதியில் அவரது கோலம் ரொம்பவும் பிரசித்தம்.

இது தவிர தமிழ்ப் புத்தாண்டு, தெலுங்குப் புத்தாண்டு, பொங்கல் என்று விதம் விதமான நாட்களுக்கு விதம் விதமாகக் கோலம் போடுவார்.

இத்தனைக்கும் அவருக்கு உடல் நிலை சரியில்லை. மூன்று முறை ‘கீமோ-தெரபி’ செய்துகொண்டுள்ளார். ஆனால் மிகவும் மனவுறுதி படைத்தவர். பல ஆண்டுகள் முன்னரே கணவரை இழந்த அவர், மனம் தளராமல் இந்தி கற்று, தான் இந்தி ஆசிரியராக தனது 75 வது வயது வரை பணியாற்றினார். வறுமையில் இருந்த  ஒரு குடும்பத்தின் இரு பிள்ளைகளை எடுத்துத் தன் பிள்ளைகளாகவே வளர்த்து இன்று ஒரு பிள்ளைக்குத் திருமணமும் செய்துள்ளார். இரு மகன்களும்  இன்று நல்ல வேலையில் உள்ளனர். இரண்டு பிள்ளைகளைத் தான் ஒருவராகவே வளர்த்து அவர்களுக்குக் கல்வியும் கொடுத்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றியுள்ள நிலையில் இந்த இரு பிள்ளைகளும் அவரிடம் உயிராகவே உள்ளனர்.

மாமி ஆண்டுக்கு ஒருமுறை தன் கணவர் நினைவு நாளில் காசிக்குச் சென்று கிரியைகள் செய்து வருகிறார்.

அத்துடன் இல்லாமல் தன் வீட்டின் ஒரு பகுதியில் ஒரு குடும்பத்தை வாடகைக்கு வைத்தார். அந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையையும் தன் பேரனாகவே கருதி வருகிறார்.

இதெல்லாம் தமிழ் சினிமாவில் வருவதுபோல் தோன்றினாலும் இவை அவ்வளவும் உண்மை. இன்றும் இப்படிப்பட்ட மனித தெய்வங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஏன் ஓடுகிறோம் என்று தெரியாமலேயே ஓடிக்கொண்டிருக்கும் நம்மிடையே தன் வாழ்வின் ஒவ்வொரு துளியையும் ஒரு அர்த்தத்துடன் வாழும் சுசீலா மாமியை என்னவென்று சொல்வது ?

சென்னையில் ஏன் மழை பெய்கிறது என்று இப்போது தெரிகிறதா ?

பிச்சை எடுத்துப் பல்லக்கில் போன கதை

சில விஷயங்கள் நம்மைக் குழப்பி விடும் ஆற்றல் பெற்றவை. நான் பகுத்தறிவைப் பற்றிக் கூறவில்லை.

அடிப்படையே இல்லாத , எந்த அறிவுசால் இயக்கங்களும் ஒப்பாத, எந்த ஒரு வரை முறையிலுமே அடங்காத சில நிகழ்வுகள் நம்மை அப்படியே அசைத்துப் போட்டுவிடும். இது ஏன் இப்படி நடக்கிறது? இப்படிக்கூட நடக்க முடியுமா? என்றெல்லாம் நம்மைச்  சிந்திக்க  வைக்கும் ஒரு சிலவற்றில் இன்றைய நிகழ்வும் ஒன்று.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளைத் தமிழக அரசு வாங்குகிறதாம். அதாவது முதலீடு செய்கிறதாம்.

உதாரணமாக உங்களுக்கு நூறு ரூபாய் சம்பளம் என்று வைத்துக்கொள்வோம். செலவுகள் போக மீதம் இருபது ரூபாய் இருக்கிறது என்று வைத்தால், அதை நீங்கள் முதலீடு செய்யலாம். ஆனால் உங்கள் செலவே நூற்றி இருபது ரூபாய் என்றால், உங்கள் செலவுகளையே நீங்கள் கடன் வாங்கித்தான் சமாளிக்க முடியும்  என்றால், முதலீடு எப்படி செய்வது?

அது போல் தான் உள்ளது தமிழக அரசின் செயலும். மக்கள் நலப் பணிகளை நடத்தவே பணம் போதவில்லை. பட்ஜெட்டில் துண்டு என்று சொல்லி வரி விதிக்கிறது. மின்சாரம் விலை ஏற்றம். பேருந்துக் கட்டணம் ஏற்றம். அதனையும் தாண்டி அரசின் செலவுகளுக்குப் பணம் போதாமல் டாஸ்மார்க் என்று அரசு சார்பில் கள்ளுக்கடை வேறு. இப்படி நடக்கிறது நித்திய ஜீவனம்.

நிலைமை இப்படி இருக்க, நெய்வேலியின் பங்குகளில் ஐந்து சதவீதத்தை வாங்கப்போகிறார்களாம். செலவு ஐநூறு கோடி. அரசில் அனைவருமே மூளையைக் கழற்றி வைத்து விட்டு வேலை செய்வோம் என்று சபதம் செய்துள்ளார்கள் போலே.

பள்ளிக்கூடங்களுக்கு மேற்கூரை வேய வழி இல்லை. காவிரியில் மழை இல்லாத நாட்களில் நீர் வரத்து செய்ய மூளை வேலை செய்யவில்லை. அதற்குப் பணமில்லை. அரசுப் பேருந்துகள் தகரடப்பாக்களாக உள்ளன. இதற்கெல்லாம் செலவு செய்ய நிதி போதவில்லை என்று மத்திய திட்டக் குழுவிடம் சென்று கேட்கவேண்டிய நிலை. ஆனால் நெய்வேலியின் பங்குகளை வாங்க முடியும். அது எப்படி சார்? பகுத்தறிவு புரியவில்லையே?

தமிழக அரசு ஒரு முதலீட்டு நிறுவனமா? ஆங்கிலத்தில் Investment Holding Firm என்று சொல்வார்களே அப்படி ஒரு நிதி முதலீட்டு நிறுவனமா?  அல்லது முதலீட்டு வங்கி ( Investment BanK) என்று தன்னை அறிவித்துக்கொள்ளப் போகிறதா?

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லதரசு ” என்றார் வள்ளுவர்.  இங்கு இயற்றவும் இல்லை, ஈட்டவும் இல்லை, காக்கவும் இல்லை நிதியை. ஆனால் முதலீடு செய்யப் பணம் மட்டும் வரும். இது என்ன கண் கட்டு வித்தை?

“மூலவர் பிச்சை எடுத்தாராம், உற்சவர் பல்லக்கில் போனாராம்” என்று எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு. அது தான் நினைவிற்கு வருகிறது.

கமல் சார் ப்ளீஸ் வேண்டாம் ..

Image

உலக நாயகன், பகுத்தறிவுப் பகலவன், காதல் இளவரசன் – இப்படிப் பல முகங்களைக்   கொண்ட தமிழ்த் தாயின் தவப்புதல்வன் கமலஹாசன் ( மன்னிக்கவும் கமல் சார் என்று  தமிழில் அறியப்படுபவர் ), நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது மேதாவிலாசத்தையும், “முற்போக்கு”க் கருத்துக்களையும் ( இந்து மத எதிர்ப்பு என்று புரிந்துகொள்ளவும் ) தெரிவித்து வருபவர் என்பது  நாம் அறிந்ததே.

நாம் அறியாத கமல் ஒருவர் உள்ளார். அவர் தான் தானே திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம், திரை இசை, பாடல் என்று அனைத்திலும் புகுந்து விளையாடுவதாக நம்மை நம்ப வைத்துள்ள கமல். அல்லது அவ்வாறு மற்றவர் அனைவரும் சொல்லுமாறு செய்யக்கூடிய திறமை உடைய மகான் என்று கூறலாமா?  மகான் வேண்டாம். அது இந்து மதத் தொடர்புடைய தொடர். அறிஞர் என்று கூறலாம். தமிழுக்குத் தமிழும் ஆயிற்று, பகுத்தறிவுக்குப் பகுத்தறிவும் ஆயிற்று.

ஆதோவ் கீர்த்தனாரம்பத்திலே … இப்படிப்பட்ட கமல், பல மிருகங்களை ( மன்னிக்கவும் திறமைகளை ) தன்னுள் வைத்துள்ளவராக நாம் நம்பும் கமல், தமிழ் சினிமாவையே ஒரு உயரத்துக்குக் கொண்டு போகத்துடிக்கும் ஒருவர், உலக வரலாற்றிலேயே எடுக்கமுடியாத கதைகளையும் சாத்தியமிலாத உத்திகளையும் புகுத்தித் தமிழ் நாட்டு சினிமாவை உலகம் என்ன சூரியக் குடும்பத்தைவிட அதிக உயரத்தில் கொண்டு செல்லத் துடிக்கும் ஒரு கலைப் பொக்கிஷம், தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்ட கதைகளையும் வழிமுறைகளையும் கையாண்ட அவர் எடுத்த படங்கள் அனைத்தும் காப்பி என்று அறிந்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? வேண்டாம் என்னை அடிக்க வராதீர்கள்.

நான் என்ன செய்வேன். பி.ஆர்.மகாதேவன் என்பவர் எழுதிய “கமலின் கலைப்படங்கள்” என்ற நூலைப் படித்தேன். அதன் விளைவு தான் இது.

‘அன்பே சிவம்’  படம் பார்த்தீர்கள் தானே? வியந்தீர்கள் தானே?  இப்படி கூட ஒரு கதை செய்ய முடியுமா என்று சொக்கிபோனீர்கள்  தானே ! வேண்டும் வேண்டும் உங்களுக்கு வேண்டும். அது “ Planes, Trains and Automobiles” என்ற படத்தின் காப்பியம். எனக்கு என்ன தெரியும்  நான் என்ன உலக நாயகனா என்ன பல உலகப் படங்களைப் பார்ப்பதற்கு?

“விருமாண்டி” பார்த்து அழுதீர்கள் தானே ? இருவழிகளில் ஒரே கதையைச் சொல்வது புதிய பாணி என்று தானே நினைத்தீர்கள்? கமலைக் கட்டிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது தானே ? வேண்டுமையா உங்களுக்கு. “Rushmon” என்னும் படத்தின் காப்பியாம் அது.

அது போகட்டும் தேவர் சாதிக்கும் பறையர் எனப்படும் தலித் சாதிக்கும் தான் தென் மாவட்டங்களில் தகராறு. ஆனால் தேவருக்கும் நாயக்கருக்கும் தகராறு மாதிரி கொண்டு சென்று பல பிரச்சினைகளில் இருந்து பகுத்தறிவுடன் தப்பியுள்ளார். நாயக்கர் சாதி தென் மாவட்டங்களில் மிகவும் சிறுபான்மை இனம். அவர்கள் தேவருடன் மோத மாட்டார்கள்.  இது பற்றியும் ஆசிரியர் எழுதியுள்ளார்.

காப்பி அடிப்பது இருக்கட்டும். அதில் என்ன கொடுமை என்றால் இந்தப்  படங்களில் இருக்கும் ஓட்டைகள் பல. இவற்றை மிகத் தெளிவான முறையில் காட்சிக்குக்காட்சி புட்டுப் புட்டு வைத்துள்ளார் மகாதேவன். எந்த இடங்களில் எல்லாம் முனைந்து இந்து மத தூஷனை  நடந்துள்ளது என்றும், “முற்போக்கு” சொல்ல வந்து வழுக்கி விழுந்த இடங்கள் என்ன, அதி புத்திசாலி என்று நிரூபிக்கத் துவங்கி அடி சறுக்கி விழுந்த நிகழ்வுகள் எங்கே ? என்று பக்கம் பக்கமாய் எழுதியுள்ளார் ஆசிரியர்.

‘பஞ்சதந்திரம்’, ‘ஔவை ஷண்முகி ‘ முதலானவை ஆங்கிலப் படங்களின் காப்பி என்று நாம் அறிந்துள்ளோம். இவை பற்றி You Tube மூலமே அறிந்துகொள்ளலாம் தான். ஆனால் இவைகள் வடிகட்டின மசாலா என்பதால்தானோ என்னவோ ஆசிரியர் இவற்றைப்பற்றிஎல்லாம் எழுதவில்லை.

ஆனால் “குணா”, “குருதிப்புனல்” முதலானவைகளில் லாஜிக்கில் பல ஓட்டைகள் உள்ளன என்பது வெளிப்படை. இவ்வளவு ஆராய்ச்சி செய்யும் ஒரு நடிகர் இதில் போய் கோட்டை விடலாமா என்று நம் மனம் சொன்னாலும் கழலின் ஜால்ரா சத்தத்தின் மிகுதியால் நம் மனமே இவற்றை ஏற்க மறுக்கிறது.

‘நம்மவர் ‘-The Principal, ‘மகளிர் மட்டும்’ –   Nine To Five, ‘குணா’ –  Tie me up, tie me down, ‘வேட்டையாடு விளையாடு’ – Murder of Memories,   ”நள தமயந்தி’ – Green Card, ‘சதி லீலாவதி’ – She Devil என்று பட்டியல் நீள்கிறது.   நமது மன உளைச்சல் கூடுகிறது.

குற்றம் சொல்லலாம் சார், நீங்கள் கதை எழுதிப் பாருங்கள் என்று கேட்கிறீர்களா?  அதற்கும் ஆசிரியர் ஒவ்வொரு படத்துக்கும் புதிய கதையும் எழுதியுள்ளார். தான் எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று. பல கதைகள் நன்றாகவே உள்ளளன. “குருதிப்புனல்”,  “ஹே ராம்” முதலான கதைகளுக்கு மாற்றாக அவர் எழுதியுள்ள கதைகள் நன்றாகவே உள்ளன. கமல் சார் கவனிப்பாராக. உங்களுக்கு ஒரு நல்ல கதாசிரியர் கிடைத்துள்ளார்.

கம்பர் காப்பி அடிக்கவில்லையா ? என்று கேட்கலாம். அவர் மூலக்கதையை மாறவில்லை. தான் புதியதாக ஒரு கதையை உருவாக்கவில்லை. வடமொழி மூலத்தைத் தமிழில் தந்தார் அதுவும் தமிழுக்கே உண்டான பண்புகளுடன் – “பிறன் இல் விழையாமை’ என்ற வள்ளுவர் கூற்று வலியுறுத்தப்படுகிறது.

மணி ரத்தினமும் தான் பல மகாபாரதக் கதைகளைக் காப்பி அடித்தும் உல்டா செய்தும் படம் எடுக்கிறார். ஆனால் அவரிடம் ஒரு நேர்மை இருக்கிறது. கதை தனது என்று அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் கமல் சார் கதை தொடங்கி அனைத்தும் தனதே என்னும்போது “அட அவனா நீயி” என்று எண்ணத் தோன்றுகிறது தானே !

ஆனால் ஒன்று இத்தனை செய்தாலும் அவர் தமிழ் நாட்டின் ஒரு கலைஞன். அந்த அளவில் அவரை வாழ்த்துவோம்.

ஒரே ஒரு வேண்டுகோள் : இனிமே இந்த மாதிரி “சுட்ட” கதை வேண்டாம் சார். நமக்கு மத்தது வரல்லே. நடிக்க மட்டும் வருது. அதோடு விட்டுடுங்களேன், ப்ளீஸ் !