அனுமன் சொன்ன கதை

Hanuman Tzrதேர் கட்டியது போக மிச்சம் இருந்த மரக் கட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்தேன். பழைய எரிந்த தேரின் சில மரச் சட்டங்களும் இருந்தன. பழைய தேரின் மர ஆணிகள் நன்றாக இருந்ததால் அவற்றில் சிலவற்றைப் புதிய தேரிலும் சேர்த்திருந்தோம். இரு தேர்களுக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கட்டும் என்று அவ்வாறு செய்திருந்தோம்.

பழைய மரக்கட்டைகளை எடுத்து விறகில் சேர்க்கலாமா என்று கேட்டுக்கொண்டிருந்தார் ராமு ஆசாரி. காலில் ஆணி குத்தியது போல் இருந்தது. குனிந்து எடுத்தேன். ஒரு மரக்கட்டையில் பழைய ஆணி போன்று இருந்தது. கட்டையை எடுத்துப் பார்த்தேன். பழைய உளுத்துப்போன கட்டையாக இருக்கும் என்று நினைத்து திருப்பிப் பார்த்தேன். அது ஒரு அனுமன் வடிவம். கை சஞ்சீவி மலை தூக்கிய நிலையில் இருந்தது.

சரி எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்துச் சென்று வீட்டில் என் அலமாரியில் வைத்தேன்.

எதிர் வீட்டு கிச்சாமி ‘இது ஆயிரங்காலத்து அனுமன் வடிவம். தேரில் இருந்தது. வீட்டில் வைக்கலாமோ கூடாதோ’, என்று ஒரு குண்டு போட்டுச் சென்றான். எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு அகல் விளக்கு எற்றி வைத்தேன்.

அப்போது தான் பார்த்தேன் அதை. அனுமன் கால் அடியில் சிறிய எழுத்துக்கள். தமிழ் போலவும் தெரிந்தது.ஆனால் வடிவங்கள் புரியவில்லை.

சட்டென்று உரைத்தது. வட்டெழுத்துக்கள். அட, இவை சோழர் கால எழுத்துக்கள் ஆயிற்றே என்று பட்டது.

உடம்பில் ஒருமுறை அதிர்ந்தது.

மனதில் பல சிந்தனைகள் ஒடின.

‘யார் செய்திருப்பார்கள் இந்தச் சிலையை ? ராஜ ராஜனின் தாத்தன் வழியில் கரிகாலன் கட்டிய கோவில் என்று தெரியும். ஆனால் தேரை யார் கட்டியது என்று தெரியவில்லை.ஒருவேளை கரிகாலன் காலத்துத் தேர்ச் சிற்பமா இந்த அனுமன் ? இவன் எத்தனை சாம்ராஜ்யங்களைக் கண்டிருப்பான் ? கரிகாலன் முதல், கண்டராதித்தன், ஆதித்த கரிகாலன், பராந்தகன், அரிஞ்சயன், ராஜ ராஜன், ராஜேந்திரன் என்று எவ்வளவு பேரைப் பார்த்திருப்பான் இந்த அனுமன் ?

அல்லது இந்தச் சிற்பம் கரிகாலனுக்கு முந்தையதோ ? அவன் அதன் அழகில் மயங்கி அப்படியே தேரில் பதித்து விட்டானோ ? அப்படியென்றால் என் வீட்டில் உள்ள சிற்பம் பல நூற்ராண்டுகளைக் கண்டிருக்குமே !

அனுமனே பழைய ஆள். திரேதா யுகம் அவனது காலம். ஆனால் யுகங்கள் பல தாண்டி இன்று அவன் வடிவம் என் கையில்.

இந்த அனுமனின் எதிரில் நான் யார் ? இருபத்தொன்றாம் நூற்றாண்டின் ஒரு துளியில் நின்றுகொண்டிருக்கும் ஒரு தூசி. என் காலமே சில பத்து ஆண்டுகள் மட்டுமே. என் காலம் முடிந்த பின்னும் இந்த அனுமன் இருப்பான். அப்போது வேறொரு தூசியின் கையில்,அவனைப் பார்த்தபடி, அவனது அற்ப ஆயுளைக் கணக்கிட்டபடி மோனச் சிரிப்புடன்.

இவன் பார்த்துள்ள சம்பவங்கள் என்னவெல்லாம் இருக்கும் ? முகலாயர் ஆட்சி, வெள்ளையர் ஆட்சி, அதற்கும் முன்னர் நம்மவரின் பல வகையான ஆட்சிகள்.

இவன் இருந்த எரிந்த தேரின் வழியாக எவ்வளவு மாந்தர் சென்றிருப்பர் ? சில லட்சம் பேர் இருக்க மாட்டார்கள் ?

எத்தனை பஞ்ச காலங்களையும் வளம் கொழித்த காலங்களையும் கண்டிருப்பான் இவன் ? எதுவாக இருந்தாலும் அதே மோனப் புன்னகையுடன், நடக்கும் அத்துணை நிகழ்வுகளுக்கும் சாட்சியாக, மௌனமாக நின்றிருப்பான் இவன் ?

இவனுக்கு முன் நான் எம்மாத்திரம் ? வெறும் எண்பது ஆண்டுகள் வாழும் நான் இவனைப் பொறுத்தவரை ஒர் புழு. அவ்வளவே.

இப்படி புழுவாக இருந்தாலும் எத்தனை ஆட்டம் ஆடுகிறேன் நான் ? உசத்தி தாழ்த்தி என்ன , மேதாவி பாமரன் என்ன ? எத்துணை வெற்று ஏக்களிப்புகள் ?

இத்துணை யுகங்கள் கடந்து வந்துள்ள இவன் முன்னர் நான் எம்மாத்திரம் ?

எனக்கு முன்னர் இந்த ஊரில் இருந்த மாந்தர் கொக்கரித்த சொற்கள் என்னவாயின ? அவர்களே என்னவானார்கள் ? அவர்கள் இருந்த இடமே தெரியவில்லையே ?

சாதாரண மனிதர் இருக்கட்டும். எத்துணைத் தலைவர்கள் இருந்துள்ளனர் ? அவர்கள் இருக்கும் வரை அவர்களும் அவர்களது சூழமும் செய்யும் அளப்பரைகள் எத்துணை? இவனுக்கு முன்னர் அவர்கள் எல்லாம் யார் ?

சமுதாயத்தையே மாற்றியதாகக் கூறிக் கொண்ட அரசுத் தலைவர்கள் இப்போது இருக்கும் இடம் எங்கே ? அவர்கள் இருந்ததற்கான தடங்களே அழிந்து போய்விட்டன. ஆனாலும் இன்றும் இந்த அனுமன் என் கைகளில் நிற்கிறான்.

‘என்ன, நிலையாக இருக்கப்போவதாக எண்ணமோ? உன்னைப்போல் எத்துனை பேரைக் பார்த்திருக்கிறேன்?’என்று என்னைக் கேலி பேசுவதாகத் தோன்றியது.

அப்போதுதான் அது நடந்தது. பதுமை பேசியது.

“என்ன பார்க்கிறாய்? உன்னையும் எனக்குத் தெரியும், உன் பரம்பரையையே நான் அறிவேன். நான் அதற்கெல்லாம் முற்பட்டவன். உன் வாழ்வில் நீ பார்க்கப்போவது நான் பார்த்ததில் ஒரு நெல் மணி அளவு கூட இருக்காது.

நான் பார்த்ததில் உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். உன் தாத்தாவைப் பற்றியது. முக்கியமாக அவருக்கு என்னைப் பிடிக்கும். நான் இருந்த பழைய தேர் எரிந்த வருஷம் அவர் ரொம்பவும் மன வருத்தம் அடைந்தார். அவருக்குப் பல எதிரிகள் இருந்தனர்.

நல்ல மனுஷர் அவர். என்ன, ரொம்பவும் வெளிப்படையாகப் பேசுவார்.பேசுவது போலவே நடக்கவும் வேண்டும் என்று சொல்லி வந்தார். இதனாலேயே அவருக்குப் பல எதிரிகள் உண்டாயினர்.

உன் தாத்தாவின் தந்தை கோவிலில் கைங்கைர்யம் செய்து வந்தார். மீத நாட்களில் வேறு ஊர்களுக்கு வேத பாராயணம் செய்யச் சென்று விடுவார். பூ கைங்கர்யம், தளிகை என்றால் கூட நன்கு கற்றிருக்க வேண்டும் அப்போதெல்லாம்.

ஒரு நாள் அவரால் தளிகை பண்ண மடப்பளிக்குள் செல்ல முடியவில்லை. அதனால் உன் தாத்தாவை தளிகை பண்ண அனுப்பினார். அப்போது அவருக்கு இருபது வயது இருக்கும். பதினான்கு வருடம் வேதப் பயிற்சி முடித்து அப்போதுதான் திருக்கண்ணபுரம் பாடசாலையிலிருது திரும்பி இருந்தார்.மடப்பளிக்குள் செல்ல நந்தவனம் வழியாகச் செல்ல வேண்டும். அப்போது தான் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துச் செல்ல முடியும். நந்தவனத்திற்குள் இருப்பதால் ஆள் அரவம் இருக்காது.

கிணற்றடியில் ஊர் பெருந்தனக்காரர் நந்தவனக் காவல்காரன் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டார். ஆனால் இருவரும் பேசிக் கொள்ள மட்டும் வரவில்லை என்று உன் தாத்தாவிற்குப் புரிந்தது.

பெருந்தனக்காரர் தான் ஊரில் ஆசார நியமங்களை வகுப்பவர். ஊரில் உற்சவத்தின் போது யாருக்கு முதல் மரியாதை என்பது முதல் அவர் வைப்பதே சட்டம். ஆனால் இவ்வளவு சட்டம் பேசும் அவர் காவல்காரன் மனைவியுடன் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது உன் தாத்தாவிற்கு வியப்பளித்தது.

ஆனால் உன் தாத்தா பார்த்ததை பெருந்தனக்காரர் பார்த்துவிட்டார். ஏதோ வேலை சொல்வது போல் அவளை அதட்டி அனுப்பினார்.அவரது அதட்டல் உண்மை இல்லை என்று உன் தாத்தாவிற்குத் தெரியும் என்று பெருந்தனக்காரர் அறிந்திருந்தார்.

என்ன தோன்றியதோ தெரிய்வில்லை உன் தாத்தா பெருந்தனக்காரரை ஓங்கி ஒரு அறை விட்டார். வயது சற்று கூடின பெருந்தனக்காரர் அப்படியே சுருண்டு விழுந்தார். ஒன்றுமே நடவாதது போல் உன் தாத்தா மடைப்பளி சென்றுவிட்டார்.

அதுவரை அரசல் புரசலாக இருந்தது வெளியே கசியத் துவங்கியது.

அந்த வருஷம் உற்சவம் அவ்வளவு சௌஜன்யமாக இல்லை. முதலில் இருந்தே தகராறு.

முதல் நாள் உற்சவம் அன்றே முதல் மரியாதை தனக்கே வர வேண்டும் என்று பெருந்தனக்காரர் பேசினார். எதிர்த்து யாரும் பேசவில்லை. சிறிது மௌனம் நிலவியது. யாருக்காவது மாற்றுக் கருத்து உண்டா என்று சபையில் கேட்கப்பட்டது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. சபை தேர்முட்டி ‘வழி காட்டிப் பிள்ளையார்’ மண்டபத்தில் நடந்ததால் நான் கவனித்துக்கொண்டிருந்தேன்.

சபையின் ஓரத்தில் சிறிது சல சலப்பு கேட்டது. சில பெரியவர்கள் உன் தாத்தாவைக் கையைப் பிடித்து இழுத்து அமர வைக்க முயன்றனர். “அவனைப் பேச விடுங்கள்”, என்று தலைமை பட்டர் கூறினார்.

சபை அவர் பேச ஆமோதித்தது. ஆனால் பெருந்தனக்காரர் ஆட்சேபித்தார். ‘பிரும்மச்சாரிகள் சபைகளில் பேசுவது சாஸ்த்ர விருத்தம்”, என்று கூறினார் பெருந்தனக்காரர். உன் தாத்தா தன்னை எதிர்த்துப் பேசப் போகிறார் என்று ஒருவாறு ஊகித்துவிட்டார் பெருந்தனக்காரர்.

அப்போது உன் தாத்தா கூறியது என் காதுகளில் இன்னும் ஒலிக்கிறது. அது ஒரு சிம்ம கர்ஜனை என்பேன்.

“பிரும்மச்சாரிகள் சபைகளில் பேசக் கூடாது என்பது உண்மை தான். ஆனால் ஏக பத்தினி விரதர்கள் மட்டுமே சபையில் அமர வேண்டும் என்றும் சாஸ்த்ரம் கூறுகிறது என்று சபை முன் சமர்ப்பிக்கிறேன்”, என்று சூசகமாகக் கூறினார் உன் தாத்தா.

சபை நடுவர்களில் பல ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இவர் யாரைச் சொல்கிறார் என்று கேட்டுக்கொள்வது போல் இருந்தது எனக்கு. பலர் ஏக-பத்தினிக் காரர்கள் அல்லர் என்பது அப்போது தெளிவாகியது.

உன் தாத்தா மேலும் சொன்னார்,” நான் யாரைச் சொல்கிறேன் என்று அவரவர்களுக்குத் தெரியும். எனவே முதல் மரியாதை பற்றிப் பேசுவதற்கு முன் ஒவ்வொருவரும் தாங்கள் இந்தச் சபைக்கே பொறுத்தமானவர்களா என்று கேட்டுக்கொள்வது நல்லது”, என்று மேலும் கூறினார்.

சபைக்காரர்களில் பலருக்கு முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. ஏதோ தங்கள் வரை பிழைத்தோம் என்று நிம்மதி அடைந்தனர் போல் தெரிந்தது.

அத்துடன் சபை கலைந்தது. பின்னர் அந்த வருடம் பெருந்தனக்காரருக்கு முதல் மரியாதை கொடுக்கப்படவில்லை.

பெருந்தனக்காரர் அத்துடன் விடவில்லை. கறுவிக்கொண்டிருந்தார்,

ஒருமுறை வைகாசி உற்சவத்தின் போது ஒரு வெள்ளி சந்தனக்கிண்ணம் காணாமல் போனது. அது காணாமல் போகவில்லை. தேருக்குக் கீழே பெருந்தனக்காரரின் வேலையாள் போட்டு விட்டுச் சென்றது எனக்குத் தெரியும்.

கடைசியாக வேத விற்பன்னர்களுக்குச் சந்தனம் கொடுத்தது உன் தாத்தா தான் என்பதால் அவர் பேரில் சந்தேகம் எற்படச் செய்தார் பெருந்தனக்காரர். கிண்ணத்தைத் திருப்ப வேண்டும், அத்துடன் இரண்டு ஆண்டுகள் உற்சவங்களில் ஈடுபடக் கூடாது அல்லது கம்பத்தில் கட்டி வைத்து அடி வாங்க வேண்டும் என்பதே சபை அவருக்கு அளித்த தீர்ப்பு.

ஏழைச் சொல் அம்பலம் ஏறவில்லை. உன் தாத்தா குற்றவாளி என்று தீர்ப்பு எழுதினர். வெள்ளியைத் திருப்ப வழி இல்லை. தேர் எதிரில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்தார்கள். பெருந்தனக்காரர் உட்பட நால்வர் அடிப்பது என்று முடிவானது.

தாத்தா கட்டி வைக்கப் பட்டார்.

அப்போது குடியானத் தெருவிலிருந்து பெரும் கூச்சல் கேட்டது. சுமார் இரு நூரு பேர் கையில் வேல் கம்புகளுடன் கோஷம் எழுப்பியபடி வந்தனர். அவர்களில் நந்தவனக் காவல்காரனும் தென்பட்டான். இன்னொரு பக்கத்திலிருந்து சங்கர அக்ரஹாரத்திலிருந்து வக்கீல் ராமசுப்பையர் தனது ஆட்களுடன் வந்துகொண்டிருந்தார்.

அப்புறம் என்ன ? உன் தாத்தா அவிழ்த்து விடப்பட்டார். பெருந்தனக்காரர் மீது ராமசுப்பையர் வழக்கு போட்டார். பல வழக்குகளில் மாட்டி பெருந்தனக்காரர் தன் செல்வம் எல்லாம் இழந்தார். விரைவில் ஊரை விட்டு வெளியேறினார். சில நாட்களிலேயே காலமானார்.

ராமசுப்பையர் உன் தாத்தாவின் பால்ய நண்பர். அத்துடன் அவருக்கும் பெருந்தனக்காரரிடம் சில பழைய பகைகள் இருந்தன. எல்லாம் சேர்த்து பழி வாங்கிவிட்டார் ராமசுப்பையர் என்று பேசிக்கொண்டார்கள்.

ஆனால் இதெல்லாம் ஒரு அநீதியை சமன் படுத்தவே என்று எனக்குத் தெரியும்.

இது எல்லாம் நடந்த முப்பது ஆண்டுகள் கழித்து நான் இருந்த தேர் எரிக்கப்பட்டது. அதற்கு ஐம்பது ஆண்டுகள் கழித்து நான் உன்னிடம் இருக்கிறேன்.’

“டேய், நான் தான் சொன்னேனே, ஆயிரம் வருஷம் பழசெல்லாம் வீட்டுலெ வெச்சுக்க வேண்டாம்னு. பாரு எவ்வளோ நாழியா அதையே பார்த்துண்டு நிக்கறே!”, என்று கிச்சாமி சொன்ன போது தான் சுய நினைவுக்கு வந்தேன்.

எத்தனை நேரம் நான் அப்படியே அனுமன் சிலையைப் பார்த்தபடி நின்றிருந்தேன் என்று தெரியவில்லை.

இது வரை பேசியது யார்? இந்த நிகழ்வுகள் எல்லாம் உண்மையா ? அல்லது என் பிரமையா ?

தெரியவில்லை. ஆனால் இவை அனைத்தையும் அனுபவித்தது போலவே இருந்தது.

இது போல் பல முறை நிகழப் போகிறது எனக்கு அப்போது தெரியவில்லை.

ஒரு தேரின் கதை

ஆண்டு 1953.

நராயண ஐயங்கார் வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டிருந்த எனக்குத் தூக்கம் கெட்டது. மெல்லக் கண் விழித்துப் பார்த்தேன். தெருக்கோடியில் புகை போன்று இருந்தது. நாராயண மாமா பெரிய தோண்டியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு ஒடினார்.

ஊரில் ஒரே களேபரம். சன்னிதித் தெருவே அல்லோலகல்லோலப் பட்டது. குடியானத் தெருவிலிருந்தும் ஆட்கள் வந்திருந்தார்கள். முடிந்தவரை கிணறுகளிலிருந்து எல்லாம் தண்ணீர் கொண்டுவந்து இருந்தனர்.

அருகில் இருக்கும் குளங்களில் இருந்தெல்லாம் தண்ணீர் கொண்டுவர வண்டிகள் அனுப்பப்பட்டன.

சன்னிதித் தெருவாசிகள் எல்லாரும் அழுதபடி இருந்தனர். செய்வதறியாமல் ‘ஓ’வென்று கதறினர்.

ஒன்றும் புரியவில்லை. எதுவோ கலவரம் போல் தெரிந்தது. புதுமையாக இருந்தது.

அப்பா வேறு ஊரில் இல்லை. வழக்கம் போல் வேத பாராயணம் என்று மன்னார்குடி சென்றிருந்தார். அவர் இருந்திருந்தால் விபரமாவது தெரியும். சின்னவன் என்று எனக்கு யாரும் ஒன்றும் சொல்லாமல் தெருக்கோடி நொக்கி ஓடியவண்ணம் இருந்தனர்.

நானும் வேஷ்டியைப் பிடித்துக்கொண்டு ஓடிச் சென்று பார்த்தேன்.

கூட்டம் தாண்டி நெருப்பு சுவாலை தெரிந்தது. ஆனால் நெருங்க முடியவில்லை. அனல் ஆக அதிகம்.

சற்று விலகி நின்று பார்த்தேன்.

அறுபது அடி தேர் எரிந்துகொண்டிருந்தது.

பெண்கள் வாய் விட்டு அழுதனர். மக்கள் ஆக்ரோஷமாக மண்ணையும் தண்ணீரையும் வாரி இரைத்தனர். அணைந்தபாடில்லை.

என் பங்குக்கு நானும் வேஷ்டியை அவிழ்த்து மண்ணை வாரி நிரப்பி தேர் மீது மீண்டும் மீண்டும் எறிந்தேன்.

யானைப் பசிக்கு சோளப் பொறி போல் இருந்தது. ஒரு நாள் முழுவதும் எரிந்து தணிந்தது.

தேர் அழுந்தியதால் தேர் அழுந்தூர் என்று பெயர் பெற்ற எங்கள் ஊரில் தேர் இல்லை. வெறும் கரிக் கட்டைகளே மிஞ்சின.

பேரிழப்பு. அதன் பின் பேரமைதி. ஊர் அழிவு தொடங்கியது. ஊரில் எல்லார் வீடுகளிலும் ஒருசேர இழவு விழுந்தது போல் இருந்தது.

ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் துவங்கும்போது இவ்வாறு ஒரு பேரழிவு எற்படும் என்று எங்கோ படித்த ஞாபகம் வந்தது.

ஆமருவியப்பன் களை இழந்து போனான். வருடங்கள் செல்லச் செல்ல ஆமருவியப்பனின் உற்சவங்களும் படிப்படியாக நின்று போயின.

ஐம்பது வருடம் தேர் இல்லாமலே காலம் கழிந்தது. ஊரில் மங்கலம் அழிந்து அமங்கலம் தலைவிரித்தாடியது. தன் சோகை அழிந்த ஊரில் இருந்து சன்னிதித் தெரு காலியானது. பிழைப்பு தேடி மக்கள் புலம் பெயர்ந்தனர்.

தேர் எரிந்த கதை மறக்கப்பட்டது. தேராத ஊரானது தேரழுந்தூர்.

வருடாவருடம் வானம் பொய்த்தது. கழனிகள் நிரம்பிய ஊர் என்று ஆழ்வார் பாடிய ஊர் கழிசடைகளால் கை விடப் பட்டது. வயிற்றுப் பிழைப்பு மேலோங்கியதால் படித்த மக்களும் வெளியேறினர்.

தேரும் ஊரும் மறக்கப்பட்டது என்பது என்னால் ஒப்புக்கொள்ள முடிந்ததில்லை. ஒவ்வொரு முறையும் ஊருக்குச் செல்லும் போதும் தேர் முட்டியில் ஒரு பெருமூச்சு விட்டுச் செல்வதே முடிந்தது. வேஷ்டியை அவிழ்த்து மண்ணை அள்ளிப்போட்டது மீண்டும் மீண்டும் நினைவு வந்து வருத்தியது.

செய்தி கேட்டு அப்பா உடன் வந்து சேர்ந்தார். அப்பாவும் நாராயண ஐயங்காரும் துக்கம் தாங்காமல் அழுதனர். ஏதோ பெரிய அழிவு வருகிறது என்று அப்பா சொன்னார்.

தேர் எரிந்த ஒரு வருடத்தில் அப்பவும் மாரடைப்பால் காலமானார். குடும்ப பாரம் காரணமாக வெளியூரில் படிப்பும் வேலையும் என்று கழிந்தது.

ஆனால் தேர் எரிந்த காட்சி மட்டும் மனதை விட்டு மறையவில்லை.

Ther Before 1
ஐம்பது வருடம் முன்பு எரிந்த தேர்.

ஐம்பது வருடத்தில் தேர் இருந்த இடத்தில் கோழி இறைச்சிக்கடை முதலியன தோன்றின. அரசு பட்டா வழங்கி அந்த இடத்தில் வீடும் கட்டப்பட்டது. ஊரும் மக்களும் மறந்த தேர்க்கட்டைகள் ஐம்பது வருட மழை வெயில் தாங்கி சிறிது சிறிதாக அழிந்தது. பண்டைய இரும்பும் சில பாழடைந்த கட்டைகளுமே அந்த இடத்தின் மறைந்த கதையைப் பேசின.

தேர் மூட்டி என்று அழைக்கப்பட்ட அந்த இடம் இன்னமும் அவ்வாறே அழைக்கப்பட்டது. ஆனால் தேர் தான் இல்லை.

கல்வி, குடும்பம், பொதுச் சேவை என்று காலம் சென்று கொண்டிருந்தது. பணி ஒய்வு பெற்று ஊர் திரும்பினேன்.

அதுவரை ஊர்க்காரர்களை சந்திக்கும் போதெல்லாம் ‘தேர்’ கட்டுவது பற்றி நகைச்சுவையாகப் பேசப்பட்டது. அதற்குக் காரணம் நாற்பதாண்டுகளும் அரசுகள் இந்த முயற்சிக்குக் கை கொடுக்காது என்ற பொதுவான நம்பிக்கையே. மக்களின் எண்ணம் போலவே அரசுகளும் இம்மாதிரியான முயற்சிகளுக்குக் கை கொடுக்காமலேயே இருந்தன. கோவில்களுக்கும் அவை சார்ந்த நிலங்கள் மற்றும்
அசையாச் சொத்துக்கள் முதலியன ஆக்கிரமிப்புக்குள் இருந்தாலும் அரசுகள் அவற்றை மீட்க எந்த முயற்சியும் செய்யவில்லை என்பது  நிதர்சனகமாகவே இருந்ததும் தேர் பற்றிய அரசுகளின் எண்ண ஓட்டம் பற்றிய மதிப்பீடாக இருந்தது.

‘கோஸக பக்த சபா’ என்ற ஒரு அமைப்பை வேறு இருவருடன் சேர்ந்து தொடங்கினேன். அதன் மூலம் ஊர்ப் பெருமாளுக்கு உற்சவங்கள்
‘நடத்தப்பட்டன. வருடம் தோறும் வசூல் செய்து உற்சவங்கள் செய்தோம். அதற்கே போதும் போதும் என்று இருந்தது. ஆளைப் பார்த்தவுடன் கதவைச் சாத்தும் அளவிற்கு ஊர் ஊராகச் சென்று கோவில் விஷயமாக அலைந்துகொண்டிருந்தோம்.

சில வருடம் முன்பு அன்றைய அரசு ஒரு திட்டம் அறிவித்தது. பழம்பெரும் கோவில்களுக்குத் தேர்த் திருப்பணி செய்ய்ய ஐந்து லட்சம் ரூபாய் வைப்புத் தொகை என்று அறிவித்தது. ஆனால் மேலும் பணம் தேவைப்பட்டால் பக்தர்கள் தாங்களே ‘நன்கொடையாளர்’ முறையில் உதவி செய்யலாம் என்று ஆணை பிறப்பித்தது.

இது ஒரு நல்ல ஆரம்பம் என்று நினைத்தேன். சபாவில் கூப்பிட்டுப் பேசினேன். ஆனால் ஐந்து லட்சம் கொண்டு என்ன செய்ய முடியும் என்று பின்வாங்கினோம். இன்னொரு அரசு பதவி ஏற்றது. பயன்படாமல் இருக்கும் அரசுப் பணம் மீட்டுக்கொள்ளப்படும் என்று அறிவிப்பு செய்தது.

வேறு வழி தெரியவில்லை. தேர் கட்டலாம் என்று முடிவெடுத்தோம்.

அரசு ஒப்புதல் தேவை என்றார்கள். பல முறை முயற்சி செய்து பெற்றோம். தேர் கட்டும் ஸ்தபதியைத் தேடினோம். மன்னார்குடித் தேர் எவ்வாறு கட்டினார்கள் என்று ஆராய்ந்தோம். பல ஸ்தபதிகளைப் பார்த்தோம். ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்தோம்.

பின்னர் மரம் ஏலம் எடுக்கவேண்டும் என்று ஒப்பந்தக்கார்ரகளைத் தேடி அலைந்தோம். ஒப்பந்தம் செய்தவர் மரம் தரவில்லை.இழுத்தடித்தார். இதற்கிடையில் ஒவ்வொறு நிலையிலும் அரசியல், அதிகாரவர்க்கம், வேண்டாதவர்கள் மற்றும் கலகலக்காரர்கள் குறுக்கீடுகள் என்று ஒவ்வொறு நாளும் முன்னேறினோம்.

இதற்கிடையில் எரிந்த தேரின் மிச்சங்களைப் பார்வையிட ஒரு அரசுக் குழு வந்தது. பின்னர் சிதைந்த தேரின் மிச்சங்களை அப்புறப்படுத்தினோம். 1835-ல் யாரோ ஒருவர் தேரினை செப்பட்னிட்டுள்ளார் என்று ஒரு செப்புப் பட்டயம் கிடைத்தது. சுமார் 150
வருடங்கள் கழித்து அத்திருப்பணியைச் செய்ய ஆண்டவன் என்னையும் நண்பர்கள் இருவரையும் தேர்ந்தெடுத்துள்ளான் என்று நினைத்து அன்று முழுவதும் பசியே எடுக்கவில்லை. ஒரு சகாப்தத்தின் நிறைவில் நிற்பது போன்ற உணர்வு. ஒரு சரிந்த
சாம்ராஜ்யத்தினை மீட்கும் பணியில் இருப்பது போன்று உணர்ந்தேன்.

அப்போது முதல் நான் என்ன செய்தேன், அவை எப்படி செய்யப்பட்டன என்று தெளிவாக நினைவில்லை. தற்போது நினைத்தால் கூட பிரமிப்பாக உள்ளது. இலுப்பை மரம் பெரிய அளவில் தேவை என்று ஸ்தபதி கூறினார். ஊர் ஊராக அலைச்சல். எங்கெங்கு இலுப்பை மரம் தென்படுகிறதோ உடனே அந்த இடத்தின் உரிமையாளரை சந்திப்பது, மரம் கேட்பது என்று இருந்தேன். ஆனால் என்ன அதிசயம் ? கோவில் தேருக்காக என்று தெரிந்தவுடன் மிகப் பலரும் இனாமாகவே தந்தனர். ஆட்களைக்கொண்டு வந்து மரம் அறுப்பது,வண்டிகளில் கொண்டு செல்வது என்று மிகக் கடும் பயணம் அது. எந்தெந்த ஊருக்கெல்லாம் சென்றேன் என்று என் நினைவில் இல்லை. அனேகமாகத் தஞ்சை மாவட்டம் முழுவதும் சென்றிருப்பேன்.

மரம் வெட்டக் காவல் துறை, வனத் துறை முதலிய துறைகளில் அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு முறையும் அது ஒரு போராட்டமே. அதைப்பற்றி எழுத இந்த ஒரு சகாப்தம் வேண்டும்.

பின்னர் தேருக்கான இரும்பு சேகரிப்பு. பல இரும்பு வியாபாரிகள் தந்தனர். இதில் பல சமயத்தவர்களும் அடக்கம்.

மூன்று ஆண்டுகள் குடும்பம், உடல் நிலை இவை பற்றிய நினைவே இல்லை. ‘தேர்’ மட்டுமே எண்ணத்தில் இருந்தது. தேர் எரிந்த காட்சி மனதில் அவ்வப்போது வந்துகொண்டிருந்தது. எப்படியும் தேர் கட்டி ஒட்டி முடிக்க வேண்டும் என்று ஒரு வெறி என்று இப்போது நினைக்கிறேன்.

எரிந்த தேர் மீண்டு எழப் போகிறது என்று பெயர் தெரியாத பலர் கூட உதவினர்.

2005-ல் பல தியாகங்களுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெற்றது. முதலில் வெள்ளோட்டம். அக்கம்பக்கம் கிராமங்களிலிருந்து வந்திருந்த கூட்டம் இருக்கிறதே, இதற்காக ஐம்பது வருடங்களாகக் காத்திருந்திருப்பார்கள் போல் தெரிந்தது. மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த ஒரு மாபெரும் நிகழ்வாக அது அமைந்தது.

‘தேர் இழந்தூர்’ என்று அறியப்பட்ட எங்கள் ஊர் ‘தேர் எழுந்தூர்’ என்று ஆனது என்று சபா தலைவர் ரங்கனாதன் கூறி ஆனந்தப்பட்டார். உடன் பணியாற்றிய ரங்கராஜன் பேச முடியாமல் கண் கலங்கி நின்றார். அன்று எழுபது வயது கடந்த இருவரும் செய்துள்ள தியாகங்கள் பற்றி ஒரு தொடர் எழுதலாம்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இதே போல் அனைவரும் கூடி தீ அணைக்க முற்பட்டனர். ஐம்பது ஆண்டுகள் கழித்து அதைவிடப் பல மடங்கு மக்கள் வந்திருந்து புதிய தேரை இழுத்தனர். வெள்ளோட்டத்தின் போது என் பள்ளி நண்பன் அஜீஸ் தண்ணீர்ப்பந்தல் அமைத்திருந்தார். மத நல்லிணக்கம் என்றால் என்னவென்று எங்கள் ஊருக்கு வந்து பாருங்கள்.

பின்னர் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் உற்சவத்தின்போது ஆமருவியப்பன் தனது தேரில் எழுந்தருள்கிறார்.

1955-ல் என் மனதில் எரியத் தொடங்கிய தீ, 2005-ல் அணைந்தது. ஊரார் பலரின் நிலையும் அப்படியே என்று நினைக்கிறேன்.

நாராயண ஐயங்காரும் அப்பாவும் இன்று இருந்திருந்தால் சந்தோஷப்படுவார்கள்.

Ther Later 1
தேரின் தற்போதைய நிலை
Ther Later 2
வைகாசி உற்சவத்தின்போது தற்போதைய தேர்
%d bloggers like this: