வண்டு பாட, அன்னம் ஆட..

மன்னிய நீர் நிலைகள், அவற்றால் ஏற்பட்ட வளமான வயல்கள், தாமரை மல்கள், அவற்றில் தேன் பருகிப் பாடும் வண்டினங்கள்… #தேரழுந்தூர்.

தேரழுந்தூரின் வீதிகளில் மட்டுமே ஆடல் ஓசை கேட்கவில்லையாம். திருமங்கையாழ்வாரின் காதுகளில் வேறொரு இசையும் நாட்டியமும் கேட்கின்றனவாம்.

தேரழுந்தூரில் மிகப்பழையதான குளங்கள் உள்ளனவாம் (தற்போதும் உள்ளன). அவற்றில் மிக நெடுங்காலமாகவே நீர் நீறைந்து இருப்பதால் அருகில் உள்ள வயல்கள் வளமாக உள்ளன. குருகினங்கள், வாளை மீன்கள் முதலியனவற்றை முன்னரே பார்த்தோம். தற்போது நீர் நிலைகளின் மிகுதியால் அவற்றில் தாமரைப் பூக்கள் மலர்ந்துள்ளன.

தாமரைப் பூக்களில் தேன் அதிகம் இருப்பதால் அவற்றை அளவிற்கு அதிகமாகப் பருகிய வண்டினங்கள் போதை ஏறி, அதனால் சுரம் தவறாமல் பாடுகின்றனவாம். பாடல் ஒலியால் உந்தப்பட்ட அன்னப்பறவைகள், அருகில் உள்ள வயல்களில் இறங்கி, ஆணும் பெண்ணும் இணையாக நடனத்தில் ஈடுபடுகின்றனவாம். நாதம், அதன் பின் பரதம் என்று ஏற்பட்டது போல், வண்டுகளின் ரீங்கார இசை, அதனால் ஏற்பட்ட அன்னங்களின் நடனம் என்று களை கட்டிய வயல்களை உடைய ஊராக உள்ளது தேரழுந்தூர்.

DSC01624ஆண், பெண் அன்னங்களின் கூட்டுக் களியாட்ட நடனத்தைக் கண்ட திருமங்கையாழ்வார், மீண்டும் கனவு நிலைக்குச் செல்கிறார். அவருக்குத் தான் பரகால நாயகியாக, ஆமருவியப்பனிடம் பெற்ற பேரானந்த அனுபவம் நினைவிற்கு வருகிறது. ‘ஆனந்த அனுபவங்களை அளித்துவிட்டு, என் இடையில் உள்ள ஆடைகள் நெகிழுமாறு என் அழகுகள் அனைத்தையும் தானே எடுத்துக் கொண்டு என்னைவிட்டுப் பிரிந்து சென்ற தேவாதிராஜன் வசிக்கும் ஊரன்றோ இந்தத் தேரழுந்தூர் என்னும் திருவழுந்தூர்?’ என்று கனவு நிலையில் இருந்து கேட்கிறார் பரகால நாயகியான திருமங்கையாழ்வார்.

ஆமருவியப்பன் நீங்கியதால் தனது ஐம்புலன்களும் தன்னைவிட்டு நீங்கிவிட்டன என்கிறார் ஆழ்வார். பரமாத்மா அன்றி ஜீவாத்மா ஒன்றுமில்லை என்பதைத் தெரிவிக்கிறார் ஆழ்வார்.

என் ஐம்புலனும் எழிலும் கொண்டு இங்கே நெருநல் எழுந்தருளி
பொன் அம் கலைகள் மெலிவு எய்த போன புனிதர் ஊர்போலும்-
மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல் வரி வண்டு இசை பாட
அன்னம் பெடையோடு உடன் ஆடும் அணி ஆர் வயல் சூழ் அழுந்தூரே

ஆமருவியப்பன் தன்னை விட்டு நீங்கினாலும் அவரைப் ‘புனிதர்’ என்று பரகால நாயகி அழைக்கிறாள். இது அவள் ஊடலால் ஏற்பட்ட கோபத்தால் சொல்கிறாள் என்கின்றனர் உரையாசிரியர்கள்.

‘மன்னு முது நீர்’ என்னும் பயன்பாட்டால், தேரழுந்தூரில் மிகப் பழங்காலத்தில் இருந்தே நல்ல நீர் நிலைகள் உள்ளதை அறிய முடிகிறது.

ஆதி நாள் முதல் நீர் தேங்கியுள்ள குளங்கள், அவற்றால் வளம் பெற்ற, வாளை மீன்கள் நிரம்பிய  வயல்கள், தாமரைப்பூக்களில் நிரம்பியுள்ள தேனைக் பருகிப் போதையில் பாடும் வண்டுகள், அதைக் கேட்டு நடனமாடும்  அன்னப் பறவைகள் என்று இருந்த ஊர் என்பதை எண்ணும் போது தற்போதைய தேரழுந்தூரின் நிலை கண் முன் தோன்றி மறைவதைத் தவிர்க்க இயலவில்லை.

பெருமாள் கைகூப்புகிறானா?

ஆம், முதலில் பஞ்சணையில், அருகில் அமர்ந்தான். பரமானந்தப் பேரின்பத்தை அளித்தன். பின்னர் இப்போது கைகூப்பி நிற்கிறான். காரணமென்ன? என்று கனவு நிலையில் கேட்கிறாள் பரகால நாயகி.

நாயகி பாவத்தில் இருந்த திருமங்கையாழ்வார், கனவு நிலையில் சஞ்சரிக்கிறார். திடீரென்று நனவு நிலைக்கு வருகிறார். தேரழுந்தூரின் வீதிகளில் இருந்து பேரிரைச்சல் மீண்டும் கேட்கிறது.

என்ன இரைச்சல் என்று கூர்ந்து நோக்குகிறார். பஞ்சு போன்று மென்மையான பாதங்களை உடைய நற்குடிப் பெண்கள் பொன்னாலான சிலம்பணிந்து, பேரிரைச்சல் ஏற்படும்படியாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏற்படும் பேரிரைச்சலாம். இப்படிப்பட்ட ஊரில் வாழும் ஆமருவியப்பனைப் பற்றி எண்ணத் துவங்குகிறார். மீண்டும் பரவச நிலைக்கு, கனவு நிலைக்குச் சென்றுவிடுகிறார் ஆழ்வார்.

அடடா, ஆலிலைக் குழந்தை என்று எண்ணிக் கருணையோடு நோக்கினால், ஆமருவியப்பன் புன்முறுவலுடன் அருகில் அமர்ந்து, நெஞ்சத்துள்ளும், கண்ணுள்ளும் குடியேறிவிட்டான். இப்போது என்னை நோக்கிக் கைகூப்பி நிற்கிறானே? ஏன் இப்படி நிற்கிறான் ?

ஆம், முதலில் பஞ்சணையில், அருகில் அமர்ந்தான். பரமானந்தப் பேரின்பத்தை அளித்தன். பின்னர் இப்போது கைகூப்பி நிற்கிறான். காரணமென்ன? என்று கனவு நிலையில் கேட்கிறாள் பரகால நாயகி.

கண்ணன் வெண்ணையை முழங்கையால் எடுத்து உண்டுகொண்டிருக்கும் போது யசோதை தாம்புக்கயிற்றால் அடிக்க வர, அவளை நோக்கிக் கண்களைக் குவித்து, இரு கைகளையும் கூப்பி மன்னிப்புக் கோரினான் அல்லவா? அதைப்போன்றே என்னிடமும் கைகூப்புகிறானே? ஓ, காரணம் புரிந்துவிட்டது. பேரின்ப அனுபவத்தைக் கொடுத்ததால் வஞ்சிக்கொடி போன்ற என் இடை நோவு எடுத்தது என்பதால் கைகூப்புகிறான் கண்ணன் என்று கனவு நிலையில் நினைக்கிறாள் நாயகியான ஆழ்வார்.

இப்படியான கனவு நிலையில் உள்ள பரகால நாயகி, திடீரென்று தெருவில் இருந்து எழும் சிலம்பு ஒலிகளால் கனவு நிலை நீங்கப்பெற்று மீண்டு எழுகிறாள்.

Therazhundur-Amaruviappan1

வஞ்சி மருங்கு லிடைநோவ மணந்து நின்ற கனவகத்து,என்

நெஞ்சு நிறையக் கைகூப்பி நின்றார் நின்ற வூர்போலும்,

பஞ்சி யன்ன மெல்லடிநற் பாவை மார்கள், ஆடகத்தின்

அஞ்சி லம்பி னார்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே

சிலம்புகள் ஒலிக்க ஆடும் தேரழுந்தூர்ப் பெண்களை ‘நற்பாவைமார்கள்’ என்று அழைக்கிறார்.  முந்தைய பாடல்களில் ‘அம்பு அராவும் மடவார்’ என்றார். இப்போது அவர்கள் நற்குடியைச் சேர்ந்தவர்கள், பாவையர்கள் என்கிறார்.

தங்கம் என்ற பொருளைத்தரும்  ‘ஹாடகம்’ என்னும் சம்ஸ்க்ருதச் சொல் மருவி, ‘ஆடகம்’ என்று பாடலில் வருகிறது.

கனவு நிலையும், நனவு நிலையும் மாறி மாறி வரும் நிலையில் ஆழ்வார் பேசுவது கண்ணன் மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த பக்தியையும், பரகால நாயகி வடிவத்தின் வழியே அவர் கொண்டுள்ள காதலையும் உணர்த்துவன. இந்த இரு நிலைகளையும் திருக்குறளின் காமத்துப் பாலில் உள்ள பல குறட்பாக்களில் காணமுடிகிறது என்பது ஒரு சிறப்பு.

சேற்றில் மீன் தேடுவது ஏன்?

முந்தைய பாடல்களில் இராமனையும் கண்ணனையும் அவர்களின் வீரத்திற்காகக் கொண்டாடிய ஆழ்வார், அவன் தனது உள்ளத்தில், மனதில், கண்ணில் நின்றான் என்று கூறவில்லை. ஆனால் மேற்சொன்ன மூன்றாம் பாடலில் மட்டுமே ‘ என் மனம் புகுந்து, உள்ளத்துள்ளும், கண்ணுள்ளும், மனத்துள்ளும் நிற்கிறான்’ என்கிறார்.

ஊரையும், வீதியையும், வயலையும்,  வீதி வாழ் மறையோரையும், ஊரில் உள்ள அம்பு போன்ற கண்களை உடைய பெண்களையும்  பாடிய திருமங்கை மன்னன், இப்போது மீண்டும் கழநியைப் பாடுகிறார். ஊர் அவரைத் திக்குமுக்காட வைத்துள்ளது போல. திடீரென்று பெரு மகிழ்ச்சியும், அது தொடர்பான மாந்தர்களும், தகுந்த சூழ்நிலையும் ஏற்பட்டால், அளவு கடந்த மகிழ்ச்சியில் பல செய்திகள் ஒரே நேரத்தில் தோன்றுவது போல் திருமங்கையாழ்வார் தேரழுந்தூரின் சூழலையும், மாந்தரையும், தேவாதிராஜனையும் ஒரு சேரக் கண்டு பேரானந்தத்தில் திளைக்கிறார் போலும்.

தன் குஞ்சிற்கு இரை தேட ஆண்பறவை தனது பெண் துணையையும் அழைத்துக் கொண்டு தேரழுந்தூரின் வயல்களுக்கு வருகிறதாம். வயல்களில் சேறால் நிரம்பி வழிகின்றனவாம். அச்சேற்றில் இறங்கி, சிறிய மீன்கள் அகப்படுமா என்று பார்க்கின்றனவாம் தாய்ப் பறவையும் தந்தைப் பறவையும். அப்படிப்பட்ட வளம் சூழ்ந்த ஊரில் உள்ள தேவாதிராஜன் எழுந்தருளியுள்ளான். அவன் யாரென்றால், பிரளய காலத்தின் போது சிறு ஆலிலை மேல் பள்ளிகொண்டிருந்த, தன் கால் விரலைத் தானே சுவைத்துக்கொண்டிருந்த, குழந்தை வடிவிலான, பெருங்கருணையுடைய திருமால் ஒருவன் இருந்தானே, அவனே என் கண்ணுள்ளும், உள்ளத்துள்ளும் மனத்திலுள்ளும் புகுந்துகொண்டு உறைகிறானல்லவா, அவனே இத்தேரழுந்தூரில் நின்றுகொண்டிருக்கிறான் என்கிறார் ஆழ்வார்.

வெள்ளத் துள்ளோ ராலிலைமேல் மேவி யடியேன் மனம்புகுந்து,என்

உள்ளத் துள்ளும் கண்ணுள்ளும் நின்றார் நின்ற வூர்போலும்,

புள்ளுப் பிள்ளைக் கிரைதேடிப் போன காதல் பெடையோடும்,

அள்ளல் செறுவில் கயல்நாடும் அணியார் வயல்சூழ் அழுந்தூரே

Therazhundhur Fertile Landமுன்னர் வந்த பாடல்களில் ஊரின் வயல்களில் நீர் நிரம்பி வழிகிறது என்றும், வாளை மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன என்றும் சொன்ன ஆழ்வார், இப்போது தன் குஞ்சுகளுக்கு இரை தேட சேற்றில் இறங்க வேண்டிய காரணம் யாது? என்று சிந்திக்க விழைவது இயற்கையே. ஆனால் வியாக்யானம் செய்த பெரியவாச்சான் பிள்ளை நம்மைப் புள்ளபூதங்குடி திவ்ய தேசத்திற்கு அழைத்துச் செல்கிறார். அவ்வூரின் பாடல் : ‘பள்ளச் செறுவில் கயல் உகளப் பழனக் கழனி அதனுள் போய், புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் புள்ள பூதங் குடிதானே’ என்பது. இவ்விடத்தில் ‘குஞ்சினால் பெரிய மீன்களை உண்ண முடியாது என்பதால் சேற்றில் சிக்கியுள்ள சிறிய மீன்களைத் தேடுகின்றன புள்ளினங்கள்’ என்று வியாக்கியானம் அமைகிறது. இதையே நமது தேரழுந்தூர்ப் பாசுரத்திற்கும் கொள்ளலாம் என்கிறார் அடியேனின் காலஞ்சென்ற பெரியப்பா ஶ்ரீ.உ.வே.இராமபத்திராச்சாரியார், தனது பேருரையில். ஆக, தேரழுந்தூரில் சேற்றில் இறங்கி மீன் தேடிய பறவை ஏன் அவ்வாறு செய்தது என்பது புரிகிறது.

முந்தைய பாடல்களில் இராமனையும் கண்ணனையும் அவர்களின் வீரத்திற்காகக் கொண்டாடிய ஆழ்வார், அவன் தனது உள்ளத்தில், மனதில், கண்ணில் நின்றான் என்று கூறவில்லை. ஆனால் மேற்சொன்ன மூன்றாம் பாடலில் மட்டுமே ‘ என் மனம் புகுந்து, உள்ளத்துள்ளும், கண்ணுள்ளும், மனத்துள்ளும் நிற்கிறான்’ என்கிறார். என்ன இருந்தாலும் இராமனும், கண்ணனும் சற்று வயதானவுடன் வீரத்தைக் காண்பித்தான். கண்ணனாவது பிள்ளைப் பிராயத்தில் காண்பித்தான். ஆனால் ஆலிலை மேல் வந்த மாலவன் சிறு குழந்தை. தான் உண்ணத் தகுந்தது யாது என்று அறியாமல் தனது கால் கட்டைவிரலையே எடுத்துச் சுவைக்கும் அளவிற்குச் சிறு பிராயம். அத்துடன் பிரளய காலத்தில் ஆலிலை மேல் வருகிறான். ஆகவே குழந்தை வடியில் என் உள்ளத்திலும், கண்ணிலும், மனத்திலும் குடிகொண்டான் என்கிற எண்ணம் போலும்.

ஆண்பறவை தனியே சென்று குஞ்சிற்கு உணவு சேகரிக்காதா? பெண் பறவையுடன் சேர்ந்து தான் செல்ல வேண்டுமா? என்ற கேள்வி எழலாம். இவ்விடத்தில் ஶ்ரீவைஷ்ணவ சித்தாந்தம் வெளிப்படுகிறது. ஜீவர்கள் தாங்கள் மோக்‌ஷம் பெற ஆசார்யன் வழியாகச் சென்றாலும், திருமகளே பெருமாளிடம் அதற்குப் பரிந்துரைக்கிறாள். எனவே, தாயும் தந்தையுமாகவே திருமகளும் திருமகள் கேள்வனும் ஜீவாத்மாக்களாகிய நமக்கெல்லாம் அருள்கிறார்கள் என்னும் நிலையை உணர்த்துகின்றன இப்பறவைகள் என்று பார்ப்பது ஒரு சுவையே.

( ‘புள்’ என்னும் அருமையான தமிழ்ச் சொல்லை மீண்டும் பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும். ‘புள்ளும் சிலம்பின காண்’ என்னும் ஆண்டாளின் பாசுர வரியையும் ஒப்பு நோக்கலாம்).

தேரழுந்தூரில் ராமன்

பெண்களின் கண்கள் அம்பு போல் இருப்பதாகச் சொல்கிறார் ஆழ்வார் (அபம்பராவும் கண் மடவார்). இதனால் தானோ என்னவோ பின்னாளில் வந்த தேரழுந்தூர்க்காரனான கம்பன் சீதையை வர்ணிக்கும் போது அவளின் கண்களை வேலுக்கு (அம்பு) இணையாகச் சொன்னான்.

வயலையும், வீதியையும் விவரித்த திருமங்கையாழ்வார், மூன்றாம் பாடலில் ஊரை விவரிக்கிறார். அத்துடன் இன்று ராமநவமியாதலால்(02-04-2020), இப்பாடலில் இராமனைச் சுட்டுகிறார் போலும்.

இலங்கை பொன்னாலான மதில்களால் சூழப்பட்டது. அதன் தலைவன் பத்துத் தலைகளை உடைய ராவணன். அவனைது தலைகளைத் தனது தேவரருலக அம்பினால் கொய்த இராமன் தேரழுந்தூரில் எழுந்தருளியுள்ளான்.

ஊரும் சாதாரண ஊரன்று. அவ்வூரில் குருக்கத்தி மரங்கள் அடர்ந்துள்ளன. அவை நிறைய கிளைகளையும் தழைகளையும் கொண்டுள்ளன. செருக்கு மிக்க வண்டுகள் அம்மரங்களில் உள்ள கிளைகளையும் தழைகளையும் கோதி, பிரித்து, மறைந்திருக்கின்ற குருக்கத்தி மலர்களில் உள்ள தேனை உண்கின்றன. மிகுதியாக உண்டு பசியாறிய பின்னர், இரவு தங்குவதற்கு ஏற்ற இடம் எதுவென்று தெரியாமல் மயங்குகின்றன. பின்னர் தேரழுந்தூரில் உள்ள அம்பை ஒத்த கண்களை உடைய பெண்களின் கருங்கூந்தலில் சென்று தங்குகின்றன. இதனால் அப்பெண்டிர் கூந்தலில் இருந்து தேன் ஒழுகுகிறது. அவ்வாறான பெண்கள் நிறைந்த ஊரே தேரழுந்தூர் என்னும் திருவழுந்தூர்.

செம்பொன் மதிள்சூழ் தென்னிலங்கைக் கிறைவன் சிரங்கள் ஐயிரண்டும்,

உம்பர் வாளிக் கிலக்காக உதிர்த்த வுரவோ னூர்போலும்,

கொம்பி லார்ந்த மாதவிமேல் கோதி மேய்ந்த வண்டினங்கள்,

அம்ப ராவும் கண்மடவார் ஐம்பா லணையும் அழுந்தூரே.

Ramar in Therazhundhurஆழ்வார் குருக்கத்தி மரத்திற்குப் பயன்படுத்திய சொல் ‘மாதவி’ என்பது. ஆண்டாளும் ‘மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்’ என்று திருப்பாவையில் சொல்கிறாள்.

பிரம்மாஸ்திரத்தை ‘உம்பர் வாளி’ என்னும் சொல்லால் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. தற்காலத்தில் ‘ஏவுகணை’ என்னும் சொல்லிற்குப் பதிலாக ‘வாளி’ என்னும் அருந்தழ்ச் சொல்லைப் பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது.

பெண்களின் கூந்தல் என்பதை ‘ஐம்பால்’ என்ற சொல்லால் அழைக்கிறார் ஆழ்வார். அது ஐவகைக் குணங்களைக் கொண்டதாம். சுருண்டிருத்தல், நீண்டிருத்தல், கறுத்திருத்தல், நறுமணத்துடன் இருத்தல் மற்றும் அடர்ந்திருத்தல் – இவையே ஐவகைக் குணங்களாம். தேன் உண்ட வண்டுகள் குடியிருந்ததால் அவர்களது கூந்தல் நறுமணத்துடன் இருந்திருக்கலாம்.

பெண்களின் கண்கள் அம்பு போல் இருப்பதாகச் சொல்கிறார் ஆழ்வார் (அபம்பராவும் கண் மடவார்). இதனால் தானோ என்னவோ பின்னாளில் வந்த தேரழுந்தூர்க்காரனான கம்பன் சீதையை வர்ணிக்கும் போது அவளின் கண்களை வேலுக்கு (அம்பு) இணையாகச் சொன்னான்:

வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல் ஒக்கும் விழி என்றாலும்,
பல் ஒக்கும் முத்து என்றாலும், பவளத்தை இதழ் என்றாலும்,
சொல் ஒக்கும்; பொருள் ஒவ்வாதால்;சொல்லல் ஆம் உவமை உண்டோ?
“நெல் ஒக்கும் புல்” என்றாலும், நேர் உரைத்து ஆகவற்றோ!

கம்பனைக் கற்ற கண்ணதாசனும் ‘அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினா தானோ?’ என்று கேட்டதை நினைவில் கொள்ளலாம்.

பி.கு.: கம்பனும் திருமங்கையாழ்வாரும் அந்தக் காலப் பெண்களின் கூந்தலைப் பற்றிப் பாடியுள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுதல் நன்று.

 

தேரழுந்தூர்க் காட்சிகள்

வானம் முன்னமேயே மழையைப் பொழிந்துவிடுகிறது. அந்தணர்கள் மூன்று வேளையும் அனல் ஓம்புகின்றனர். அப்படி ஒரு காலம் இருந்துள்ளது.

பொ.யு. 900
 
திருமங்கையாழ்வார் தேரழுந்தூருக்கு வருகிறார்.
 
‘யாரோ தேவாதிராஜனாம், மிக்க அழகுடையவனாம். அப்பெருமானைக் கண்டு செல்வோம்’ என்று வயல்கள் சூழ்ந்த ஊர்களைக் கடந்து தேரழுந்தூருக்கு வருகிறார்.
 
ஊரில் பெருமாள் இல்லை. பல ஆபரணங்களுடன் மன்னன் நிற்கிறான். ‘யாரோ மன்னன் போல் தெரிகிறது. இவனைப் பார்க்கவா வந்தோம்?’ என்று நொந்துகொண்டு திரும்புகிறார்.
 
தேவாதிராஜன் சைகை செய்ய, ஆழ்வாரின் கால்களில் மலர்களால் ஆல விலங்கு. நகர முடியவில்லை. திரும்பிப்பார்க்கிறார். ஆமருவியப்பன் (எ) கோஸகன் (எ) தேவாதிராஜன் காட்சியளிக்கிறான்.
 
பெருமாளைப் பற்றிப் பின்வரும் பாசுரம் பாடுகிறார் ஆழ்வார்.
 
‘தந்தை காலில் பெருவி லங்கு தாளவிழ, நள்ளிருட்கண் வந்த
எந்தை பெருமானார் மருவி நின்ற வூர்போலும்,
முந்தி வானம் மழைபொழியும் மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று மனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரே’
 
‘வயோதிகம் இல்லாமையால், தீரா இளமையுடன் நித்ய கர்மங்களை விடாமலும், மூன்று வேளையும் அக்னி ஹோத்ரமும் செய்துவரும் அந்தணர்கள் வாழ்ந்துவரும் ஊர் இது. இவர்கள் செய்யும் வேள்விகளால் மழை பொழிகிறது என்பது பொதுவான எண்ணம். ஆனால், இவர்கள் செய்யும் வைதீகக் காரியங்களின் பலனான, இவர்கள் வேள்வியைத் துவங்கும் முன்னரே வானம் மழையைப் பொழிந்துவிடுகிறது. அப்படியான தேரழுந்தூரில் உள்ள கண்ணன் யாரென்றால், தன் தந்தையின் காலில் விலங்கை நள்ளிரவில் உடைத்தான் அல்லவா, அவனே நிற்கிறான் ஆமருவியப்பன் உருவில். அப்படியான ஊரே தேரழுந்தூர்’ என்பதாகப் பொருள்படும்படிப் பாடுகிறார்.cropped-dsc01624.jpg
 
வானம் முன்னமேயே மழையைப் பொழிந்துவிடுகிறது. அந்தணர்கள் மூன்று வேளையும் அனல் ஓம்புகின்றனர். அப்படி ஒரு காலம் இருந்துள்ளது.
 
அன்று ஆழ்வார் காலில் மலர்களால் கட்டப்பட்ட சங்கிலியுடன் நின்ற இடம் ஆழ்வார் கோவில் என்று சன்னிதித் தெருவில் தனிச் சன்னிதியாக உள்ளது.
 
அப்படியான தேரழுந்தூர் இன்று எப்படி உள்ளது என்பதை ஒருமுறை விஜயம் செய்து பாருங்கள். மயிலாடுதுறைக்கு அருகில் அமைந்துள்ள திவ்யதேசம்.

மன்னனும் மடலும் – பேருரை

இந்த உரையைப் போன்றே மாதந்தோறும் கோவிலில் திருமால் குறித்த ஆன்மீகச் சொற்பொழிவுகள் நடைபெற சிங்கப்பூர் அரசின் இந்து அறக்கட்டளை வாரியம் முடிவெடுத்துள்ளது. அறிஞர்கள் பெருமளவில் பங்குபெற வேண்டும்.

‘மன்னனும் மடலும்’ பேருரையில் இன்று முனைவர்.செல்லக்கிருஷ்ணன் திருமங்கையாழ்வாரின் ‘சிறிய திருமடல்’ பற்றி உரையாற்றினார்.
 
வைணவத்தில் திருமாலை வழிபடும் ஐந்து நிலைகளைச் சொல்லி, அர்ச்சையில் நிறுத்தினார். திருமங்கையாழ்வார் 82 திவ்யதேசங்களைப் பாடியுள்ளார். அவரே நமக்கு அர்ச்சாவதாரத்தின் பெருமையை அதிக அளவில் சொல்லிச் சென்றார் என்று இணைத்தார் செல்லக்கிருஷ்னன்.
 
பெண்கள் மடல் ஏறுவது வழக்கம் இல்லை. வள்ளுவரும் இதையே சொல்கிறார். ஆனால், பரகால நாயகி பாவத்தில் திருமங்கைமன்னன் சிறிய திருமடலில் தனக்கும் பெருமானுக்குமான நெருக்கத்தை வெளிப்படுத்துகிறார்.
 
இராமன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தான் என்று சிறிய திருமடல் சொல்கிறது. ஆனால் இராமாயணம் இலக்குவன் அறுத்தான் என்கிறது. இந்த முரணை வியாக்யான கர்த்தர்கள் ‘இலக்குவன் இராமனின் கை போன்றவன். எனவே இராமன் அறுத்தான் என்பது சரியே’ (வாம ஹஸ்தம்) என்று நிறுவினார்.
 
தற்போது அவரது உரையின் காணொலி தயாராகிக்கொண்டிருக்கிறது. கிடைத்ததும் வெளியிடுகிறேன்.
 
இந்த உரையைப் போன்றே மாதந்தோறும் கோவிலில் திருமால் குறித்த ஆன்மீகச் சொற்பொழிவுகள் நடைபெற சிங்கப்பூர் அரசின் இந்து அறக்கட்டளை வாரியம் முடிவெடுத்துள்ளது. அறிஞர்கள் பெருமளவில் பங்குபெற வேண்டும்.
 
சிங்கப்பூரில் நான் பங்கெடுக்கும் இறுதி நிகழ்ச்சியாகத் திருமங்கையாழ்வார் குறித்த சொற்பொழிவு நடந்தது அடியேன் செய்த பேறு.திருமங்கையாழ்வார் சொற்பொழிவு

தனி நாடு அடைவது எப்படி?

தனி நாடு அமைத்தே தீருவோம்.

தேரழுந்தூரைத் தலை நகராகக் கொண்ட கம்ப நாட்டை அமைத்தே தீருவோம். கம்பருக்குத் தீங்கிழைத்த, தஞ்சையைத் தலை நகராகக் கொண்ட சோழ நாட்டின் மீது படை எடுப்போம். இதற்காகத் தேரழுந்தூரின் வடக்குவீதி அரசின் பிரதமர் ஆதரவையும், தேரழுந்தூர் சர்வமான்ய அக்ரஹார அரசின் ஜனாதிபதியின் ஆதரவையும் பெறத் தயங்க மாட்டோம்.

இவ்வளவு ஏன்? கும்பகோண அரசின் முதல் மந்திரியுடன் பேச்சு வார்த்தைகள் ஏற்கெனவே முடிந்துவிட்டன. இனி கும்பகோணத்தின் படைகளுடன் சேர்ந்துகொண்டு, தஞ்சையை நோக்கித் தேரழுந்தூர்ப் படைகள் எந்நேரமும் முன்னேறும்.

கம்பன் என்றால் அவ்வளவு இளக்காரமா? கம்ப ராமாயணத்தை அரங்கேற்ற ஶ்ரீரங்கத்தில் எவ்வளவு எதிர்ப்பு? மறக்க மாட்டோம் அநீதியை. ஆழ்வார் பாசுரங்களைப் பாடலாமாம், கம்பன் எழுத்தைப் பாடக் கூடாதா? கம்பனும் இராமனைப் பற்றித்தானே பாடியுள்ளான்?

கம்பன் மீதுள்ள காழ்ப்பால் அவனது மகன் அம்பிகாபதியைச் சோழன் எவ்வளவு கொடுமை படுத்தியுள்ளான்? இதற்கெல்லாம் தீர்வு கம்ப நாடென்னும் தனி நாடு தான்.

என்ன கேட்டோம்? கம்பனின் பாடலை அங்கீகரிக்கச் சொன்னோம். தேரழுந்தூர் என்றால் இளக்காரமா? எங்களைக் கண்டால் தஞ்சை சோழப் பேரரசுக்கு அவ்வளவு இளக்காரமா?

இன்னும் என்ன கேட்டோம்? திருமங்கையாழ்வார் பாடலுக்கு நம்மாழ்வார் பாடலுக்கு உள்ள ஏற்றத்தைத் தாருங்கள் என்றோம். கொடுத்தார்களா சோழ அரச வஞ்சகர்கள்? பாண்டிய நாட்டின் நம்மாழ்வாருக்கும், பெரியாழ்வாருக்கும் உள்ள அந்தஸ்தை திருமங்கை ஆழ்வாருக்குக் கொடுக்க மனம் இல்லையே உங்களுக்கு?

‘நாயக-நாயகி பாவ’த்தில் திருமங்கை ஆழ்வாரும் தான் பாடியிருக்கிறார். அதென்ன பாண்டிய நாட்டு ‘நாயக-நாயகி பாவ’ பாசுரங்களுக்கு மட்டும் ஏற்றம்? பராங்குச நாயகி என்றால் இங்கே பரகால நாயகி. வண்டு முதற்கொண்டு தூது விட்டுப் பாடியுள்ளார் திருமங்கை. ‘தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதை’ பாசுரத்துக்கு ஈடாகுமா உங்கள் பாண்டியப் பாசுரங்கள்?

என்னதான் காரணம்?

ஏனென்றால், திருமங்கையாழ்வார் தேரழுந்தூர்ப்பக்கம். நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள திருக்குறையலூர். என்ன இருந்தாலும் உங்களுக்கு வேற்று நாட்டுக் காரரின் பாசுரங்கள் தான் உசத்தி. அதனால் தானே பாண்டிய நாட்டுப் பெரியாழ்வாரையும், நம்மாழ்வாரையும் கொண்டாடுகிறீர்கள் ?

இதற்கு ஒரே தீர்வு தனி நாடு தான். கம்ப நாடு. இது கம்பனுக்கும், திருமங்கை ஆழ்வாருக்கும் குரல் கொடுக்கும் ஒரே தேசம்.

வெற்றி வேல், வீர வேல். படை எழுக, திரை விலக, கம்பன் புகழ் ஓங்க. போர், போர், தனி நாட்டுக்கான போர்.

‘பரத் ராம். அப்பா தூக்கத்துல ஏதோ உளர்றார பார். ஏஸி போடணுமா கேளூ. தமிழ் நாட்டுல கண்ட அசடுகளும் பேசறதெல்லாம் படிக்காதீங்கோன்னா கேட்டாதானே’

நயந்தாரா அழகானவரா ?

நயந்தாரா, த்ரிஷா, தமன்னா மூவரில் யார் அழகானவர்கள்?

எனக்குத் தெரியாது. ஆனால் அவர்களை விட அழகான பெண்கள் எங்கள் ஊரில் உண்டு. நம்பிக்கை இல்லையா?

‘அம்பு அராவும் கண் மடவார் ஐம்பால் அணையும் அழுந்தூரே’ என்கிறார் திருமங்கையாழ்வார்.

தேரழுந்தூர்ப் பெண்டிர் அம்பைத் தோற்கடிக்கும் அளவு கூர்மையான கண்களை உடையவர்களாம். அது மட்டும் அல்ல. அவர்கள் ஐந்து குணங்கள் கொண்ட கூந்தல் உடையவர்களாம். ( ஐம்பால்)

அது என்ன ‘ஐம்பால்’? இரு வகையாக வியாக்யானம் சொல்கிறார்கள்.

அரும்பத உரையாசிரியர் சொல்வது :

1. கந்தம் ( நறுமணம்)

2. மது ( தேன்)

3. மார்தவம் (மென்மை)

4. ஸ்நிக்தை (அடர்த்தி)

5. இருட்சி (கருமை)

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் வியாக்யானம் பின்வருமாறு:

1. சுருண்டிருத்தல்

2. நீண்டிருத்தல்

3. அடர்ந்திருத்தல்

4. கறுத்திருத்தல்

5. நறுமணம் கொண்டிருத்தல்.

இப்போது முதல் வரியைப் படியுங்கள்.

பி.கு: ஆழ்வார் சொன்னது கி.பி. 9ம் நூற்றாண்டு.

What is for dinner ? முயல், காக்காய் ?

‘ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிப்பது’ என்பது உண்மையாகிவிடும் போல் தெரிகிறது.

பசு மாட்டைக் கடிப்பது தற்போது தேர்தல் விஷயமாகியுள்ளது. எல்லா பிரச்சினைகளையும் தீர்த்தாகிவிட்டபடியால் தீர்ப்பதற்கு உள்ள ஒரே பிரச்சினை இதுதான் போல இருக்கிறது.

மாட்டுக்கொட்டகையை விட்டு வெளியே வருவோமா ?

முயல், காக்கை மாமிசம் எப்படி இருக்கும் தெரியுமா ? எனக்குத் தெரியாது.

முயல் மாமிசம் கிடக்கும் போது காக்கை மாமிசம் தேடி அலைவதா என்று திருமங்கையாழ்வார் கேட்கிறார்.

Thirumangai‘ஏரார் முயல்விட்டுக் காக்கைப்பின் போவதே..’ என்பது அவரது பாசுர வரி.

இரண்டு விளக்கங்கள் தெரிகின்றன :

முயல் நிலத்தில் கிடைப்பது. காக்கை வானத்தில் கிடைப்பது. பூமியில் உள்ள அர்ச்சாவதார மூர்த்திகளை வணங்கினாலே போதும், விண்ணுலகில் பரமபத வாழ்வு தேவையில்லை என்பது ஒன்று.

மற்றொன்று திருமால் தெய்வம் ( முயல் ). எளிதில் நிலத்தில் கிடைக்கும். மற்ற தெய்வங்கள் அவ்வளவு சிறந்தவை அல்ல(காக்கை ).  சிறப்புகள் இல்லாவிடினும் அவற்றை அடைவது கடினம். எனவே முயலை விரும்புங்கள் என்னும் பொருள்.

‘அச்சுவை பெறினும் வேண்டேன்..’ பாசுரம் நினைவுக்கு வந்தால் நலம்

அது சரி. திருமங்கையாழ்வார் முயல், காக்கை மாமிசங்களை உண்டாரா ? என்று கேட்கலாம்.

உண்டிருக்கலாம். சோழ மன்னரின் தளபதி, கள்ளர் குலத்தவர் என்று சொல்கிறார்கள். எனவே முயல் காக்கைக் கறி விசேஷங்கள் தெரிந்தே சொல்லியிருக்கலாம். ‘பறவைக்காய்ச்சல்’, ‘எபோலா’ முதலானவை ஆழ்வார் காலத்தில் இல்லை என்பதை நினைவில் கொள்ளுதல் நலம்.

இனி  காக்கையையோ முயலையொ கண்டால் அருகில் யாராவது மனிதர் இருகிறாரா பாருங்கள். ஒரு வேளை  அவர் திருமங்கையாழ்வாராக இருக்கலாம்.

என் பேர் ஆண்டாள் – ஸ்டெம் செல் முதல் அக்கார அடிசில் வரை

‘பஞ்சாமிர்தம்’ என்றால் தெரியும்தானே ? அது தான் சுஜாதா தேசிகனின் ‘என் பேர் ஆண்டாள்’ நூல்.

‘அனுபவம்’, ‘சுஜாதா’, ‘பொது’, ‘பயணங்கள்’, ‘அறிவியல்’ என்று ஐந்து அமிர்தங்களைக் கொண்ட கட்டுரை நூல்.

39 சுவையான கட்டுரைகள் கொண்ட இந்த நூலில் என்னை மிகவும் ஈர்த்த சில கட்டுரைகளைப் பார்ப்போம்.

‘என் பேர் ஆண்டாள்’  – நூலின் பெயரில் ஒரு கட்டுரை. இல்லை Cute-உரை. அவ்வளவு Cute. ஆண்டாள் என்று பெயரிடப்படும் ஆசிரியரின் குழந்தை பேசுவது போல் அமைந்துள்ளது. மயில் இறகால் வருடியது போன்ற ஒரு உணர்வு.

‘அமுதன்’ – மகன் பெயர். கட்டுரையின் பெயரும் அதுவே. ‘அமுதன்’ பெயர்க்காரணமும் அது தொடர்பான ஆழ்வார் பாசுரங்களும் ஆக அருமை.

‘தொட்டமளூர்’ என்னும் பயணக்கட்டுரையில் ஒரு மண்டபம். அதில் அக்காலத்தில் புரந்தரதாசர் அமர்ந்து ‘ஜகதோதாரணா’ பாடியிருக்கிறார். தேசிகன் அமர்ந்து ‘ததியோதாரணா’ (தயிர் சாதம் உண்ணல்) என்கிறார். வார்த்தை விளையாட்டில் சுஜாதா மீண்டும். கட்டுரை முடிவு – சுஜாதா கர ஸ்பரிசம்.

‘மேல் கோட்டையில் ஒரு நாள்’ கட்டுரையில் இன்றைய நிலைமையின் நிதர்சனம் – ‘கிராமங்கள் கற்புடன் இருக்கின்றன. ஐ.டி.கம்பெனிகள் இன்னும் வரவில்லை’ என்கிறார். நெத்தியடி வாசகம்.

ராமானுசருக்குள்ள மேல்கோட்டைத் தொடர்பு, கோட்டைக் கோவிலின் விஸ்தீரணங்கள், கோவிலில் தொல்பொருள் துறையின் தொலைந்துபோன நிலை இத்தனையும் விளக்கப்படுகின்றன. முடிவில் – ‘பெருமாள் கூட்டத்தை நோக்க, கூட்டம் நோக்கியாவில் பெருமாளை நோக்க..’ – மீண்டும் சுஜாதா.

‘ராமானுச நூற்றந்தாதி’ பாடிய திருவரங்கத்து அமுதனார் பற்றிய கட்டுரையின் முடிவு மிகவும் ஆழமான உண்மைகளை உள்ளடக்கியது. மிக அற்புதமான ஸ்ரீவைஷ்ணவ அனுபவத்தை அளிக்கிறது. அடுத்தமுறை ஸ்ரீரங்கம் போகும் போது, அந்த வீட்டிற்குப் போக வேண்டும்.

பூந்தமல்லியில் வாழந்த திருக்க்ச்சி நம்பிகள் பற்றிய கட்டுரை உங்களைக் கரைத்துவிடும். 100 ஆண்டுள் முன்பு வாழ்ந்த அவர், ராமானுசருக்கே ஆசாரியன். அவரது வீடு இன்று இருக்கும் நிலை, அற நிலையத்துறையின் வழக்கமான விளக்கெண்ணை பதில் – உயர் பதவியில் உள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் கொஞ்சம் இந்தப்பக்கம் பார்க்கவும். ஒட்டுமொத்த தமிழர்களுமே தலைகுனிய வேண்டிய தருணம்.

இதெல்லாம் போகட்டும். இராமானுசருக்கு ‘அஷ்டாட்சர’த்தை உபதேசித்தார் திருக்கோஷ்ட்டியூர் நம்பி. இராமானுசர் அதனை உலகிற்கே அறிவித்தார். அந்தத் திருக்கோஷ்டியூரில் அவர் வாழ்ந்த வீட்டிற்குச் செல்கிறார் தேசிகன். ‘இராமானுசர் இந்த வீட்டிற்கு வந்திருக்கிறார்; நானும் அதே வீட்டிற்குச் செல்கிறேன் ’ என்று புளகாங்கிதம் அடையும் அவர் வீட்டின் நிலையை வர்ணிக்கிறார்.

‘ராக்கெட் வண்டுகள்’ என்னும் வண்டுகள் பற்றிய கட்டுரை அறிவியல், இலக்கியம், ஆன்மீகம் கலந்ததாக உள்ளது. வண்டு பற்றிய குறுந்தொகைப் பாடலான ‘கொங்குதேர் வாழ்க்கை..’யில் துவக்கம் ‘தேமருவு பொழிலிடத்து..’ என்னும் வண்டைத் தூது அனுப்பும் தேரழுந்தூர்ப் பாசுரத்துடன் முடிவு. தேசிகனின் ‘அப்பாவின் ரேடியோ’ நூலில் ‘பெருங்காயம்’ என்னும் தேரழுந்தூர் பற்றிய கதை நினைவுக்கு வந்தது. தேசிகனுக்கு எங்கள் தேரழுந்தூர் ரொம்ப பிரியம் என்று தெரிகிறது.

‘சுஜாதா’ பற்றிய கட்டுரைப் பகுதியில் மறைந்த எழுத்தாளர் பற்றிய அவரது இறுதி நாட்கள், இறுதிக்கணம் பற்றிய விவரிப்புகள் நெஞ்சை அடைக்கும்.

ஒருமுறை ஆசிரியர் தேசிகனின் தந்தையார் ஸ்ரீரங்கம் சென்றிருந்தபோது அங்கிருந்த தூண்களைத் தொட்டுக்கொண்டே இருந்தாராம். கேட்டதற்கு ‘இந்தத் தூணில் திருமங்கையாழ்வாரும் தொட்டிருப்பார்’ என்று சொன்னார் என்று அந்த வரலாற்றுத் தொடர்பை நினைவுபடுத்தியுள்ளார். நானும் இதே கருத்தை முன்னிறுத்தி முன்னர் இரண்டு கட்டுரைகள் எழுதியிருந்தேன். அவை இங்கே, இங்கே. தேசிகனின் இந்த நூலைப் படித்தவுடன் புல்லரித்தது.

அழகர் கோவில் என்னும் திருமாலிருஞ்சோலையில் ஆண்டாள் நூறு தடா அக்கார அடிசில் படைக்க எண்ணியதை நானூறு ஆண்டுகள் கழித்து ராமானுசர் நிறைவேற்றியதையும் ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் சாத்தியக்கூறுகளையும் ஒருங்கே கொண்ட இந்தப் பஞ்சாமிர்தக் கட்டுரை நூலில்.அசோகமித்திரன் பற்றிய கட்டுரையில் தமிழ்ச் சமுதாயம் எழுத்தாளர்களை வைத்துள்ள நிலையும் தெரிகிறது.

முடிக்கும் முன் : தென்கலை, வடகலை என்று இல்லாத வித்தியாசங்களை உண்டு பண்ணி. சண்டை போடும்  நேரத்தில், திருக்கச்சி நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருவரங்கத்து அமுதனார் வீடு இவற்றை வாங்கி, வைஷ்ணவ சமயக் கேந்திரங்களாக, பாசுரங்கள் கற்பிக்கும் பாடசாலைகளாக ஆக்கினால் குருபரம்பரை வாழ்த்தும். பெரியவர்களுக்கு அந்த மகரநெடுங்குழைக்காதப் பெருமாள் புத்தி வழங்கட்டும்.

என் பேர் ஆண்டாள் – இங்கே வாங்கலாம்.

%d bloggers like this: