கும்பகோணம் டு அமெரிக்கா – காஃபி வழிப் பார்வை

கல்யாணத்துக்குப் பார்க்கிற போது ‘பையனுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்ல. ஆனா, காஃபி மட்டும் ஒரு வேளை, ஒரே ஒரு வேளை தான் சாப்பிடுவான்’ என்று தயங்கித் தயங்கிச் சொன்ன காலம் நினைவில் உள்ளது. தற்போது காஃபிக்குப் பதில் வேறு பானம். 

‘கும்பகோணம் டிகிரி’ என்கிற வஸ்து இன்று லோக பிரசித்தமாயிருக்கிறது. 

எங்கே பார்த்தாலும் ‘கும்பகோணம் டிகிரி’ தான். 

சென்னையில் இருந்து எந்த ஊருக்குச் சென்றாலும் நூறு மீட்டருக்கு ஒன்றாக ‘டிகிரி’ நிற்கிறது. 

அதென்ன ஸ்வாமி, புது டிகிரியாக இருக்கிறதே என்று பல கல்லூரிகளிலும் கேட்டுப் பார்த்தேன். யாரும் அப்படியெல்லாம் டிகிரி தருவதில்லை என்று சொன்னார்கள். அரசியல்வாதி தனக்குத் தானே டாக்டர் பட்டம் வழங்குவது போல, நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் டிகிரிபோல என்று நினைத்தேன். 

பின்னர் தான் தெரிந்தது.  பீபரி காஃபி, ஏ-கொட்டை காஃபி என்கிற காலமெல்லாம் போய், இப்போது ‘கும்பகோணம் டிகிரி’ காஃபி என்கிற ஸ்திதி நடந்துவருகிறதாம். கலியுகாப்தம் என்பது போல் ‘கும்பகோண டிகிரி’யுகாப்தம் என்று பஞ்சாங்கத்தில் போடலாம் போல. எங்கும் ‘கும்பகோணம் டிகிரி’.

காஃபிக்கும் கும்பகோணத்துக்கும் என்ன சம்பந்தம் என்றால் ஒன்றும் இல்லை. கும்பகோணத்தில் காஃபி விளைவதில்லை. காஃபி எஸ்டேட் ஓனர்கள் கும்பகோணத்தில் இல்லை. கும்பகோணத்தில் பஞ்சாமி ஐயர் என்னும் பிராமணர் காஃபி கிளப் வைத்து நல்ல காஃபி போட்டுக் கொடுத்திருக்கிறார். அது ஒரு ‘தரம்’ என்பதால், கும்பகோணம் ஐயர் டிகிரி காஃபி என்று துவங்கி, இப்போது நாம் ஜாதியை ஒழித்துவிட்டதால், கும்பகோணம் டிகிரி காஃபி என்று சுருங்கிவிட்டிருக்கிறது – தேசிகாச்சாரியார் ரோடு தற்போது தேசிகா ரோடு என்று ஆனதால் ஜாதி ஒழிந்தது போல. (டாக்டர்.நாயர் ரோடு பற்றி நினைக்காதீர்கள். திராவிடமாடல் போல குழப்பம் தான் மிஞ்சும்).

எது எப்படியோ, காஃபி விஷயத்திற்கு வருவோம். சில கேள்விகள் எழுந்தன. சமூக ஊடக வெளியில் உள்ள அறிவார்ந்த ஞானிகளிடம் கேட்டுவிடலாம் என்கிற எண்ணத்தில் சிலவற்றைப் பிரஸ்தாபிக்கிறேன். தேவரீர் தயை கூர்ந்து உத்தரம் கடாக்ஷித்தருளவேணும்.

1. கும்பகோணம் டிகிரி காஃபியைத் திருநெல்வேலிக்காரர் போட்டால் அதே ‘டிகிரி’ எஃபக்ட் வருமா ? 

2. கும்பகோணம் டிகிரி காஃபியைக் கும்பகோணம் ஐயங்கார், மத்வர், சோழியர்  போட்டால் அதே ‘டிகிரி’ எஃபக்ட் வருமா ? 

3. கும்பகோணம் டிகிரி காஃபி போட கும்பகோணத்தில் ஏதாவது டிகிரி வாசித்திருக்க வேண்டுமா ? 

4. கும்பகோணம் டிகிரி காஃபி என்று மதுரை சோழவந்தானில் ஒரு ஸ்தாபனம் உள்ளது. இடம் மாறினால் டிகிரியும் மாறுமா ? 

5. கும்பகோணம் தவிர, வேறு எங்கும் காஃபி போடுவதில்லையா ? 

6. ஸ்டார்பக்ஸ் கம்பெனிக்காரன் போடும் காஃபி கும்பகோணம் டிகிரி காஃபி ஸ்தானத்தைப் பிடிக்குமா? அல்லது அதை விட உயர்ந்ததா ? ஏனென்றால், வெள்ளைக்காரன் சொன்னால் தான் உண்மை என்று பஹுத்-அறிவில் நாம் தெரிந்துகொண்டுள்ளோம் அல்லவா ?

7. கப்புசினோ, காஃபே லாட்டே என்றெல்லாம் குழப்புகிறார்கள். இதெல்லாம் என்ன சங்கதிகள் ? ‘ஏகம் ஸத். விப்ர: பஹுதா வதந்தி’  போல பிரும்மமாகக் கும்பகோணம் டிகிரி காஃபி இருக்கிறது, அதனை அறிந்தவர்கள் கப்புசினோ, காஃபே லாட்டே என்று பலவாறாகக் கூறுகிறார்கள் என்று கொள்ளலாமா ? 

8. சிங்கப்பூர், மலேசியாவில் கோபி சி பொபொ, கோபி ஓ கொசோங், கோபி ஓ என்ற பல அவதாரங்களும் கும்பகோணத்தில் இருந்து எத்தனை டிகிரி ? அல்லது, 7-வது பார்வை போல் அல்லாமல் 8-வதாக அஷ்டகோணல் காஃபி என்று கொள்வதா ? 

மேற்சொன்னவை தவிர்த்து, கல்யாணக் காஃபி என்றொரு அவதாரம் உண்டு. அதற்கும் காஃபிக்கும் ஸ்நானப்ராப்தி இல்லாமல், காஃபியை ஆற்றினால் டிகாக்ஷன்  தனியாகவும், வெந்நீர் தனியாகவும் தெரிந்து த்வைத தரிசனத்தை முன்னிறுத்தும் வகையில் அமைந்திருக்கும் வஸ்து கல்யாணக் காஃபி.  

அத்வைதக் காஃபி பற்றி தெரியாதவர்கள் கொஞ்சம் அமெரிக்கா சென்றுவரலாம். பால் என்கிற கலப்பே இல்லாமல், வெறும் காஃபித் தண்ணியை லிட்டர் லிட்டராகக் குடிக்கிறார்கள். பரம்பொருள் இரண்டற்றது என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள். ஒரு படி காஃபியைக் கொண்டு வந்து, மீட்டிங் முழுவதும் உறிஞ்சிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு வேளை அவர்களுக்கான அத்வைத நிலை அதுதான் போல என்று எண்ணியதுண்டு. 

விசேஷமாக, அமெரிக்காவில் de-caffeinated coffee என்றொரு பதார்த்தம் கண்டேன். காஃபின் இல்லாத காஃபியாம். பரம்பொருள் தன்மை இல்லாத பரம்பொருள் என்பது என்ன என்பதைப் பற்றி எண்ணிப்பார்த்துக் கைவிட்டதுண்டு. காஃபின் இல்லாத காஃபி குடிப்பதற்குப் பதில் வெந்நீர் குடித்தால் போதாதா ? என்ன லாஜிக் என்று அப்போது புரியவில்லை. ஜனநாயகம் இல்லாத பாகிஸ்தானுக்கு உதவி, ஜன நாயக நாடான பாரதத்தை உதாசீனப்படுத்தி, ஜன நாயகம் பற்றி உலகிற்குப் பாடம் எடுப்பது என்ன அமெரிக்க லாஜிக்கோ, அதே லாஜிக் தான் காஃபின் இல்லாத காஃபி குடிப்பது என்று புரிய சற்று நேரம் ஆனது.

கும்பகோணத்தில் ஆரம்பித்து, அமெரிக்காவில் நிற்கிறோம். ஏதோ குறியீடு போல தோன்றுகிறதா ? நிதர்ஸனமும் அது தானே ?

ரெண்டாம் டிகாக்ஷன் காஃபிக்கு இன்னொரு பெயர் உண்டு. கப-சுர-குடிநீர். அதுவும் பழம்பால் காஃபியும், காஃபி வகையறாவில் சேர்த்தி இல்லை.  ஜாதிப்ரஷ்டம்  ஆனவை.  

கல்யாணத்துக்குப் பார்க்கிற போது ‘பையனுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்ல. ஆனா, காஃபி மட்டும் ஒரு வேளை, ஒரே ஒரு வேளை தான் சாப்பிடுவான்’ என்று தயங்கித் தயங்கிச் சொன்ன காலம் நினைவில் உள்ளது. தற்போது காஃபிக்குப் பதில் வேறு பானம்.  சோஷியல் ட்ரிங்கிங் என்கிறார்கள். அந்தப் பழக்கம் இல்லாத பையனை ‘அம்மாஞ்சி’, ‘மடிசிஞ்சி’ என்று வகைப்படுத்தி, ‘பையன் ஃபார்வர்டு திங்கிங் இல்ல போல்ருக்கே’ என்கிறார்கள். ஃபார்வேர்டு கம்யூனிட்டி என்று பீத்தல் வேறு. நிற்க.   

ரயிலில் ‘டீ-காஃபி டீ-காஃபி டீ-காஃபி’ என்கிற பானம் விற்கப்படுவது நீங்கள் அறிந்ததே. சந்தியாவந்தனத்தில் ( அப்படி ஒன்று இருந்தது)  ஆசமனம் செய்யப் பயன்படுத்தும் நீரின் அளவே இருக்கும் அந்த ‘டீ-காஃபி டீ-காஃபி டீ-காஃபி’, டீயா காஃபியா என்று ஆராயப் புகுவது வியர்த்தம்.  இந்த ஆராய்ச்சிக்குப் பதிலாக ‘கருணைக்கடல் மாமன்னர் ஔரங்கசீப்பின் மத நல்லிணக்கம்’ பற்றி நூறு பக்கக் கட்டுரை ஒன்றை எழுதிவிடலாம்.

தேவன் கதைகளில் ‘கள்ளிச் சொட்டு காஃபி’ என்றொரு வஸ்து வருவதுண்டு. அடுத்த வேளை சாப்பிடுகிற வரை நாக்கை விட்டு நீங்காமல் இருக்குமாம். அவ்வகையான காஃபி மாயூரம் காளியாகுடியில் கிடைத்ததுண்டு. தற்போது அவ்விடத்திலும் ரயில் காஃபிதான். 

சமீபத்தில் சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் ஒரு கும்பகோணம் டிகிரி நின்றது. நப்பாசையில் இறங்கினேன். 80களில் நெய்வேலியில் மழை பெய்த பின் பழைய சைக்கிள் டயர்களில் தேங்கியிருக்கும் மழை நீரின் வாசனையை உணர வைத்தது அந்தக் கும்பகோணம் டிகிரி. ‘சைக்கிள் டயர் காஃபி’ என்று பெயர் வைத்திருக்கலாம். 

வாசித்தவுடன் கொஞ்சம் குழப்பமாக இருக்கலாம். கவலையை விடுங்கள். காலாற நடந்து ஒரு கும்பகோணம் டிகிரி காஃபி சாப்பிட்டு மீண்டும் வாசியுங்கள்.  உங்கள் ‘கும்பகோணம் டிகிரி’ அனுபவம் குறித்து எழுதுங்கள். பயன்படும்.

—ஆமருவி

காஃபி விருத்தாந்தம் பற்றிய ஒரு வியாசம் எனது ‘நெய்வேலிக் கதைகள்’ நூலில் வருகிறது, தற்போதைய காலத்து எந்த வித விகாரமோ கலப்படமோ அற்ற 80களின் நெய்வேலி வாழ்க்கையின் எளிய நகைச்சுவைக் கதைகள் வாசிக்க ‘நெய்வேலிக் கதைகள்’ தொகுப்பை இங்கே வாங்கலாம். அமேஜானில் தான் வாங்குவேன் என்று அடம் பிடிப்பவர்கள் இங்கே வாங்கலாம்.

புதிய திராவிடமாடல்

‘மோதி நம்மள ரொம்ப கொழப்பிட்டாரு தலைவரே..’

‘இப்ப என்ன புதுசா ?’ 

‘நமக்கு தென்னாசிய அரிஸ்டட்டிலும், பேரறிஞர் தம்பியும் கத்துக்குடுத்த சமூக நீதி அரிச்சுவடி பிரகாரம், நாம முர்முவுக்குத் தானே ஓட்டு போடணும் ? ஆனா, ஆதிக்க சாதிக்காரருக்கு ஓட்டுப் போட வெச்சு, அதுக்கப்புறமும் ‘சமூக நீதி காத்த நொண்ணை’, ‘திராவிட மாடல் சாம்பார்’நு நாம தொடர்ந்து கொழம்பறமாதிரி வெச்சுட்டாரு பாருங்க.. அதச் சொன்னேன்’

‘இதுல கொழம்ப என்ன இருக்கு? பிராமணர்கள ஒழிக்கணும்னு சொன்னபடியே ராஜாஜி கால்ல விழுந்து ஓட்டு வாங்கினோம். பட்டியல் இனத்தக் காப்போம்னு சொல்லியே பிராமண இந்திரா காந்திய ஆதரிச்சோம். ஹிந்தி ஒழிகன்னு சொல்லி, நாம நடத்தற ஸ்கூல்கள்ல ஹிந்தி சொல்லிக்குடுத்து டப்பு பார்த்தோம். பண்டாரப் பரதேசிகள்னு சொல்லிட்டு வாய் உலர்றதுக்குள்ள பாஜகவோட 99ல கூட்டணி வெச்சோம். 2003ல மோதி நல்லவர்னு தலைவர் சொல்லி பேட்டியெல்லாம் குடுத்தாரு. ஆனா இப்ப மோதிய எதிர்க்கறோம். இதுல நமக்குக் கொழப்பமே இல்லியே..

காங்கிரசோட ஒட்டும் இல்லை உறவும் இல்லைன்னு சொன்னாரு தலைவரு. கூடா நட்பு கேடாய் முடிந்ததுன்னு சொன்னாரு. ஒடனே கூட்டணியும் வெச்சுக்கல்லியா ? கொஞ்சமாவது பகுத்தறிவோட யோசிப்பா..கொழப்பமாம் கொழப்பம்.

ஒண்ணும்மில்லையா, முரசொலி மாறன் ஆஸ்பத்திரிலயே இருந்த வரைக்கும், செலவப் பார்த்துக்கிட்டு பாஜகவோட கூட்டணில இருந்தோம். அவர் காலமான ஒடனே காங்கிரசோட போகல்லியா.. கட்சிக்கே கொழப்பம் இல்லியே, நீ ஏன் கொழம்பற?’ 

‘என்ன இருந்தாலும் முர்மு பட்டியல் பழங்குடிப் பெண். அவங்கள எதிர்த்து, உயர்சாதி மேட்டுக்குடி முன்னாள் பாஜகவுக்கு ஓட்டுப் போடும் படி செஞ்சுட்டாரே மோதி, அதையும் நாம சுயமரியாதை இல்லாம ஃபாலோ பண்றோமேன்னு கொஞ்சம் நெருடலா இருக்கு..’

‘அட போப்பா. பெட்ரோல ஜி.எஸ்.டி.ல கொண்டு வரணும்னு நம்ப எம்பி சொல்றாரு. கொண்டு வரக் கூடாதுன்னு நம்ம அமைச்சர் சொல்றாரு. ரெண்டு பேரும் ஒரே கட்சி தானே? ரெண்டு பேரும் சந்திச்சுக்கும் போது நமுட்டுச் சிரிப்பு சிரிச்சுக்கிட்டு போகல்லியா? பொழப்பு நடக்கணும்னா இதுல மானம் எல்லாம் பார்க்கக் கூடாது. முன்ன ஒண்ணு சொல்லணும். பின்ன அதையே எதிர்க்கணும். ரெண்டுமே தெரியாத மாதிரியே ஓட்டிடணும்.. புரியுதா?’ 

‘நீங்க தலைவருங்க.. முன்ன பின்ன இருக்கலாம். ஆனா, நாங்க தொண்டனுங்க இல்லியா? ஊர்ல ஒரு பயலும் மதிக்க மாட்றான்..’

‘இதப்பாரு.. அக்கா என்ன சொல்லிச்சி? நாங்க ஆட்சிக்கி வந்தா எங்க ஆளுங்க நடத்தற சாராய ஆலைய முடுவோம்னிச்சா ? ஆனா மூடினோமா? இப்ப கேட்டா நமுட்டு சிரிப்பு, பொறவு ஒரு வணக்கம். அப்டியே ஓட்டம். அது மட்டுமா? ஆட்சிக்கு வந்த ஒடனே சீட்டுல ஒக்காரறதுக்கு முன்னாடி டாஸ்மாக் ஒழிப்பு ஃபைலுல கையெழுத்துன்னு சொன்னோம். செஞ்சமா ? அதால, ரொம்ப பதட்டப்படாம இதெல்லாம் கடந்து போகும்னு பேரறிஞர் தம்பி சொன்னாருன்னு நெனைச்சுகினு போயிடு..புரியுதா ? ‘

‘புரியற மாதிரி இருக்கு.. ஆனா, வீட்டுக்காரி கூட எளக்காரமா பாக்குறா.. அதான்..’

‘இதுக்கெல்லாம் நம்ம நியூஸ்காரங்களப் பார்த்துக்கோ.. அவங்க நிம்மதியா சாப்புட்டு தூங்கல ? ஸ்டெர்லைட் விஷயத்துல மக்கள் அதிகாரம் குரூப்ப ஆதரிச்சு எழுதினாங்க, பேசினாங்க. ஏன்? அப்ப நாம ஆட்சில இல்ல. இப்ப கள்ளக்குறிச்சி விஷயத்துல அதே குரூப்புக்கு பங்கு இருக்குன்னு போலீஸ் சொல்லுது. இப்ப காதுல விழாத மாதிரி நிக்கல அவங்கள்ளாம். ஏன்? ரெண்டுக்கும் சோறு கெடைக்கறது ஒரே எடத்துல தான். அதால கம்முனு இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் இல்லாத மானம், ரோஷம் ஒனக்கு வந்திரிச்சா ? எதாவது கட்சி மாறிட்டியா என்ன?’

‘இல்லீங்க, அவங்கள்ளாம் படிச்சவங்க.. மானம் ரோசம் எல்லாம் பார்த்தா பொழப்பு நடக்குமா? ஆனா நான் அப்டி இல்லியே..’

‘இதுக்குதான் நாலு எளுத்து படின்னு சொல்றது. புரியிதா ஏன் படி படின்னு சொல்றாங்கன்னு? இந்த மாதிரி கொழம்பாம இருக்கறதுக்கு தான் எழுதப் படிக்கச் சொல்றாங்க..இது தான் #திராவிடமாடல். புரியுதா?’  

‘ஒண்ணு மட்டும் புரியுதுங்க.. சின்ஹாவோ முர்முவோ, யாருக்கு ஓட்டுப் போட்டாலும் ஒரு சங்கிக்கு மட்டுமே ஓட்டு போடறது நம்ம தலை எழுத்தா ஆயிடுச்சி பார்த்தீங்களா? இது என்ன மாடலா இருக்குமுங்க?’- ஆமருவி (www,amaruvi,in) 

%d bloggers like this: