திருமாங்கல்ய தானம் – நன்றிகள்

திருமாங்கல்ய தானம் பற்றிச் சொல்லியிருந்தேன். தற்போதுவரை விண்ணப்பித்த அனைவருக்கும் தங்கத்திற்கான பணம் சென்று சேர்ந்துவிட்டது.


நான் செய்தது, பயனாளிகளை நண்பர் ஒருவரின் உதவியுடன் கண்டுபிடித்து, அவர்களுடன் பேசி, அவர்களின் தேவையை அறிந்து + உண்மைத்தன்மையையும் உணர்ந்து, அவர்களுக்கு உதவ முன்வந்த வாசகர்களுடன் அவர்களை இணைத்துவிட்டது மட்டுமே.


ஓரிரு வாசகர்கள் தேவைக்கு அதிகமான பணத்தைப் பயனாளிகளுக்கு அனுப்பியுள்ளனர். ‘கல்யாணத் தேவை எதாவது இருக்கும் சார்’ என்கிறார்கள் அந்த வாசகர்கள். மனித உருவில் உள்ள கருணை தெய்வங்கள் இவர்கள். உதவிய அத்தனை வாசகர்களுக்கும் நன்றி.


குருவாயூர் செல்வதற்காகச் சென்ற வாரம் கோயம்புத்தூர் சென்றிருந்தேன். மேற்சொன்ன லிஸ்டில் இருந்த, உதவி பெற்ற பெண்ணின் தந்தையார் தங்கள் வீட்டிற்கு அழைத்து, மனம் கனிந்து நன்றி தெரிவித்தார். பெண்ணின் கல்யாணப் பத்திரிக்கையை அளித்தார். அந்தப் பெண் நமஸ்கரித்து நன்றி தெரிவித்தாள். மேலும் சில உதவிகள் கேட்டனர். அதற்கும் ஏற்பாடு செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது.


எவ்வளவோ சம்பாதிக்கிறோம், அன்றாட வாழ்வில் கடந்து உழல்கிறோம், ஃபேஸ்புக்கில் வசவுகள் பொழிந்து போராளி அவதாரங்கள் எடுத்து நடிக்கிறோம். அன்றாடம் அரசியல் அறிஞர்களின் வெற்று நடிப்புகளுக்கு மத்தியில் வாழப் பழக்கிக்கொண்டுவிட்டோம். ஆனால், இவற்றால் ஆத்ம திருப்தி ஏற்படுகிறதா என்றால் சத்தியமாக இல்லை.


ஆனால், திருமாங்கல்ய தானம், ஹரித்துவார மங்கலம் கோவில் விஷயம், தயானந்தா பள்ளி விஷயம் மாதிரியான முயற்சிகள் மனித வாழ்வின் உன்னதமான தருணங்களை அனுபவிக்க அளிக்கின்றன.


வாசகர்கள் / நண்பர்களுக்கும், இந்த நிகழ்வுகளை எனக்களித்த இறைவனுக்கும் நன்றிகள். வேறென்ன சொல்ல..

%d bloggers like this: