நாயக நாயகி பாவம் தாற்காலிகமாக நீங்கப்பெற்ற திருமங்கை மன்னன் மனதில் ‘ஆமருவியப்பனை அதிகமாக கோபித்துக் கொண்டோமோ’ என்னும் எண்ணம் தோன்றுகிறது. ‘போன புனிதர்’ என்று கோபத்துடனான பிரேமை நிலையில் அவனைச் சொன்னதை நினைத்துச் சற்றே வருத்தம் கொள்கிறார்.
தேவாதிராஜனின் கோவிலில் கருவறைக்குள் நுழையும் முன்னர் வலதுபுறத்தில் உள்ள யோக ந்ருஸிம்ஹனின் சன்னிதி தென்படுகிறது போல. ‘அடடா, கோஸகன் எங்கே சென்றான்? அவன் விரைவாக வருபவன் அன்றோ? பக்தன் அழைத்தவுடன் எந்த யோசனையும் இன்றி உடனே வந்தவன் அல்லவோ அவன்?’ என்னும் எண்ணம் தோன்றப்பெற்றவராய் சற்று நிதானித்து நிற்கிறார்.
‘இவன் ‘போன புனிதர்’ அன்றே? வந்தவன் அல்லவா? எப்படிப்பட்டவன் இவன்? இரணியனின் மிடுக்கையும் கம்பீரத்தையும் தனது கரங்களால் இரண்டாகப் பிளக்கும் விதமாக அவனது மார்பைப் பிளந்தவன் அன்றோ? இவன் அன்றோ தனது இடக்கையில் சங்கையும், வலக்கையில் சுதர்சன சக்கரத்தையும் கொண்டுள்ளவன்?
அப்படிப்பட்டவன் எழுந்தருளியுள்ள ஊர் எப்படிப்பட்டது? செக்கச்செவேல் என்று உள்ள தாமரைப் பூவைப் போன்ற பிரம்மனை ஒத்த அந்தணர் வாழும் ஊர். அவ்வாறான திருவழுந்தூரை விட்டு நீங்காது, அவ்வூரில் நிலையாக நின்றுகொண்டிருக்கும் ஆமருவியப்பனை நான் கண்டுகொண்டேன்’ என்கிறார் ஆழ்வார்.
இந்த யோக ந்ருஸிம்ஹனின் முன்னர் அமர்ந்தே, தேரழுந்தூர்க்காரனான கம்பன் இராம காதை இயற்றியுள்ளான். ந்ருஸிம்ஹ பக்தனான அவன் வால்மீகியின் இராமாயணத்தில் இல்லாத ‘இரணிய வதைப் படல’த்தைக் கம்பராமாயணத்தில் வைத்தான் என்பதில் இருந்து புரிந்துகொள்ளலாம். ( கம்பன் என்பதே கம்பத்தில் இருந்து தோன்றிய திருமாலின் பெயராம்).

சிங்கம தாயவுணன் திறலாகம்முன் கீண்டுகந்த,
சங்கமி டத்தானைத் தழலாழி வலத்தானை,
செங்கமலத் தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
அங்கம லக்கண்ணனை அடியேன்கண்டு கொண்டேனே
ஆழ்வாரோ ‘அந்தணர்கள் பிரம்மனைப் போன்று சிவந்து தெரிகிறார்கள்’ என்கிறார். அவர்கள் வேதத்தை ஓதி ஓதி முகம் சிவந்து காணப்பட்டனர் என்று காட்சிப்படுத்திக் கொள்ளலாம். திருவள்ளுவர் ‘மற்றெவ்வுயிர்க்கும் செண்தன்மை பூண்டொழுகலான்’ என்று அந்தணர்க்கு இலக்கணம் கூறுகிறார். முகம் சிவந்திருக்கலாம், ஆனால் உள்ளம் சிவந்திருக்கவியலாது என்று புரிந்துகொள்கிறோம். மற்றவர்க்கு ஒரு துன்பம் என்றால் மனம் இரங்குபவன் எவனோ அவனே ஸ்ரீவைஷ்ணவன் என்பது வழக்கில் உள்ள எண்ணம். ஒரு வேளை கருணையினால் மனம் சிவந்திருக்கலாம் என்பதால் உடலும் உள்ளமும் சிவந்திருக்கலாம் என்ற கோணத்தில் பார்ப்பது ஒரு சுவையே.