அறம்- யானை டாக்டர்- ஜெயமோகன்

சின்ன வயதில் பள்ளியில் தவறு செய்யும்போது ஆசிரியர் மர நீட்டல் அளவையால் (scale ) அடித்திருக்கிறார். கொஞ்சம் வலி. அவ்வளவுதான்.

ஆனால் சாட்டையடி , பிரம்படி முதுகில் வாங்கியதில்லை.

அந்த அனுபவம் தற்போது ஏற்பட்டுள்ளது.

அடி என்றால் சும்மா விளாசு விளாசு என்று வாங்கிவிட்டார் ஆசிரியர்.

ஆம். ஜெயமோகன் தான் அந்த ஆசிரியர். தனது “அறம்” நூலின்முகமாக.

“அறம்” பல கதைகளின் தொகுப்பு. அவ்வளவும் உண்மை மனிதர்களின் கதை.

கதைகளினூடே ஒரு அறப்பண்பு இழையோடும்.

பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் அறம் சார்ந்த ஒரு சொல்லோவியம் இந்த நூல்.

சாதாரண பாஷையில் சொன்னால்” மனுஷன் கொன்னுட்டான்” எனலாம்.

பல கதைகளின் தொகுப்பே இந்நூல். நாற்பது நாட்களில் எழுதப்பட்டது இவை அனைத்தும்.

இப்படியும் கூட எழுத முடியுமா என்ற பிரமிப்பை ஏற்படுத்திய ஒரு படைப்பு. அறம் என்பது சாதாரண மனித வாழ்வில் கொள்ளும் பங்கு என்ன என்பதும் ஒவ்வொரு வகை மனிதருக்குள்ளும் இருக்கும் அறத்தின் இழை தெரிகிறது.

யானை டாக்டர் – சொல்ல வார்த்தை இல்லை. மனிதர்களால் அங்கீகரிக்கப்படாமல் யானைக்கூட்டதால் அங்கீகரிக்கப்படும் ஒரு விலங்கு மருத்துவரின் கதை. இயற்கை பற்றிய ஒரு அறிதலும் இல்லாமல் வாழும் நம் சமூகத்திற்கு ஒரு மாபெரும் சவுக்கடி இது. டாக்டர்.கே. போன்றவர்கள் இப்போதும் சமூகத்தில் பல துறைகளிலும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மனம் அழுகிறது. இந்திய அரசியலின் அழுக்குகளால் டாக்டர்.கே. உதாசீனப்படுத்தப்பட்டார்.

கோவில் யானைகளை நாம் படுத்தும் பாடு, கம்பீரமான அந்த காட்டு அரசர்களை நாம் பத்துப் பைசா உலோக நாணயம் கொடுத்து நமது கீழ்மையைக் காட்டுவது, மதச் சடங்குகளில் யானை படும் வேதனை , அவை காட்டிற்காக ஏங்கும் நிலை, மிகப் பரந்த மனதுடைய யானையின் முன் குறுகி வளைந்த நமது மனித மனம் – இப்படிப் பல அலசல்கள் நம்மை நமக்கு அடையாளம் காட்டுகின்றன ஜெயமோகனின் எழுத்தில்.

சில வரிகள் மனத்தைக் குத்தக் கூடியவை.- ” நம்ம பசங்க மாதிரி சபிக்கப்பட்ட தலைமொறை இந்தியாவிலே இருந்ததில்லை. அவுங்க முன்னாடி இன்னிக்கி நிக்கிறதல்லாம் வெறும் கட்டவுட்டு மனுஷங்க.லட்சியவாதமோ கனவோ இல்லாத போலி முகங்க… அவங்களே முன்னாலே பார்த்துகிட்டு ஒரு தலைமுறையே ஓடி வந்திட்டிருக்கு…”

( இக்கதை படிக்கும்போது எனக்கு என் பெரிய தகப்பனார் காலஞ்சென்ற முனைவர் ராமபத்திராச்சாரியார் நினைவு வந்தது. தமிழில் 18 நூல்கள் எழுதியுள்ளார். ஜாதியால் அரசாங்கத்திடமும் தமிழ் இயக்கங்களிடமும், வைணவர் என்பதால் சைவர்களிடமும், வடகலைப் பிரிவு என்பதால் தென்கலை மடங்களிடமும், தமிழ்ப் பண்டிதர், சம்பிரதாய வழிக் கல்வி கற்காமல் தமிழில் தன முயற்ச்சியால் முனைவர் பட்டம், சுயக் கல்வி இவை பெற்றதனால் வடகலை மடங்களிடமிருந்தும் அங்கீகாரமில்லாமல் வாழ்ந்து முடித்தார்.)

ஆபாசத்தையும் வசவுகளையுமே இலக்கியம் என்று கருதும் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் அறம் சார்ந்து எழுதியுள்ள ஆசிரியரின் பார்வை ஆச்சரியப்பட வைக்கிறது.

“அறம்” தொகுப்பில் மற்ற கதைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

தொடர்ந்து வாசிப்போம்.

ஞாநி-யின் சந்நிதியில் ..

எழுத்தாளர் ஞாநி யுடன் ஒரு கலந்துரையாடலுடன்  இந்த மாத வாசகர் வட்டம் நடைபெற்றது சிங்கப்பூர் அங் மோ கியோ நூலகத்தில்.

பல கருத்துக்கள் மடை திறந்த வெள்ளம் போல் , எந்த வித தங்கு தடையும் இன்றி பரிமாறிக்கொள்ளப்பட்டன.

திருமதி.சித்ரா நமது வாழ்வில் பல சமயம் பல விட்டுக்கொடுத்தல்களையும் சமாதானங்களையும் ஏற்றுக்கொள்வதால் நமது வாழ்வை முழுமையாகவும் உண்மையாகவும் வாழ்கிறோமா என்று ஒரு ஆழ்ந்த தத்துவங்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு வினா எழுப்பினார்.

மார்சிய சுவை ததும்ப ஒரு நண்பர் சில அமைப்புகளையும் அவர் சார்ந்த சமுதாயக் கட்டுக்கோப்புகளையும் உடைக்க வழி தேடும் விதமாக உணர்ச்சி பூர்வமாகக் கேள்வி எழுப்பினார்.

ஆன்மீகம் முதல், குடும்ப வாழ்க்கை, பெண் விடுதலை, ஆண் பெண் உறவு முறைகள், தமிழ் எழுத்தாளர் பற்றிய பதிவுகள், பாரதியார், பாரதிதாசன்,தமிழ்த் திரைப்பட உலகம் என்று பல விஷயங்கள் பேசப்பட்டன.

ஞாநி இருக்கும் போது அரசியல் இல்லாமல் இருக்குமா ? அணு உலை, கூடங்குளம், தமிழ் நாட்டு ஆட்சிகள் பற்றிய மதிப்புரைகள் இவை பற்றியும் பல கேள்விகள் அதற்க்கான அவரது பதில்கள் அதற்க்கு எங்கள் மறுப்புகள் அவற்றிற்கு அவரது பதிலுரைகள் – எல்லாம் சூடாகவும் அதே சமயம் சுவையாகவும் நிகழ்ந்தன. பதினைந்து நாள் நாராயணசாமியும் இடம் பெற்றார் – அவர் பேச்சில்.

செய்தி ஊடகங்கள்,அவற்றின் ஜெயலலிதா பற்றிய பார்வை, கலைஞர் இவற்றைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது — இவையும் பேசப்பட்டன. வழக்கம் போல் வெளிப்படையான பேச்சு – ஞாநியின் தனிமுத்திரை.

கூடங்குளம் பற்றி இந்திய ரஷிய ஒப்பந்தங்கள், தற்போதைய மின்சாரத் தட்டுப்பாடு சூழ்நிலையில் கூடங்குளம் அணு உலையின் தேவை பற்றி நான் கேள்வி எழுப்பி இருந்தேன்.அவரது பதில் வழக்கம் போல் வெளிப்படை. இருந்தும் அவரது இந்தக் கருத்தில் உடன்பாடு இல்லை. இருந்தாலும் இந்த விஷயத்தில் அவரது உறுதியும், தொடர்ந்த அவரது போராட்டங்களும் தெரிந்துகொண்டேன்.

சாதி பற்றியும், இட ஒதுக்கீடு மற்றும் மதம் பற்றியும் சில கேள்விகள். அவற்றுக்கும் தெளிவான பதில் அவரிடம். இவை பற்றிய அவரது கருத்துக்கள் சுவை. ஞாநி என்ற அவரது புனைப்பெயர் பற்றிக் கேட்டிருந்தேன்.சுவையான பதில் அவரிடம் – ஞானத்தைத் தேடுவதால்  வைத்துக்கொண்ட பெயர் என்றார்.

திருமதி சித்ரா, திரு.ரமேஷ்,  திரு ராமன், திரு.ஷானவாஸ், திரு.ஆனந்த், திருமதி அழகு நிலா, திருமதி பாரதி , திரு.ரங்கப்ரசாத் மற்றும் பல வாசக வட்ட அன்பர்கள் பங்குபெற்றனர்.

எந்தத் தலைப்புமே இல்லாமல் எல்லாத் தலைப்புகள் பற்றியும் பேசிவிட்டோம் என்ற  ஞாநியின்  முத்தாய்ப்புடன் கலந்துரையாடல் இனிதே நிறைவு அடைந்தது.

%d bloggers like this: