மாமியார் உடைத்தால்…

மனிதனின் பரிணாம வளர்ச்சி என்று கூறுகிறோம். ஆனால் சில நேரங்களில் மனிதனின் செயல்கலைப் பார்த்தால் அவன் வளர்கிறானா அல்லது வீழ்கிறானா என்று புரிவதில்லை.

அப்படி அமைந்தது தான் நாம் தற்போது பார்க்க இருப்பது.

சில நாட்கள் முன்பு எழுத்தாளர் ஜெயமோகன் ‘தி ஹிந்து’ நாளிதழில் ஒரு கட்டுரை எழுதினார்- தமிழ் எழுத்துரு மாற்றம் பற்றி.  அது இங்கே.  அது பற்றி அவரது வலைத்தளத்திலும் இப்படி பதிவிட்டிருந்தார்.

அவர் எழுதியதன் சாராம்சம் இதுதான். பிள்ளைகள் தமிழ் படிக்க சிரமப் படுகிறார்கள். பள்ளிகளில் தமிழ் சரியாகப் போதிக்கப்படுவதில்லை. ஆங்கிலம் வாழ்வுக்குத் தேவையாக இருக்கிறது என்பதால் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே தமிழ் ஒரு சுமையாக இல்லாமலும் அதே நேரத்தில் படிக்கும் பிள்ளைகளுக்கு எளிதாகவும் இருக்க தமிழ் எழுத்துக்களுக்குப் பதிலாக ஆங்கிலத்தில் எழுதலாம். உதாரணம் : ‘அவன் போகிறான்’ என்பதை ‘AVAN POKIRAAN’ என்று எழுதலாம். கணினியும் இதற்குத் துணை செய்யும். இதுவே அவரது கருத்து.

நான் ஜெயமோகனை முழுமையாக ஆதரிக்கவில்லை. பல தேவை இல்லாத எழுத்துக்களை நீக்கலாம். உதாரணமாக ‘ஞே, பௌ, சௌ, ழோ’ முதலான எழுத்துக்களால் என்ன பயன்? தமிழை எளிமையாக்கலாம். அதிகம் பேர் படிப்பார்கள். அதற்காக ஆங்கில எழுத்துரு தேவை இல்லை என்பதே என கருத்து.

ஜப்பானிய மொழியில் ‘ஹிராகானா’, ‘கதகானா’ , ‘காஞ்சி’ என்று மூன்று எழுத்து வகைககளை வைத்துள்ளார்கள். ஹிராகானா எளிமையானது. ஒரு மாதத்திற்குள் படித்துவிடலாம். சிறுசிறு வாக்கியங்கள் எழுதவும் முடியும். ஜப்பானிய அடிப்படை மொழி வகை அது. கதாகானா ஜப்பானியம் அல்லாத மற்ற மொழிச் சொற்களை எழுதப் பயன்படுவது. உதாரணமாக ‘Computer’ என்பதை “コンピューター。” என்று “கொன்புயூதா” என்று வேற்றுமொழி ஓசையிலேயே அழைப்பது. அது தவிர காஞ்சி என்பது பாரம்பரியமான எழுத்து. ஆகக் கடினமானது. சுமார் மூவாயிரம் உள்ளது. அரசாங்கமே கடினத்தைக் குறைக்கும் விதமாக சுமார் இரண்டாயிரம் காஞ்சி எழுத்துக்களை அங்கீகரித்துள்ளது. ஜப்பானிய மொழியில் உள்ள கணினி மென்பொருளும் இந்த இரண்டாயிரம் எழுத்துக்களையே கொண்டுள்ளது. ( சுமார் ஒரு வருடம் படித்த எனக்கு நூற்றியைம்பது காஞ்சி தான் தெரியும்). ஆக மொழியை எளிமையாக்குவது அந்தந்த தலைமுறையின் வேலை என்பது என் கருத்து.

சரி ஜெயமோகனுக்கு வருவோம்.

இதற்கு முன்னரே பலர் இம்மாதிரிப் பேசியுள்ளனர். இரவீநதிரநாத தாகூர், பெரியார் ஈ.வெ.ரா. முதலியோர் வலியுறுத்திப் பேசியுள்ளனர். ஈ.வெ.ரா.வின் முயற்சியால் தமிழ் எழுத்துக்களில் மாற்றமும் வந்தது. அண்ணா பல்கலையின் முன்னாள் தலைவர் திரு.குழந்தைசாமியும் தமிழ் எழுத்துக்களில் மாற்றம் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் அப்போதெல்லாம் யாரும் எதுவும் பேசவில்லை.

ஜெயமோகன் எழுதியதும்  கிளம்பிற்று பெருங்கூச்சல். இதற்குத் தொடர்பு இருப்பவரும் இல்லாதவரும் வசை மொழியத் தொடங்கினர். வேடிக்கையாக ஈ.வெ.ரா. தொடர்புடைய கட்சியினரும் இதில் அடங்குவர்.

இதில் அரசியல் சார்பு மக்கள் பேசியதை புறந்தள்ளினாலும் என்னை மிகவும் பாதித்தது எழுத்தாளர் திரு.ஞாநி அவர்களின் எதிர் வினைகளே.

அவரது ‘தி ஹிந்து’வில் வந்துள்ள கருத்து பின்வருமாறு :

“பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து நடந்தால், அதற்கான தீர்வுகளை எப்படி யோசிக்க வேண்டும்? இனி, அவை நடக்காமல் இருக்க வழிகள் என்ன என்று அறிந்து செயல்படுத்த வேண்டும். அதற்குப் பதில், ‘எங்களால் பாலியல் வன்முறைகளைத் தடுக்க முடியாது. எனவே, பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்கள், அதைச் சுகமான அனுபவமாகக் கருதி ஏற்றுக்கொண்டுவிட வேண்டும்’ என்று சொன்னால், அது தீர்வா? அது மாற்று சிந்தனையா? எப்படிப்பட்ட சமூக விரோதச் சிந்தனை!”

எதையும் எதையும் தொடர்புபடுத்துவது ? தமிழ் எழுத்துருவை மாற்றலாம் என்று சொல்வது பாலியலை நியாயப் படுத்துவது போன்றதா?

இதில் விஷயம் என்னவென்றால் ஜெயமோகனை எதிர்ப்பது என்பது தினக்கடமை. வெறும் வாய்க்கு அவல் கிடைத்தால் சும்மா இருக்குமா? அதுதான் பாய்ந்து பிறாண்டிவிட்டார் ஞாநி.

ஆக கருத்துச் சுதந்திரம் பற்றி ஞாநி வெளியிட்டதெல்லாம் வெற்று வார்த்தை ஜாலங்கள் என்று கொள்ள வேண்டும் போல் தெரிகிறது.

எனவே ஞாநியின் நியாய உணர்விற்கு ஒரு சோதனை வைப்போம்.

ஈ.வே.ரா. தமிழ் பற்றிக் கூறியுள்ளவை சில இங்கே :

அப்படியென்றால் ஈ.வெ.ரா. சொன்னதும் இதே ரகம் தானா? அவரை எதிர்த்தும் ஞாநி எழுதுவாரா? அது என்ன மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் ? 

ஆனால் ஞாநியின் இந்த ‘தரச் சரிவு’ வருத்தம் அளிக்கிறது.

தொல்காப்பியம் ஒரு இந்துத்வ நூல் ?

thol

சில நேரங்களில் நம்மையும் அறியாமல் சில நல்லது நடந்துவிடுகிறது. அது போல் நடந்தது தான் “தொல்காப்பியத் தமிழர்” என்ற நூல் என் கண்ணில் பட்டது. வாழ்க சிங்கை தேசிய நூலக மலிவு விலைப் பிரிவு.

ஈ.வே.ரா.வின் சீடர்களில் ஒருவர் அவரிடமிருந்து பிரிந்து சென்று நல்ல வழிக்குத் திரும்பினார்களா என்று சில காலமாகவே ஆராய்ந்து கொண்டிருந்தேன். சிங்கை தேசிய நூலகத்தில் அறிஞர் அண்ணாவின் “சரிந்த சாம்ராஜ்யம்”,”வருத்தப்பட வைத்த சம்பவங்கள்” முதலிய சில நூல்கள் எனக்கு வரப் பிரசாதமாய் அமைந்தன. அதைப்போல் அமைந்தது தான் இந்த சாமி.சிதம்பரனாரின் நூல்.

சாமி.சிதம்பரனார் பெரியார் கொள்கையில் ஊறியவர். அவருடன் மலேயா முதலான இடங்களுக்குச் சென்றவர்.ஆனால் மிகச் சிறந்த தமிழறிஞர். எங்கள் ஊர் மயிலாடுதுறைக்கு அருகில் கடகத்தில் பிறந்தவர்.  பெரியாரின் சரிதையை “தமிழர் தலைவர்” என்ற பெயரில் எழுதியவர். பின்னர் அவரது கொள்கைகள் பிடிக்காததால் வெளியேறி கம்யுனிஸ்ட் கட்சியில் இணைந்தார் என்று நினைக்கிறேன்.

இப்படிப்பட்ட ஒரு தமிழ் அறிஞர் பெரியார் கட்சியினர் “ஆரியரும் திராவிடரும் வேறானவர்” என்று கூறியதை ஏற்கவில்லை. திருக்குறள் முதலியவற்றைப் பெரியார் கட்சியினர் கேலி பேசியதை விரும்பவில்லை. அதனால் அவர்களிடமிருந்து வெளியேறிப் பல நூல்கள் எழுதினார். அதனாலோ என்னவோ தமிழகத்தில் “மறக்கடிக்கப்பட்ட” ஒரு நூல் “தொல்காப்பியத் தமிழர்” என்னும் நூல்.

இந்த நூலின் முன்னுரையை அவரே எழுதியுள்ளார். இப்போதுள்ள “பகுத்தறிவாளருக்கு” ஒவ்வொரு வரியும் சாட்டையடி.

“ஆரியர்” படை எடுப்பு என்று கூறி காலட்சேபம் செய்து வந்துள்ள தமிழ்த் தலைவர்களுக்கும் இந்த நூல் ஒரு சரியான பதிலடி. வேறு யாராவது எழுதி இருந்தால் “பார்ப்பனக் கைக்கூலி ” என்றும் “மவுண்ட் ரோடு மகா விஷ்ணு” என்றும் சொல்லித் தப்பிக்கலாம். ஆனால் பெரியாருடனேயே இருந்து அவரைப்பற்றிய புத்தகங்கள் எழுதி, கொள்கை வேறுபாட்டால் வெளியேறிய ஒரு தமிழ் அறிஞர் எழுதியதைப் புறந்தள்ள முடியாதே !

இந்திய மக்களுக்கு ஒரே பண்பாடு இருந்தது, மொழியால் வேறுபாடு இருந்ததே ஒழிய, கலையால், கலாச்சாரத்தால் ஒன்றாகவே இருந்தார்கள் என்று கூறுகிறார். நான் கூறினால் இந்துத்துவவாதி என்று திட்டலாம். சாமி.சிதம்பரனார் அப்படி இல்லையே. பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வந்தவரே !

பண்பாட்டால் ஒன்றுபட்டது இந்தியா என்கிறார்.அதற்கு தொல்காப்பியத்தை உதவிக்கு அழைக்கிறார். தற்போதைய “அறிவாளிகளுக்கு” இது வேப்பங்காய். “தமிழ் இனம்” என்று இவர்கள் போடும் கூப்பாடு காது கிழிகிறது.

அவர் முன்னுரையில் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். முன்னுரையை மட்டுமே ஒரு புத்தகமாகப் போடலாம் என்று தோன்றுகிறது. பல ஆண்டுகள் கழிந்தாலும் அவருடைய சொற்கள் இன்றைய தமிழகத்திற்கு அப்படியே பொருந்துகின்றன. ( நூலை முழுவதும் படிக்க வில்லை. அதற்குள் இன்னொரு நண்பர் கடன் வாங்கிச் சென்றுவிட்டார். படித்தபின் விரிவாக எழுதுகிறேன்).

—————–

“தமிழர்களைப் பற்றித் தமிழ் இலக்கிய உண்மைகளை உணராதவர்களால் எழுதப்பட்ட வரலாறுகளே இன்று மலிந்து கிடக்கின்றன. தமிழர் வரலாற்றைப் பற்றி வெளிநாட்டினர் பலவாறு கூறுகின்றனர். பழந்தமிழ் இலக்கியங்களிலே பயிற்சியில்லாத சரித்திரக்காரர்கள் என்னென்னவோ சொல்கின்றனர்..

“தமிழகத்திலே இன்று இனவெறுப்பு தலைவிரித்தாடுகிறது. மொழிவெறுப்பு முறுக்கேறி நிற்கின்றது. நாகரிக வெறுப்பு நடனமாடுகின்றது. வரலாறு, நாகரிகம், பண்பாடு என்ற பெயர்களைச் சொல்லித் தமிழ்மக்களிடையே கலகத்தீயை மூட்டிவிடுகின்றனர் சிலர். இத்தகைய வெறுப்புத்தீ அணைக்கப்பட வேண்டும்.    

“…பண்டைய மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் சிலவற்றை மூடநம்பிக்கைகள் என்று மொழிகின்றோம். விஞ்ஞான அறிவுக்கு ஒத்துவராத சில பழக்கங்களும் நம்பிக்கைகளும் பண்டைக்கால மக்களிடம் இருந்தன. நாகரிகம் பெற்ற எல்லா இனத்தினரிடமும் இவைகள் இருந்தன. தமிழர்களிடமும் இத்தகைய பழக்கங்களும், நம்பிக்கைகளும் இருந்தன என்பதில் வியப்பில்லை.

‘தமிழர்களிடம் எவ்விதமான பொருந்தாப் பழக்கமும் இருந்ததில்லை. எந்தக் குருட்டு நம்பிக்கையும் இருந்ததில்லை. இன்றைய விஞ்ஞான அறிவுபெற்ற பகுத்தறிவாளர்களைப் போலவே அன்றும் வாழ்ந்தனர். ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும் மூடநம்பிக்கைகளையும் தமிழரிடையே புகுத்தினர் என்பது உண்மையன்று.

“… இவர்கள் கூற்று வெறுப்பையே அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் வடமொழியில் கொண்டிருக்கும் வெறுப்பும் இதற்கொரு காரணம்.  தமிழ் இலக்கியங்கள் நன்றாகக் கற்றவர்களுக்கு இவ்வுண்மை தெரியும். இவ்வுண்மையை உணர்ந்த புலவர்களில் கூடச் சிலர் இதை மறைக்கின்றனர். 

“…. அந்த நாகரிகம் ஆரியருக்கும், தமிழருக்கும் ஒத்த நாகரிகமாகத்தான் காணப்படுகின்றது. தொல்காப்பியத்தில் ஆரியர் என்ற பெயரோ, திராவிடர் என்ற பெயரோ காணப்படவில்லை.”

 “இந்தியமக்கள் வணங்கும் தெய்வங்கள், பிறப்பு, இறப்பு பற்றிய நம்பிக்கைகள், நீதி, அநீதி இவைகளைப் பற்றிய முடிவுகள், பாவபுண்ணியம், மோட்சம், நரகம் பற்றிய கொள்கைகள் இவைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன. இந்திய மக்கள் அனைவருக்கும் இவைகளைப் பற்றிய கருத்து ஒன்றுதான். இவைகள்தாம் பண்பாட்டுக்கு அடிப்படையானவை. அவரவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்து நடை, உடை, பாவனைகளும், மொழிகளும் வேறுபட்டிருக்கலாம். இதனால் இந்தியமக்களின் பண்பாடு வெவ்வேறு என்று சொல்லிவிட முடியாது ‘ என்பதே இச்சரித்திராசிரியர்களின் கொள்கை. இந்தக் கொள்கைக்குத் தொல்காப்பியம் ஆதரவளிக்கிறது.”

—————

இந்தியா, பண்பாடு, கலாச்சாரம் என்று கூறுவதாலும், அதற்கு தொல்காப்பியத்தை உதாராணம் காட்டுவதாலும் ஒன்று தொல்காப்பியம் இந்துத்துவ நூலாக இருக்க வேண்டும், அல்லது சாமி.சிதம்பரனார் ஆர்.எஸ்.எஸ். காரராக இருக்க வேண்டும். இப்படி நம்புவதுதான் தற்காலத்திய பகுத்தறிவு.

"நாளும் பொழுதும் "- ஜெயமோகன் – ஒரு பார்வை

Naalum

சமீபத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘நாளும் பொழுதும்’ வாசித்தேன்.   சமூகம், சினிமா, நான் என்று மூன்று பிரிவுகளில் அமைந்துள்ள இந்த நூலில் பல கட்டுரைகள், அவர் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகள் முதலியன உள்ளன.

“பந்தி” என்ற கட்டுரை நெஞ்சைத் தொட்டது. குமரி மாவட்டத்தில் திருமணம் முதலிய விழாக்களில் விருந்தினர்களை எப்படி பந்தி உபசரிப்பது என்று அருமையாக விவரித்துள்ளார். அம்முறையில் உள்ள வழக்கங்கள், ஒவ்வொரு வழக்கத்தின் பின்புலம், அதன் தேவை என்று அழகாக இருந்தது. ஒவ்வொரு சமூகத்தவரின் பந்தி உபசரிப்புக்களும் அப்படியே. ஆனால் தற்போது எப்படி உள்ளது என்பதையும் சொல்லியுள்ளார். நாம் தினமும் காணும் ஒன்று தான். இருந்தாலும் படிக்கும் போது வலிக்கிறது.

எல்லாக் கட்டுரைகளையும் விட என்னை மிகவும் பாதித்த ஒன்று தற்கால இளைஞர்களைப் பற்றியது. “யூத்து” (Youth) என்பது பெயர். எனது கருத்துக்கு ஒத்துப் போவதாக அமைந்துள்ளதால் கவரப்பட்டேன் என்பது உண்மை என்றாலும், அவரது சில எண்ணங்கள் மிகவும் உண்மை.

யூத் என்ற போர்வையில் பொறுப்பற்ற ஒரு கூட்டம் செயல்படுவதையும், அவர்களுக்கு எப்படிக் கலைகள் பற்றியும் வாசிப்பு பற்றியும் ஒரு அறிமுகமே இல்லாமல் இருப்பது பற்றியும் மிகவும் கவலை கொண்டு எழுதியுள்ளார். இந்த சில கருத்துக்கள் என் ஒரு கட்டுரையில் முன்னமே சொல்லிருந்தேன்.

http://ammanji.wordpress.com/2013/07/20/futureindia/ )

சுய தம்பட்டம் இருக்கட்டும். ஜெயமோகனுக்கு வருவோம்.

“யானை டாக்டர்” என்று முன்னம் எழுதிய கதையில் இளைஞர்கள் காடுகளில் பீர் பாட்டில்களை உடைத்து வீசுவதால் யானைகள் எப்படி உயிர் இழக்கின்றன என்று எழுதி இருந்தார். அதிலிருந்து தொடங்குகிறார். ஒரு மலை உச்சியில் இளைஞர்கள் சட்டையைக் கழற்றி ஆடியபடி, குடித்தபடி, கத்தியபடி இருந்திருக்கிறார்கள். அதைப்பற்றிக் கூறுகிறார் :

“அந்த இளைஞர்களுக்கு அந்த இடத்தின் அழகும் முக்கியத்துவமும் உண்மையிலேயே தெரியவில்லை. அங்கே எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்று அவர்களுக்குப் புரியவில்லை. அதைப்போன்ற விஷயங்கள் அவர்களுக்குப் பழக்கமே இல்லை. அது தான் பிரச்சினை. இவர்கள் அறிந்தது தமிழ் சினிமா.அதில் என்ன செய்கிறார்களோ அதைச் செய்கிறார்கள்.”ஜாலியாக” இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

நம்முடைய இளைஞர்கள் வளர்ப்பு இதற்கு முக்கியமான காரணம். ரசனை, அழகுணர்வு, குடிமைப்பண்பு, அறிவார்ந்த நோக்கு ஆகியவை குடும்பம், கல்வி நிலையம் என்னும் இரு அமைப்புகள் வழியாக வர வேண்டும்.

நம்முடைய குடும்பங்கள் பெரும்பாலும் சேர்ந்து சமைத்துத் தின்று, உறங்குகிற இடங்கள் மட்டுமே.. நம் குடும்பங்கள் அதன் பிள்ளைகளுக்குப் பணம் சம்பாதிப்பதற்கான உந்துதலை மட்டுமே உருவாக்குகின்றன.கல்வி அப்படி பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழிமுறையாகவே முன்வைக்கப்படுகிறது.

பல குடும்பங்களில் பண்பாடு என்று நாம் நம்பும் எதனுடைய அடையாளமும் இருக்காது.ஒரு சில சாமிப் படங்கள், பாட புத்தகங்கள், ஒரு டி.வி.-அவ்வளவுதான். அவர்களுக்கு எந்த ஒரு பண்பாட்டுப் பயிற்ச்சியும் இருப்பதில்லை.

நாம் மரபாகக் கொண்டிருந்த எல்லா பண்பாட்டுக்கூறுகளும் “வாழ்க்கை வளர்ச்சிக்கு” உதவாதவை எனத் தூக்கி வீசப்பட்டு விட்டன. யோசித்துப் பாருங்கள், நம்முடைய சராசரி இளைஞனுக்கு ஏதாவது ஒரு ஊடகத்திடமாவது தொடர்புள்ளதா என்று? அவனுக்கு இசை, ஓவியம் என்று எந்த ஒரு நுண் கலையிலும் அறிமுகமில்லை. அவனால் ஒரு நூலை வாசித்துப் புரி ந்துகொள்ள முடியாது.    அவனுக்குச் சின்ன வயது முதலே தெரிந்த ஒரே ஊடகம் தமிழ் சினிமாவும் அந்தச் சினிமாவிலேயே மொண்டு சமைத்த டி.வி.யும்…”

ஒரு பொது இடத்தல் நாலைந்து “யூத்து” வந்துவிட்டால் கிட்டத்தட்ட ஒரு குரங்குக் கூட்டம் வந்து விட்டது போலத்தான். இங்கே “யூத்து” என்றால் எதிலும் நிலையான ஆர்வமில்லாத, எந்த அடிப்படைப் பயிற்சியும் இல்லாத, மேலோட்டமான ஆசாமி என்று தான் அர்த்தம்.

என் தரிசனம் : பள்ளியோ கல்லூரியோ சென்று வந்த பிறகு என்ன செய்வதென்றே நம் இளைஞர்களுக்குப் புரிவதில்லை. கும்பலாகச் சேர்ந்து நக்கல் அடிப்பதும், சினிமாப் படங்களைப் பார்த்து அதன் வசனங்கள் பேசி மகிழ்வதுமே அவர்கள் பொழுதுபோக்கு. வீட்டிற்கு அருகில் நூலகங்கள் இருந்தால் அங்கே சென்று என்ன இருக்கிறதென்று பார்க்கவாவது பார்ப்பான். ஆனால் வீதிக்கொரு கள்ளுக் கடை இருந்தால்? அதையும் அரசே செய்தால்?

Facebook, Twitter முதலிய சில தளங்களில் தமிழ் மக்கள் உரையாடுவது அவர்களின் தரத்தை மேலும் பறைசாற்றுகிறது. எங்கும் ஒரு வரி விமரிசனங்கள். அதுவும் அரசியல் மற்றும் சினிமா பற்றி மட்டுமே. பல நேரங்களில் வசை மொழிகள். மிகப் பல நேரங்களில் சாதி சொல்லி வைவது. சாதியை ஒழித்துவிட்டதாக மார் தட்டிக்கொள்ளும் ஒரு சமூகத்தில் சாதியை இழுக்காமல் யாராலும் பேச முடியவில்லை. புத்தகங்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை. படித்தால்தானே பேசுவதற்கு?

சில மாதம் முன்பு பெரியார் தமிழ் பற்றியும், சிலப்பதிகாரம் பற்றியும் சொல்லிருந்ததைப்பற்றி  பற்றி எழுதி இருந்தேன். இணையத்தில் ஒரே வசை மொழி. வேறு ஒரு பதிவின் போது அவர்களுக்கு ஒரு பதில் அனுப்பினேன் – ” இவை என் கருத்துக்கள் அல்ல. அறிஞர் அண்ணா “சரிந்த சாம்ராஜ்யம்”, “மனதை வருத்திய சம்பவங்கள்” என்று இரண்டு நூல்களில் சொல்லியுள்ளவை”, என்று ஆதாரம் காண்பித்தேன். ஒரு பயலும் பேசவில்லை.

ஜெயமோகனின் வார்த்தைகள் நம் தமிழ் சமுதாயத்தின் மீது சொடுக்கப்பட்ட சாட்டை வீச்சுக்கள். இந்த வீச்சுக்களால் புண்பட்டு அதனால் நம் வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்படுமானால் நல்லது தான்.

ஆனால் இந்த சாட்டை வீச்சும் நம்மை ஒன்றும் செய்யாமல் நமது தோல் அவ்வளவு தடிமனானதாக இருந்தால் இந்த தமிழ்ச் சமுதாயம் போகும் பாதை அதல பாதாளம் என்பது புரிய பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை.

பி.கு: – ஒரு ஆறுதல்:  தமிழ் நாட்டிலிருந்து சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் குடியேறியுள்ள பல தமிழர்கள், தமிழ் நாட்டின் ஊடக ஆக்கிரமிப்பிலிருந்து மீண்டு தங்கள் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்கிறார்கள். சிங்கையில் தமிழ் நுண் கலைகள் அமைப்புகள் பல உள்ளன. தமிழ்க் குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை அவ்விடங்களுக்கு அனுப்புகிறார்கள். இலங்கைத் தமிழர் கோவில்களிலும் செட்டியார் சமூகத்தவர் நடத்தும் கோவில்களிலும் தமிழ்த் திருமுறை வகுப்புகள்  நடத்தப் படுகின்றன. பிள்ளைகளுக்குத் திருமுறைகளில் போட்டிகள் வைத்துப் பரிசுகள் வழங்குகிறார்கள்.

அர்த்தமுள்ள மெளனம்

/ *கனமான விஷயங்களை எளிய சொற்களில் பரவலாகப் புரியும் வண்ணம் எழுத முடியாது என்றும் அப்படி எழுதினால் அது இலக்கியமல்ல என்றும் அபத்தமான இலக்கியக் கோட்பாடு வைத்திருப்பவர்களுக்கு ஓட்டலில் தோசை ஆர்டர் சொல்வதைத்தவிர வேறு எதையும் புரிகிற மாதிரி எங்கேயும் பேச வராது. சினிமாகாரர்களிடம் குழையப் பெரிய பேச்சாற்றல் தேவை இல்லை போலும் ! பாடி லேங்வேஜே போதுமானதாயிருக்கலாம் ! */

https://www.facebook.com/gnani.sankaran?hc_location=timeline

மேலே சொன்னது எழுத்தாளர் ஞாநி தனது முக நூலில் கூறியுள்ளது. இவர் எழுத்தாளர் ஜெயமொஹனைப் பற்றிக் கூறுகிறார் என்று அறிந்துகொள்ள பெரிய பகுத்தறிவெல்லாம் தேவையில்லை. ஜெயமோகன் தனது தளத்தில் இப்படிக் கூறியிருந்தார்.

/* என் இதுவரையிலான அனுபவத்தில் நான் பேசிய ஏழெட்டு தேசத்து அரங்குகளில் மிகமிகக் உதாசீனமான அரங்கு ஈரோட்டில் சந்தித்ததுதான். அவர்களை குஷிப்படுத்த என்னால் முடியவில்லை. அவர்கள் தங்களைக் குஷிப்படுத்தாத எதையும் கேட்கத் தயாராகவும் இல்லை. உண்மையில் ஈரோட்டில் நான் அவமதிக்கப்பட்டேன். எனக்கு அத்தகைய அவமதிப்பு அதுவே முதல்முறை. */

http://www.jeyamohan.in/?p=38510

தமிழ் எழுத்தாளர்கள் அடித்துக்கொள்வது அவர்கள் ரத்தத்தில் உள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் தற்போது ஞாநி ஐரோப்பாவில் இருக்கிறார். சென்ற வாரம் சென்னையில் இஸ்லாமிய அமெரிக்கப் பெண்ணியலாளர் பேசுவதற்கு சென்னைப் பல்கலையில் அனுமதி மறுக்கப்பட்டதைப் பற்றி எந்த ஞாநவான்களும் பேசவில்லை.

ஜெயமோகன் இலக்கியவாதி. அவர் இதுபற்றிப்  பேசாதது ஆச்சரியம் இல்லை. ஆனால் எழுத்துப்போராளி ஞாநி, சாதிய மறுப்பாளர், இந்துத்துவாவிடமிருந்து தமிழகத்தைக் காக்க எழுதித் தள்ளுபவர், இளவரசன் கொலை வழக்கில் வெகுண்டெழுந்து முதல்வருக்குக் கடிதமெல்லாம் எழுதியவர், கூடங்குளப் போராளி — இப்படிப் பல போராட்டங்களுக்கு அடையாளம் அளித்தவர் சென்னைப் பல்கலை பற்றிப் பேசாதது வருத்தம் தான்.

இஸ்லாமியரைப் பகைத்துக்கொள்வது வேண்டாம் என்று கலைஞர் மௌனியாக இருப்பது ஊர் அறிந்ததே. அது தான் பகுத்தறிவு. ஆனால் முற்போக்குச் சிந்தனையாளர் பலர் மத்தியில் கள் எதிர்ப்பு முதலிய நல்ல விஷயங்களுக்குக் குரல் கொடுக்கும் ஞாநி பேசாதது எனக்கு வருத்தமே.

கூடும் குளம் ..

கடைசியாக நல்லது நடந்துள்ளது.  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் கூடங்குளத்திற்கு ஒரு வழி பிறந்துள்ளது.  இனி அடுத்தபடியாக மின் உற்பத்தி துவங்க எல்லாப் பணிகளையும் செய்ய வேண்டியது தான்.

இதில் நாம் கவனிக்க வேண்டியுள்ளது சிலது உண்டு.

மக்கள் போராட்டம் என்றார்கள். உலகம் தழுவிய அணு உலை எதிர்ப்பு என்றார்கள். மீனவர் போராட்டம் என்றார்கள். தமிழகத்தில் வேலை இழந்த அரசியல்வாதிகள் பலர் களத்தில் குதித்துப் பேர் வாங்கினார்கள்.செய்திகளில் இடம் பெற்றார்கள்.

உதயகுமார் என்பவர் உதயம் ஆனார். பெரும் புகழ் பெற்றார். வெளிநாட்டுப் பணமும் குவிந்தது. விசாரணையும் வந்தது. விரைவில் அரசியலிலும் குதிப்பார். நல்ல எதிர்காலம் உள்ளது.

விஷயத்திற்கு வருவோம்.

இந்த விஷயத்தில் தமிழ் எழுத்தாளர்களின் நிலையைப் பார்ப்போம். அது என்னமோ தெரியவில்லை தமிழ் எழுத்தாளர் என்ற உடனேயே அவர்களுக்கு மின் பொறியியல் முதல் அணு இயற்பியல் வரை எல்லாமும் தெரிந்து விடுகிறது. எடுத்த உடனேயே எதிர்ப்பு என்று கிளம்பித் தங்கள் “முற்போக்கு”த் தனத்தைக் காண்பிக்கவேண்டிய ஒரு கட்டாயாத்தில் இருக்கிறார்கள் போலே. பேசுவதும் எழுதுவதும் இதைப்பற்றித்தான்.

ஒரு சிலர் உதயகுமாருடன் கூட்டணி சேர்ந்துகொண்டு பக்கம் பக்கமாக எழுதித் தள்ளினார்கள். இந்தியாவில் அணு ஆராய்ச்சி நிறுவனம் என்று ஒன்று உள்ளது. கல்பாக்கம், மும்பை, ராஜஸ்தான், கைகா என்று பல இடங்களிலும் வெற்றிகரமாக அணு உலைகளை இயக்கி வருகிறார்கள். அணு ஆயுதம் கூட செய்து பரிசோதித்துவிட்டார்கள்.  இந்த அணு விஞ்ஞானிகள் மேல் நம்பிக்கை இல்லை. உதயகுமாரைத் தூண்டும் பாதிரியார்கள் மேல் உள்ள நம்பிக்கை கூட நமது பொறியாளர்கள் மேல் இல்லை.

விலை போகாத அரசியல்வாதிகளும் பொழுது போகாத சமூக ஆர்வலர்களும் தங்கள் கூட்டம் குறைவதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத பாதிரியார்களும் வெளி நாடுகளிலிருந்து பணம் பெரும் அவர் தம் அரசு சாரா சமூக இயக்கங்களும் சேர்ந்து அடித்த கூத்து சொல்லி மாளாது.

நமது எழுத்தாளர்களுக்குக் கேட்கவா வேண்டும். இறங்கினார்கள் களத்தில். பத்திரிகைதோறும் பேட்டிகள். யுரேனியம் முதல் தோரியம் வரை ப்ளுடோனியும் முதல் டைடானியம் வரை ந்யூட்ரோன் முதல் போசித்ரோன் வரை இனி ஒன்று பாக்கி இல்லை. ஹிக்ஸ் பொசன் துகள் தப்பித்தது. ஏனென்றால் அது தற்போதுதான் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தனையும் நம் தமிழ் எழுத்தாளர்கள் வாயில் விழுந்து புறப்பட்டன. யுரேனியம் தாசன் என்று பெயர் வைத்துக்கொள்ளாத குறை தான். ஒரே அமர்க்களம்.

நான்கு ஐந்து ஆண்டுகள் படித்து அறிந்து, பல ஆண்டுகள் பணிபுரிந்து அனுபவம் பெற்ற அணு ஆராய்ச்சியாளர்கள் வாயடைத்து நின்றார்கள். தமிழ் எழுத்தாளர்களுக்கு இவ்வளவு அறிவா? நாம் இவ்வளவு ஆண்டுகள் கற்றதை இவர்கள் ஒரே மாதத்தில் பேசுகிறார்களே என்று. நல்ல வேளை  இவர்கள்  நம்முடன் போட்டித்தேர்வு எழுதவில்லை. இருந்தால் நமக்கு இந்த வேலை கிடைத்திருக்காது என்று உள்ளூர பயந்து போனார்கள்.

எத்தனை பேர் வந்து ஆறுதல் சொன்னாலும் ஒத்துக்கொள்ளவில்லை இந்த வாயடி வீணர்கள் – மன்னிக்கவும் – தமிழ் எழுத்தாளர்கள். முன்னாள் குடியரசுத்தலைவர் கலாம் வந்து சொன்னாலும் கேட்கவில்லை. பொக்ரானில் அணுகுண்டு வெடித்த விஞ்ஞானிகள் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்று ஒரே பிடிவாதம். எங்கள் பகுத்தறிவுக்கு முன்னர் உங்கள் விஞ்ஞான அறிவு எம்மாத்திரம் என்று எழுதித் தள்ளினார்கள்.

ஜப்பானின் அணு உலை நாற்பது ஆண்டு கால பழமை வாய்ந்தது. அதன் குளிர்விக்கும் வசதிகள் குறைவு. ஆனால் கூடங்குளத்தில் மூன்று அடுக்கு குளிர்விக்கும் வசதி உள்ளது என்று பெரியவர்கள், அறிந்தவர்கள் எடுத்துக்கூறினார்கள். கேட்பார்களா தமிழ் எழுத்தாளர்கள் ?

இவர்களுக்கு ஆதரவாக சில விஞ்ஞானிகளும் இருந்தனர் என்பதும் உண்மை. அவர்கள் கருத்துக்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு பதில் அளிக்கப்பட்டன  என்றாலும் தொடர்ந்து கூச்சல். வழக்கு போட்டார்கள். முடிந்தவரை தாமதப் படுத்தினார்கள்.

இறுதியில் உச்சநீதிமன்றம் கூடங்குளம் சரி என்றது. உடனே அதையும் எதிர்த்தார்கள். காவிரி பிரச்சினையில் உச்சநீதி மன்ற ஆணையை கர்நாடகம் கேட்க வேண்டும் ஆனால் கூடங்குளம் விஷயத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தேவை இல்லை. என்ன பகுத்தறிவோ , அந்த இயற்கைக்கே வெளிச்சம்.

இதில் நான் மிகவும் மதிக்கும் திரு.ஞாநி அவர்களும் இருப்பது மனதிற்கு ஒரு சங்கடமே. இருபது ஆண்டுகளாக இந்த அணு உலை வேண்டாம் என்று கூறிப் போராடிவருகிறார் அவர். அவரது எதிரப்பில் ஒரு அறம் இருந்தது. ஆனால் கடைசியில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு சரி என்றவுடன் நீதிக்குத் தலை வணங்கி விலகியிருக்க வேண்டும் அவர். ஆனால் இந்தியாவையும் சீனாவையும் ஒப்பிட்டு அவர் பேசியுள்ளது சரியில்லை. சீனாவில் மக்கள் கருத்துக்கு மதிப்பளித்து அணு உலையைக் கைவிட்டார்களாம். இந்தியாவில் மக்கள் கருத்துக்கு மதிப்பில்லையாம். 1989ல் தியானான்மென் சதுக்கத்தில் மக்கள் குரலுக்கு மதிப்பளித்து அரசாங்கம்  பீரங்கி வடிவில் பூக்கொத்துக்களை அனுப்பியதா என்ன?

மக்களாட்சி தான். ஆனால் அதில் ஒரு மாண்பு வேண்டும். எதிர் கருத்தில் நியாயம் இருப்பின் ஒத்துக்கொளல் வேண்டும். நீதி மன்றம் செல்வோம் ஆனால் நீதி எனக்கு சாதகமாக இல்லை என்றால் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்பது என்ன நாகரீகம் ?

அணு உலை வேண்டாம் தான். நெய்வேலி அனல் மின் நிலையம் கூட புவி வெப்பத்திற்குக் கேடு தான். நிறுத்திவிடலாமா ? விண்வெளிப் பயணம் ஆபத்தானது தான். நிறுத்திவிடலாமா? மாசில்லாத மாற்று மின் உற்பத்தி தேவையான அளவில் அமையும்வரை அணுவைப் பயன் படுத்துவது பகுத்தறிவு.

மீனவர் மீதும் இந்தியர் மீதும் சுற்றுப்புறம் மீதும் மீனவர் சமுதாயத்தைச் சார்ந்த மதிப்புக்குரிய கலாம் அவர்களுக்கு இல்லாத அக்கறை, மதம் மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ள சில பாதிரியார்களுக்குத் தான்  உள்ளது என்று சுய அறிவை அடகு வைத்துவிட்டு நம்ப நான் ஈரோட்டுப் பாசறையில் பயின்றவன் அல்லன்.

அறியப்படாத தமிழகம் – தொ.ப.

சில புத்தகங்கள் அட்டைப்படம் நளினமாக இருக்கும். உள்ளே சரக்கிருக்காது. சில நேர் மாறாக சரக்குடன் ஆயினும் நேர்த்தியாக அமையாது.

ஆனால் அமைப்பு ரீதியாகவும் கருத்தாக்க ரீதியாகவும் என்னைப் பல வகையிலும் பாதித்த எழுத்துக்கள் மிகச் சிலதே. அதுவும் தமிழில் அப்படி எழுதுவதும் எழுதுபவரும் அருகியுள்ள காலம் இது.

இந்தச் சூழலில் என்னைப் புரட்டிப்போட்ட ஒரு எழுத்தாளர் ஆங்கிலத்தில் அருண் சௌரி. தமிழில் தற்போது ஜெயமோகன் மற்றும் தொ.ப. என்றும அழைக்கப்படும் தொ.பரமசிவன்.

தொ.ப. எழுதியுள்ளது கதை அல்ல, கட்டுரை அல்ல, நாவல் அல்ல, சிறுகதை அல்ல. இவை எதுவும் அல்ல.

அவர் எழுதியுள்ளது நமது ஜாதகம், நமது பூர்விகம்.

நாம் யார், எப்படி இருந்தோம் என்பதை இலக்கியச் சான்றுகளுடனும், ஆராய்ச்சிச் சான்றுடனும் ஆணி அடித்தாற்போல் சொல்லியுள்ளார்.

நூல் எங்கும் வள வள , வழ வழ இல்லை. போலி டாம்பிகங்கள் இல்லை. சுய படாடோபம் இல்லை. வெற்று வார்த்தை இல்லை.

அளந்த. அளவறிந்த சொற்கள். தேவையான அளவு சான்றுகள். மேற்கோள்களும் அப்படியே. அளவாக எழுதுவது தமிழ் எழுத்தாளர்களுக்கு வராத ஒன்று சுஜாதாவைத் தவிர.   தொ.ப.விற்கு வருகிறது.

தமிழ் ஆசிரியராகையால் அவரது பார்வை பரந்து விரிந்தது, சைவம் முதல் வைணவம் தொட்டு, சமணம், பௌத்தம், இஸ்லாமியம், கிறித்தவம் என்று விரிந்து வைணவத்தின் உட்பிரிவான வடகலை சம்பியாதாயத்தின் அடி நாதத்தையும் தொட்டுள்ளார். சேக்கிழார், நாவுக்கரசர், பெரியாழ்வார், ஆண்டாள், சங்க இலக்கியம், நன்னூல், என்று பரந்து விரிந்துள்ளது இவரது பார்வை. இருந்தும் அளவாகவே.

இவர் கூறியுள்ள பல விஷயங்கள் எனது பெரிய தந்தையார் காலஞ்சென்ற முனைவர் ராமபதிராச்சாரியார் கூறியவை என்பதால் இன்னமும் ஊக்கத்துடன் படித்தேன் – குறிப்பாக தமிழருக்குத் தாலி கிடையாது, துறவு, துறவிகள் பிச்சை எடுப்பது, பள்ளிக்கூடங்கள், ஆபத் சந்நியாசம்  முதலியன பற்றி ஏற்கெனவே அறிந்திருந்தேன். அவற்றை தொ.ப. மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழில் வரலாற்று ரீதியிலும், சமகாலப் பார்வையுடனும் சுருக்கமாக சான்றுகளுடன் வெளியே அறியப்படாத தமிழகத்தை நறுக்கென்று காட்டியுள்ளார்.

தமிழை வளர்த்தோம் என்போர் இவரது நிழலின் அருகில் கூட வர முடியாது  என்பது தெளிவு.

இரண்டு  வருத்தங்கள்  : புத்தகம் இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம். பார்ப்பனர் பயன்படுத்தும் சொற்களில் ஒரு தவறு தென்பட்டது ( அத்திம்பேர் – அத்தையின் கணவர், ஆனால் மகன் என்று குறிப்பிட்டுள்ளார் ).