பணி ஓய்வு பெற்ற ஶ்ரீவைஷ்ணவர்கள், நல்ல ஆரோக்யத்துடன் இருக்கும் போதே ( 60-70 வயது), தங்களது பூர்வீக கிராமத்தில் வாடகை வீட்டிலாவது இருந்துகொண்டு, அவ்வூர்க் கோவிலில் ஏதாகிலும் கைங்கர்யம் செய்துவரலாம்.
ஏனெனில், திவ்யதேசங்களிலேயே கைங்கர்யம் செய்ய, அத்யாபகம், வேத பாராயணம், கோவிலில் செய்ய வேண்டிய தீர்த்த, புஷ்ப கைங்கர்யங்கள் செய்ய ஆட்கள் இல்லை. மற்ற சிற்றூர்களிலும் இதே நிலைதான்.
இதே நிலை தான் பல பாடல் பெற்ற சைவக் கோவில்களிலும் என்று தெரிகிறது. தேரழுந்தூரில் உள்ள சிவன் கோவில் பாடல் பெற்ற ஸ்தலம். அதன் நிலைமை படு மோசம்.
நேற்று, ஆதிவண் சடகோபர் திருநக்ஷத்திரத்தின் போது, தேரழுந்தூரில் நாங்கள் நான்கு பேர் மட்டுமே வீதி புறப்பாட்டிற்குச் சென்றோம். வேத, அத்யாபக அதிகாரிகள் இல்லை எனிலும், ஏதோ தெரிந்த சில பாசுரங்களைச் சேவித்துக் கொண்டிருந்தோம். ஆனால், அதே ஊரில், ஆதிவண் சடகோபர் உற்சவம் மற்றும் தேசிகர் உற்சவத்தில் சுமார் 400 பேர் பங்கெடுப்பர் என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டுள்ளேன்.
பணி ஓய்வு பெற்று, பின்னர் சென்னை / மும்பை என்று குடியிருத்தல் தனக்குத் தானே தீங்கு செய்து கொள்வது போன்றது என்பது அடியேன் நம்பிக்கை. இட நெருக்கடி, தண்ணிர் பிரச்னை, போக்குவரத்து நெரிசல் என்று பலதும் இடைஞ்சல்களே.
‘திவ்யதேசத்தில் ஒரு குடிசையாவது கட்டிக்கொண்டு இருக்க வேண்டும்’ என்பது ஶ்ரீமத் இராமானுசருடைய ஆணை.
தங்களது பூர்வீக ஊரில் தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஏதாவது ஒரு திவ்யதேசம், பாடல் பெற்ற ஸ்தலம் என்று சில ஆண்டுகள் செலவிடலாம். நற் போது போக்காக இருக்கும்.
‘அதெப்படி பணி ஓய்வு பெற்ற உடனே கிராமத்தில் இருக்க சௌகர்யப்படும்?’ என்று கேட்கலாம். 40-60 வயது வரை ஓராண்டிற்கு ஒரு முறையாவது சொந்த ஊர்களுக்குச் சென்று, சின்ன இடம் ஒன்றை வாங்கி, சிறிய அளவிலான வீடு கட்டி, அந்த ஊருடன், மக்களுடன் ஒரு பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ளலாம். இது 60வது வயதில் கைகொடுக்கும்.
மருத்துவ வசதி இல்லை என்பது பொதுவான குற்றச்சாட்டு. அது உண்மையே. காலஞ்சென்ற என் தாயார் விஷயத்தில் நான் கண்டதும் அதுவே. ஆகவே தான் 60-70 என்கிறேன். இவ்வாறு பலரும் கிராமங்களுக்கு இடம் பெயர்ந்தால், கிராமப் பொருளாதாரம் செழிக்கும் என்பதுடன், கிராமங்களில் மருத்துவ வசதிகளும் பெருகும். ஓய்வு பெற்ற மருத்துவர்கள் கிராமங்களுக்கு வர மாட்டார்களா என்ன ?
உலகமே கொரோனாவில் கட்டுண்டு கிடந்த போது, தேரழுந்தூரில் பெரிய பாதிப்பு இல்லை. மற்ற நோய்களும் அப்படியே. ஆக, கிராமத்திற்குச் சென்றால் ஆரோக்யமாக இருக்கலாம்.
யாரையும் குறை சொல்லவில்லை. மனதில் பட்டது. சொல்கிறேன். அவ்வளவுதான்.
-ஆமருவி
02-10-2022