தொல்காப்பியம் ஒரு இந்துத்வ நூல் ?

thol

சில நேரங்களில் நம்மையும் அறியாமல் சில நல்லது நடந்துவிடுகிறது. அது போல் நடந்தது தான் “தொல்காப்பியத் தமிழர்” என்ற நூல் என் கண்ணில் பட்டது. வாழ்க சிங்கை தேசிய நூலக மலிவு விலைப் பிரிவு.

ஈ.வே.ரா.வின் சீடர்களில் ஒருவர் அவரிடமிருந்து பிரிந்து சென்று நல்ல வழிக்குத் திரும்பினார்களா என்று சில காலமாகவே ஆராய்ந்து கொண்டிருந்தேன். சிங்கை தேசிய நூலகத்தில் அறிஞர் அண்ணாவின் “சரிந்த சாம்ராஜ்யம்”,”வருத்தப்பட வைத்த சம்பவங்கள்” முதலிய சில நூல்கள் எனக்கு வரப் பிரசாதமாய் அமைந்தன. அதைப்போல் அமைந்தது தான் இந்த சாமி.சிதம்பரனாரின் நூல்.

சாமி.சிதம்பரனார் பெரியார் கொள்கையில் ஊறியவர். அவருடன் மலேயா முதலான இடங்களுக்குச் சென்றவர்.ஆனால் மிகச் சிறந்த தமிழறிஞர். எங்கள் ஊர் மயிலாடுதுறைக்கு அருகில் கடகத்தில் பிறந்தவர்.  பெரியாரின் சரிதையை “தமிழர் தலைவர்” என்ற பெயரில் எழுதியவர். பின்னர் அவரது கொள்கைகள் பிடிக்காததால் வெளியேறி கம்யுனிஸ்ட் கட்சியில் இணைந்தார் என்று நினைக்கிறேன்.

இப்படிப்பட்ட ஒரு தமிழ் அறிஞர் பெரியார் கட்சியினர் “ஆரியரும் திராவிடரும் வேறானவர்” என்று கூறியதை ஏற்கவில்லை. திருக்குறள் முதலியவற்றைப் பெரியார் கட்சியினர் கேலி பேசியதை விரும்பவில்லை. அதனால் அவர்களிடமிருந்து வெளியேறிப் பல நூல்கள் எழுதினார். அதனாலோ என்னவோ தமிழகத்தில் “மறக்கடிக்கப்பட்ட” ஒரு நூல் “தொல்காப்பியத் தமிழர்” என்னும் நூல்.

இந்த நூலின் முன்னுரையை அவரே எழுதியுள்ளார். இப்போதுள்ள “பகுத்தறிவாளருக்கு” ஒவ்வொரு வரியும் சாட்டையடி.

“ஆரியர்” படை எடுப்பு என்று கூறி காலட்சேபம் செய்து வந்துள்ள தமிழ்த் தலைவர்களுக்கும் இந்த நூல் ஒரு சரியான பதிலடி. வேறு யாராவது எழுதி இருந்தால் “பார்ப்பனக் கைக்கூலி ” என்றும் “மவுண்ட் ரோடு மகா விஷ்ணு” என்றும் சொல்லித் தப்பிக்கலாம். ஆனால் பெரியாருடனேயே இருந்து அவரைப்பற்றிய புத்தகங்கள் எழுதி, கொள்கை வேறுபாட்டால் வெளியேறிய ஒரு தமிழ் அறிஞர் எழுதியதைப் புறந்தள்ள முடியாதே !

இந்திய மக்களுக்கு ஒரே பண்பாடு இருந்தது, மொழியால் வேறுபாடு இருந்ததே ஒழிய, கலையால், கலாச்சாரத்தால் ஒன்றாகவே இருந்தார்கள் என்று கூறுகிறார். நான் கூறினால் இந்துத்துவவாதி என்று திட்டலாம். சாமி.சிதம்பரனார் அப்படி இல்லையே. பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வந்தவரே !

பண்பாட்டால் ஒன்றுபட்டது இந்தியா என்கிறார்.அதற்கு தொல்காப்பியத்தை உதவிக்கு அழைக்கிறார். தற்போதைய “அறிவாளிகளுக்கு” இது வேப்பங்காய். “தமிழ் இனம்” என்று இவர்கள் போடும் கூப்பாடு காது கிழிகிறது.

அவர் முன்னுரையில் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். முன்னுரையை மட்டுமே ஒரு புத்தகமாகப் போடலாம் என்று தோன்றுகிறது. பல ஆண்டுகள் கழிந்தாலும் அவருடைய சொற்கள் இன்றைய தமிழகத்திற்கு அப்படியே பொருந்துகின்றன. ( நூலை முழுவதும் படிக்க வில்லை. அதற்குள் இன்னொரு நண்பர் கடன் வாங்கிச் சென்றுவிட்டார். படித்தபின் விரிவாக எழுதுகிறேன்).

—————–

“தமிழர்களைப் பற்றித் தமிழ் இலக்கிய உண்மைகளை உணராதவர்களால் எழுதப்பட்ட வரலாறுகளே இன்று மலிந்து கிடக்கின்றன. தமிழர் வரலாற்றைப் பற்றி வெளிநாட்டினர் பலவாறு கூறுகின்றனர். பழந்தமிழ் இலக்கியங்களிலே பயிற்சியில்லாத சரித்திரக்காரர்கள் என்னென்னவோ சொல்கின்றனர்..

“தமிழகத்திலே இன்று இனவெறுப்பு தலைவிரித்தாடுகிறது. மொழிவெறுப்பு முறுக்கேறி நிற்கின்றது. நாகரிக வெறுப்பு நடனமாடுகின்றது. வரலாறு, நாகரிகம், பண்பாடு என்ற பெயர்களைச் சொல்லித் தமிழ்மக்களிடையே கலகத்தீயை மூட்டிவிடுகின்றனர் சிலர். இத்தகைய வெறுப்புத்தீ அணைக்கப்பட வேண்டும்.    

“…பண்டைய மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் சிலவற்றை மூடநம்பிக்கைகள் என்று மொழிகின்றோம். விஞ்ஞான அறிவுக்கு ஒத்துவராத சில பழக்கங்களும் நம்பிக்கைகளும் பண்டைக்கால மக்களிடம் இருந்தன. நாகரிகம் பெற்ற எல்லா இனத்தினரிடமும் இவைகள் இருந்தன. தமிழர்களிடமும் இத்தகைய பழக்கங்களும், நம்பிக்கைகளும் இருந்தன என்பதில் வியப்பில்லை.

‘தமிழர்களிடம் எவ்விதமான பொருந்தாப் பழக்கமும் இருந்ததில்லை. எந்தக் குருட்டு நம்பிக்கையும் இருந்ததில்லை. இன்றைய விஞ்ஞான அறிவுபெற்ற பகுத்தறிவாளர்களைப் போலவே அன்றும் வாழ்ந்தனர். ஆரியர்கள்தாம் பொருந்தாப் பழக்கவழக்கங்களையும் மூடநம்பிக்கைகளையும் தமிழரிடையே புகுத்தினர் என்பது உண்மையன்று.

“… இவர்கள் கூற்று வெறுப்பையே அடிப்படையாகக் கொண்டது. இவர்கள் வடமொழியில் கொண்டிருக்கும் வெறுப்பும் இதற்கொரு காரணம்.  தமிழ் இலக்கியங்கள் நன்றாகக் கற்றவர்களுக்கு இவ்வுண்மை தெரியும். இவ்வுண்மையை உணர்ந்த புலவர்களில் கூடச் சிலர் இதை மறைக்கின்றனர். 

“…. அந்த நாகரிகம் ஆரியருக்கும், தமிழருக்கும் ஒத்த நாகரிகமாகத்தான் காணப்படுகின்றது. தொல்காப்பியத்தில் ஆரியர் என்ற பெயரோ, திராவிடர் என்ற பெயரோ காணப்படவில்லை.”

 “இந்தியமக்கள் வணங்கும் தெய்வங்கள், பிறப்பு, இறப்பு பற்றிய நம்பிக்கைகள், நீதி, அநீதி இவைகளைப் பற்றிய முடிவுகள், பாவபுண்ணியம், மோட்சம், நரகம் பற்றிய கொள்கைகள் இவைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன. இந்திய மக்கள் அனைவருக்கும் இவைகளைப் பற்றிய கருத்து ஒன்றுதான். இவைகள்தாம் பண்பாட்டுக்கு அடிப்படையானவை. அவரவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்து நடை, உடை, பாவனைகளும், மொழிகளும் வேறுபட்டிருக்கலாம். இதனால் இந்தியமக்களின் பண்பாடு வெவ்வேறு என்று சொல்லிவிட முடியாது ‘ என்பதே இச்சரித்திராசிரியர்களின் கொள்கை. இந்தக் கொள்கைக்குத் தொல்காப்பியம் ஆதரவளிக்கிறது.”

—————

இந்தியா, பண்பாடு, கலாச்சாரம் என்று கூறுவதாலும், அதற்கு தொல்காப்பியத்தை உதாராணம் காட்டுவதாலும் ஒன்று தொல்காப்பியம் இந்துத்துவ நூலாக இருக்க வேண்டும், அல்லது சாமி.சிதம்பரனார் ஆர்.எஸ்.எஸ். காரராக இருக்க வேண்டும். இப்படி நம்புவதுதான் தற்காலத்திய பகுத்தறிவு.

%d bloggers like this: