ராவணன் – சில கேள்விகள்

இலங்கையில் சீதைக்குக் கோவில் கட்ட பாரதீய ஜனதா கேட்டுள்ளது.( அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடித்து விட்டார்கள் அதனால் சீதைக்குக் கோவில் இலங்கையில் ). இந்த சீதைக் கோவில் வந்தாலும் வந்துவிடும் ஆனால் ராமர் கோவிலுக்கு “மதச்சார்ற்ற” முற்போக்கு மாந்தர் ( போலிகள் என்று படிக்கவும் ) எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.

அது ஒரு புறம். சீதை கோவிலுக்கு முன் இலங்கையில் ராவணனுக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று “ராவண பாலய” என்ற பௌத்த இயக்கம் கேட்டுள்ளது. அதுவும் இந்தியா கட்டித் தர வேண்டுமாம். ராவணன் இலங்கையின் நாயகனாம். அதனால் அவனுக்குக் கோவில் வேண்டுமாம்.

ராவணன் உண்மையில் நல்லவன் தான். சாம வேதத்தில் ஒரு பெரிய பண்டிதன். சிவ பெருமான் இவன் சாம வேதம் இசைத்தால் தன் நடனத்தை மறந்து கேட்பான் என்று இதிஹாசம் கூறுகிறது.

அதுவும் தவிர அவன் பெரும் போராளி. “வாரணம் பொருத மார்பன்” என்று கம்பர் அவனை வருணிக்கிறார். ( வாரணம் – யானை ).

இந்த ராவண கோவில் கோரிக்கை கவனிக்கப் பட வேண்டியது.

  • கடவுள் இல்லை என்று கூறும் தமிழ்த் தலைவர்கள் தாங்கள் ராவணன் இனம் என்று கூறுவர். ஆரியனான ராமன் திராவிடனான ராவணனை வென்றது ஆரிய ஆதிக்க வெறி என்று பகுத்தறிவு பகருவர். ராவணன் குழுமம் என்று தமிழ் நாட்டில் ஒரு கூட்டம் உள்ளது. இந்தத் திராவிடத் தமிழ்த் தலைவர்கள் ராவண கோவிலுக்கு என்ன சொல்லப் போகிறார்கள் என்று கவனிப்பது நல்ல  நகைச்சுவையாக இருக்கும்.
  • ராவணன்  புலஸ்திய முனிவரின் மகன். எனவே அவன் அந்தணன். சாம வேதத்தில் தேர்ந்தவன். இவனத் தங்கள் முன்னோர் என்று கூறும் தி.க. முதலிய “பகுத்தறிவு” சிங்கங்கள், தாங்கள் அந்தண மரபினர் என்று கூறுவரா?  ( ராமன் அந்தணன் அல்லன் )
  • ராமாயணம் பொய், ராமன் கடவுள் இல்லை, ராமன் எந்தக் கல்லூரியில் படித்தான் என்று கேட்ட “பண்பாளர்கள்”, தங்களை ராவண இனம் என்று கூறுவது பகுத்தறிவில் எந்தக் காண்டத்தில் பொருந்தும் ?
  • ராமாயணம் இல்லை அது பொய். ராமன் இல்லை அவன் கட்டுக்கதை. ஆனால் ராவணன் உண்மை. நாங்கள் அவனது இனம் என்பது தற்போது வடிவேலு காமெடியை விட நல்ல தமாஷ்.
  • சிதம்பம், ஸ்ரீரங்கம் கோவிலை உடைக்க வேண்டும் என்று முழங்கிய பகுத்தறிவுப் பகலவன்கள் ராவணனுக்குக் கோவில் கட்டுவதை வரவேற்பார்களா ? அதற்கு இந்திய அரசு பணம் செலவிடும் பட்சத்தில், ராமர் பாலம் ராமர் கட்டியது தான் என்று ஆகாதா ? அப்போது “பகுத்தறி”வின்  நிலை என்ன ?

இப்படியெல்லாம் லாஜிக் கேள்விகள் கேட்காமல் “உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக” மானாட மயிலாட கண்டு தமிழ் வளர்ப்போம்.

%d bloggers like this: