ராமானுஜ தாஸி ? வாசகர் கேள்வி

ஒரு வாசகர் ‘வைணவத்தில் தாசி என்கிற பிரயோகம் உண்டா ? ராமானுஜ தாஸன் என்று ஆண்கள் சொலும் போது, வைணவப் பெண்கள் ராமானுஜ தாசி என்று எப்படிக் கூறுவது ? சங்கடமாக உள்ளது. இது குறித்து ஒரு மடாதிபதியிடம் கேட்டதற்கு ‘தாசி’ என்பதே சரியானது என்று சொன்னார்’ என்று கேட்டிருந்தார்.

‘தாஸ்ய நாமம்’ என்பது வைணவத்தில் பிரபலமான ஒன்று. ‘பஞ்ச சம்ஸ்காரம்’ முடிந்த ஒரு வைணவன் தாஸ்ய நாமம் பெறுகிறான். பஞ்ச சம்ஸ்காரம் என்பது என்ன ?

பெருமாளின் சங்கு சக்கர முத்திரைகளைத் தம் தோளில் தரித்துக்கொள்ளுதல், பெருமாளின் பாதங்களைத் தம் நெற்றியில் சாற்றிக் கொள்ளுதல், பகவானுடைய தாசன் என்று தன் பெயரை மாற்றிக் கொள்ளுதல், குரு முகமாக அஷ்டாட்ஷர மந்திரம் ( ஓம் நமோ நாராயணாய ), த்வயம் , சரமசுலோகம் என்று அறிந்து கொள்ளுதல், குருவிடமிருந்து ஆராதனைக்கு சாளக்கிராமம் பெற்றுக்கொள்ளுதல் – இவையே பஞ்ச சம்ஸ்காரம் என்பது. ஒருவகையான நார்மலைசேஷன் (Normalization) போன்ற ஒரு ஏற்பாடு.

ஆக, தாஸ்ய நாமம் என்பது பஞ்ச சம்ஸ்காரத்தில் முக்கியமான ஒன்று. ‘ராமானுஜ தாஸன்’ என்று பெயர் பெறுவது பெரும்பாலும் வழக்கம். ஏன் இந்தப் பெயர் மாற்றம் வேண்டும் ?

வைணவத்தில் இணைந்தபின் அவரவரது பழைய குலங்களை மறந்து விட்டு அனைவரும் வைணவரே என்ற ஒரே குடையின் கீழ் அமைய வேண்டும் என்னும் உயரிய எண்ணமே இராமானுசரை இந்த வழக்கங்களைத் தோற்றுவிக்கத் தூண்டியது என்று கருதலாம். இருப்பினும் இவ்வழக்கம் இராமானுசருக்கு முன்னரே இருந்ததற்கான ஆதாரங்களும் தென்படுகின்றன.

பெரியாழ்வார்  பாசுரம் ஒன்று பின்வருமாறு :

“அண்டக் குலத்துக் கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டக் குலத்தை எடுத்துக்களைந்த இருடிகேசன் தனக்கு
தொண்டக் குலத்திலுள்ளீர் ! அடிதொழுது ஆயிரம் நாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்த்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே”

‘உங்கள் பழைய குலத்தை விட்டு இன்று தொண்டர் குலத்தில் ஒன்று கூடி, நாராயணனுக்குப் பல்லாண்டு பாடுவோம்’ என்னும் பொருள் பட அமைகிறது இப்பாசுரம்.

தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் இப்படிச் சொல்கிறார்:

“..இழிகுலத்தவர்களேனும் எம்மடியாராகில்
தொழுமினீர் கொடுமின் கொண்மின் …”

நம்மாழ்வார் பாசுரம் ஒன்று பின்வருமாறு :

“குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து, எத்தனை
நலந்தா னிலாதசண் டாளசண் டாளர்க ளாகிலும்
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்றுள்
கலந்தார் அடியார் தம்மடி யாரெம் அடிகளே”

“சாதிகள் அனைத்திலும் கீழானதிலும் எந்த நன்மையையும் இல்லாத சண்டாளர் சாதியில் பிறந்து அவர்களில் இழிந்த சண்டாளராக இருந்தாலும், வலக்கையில் சக்கரம் ஏந்தியுள்ள திருமாலின் அடியவர் என்று அறிந்தால் அவரின் அடியாரின் அடியார் யாரோ அவருக்கு நான் அடிமை,” என்று கூறுகிறார்.

ஆக, பேதங்களற்ற ஒரு சம தர்ம சமுதாயத்தை உருவாக்குவதில் வைணவம் முன்னின்றிருக்கிறது என்பது தெரிகிறது.

எனவே, பாசுரங்களின் படி ஆண் பெண் பேதம் இல்லை என்பது புரிகிறது. ஆகையால் தாசி என்று அழைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் பெண்களுக்கு இல்லை, தாஸன் என்றே சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

தத்துவ ரீதியாகப் பார்ப்போம் :

விஸிஷ்டாத்வைதத்தில் மூன்று உண்மைகள் உண்டு. ஜீவாத்மா, பரமாத்மா, ஜடப்பொருள் மூன்றும் உண்மைகளே. ஜடப்பொருளையும், பரமாத்மாவையும் விடுத்துப் பார்த்தால், ஜீவாத்மாக்களுக்குள் வேறுபாடுகள் இருக்க முடியாது. ஆத்மா அளவில் ஆண், பெண் வேறுபாடு இல்லை என்பதே நாம் காண்பது. வீடு பேறு பெற்றுச் செல்லும் போது கூட, விரஜா நதியில் நீராடி எழுந்தபின், ஆண், பெண் இருபாலருக்கும் ஒரே மாதிரியான திவ்ய ஸ்வரூபங்களே கிடைப்பதாக நம்பப்டுகிறது. எனவே, இங்கும் ஆண், பெண் வேறுபாடு இல்லை என்றே நான் நினைக்கிறேன்.

ஆக, வைணவ சித்தாந்தத்தில், இராமானுஜ தாஸி என்று சொல்வதற்குப் பதில் இராமானுஜ தாஸன் என்றே பெண்கள் சொல்லலாம் என்பது என் கருத்து.

‘நாயக-நாயகி பாவம்’ என்னும் ஒரு அணுகுமுறை வைணவத்தில் உள்ளது. ஆழ்வார்கள் ஆண்களாக இருந்தாலும் தங்களைப் பெண்களாகப் பாவித்துக்கொண்டும், நாராயணனைக் காதலனாக வரித்துக்கொண்டு தாபத்தில் பாடுவது போன்று அமைந்துள்ள பாடல்கள் ஏராளம். திருமங்கையாழ்வார் தன்னைப் பரகால நாயகி என்னும் பெயருடைய பெண்ணாகவும், நம்மாழ்வார் தன்னைப் பராங்குச நாயகி என்னும் பெயருடைய பெண்ணாகவும் பாவித்துக்கொண்டு நாராயணனைச் சென்றடைய வேண்டி வண்டு முதலியனவற்றைத் தூது விட்டுப் பாடுகின்றனர்.

திருநெடுந்தாண்டகத்தில் வரும் தேரழுந்தூர்ப் பாசுரத்தில் திருமங்கையாழ்வார் வண்டைத் தூது விட்டுப் பின்வருமாறு பாடுகிறார்.

‘தேமருவு பொழிலிடத்து மலாந்த போதைத் தேனதனை வாய்மடுத்துன் பெடையும் நீயும்,
பூமருவி யினி தமர்ந்து பொறியி லார்ந்த அறுகால சிறுவண்டே. தொழுதேன் உன்னை,
ஆமருவி நிரைமேய்த்த அமரர் கோமான் அணியழுந்தூர் நின்றானுக் கின்றே சென்று,
நீமருவி யஞ்சாதே நின்றோர் மாது நின்நயந்தாள் என்றிறையே இயம்பிக் காணே’

வைணவத்தில் இறைவனை மட்டுமே புருஷனாகவும் மற்ற அனைவரும் பெண்களே என்னும் ஒரு பார்வையும் உண்டு. ஆக, வைணவ ஆண்களும் பெண்களே !

மாற்றுக் கருத்துக்கள் இருப்பின், தெரியப்படுத்துங்கள்.

%d bloggers like this: