சாஸனம்

வானம் திடீரென இருள் சூழ்ந்து கரிய பேருருவம் கொள்ளும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளாக மழை இல்லை. ஊர் காலியாகிவிட்டது. பெயரில் தான் தீட்சிதர் இருக்கிறதே தவிர கோவில் கருவறைக்குள் போக முடியாது. அந்தப் பரம்பரை இல்லை. முன்னோர்கள் அரசாங்க உத்யோகஸ்தர்களாக இருந்தபடியால் கோவில் கைங்கர்யங்களில் இருந்து விலக்கி விட்டார்கள்.

கோவிந்த தீட்சிதர் பரம்பரைன்னு பேர் தான். அவரது பாண்டித்யம் எங்கே ? நாயக்க மன்னர்களின் ஆட்சியையே அவர்கள் ஊரில் இல்லாத போது தானே நின்று தனியாக நடத்திய கோவிந்த தீட்சிதர் பரம்பரை என்று சொன்னால் ஆம்படையாள் தர்மாம்பா கூட ஏளனம் செய்கிறாள். ‘தீட்சிதர் பரம்பரை ஆனா சோத்துக்கு வக்கில்லை’ என்று அவளது வீட்டில் ஏளனம் செய்கிறார்கள்.

அவர்களுக்குத் தெரியாது எங்கள் பின்புலம் பற்றி. இன்றைய காலத்தில் நாற்பது வேலி நிலம் இருக்கிறது என்னிடத்தில். ஆனால் பயன் தான் இல்லை. தர்மாம்பா பல முறை சொல்லிவிட்டாள். நிலத்தை விற்று விட்டு வேறு ஊர் சென்று விடலாம் என்று. ஆனால் போக மனம் வரவில்லை.

‘என்ன ஊர் இது ! ஒரு காலத்துல பஞ்சம் பொழைக்க வந்த எடத்துல ஏதோ கொஞ்சம் எழுதப் படிக்க வந்ததால கோவிந்த தீட்சிதர் சாஸனம் பண்ணிக்கொடுத்த எடம் நாப்பது வேலி. வருஷம் தவறாம கோவிலுக்குப் படியளந்துட்டு ஆறுல ஒருபங்க நாங்க எடுத்துக்கலாம். சாஸனத்துலயே அப்பிடிதான் இருக்கு. ஆனால் விளைச்சலே ஆறுல ஒருபங்கா இருந்தா என்ன பண்றது?’ இந்தக் கேள்வியைக் கேட்டு பதில் பெற கோவிந்த தீட்சிதர் இல்லை. நானூறு வருஷ சிலாசாஸனம் இன்னும் கோவில் வாசல்ல இருக்கு. ஆனா இதெல்லாம் யார்கிட்ட சொல்லி என்ன புண்ணியம் ?’ சற்று கோவில் கோபுரம் வரை சென்று வரலாம் என்று படியிறங்கினேன்.

Govinda Dikshitar‘நாளும் ரெண்டு தடவை கோபுர வாசல் போகாட்டா இப்ப என்ன குடி முழுகிப் போயிடறது ? சிலா சாஸனமாம் சிலா சாஸனம். என்ன புண்ணியம்? ஒரு வேளை அரிசி கிடைக்குமா அதால?’ தர்மாம்பா எப்போதும் அப்படித்தான். வேறு என்ன செய்வாள் ?

‘போறது போறேள் , அமாவாசை தர்ப்பணம் பண்ணிட்டு சாப்பிடாம போக வேண்டாம். சிலாசாஸனத்தக் கட்டிண்டு அழுங்கோ, ஆனா ஒரு வாய் சாப்டுட்டுப் போங்கோ.’ நல்லவள் தான். ஆனால் என்ன வாய் கொஞ்சம் அதிகம்.

‘ராக்ஷஸ வருஷம் ஆடி அமாவாசையாகிய இன்று வீர கேஸரி அச்சுத ராயப்ப நாயக்கர் கோலோச்சிய காலத்தில் ஐயன் கோவிந்த தீட்சிதனால் எழுதப்பட்டது…’ என்று தொடங்கியது அந்த சிலா சாஸனம். அதற்கு மேல் உள்ள எழுத்துக்கள் சிதைந்து போயிருந்தன.

நானூறு வருஷங்களுக்கு முன்பு இதே ஆடி அமாவாசையின் போதுதான் இந்த தர்மம் துவங்கியது. இந்த இடத்தில் நின்று தான் கோவிந்த தீட்சிதர் இந்தப் பிரகடனத்தைச் செய்தார். பின்னர் அவர் ஆற்றிய உரை இது தான் என்று அப்பா சொல்லியிருக்கிறார்.

‘இந்த தர்மம் சந்திர சூரியர்கள் இருக்கும் அளவுக்கு நடைபெற வேண்டும். தினமும் மேற்கில் உள்ள பெருமாள் கோவிலுக்கும் கிழக்கில் உள்ள சிவன் கோவிலுக்கும் அன்னப்படி அளிக்கப்பட வேண்டும். இந்த அன்னப்படியிலேயே தெய்வங்களுக்கு நைவேத்யம் சமைக்கப்பட வேண்டும். இதற்காக ஊருக்கு மேற்கே மேக்கிரிமங்கலமும், கிழக்கே ஆடுதுறையும், தெற்கே தொழுதாலங்குடியும் உள்ள அளவில் நாற்பது வேலி நிலம், அதற்தென்று வெள்ளைக் குளம், கடகடப்பைக் குளம் என்னும் இரண்டு குளங்களும் வீர கேசரி அச்சுதப்ப நாயக்கரால் நிவந்தம் அளிக்கப்படுகிறது. இந்த தர்மத்தை எனது குடும்பத்தைச் சார்ந்த வேத நாராயண தீட்சிதர் தேரழுந்தூரில் இருந்து நிர்வஹிப்பார். விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை தனது குடும்ப பரிபாலனத்திற்கு எடுத்துக்கொள்வார். இந்த தர்மத்துக்கு ஹானி விளைவிப்போர் காசியில் ஆயிரம் காராம்பசு வதை செய்த பாவத்தை அடைவார்கள்’. அப்பா இதனைப் பல முறை சொல்லியுள்ளார்.

ஒவ்வொரு முறை நிலத்தில் இருந்து குடியானவன் நெல் அளக்க வரும்போதும் வயிறு குலுங்கி அழத் தோன்றும். நாற்பது வேலி நிலத்தின் விளைச்சல் எங்கே ? இப்போது கலி காலத்தில் இந்த வெள்ளைக்கார அரசாங்கத்தில் வருஷத்துக்கு பத்து மூட்டை நெல் விளைந்தாலே பெரியதாக இருக்கிறது. கேட்டால் மழை இல்லை என்கிறான். வாஸ்தவம் தான். தாது வருஷப் பஞ்சம், பிறகு அடுத்தடுத்த பஞ்சங்கள், மழை இல்லை என்று குடியானவனும் என்னதான் செய்வான் ?

ஆனால் கோவிலுக்கு அளக்காமல் இருப்பது எப்படி ? நிலமே அதற்காகதானே கொடுத்திருக்கிறார்கள் ? ‘கோவிந்த தீட்சிதரா வந்து கேக்கப்போறார்? பேசாம பத்து மூட்டையும் நாமளே வெச்சுண்டா என்ன? இப்பிடி போக்கத்த பிராமணனா இருக்கேளே’ என்று மனைவியும் பலமுறை சொல்லிவிட்டாள்.

ஒரு நாலு வார்த்தை இங்கிலீஷ் படிப்பு படிச்சிருந்தால் இந்த வெள்ளைகாரா கிட்ட  உத்யோகம் பார்த்திருக்கலாம். மாசம் பொறந்தா அடுப்பாவது எரியும். இப்ப அதுக்கும் வழி இல்லை. வேதம் சாதம் போடும்னு அப்பா சொன்னத நம்பி மடிசிஞ்சியா இருந்து ஒரு புண்ணியமும் இல்லை. அடுப்புல பூன தூங்கறது. தஸ் புஸ்ஸுனு இங்கிலீஷ் படிப்பு படிச்ச எல்லாரும் பட்ணம் போய் கொழிக்கறா.

ஆனா தினம் ரெண்டு தரம் சிலா சாஸனத்தைப் பார்க்கல்லேன்னா அன்னிக்கி சாதம் எறங்க மாட்டேங்கறது. எவ்வளோ பெரியவா கோவிந்த தீட்சிதர் ? அவர் பேர்லயே எவ்வளவு தர்மங்கள்ளாம் இருக்கு ? அவர் எங்க குடும்பத்த நம்பி இந்த தர்மத்த குடுத்துட்டுப் போயிருக்கார். அவருக்கு துரோகம் பண்ணச் சொல்றாளே ஆம்படையா. ஏற்கெனவே குடும்பம் நசிச்சுப் போச்சு. இன்னும் இந்த துரோகம் வேற நடந்தா வேற என்னல்லாம் நடக்குமோ ?

அச்சுதப்ப நாயக்கர் கோவிந்த தீட்சிதர நம்பி அத்தன அரசாட்சியும் கொடுத்து, அவர் பேர் கெடாம தீட்சிதர் எத்தன தர்மம் ஏற்படுத்தியிருக்கார் ? அவர் பரம்பரைல வந்த்துகாகவாவுது ஏதோ விட்ட கொற தொட்ட கொறையா இருக்கற தர்மத்த விட்டுட முடியுமா ?

ஆனா இதப்பத்தி பல தடவை யோசிச்சாச்சு. ஒரு முடிவுக்கும் வர முடியல. தர்மாம்பா கேக்கறது சரிதானே. தீட்சிதர் காலத்துல நாப்பது வேலி நிலத்துலேர்ந்து கணிசமான நெல் வந்தது. அதுல ஆறுல ஒரு பங்கு குடும்பத்துக்கு சரியா இருந்தது. இப்ப விளைச்சலே இல்லையே. விளைச்சல் இல்லாத காலத்துல என்ன பண்ணணும்னு தீட்சிதர் எழுதிவெக்கல்லியே. அதுனால வித்துடலாம்கறா தர்மாம்பா. ஒரு வகைல சரின்னுதான் தோணறது.

ஆனா மனசு ஒப்புக்கல. நானூறு வருஷமா நடந்துண்டு வந்த தர்மம் நம்மளால நிக்கலாமான்னு இன்னொரு பக்கம் மனசு கேக்கறது. தீட்சிதர் என்ன நினைச்சிருப்பார் ? சந்திர சூர்யாள் இருக்கற வரைக்கும் இந்த தர்மம் நடக்கும்னுதானே நினைச்சிருப்பார் அவர். நம்ம காலம் ஆனாலும் இந்த சிவன் கோவிலுக்கும் பெருமாள் கோவிலுக்கும் தினப்படி அன்னப்படி நடக்கும்னுதானே அவர் நினைச்சிருப்பார். அவர் எண்ணத்துல மண்ணப் போடலாமா ?

இதோ இந்த சன்னிதித் தெருவுல தானே யானை மேல ஏறி தீட்சிதரும் அச்சுதப்ப நாயக்கரும் வந்திருப்பா ? ஆழ்வார் கோவில் வாசல்ல யானைய நிக்க வெச்சு ஆரத்தி சுத்தியிருப்பளே ! அச்சுதப்ப நாயக்கர் பேரச் சொல்லி ‘வாழ்க’ கோஷம் வானைப் பிளந்திருக்குமே ! துந்துபி முழங்க பெருமாள் கோவில்லேருந்தும் சிவன் கோவில்லேருந்தும் மாலை மரியாதைகள் வந்திருக்குமே ! இவாளுக்கெல்லாம் முன்னாடி என்னோட மூதாதை வேத நாராயண தீட்சிதர் மனசெல்லாம் பூரிப்பா ‘இப்பிடி ஒரு கைங்கர்யம் நம்மளுக்கு வாச்சுருக்கே’ன்னு கண்ணீர் பெருக நின்னிருப்பாரே !அதே எடத்துல அதே பரம்பரைல வந்த எனக்கு அந்த கைங்கர்யத்த நிறைவேத்த வக்கில்லாம போய் இப்பிடி மண்ணாந்தையா நிக்கறேனே !

இப்படியாவது தெய்வ சொத்த சாப்பிட்டு உடம்ப வளர்க்கணுமா ? எங்க பரம்பரை இருந்ததுக்கு அடையாளமே இந்த நாப்பது வேலி நிலம் தானே? நிலத்தால கோவிலுக்குப் பலன் இல்லை. என்னாலயும் இல்லை. ஒரே அடியா கோவிந்த தீட்சிதருக்கும் நாயக்கருக்கும் சேர்த்து துரோகம் பண்றேனோ ? இந்த எண்ணங்கள்ளாம் தர்மாம்பாவுக்கு வரல்லையே, எனக்கு மட்டும் ஏன் ?

இதுக்கு ஒரே வழிதான் இருக்கு. இந்த மாதிரி தர்ம சங்கடத்துல வேற ஒண்ணும் பண்ண முடியாது.

‘தீட்சிதரே, இதே ஆடி அமாவாசை அன்னிக்கித்தான் நீங்கள் இந்த சாஸனத்தை எழுதி வெச்சேள். எங்க பரம்பரைல எல்லாரும் உங்க வாக்கு தர்மத்துக்குக் கட்டுப்பட்டு நடந்துப்பாள்னு நெனச்சுத் தான் நீங்க நிவந்தம் கொடுத்தேள். ஆனா நான், உங்க பரம்பரைக்கே லாயக்கில்லாத பாவி. படிப்பும் இல்ல, பணமும் இல்ல. ஒரு வேள சாதத்துக்கு உஞ்சவிருத்தி எடுக்கறேன். இந்த நிலைல நாப்பது வேலி நிலத்த வாங்கிக்க இன்னிக்கி அமாவாசை நல்ல நாள்னு பெரிய பண்ணை நம்மாத்துக்கு வரப்போறார். என்னால விக்கறதுக்கும் மனசில்ல. விக்காம இருக்கவும் சூழ்நிலை இல்லை. எனக்கு இத விட்டா வேற வழி தெரியல. பெருமாளே என்ன மன்னிச்சுடுங்கோ’.

ஆண்டுதோறும் கரிய மேகங்கள் சூழும் ஆடி அமாவாசை அன்று சிலாசாஸனத்தின் முன் ஊரே கூடி நின்று படையல் வைப்பது, தர்ப்பணம் செய்துவிட்டு உணவருந்தாமல் கோபுரத்தின் ஏழாவது நிலையில் இருந்து விழுந்து உயிர்விட்ட நாகராஜ தீட்சிதர்  நினைவாகத்தான் என்று ஊரில் தற்போது யாருக்கும் தெரியவில்லை.

Advertisements

என் பேர் ஆண்டாள் – ஸ்டெம் செல் முதல் அக்கார அடிசில் வரை

‘பஞ்சாமிர்தம்’ என்றால் தெரியும்தானே ? அது தான் சுஜாதா தேசிகனின் ‘என் பேர் ஆண்டாள்’ நூல்.

‘அனுபவம்’, ‘சுஜாதா’, ‘பொது’, ‘பயணங்கள்’, ‘அறிவியல்’ என்று ஐந்து அமிர்தங்களைக் கொண்ட கட்டுரை நூல்.

39 சுவையான கட்டுரைகள் கொண்ட இந்த நூலில் என்னை மிகவும் ஈர்த்த சில கட்டுரைகளைப் பார்ப்போம்.

‘என் பேர் ஆண்டாள்’  – நூலின் பெயரில் ஒரு கட்டுரை. இல்லை Cute-உரை. அவ்வளவு Cute. ஆண்டாள் என்று பெயரிடப்படும் ஆசிரியரின் குழந்தை பேசுவது போல் அமைந்துள்ளது. மயில் இறகால் வருடியது போன்ற ஒரு உணர்வு.

‘அமுதன்’ – மகன் பெயர். கட்டுரையின் பெயரும் அதுவே. ‘அமுதன்’ பெயர்க்காரணமும் அது தொடர்பான ஆழ்வார் பாசுரங்களும் ஆக அருமை.

‘தொட்டமளூர்’ என்னும் பயணக்கட்டுரையில் ஒரு மண்டபம். அதில் அக்காலத்தில் புரந்தரதாசர் அமர்ந்து ‘ஜகதோதாரணா’ பாடியிருக்கிறார். தேசிகன் அமர்ந்து ‘ததியோதாரணா’ (தயிர் சாதம் உண்ணல்) என்கிறார். வார்த்தை விளையாட்டில் சுஜாதா மீண்டும். கட்டுரை முடிவு – சுஜாதா கர ஸ்பரிசம்.

‘மேல் கோட்டையில் ஒரு நாள்’ கட்டுரையில் இன்றைய நிலைமையின் நிதர்சனம் – ‘கிராமங்கள் கற்புடன் இருக்கின்றன. ஐ.டி.கம்பெனிகள் இன்னும் வரவில்லை’ என்கிறார். நெத்தியடி வாசகம்.

ராமானுசருக்குள்ள மேல்கோட்டைத் தொடர்பு, கோட்டைக் கோவிலின் விஸ்தீரணங்கள், கோவிலில் தொல்பொருள் துறையின் தொலைந்துபோன நிலை இத்தனையும் விளக்கப்படுகின்றன. முடிவில் – ‘பெருமாள் கூட்டத்தை நோக்க, கூட்டம் நோக்கியாவில் பெருமாளை நோக்க..’ – மீண்டும் சுஜாதா.

‘ராமானுச நூற்றந்தாதி’ பாடிய திருவரங்கத்து அமுதனார் பற்றிய கட்டுரையின் முடிவு மிகவும் ஆழமான உண்மைகளை உள்ளடக்கியது. மிக அற்புதமான ஸ்ரீவைஷ்ணவ அனுபவத்தை அளிக்கிறது. அடுத்தமுறை ஸ்ரீரங்கம் போகும் போது, அந்த வீட்டிற்குப் போக வேண்டும்.

பூந்தமல்லியில் வாழந்த திருக்க்ச்சி நம்பிகள் பற்றிய கட்டுரை உங்களைக் கரைத்துவிடும். 100 ஆண்டுள் முன்பு வாழ்ந்த அவர், ராமானுசருக்கே ஆசாரியன். அவரது வீடு இன்று இருக்கும் நிலை, அற நிலையத்துறையின் வழக்கமான விளக்கெண்ணை பதில் – உயர் பதவியில் உள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் கொஞ்சம் இந்தப்பக்கம் பார்க்கவும். ஒட்டுமொத்த தமிழர்களுமே தலைகுனிய வேண்டிய தருணம்.

இதெல்லாம் போகட்டும். இராமானுசருக்கு ‘அஷ்டாட்சர’த்தை உபதேசித்தார் திருக்கோஷ்ட்டியூர் நம்பி. இராமானுசர் அதனை உலகிற்கே அறிவித்தார். அந்தத் திருக்கோஷ்டியூரில் அவர் வாழ்ந்த வீட்டிற்குச் செல்கிறார் தேசிகன். ‘இராமானுசர் இந்த வீட்டிற்கு வந்திருக்கிறார்; நானும் அதே வீட்டிற்குச் செல்கிறேன் ’ என்று புளகாங்கிதம் அடையும் அவர் வீட்டின் நிலையை வர்ணிக்கிறார்.

‘ராக்கெட் வண்டுகள்’ என்னும் வண்டுகள் பற்றிய கட்டுரை அறிவியல், இலக்கியம், ஆன்மீகம் கலந்ததாக உள்ளது. வண்டு பற்றிய குறுந்தொகைப் பாடலான ‘கொங்குதேர் வாழ்க்கை..’யில் துவக்கம் ‘தேமருவு பொழிலிடத்து..’ என்னும் வண்டைத் தூது அனுப்பும் தேரழுந்தூர்ப் பாசுரத்துடன் முடிவு. தேசிகனின் ‘அப்பாவின் ரேடியோ’ நூலில் ‘பெருங்காயம்’ என்னும் தேரழுந்தூர் பற்றிய கதை நினைவுக்கு வந்தது. தேசிகனுக்கு எங்கள் தேரழுந்தூர் ரொம்ப பிரியம் என்று தெரிகிறது.

‘சுஜாதா’ பற்றிய கட்டுரைப் பகுதியில் மறைந்த எழுத்தாளர் பற்றிய அவரது இறுதி நாட்கள், இறுதிக்கணம் பற்றிய விவரிப்புகள் நெஞ்சை அடைக்கும்.

ஒருமுறை ஆசிரியர் தேசிகனின் தந்தையார் ஸ்ரீரங்கம் சென்றிருந்தபோது அங்கிருந்த தூண்களைத் தொட்டுக்கொண்டே இருந்தாராம். கேட்டதற்கு ‘இந்தத் தூணில் திருமங்கையாழ்வாரும் தொட்டிருப்பார்’ என்று சொன்னார் என்று அந்த வரலாற்றுத் தொடர்பை நினைவுபடுத்தியுள்ளார். நானும் இதே கருத்தை முன்னிறுத்தி முன்னர் இரண்டு கட்டுரைகள் எழுதியிருந்தேன். அவை இங்கே, இங்கே. தேசிகனின் இந்த நூலைப் படித்தவுடன் புல்லரித்தது.

அழகர் கோவில் என்னும் திருமாலிருஞ்சோலையில் ஆண்டாள் நூறு தடா அக்கார அடிசில் படைக்க எண்ணியதை நானூறு ஆண்டுகள் கழித்து ராமானுசர் நிறைவேற்றியதையும் ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் சாத்தியக்கூறுகளையும் ஒருங்கே கொண்ட இந்தப் பஞ்சாமிர்தக் கட்டுரை நூலில்.அசோகமித்திரன் பற்றிய கட்டுரையில் தமிழ்ச் சமுதாயம் எழுத்தாளர்களை வைத்துள்ள நிலையும் தெரிகிறது.

முடிக்கும் முன் : தென்கலை, வடகலை என்று இல்லாத வித்தியாசங்களை உண்டு பண்ணி. சண்டை போடும்  நேரத்தில், திருக்கச்சி நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருவரங்கத்து அமுதனார் வீடு இவற்றை வாங்கி, வைஷ்ணவ சமயக் கேந்திரங்களாக, பாசுரங்கள் கற்பிக்கும் பாடசாலைகளாக ஆக்கினால் குருபரம்பரை வாழ்த்தும். பெரியவர்களுக்கு அந்த மகரநெடுங்குழைக்காதப் பெருமாள் புத்தி வழங்கட்டும்.

என் பேர் ஆண்டாள் – இங்கே வாங்கலாம்.

பொக்கிஷம்

10 வருஷங்களுக்கு முன் தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவிலில் தாயார சன்னிதியில் பூமியில் புதைக்கப்பட்ட உண்டியலில் பல ஆயிரம் வருஷ வைர வைடூரியங்கள் இருப்பதாக யாரோ ஒரு புண்ணியவான் புரளி கிளப்பி விட, அது வரை அப்படி ஒரு கோவில் இருப்பதையே அறியாத இந்து அற நிலையாத்துறை உயிர்த்தெழுந்து ஆ.டி.ஓ, ரெவென்யூ இன்ஸ்பெக்டர், போலீஸ் மற்றும் அவர்கள் பரிவாரங்கள் புடைசூழ மத்தளம் கொட்ட, விரிசங்கம் நின்றூத, ‘பொக்கிஷத்தை’ கைத்தலம் பற்றக் கனாக்கண்டு ஜீப், கார் முதலிய ரத கஜ வாஹனங்களின் வந்து சேர்ந்தார்கள். ஊர் மக்களைக் காட்டிலும் இவர்கள் கூட்டம் அதிகமாக இருக்க, நான்கு பேருக்கு மேல் பார்த்தறியாத ஊரின் பைரவர்கள் ( நாய்கள் ) அரண்டு அடித்துக்கொண்டு கோவிலுக்குப் பின்னால் நந்தவனத்தில் ஓடி ஒளிந்து கொண்ட நல்ல நாளில் ஆர்.டி.ஓ. தலைமையில் உண்டியல் உடைக்கலாம் என்று முடிவானது..

எதற்கும் இருக்கட்டுமே என்று பாம்பாட்டிகளையும் உடன் அழைத்து வரச் செய்தார்கள்.

உண்டியல் லேசில் அசையவில்லை. பெரிய கடப்பாரைகள் கொண்டுவந்து ஆறு பேர் சேர்ந்து பூமியில் இருந்து பெயர்த்து எடுத்தார்கள். அது ஒரு மிகப்பெரிய கருங்கல் பத்தாயம் போல் இருந்தது. அதன் உள் என்ன இருக்குமோ என்ற கவலையில் மக்களை நகர்ந்து நிற்கச் செய்து அதனுள் மெதுவாக ஒரு கம்பியை இறக்கினார்கள். ‘ணங்’ என்ற ஒலி கேட்டதும் ஆர்.டி.ஓ. குதூகலமடைந்தார். சோழ ரத்தினங்கள் அவர் கண் முன் தோன்றின.

கிணறு இறங்குபவர்கள் இருவரை அழைத்து உள்ளே இறங்கிப் பார்க்கச் சொல்லலாம் என்று முடிவானது. அதற்குள் ஏன் அதை ஒரு பக்கமாக சாய்த்துப் பார்க்க்லாமே என்று பெரியவர் ஒருவர் சொன்னார். 4 பேர்  அந்தக் கருங்கல் பேழையை நகர்த்தி ஒரு பக்கமாக சாய்க்க முயற்சித்தனர்.

ஊரே ஒரு முறை மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்தது.

‘படீர்’ என்று என்று ஒரு சப்தம். மக்கள் அலறி அடித்து ஓடினர். பேழையை நகர்த்தியவன் ஒருவன் கை தவறி விட்டுவிட்டான்.

ஆயிரம் காலப் பேழை என்று நம்பப்பட்ட அந்தக்கருங்கல் பத்தாயம் உடைந்து விழுந்தது. உள்ளேயிருந்து ‘கல கல’ என்று பல நாணயங்கள் தெறித்து விழுந்தன. சில சங்கிலிகள், சில கொலுசுகள், வளையல்கள், உடைந்த பென்சில், சில ரப்பர், சிலேட்டுக் குச்சி. மஞ்சள் கலர் ரிப்பன், மூக்குக்கண்ணாடியில் ஒரு பக்க கம்பு முதலியன அவற்றுள் சில.

அப்படியே அள்ளிக்கொண்டு சென்றது துறை. பொக்கிஷங்களாம்.

அரைமணி நேரம் கழித்து சன்னிதி வாசலில் நானும் செங்கமலவல்லித் தாயரும் உடைந்த அந்தக் கருங்கல் பேழையைப் பார்த்தபடி நின்றிருந்தோம்.

கம்பன் வாழ்த்துவான்

மாற்றம் ஒன்று தான் மாறாதது என்று நினைத்திருந்தேன். அது இல்லை என்று ஆனது இந்த முறை. ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தது தேரழுந்தூர். கம்பர் கோட்டத்தில் தனியாகக் கம்பர் நின்றிருந்தார். துணைக்கு ஒரு சில ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தத்ன.

1982ல் பெரும் பொருட்செலவில் கட்டப்பட்ட கம்பர் கோட்டம் இன்று திருமண மண்டபமாக மாறியுள்ளது. ‘கேளடி கண்மணி’யில் இருந்து பாடல் ஒலிக்க அதைக் கேட்டுக்கொண்டு நின்றிருந்தார் கம்பர். எம்.ஜி.ஆர். அரசு கம்பருக்குக் கோட்டம் அமைக்க வேண்டி உண்ணாவிரதம் இருந்த பழைய தமிழாசிரியர்களை நினைவு கூர்ந்தேன்.

1982-ல் இந்த இடம் இருந்த நிலை என்ன? என்ன படாடோபம், என்ன மேளச் சத்தம் ? கம்பருக்கு விழா எடுத்துப் பட்டி மன்றங்கள், வழக்காடு மன்றங்கள், கவிதை வாசிப்புகள் என்று புலவர் கீரன், கி.வா.ஜ, செல்வகணபதி, புலவர்.இராமபத்திரன், மு.மு.இஸ்மாயில் என்று அன்று அணிவகுத்து கம்பரமுதம் அளித்த நிலை என் நினைவில் மீண்டும் தோன்றியது. அமர இடம் இல்லாமல் மக்கள் வீதிகளில் கூட நின்றிருந்தனர். இன்று நான் மட்டும், தனி ஒருவனாக வீதியில் நின்றவாறு கம்பன் சிலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு வேளை அன்று மேடையில் பேசியவர்களும் அரூபமாக என்னுடன் நின்று கொண்டிருந்தார்களோ! இருக்கலாம். ஒரு முறை வந்தால் மீண்டும் வரச் செய்யும் ஈர்ப்பு கொண்டது தேரழுந்தூர்.

தனியான கம்பர் -  கோட்டத்தில்
தனியான கம்பர் – கோட்டத்தில்

கம்பர் கோட்டத்தில் நிற்க மனமில்லாமல் ‘கம்பர் மேடு’ என்று அழைக்கப்பட்ட கம்பர் வாழ்ந்த இடம் நோக்கிப் பயணித்தேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்றது. ஏதாவது மாறி இருக்காதா என்கிற ஏக்கம். செல்லும் போதே மனம் ‘செல்ல வேண்டாம்’ என்று அறிவுறுத்தியது. கம்பர் மேட்டுக்கு எப்போது போனாலும் மனதில் ஒரு பெருத்த சோகம் ஏற்படும். இம்முறையாவது அப்படி இல்லாமல் இருக்க வேண்டுமே என்று மனம் விரும்பியது.

நுழைய வேண்டிய சந்தை விட்டு விலகி அடுத்த சந்தில் நுழைய முற்பட்டேன். அங்கிருந்த அம்மாளிடம் கம்பர் மேடு போகும் வழி பற்றி விசாரித்தேன். என்னை மேலும் கீழும் பார்த்தவர் முகவாயைத் தோளில் இடித்துச் சென்றார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை.

கம்பர் மேடு என்று அழைக்கப்பட்ட இந்த இடம் இனி கம்பர் காடு என்று அழைக்கப்படலாம் என்று தோன்றியது. கட்டணம் வசூலிக்காத கழிப்பறையாக, பரிதாபமாக நின்றிருந்தது கம்பர் மேடு.

கம்பர் காடான மேடு
கம்பர் காடான மேடு

மாபெரும் இலக்கியமான கம்ப இராமாயணத்தை நமக்கு அளித்து, இராமனின் புகழ் பாட இன்றும் நமக்கு வாய்ப்பளித்த கம்பன் வாழ்ந்த இடம் இதுவே. மூன்று வருடங்களுக்கு முன்பு சென்ற போது இருந்ததை விட இப்போது ஒரே ஒரு முன்னேற்றம் – கம்பர் மேட்டைச் சுற்றி இரண்டடி அளவு சுவர் எழுப்பியுள்ளார்கள். அதனால் என்ன பயன் என்று தெரியவில்லை.

மூன்று வருடங்கள் முன்பு இருந்தது போலவே ஆடுகளும் நாய்களும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அப்பகுதி மக்களின் காலைக் கடன்கள் கழிப்பிடமாகக் கம்பர் மேடு இன்றும் பயன்பாட்டில் உள்ளது.  ‘கம்பன் என்னும் மானுடன் வாழ்ந்ததும்..’ என்று இறுமாந்து சொன்ன பாரதி இன்று இருந்திருந்தால் ரயிலில் தலையை விட்டிருப்பான்.

வெந்த புண்ணில் வேல்
வெந்த புண்ணில் வேல்

காயத்தில் அவமதிப்பும் சேர்வது போல ‘இந்த இடம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது- பாதுகாக்கப்பட்ட பகுதி’ என்று உடைந்து போன பதாகை உள்ளது. இங்கே என்ன கட்டுப்பாடு செய்கிறார்கள், எதைப் பாதுகாக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை மனித மிருகக் கழிவுகளைப் பாதுகாக்கிறார்களோ!

நாய்களின் காவல்
நாய்களின் காவல்

நூறு ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளை அரசு பல பெரிய வண்டிகளைக் கொண்டு வந்து இந்த மேட்டை அகழ்வாராய்ச்சி செய்துள்ளார்கள். இங்கிருந்து பல பழைய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன என்று சில ஆண்டுகளுக்கு முன் காலமான 86 வயதான என் பாட்டி சொல்லியுள்ளார். அவரது சிறு வயதில் இவை நடந்தனவாம்.

கம்பர் மேடு பகுதிக்குள் நுழைய முற்பட்ட போது அங்கிருந்த நாய்கள் என்னை விரட்டி அடித்தன. கம்பன் வாழ்ந்த இடத்திற்குக் காவல் நாய்கள் தான் போல. ‘ஓ மனிதனே, நீ பாதுகாக்கிற அழகை விட நாங்கள் நன்றாகப் பாதுகாப்போம்,’ என்று அந்த நாய் கூறுவது போல் தோன்றியது.

வால்மீகியின் இராமாயணத்தை அப்படியே எழுதாமல் தமிழ்ப் பண்பாட்டுடன் ஒட்டி நாமெல்லாம் நெஞ்சு நிமிர்த்தி நிற்கும்படி இராம காதை எழுதிய கம்பன் வாழ்ந்த இடத்தை கழிப்பிட மேடாக வைத்துள்ளது தமிழரசுகள் என்று மார்தட்டிக்கொள்ளும் அரசுகளின் தலையில் குப்பைக் கிரீடம் வைத்தது போல் என்று எனக்குத் தோன்றியது.

மதுபானம் விற்கும் அரசும் சாதீயம் பேசும் எதிர்க்கட்சிகளும் உள்ள வரை கம்பர் மேடு இப்படி இருப்பதில் வியப்பில்லை தான். ‘மு.க’வில் முடியும் எந்தக் கட்சியும் இதனைச் சரி செய்யப் போவதில்லை. திருக்குறளை வளர்க்கப் பாடுபடும் பா.ஜ.க.வின் தருண் விஜய்யின் பார்வையாவது தேரழுந்தூரின் கம்பர் மேட்டின் மீது பட வேண்டுமே என்று ஆமருவியப்பனை வேண்டிக்கொண்டேன். கம்பர் மேட்டைப் பார்த்து அழுதுவிட்டு வெளியேறினேன். ஆமருவியப்பனின் தேர் வந்துகொண்டிருந்தது. நல்ல சகுனம் என்று தோன்றியது.

ஆமருவியப்பன் கோவிலுக்குச் செல்லலாம் என்று அதனை நோக்கி நடந்தேன். முதலில் ‘தர்ச புஷ்கரணி’ என்னும் குளம் நீர் நிரம்பிய நிலையில் பார்க்கவே பரவசமாக இருந்தது. இந்தக் குளம் இருந்த நிலை என்ன ? ஆடுகளும், சிறுவர்களும் விளையாடும் இடமாக, பாழ்பட்டு இருந்த இந்தக் குளம் இன்று நீர் நிரம்பி வழிவது காணக் கண் கோடி வேண்டும். இந்தக் குளம் இப்படி மாறுவதற்குக் காரணமான மூன்று முதியவர்களுக்கு நம் தலைமுறை பெரும் கடன் பட்டிருக்கிறது.

இந்து சமய அற நிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இன்று கோவில் நல்ல நிலையில் உள்ளது. 2010-ம் ஆண்டு நடைபெற்ற குட முழுக்கு நிகழ்விற்குப் பின் பக்தர்கள் வரவு அதிகரித்துள்ளது.

குளம் முன்னர் இருந்த நிலையும் இப்போது உள்ள நிலையும்.

குளம் தற்போதைய நிலை
குளம் தற்போதைய நிலை
திருக்குளம் 2008
திருக்குளம் 2008

குளம் மட்டுமா? கோவிலும் தான். பாழ்பட்டுப் போன கோவிலைத் தூக்கி நிறுத்திய அதே மூவர் நம் வணக்கத்துக்குரியவர்கள்.  கோவில் முன்னம் இருந்த நிலையும் தற்போது உள்ள நிலையும்.

செப்பனிடப்பட்ட கோவில்
செப்பனிடப்பட்ட கோவில்

பெருமாள் கோவில் முடித்து மாலை வேதபுரீசுவரர் கோவிலுக்குச் சென்றேன். எந்த மாற்றமும் இல்லாமல், வரலாற்று நிகழ்வுகளுக்குச் சான்றாக அதே அமைதியுடன் நின்றுகொண்டிருந்தது முதற்சோழர் காலக் கோவில். ‘கொஞ்சம் வரலாறு கொஞ்சம் சுவாசம்‘ என்னும் முந்தைய பதிவு இக்கோவில் பற்றி எழுதப்பட்டதே.

வரலாற்றின் சாட்சியாக நிற்கும் வேதபுரீசுவரர் கோவில்
வரலாற்றின் சாட்சியாக நிற்கும் வேதபுரீசுவரர் கோவில்

பல ஆயிரங்கள் செலவிட்டு பாலி, ஹாங்காங் என்று விடுமுறை சுற்றுப் பயணம் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை. சில நூறுகளிலேயே நமது வரலாற்றை அறிய முடியும். ஒரு முறை சென்று வாருங்கள்.

கம்பன் வானிலிருந்து வாழ்த்துவான்.

பழைய கணக்கு – நூல் விமர்சனம் – ரெங்கபிரசாத்

உலகில் என்றும் பழைய கணக்காகப் பார்க்கப்படும் மானுடம் என்ற பண்பிற்குப் பின்னால் பயணிக்கிற புத்தகம்தான் “பழைய கணக்கு“.

மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு, நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது படைப்பாளியின்  கடமை. அதை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளார். படிபவர்களை சம்பவங்களோடு ஒன்றிவிடச் செய்துவிடுகிறார்.

இவை வெறும் கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்டு வேயப்பட்ட கதையோ அல்லது நினைவுகூறலோ அல்ல. தான் கண்டு , கேட்டு , உணர்ந்த ஆளுமைகளின் வாழ்வியல் அனுபவங்களை, சாதனைகளை,  சிந்தனைகளை எழுத்துமுலமாக ஆவணங்களாகத் தந்துள்ளார் ஆசிரியர். நிஜத்திலும் , நினைவிலும் வாழும் எதார்த்த மனிதர்கள் ஒவ்வொருவரும் நம் கண்முன்னே வந்து போகிறார்கள்; ஆவணப்படம் காண்பது போல அவர்களின் வாழ்வும் செயல்பாடுகளும் காட்சிகளாக விரிகின்றன. வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் நூலாசிரியர் தன் கருத்துகளை ஆங்காங்கே விதைக்கவும் தவறவில்லை.

அறம் , சமுதாயக் கோபம் , வாழ்க்கையின்  ஓட்டத்தில் நாம் அவதானிக்க மறந்த , மறுத்த விடயங்கள் மூலம்   நம்மை நகர்த்திச் செல்லும் இந்நூல் படிக்கக் களைப்பு தராமல் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் நடைதான். சமூக சிந்தனையோடு தனக்கே உரிய எள்ளல் பாணியில் அவர் காட்டும் இடங்கள் நகைச்சுவையே என்று தோன்றினாலும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை.

உபகாரம் என்ற கதையில் நூலாசிரியரின் சமுகப் பார்வை மூலம் சமூக முரண்களை அழகாகப் படம்பிடித்துக் கட்டியுள்ளர். //வாப்பா இருந்திருந்தால் இதே வயது தான் இருக்கும் அவருக்கும் // என்று தன் தந்தையை ஒப்பிட்டு பார்க்கும் போது , அங்கே மேலோங்கி நிற்ப்பது மனித நேயம் மட்டுமே . இராமனைப் பார்க்கக் கானகத்திற்கு பரதன் வந்தான், முனிவர்கள் வந்தார்கள் ஆனால் யாரும் இராமன் காட்டில் உணவிற்கு என்ன செய்வான் என்று நினைத்து அவனுக்கு உணவு கொண்டு வரவில்லை. குகன் ஒருவன் தான், இராமனுக்குத் தேவைப்படுமே என்று உணவு கொண்டு வந்தான். ஆகையால்தான் கம்பர் – ” உள்ளம் தூயவன்; தாயின் நல்லான்” என்று குறிப்பிடுகிறார். உபகாரம் கதையில் இதைப் போன்ற நிகழ்வைப் பார்க்கலாம் .

பெரிய தாக்கத்தை உண்டுபண்ணிய கதைகள் ‘மாயவரம்’ , ‘சார் விட்டுக்குப் போகணும்’. இந்த கதையின் பாதிப்பு , அடுத்த முறை என் வயது ஒத்த மாயவரம் ஊர் மனிதரைப் பார்த்தால் என்னுடைய அடுத்தகேள்வி, ‘உங்களுக்கு சாரைத் தெரியுமா?’ என்பதே. குருபக்திக்கு ஒருநல்ல உதாரணம் . நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக இதுபோன்ற ஆசிரியரைக் கடந்து சென்றுதான் இருப்போம் , மனிதனின் கையாலாகாத தன்மை கன்னத்தில் அறைவது போல் இருந்தது என்று குறிப்பிடும்போது,  இயற்கைக்கு முன் மனிதனின்  ஆளுமை எவ்வளவு குறைவு என்பதை  உறுதிப்படுத்துகிறது. இதயம் கனத்தது.

ஒரு தேரின் கதை – காரணப்பெயரான தேர்-அழுந்தூர் (செலுத்திய தேர் செல்லாமல் அழுந்திய காரணத்தினால் தேர்-அழுந்தூர் ) அதன் காரணத்தை இழந்து, பின்பு மீண்ட கதை. ஒற்றுமை மற்றும் விடமுயற்ச்சியின் பலன் பற்றி விளக்குகிறது. புறத்தில்  சில நேரங்கள்மட்டும் எரிந்த தீ , அகத்தில் அணைவதற்க்கு  ஐம்பது ஆண்டுகாலம் தேவைப்பட்டு இருக்கிறது.

‘கொஞ்சம் வரலாறு , கொஞ்சம் சுவாசம்’ கதை – நூலாசிரியரின் தார்மீக கோபத்தின் வெளிப்பாடாகத் தெரிகிறது . வரலாறு படைத்த தமிழினம்  அதை ஆவணப் படுத்தியது குறைவு அல்லது ஆவணப் படுத்தி இழந்தது  அதிகம். //இந்த தளத்தின் மேல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சுந்தர சோழனோ, பராந்தகனோ நின்றிருக்கலாம்//. அந்த தார்மீக கோபத்தின் நியாயங்களைப் பங்குபோட்டு கொஞ்சம் மன உறுத்தலோடு தான் இந்தக் கதையைக் கடக்க முடிந்தது. அமரர் சுஜாதா சொன்ன செய்திதான் நினைவில் நின்றது . கோயில் தூண்கள் சிலவற்றைத் தொட்டுக்கொண்டு, நம் முன்னோர்கள் கால்வைத்து ஏறியபடிகள் மீது நடந்துகொண்டு நாங்கள் இருவரும் இந்தக் கருத்தைப் பரிமாறிக்கொண்டோம். அப்போது எங்கள் முன்னோர்கள் தங்களின் குழந்தைகளைப் பார்ப்பது மாதிரி உணர்ந்தோம். அது ஒரு உன்னத அனுபவம்.

ஒளிரும் மகத்தான ஆளுமைகளைத் தனது எழுத்தில் ஆவணப்படுத்திய ஆமருவி தேவநாதன் பாராட்டிற்குரியவர். அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

மனித நேயம் தேவைப்படும் வரை இதுபோன்ற கணக்குகளும் தேவைப்பட்டுக்கொண்டுதான்  இருக்கும் .

வாழ்த்துக்கள் , தொடரட்டும் உங்கள் கணக்குப் பயணம்.

சொத்து

‘அது சரி மாமா, வாழை இலை வாங்கின கணக்கு அம்பது ரூபா ஒதைக்கறது’, என்றேன் நான். மாமா என்று அழைக்கப்பட்ட பெரியவர் ஓய்வு பெற்ற இந்தியக் கணக்கியல் துறை அதிகாரி. அவரிடம் கணக்கு கேட்பது என்னவோ போல் பட்டது. ஆனாலும் பொதுச் செலவு என்று வந்த பிறகு கணக்கில் கெட்டியாக இருக்கணும் இல்லையா ?

நேரம் மாலை மணி 5 இருக்கலாம். தேரழுந்தூர் அஹோபில மடத்தின் வாசல் திண்ணையில் நடந்தது இந்த சம்பாஷணை. ஊரில் இருந்த ஒரே அக்ரஹாரத்தில் மிச்சம் இருந்த நான்கைந்து பிராமண இருப்புக்களில் ஒன்று அஹோபில மடத்தின் இந்தக் கிளை. 600 ஆண்டுகளுக்கு முன் ஆந்திரத்தில் அஹோபில மலையில் துவங்கிய இந்த மடம், சில ஆயிரம் மைல் தொலைவில் உள்ள தேரழுந்தூரில் ஒரு கிளை கொண்டுள்ளது. கருங்கல் மண்டபங்கள் கொண்ட இந்த மடத்தில் ஊரில் உற்சவம் என்றால் மக்கள் கூடுவர். வெளி ஊர்களில் இருந்து என்னைப் போன்றவர்கள் அங்கு தங்கி ஊர் வேலை செய்வர்.

ஆமருவிப் பெருமாள் கோவில் உற்சவம் தான் என்றாலும் உற்சவங்கள் அஹோபில மடத்தின் திண்ணையில் இருந்தே பெரியவர்களால் தீர்மானிக்கப்படும், கணக்கு வழக்குகள் சரி பார்க்கப்படும். இது சில நூறு ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு நிகழ்வு.

அந்த வகையில் அந்த வருட கோவில் உற்சவ வேலைகள் சம்பந்தப்பட்ட கணக்குதான் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு 50 ரூபாய் இடித்தது. அது பெரிய விஷயமா என்று கேட்கலாம் தான். ஆனால் நிலைமை அப்படி. வருஷம் தோறும் வசூல் செய்து உற்சவம் நடக்கும். 50 ரூபாய்க்கு அரை மணி கணக்குப் பார்க்க வேண்டுமா என்று பல சமயங்களில் தோன்றும். ஆனாலும் ஆடிட் என்று ஒன்று உண்டு. அதனைச் சரியாகச் செய்யவேண்டும் என்பதில் எங்களுக்கு ஒரு
கெடுபிடி உண்டு.

பல நூறு ஆண்டு காலக் கோவிலுக்கும், மடத்துக்கும் வருமானம் இல்லையா ? என்று பல முறை கேட்டதுண்டு. நாற்பது வேலி நிலம் உள்ளது பெருமாளுக்கு. ஆனாலும் அவர் பக்தர்களை நம்பியே உள்ளார் என்றால் நம்பவா முடிகிறது ?
ஆனால் அதுதான் தமிழகக் கோவில்களில் பலவற்றின் நிதர்ஸனம்.

மடம் கோவில் சார்ந்தது அல்ல. இதற்கும் சில நில புலன்கள் உண்டு. ஆனால் எங்கே என்று தான் தெரியவில்லை. நான் போவதோ ஒரு வாரம். கோவில் வேலைகள் செய்து விட்டு பிழைப்பு வேண்டி வெளியூர் செல்ல வேண்டும். ஒரு
வாரத்தில் நில அளவைகள் செய்ய முடியாது.

50 ரூபாயில் எங்கள் கணக்கு நின்றது. பழையபடி ரஸீதுகளைத் துழாவிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்தக் குரல் கேட்டது. ‘சாமி, இங்கெ செத்த வரீங்களா ?’, என்றது அந்தக் குரல். தூரத்தில் இருந்து பார்த்த போது வெள்ளை துப்பட்டி முக்காடு போட்ட வயதான் பெண் போல் தெரிந்தது.

வாசல் சென்றேன். வந்திருந்தது 75 வயது மதிக்கத்தக்க முஸ்லீம் பெண்மணி. மடத்தில் இந்த அம்மாளுக்கு என்ன வேலை என்று யோசித்தபடியே சற்று நிதானித்தேன்.

‘சாமி, பெரியவங்க யாராது இருக்காகளா ?’, என்றார் அவர். என்னை ‘சாமி’ என்று சொன்னது சற்று வித்யாசமாக இருந்தது. அவருக்கு நாம் தேவை இல்லை. என் தந்தையாரோ அல்லது வேறு யாராவது பெரியவரோ தேவை.

அப்பா யாரென்று கேட்டபடியே வந்தார். ‘யாரும்மா நீ?’, என்று கேட்டார்.

‘மடத்து ஐயா நீங்க தானே, கொஞ்சம் பேசணும்’, என்றார். வாசல் திண்னையில் அமர்ந்தார். மடத்தின் உள்ளே இருந்து சில வயதான பிராமணர்கள் எட்டிப் பார்த்தனர். அவர்கள் அனைவரும் ஸேவார்த்திகள். உற்சவத்திற்காக வந்திருந்தனர்.

‘சாமீ, முடியலெ சாமீ’, என்று அழ ஆரம்பித்தார் அந்த அம்மாள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

‘என்னன்னு சொல்லும்மா. யாராவது ஏதாவுது சொன்னங்களா ?’, என்று கவலையுடன் கேட்டார் அப்பா.

‘அதில்லீங்க. கொஞ்ச நாளா தூக்கமே இல்லீங்க. சொப்பனம் ஒண்ணு வருது. தினம் அதுவே வருது. சிங்கம் ஒண்ணு வந்து மூ
ஞ்சீலெ அறையுது. என்னுது, எங்கிட்டே  குடுத்துடுன்னுது. ஒண்ணும் புரியலீங்க’, என்றார் அந்த அம்மாள்.

எங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. இந்த அம்மாள் காணும் கனவுகளுக்கும், அப்பாவுக்கும் என்ன சம்பந்தம் ?

‘சரிம்மா, தூக்க மாத்திரை ஏதாவது போட்டுக்குங்க. நான் என்ன செய்ய முடியும் ?’ என்றார் அப்பா.

‘அப்பிடி சொல்லப் பிடாது சாமி. நம்ம வீட்டுக்கு ஒரு தரம் வரணும் சாமி. இங்கெ பலரு இருக்காங்க, சில விஷயங்கள் இங்கெ சொல்ல தோதுப்படாதுங்க ஐயா’, என்றார் அந்த அம்மாள். யோசிச்சுச் சொல்வதாக அப்பா சொன்னார். பின்னர் மறந்து போனோம்.

தேர் ஓடி, அதன் பின் புஷ்பப் பல்லாக்கு நடந்து முடிந்தது. உற்சவங்கள் முடிந்தன என்று கொடி இறக்கப்பட்டது.

அன்று இரவு சென்னை செல்ல ரயில் டிக்கெட் எடுத்து வந்தேன். 11 மணிக்கு ரயில். 9 மணி அளவில் கிளம்பி வாசலில் வந்து கோபுரம் நோக்கிக் கை கூப்பினார் அப்பா. எதிரே அந்த முஸ்லிம் அம்மாள்.

‘சாமி, வரேன்னு சொன்னீங்களே’, என்றார். அப்போதுதான் எங்களுக்கும் நினைவு வந்தது.

‘ஊருக்குக் கிளம்பிட்டீங்க போல. பயணம் தொடருங்க. சித்தே அஞ்சு நிமிஷம் திண்ணைலெ அமருங்க’, என்று சொல்லித் தன் கையில் கொண்டுவந்திருந்த ஒரு காகிதச் சுருளை எடுத்துத் திண்ணையில் பரப்பினார்.

ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருந்தோம். அப்போது அவரே போசினார்.

‘சாமீ, நான் சின்ன புள்ளையா ஒரு 7 – 8 வயசு இருந்தப்ப எங்க வாப்பா வருஷம் தோறும் ‘மடத்துக் கிரையம்’ன்னு சொல்லி பத்து மூட்ட நெல்லு எடுத்து வெப்பாரு. அவுங்க வாப்பா காலத்துலே ஐயமாருங்க சில பேரு மடத்தும் பேர்ல
இருந்த நஞ்சை நாலு ஏக்கரா நிலத்த எங்களுக்குக் குத்தகைக்குக் கொடுத்தாங்க. அப்பொலேர்ந்து வருஷம் தவறாம எங்க தாத்தாவும், வாப்பாவும் விளைச்சல்ல நாலுல ஒரு பங்கு மடத்துக்குக் கொடுப்பாங்க. எங்க புருஷங்ககாலத்துல அது
மாறிப்போச்சு. இப்போ எனக்கு வயசானப்புறம் இது நினைப்பு வந்துது. ஆனாலும் அப்பிடியே உட்டுட்டேன்.

ரெண்டு மாசமா தூக்கத்துல சிங்கம் வந்து அறையுது. தூக்கமும் வரல்லே. ரொம்ப யோசிச்சுப் பார்த்தேன். மடத்து வாசல்லெ சிங்கம் முகம் இருக்கற சாமி சிலை தெரிஞ்சுது. பொட்டுல அறஞ்ச மாதிரி இருந்தது. ‘என்னுது என்னுது’ன்னு
சிங்கம் சொன்னது இது தான் போலன்னு உங்ககிட்டே அன்னிக்கி வந்தேன். ஆனாலும் பல பேர் இருந்தாங்க. அப்பிடியே போயிட்டேன்.

தேடிப் பார்த்ததுல, எங்க வாப்பாவோட பெட்டில இந்த பத்திரங்கள் கெடைச்சுது. இது என்னான்னு வக்கீல் ஐயிருகிட்டே கேட்டேன். அவுருதான் சொன்னாரு 100 வருஷம் முன்னாடி நடந்த கிரையம் பத்தி. அப்பவே உங்க கிட்டே
குடுத்துடணும்னு நெனைச்சேன். பாருங்க, அப்பலேர்ந்து சொப்பனம் நின்னு போச்சு’, என்று கதறிக் கதறி அழுதார் அந்த அம்மாள்.

பத்திரங்கள் யாவையும் வெள்ளைக்கார அரசாங்கப் பத்திரக் காகிதங்கள். துரைசாமி ஐயங்கார் என்பவர் 1908-ம் வருஷம் ஜனாப் அப்துல் வஹாபுக்குக் குத்தகை கொடுத்த விபரம் இருந்தது. அவர் இந்தப் பாட்டியின் தாத்தா. சுமார் 40 வருடம் குத்தகை நெல் வந்துள்ளது. பின்னர் நின்றுவிட்டது.

அஹோபில மடத்தின் வழிபடு தெய்வம் நரசிம்மப் பெருமாள் தன் சொத்தை மீட்டுள்ளார் என்று நினைத்துக்கொண்டேன்.

இந்த முறை நான் தேரழுந்தூர் சென்றபோது அந்த அம்மாளின் வீட்டைத்தேடிச் சென்றேன். அவரது பேரனும் மனைவியும்  இருந்தனர். அந்த அம்மாள் பத்திரங்களை ஒப்படைத்தவுடன் மிக நிம்மதியாக இருந்ததாகவும் பின்னர் ஆறு மாதங்கள்  கழித்துக் காலமானதாகவும் சொன்னார்கள்.

சுவற்றில் தெரிந்த படத்தில் அவரது முகம் சாந்தமாகத் தெரிந்தது.

சிங்கைக் கம்பன் விழா-2014

Kamban Vizhaaதேரழுந்தூரில் பிறந்த கம்பனுக்குச் சிங்கையில் விழா எடுத்தார்கள். சிங்கப்பூரின் முதல் கம்பன் விழா அதன் எழுத்தாளர் கழகத்தின் ஆதரவில் நடைபெற்றது. ஒரு நாள் முழுக்கக் கம்பச் சுவை பருக வாய்ப்பு. ஏறக்குறைய 25 ஆண்டுகள் கழித்துக் கம்பன் விழா அனுபவம்.

அந்நாட்களில் தேரழுந்தூரில் ‘கம்பர் விழா’ நடக்கும் ( ‘ர்’ – காண்க ). .மு.இஸ்மாயில், சொ.சத்தியசீலன், புலவர். கீரன், செல்வகணபதி, முனைவர். இராமபத்திரன் ( என் பெரியப்பா ) முதலானோர் பல தலைப்புக்களில் பேசுவர். இளமையில் கல். அது என் இளமையின் மைல்-கல்.

ஒரு முறை சாலமன் பாப்பையா ( அப்போது அவர் மதுரைக் கல்லூரிப் பேராசிரியர் ) சீதை குறித்து ஏதோ ஒரு வார்த்தை சொல்லிவிட்டார். ஆனால் அவரோ விருந்தினர், நடுவர். மேடையில் எதுவும் கூற முடியாது. பட்டிமன்றம் முடிந்து
அவரை என் பெரியப்பா எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார். அதன் பின்னர் இருவரும், அவர்களுடன் வேறு சில அறிஞர்களும் சுமார் 2 மணி நேரம் சீதை பற்றிப் பேசினர். ஆழ்வார்கள், கம்பன், துளசிதாசர், வால்மீகி என்று பலரும்
சீதை பற்றிச் சொன்ன கருத்துக்கள் எல்லாம் பேசினர். அந்த வயதில் முற்றிலும் உள் வாங்கிக் கொள்ளும் ஆற்றல் இல்லை. ஆனால் இந்த விஷயங்கள் குறித்துப் பேசினர் என்பது புரிந்தது.

அது போலவே சிங்கையிலும் நடந்தது. ‘பாத்திரங்கள் பேசினால்’ என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இராம.வைரவன் இந்திரசித்தாகக் கவி பாடினார். ஆனால் மேடையில் ‘வீடணன்’ உருவில் அமர்ந்திருந்த வெண்பா வேந்தர் ஆ.கி.வரதராசனாரை ‘எட்டப்பன்’ என்று சாடிவிட்டார். ‘ஆகா வென்றழுந்தது பார் யுகப்புரட்சி’ என்று பாரதி சொன்னது போல வீடணர் பொங்கி எழுந்தார். நிமிடத்தில் வெண்பா இயற்றி இந்திரசித்தரை மறுத்தார். அருமையான பல கவிதைகள் கூனி, சூர்ப்பனகை, மண்டோதரி, சுக்ரீவன், வாலி முதலான பாத்திரங்கள் மூலம் பேசின.

பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் ‘தேன்’ என்னும் சீரில் முடிந்த கவிதை வரிகள் நிற்காமல் கொட்டிக்கொண்டே இருந்தன. சமீபத்தில் கலைஞரிடம் பரிசு பெற்றவர் இவர்.

பட்டி மன்றங்கள் என்றால் தொலைக்காட்சிகளின் மூலம் நாம் அறிந்துகொண்டுள்ளது ‘பட்டி’ ( மலையாளப் பொருள் கொள்க ) களின் அணிவகுப்பு என்பதைத்தான். ஆனால் கம்பன் விழாப் பட்டி மன்றம், தன் நிலையில் இருந்து விழா மன்றமாக் இருந்தது. காரணம் பங்கேற்றவர்களும் நடுவரும். பங்கேற்ற நால்வரில் மூவர் முனைவர்கள். நடுவரோ உலகறிந்த தமிழறிஞர் கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள். ‘தம்பியருள் சிறந்தவன் பரதனா, இலக்குவனா’ என்பது தலைப்பு. தீவிர சொற்போருக்குப் பின் ‘பரதனே’ என்று தீர்ப்பளித்தார் ஜெயராஜ்.

முன்னதாகக் காலையில் மலேசிய அமைச்சர் சரவணன், சிங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தினகரன், சிங்கைத் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன், தவிர பேரா. சொ.சொ.மீ மற்றும் ஜெயராஜ் பேசினர். விழாத் தலைவராக முனைவர்.சுப.திண்ணப்பர் சிறப்புரை ஆற்றினார்.

‘மும்முறை பொலிந்தான்’ என்னும் தலைப்பில் இராவணன் பற்றீப் பேரா.சொ.சொ.மீ.யும், ‘கம்பன் கண்ட மானுடம்’ என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜ் அவர்களும் பேசினர்.

செவிக்கு உணவு இல்லாத ஒரு அரை மணி நேரத்தில், வயிற்றுக்கும் ஈயப்பட்டது ஆனந்த பவன் சார்பில்.

என் கை வண்ணம் எதுவும் இன்றி, கண்ட வண்ணம் நிகழ்ந்த வண்ணம் எழுதியிருக்கிறேன் இந்தத் தேரழுந்தூர்க் கட்டுத்தறி. தவறுகள் கட்டுத்தறியினுடையவை என்பதறிக.

விழாவின் உணர்ச்சிப்பிரவாகப் பெருக்கால் நானும் ஒரு மரபுக் கவிதை எழுதலுற்றேன். என்ன ‘பா’ என்றெல்லாம் கேட்காதீர்கள். தெரியாது.

ஆழிசூழ் உலகுக
கெல்லாம் அஞ்சுவை தந்த கம்பன்
ஆமருவிக்கும் தன் கவிச்சுவை தெரியத் தந்தான்
ஆசுகவிப் புலவர் யாரும் பாங்குடனே பாடக் கேட்டேன்
ஆவெனவே திறந்த வாய் பிளந்த வாறு.

‘மும்முறை பொலிந்தான்’ என்ற தலைப்பில் பேரா.சொ.சொ.மீ. பேச்சு :

‘கம்பன் கண்ட மானுடம்’ என்ற தலைப்பில் இலங்கை ஜெயராஜ் பேச்சு :

‘தம்பியரின் சிறந்தவன் இலக்குவனா பரதனா ? பட்டிமன்றம்- இலங்கை ஜெயஆஜ் பேச்சு :

பெயரில்லாப் பெருமகன்

20140529-214518-78318509.jpg
பெயரில்லாப் பெருமகன்

இந்த முறை தேரழுந்தூர் சென்ற போது கவனிப்பாரற்ற பழைய சிலை ஏதாவது கிடைக்கிறதா என்று சற்று கண்களை அகல விரித்துக்கொண்டு பார்த்தேன்.

நல்ல பௌர்ணமி இரவு அது. கோவிலில் என்னையும் என் தம்பியையும் தவிர ஓரிருவரே இருந்தனர். அவனும் என்னைப்போல் ஒரு வரலாற்றுக் கிறுக்கன். பொழுது போகாவிட்டால் பழையாறை சென்று ஏதாவது சோழர்காலப் பள்ளிப்படை இருக்கிறதா என்று பார்த்து வருவான்.

பெருமாள் சன்னிதியில் இருந்து தாயார் சன்னிதிக்குச் செல்லும் வழியில் ஒரு படி இறக்கத்தில் உள்ள பழைய கல் தூணில் இந்த மானுடனின் வடிவம் தென்பட்டது. நேராகப் பார்ர்க முடியாமல் ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரியும் விதமாக உள்ளது. தூணின் மிக அருகில் கைப்பிடிச் சுவர் ஒன்று கட்டியுள்ளதால் இந்தச் சிலை இருப்பது அதுவரை தெரியவில்லை.

முன்னம் பல முறை, அதே இடத்தில் அமர்ந்து ஆமருவியப்பன் கோவிலின் கட்டடக் கலையை வியந்து பேசியதுண்டு. ஆனால் அப்போதெல்லாம் மிக அருகில் இருந்த இந்தத் தூண் சிற்பம் கண்களில் படவில்லை.

கண்கள் மூடியிருப்பது போலும், கைகள் கூப்பி இருப்பது போலவும் தெரிகிறது இந்த வடிவத்தைப் பார்த்தால். உடலில் ஆபரணங்கள் அதிகம் இல்லை. ஆனால் முகத்தில் ஒரு பெரிய அமைதி தெரிகிறது. ஏதோ எல்லாவற்றையும் அறிந்து அதனால் வேறு எதுவும் வேண்டாம், இறை அனுபவம் மட்டுமே போதும் என்பது போன்ற ஒரு பேரமைதி இந்த ஆடவரது முகத்தில் தெரிகிறது.

இவர் யார் என்று விசாரித்தேன். அப்படி ஒரு தூண் சிற்பம் இருப்பதே பலருக்கும் தெரியவில்லை.

அவரது கைகளில் ஆயுதம் இல்லை. உடலின் மேல் பாகத்தில் ஆடை இல்லை. அதிக ஆபரணங்கள் இல்லை. இடையிலும் பெரிய ஆடைகள் எல்லாம் இல்லை. ஒரு துண்டு போல் ஏதோ ஒன்றை அணிந்துள்ளார். கால் பாதங்கள் தெரியவில்லை. எனவே தண்டை முதலியன அணிந்துள்ளாரா என்பதும் தெரியவில்லை.

யாராக இருக்கலாம் இவர் ?

ஆமருவியப்பன் கோவில் கட்டிய யாராவது மன்னனாக இருக்கலாமா ? முதலாம் பராந்தக சோழன் கட்டியது என்று அறிகிறேன். ஆனால் அரசனுக்கு உரிய எந்த அலங்காரமும் இல்லை.

அரசன் ஏதாவது போரில் வெற்றி பெற உதவிய போர் வீரனாக இருக்கலாமோ ?  ஆனால் ஆயுதங்கள் எதுவும் இல்லை.

அல்லது கோவிலை அன்னிய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து காக்கும் வேலையில் தன் உயிர் இழந்த வீரனாக இருக்கலாமோ ?

அல்லது கோவிலை நல்ல முறையில் கட்டிய ஸ்தபதியாக இருக்கலாமோ ?

கவிச் சக்கரவர்த்தி கம்பர் இந்த ஊர்க்காரர் தான்.

கம்பர் இந்தக் கோவிலில் இருந்து தான் கம்ப இராமாயணம் எழுதியுள்ளார். எனவே அவனது உருவமாக இருக்குமோ ? இருக்கலாம். ஆனால் சற்று இளமையாகத் தெரிகிறது. ஆகவே இருக்க வாய்ப்பு குறைவு. அத்துடன் அவ்ருக்கும் அவரது மனைவிக்கும் தனியாக சன்னிதி உள்ளது. எனவே அவராக இருக்க முடியாது.

ஒருவேளை கம்பனின் மகன் அம்பிகாபதியாக இருக்கலாமோ ? சோழ மன்னனின் மகள் அமராவதியைக் காதலித்த அம்பிகாபதியாக இருக்கலாமோ ? ஆனால் அவனது உருவத்தை இந்தக் கோவிலில் வடிக்க வேண்டிய காரணமென்ன ?

ஒருவேளை அருகில் உள்ள பழையாறையில் இருந்த குந்தவை நாச்சியாரின் அபிமானம் பெற்ற சிற்ப வேலைக்காரராக இருக்கலாமோ ? குந்தவை தான் பல கோவில்களையும் கற்றளிகளாக மாற்றினாள். அவளது ஆசியுடன் இந்தக் கோவிலுக்குத் திருப்பணி செய்த சேனாதிபதி அல்லது ஊழியராக இருக்குமோ ?

இப்படிப் பலவாறு எண்ணிக்கொண்டிருந்தேன்.

அந்த இரவு அமைதியாக இருந்தது. நான் கல் தூண் சிலை முன் அமைதியாக நின்றுகொண்டிருந்தேன்.

எத்தனை ஆயிரம் தலைமுறைகள் இவர் கண் முன்னால் கடந்து சென்றிருக்கும் ?

எத்தனை செறுக்கு மாந்தர்கள் அழிவை இவர் பார்த்தபடி நின்றிருந்திருப்பார் ?

என்னைப் போல் இந்த ஆயிரம் வருடங்களில் எத்துணை பேர் இவரைப் பார்த்தும் பார்க்காமலும் சென்றிருப்பர் ?

இவர் செய்த தியாகம் என்னவோ ? கோவிலுக்கும் கலைக்கும் இவரது பங்களிப்பு என்னவோ ?

எந்த ஒரு பதிலும் பேசாமல் மௌனியாக இதுவரை கடந்து சென்றுள்ள வரலாறுகளுக்கும் வர இருக்கின்ற நிகழ்வுகளுக்கும் சாட்சியாக இவர் நின்றுகொண்டிருக்கிறார்.

எத்தனை நேரம் அவர் முன் நின்றிருப்பேன் என்று தெரியவில்லை.

‘இந்த ஆயிரம் ஆண்டுகளில் ஏதோ நீயாவது என்னைப் பற்றி நினைத்தாயே’, என்று அவர் நினைப்பது போல் உணர்ந்தேன்.

வெகு அருகில் யாரோ நன்றியுடன் பெருமூச்சு விடுவது போல் பட்டது.

திடீரென்று என் உடம்பு சில்லிட்டது போல் உணர்ந்தேன்.

சுற்றும் பார்த்தேன். யாரும் இல்லை. ஒரு வௌவால் மட்டும் பறந்து சென்றது.

வானில் நிலா மட்டும் காய்ந்துகொண்டிருந்தது. நிலா வெளியில் நானும் இந்தப் பெயர் தெரியாப் பெருமகனும் ஒரு மௌன சம்பாஷணை நிகழ்த்திக்கொண்டிருந்தோம்.

என் மனதிற்குள் வேண்டிக்கொண்டேன்.

‘நீங்கள் யாரோ எவரோ. இத்தனை ஆண்டுகள் இந்தக் கோவில் எனும் கலைப் பொக்கிஷத்தைக் காவல் காத்தபடி நின்றுகொண்டிருக்கிறீர்கள். நீரே காவல் வீரர் ஆகுக. நீரே இதன் சிற்பி ஆகுக. நீரே இந்தப் பரந்த சோழ ராஜ்ஜியத்தின் காவலன் ஆகுக.

இத்தனை ஆண்டுகள் பத்திரமாகக் காத்திருந்து, காவல் இருந்து இந்த வரலாற்றுத் தொன்மத்தை எங்கள் தலைமுறை வரை காத்து வந்துள்ள உமக்கு எனது நன்றிகள்’.

கொஞ்சம் வரலாறு கொஞ்சம் சுவாசம்

“அடடா என்ன ஒரு பெருமாள் சேவை ? பெருமாள் என்ன அழகு ? ஒரு முத்தங்கி அலங்காரம் பண்ணியிருந்தாளே, அவா கைக்கு ஒரு காப்பு பண்ணிப்போடணும் ”

“என்ன ஒரு கூட்டம் ! ஏழு மணி நேரம் நிக்க வெச்சு நிக்க வெச்சு அப்புறம் உள்ளே விட்டான். ஆகா, பெருமாள் என்ன சேவை ? சரியா ஒரு நிமிஷம் கூட சேவிக்க முடியல்லே; ஆனால் என்ன ஒரு சேவை தெரியுமா ? ”

“லட்டுக்கே ரெண்டு மணி நேரம் ஆச்சுன்னா பாத்துக்கோயேன்”

“எனக்குத் தெரியாது, எவ்வளவு கூட்டம் இருந்தாலும் எனக்கு வி.ஐ.பி. பாஸ் உண்டு. பெருமாளுக்கு அஞ்சு அடி கிட்டே அஞ்சு நிமிஷம் நின்னேன். என்ன ஒரு அனுபவம் தெரியுமா ? எப்போ போனாலும் எனக்கு வி,ஐ,பி. பாஸ் கிடைக்கும்”

“பெருமாள் என்ன எப்போ பார்க்கணும்னு நினைக்கறாறோ அப்போவெல்லாம் கூப்பிடுவார். ஒரு கார் டிரைவ். அங்கே இருப்பேன். பெருமாள் கிட்டே அஞ்சு நிமிஷம் நிப்பேன். மத்தவங்கள்ளாம் ‘ஜருகிண்டி ஜருகிண்டி’னு போயிண்டே இருப்பா”

“மதுரை மீனாட்சியைப் பார்க்கணும்னா ஒரு போன் போதும். நேரே கர்ப்பக்கிருகம் கிட்டே கொண்டு விட்டுடுவான். அம்மாவைப் பார்த்துண்டே எத்தனை நேரம் வேணும்னாலும் நிக்கலாம். ஈ.ஓ. நம்ம தோஸ்து இல்லையா ?”

“அதோ பெருமாள் கையில் இருக்கே ‘வைர அபயஹஸ்தம்’, அது நான் செய்ததாக்கும்”

இப்படியெல்லாம் பேசுபவர்கள் கவனத்திற்கு :

கீழே உள்ள படங்களைக் கொஞ்சம் பாருங்கள்.

நமது கோவில்கள் இறை காட்சி சாலைகள் அல்ல. அம்மையையும் அப்பனையும் அலங்காரம் செய்துவிட்டு அவர்கள் அழகைப் பார்த்து வியக்கவும், இவர்கள் அருகில் நின்று படம் பிடித்துக்கொள்ளவும் அவர்கள் என்ன அருங்காட்சிப் பொருட்களா ? நினைத்துப் பாருங்கள். இவர்கள் இந்தப் பூமி துவங்கி சில நூற்றாண்டுகள் கழித்து இந்த மண்ணில் வந்தவர்கள். நமது முன்னோடிகள். பல நூற்றாண்டுகள் கண்டவர்கள். பல வரலாறு அழிந்து பல வரலாறு உருப்பெறுவதைப் பார்த்தவர்கள். நமக்குப் பின்னும் நடக்கவிருப்பதை உணர்ந்தவர்கள்.

‘தான்’ என்ற அகந்தையில் இறுமாந்திருந்த பல சக்கரவர்த்திகள் மண்ணைக் கவ்வக் கண்டவர்கள். ‘உலகமே என் காலடியில்’ என்று எண்ணி பல வன் செயல்கள் புரிந்த மானிட வன விலங்குகளைப் பார்த்து நகைத்தவர்கள். ஒரு வேளை நம்மைப் பார்த்தும் அப்படியே நகைக்கிறார்களோ என்னவோ !

பல கோவில்கள் வெறும் புற்றாக இருந்து வளர்ந்து தற்போதைய நிலையை அடைந்துள்ளன. இந்த புற்று – கோவில் பயணம் நடந்த நேரம் சில ஆயிரம் ஆண்டுகள். ஆக இந்தச் சில ஆயிரம் ஆண்டுகளில் வாழ்ந்த, வீழ்ந்த மாந்தர் கதை அறிந்தவர்கள் இவர்கள்.

kalvettu

ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். நீங்கள் உற்று நோக்கும் இந்தக் கல்வெட்டை செதுக்கியது யார் ? இதை செதுக்கச் சொன்னவன் யார் ? நீங்கள் நிற்கும் கருங்கல் தளம். இந்தத் தளத்தின் மேல் ஆயிரம் ஆண்டுகள் முன்னால் ஒரு சுந்தர சோழனோ, பராந்தகனோ நின்றிருக்கலாம். அல்லது அவர்களுக்குச் சில ஆயிரம் ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த முதற்சோழப் பரம்பரையினர் இருக்கலாம். இந்த வரலாறை நினைத்துப் பாருங்கள்.

praharam

இந்த பிராகாரத்தைப் பாருங்கள். எத்தனை கல் தச்சர்கள் கை வண்ணம் தெரியுமா இது ? எத்தனை கல் தச்சர்கள், மரத்தச்சர்கள், சிற்பிகள் ஒருங்கிணைந்து கட்டிய வரலாறு என்று எண்ணிப்பார்த்தீர்களா ? அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இதன் அருகில் தான் எங்கோ குடில்கள் அமைத்து கோவில் கட்டி முடியும் வரை வாழ்ந்து வந்தனர் என்பதை எண்ணிப்பார்த்தீர்களா ?அவர்கள் குழந்தைகள் இதன் அருகில் தான் ஆயிரம் வருஷம் முன்னர் விளையாடியிருக்கின்றனர். சில நிமிஷம் இந்த நிகழ்வுகளைக் கண் மூடி எண்ணிப் பாருங்கள். உங்களது டாம்பீகங்களின் அற்பத்தனத்தை உணர்வீர்கள்.

kodimaram

சற்று நிமிர்ந்து பாருங்கள். அதோ அந்த கோபுர வாயில். அதன் அடியில் இருக்கும் வளைந்த கல் தூண் எப்படி கட்டப்பட்டது தெரியுமா ? சற்று யோசித்துப் பாருங்கள். இந்த வளைந்த கல் வாயில் தூக்கி நிறுத்தப்பட்ட போது இங்கே நிகழ்ந்த ஆரவாரம் உங்கள் காதுகளில் கேட்கிறதா ? தோரண வாயில் நிறுத்தப்பட்ட பின் நடந்த கொடிக் கம்பம் நிறுத்த விழாவுக்கு மன்னன் யானை மீதேறி வந்தானே, அதை நினைத்துப் பாருங்கள்.

இதோ, இதுதான் அந்தக் கொடிக்கம்பம். ‘த்வஜஸ்தம்பம்’ என்று வட மொழியில் கூறுவர். இதன் கீழ் தான் ஓதுவார்கள் திருமுறைகளை ஓதிக்கொண்டிருந்தனர். மக்கள் மெய் மறந்து கண்களில் நீர் வழியக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

அந்த விழா இதே இடத்தில் தான் நடந்தது. சைவ மறைகள் ஒதப்பட, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கினர். காவிரியில் இருந்து யானை மீது கொண்டுவரப்பட்ட புனித நீர் யாக சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. வேள்விகள் முடிந்தபின் நீரை சிவாச்சாரியார்கள் கும்பங்களின் மேல் ஊற்றினர். குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. மன்னன் மகிழ்ச்சியில் சிற்பிகளுக்கும் தச்சர்களுக்கும் முத்து மாலைகளும், தங்க நகைகளும் பரிசளித்தான். பலருக்கு அருகில் இருந்த நிலங்களைத் தானமாகக் கொடுத்தான்.

மன்னன் அத்துடன் நிற்கவில்லை. ஆடுதுறை, மேக்கிரிமங்கலம், ஆனை தாண்டவபுரம் முதலிய ஊர்களின் நிலங்களை கோவிலுக்கு ‘நிவந்தனம்’ எழுதிவைத்தான். திறமையான வேத விற்பன்னர்களுக்கு ‘சர்வ மான்ய அக்ரஹாரம்’ என்னும் பெயருடைய பகுதியை அளித்தான்.

இந்தக் கல்வெட்டு சொல்லும் செய்தி இது.

கோவில் கட்டிய மன்னனின் பெருந்தன்மை என்ன ? இன்னொரு கோவில் கட்டும் அளவிற்கு செல்வங்களைப் பணியாளர்களுக்குக் கொடையளித்தான். கோவிலும் ஊரும் விழாக் கோலத்தில் பல நாட்கள் இருந்தன, விழா முடிந்து பல நாட்கள் கழித்தும் மக்கள் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள்.

இந்தக் கோவில் இவ்வாறு கட்டப்படவேண்டிய தேவை என்ன ? பழையாறையில் இருந்த குந்தவைப் பிராட்டி சிவனுக்கான மண் கோவில்களை எல்லாம் கற்கோவில்களாகக் கட்டிக்கொண்டிருந்தார் அல்லவா ? அவற்றைக் ‘கற்றளி’ என்று அழைத்தனர். அப்படி அவரது எண்ணப்படி மண்ணிலிருந்து கல்லான கோவில் தான் இது. இதன் குடமுழுக்குதான் நடந்தது. ஆம். ராஜராஜனின் சகோதரி குந்தவை இருந்தாளே, அவளே தான்.

அந்த மன்னனும் அவனது பரிவாரங்களும் நின்றுகொண்டிருந்த இடத்தில் இப்போது நீங்கள் நின்றுகொண்டிருக்கிறீர்கள்.

இன்னொன்று தெரியுமா ? கோவில் கட்டியபின் பல முறை இப்பகுதியில் சிறிதும் பெரிதுமாகப் பல போர்கள் நடந்துள்ளன. உறையூரிலும் பழையாறையிலும் இருந்த சோழனின் அரண்மனைகள் அழிந்தன. ஆனால் பழையாறை அருகில் உள்ள இந்தக் கோவில் அப்படியே இருக்கிறது.

அவனது பெருந்தன்மையில் கொஞ்சமேனும் உங்களுக்கு வேண்டாமா ?

அந்த இடத்தில் நின்று கொண்டு நயந்தாராவின் நயங்களைப்பற்றிப் பேசுவது நியாயமா ?

கோவில் உண்டியலில் பத்து ரூபாய் போட்டுவிட்டு அம்பாளிடம் பல ஆயிரம் ரூபாய் பெறுமான வர்த்தகம் பேசுவது தர்மமா ?

கோவிலில் நின்று அதன் வரலாற்றை நினையுங்கள். அதனைக் கட்டிய மன்னனின் எண்ண ஓட்டங்களை எண்ணிப் பாருங்கள். தன் பெயர் ஓரிடத்திலும் வராமல் அம்மையப்பனின் பெயர் மட்டுமே வெளியே தெரியும்படி தன் செல்வங்கள் கொண்டு கட்டிய கோவில் சுவர்களில் உங்கள் காதல் வரலாறு எழுதியே ஆக வேண்டுமா ?

நீங்கள் அலுவலகத்தில் பெறப்போகும் சில நூறு ரூபாய் சம்பள உயர்வுக்கு இறைவனிடமும் இறைவியிடமும் இந்த மகோன்னதமான இடங்களில் பேரம் பேசுவது சின்னத்தனம் இல்லையா ? தெய்வம் சும்மா விடுமோ இல்லையோ கோவிலைக் கட்டிய கல் தச்சர்களின் ஆன்மா உங்களை மன்னிக்காது. ஏனெனில் அவர்கள் தங்கள் குடும்பம், உறவு, உணவு, கேளிக்கை மறந்து உயிரைக் கொடுத்து கட்டியவை இந்தத் தூண்கள்.

அப்படியே உள்ளே நடந்து ஒரு செவ்வைக்கிழமை மாலை வேளையில் அம்மன் சன்னிதி செல்லுங்கள். யாரும் உடன் வேண்டாம். நீங்களும் அம்பாளும் மட்டும். அந்தத் திரி விளக்கின் ஒளி மட்டுமே. பச்சை உடுத்தி அம்பாள் மோனத்தில் உங்களைப் பார்ப்பது தெரிகிறதா ? சற்று உற்று கவனியுங்கள். காதைக் கொஞ்சம் தீட்டிக்கொள்ளுங்கள். அதோ ஒரு ஓதுவார் மெதுவாகப் பாடுவது கேட்கிறதா ? அவர் இந்த நூற்றாண்டா என்றெல்லாம் ஆராயாதீர்கள். அது தேவை இல்லை. அவர்களுக்கும் அவர்கள் ஓதும் திருமுறைக்கும், ஏன் இந்த அம்பாளுக்கும் கூட காலம் எல்லாம் இல்லை.

இன்று நேற்று இல்லை. சில ஆயிரம் ஆண்டுகள் பல தலைமுறைகள் ஓதுவார்கள் பாடிய பதிகங்கள் இந்தச் சுவர்களில்  பட்டு எதிரொலித்தபடி இருந்துள்ளன. அவற்றை நீங்கள் கூர்ந்து கேட்டால் உணரலாம். ஓதுவார்களின் ஆன்மாக்கள் கோவில்களை விட்டு அகலுவதில்லை.

எந்தத் தேவையும் இல்லாமல், எந்த வேண்டுதலும் இல்லாமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அம்மையின் முன் நின்று பாருங்கள். அந்த அமைதி. வேறேங்கும் கிடைக்காது அது.

இதை விடுத்து அம்பாள் முன் வெற்று ஆர்ப்பட்டம் தேவையா ? கோவில் ஊழியருக்குப் பணம் கொடுத்து அம்மையின் அருகில் நிற்பதால் நீங்கள் அடையப் போவது என்ன ? கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அத்துடன் குந்தவையைப் பற்றியும் நினைத்துப் பாருங்கள். ஒரு சின்ன ஒப்பீடு செய்ய்யுங்களேன் உங்களைக் குந்தவைப் பிராட்டியோடு. அவள் இப்படிச் செய்திருப்பாளா என்று ?

கோவிலில் உற்சவ சமயங்களில் உங்களுக்கு முதல் மரியாதை என்றோ, ‘முதல் தீர்த்தம்’ என்றோ ஏதாவது ஒன்று  இருந்தால் அது பற்றி இன்னொரு முறை யோசியுங்கள். நீங்கள் அதற்குத் தகுதியானவரா என்று எண்ணிப்பாருங்கள். நியாயமாக அந்தக் கல் தச்சனின் குடும்பமோ, சிற்பியின் குடும்பமோ பெறவேண்டியது அது. ‘முதல் தீர்த்தம்’ அல்லது மரியாதை என்று சண்டை பிடிக்கும் முன்னர் குந்தவையையும் பரந்தகனையும் கரிகாலனையும் நினைக்கலாம். அவர்கள் செய்ததில் இந்தக் கோவிலுக்கு நீங்கள் செய்தது தூசியில் அடங்குமா ? நினைத்துப் பாருங்கள்.

கோவில்களின் தெய்வ வடிவங்கள் நீங்கள் அவர்களைப் பார்ப்பதற்காக நிற்கவில்லை. அவற்றின் பார்வை உங்கள் மீது பட வேண்டும் என்றே நிற்கின்றன. ஆக அங்கே உங்கள் படாடோபங்கள் தேவையா ? உங்களது பட்டுப் பீதாம்பரங்கள் அந்த வரலாற்றின் முன் நிற்குமா ?

இந்தக் கோவில்களுக்குச் செல்ல நீங்கள் எம்.பி.ஏ. எல்லாம் படித்து கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றவேண்டிய தேவை இல்லை. ஆண்டு சந்தா என்ற பெயரில் ஒரு சில கார்ப்பரேட் சாமியார்களின் ஐந்து நட்சத்திர வாழ்க்கையைச் சுமக்க வேண்டியதில்லை. ‘கிரியைகள்’ என்ற பெயரிலோ அல்லது ‘காய கல்பப் பயிற்சி’ என்ற பெயரிலோ வருத்திக்கொள்ள வேண்டியதில்லை.

வெறுமனே பாசுரங்களையும் பதிகங்களையும் உங்களுக்கு மட்டுமே கேட்கும்படிப் பாடினாலே போதும்.

செல்லுங்கள், மயிலாடுதுறையிலிருந்து பத்து மைல் தொலைவில் உள்ளது இந்த வேதபுரீஸ்வரர் கோவில். தேரழுந்தூர் என்னும் வைணவ திவ்யதேசத்தில் வேதபுரீஸ்வரரும் தனக்கென தனியாக ஒரு கோவில் கொண்டுள்ளார். ஊரின் கிழக்கே உள்ளது இந்தக் கோவில்.

திருஞானசம்பந்தர் இக்கோவிலைப் பாடியுள்ளார். ஒரு புறம் பெருமாள் கோவிலும் மறுபுறம் சிவன் கோவிலும் இருந்ததால் எந்தப்பக்கம் செல்வது என்று தேர்முட்டியில் இருந்த விநாயகரிடம் வழி கேட்டதால் அவர் ‘வழி காட்டி விநாயகர்’ ஆனார். இன்றும் இவரும் அருள்கிறார்.

“வானே மலையே யெனமன் னுயிரே தானே தொழுவார் தொழுதாள் மணியே ஆனே சிவனே அழுந்தை யவரெம் மானே யெனமா மடம்மன் னினையே ” என்று கொஞ்சம் வரலாற்றை சுவாசித்து வாருங்கள்.

வாசல்

Image

இந்த வாசல் கதவு பற்றி உனக்குத் தெரியுமா ? சொர்க்க வாசல் தான். வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் திறக்கப்படும் ஒரு கதவு என்று நினைக்கிறாயா ? அத்துடன் அதன் பணி முடிந்தது என்று நினைக்கிறாயா ? மற்ற கோவில்களில் எப்படியோ, இங்கு அப்படி இல்லை.

முதலில் இதனை அமைத்தது கரிகாலன் தான். நீ தெரிந்துகொண்டது உண்மை தான். ஆனால் இது அந்தக் கதவு அல்ல. இதுவரை இரண்டு முறை மாற்றப்பட்டுவிட்டது. ஆமாம், 1200 வருஷத்தில் வெறும் இரண்டு முறை மட்டுமே மாற்றப்பட்டுள்ளது இது.

ஆனால், இரண்டாம் முறை ஏன் மாற்றப்பட்டது தெரியுமா ?

வருடம் 1858. ஆமாம், ரொம்ப சமீபம் தான். என் சம்பந்தப்பட்ட விஷயங்களும் இந்தக் கோவில் சமாச்சாரங்களும் இப்படித்தான். என்னைப் பொருத்தவரை வரலாறு என்பது  சமீபம் தான். ஒரு நிகழ்வும் இன்னொன்றும் 1000 வருஷம் இடைவெளி விட்டு இருக்கும். அவ்வளவே.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். கரிகால் சோழன் உறையூரிலிரிந்து காவிரிக் கரை வழியாக வந்தபோது இந்த இடத்தில் தான் கனவு கண்டு முன்னரே சின்னதாக இருந்த கோவிலைப் பெரிதாக்கினான். அவன் வைத்தது தான் இந்தக் கதவின் முன்னர் இருந்த கதவு.

அதன் பின்னர் மறுபடியும் கதவு மாற்றப்பட்டது 1858-ம் வருஷம்.

இதற்குச் சில வருஷங்கள் முன்னர் தான் நான் இருந்த தேர் புதுப்பிக்கப்பட்டது. அப்போது இந்த வாசல் நன்றாகத்தானிருந்தது. நல்ல தேக்கு மரம். ஒரு முறை, 1655-ல் முகலாய தளபதி ஒருவன் இதை உடைக்க முனைந்தான். நல்ல பாம்பு கடித்து இறந்தான். கதவின் இடுக்கில் இருந்த வாழும் பாம்பு அது.

அதிலிருந்து வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் இந்த வாசல் திறக்கப்பட்டது. அன்று மட்டும் பாம்பு புதருக்குள் சென்றுவிடும். மற்ற நாட்களில் கதவில் தான் வாசம்.

ஆக  மிகவும் பழைய கதவு அது.

மிலேச்ச வீரர்கள் பல முறை இந்தக் கதவை உடைக்கப் பார்த்தனர். பீஜப்பூர் சுல்தானின் ஆட்கள், சில சேனத் தலைவர்கள் என்று பலர் முயன்று பார்த்தனர். ஏனெனில் கதவு பொருத்தப்பட்ட நிலையின் அடியில் கரிகாலன் கால பொகிஷம் இருக்கிறது என்று ஒரு பேச்சு இருந்தது.

ஆனால் வாழும்பாம்பு இருப்பதால் அதன் அருகில் யாரும் செல்வதில்லை. வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் கதவைத் திறந்து மூடி விடுவார்கள்.

அராபிய மிலேச்சன் தேவலாம். ஒரு தர்மத்துக்குக் கட்டுப்பட்டு கதவைத் திறக்க முற்பட்டுப் பின் அதன் அருகில் வரவில்லை.

ஆனால் இந்த வெள்ளைக்காரன் எதையும் கண்டுகொள்ள வில்லை. பாம்பாவது ஒன்றாவது என்றான். மேலத் தெருவில் இருந்த துபாஷியும் இதற்கு உடந்தை.

துபாஷி வெள்ளைத் துரைக்கு மேலும் தூபம் போட்டான். கோவிலுக்கு இடப்பக்கம் கம்பர் மேடு இருக்கிறதே, கம்பனுக்குக் சோழன் கொடுத்த வைரங்கள் இந்தக் கதவின் அடியில் தானிருக்கின்றன என்று வேறு சொல்லி விட்டான்.

ஆனால் அது தான் உண்மை என்று யாருக்கும் தெரியவில்லை.

அந்தப் பொக்கிஷம் எடுக்க கிளைவ் – அது தான் அவன் பெயர் – இங்கேயே தங்கிவிட்டான். மேலத் தெருவில் துபாஷின் வீட்டிற்கு அடுத்த் வீட்டிற்கு வந்துவிட்டான்.

ஊரில் சன்னிதித் தெருவில் யாருக்கும் கிளைவ் ஊரில், அதுவும் மேலத் தெருவில் தங்குவது பிடிக்கவில்லை. பெருமாள் உற்சவம் போது மேலத்தெருவில்தான் அரை மணி நாதஸ்வரக் கச்சேரி இருக்கும். ஊரே அன்று அங்கு கூடி இருக்கும். பெண்களும் கூட வெளியே வந்து கச்சேரி கேட்பார்கள்.

ஆனால் கிளைவ் வந்த பிறகு பெண்கள் வெளியே வருவதில்லை.

சன்னிதித் தெருவே அன்று கொதித்தெழுந்தது. உன் தாத்தாவின் அப்பா – சுதர்சனம் – வீடு வீடாகச் சென்று அந்தச் செய்தியைச் சொன்னார்.

பாதி வேதம் ஓதிக்கொண்டிருந்த சில அந்தண்ர்கள் அதை அப்படியே விட்டுவிட்டு துர் தேவதைகளை ஏவி விடும் மந்திரங்களை கோபம் கொப்பளிக்க உச்சரிக்கத் துவங்கினர்.

சதுர் வேதி அக்ரஹாரம் சார்ந்த ஸ்மார்த்த அத்வைத பண்டிதர்கள் கடும் கோபம் அடைந்து பிரத்யங்கரா தேவியை அழைக்க அவளது மந்திரங்களை உச்சரிக்த் துவங்கினர். மந்திர உச்சாடனங்களைத் தாங்க முடியாமல் அவர்கள் வீட்டு மாடுகள் கயிறுகளை அறுத்துக்கொண்டு ஓட முற்பட்டன.

ஊரின் அயோக்கியத்தனங்களில் ஊறிய பெருந்தனக்காரர் கூட ஆவேசம் அடைந்தார்.

குடியானத் தெருத் தலைவன் உக்கிரபாண்டி ஆவேசத்துடன் வேல் கம்புகளை எடுத்துவர ஆட்களை அனுப்பினான்.

ஊரின் மந்திரவாதி என்று அறியப்பட்ட சாமினாத சாஸ்திரிகள் காவல் இட்சிணிகளை அழைக்கும் உச்சாடனங்களைச் செய்தார். அருகில் இருந்தவர்கள் முகங்களில் கவலை தென்பட்டது. அதற்கு முன்னர் அவர் அந்த இட்சிணிகளை அழைத்தபோது சில நாட்களில் பிடாரி அம்மன் கோவில் பூசாரி புளியமரத்தில் உயிர் விட்டான். இரண்டு நாட்களுக்கு முன் அவன் தெற்கு வீதி கணிகையின் நகையை அபகரித்தான் என்று அவள் முறையிட்டிருந்தாள். அது உண்மை என்று அறிந்ததும் சாமினாத சாஸ்திரி உக்கிரமானார். கணிகையோ யாரோ, சாமினாத சாஸ்திரியைப் பொருத்தவரை தொழிலில் தர்மம் வேண்டும்.

பெரும் மனக் கவலையுடன் சுதர்சனம் என் தேரின் அருகில் அமந்து தேம்பித் தேம்பி அழுதார். ‘இதுவரை இப்படி ஆனதில்லையே. இன்னும் இந்த ஊருக்கு என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ..’ என்று அழுதார்.

அவர் புலம்பியது இது தான்.  கிளைவ் துரை , துபாஷியின் துணையுடன் சொர்க்கவாசல் கதவை இரவோடு இரவாக வெடி வைத்துத் தகர்த்துள்ளான். வாசலின் கீழே தோண்டிப் பார்த்துள்ளான். கீழே ஏதோ கிடைத்துள்ளது. அதை எடுத்துக்கொண்டு இரவோடு இரவாக இருவரும் வெளியேறிவிட்டனர். சொர்க்கவாசல் கதவு உடைந்ததோடு அத்துடன் சேர்ந்து கரிகாலன் கட்டிய மதிள் சுவரின் ஒரு பகுதியும் விழுந்துவிட்டது.

ஊர்ச் சபை கூடியது. அவரவர் ஆக்ரோஷமாகப் பேசினர். மிலேச்ச கிறித்தவன், பசு மாடு உண்பவன் கோவிலின் உள்ளே நுழைந்தது ஒன்று,  கோவிலின் சொர்க்கவாசல் விழுந்தது இன்னொன்று, துபாஷி என்றொரு உள்ளூர் ஆள் சோரம் போய் மிலேச்சனை உள்ளே நுழையவிட்ட துரோகம் என்று  கடைசியில் இப்படி முடிவானது. ஊரில் அனைவரும் சேர்ந்து பரிகார யாகம் செய்வது என்றும், துபாஷிக்கு,உடல்கிடைக்காமல் போனால் செய்யப்படும் தர்ப்பப் பிரேத தர்ப்பணம் செய்யவேண்டும் என்றும் முடிவானது.

இந்த முடிவெல்லாம் ‘வழி காட்டிப் பிள்ளையார்’ கோவில் மண்டபத்தில் நடந்தது.

ஆனால் கிளைவும், துபாஷியும் ஊரை விட்டுப் போகவில்லை என்றும் ஒரு பேச்சு நிலவியது. அது வதந்தி என்று புறக்கணிக்கப்பட்டது.

பின்னர் நடந்தது தான் அக்கிரமம். சில நாட்களுக்குப் பின் மதறாஸப்பட்டிணத்திலிருந்து பெரிய பெரிய வண்டிகள் வந்தன. வெள்ளைக்கார போர் வீரர்கள் சுமார் ஆயிரம் பேர் வந்தனர். கம்பர் மேடு தோண்டப்பட்டது. பலகை பலகையாகப் பெயர்த்துக்கொண்டு போனார்கள். அவர்கள் நாட்டுக்குக் கொண்டுபோனார்கள் என்று பேசிக்கொண்டார்கள்.

இதற்கெல்லாம் காரணம் துபாஷியும் கிளைவும் என்று சுதர்சனர் கூறினார்.

இதெல்லாம் நடந்து இருபது வருடம் கழித்து ஒரு நாள் தெற்குத் தெரு கணிகை வீட்டில் துபாஷியும் கிளைவும் இருப்பதாக வதந்தி பரவியது.

ஊரே திரண்டு வேல் கம்புடன் அவள் வீட்டை முற்றுகை இட்டது.

கணிகை வெள்ளையம்மா வெளியே வந்தாள். பெரிய ஆவேசம் கொண்டிருந்தாள். தலைவிரி கோலம்.

‘எல்லாம் எனக்குத் தெரியும். நான் பார்த்துக்கறேன். நானும் இந்த ஊர் தான்’, என்று ஆவேசம் கொண்டவள் போல் பேசினாள்.

‘உள்ளே துபாஷியும் கிளைவும் இருக்கிறார்களா?’ – ஊர் கேட்டது.

‘நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் போகலாம்’, என்றாள் வெள்ளையம்மா.

ஊர் கேட்கவில்லை.

‘எல்லைப் பிடாரி மேல ஆணை. நான் பார்த்துக்கொள்கிறேன்’. இதையே வெள்ளையம்மா திரும்பத்திரும்ப கூறினாள்.

சாமினாத சாஸ்திரி மேற்கொண்டு பேசினார்.

‘பிடாரி மேல ஆணை. யாரும் பேச வேண்டம். வெள்ளையம்மா பார்த்துப்பா’.

திடீரென்று வெள்ளையம்மா உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டாள்.

சுதர்சனம் சொன்ன பிறகு ஊர் கலைந்தது.

சுதர்சனமும் சாமினாத சாஸ்திரியும் கூடிப் பேசிக்கொண்டனர்.

அன்று இரவு யாரும் வீட்டிற்கு வெளியே வர வேண்டாம் என்று சுதர்சனம் தண்டோரா போட ஆளை அனுப்பினார்.

அன்று இரவு யாரும் வெளியே வரவில்லை.

மறுநாள் காலை சொர்க்கவாசல் அருகிலிருந்த நந்தவனக் காவல்காரன் முத்தையன் ஓடி வந்தான்.

ஊரே சொர்க்கவாசலுக்கு வந்தது.

கையில் பிடாரி அம்மன் வாளுடன் வெள்ளையம்மா நின்றுகொண்டிருந்தாள்.

சொர்க்கவாசல் கதவின் நிலைப்படியின் அடியில் புதையலுக்காகத் தோண்டப்பட்ட குழியில் துபாஷியும் கிளைவும் கிடந்தனர், தலை இல்லாமல்.

‘சொர்க்கம் தேடி வந்தான்கள்.  சொர்க்கவாசலில் இணையலாம் என்று கூட்டி வந்து மேலே அனுப்பி விட்டேன்.  20 வருஷம் மூடாத கதவு இனி மூடும்’ என்று ஆவேசத்துடன் கூறினாள். சில நிமிஷம் கழித்து கீழே அமர்ந்தாள்.

யாருக்கும் அருகே செல்லத் துணிவில்லை.

‘என்னிடம் வராதவர்கள் என்னைத் தூக்கி கதவின் அருகில் அமர வையுங்கள்’ என்று ஆணை இட்டாள். இன்னமும் ஆவேசம் அடங்கவில்லை.

சுதர்சனமும் சாமினாத சாஸ்திரியும் தூக்கி அமர்த்தினர்.

கையில் வாளுடன் அப்படியே நிலைப்படியில் அவளது மூச்சு அடங்கியது.

இது தான் அவளது சிலை. இரவு நேரத்தில் ஒரு பாம்பு வடிவத்தில் அவள் தான் இந்த வாசகலைக் காவல் காக்கிறாள் என்று மக்கள் பேசிக்கொண்டனர்.

அன்று பொருத்தப்பட்ட கதவு தான் இது. இந்த வாசலுக்கு கடந்த 1200 வருஷத்தில் இரண்டாவது முறையாகக் கதவு வைத்த கதை இது தான்.

வைகுண்ட ஏகாதசி அன்று அவளுக்கு ஒரு சீப்பு வாழைப்பழம் மட்டும் நைவேத்யம் செய்யப்படும். பின்னர் சொர்க்க வாசல் திறக்கப்படும். அது தான் இந்த ஊரின் வழக்கம்.

மற்ற நேரங்களில் துபாஷியும் கிளைவும் வெள்ளையம்மாவைப் பார்க்க வரும் போது ஒரு சீப்பு வாழைப்பழம் கொண்டு வருவார்கள் என்று ஊரில் பேசிக்கொள்வார்கள்’

எவ்வளவு நேரம் அப்படியே அந்தப் பெண் சிலையைப் பார்த்தபடி நின்றிருப்பேன் என்று தெரியவில்லை. அனுமன் பேசினானா அல்லது என் பிரமையா என்று தீர்மானமாகத் தெரியவில்லை.

சிலையின் முன் ஒரு சீப்பு வாழைப்பழம் இருந்தது.

நேரில் பார்க்க சாந்தமாகத் தெரியும் இந்தச் சிலையின் பின் இவ்வளவு பெரிய கதை இருக்கும் என்பது வியப்பாக இருந்தது.