தமிழகத்தின் வோட்ஹவுஸ்

என்னமா எழுதறார்? ப்பா.

காட்சிப்படுத்தல், பாத்திரங்களின் வர்ணனைகள், மழையில் நீர் தடங்கலின்றிப் பாய்வது போல் நிகழ்வுகளைச் சொற்பித்தல், பத்திக்குப் பத்தி இழையோடும் நகைச்சுவை, அதன் ஊடே மெல்லிய கேலி மற்றும் இயலாமை…என்னைப் பொறுத்தவரை தற்காலத்தில் தமிழின் வோட்ஹவுஸ் என்று இவரைக் குறிப்பிடலாம்.

உதாரணம் பார்ப்போம்:

‘பரமசிவம் பிள்ளை பூஜை அறையில் இருந்து மணியைக் கிலுக்கினார். பூஜை முடியும் தருவாய். பரமசிவம் பிள்ளை பாட்டை நிறுத்தாவிடில் விநாயகரையும் இழுத்துக்கொண்டு ஓடியே போய் விடுவது என்று நினைத்துக்கொண்டு படத்திலிருந்த பெருச்சாளியின் முகத்தில் சற்று ஆசுவாசம் தெரிந்தது’ மூஞ்சுறுவின் பார்வையில் இருந்து எழுதுவது என்பது வாழ்வில் எல்லாவற்றையும் நகைச்சுவை உணர்வுடன் மட்டுமே பார்க்கும் ஒரு மனிதனால் மட்டுமே இயலும்.

எங்கள் வீட்டில் கூட ‘ரொம்ப நாழி பெருமாளுக்குப் பண்ணிண்டே இருக்காதீங்கோ, பெருமாளுக்குப் பசி வந்து ‘போறும்டா, அமிசேப் பண்ணுடான்னு’ கத்தப் போறார்’ என்று கேலியாகப் பேசுவது உண்டு. ஆனால், ஒருமுறை கூட கருடன் பேசுவது போலத் தோன்றியது இல்லை.

இன்னொரு இடத்தைப் பாருங்கள்:’வடிவு, நான் போயிட்டு வாறேன். வரச் சாயங்காலம் ஆகும். ஒனக்கு என்னவாவது வாங்கியாரணுமா?’ – பரமசிவம் பிள்ளை.

‘ஆமா, நாளைக்கழிச்சு அம்மாசில்லா. ரெண்டு கிலோ கடலைப்பருப்பு, நாலுகிலோ கோட்டயம் சர்க்கரை, ஏலம், கிஸ்மிஸ், ஜவ்வரிசி, அண்டிப்பருப்பு எல்லாம் வாங்கிக்கிடுங்கோ..’

இதே கதையில் வண்டிக்கார ஆறுமுகம் தன் வீட்டை விட்டுக் கிளம்புகிறான்.

‘வரச்சில காப்பக்கா உளுந்தும் அரைக்கிலோ கருப்பட்டியும் வாங்கியாங்கோ. நாளைக் கழிச்சு அம்மாசி..’ நினைவூட்டி வழியனுப்பினாள் மனைவி செண்பகம்.

சற்று வசதியுள்ள பரமசிவன் பிள்ளைக்கும், வண்டிக்காரன் ஆறுமுகத்திற்கும் ஒரே ‘அம்மாசி’ என்கிற அமாவாசை தான். ஆனால், அவர்தம் மனைவியரின் பேச்சின் மூலம் அவர்களது நிலையைத் தெரிவிக்கிறார் தமிழின் மகத்தான எழுத்தாளுமையுள்ள தமிழகத்தின் வோட்ஹவுஸ்.

கதை: சில வைராக்கியங்கள். ஆசிரியர்: நாஞ்சில் நாடன்.

வாசித்துப் பாருங்களேன்.

வாசகர் வட்டத்தில் நாஞ்சில் நாடன் உரை

‘எழுத்தாளன் வாழ்வில் புத்தக வெளியீடு என்பது மாபெரும் கொண்டாட்டம்,’ என்று துவங்கினார் நாஞ்சில் நாடன் இன்றைய வாசகர் வட்ட ஆண்டு விழாவில். தனது 42 நூல்களில் இரண்டே வெளியீட்டு விழா கண்டவை என்று சொன்னவர் பின்னர் ‘தமிழும் அதன் சொற்களும்’ என்கிற பொருளில் ஆழ்ந்த உரை ஒன்றைத் துவக்கினார்.

தமிழில் முதலில் சிறு கதை எழுதியது ‘மக்பூல் சாயபு’ என்னும் தகவலுடன் ‘புயலிலே ஒரு தோணி’ என்ற ப.சிங்காரத்தின் நாவலைத்தொட்டு மேலே சென்றார். ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி’ என்பதில் ‘வாள்’ என்பது என்ன என்று விளக்கினார். ‘ “உலோகம்” கண்டு பிடிக்கப்படாத காலத்தில் வாளொடு மனிதன் எப்படித் தோன்றியிருக்க முடியும் என்று கேட்கிறார்கள். இவ்விடத்தில் ‘வாள்’ என்பது ஒளி/ஒலி என்னும் பொருளில் வருகிறதே தவிர ‘வாள்’ என்னும் ஆயுதத்தைக் குறிப்பதில்லை’ என்று பாரதிதாசனின் பாடல் ஒன்றைச் சுட்டினார்.

மேலும் பேசுகையில் :

‘ஒரு சொல் பல பொருள்களில் வருவதும், ஒரு பொருளைக்குறிக்கப் பல சொற்கள் இருப்பதும் மொழியின் தொன்மையைக் காட்டுகிறது. யானை என்பதற்குப் பல சொற்கள் உள்ளன. நமக்குத் தெரியவில்லை என்பதால் சொற்கள் இல்லை என்று ஆகிவிடாது. ‘பிறண்டை’ என்னும் தாவரம் பற்றிய குறிப்பு அகநானூற்றில் காணப்படுகிறது. ‘மலைப் பாம்புகள் பிறண்டை போல் கிடக்கும்..’ என்று தலைவி தலைவன் வரும் வழி குறித்துக் கவலைப்படுகிறாள். ‘பிறண்டை’ என்னும் சொல் இன்று நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.

இதே போல் சொற்கள் மறக்கபடுவதால் மொழியும் அவை குறிக்கும் பண்பாடும் அழிகின்றன. கம்பன் சுமார் 3,00,000 சொற்களைப் பயன்படுத்தியுள்ளான். மீண்டும் மீண்டும் வரும் சொற்களைத் தவிர்த்துப் பார்த்தால் எப்படியும் ஒரு லட்சம் சொற்கள். அவ்வளவு வளமையான மொழி தமிழ்.

தமிழ் நாடு எழுத்தாளர்களை மதிக்காத ஒரு தேசமாகிவிட்டது. ஆனால் ஒரு காலத்தில் தமிழ்ச் சொல்லுக்கும் எழுத்தாளர்களுக்கும் மிகுந்த ஏற்றம் இருந்துள்ளது. அவர்களது சொல் அவ்வளவு வலிமையானது. மலையமானின் இரு சிறுவர்களைக் கிள்ளிவளவனிடம் இருந்து காத்த கோவூர்க் கிழார் தனது சொல்லால் வெற்றி அடைந்தார். அன்றைய தமிழ்ப் புலவர்களின் நிலை அது.

கேரளம், மகாராஷ்டிரம், வங்காளம் முதலிய மாநிலங்கள் எழுத்தாளனை மதிக்கின்றன. 8 கோடிதமிழ் மக்கள் இருக்கும் நிலத்தில் தமிழ் நாளிதழ்களின் விற்பனை வெறும் 25 லட்சம். 3 கோடி மலையாள மக்கள் 75 லட்சம் இதழ்களை வாங்குகின்றனர். மகாராஷ்டிரத்தில் சுமார் 8 கோடி மக்கள் உள்ள நிலையில் ஒரு ஆண்டில் வெறும் 47 திரைப் படங்களே வெளியிடப்படுகின்றன. ஆனால் அதே அளவு மக்கட்தொகை கொண்ட தமிழகத்தில் சில நூறு படங்கள். எழுத்துக்கும் அதை எழுதுபவர்களுக்கும் மதிப்பில்லாமல் போய்விட்டது.

நூலகங்களின் நிலை சிங்கையில் மிகச் சிறப்பாக உள்ளது. தமிழ் மக்களிடத்தில் இந்தியாவில் நூல்கள் வாசிக்கும் வழக்கமே இல்லாமல் போய்விட்டது. வெறும் 250 பிரதிகள் அச்சிட்ட நூல்களையே விற்க முடிவதில்லை.

நமது மொழிச் சொற்களை நாம் தவற விட்டுவிட்டோம். ‘அருவி’ என்னும் சொல் இருக்க ‘நீர் வீழ்ச்சி’ என்று நேரிடையான தமிழாக்கம் பயன்பாட்டில் உள்ளது. மலையாளத்தில் ‘நீர் வீழ்ச்சி’ என்பது ஜலதோஷம் என்னும் பொருளில் வருகிறது.

கம்பன் ‘சொல் ஒக்கும் சுடுசரம்’ என்று இராமபாணத்தைக் கூறுவான். அம்புக்கு நிகராகச் சொல் இருந்த ஒரு காலம் ஒன்று உண்டு.

தமிழில் வேற்று மொழிச் சொற்கள் சேர்ப்பது இயல்பே. ஆனாலும் அவை இலக்கணமுறைப்படியே இருத்தல் வேண்டும். ‘தற்சமம்’, ‘தற்பவம்’ என்னும் இரு முறைகளின்படி அமைதல் வேண்டும். கம்பன் கூட தாமரை என்னும் சொல்லிற்கு பங்கயம், நாளினம், அரவிந்தம், கமலம் என்றும் வட சொற்களைத தமிழ் இலக்கணப்படி உள்ளே கொண்டுவந்து செழுமையூட்டினான்.’

இன்னும் பல செய்திகள் நிறைந்த அவரது பேச்சில் திருமுருகாற்றுப்படை, கம்பராமாயணம், அகநானூறு, புறநானூறு, திருப்பாவை என்று மாறி மாறி வந்து செவிக்கு விருந்தளித்தன.

நல்ல மனிதர், சிறந்த எழுத்தாளர், உருப்படியான தகவல்கள் செறிந்த பேச்சாளர், என்று பல முகங்கள் கொண்ட நாஞ்சில் நாடன் அவர்களின் இன்றைய பேச்சில் , ஆண்டாளின் ‘புள்ளின்வாய்க் கீண்டானை’ பாசுரமும், ‘உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்’ பாசுரமும் இடம்பெற்றன.

வைணவ பரிபாஷையில் ‘நற்போதுபோக்கு’ என்று சொல்வேன்.

%d bloggers like this: