நான் இராமானுசன் – நூல் வெளியீடு

நான் இராமானுசன்ஆப்த வாக்யம்’ – கருச் சொற்றொடர் என்று வைத்துக்கொள்ளுங்கள். ‘எல்லாம் உண்மை; ஒரே உண்மை’. இந்த சொற்றொடர் மனதில் வந்து புகுந்தது 2013 என்று தோன்றுகிறது. விஷ்ணுபுரம் படித்தபோது இருக்கலாம்.

ஆனால் அந்த வாக்கியம் என்னை அழுத்திக் கொண்டிருந்தது. வெகுநாட்கள் மனம் கனத்தே இருந்தது. பார்க்கும் இடமெல்லாம் அந்த வாக்கியம் அரூப ரூபம் கொண்டு தென்பட்டது. ஏதோ சொல்ல வருவது போல் தெரிந்தாலும் என்னவென்று தெரியவில்லை.

ஆனாலும் சொல் தொடர்ந்து கொண்டிருந்தது. படித்த நூல்களில் எல்லாம் அச்சொற்களின் பிம்பங்களே தெரிந்தன.

விடாமல் துரத்திய அச்சொல் ஒரு நாள் ‘அங் மோ கியோ’ நூலகத்தில் மனதில் விரிந்து விளங்கியது. பாதை புரிந்து பணியைத் துவங்கினேன்.

பெருவியப்பளிக்கும் நூல்களை அது காட்டிக்கொடுத்தது. மறைந்தொழிந்த ஆசான்கள் பலரை அது எனக்கு மட்டுமாகத் தோன்றச் செய்தது. எங்கும் எப்பொழுதும் அந்த நினைவே சூழ்ந்து நிறைந்தது.

பெருங்கனவொன்று தோன்றி, புரிபடாமல் அலைக்கழித்து, புரிந்து விஸ்வரூபம் எடுத்து, தற்போது ‘நான் இராமானுசன்’ உருக்கொண்டு துலங்கி நிற்கிறது.

ஆம். ‘எல்லாம் உண்மை; ஒரே உண்மை’, ்நூல் உருக் கொண்ட கதை இதுவே.

நான் இராமானுசன் – பகுதி 13

காலை அனுஷ்டானங்கள் முடித்து சற்று சாவகாசமாக சில சுவடிகளைப் புரட்டிக்கொண்டிருந்தேன். பாதி கரையான் அரித்த சுவடிகள் அவை. பாதி சுலோகங்கள் மட்டுமே தெரிகின்றன. மீதத்தை நானே எழுதிக்கொள்ள வேண்டும். சீக்கிரம் எழுதிவிடவேண்டும் என்று தோன்றுகிறது.

நாதமுனிகள் காலத்திய சுவடிகள் அவை. அவரிடமிருந்து 200 ஆண்டு காலம் கழித்து எனக்குக் கிடைத்துள்ளது.

கரையான் பாதி தின்ற சுலோகம் ஒன்றை எடுத்து பூர்த்தி செய்யத் துவங்கினேன். கூரன் வேகமாக உள்ளே வந்தார். ஏதோ அவசரம் போல் பட்டது.

‘ஸ்வாமி, தேவரீரைத் தரிசிக்க துருஷ்க மதஸ்தர் ஒருவர் வந்துள்ளார். வட நாட்டிலிருந்து வருகிறார் என்பதால் அவரைக் காவிரிக்கரைக்கு அனுப்பி, நீராடி வரும்படிச் சொல்லியுள்ளேன்,’ என்றார்.

‘அவசரம் இல்லை. அவருக்கு அமுது படைத்துப் பின்னர் அழைத்து வரவும்,’ என்றேன் நான்.

இப்போதெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக துருஷ்கர்கள் தென்படுகிறார்கள். வட நாட்டில் இருந்து வரும் ஒற்றர்கள், யாத்ரீகர்கள் என்று அவ்வப்போது தெரிகிறார்கள். அவர்களது பேச்சு பெரும்பாலும் புரிவதில்லை. எனவே சைகையில் தான் பேசிக்கொள்ள வேண்டியிருக்கிறது. பொதுவாக இவர்கள் கோவிலுக்குள், மடங்களுக்குள் எல்லாம் வருவதில்லை. ஆகையால் இந்த வட நாட்டுத் துருஷ்கர் என்னைப் பார்க்க வந்தது சற்று வியப்பாக இருந்தது.

கூரன் முகத்தைப் பார்த்தால் ஏதோ சாந்தமில்லாமல் தெரிந்தது. தற்போது வட நாட்டிலிருந்து வரும் சில செய்திகள் நல்லவையாக இல்லை. நமது பிரதேசத்தில் உள்ள ராஜாங்கங்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தது போய், நமது கலாச்சாரத்திற்கு, வாழ்க்கை வழிமுறைக்குச் சற்றும் ஒவ்வாத வழி முறைகள் கொண்ட மிலேச்ச மதஸ்தர்கள் சிலர் நம்ப முடியாத செயல்களில் ஈடுபடுகின்றனர். கோவில்கள் உடைபடுகின்றன; விக்கிரகங்கள் கூட உடைக்கப் படுகின்றன; வைதீகர்கள் கழுவிலேற்றப்படுகிறார்கள் என்றும் செய்திகள் சொல்கின்றன. இவை செய்திகளாக இல்லாமல் வதந்திகளாக இருக்க வேண்டுமே என்று மனம் ஏங்கியது.

சில நாட்களாகக் கரிய நிறத்தில் ஒரு பெரிய உருவம் ஒன்று நிற்பது போல் கனவு ஒன்று வருகிறது. என்ன காரணம் என்று தெரியாவிட்டாலும் சகுனங்கள் ஏதோ அச்சான்யமாகவே படுகின்றன. அதற்கும் இந்த துருஷ்கர் வருகைக்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ?

‘கூரரே, துருஷ்கர் என்ன சொல்கிறார்?’ என்று கேட்டேன்.

‘ஸ்வாமி, அவரது பாஷை முழுதும் புரியவில்லை. ஆனால் ஏதோ கலவரங்கள் பற்றிச் சொல்கிறார். தேவரீரை அவசியம் பார்த்து அதிகமாகப் பேச வேண்டும் என்றும் சொல்கிறார்,’ என்றார்.

சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டுக் கூரன் சொன்னது ஏற்கெனவே என் காதுகளை எட்டிய ஒன்றுதான்.

‘ஸ்வாமி, நாம் இங்கே பிரம்மம், ஆத்மா என்று வாதம் செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் சொல்வதெல்லாம் பார்த்தால் இதற்கெல்லாம் ஒன்றுமே தேவை இருக்காது போலத் தெரிகிறதே,’ என்றார்.

‘அப்படி இல்லை. அவர் வரட்டும். அது வரைக்கும் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்,’ என்று கூறினேன். ஆனாலும் கூரன் சொல்வதில் உண்மை உள்ளது என்பதை நான் உணர்ந்தே இருந்தேன்.

மத்தியானமாக அந்த துருஷ்கர் வந்தார். நம்மவர்கள் போல் இல்லாமல் வேறு உடை உடுத்திக்கொண்டிருந்தார். க்ஷேம சமாச்சாரங்கள் விசாரித்தபின் தடுமாறிய சமஸ்கிருதத்தில் பேசத்துவங்கினார்.

‘நான் பாரசீக நாட்டில் இருந்து வருகிறேன். நான் ஒரு யாத்ரீகன். பாரசீகம், உருது, அராபியம் என்று மூன்று மொழிகளைக் கற்றுள்ளேன். ஓரளவு சமஸ்கிருதம் தெரியும். அஸ்தினாபுரம் என்னும் நகரைப் பற்றிக் கேள்வியுற்று அதனைப் பார்க்க ஆவல் கொண்டு பயணித்தேன். மூன்று ஆண்டுகள் முன்னர் அஸ்தினாபுரம் சென்றேன். அங்குள்ள பண்டிதர்களிடம் சமஸ்கிருதம் கற்று பாரத தேசத்தைப் பார்த்து வர எண்ணினேன். மஹிஷூர் என்னும் அழகிய நகரம் பற்றிக் கேள்விப்பட்டு அங்கு சென்ற போது உங்களைப் பற்றி அறிந்தேன். தாங்கள் திருவரங்கத்தில் இருப்பதாகச் சொன்னதால் உங்களைப் பார்க்க இங்கு வந்தேன்,’ என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட அவர் தனது பெயர் அப்தாலி என்றும் கூறினார்.

பின்னர் அவர் சொன்ன செய்திகள் அதிர்ச்சி ஏற்படுத்துவனவாக இருந்தன.

‘சனாதன தர்மத்தின் வழியில் நடைபெறும் வழிபாடுகள் விரைவில் முடிவுக்கு வரப்போகின்றன. பாரசீக, காந்தார அரசுகள் ஆங்காங்கே நிலைபெறத் துவங்கி விட்டன. தில்லி என்னும் ராஜதானியிலும் மிகப்பெரிய மிலேச்ச அரசு உருவாகியுள்ளது. அவற்றின் முக்கிய வேலையே சனாதன தர்மத்தைக் குலைப்பது தான். அதற்காக அந்த தர்மத்தின் வெளிப்பாடுகளை அழிக்க முனைந்துள்ளன. தக்ஷிண பாரதப் பிரதேசத்தில் அவ்வளவாக இவை இல்லை. ஆனாலும் இங்கும் வரத் துவங்கிவிடும். சைவம், வைஷ்ணவம் என்றெல்லாம் பேசப்படும் தக்ஷிண பாரதப் பிரதேசத்தில் இந்த மண்ணிற்கு எந்தத் தொடர்பும் இல்லாத அன்னிய கலாச்சாரம் உருவெடுக்கப் போகிறது. அது இந்த மண்ணின் அடி வேரையே பிய்த்தெறியப்போகிறது. சைவ, வைணவச் சின்னங்கள் உடைத்தெறியப்படும். மக்கள் தங்கள் தர்மத்தை விட்டு அன்னிய தர்மத்தைத் தழுவ வேண்டும் இல்லையேல் மரணிக்க வேண்டும்.’ இது தான் அப்தாலி சொன்ன செய்தி.

அப்தாலி சொன்ன செய்திகள் எனக்கு முன்னரே தோன்றியவைதான். ஆனால் என் கணக்குப்படி இன்னும் 100 ஆண்டுகள் கழித்தே இவை நடைபெற உள்ளன. அரங்கன் கோவில் பலியாகப் போகிறது; புதிய ஆச்சாரியர்கள் தோன்றுவர்; பெரியாழ்வார் பாடிய மதுரைக்கும் அழிவுதான் என்பதெல்லாம் எனக்குத் தெரிகின்றன. ஆனால் அப்தாலி இன்னும் சீக்கிரமாகவே நடக்கும் என்கிறாரே என்று எண்ணினேன்.

‘இதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.

‘மஹிஷூரில் உள்ள வைஷ்ணவர்கள் உங்கள் பெயரைச் சொன்னார்கள். நீங்கள் 12 வருடங்கள் திருநாராயணபுரத்தில் தங்கியிருந்து உங்கள் தர்மத்தை வளர்த்தீர்கள் என்பதால் அவர்கள் உங்களிடம் இந்த செய்தியைச் சொன்னால் நல்லது என்று தெரிவித்தனர்,’ என்றார் அப்தாலி.

சாதாரண மக்கள் அவர்கள். ஒரு 12 வருஷங்கள் நான் திருநாராயணபுரத்தில் இருந்த போது அந்த மக்கள் காட்டிய அன்பும், கைங்கர்ய மனோபாவமும் என் கண் முன்னே நின்றன. கண்களில் நீர் வழிந்தது. வெகுளியான மக்கள். மண்டியம் பிரதேசம் என்னும் இடத்தில் ‘நல் வழிப்படுத்த யாரும் இல்லையே’ என்னும் ஆதங்கத்துடன் வாழ்ந்துவந்தார்கள். பல பலி வழிபாடுகளும், பயன் தராத, மனித தர்மத்திற்கு விரோதமான பழக்கங்களும் கொண்டிருந்த சாதாரண மலை மக்கள். ஆனால் கல்வியின் மீது மிகுந்த மோகம் கொண்டவர்கள். மிகுந்த ஆர்வத்துடன் நான் எடுத்துரைத்த விஸிஷ்டாத்வைத சித்தாந்தத்தைப் பிடித்துக்கொண்டார்கள். அந்த நாட்கள் இனிமையானவை.

நேற்று மாலை வரை ஸதஸில் நடந்த விவாதங்கள் எத்தகையவை? ஜீவாத்மா, பரமாத்மா, முக்தி, மீமாம்சை என்று அதன் தரமே வேறு. இன்றோ அடிப்படையே ஆட்டம் காணும் வகையிலான ஒரு பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இந்த உலகத்தின் போக்கைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. காலம் எவ்வளவு வேகமாக மாறுகிறது?

‘விக்கிரகங்களை உடைப்பதாவது? கோவில்களையும் சின்னங்களையும் சிதைப்பதாவது? என்ன வழக்கம் இது?’ என்று கூரன் கேட்டார். அடிக்கடி வரும் இந்தக் கரிய உருவக் கனவுக்கும் தற்போது கேள்விப்படும் விஷயங்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று திட்டவட்டமாகத் தெரிந்தது.

கூரனின் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டுமா அல்லது அடுத்த ஸதஸில் சொல்லிக் கொள்ளலாமா என்று எண்ணத்துவங்கினேன்.

‘விக்கிரகங்கள் நம்மைக் கடந்து நம்மால் அறியப்பட முடியாத பிரபஞ்சப் பெருவெளியான பிரும்மத்தின் ஒரு உருவகம். அந்த உருவத்தின் வழியாக எல்லையில்லாப் பரப்புள்ள பிரபஞ்ச ஞானத்தின், பிரும்ம சொரூபத்தின் ஆற்றலை உணர்வதே நமது ஞான மரபு. விக்கிரகத்தை உடைப்பதால் பிரம்மத்தை அழிப்பதாகிவிடுமா? என்ன ஒரு அடித்தள எண்ணம்?

மஞ்சளாளான ஒரு சிறு உருவத்திற்குள் அந்தப் பிரபஞ்ச சக்தியை, பிரும்ம சொரூபத்தை ஆவாஹனம் செய்து அதன் வழியே அப்பிரபஞ்சப் பெருவெளியின் முழு வீச்சினை உணர்வதே நமது ஆன்ம தரிசனம். ஒரு விக்கிரகமே பிரும்மமாகிவிடுமா? இது புரியாத இந்த எத்தர்கள் ஆடும் ஆட்டம் வெறும் வெற்றுக் களிப்பு என்று உணரவில்லையே’ என்று எண்ணியவாறு அமர்ந்திருந்தேன்.

இன்னொன்றும் என் மனதில் பட்டது. விக்கிரகங்கள் சக்தியூட்டப்பட்டவை. சக்கரங்களை அடியில் வைத்துப் பிரதிஷ்டை செய்து உரு ஏற்றப்பட்டவை. அவற்றிற்கான தேவையான மந்திரப் பிரயோகங்கள் நடந்தாக வேண்டும். விக்கிரகங்கள் பின்னம் அடைந்தால் அவற்றைச் சாந்தப்படுத்தப் பரிகாரங்கள் செய்தாக வேண்டும். பல உக்கிர தேவதைகளும் இவற்றில் அடக்கம். அப்படிச் செய்யாவிட்டால் ஏற்படும் பாதகங்கள் ரொம்ப அதிகம். சில தேவதைகளின் உக்கிர தாண்டவம் சொல்லி மாளாது. இதனால் அவற்றைச் சிதைப்பவர்களுக்கும் சேர்த்தே அழிவு. மக்களும் பாதிக்கப்படுவர். இதையெல்லாம் இந்த அன்னிய மனிதர்கள் உணர்வதெப்படி?

அடுத்த பௌர்ணமிக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கிறது. அன்று ஸதஸ் நடக்க வேண்டும். ஆனால் அதற்குள் இன்னும் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகிறதோ என்னும் கேள்வியும் என்னுள் எழுந்தது.

ஸதஸில் மொத்தமாகப் பதிலளிக்கலாம் என்று தீர்மானித்து ஆழ்ந்த பெருமூச்சு விட்டேன். சொல்லி வைத்தது போல் பெருத்த இடியுடன் மழை பெய்யத் துவங்கியது.

மனதில் திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது.

‘கூரரே, ஸதஸ் அடுத்த பௌர்ணமி அன்று வேண்டாம். இன்னும் இரண்டு நாட்களில் ஏற்பாடு செய்யுங்கள். அதிக நேரம் இல்லை,’ என்று சொல்லி ஆச்சரியத்துடன் பார்த்த கூரரை உற்று நோக்கினேன்.

கூரத்தாழ்வானின் கண்களில் நீர்.

(தொடரும்)

வாசகர் கடிதம் – 'நான் இராமானுசன்'

வைணவத்தில் முனைவர் பட்டம் பெற்ற, பழுத்த அனுபவம் உடைய திரு.பார்த்தசாரதி என்னும் வாசகர் ‘நான் இராமானுசன்’ தொடர் பற்றி எழுதியுள்ள கடிதம் இது. சாகித்ய அகாதெமி விருதை விட மேலானது என்று எண்ணுகிறேன். இப்படிப்பட்ட சிறப்பான வாசகர்கள் எதிர்பார்ப்பைக் கெடுக்காத வண்ணம் நான் எழுத, அருமாகடலமுதன் அருள் புரிவானாக.

————————————————————————

அன்புடை நண்பர் ஆமருவி தேவநாதன் அவர்கட்கு ,

நலம்,தங்களின் நலத்தில் நாட்டம் .

தங்களின் “ஆ பக்கங்கள் நான் ராமானுசன்” பகுதிகளைப் படித்து வருகிறேன்.கூகூள் மாமி போன்ற நகைச்சுவை கட்டுரைகளும் சுவையாக உள்ளன.

நான் ராமானுசன் ( ‘அடியேன் ராமானுசன்’ இன்னமும்  பொருத்தமோ! – வைணவத்திற்கே உரித்தான அடியேன் என்ற பதம் கலைஞர் தொலைக்காட்சி மூலம் பலரிடம்  சேர்ந்துள்ளது என்பது ஓரளவு  உண்மை )

நன்றாக அமைந்துள்ளது உங்கள் கைவண்ணம் .வைணவம் சென்னைப் பல்கலை கழகத்தில் படித்து (இளநிலை ,முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் பெற்று -அத்துணையும் பணி ஒய்வு பெற்றபின் -சென்னைப் பல்கலை கழகத்தின் “முன்னாள் வைணவ மாணாக்கர்கள் குழுமத்தின்”- Alumni Association of Vaishnavism – செயலாளர் என்கின்ற தகுதியிலும் நான் எனது குழுமத்திடம் பகிர்ந்து கொண்ட சில கருத்துக்களை உங்களிடம் சேர்ப்பிக்க விரும்புகிறேன்.

தங்களின் இப்பணி தொடர எனது அன்புகலந்த வாழ்த்துக்கள் !

இராமானுஜர் தொடர் 50 வது காட்சியைக் கடந்து விட்டது .ஸ்ரீமத் இராமானுஜர் ஓர் அவதார புருஷர் என்பதைப்பற்றி வலியுறுத்தத் தேவை இல்லை.

தன்  வாழ்நாள் முழுவதும் நாத்திகம் பேசுவதுமட்டுமல்லாது ,ஆத்திகர்களின் மனதை

புண்படுத்தியே காலம் கழித்த இதன்  வசனகர்த்தாவின் மனப்போக்கை நாம் அறிவோம்.

.ஆனால் அவரது வாழ்நாட்களின் இறுதி கட்டத்தில் தனது கடந்த கால வாழ்க்கைக்கு ஒரு பிராயச்சித்தமாகவே இத் தொடரில் தன்னை இணைத்துள்ளார் என்றே நான் கருதுகிறேன்.

ஓர் ஆத்ம பரிசோதனைக்கு நாம் நம்மையே ஈடுபடுத்திக்கொள்ளுவோம்.

ஸ்ரீ ராமானுஜரின் வைணவத் தொண்டு ,சமூக தொலை நோக்குப்பார்வை, விசிஷ்டாத்வைத தத்துவத்தின் மேன்மை இவைகளை நாம் எந்த அளவிற்கு உணர்ந்துள்ளோம்? இவைகளை எந்த அளவிற்கு இதரர்களிடம் எடுத்துக் கூறியுள்ளோம்? நாம் தனி மனிதர்கள் -இது நம்மால் இயலுமா என்ற தயக்கம் நம்மிடம் இருக்கலாம்.இன்று நல்ல வசதியோடு இருக்கும் நம் மடங்களின்  பங்கு என்ன?

இந்த தொடர் தொடங்கியதிலிருந்து இத்தொடரைப்பற்றிய விளக்கங்களை என் நண்பர்கள் பலர் (வைணவம் அல்லாத) முக நூல் மூலம் பெற்று ஸ்ரீ ராமானுஜரைப் பற்றி அறிவது மட்டுமல்லாது அவரது செயல்களை வியந்து போற்றுகின்றனர்.வைணவம் என்றாலே தமிழ் என்பர். தமிழை வேதத்திற்கு நிகராக்கிய  ஸ்ரீ ராமானுஜரைப் பற்றி நம் சிலருக்கே தெரிந்த பல பெருமைகள் பலரிடம் போய்ச் சேர்ந்துள்ளது.

ஸ்ரீ எம்பார் எனப்படும் கோவிந்தரின் திருத்தகப்பனாரை ஒரு நகைச்சுவைப்  பாத்திரமாக   காட்டியிருப்பது ஒரு நெருடல். ஆயினும் ஸ்ரீ  சோமையாஜி, ஸ்ரீ   ,திருமலை நம்பி இவர்களை மிக உயரத்தி சித்தரித்து அந்த நெருடலை சரிசெய்து விட்டனர் எனலாம்.

பாதை

‘ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். ஒரு பெரிய மாமரம் இருக்கு. சில பூச்சிகள் அதோட இலைய சாப்பிடறது. சிலது மாம்பூவுல இருக்கற தேனை சாப்பிடறது. சிலது பழத்த சாப்பிடறது. சில பறவைகள் மரத்த ஓட்டை போட்டு அதுக்குள்ள இருக்கற புழுக்கள சாப்பிடறது. ஆனா மரம் ஒண்ணுதான்.

வாடகைக் காரின் முன் பெரும் மக்கள் திரள். கூட்டம் நகராமல் நின்றிருந்த்து. விமான நிலையம் விட்டு வெளியே வந்தவுடனே இந்தியாவை உணரத் துவங்கினேன். ‘கட்சிக் கூட்டம் ஸார். சாவடிக்கறானுக’, என்று அங்கலாய்த்தார் ஓட்டுனர்.

எங்கு பார்த்தாலும் சிவப்புக் கொடிகள் அருவாள் சுத்தியல் சின்னத்துடன். ‘மதவாத எதிர்ப்பு’, ‘நில உரிமைச் சட்டம்’ என்று எழுதப்பட்ட பதாகைகள் எங்கும் தென்பட்டன. கொடி ஏந்தியவர்களில் பெரும்பாலும் வயதானவர்களும் சில முதிய பெண்களும்.

தூரத்து மேடை மேல் என் வயதொத்த ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். பேச்சின் சாயலில் எங்கள் ஊர் வாடை அடித்த்து. உற்றுப் பார்த்தேன். முகம் பரிச்சயமாக இருந்தது. காரை விட்டுக் கீழே இறங்கினேன். சந்தேகத்துடன் மேலும் கண்களை இடுக்கிப் பார்த்தேன். கொடி பிடித்திருந்த ஒரு இளைஞி சொன்னார்,’தோழர் ஆராவமுதன் பேசறார், தோழர். அனல் தெறிக்குது பாருங்க’.

ஒரு நிமிடம் என் கால்கள் பஞ்சு போல ஆவதை உணர்ந்தேன். ஆராவமுதன். எப்படிப்பட்டவன் அவன் ? சிவப்புச் சட்டை அணிந்து சிம்மம் போல் ‘முதலாளித்துவத்தை’ கிழித்துக்கொண்டிருந்த அமுதனை நம்ப முடியாத கண்களுடன் உற்றுப் பாத்தேன்.

ஆம். அவனே தான். நெற்றியில் அதே காயத் தழும்பு. பள்ளியில் காற்பந்து விளையாடிய போது கீழே விழுந்து ஏற்பட்ட விழுப்புண். நான் தான் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். இருபத்தைந்து வருடங்கள் கழிந்தாலும் பழைய நினைவுகள் அப்படியே மீண்டு வந்தன.

வகுப்பில் என் பென்ச்சிற்கு அடுத்த பலகை அமுதனுடையது. அவனை அப்படித்தான் நான் அழைப்பேன்.

அவன் பட்டாச்சாரியாரின் மகன். நல்ல வரும்படி. நில புலன்களும் நிறைய. அடுத்த வேளை உணவு பற்றியோ எதிர்காலம் பற்றியோ கவலை கொள்ளத் தேவை இல்லை என்றால் கலை, இலக்கியம், இசை எல்லாம் கைவரும் போல. அவனுக்கு அப்படித்தான் நடந்தது.

பள்ளியின் அனைத்துப் பேச்சுப் போட்டிகள், காற்பந்துப் போட்டி, நாடகம் என்று வெளுத்து வாங்கினான் அமுது. படிப்பிலும் சூரன் தான். பாரம்பரியம் காரணமாகப் பாசுரங்கள் அத்துப்படி. சில வேளைகளில் தனியாக சைக்கிளில் சென்று வரும்போது பாசுரங்களை நல்ல ராகத்தில் பாடிக்கொண்டே வருவான்.

எனக்கு அமுதனைக் கண்டு சற்று பொறாமையும் உண்டு. எதையும் ஒரு முறை படித்தாலே நினைவில் நிறுத்தும் ஆற்றல் பெற்றிருந்தான். எத்தனை நாள் கழித்துக் கேட்டாலும் அப்படியே சொல்வான். நிறைய வாசிப்பான். தடை செய்யப்பட்ட நூல்கள் என்று சொல்லி சில சிவப்பு அட்டை போட்ட நூல்களை அடிக்கடி படிக்கத் துவங்கினான்.

சிவப்பு நூல்களில் பல, உயர்தர ஆங்கிலத்தில், நல்ல வழுவழுப்பான அட்டை போட்டு ரஷ்ய வெளியீடுகளாக இருந்தன. பலமுறை நான் அந்நூல்களின் தாள்களைத் தடவிப் பார்த்ததுண்டு. நம் நாட்டுத் தாள்கள் ஏன் இவ்வாறு இருப்பதில்லை என்று எண்ணியதுண்டு. அவற்றைப் பார்க்கும் போது என் பள்ளி நூல்கள் செவலைப் பிள்ளைகள் போல் தோன்றும்.

இப்போது பார்த்தால் முழுநேர இடதுசாரி அரசியல்வாதி போல் பேசிக்கொண்டிருந்தான் அமுது. நேராக மேடையின் கீழே சென்று நின்றுகொண்டேன். அவன் என்னைப் பார்க்கவில்லை. வீராவேசமாக மத்திய அரசைச் சாடிக்கொண்டிருந்தான். அங்கு காரியஸ்தர் போல் தோற்றமளித்த ஒருவரிடம் என் அறிமுக அட்டையைக் கொடுத்து அமுதனிடம் கொடுக்க்ச் சொன்னேன். அதில் ‘மாயவரம்’ என்று எழுதியிருந்தேன்.

அன்று இரவே வந்து சந்திக்கும்படி அழைப்பு வந்தது. உணவருந்தத் தயாரக வருமாறு அவனது உதவியாளர் என்று சொல்லிக்கொண்ட ஒருவர் தொலைபேசியில் தெரிவித்தார்.

அமுதனைச் சந்திக்கச் சென்ற இடம் குரோம்பேட்டையில் ஒரு பழைய தொழிற்சங்கக் கட்டடம். அதற்கு எப்படியும் எண்பது வயதாவது இருக்கும். உள் அறையில் முப்பது வயதான மின்விசிறி சப்தத்துடன் வயதான கிழவர் நடப்பது போல் சுற்றிக்கொண்டிருந்தது. எந்நேரமும் விழுந்துவிடும் என்று தோன்றியது. அதன் கீழ் குறைந்தது அறுபதாண்டுகள் பழமையான மர மேஜையின் பின் வெள்ளை சட்டை போட்டு சிரித்தபடியே அமர்ந்திருந்தான் அமுதன்.  நெற்றியில் திருமண் இருந்ததற்கான தடயமே இல்லை. முழுவதுமாக மாறியிருந்தான் அவன்.

இருபதாண்டுப் பயணங்கள் குறித்துப் பேசினோம். உணவு முடிந்து சற்று சாவதானமாகத் தொடர்ந்தோம்.

‘ஏண்டா இப்படி ஆயிட்டே ? அப்பா ஒண்ணும் சொல்லலையா ?’, என்றேன்.

மிகப் பெரிய ஆற்றைத்தடுத்து நிறுத்தியுள்ள மாபெரும் அணையின் மதகைத் திறந்தது போல் அடுத்த ஒரு மணி நேரம் பேசினான்.

‘நீ கேக்கறது புரியறது. ஏண்டா நாஸ்திகவாதம் பேசற, பட்டாச்சாரியார் பரம்பரை ஆச்சேன்னு கேக்கறே’.

‘உனக்கு ஞாபகம் இருக்கா நம்ம ஸார் கிளாசுல எனக்கும் அவருக்கும் நடந்த வாக்குவாதங்கள் ? அதுதான் ஆரம்பம்’, என்று துவங்கினான்.

ஸார் எங்கள் தமிழாசிரியர். இலக்கியங்களில் கரைகண்டவர். அவருடன் அமுதன் பலமுறை வகுப்பில் தர்க்கவாதம் புரிந்திருக்கிறான். ‘தாஸ் கேப்பிடல்’ மற்றும் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் நூல்கள், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா முதலிய மார்க்சீய சிந்தனையாளர்களின் கருத்துக்களை அவன் வகுப்புக்குக் கொண்டு வருவான். அதற்கு ஸார் பதிலளிப்பார். சில புரிந்தும், பல புரியாமலும் நாங்கள் கேட்டபடி அமர்ந்திருப்போம்.

ஒன்று மட்டும் புரிந்தது. அமுதன் போன்ற ஆழ்ந்த ஞானமும் வாசிப்பும் தர்க்க அறிவும் உள்ள மாணவன் இடது சாரிகள் பக்கம் விழுந்துவிடாமல் இருக்க வேண்டும் என்று பிரம்மப்பிரயத்தனம் மேற்கொண்டார் ஸார்.

‘ஞாபகம் இருக்கு. ஸார் அவ்வளவு பேசியுமா நீ இப்படி ஆயிட்டே ?’, என்றேன் நான்.

‘ஸார் என்னடா சொன்னார் கீதையப் பத்தி நான் கேள்வி கேட்டப்ப ?’, ஆவேசமாக்க் கேட்டான் அமுதன்.

நன்றாக நினைவில் இருந்தது. அன்று வகுப்புக்கு சற்று முன்னதாகவே வந்துவிட்டார் ஸார். அவரிடம் கீதையின் சாரம் சொல்லும் ஒற்றைச் செய்தி என்ன?’ என்று கேட்டான் அமுதன்.

‘ஏன், சந்தேகமே இல்லாம சரணாகதி தத்துவம் தான்,’ என்றார் ஸார்.

இருபத்தைந்து ஆண்டுகள் கடந்தும் அந்த உரையாடால் என் நினைவில் இருந்தது. ஒரு சாதாரண வகுப்பறை மாபெரும் தத்துவ விவாதத் தளமாக ஆன அந்த நாளை என்னால் மறக்க முடியாது. அமுதனும் ஸாரும் நிகழ்த்திய அந்தத் தர்க்க வாதம் வெகு நேரம் நீண்டது. ஆங்கில ஆசிரியரும் அதில் கலந்துகொண்டார் என்றால் அதன் ஈர்ப்பு எவ்வளவு என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

‘சரணாகதிங்கறது நம்ம வைஷ்ணவாள்ளாம் சேர்ந்து கீதைக்குப் போட்டிருக்கிற தத்துவ விலங்கு ஸார். கீதை அதுக்கு மேலேயும் போறது’, என்றான் அமுதன்.

‘உண்மை தான். சரணாகதி இரண்டாவது அத்யாயமான சாங்கிய யோகத்துலேயே இருக்கு. ஆனால் அதற்கு அப்புறம் மேலும் பல அத்யாயங்கள்ள கர்ம யோகம், ஞான யோகம் எல்லாம் சொல்றார். இருந்தாலும் வெகு ஜனங்களால ஞான யோகமெல்லாம் சாதகம் பண்றது கஷ்டம் இல்லையா?’ அதனால சரணாகதித் தத்துவமான ‘சர்வ தர்மான் பரியஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ ங்கற சுலோகம் ஒண்ணு மட்டும் போதும்னு சொல்றேன். லௌகீகமான பொருளாதாரம் சார்ந்து வாழற மக்களுக்கு ஏத்தது ஞான யோகம் இல்லை. பக்தி தான், சரணாகதி தான். ஏதோ வயத்தக் கழுவிக்கணும், குடும்பத்தைக் காப்பாத்தணும் அதோட பெருமாள் விக்ரஹம் முன்னே ஒரு புஷ்பம் போட்டு ‘நாராயணா நீயே சரணம்’னு ஒரு வரி சொல்லிட்டு அவன் மத்த லௌகீக வாழ்க்கைக்குப் போகணும். அதனால பக்தி யோகம் மட்டுமே கலியுகத்துக்குப் போறும். அதனால சரணாகதி ஒண்ணே கீதையோட சாரம்னு சொல்றேன். மக்களால அனுஷ்டிக்க முடியாத ஞான யோகத்துனால அவாளுக்கு என்ன பலன்?’, என்றார் ஸார்.

ஸாரின் வாதம் சரியாகவே பட்டது எனக்கு.

ஆனால் அமுதன் மேலும் தொடர்ந்தான்.

‘ஆனா ஸார், அப்போ பக்தி யோகத்தையும் சரணாகதி தத்துவத்தையும் கடைசிலே வைக்காமல் ஏன் முன்னாடியே சாங்கிய யோகத்துல வெச்சிருக்கார்? பக்தி, சரணாகதி இதெல்லாம் கடந்து அப்புறம் அடையவேண்டிய உயர் நிலையே கர்ம யோகமும் ஞான யோகமும்ங்கறதால தானே ? அதோட, சாதாரண மக்களால சரணாகதி தத்துவம் தாண்டி யோசிக்கத் தெரியாதுங்கறீங்களா?’, என்று கேள்வி எழுப்பினான் அமுதன்.

ஸாரைத் தாக்குவது போல் தோன்றியது எனக்கு. இதற்கு அவர் பதில் அளிக்காமல் அவனை அமரச் செய்யவேண்டும் என்று எண்ணினேன். ஆனால் ஸார் மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பது போல் புன்முறுவல் பூத்தபடியே அதற்கும் பதிலளித்தார்.

‘அமுதா, நீ சொல்றது நல்ல பார்வை. ஒரு ஆராய்ச்சியை இப்படித்தான் பண்ணணும். நான் சொல்ல வந்தது இது தான். கி.பி. ஆறு, ஏழு நூற்றாண்டுகள்ல மக்கள் கிட்டே சிந்தனாசக்தி அதிகம் இருந்தது. ஆதி சங்கரர் அத்வைத ஞானத்தைப் பரப்பின நேரம். அப்பவே உடம்பு வேற, ஆன்மா வேறன்னு சாதாரண மக்களுக்குப் புரிஞ்சு அதுனால சமணம், பௌத்தம்னு பல சம்பிரதாயங்களோட வாதம் எல்லாம் பண்ணியிருக்கா. அந்த மக்கள் கிட்ட போய் ஞான யோகம், மோட்ச சந்நியாச யோகம் எல்லாம் பேசலாம்.அவாளால அதை மேல எடுத்துண்டு போக முடியும்.

ஆனால் அதுக்கப்பறம் பக்தி இலக்கிய காலம் வந்தது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் என்ன சொல்லியிருக்கா ?

‘அந்தி மூன்றும் அனல் ஓம்புதலை விட உன் திருவடி போதும்’னு பேசறா. அதுக்கும் மேல மோட்சமே வேண்டாம். உன் நாமத்தையே சொல்லிண்டு பூலோகத்துலயே இருந்துடறேன். உதாரணத்துக்கு இந்த பாசுரம் தெரியாதா உனக்கு ?

“பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே”

நாம சங்கீர்த்தனம் மட்டுமே போரும்னு அவாளே சொல்றா. சாதாரண மக்கள் உய்யறதுக்கு பகவானோட நாமத்தைச் சொன்னாலே போறும்னு அப்பவே ஆயிடுத்து. ஆக, சாதாரண லௌகீக மக்கள் ஞானம், மோட்சம் எல்லாம் முடியாதுன்னு ஆழ்வார்களூக்கே தோணியிருக்கு.

அது மட்டும் இல்லை. பக்தி இலக்கியக் காலத்துக்கு அப்புறம் வந்த இராமானுஜர், எல்லாரும் மோட்சம் போக ஒரே வழின்னு நாராயண நாமத்தை மக்களுக்கு உபதேசிக்கிறார். ஆனா அவரேதான் கீதைக்கு பாஷ்யமும் எழுதறார். அவர் என்னோட பாஷ்யத்தின் படி படிச்சு மோட்சத்துக்குப் போங்கோன்னு ஏன் சொல்லவில்லை ? அவரே ஏன் சாணாகதியை வலியுறுத்தறார்?’, என்றார் ஸார்.

‘இராமானுஜர் சாமானிய மக்களின் அறிவைக் கம்மியா எடை போட்டார் என்கிறீர்களா ஸார்?’, என்று கேள்வி எழுப்பினான் அமுதன்.

ரொம்பவும் அதிகபிரசங்கியாக இருக்கிறானே என்று பட்டது எனக்கு. ஆனால் ஸார் அப்படி நினைக்கவில்லை.

‘அப்படி இல்லை. இராமானுசர் சாதாரண மக்களும் மோட்சம் நோக்கிப் போறதுக்கு என்ன வழின்னு யோசிச்சார். ஞானம், யோகம் என்று பாதை கடினமாக இருந்தால் மக்கள் திசை மாறி விடுவர். மேலும் ஜாதி அமைப்பும் அவர்கள் உய்வதற்கு வழி செய்யவில்லை. ஆகவே எல்லாருக்கும் புரியட்டும்னு ‘நாராயண’ நாமத்தை எல்லாருக்கும் உபதேசித்தார். இங்கே ரொம்பவும் சாதாரணமா சமூகத்துல கீழ் நிலைல இருக்கறவாளும் கரை ஏறணும்கற சம தர்ம இரக்க மனசு காரணம். அவாளுக்கு அறிவில்லேன்னு அர்த்தம் இல்லை.

ஞான மார்க்கம் வழியா மேலேற கல்வி வேணும். கல்வி கத்துண்டு எல்லாரும் படிச்சு ஞானம் அடைய ரொம்ப தலைமுறை ஆகும். உடனடியா ஒரு சமத்துவமும் உயர்வும் வேணும்னா எல்லாருக்கும் ‘அஷ்டாட்சரம்’ ( ஓம் நமோ நாராயணாய ) உபதேசம் பண்ணனும்னு செஞ்சார்’, என்றார் ஸார்.

சிறிது நீர் அருந்திவிட்டு மேலும் தொடர்ந்தார்.

‘அவர் காலத்துக்கப்புறம் வைஷ்ணவம் ரெண்டாச்சு. ஆப்கானிஸ்தான் அங்கிருந்தெல்லாம் படை எடுப்பு. அப்புறம் வெள்ளைக்காரா வர வரைக்கும் ஒரே களேபரம், பஞ்சம், பட்டினி. அதுக்கப்புறமும் பஞ்சம். இதிலெல்லாம் மக்களோட தேடல்கள் எல்லாம் பாழாப்போய் வெறும் சோற்றுப் பிண்டங்களாக மனிதர்கள் வாழ ஆரம்பிச்சா.

தேச விடுதலைக்குப் பிறகும் மக்கள் சாப்பாட்டுக்கு வழி செய்யற வேலைக்குத் தான் போனா. ஆத்ம விசாரம், ஞான மார்க்க முயற்சிகள் என்று எதுவும் இல்லை. ஏன்னா வெள்ளைக்காரா கொண்டுவந்த அடிமை அறிவுக் கல்வி மக்களை மர மண்டைகளா ஆக்கிடுத்து. இன்னும் அப்படித்தான் இருக்கு.

ஆகையால ‘கீதை மோட்ச சந்நியாச யோகம் போதிக்கற ஞானத் தேடலை முன் வைக்கறது, அதனால் எல்லாரும் அந்த வழியே போங்கோ’ன்னா அதைப் படிக்கறவனும் படிக்க மாட்டான். அதுனாலதான் இராமானுஜர் சொன்ன மாதிரி நானும் ‘சரணாகதி தத்துவமே கீதையின் சாரம்’னு சொல்றேன்’, என்று நிறுத்தினார்.

அமுதன் எழுந்து நின்று கை கூப்பினான். நாங்கள் அனைவரும் எழுந்து நின்று செய்வதறியாது விழித்தோம். சிலரது கண்களில் கண்ணீர், ‘எப்பேர்ப்பட்ட வியாக்கியானம்!’ என்று.

சன்னதம் கொண்டவர் போல் மேலும் தொடர்ந்தார். அவர் கண்களில் ஒரு தீவிர ஒளி தென்பட்டது.

‘ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். ஒரு பெரிய மாமரம் இருக்கு. சில பூச்சிகள் அதோட இலைய சாப்பிடறது. சிலது மாம்பூவுல இருக்கற தேனை சாப்பிடறது. சிலது பழத்த சாப்பிடறது. சில பறவைகள் மரத்த ஓட்டை போட்டு அதுக்குள்ள இருக்கற புழுக்கள சாப்பிடறது. ஆனா மரம் ஒண்ணுதான். கீதை அந்த மாமரம் போன்றது. யாருக்கு எப்படி சாப்பிடப் பிடிக்கிறதோ அப்பிடி சாப்பிடலாம். ஆனா எல்லாராலும் சுலபமா சாப்பிடறதுக்காக ‘சரணாகதி’ங்கற பழத்தை சாப்பிடுங்கோன்னு நான் சொல்றேன்’, என்று கூறி நாற்காலியில் அமர்ந்தார். ஆங்கில ஆசிரியர் கண்களில் நீருடன் எழுந்து நின்று கை தட்டினார்.

‘கடைசியா ஒரு கேள்வி ஸார்’, என்றான் அமுதன்.

‘நன்னா கேளு. ‘கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப்படாத செவி’ன்னு வள்ளுவர் சொல்றார். நீ கேட்கற கேள்விகளைப் பார்த்தா விவேகானந்தர் உன் ரூபத்தில் மீண்டும் வந்திருக்கிறாரோன்னு தோண்றது,’ என்றார்.

அமுதன் நெகிழ்ச்சியுடன் கேட்டான். ‘இந்த சாப்பாட்டுக் கல்வி பத்திக் கவலைப் படாமல் மேற்கொண்டு ஞான யோகம் தேடி நான் போகக் கூடாதா? இந்த லௌகீகக் கல்வியால எனக்கு ஒரு பயனும் இல்லையோன்னு தோண்றது,’ என்றான்.

ஸார் மௌனமானார்.

‘லௌகீகக் கல்வி எல்லாருக்கும் ஆனது. அதைக் கத்துக் கொடுக்கத் தான் நான் சம்பளம் வாங்கறேன். அதனால இதிலிருந்து வெளியே போய் ஞானத்தைத் தேடுன்னு என்னால சொல்ல முடியாது. முதல்ல நான் ஞானம் நோக்கிப் போறேன். அப்புறம் உனக்கு வழி காட்டறேன். அது வரைக்கும் நீ கொஞ்சம் பொறுமையா மேல படிச்சுண்டு இரு’, என்று ஒரு கையைத் தூக்கி ஆசி வழங்குவது போல் சொல்லிவிட்டுச் சென்றார்.

ஆனால் அதற்கும் அமுதனின் இன்றைய நிலைக்கும் என்ன தொடர்பென்று புரியவில்லை. கேட்டேன்.

‘சரிதான். தொடர்பில்லை தான். ஆனால் பதினாறு வருஷம் நான் கல்கத்தாவுல பல்கலைக் கழகத்துல தத்துவப் பேராசிரியரா இருந்தேன். போன வருஷம் மாயவரம் வந்தேன்.

எத்தனையோ மாணவர்களுக்கு அறிவுக்கண் திறந்து வெச்ச அவர், கை கால் இழுத்து, பாரிச வாயு வந்து நிலை குலைஞ்சு கிடந்தார்.

காரல் மார்க்ஸ் சொன்ன முதலாளித்துவ அரசுகள் அவரைக் கண்டுக்கலை. வணிக நோக்குல மட்டுமே செயல் படற பெரிய மருத்துவமனைகளால அந்த அறிவுச் சுடருக்கு சேவை செய்ய முடியல்ல. பணம், பணம்னு பிடுங்கித் தின்னானுங்க மருந்துக் கம்பெனிகள் எல்லாம். பதினாறு வயசுல எனக்கு ஆத்மா, உடல், பிரபஞ்சம்னு அறிவுக்கண்ணைத் திறந்த அவருக்கு, என்னால பணத்தால ரொம்ப ஒண்ணும் பண்ண முடியல.

அப்போ முடிவெடுத்தேன். இந்த தத்துவம்,விசாரம் எல்லாம் நம்ம நாட்டுக்கு இப்ப மட்டும் இல்லை, எப்பவுமே தேவை இல்லை. ஸார் சொன்ன மாதிரி சோத்துக் கல்வி, சோத்துக்கான வாழ்க்கைன்னு இருக்கற நாட்டு மக்கள் மத்தியில  அந்த மாதிரி விசாரமெல்லாம் வர்ரதுக்கு இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகும். சாமானிய மக்கள் செத்த அப்புறம் மோட்சம் அடையறாளா இல்லையாங்கறது இப்ப அவசியம் இல்லை. வாழறச்சே தினம் தினம் செத்து செத்து வாழாம இருக்காளாங்கறது தான் முக்கியம். இது தான் இப்போ இருக்கற ஒரே தேவை. அதுக்கு சுரண்டல், மேலதிகாரம் எல்லாம் போகணும். இந்த முதலாளித்துவ அமைப்புகளால இயக்கப்படற அரசுகளும் வணிக நிறுவனங்களும் அழியணும். அதுக்கான முயற்சியே தேவைன்னு இதிலே முழுசா இறங்கிட்டேன்’, என்றான்.

ஸார் இருந்தால் ஒப்புக்கொள்வார் என்று தோன்றியது.

இராமானுசர் – ஒரு செய்தி

ராமானுஜரைப்பற்றி திரு.கருணாநிதி வசனம் எழுதி ஒரு திரைக் காவியம் வர இருக்கிறது. என்ன செய்வது ? மாநில முதல்வராக இருந்த போதே திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் இவர். இப்போது வேறு வேலை ஒன்றும் இல்லை. குடும்பத்தைப் பார்க்கலாம் என்றால் ஒரே குளறுபடி. வீட்டின் ஒவ்வொரு அங்கத்தினரும் நவக்கிரஹம் போல் ஒவ்வொரு திசை நோக்கி இருக்கின்றனர்.
என்ன தான் செய்வார் மனுஷன் ? கதை எழுதத் துவங்கிவிட்டார்.
விரைவில் நல்ல நகைச்சுவையுடன் கூடிய மெகா தொடர் காணீர், காணீர், காணீர்.

இதை சிலர் எதிர்க்கின்றனர். அதுதான் புரியவில்லை. இராமானுசரைப் பற்றி திரு.கருணாநிதி எழுதினால் என்ன ? ‘நான் இராமானுசரின் ஆன்மீகத்தையும், அவரது இறைக் கொள்கைகளையும் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் பிராமண வகுப்பினராக இருந்தாலும் அவரது சமூக நீதிக் கொள்கைகள் எனக்கு ஏற்புடையவையே’, என்றெல்லாம் கூறியுள்ளார் திரு.கருணாநிதி. நல்ல நகைச்சுவை உணர்வுடன் பேசக்கூடியவர் அவர். அவரது அச்சுவையை இராமானுசர் பற்றிய அவரது எழுத்தில் விரைவில் காணலாம்.

அடுத்த ஆண்டு வெளிவர இருக்கும் எனது ‘நான் இராமானுசன்’ நூலிற்கு திரு.கருணாநிதியின் இந்த வசன நாடகம் ஒரு நல்ல விளம்பரமாக அமையும் என்று எண்ணுகிறேன். இரண்டையும் ஒப்பீடு செய்ய ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் நினைக்கிறேன்.

இறை அருள் இருப்பின் நூல் வெளி வரும்.

நான் இராமானுசன் – பகுதி 11

பூர்வ மீமாம்ஸை, உத்தர மீமாம்ஸை முதலான நூல்களின் மேல் நம்பிக்கை இல்லையா ? அவற்றில் உள்ள வேள்விகள் பற்றிய ஞானம் தேவை இல்லையா ? அவை எதுவுமே வேண்டாமா ? அவை இல்லாமலேயே மோக்ஷம் கிட்டுமா ? என்றெல்லாம் கேட்டிருந்தார் ஸ்ரௌதிகள்.

மீமாம்ஸங்கள் எல்லாம் இருக்கட்டும். அவற்றில் என்ன இருக்கின்றன என்ற ஞானம் எவ்வளவு பேருக்கு இருக்கிறது ? அவற்றில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு பண்டிதர்கள் பரப்பிய புரளிகள் எத்தனை ? அவற்றை சங்கரர் களைந்த விதம், ஆழ்வார்கள் செய்த தொண்டு , அவர்கள் வழி காட்டிய மோக்ஷப் பாதை, அதன் பின் வந்த நாதமுனிகள் ஆற்றிய பணி – இப்படி எவ்வளவோ தூரம் கடந்து விட்டோம். ஆனாலும் இவர்கள் மீமாம்ஸங்களிலேயே உள்ளனரே ? என்று எண்ணினேன்.

மீமாம்ஸங்களுக்குள் போவதற்குள் பாரத சிந்தனை வெளியில் எவ்வளவு ஆழம் உள்ளது என்று நம் மக்கள் அறிந்துள்ளனரா என்று எனக்கு சந்தேகம் உண்டு. வேதங்கள் மட்டுமே பிரமாணம் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று நம்மில் யாராவது கேட்டுள்ளனரா என்றும் எனக்குச் சந்தேகம் உண்டு. அவ்வாறு கேட்ட பௌத்தமும் ஜைனமும் ஸார்வாகமும் போன இடம் தெரியவில்லையே என்று கேள்வி எழுப்பியவர்கள் எத்தனை பேர் ?

ஏதோ ஒரு தீர்க்கதரிசி ஒரு பாதையைக் காண்பித்தால் அதனையே பின்பற்றிக்கொண்டு செல்வதும், சில நாட்கள் கழித்து அவரை விடுத்து இன்னொரு தீர்க்கதரிசியின் பின்னால் செல்வதும் தான் ஆன்மீக விழிப்புணர்வா என்றும் இந்த மக்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரியவில்லை.

கேள்விகள் ஒரு காலத்தில் எழுப்பப்பட்டன. அதன் மூலமே உபநிஷதங்கள் தோன்றின. அவற்றின் மூலம் வேதங்கள் சொல்லும் ஆழ்ந்த பிரபஞ்ச அறிவில் சில வெளிச்சங்கள் தென்பட, மேலும் ஆழ விசாரித்தால் பல உண்மைகள் புலப்பட்டன. மேலும் மேலும் தோண்டிப் பார்த்து அவற்றின் மூலம் பிரபஞ்சத்தின் ஆதியினை உணர முற்படுவது விஞ்ஞானம். அந்த ஆதியே பிரும்மம் என்றோ, இந்தப் பிரபஞ்சம் என்ற பருப்பொருளின் உணர்வு வடிவே பிரும்மம் என்ற எண்ணமோ ஏற்படுமாயின் அதுவே தத்துவ விசார வெற்றி, ஆன்மீகம்.

ஸ்ரௌதிகள் கேட்ட இன்னொரு கேள்வி என்னைத் தைத்தது. ‘ஸார்வாகன் நாஸ்திகன் இல்லையா?’ என்பதே அது.

நாஸ்திகன் என்பவன் யார் ? பிரும்மம் இல்லை என்பவனா ? அல்லது பிரும்மம் என்பது ஸர்வ வல்லமை படைத்தது என்று நம்ப மறுப்பவனா ? பிரும்மம் இல்லை என்பது வேறு; அது தேவை இல்லை என்பது வேறு அல்லவா ? ஆக எது நாஸ்திகம் ?

நாஸ்திகம் என்பது இருக்கட்டும். முதலில் ஆஸ்திகம் என்பது என்ன ? பிரும்மத்தை நம்புவதா ?

ஆஸ்திகம் என்பதன் வேர்ச்சொல் அஸ்தி என்பது அல்லவா ? ‘அஸ்தி’ என்றால் ‘இருப்பது’ என்பது. ‘இருப்பதை’ நம்புவது ஆஸ்திகம். ‘இருப்பதை’ உணர்வது ஆன்மீகம்.

இருப்பதை நம்பாதது ஒருபுறம் நாஸ்திகம் என்றால் இருப்பதை அறிய முடியாதது என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா ? அறிய வேண்டிய தேவை இல்லை என்பது அல்ல அது. அறிய முடியாது என்று நம்புவது அது. இருக்கிறது என்பதை உணர்வதும் ஆனால் இருப்பதை அறிய முடியாது என்பதை ஒப்புக்கொள்வதும் தேடலின் ஒரு வழி தானே.

ஆனால் ஸார்வாகர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் ‘இருப்பது என்பதே இல்லை’ என்ற கொள்கை உடையவர்கள். கண்களுக்குத் தெரியும் இருப்பே இருப்பு. தெரியாதது இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ? கண்களுக்குத் தெரிந்து, உணர முடிந்து இருக்கும் பூதங்களின் கலவையினால் ஏற்படும் மாற்றங்கள் இந்த உலகப் பொருட்கள். அவையே சாஸ்வதம். அவை அழிந்தபின் இருப்பது வேறு ஒன்றும் இல்லை. ஆகவே கண்களுக்குத் தெரியாதவை நமக்குத் தேவை இல்லாதவை என்பதை விட அவை இல்லை என்பதே உண்மை. இது அவர்கள் சார்பு நிலை.

ஸார்வாகர்களின் நிலை ரொம்பவும் எளிமையானது. ஆனால் அந்த நிலை பௌதீக வாதம் மட்டுமே. கண்களுக்குத் தெரியாததால் சில விஷயங்கள் இல்லை என்றாகிவிடுமா?

பசும்பால் இருக்கிறது. அதிலிருந்து மோர், தயிர் முதலியன கிடைக்கின்றன. எனவே பாலைப் பார்த்து இதில் மோர் இல்லை என்று சொல்ல முடியுமா? அல்லது மோரையோ, தயிரையோ பார்த்து இதில் பால் இல்லை என்று சொல்ல முடியுமா ? அல்லது அவற்றினுள் நெய் இல்லை என்று ஆகுமா ? நெய் கண்ணுக்குத் தெரியவில்லை என்பதால் தயிரில் வெண்னெய், நெய் முதலியன இல்லை என்று தான் கூற முடியுமா ?

பால் காரணம். மோர், தயிர் முதலியன காரியம். அதே போல் தயிர் காரணம். வெண்ணெய் அதன் காரியம். வெண்ணெய் காரணம், நெய் காரியம். அது போல் இந்த உலகில் மனிதன் மற்ற உயிர்கள் மற்றும் ஜடப் பொருட்கள் காரியம் என்றால், காரணம் என்ன ?

தயிர் கடைந்தபின் வெண்ணெய் கிடைக்கிறது என்பதால் தயிர் இல்லை என்று சொல்ல முடியாதது போல மனித, மிருக உயிர்களும், ஜடப்பொருட்களும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவற்றிற்கான காரணமும் இருந்தாக வேண்டும் அல்லவா ?

ஆக, ஸார்வாகர்களின் தத்துவம் முழுமையானதல்ல. ஒரு அளவிற்கு மேல் நம் சிந்தனை செல்லவில்லை என்பதால் சிந்தனைக்கு அப்பால் அறிவதற்கு ஒன்றுமே இல்லை என்று ஆகுமா ?

உலகம் என்ற பருப்பொருள் உண்மை என்பதால் அதை நாம் உணர்வதால் அதனைக் காரியம் என்று கொள்வோம். உலகம் என்பது நம் அனைவரையும் சேர்த்தே சொல்கிறேன். ஆக, உலகம் காரியம். அதன் காரணம் என்ன ? ஸார்வாகர்கள் தத்துவப்படிப் பார்த்தால் காரணம் நம் சிந்தனைக்கு அப்பால் உள்ளது எனவே காரணம் என்பது இல்லை என்று கொள்ளலாமா ? அப்படிக் கொள்வது தவறு இல்லையா ?

அப்படியென்றால் பிரபஞ்சம் என்பது இல்லையா ? பிரபஞ்சம் பற்றிய நமது சிந்தனை விரிவு அடையவில்லை என்பதால் பிரபஞ்சம் என்பது இல்லை என்று ஆகிவிடுமா ?

பிரபஞ்சம் பற்றி நம்மால் முழுமயாக அறியவும், அதன் குணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் நமது சிந்தனைச் சக்தி போதாமையால், பிரபஞ்சத்தின் உருவகமாக ‘பிரும்மம்’ என்று கொள்கிறோம். பிரபஞ்சம் என்பது இன்ன அளவு கொண்டது என்று நம்மால் அறிய முடியாததால் பிரும்மத்திற்கு ‘அதை அளவிட முடியாது’ என்று ஒரு குணத்தைக் கற்பிக்கிறோம்.

பிரபஞ்சம் நமது பூமியையும் மற்ற கிரகங்களையும், சூரியனையும், மற்ற சூரியர்களையும், அனைத்து நட்சத்திரங்களையும் உள்ளடக்கியதால் அதற்குப் பேராற்றல் இருக்க வேண்டும் என்று எண்ணி பிரபஞ்சத்தின் உருவகமான பிரும்மத்திற்கு அளப்பறிய ஆற்றல் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். அதை பிரும்மத்தின் ஒரு குணம் என்று பிரஸ்தாபிக்கிறோம்.

இந்த சிந்தனை மரபே நமது தத்துவ ஞானம்.  இந்த ஞானத்தை அடைவதையே நமது பிறப்பின் குறிக்கோளாகக் கொள்கிறோம். கொள்ள வேண்டும்.

ஞானத் தேடல் இப்படி இருக்கையில், ஸ்ரௌதிகள் ஸார்வாகரை ‘நாலாம் வர்ணத்தவன்’ என்று இளக்காரமாகக் கூறியது என்ன வகையில் ஞானத்தின் வெளிப்பாடு என்று சிந்தனையில் ஆழ்ந்தேன்.

‘ஸ்வாமி, தேவரீர் சரீரம் அஸக்தமாக இருக்கிறதா ?* சற்று ஸ்ரம பரிகாரம்* செய்துகொள்ளத் திருவுள்ளமோ ?’, என்று என் சிந்தனையைக் கலைத்தார் கூரத்தாழ்வார்.

———————————————————————–

சரீரம் அஸக்தமாக – உடல் நிலை சரி இல்லாமல்

ஸ்ரம பரிகாரம் – ஓய்வு எடுத்துக்கொள்ளுதல்

‘நான் இராமானுசன்- பகுதி 10’

‘நான் இராமானுசன்- பகுதி 9’

நான் இராமானுசன்- பகுதி 8′

‘நான் இராமானுசன்- பகுதி 7’

நான் இராமானுசன்- பகுதி 6′

‘நான் இராமானுசன்- பகுதி 5’

நான் இராமானுசன்- பகுதி 4′

‘நான் இராமானுசன்- பகுதி 3’

‘நான் இராமானுசன்- பகுதி 2’

நான் இராமானுசன்- பகுதி 1′

‘நான் இராமானுசன்- ஒரு துவக்கம்’

 

நான் இராமானுசன் பகுதி 10

ஸார்வாகர் தலைவர் மேலும் பேசவில்லை. அவர் அத்துடன் நிறுத்திக்கொண்டார் என்று தெரிந்தது.

ஆனால் ஸார்வாகர் கேள்விகள் தொடரத்தான் போகின்றன. அவற்றில் நியாயமும் இருக்கும்.

‘ஸ்ரௌதிகளே, ஸார்வாகர்கள் கட்சி என்ன ? ஜடப் பொருட்கள் மட்டுமே இந்த உலகமும், பிரபஞ்சமும் என்பது தானே ? ஜடப் பொருட்கள் மட்டுமே உண்மை. ஜடப்பொருட்களின் சேர்க்கையினால் தான் இந்த உலகம் செயல்படுகிறது. பஞ்ச பூத சேர்க்கையினால் விளையும் ஜடப்பொருட்கள் அழியும் போது பஞ்ச பூதங்களிடமே சென்று சேர்கின்றன. இதில் ஆத்மா முதலியன எங்கிருந்து வந்தது? ‘ என்பது அவர்கள் வாதம்.

ஸார்வாகர்கள் புன்முறுவல் பூத்தனர்.

‘ஸ்வாமி, நீங்கள் வைதீக மதஸ்தரானாலும் எங்கள் பக்க நியாயம் பேசுவது எங்களுக்கு மகிழ்ச்சியே’, என்று பேசினார் ஸார்வாகத் தலைவர்.

ஜைனத் துறவிகளும், யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகளும் வியப்புடன் பார்த்தனர். ஒருவேளை குழப்பம் அடைந்தனரோ என்று கூடதோன்றியது.

மேலும் தொடர்ந்தேன்.

‘ஸ்ரௌதிகளே, ஸார்வாகர் பக்கம் நான் சாயவில்லை. ஆனால் அவர்கள் கேள்வியின் காரணம் என்ன என்று ஆராய வேண்டும்.

அவர்கள் நமது வேதத்தை ஒப்புக்கொள்ளவில்லை. ஏன் என்று நீங்கள் யோசித்ததுண்டா ?

வேதத்தில் சொல்லப்பட்டுள்ள வேள்விகள் எல்லாவற்றையும் அவர்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள். ஏன் என்று யோசித்ததுண்டா ?

ஸார்வாகர்களை தூஷிப்பதன்* மூலம் அவர்களது கேள்விகளின் நியாயத்தை மறைக்க முடியாது என்று உணர்ந்துகொள்ள வேண்டுகிறேன்.

ஸார்வாகர்கள் எதிர்ப்பது என்ன ? பிம்ப வழிபாடும் அதன் தொடர்பான சடங்குகளும். இவற்றை அவர்கள் கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். ஆனால் வேதங்கள் உபதேசிப்பது உருவ வழிபாடு இல்லையே ! அதனால் அவர்கள் கேள்வி கேட்கிறார்கள்.

பிம்பங்கள் வைத்து வழிபட்டு, அதற்குப் பல ஏற்பாடுகளையும் ஆராதனைகளையும் ஏற்படுத்தி அதன் வழியேயும் செல்கிறீர்கள். ஆனால் அந்த நேரத்திலேயே, பிம்பங்கள் எல்லாம் மாயை, நாமும் மாயை, பரமாத்மா மட்டுமே உண்மை எனவே நாம் நம்மை உணர்வதே உண்மை ஞானம் என்றும் சொல்கிறீர்கள். இப்படி ஞான மார்க்கம் பேசும் அதே சமயத்தில் உருவ வழிபாடும் செய்ய வற்புறுத்தினால் அது என்ன நியாயம் ? பீரும்மம் என்பதும் ஜடப் பொருளா ? என்றெல்லாம் ஸார்வாகர்கள் கேட்கிறார்கள்.

சித்தாந்த ரீதியாகப் பார்த்தால் அத்வைத சித்தாந்தத்தில் விக்ரஹ ஆராதனை இருப்பது கூடாது. ஆனால் நடைமுறையில் இருக்கிறதே என்பதும் அவர்களது கேள்வியின் காரணம்’, என்றேன்.

‘காடுகளில் வாழ்ந்து, கபால ஓடுகளில் பிக்ஷை எடுத்து, எரிந்த பிணங்களின் சாம்பலைப் பூசிக்கொண்டிருக்கும் ஒரு நாலாம் வர்ண ஸார்வாகன் கேட்டது உங்களுக்கு முக்கியமாகிவிட்டதா ? தேவரீர் அதற்காக அவன் பக்க நியாயம் பற்றிப் பேசுகிறீரா ? அவனது சித்தாந்தத்தை உதாசீனப் படுத்த வேண்டாமா ? அவன் நாஸ்தீகன் இல்லையா ?’, என்று கேட்டார் ஸ்ரௌதிகள்.

ஸார்வாகர்கள் நிதானம் இழந்தது போல் பட்டது. மக்கள் திரளில் ஒரு சல சலப்பு ஏற்பட்டது. ஜைனத் துறவிகள் கலவரம் அடைந்தது போல் பார்த்தனர்.

கூரத்தாழ்வார் அர்த்தத்துடன் பார்த்தார். பராஸர பட்டன் வேகமாக எழுதிக்கொண்டிருந்தான்.

இத்தனை விளக்கங்களுக்குப் பிறகும் ஸ்ரௌதிகள் இப்படிக் கேட்டது எனக்கு வியப்பளித்தது.

என் நீண்ட வியாக்யானத்தைத் தொடங்கினேன்.

‘ஸ்ரௌதிகள் க்ஷமிக்க* வேண்டும். தங்களது அடிப்படையே தவறு.

வர்ணம் பற்றிப் பேசியுள்ளீர். அது பற்றி விளக்குகிறேன். அதன் மூலம் தங்களது சித்தாந்த ரீதியிலான தவறை உணர்த்துகிறேன்.

தேவரீர் பிரும்மம் பற்றிப் பேசினீர். நானே பிரும்மத்தின் துளி, பிரதி பிம்பம் என்றால், ஒரு பிரதி பிம்பத்திற்கும் இன்னொன்றுக்கும் வேறுபாடு ஏது ? ஒரெ மாதிரியான பல பிம்பங்களுக்குள் வேற்றுமை ஏது ?

ஆக, வர்ண பேதங்கள் எங்கிருந்து வந்தன இங்கே ? ஸார்வாகரும் அந்தப் பிரும்மத்தின் ஒரு பிரதிபலிப்பு என்கிறீர்கள். நீங்களும் அதே பிரும்மத்தின் பிரதிபலிப்பு என்கிறீர்கள். அப்படி இருக்க உங்களுக்குள் வித்யாஸம் எப்படி வந்தது ? பிரும்மத்திற்குள் வேறுபாடு உண்டா என்ன ?

உயர்ந்த பிரும்மம் தாழ்ந்த பிரும்மம் என்று உண்டா என்ன ?

ஆக, ஒன்று உங்கள் வாதம் தவறு. அல்லது அனைவரும் ஒன்று’, என்று சொல்லி நிறுத்தினேன்.

ஸ்ரௌதிகள் சற்று வியப்புடன் பார்த்தார்.

‘அப்படியென்றால் பெருச்சாளியின் தோலை ஆடையாகக் கட்டிக்கொண்டு சுடுகாட்டில் வாழும் இந்த ஸார்வாகனும், நீங்களும் ஒன்றா ?’, என்று கேட்டார்.

‘ஸந்தேகம் என்ன ? அவரது ஆத்மாவும், எனது ஆத்மாவும் ஒன்றே’, என்றேன்.

‘ஆனால் தேவரீர் பிராம்மணர் அல்லவா? நீங்களும் அத்வைத சம்பிரதாயத்தில் வந்தவர் என்பதை மறக்கவேண்டாம் ‘, என்று சற்று வேகமாகச் சொன்னார் ஸ்ரௌதிகள்.

‘ஸ்ரௌதிகளே, நான் யார் என்பது இருக்கட்டும். நீங்கள் பிராம்மணரா ?’, என்று கேட்டேன்.

‘நான் பிராம்மணன் தான். முறையாக உப-நயனம்* ஆகி, வேதக் கல்வி பயின்றவன். அது சரி. ஸார்வாகன் விஷயத்திற்கு வாருங்கள். அவன் எப்படி நமக்குச் சமமானவன்?’, என்று சற்று முன்பை விட வேகமாகவே கேட்டார் ஸ்ரௌதிகள்.

‘ஸ்ரௌதிகளே, உப-நயனம் ஆகி, வேதக் கல்வி பயின்ற ஒரே காரணத்தால் நீங்கள் பிராம்மணர் அல்ல. யார் பிராம்மணன் என்ற கேள்விக்குப் பிறகு வருகிறேன்.

யார் பிராம்மணன் என்னும் கேள்வி பல காலமாகவே கேட்கப்பட்டு வருகிறது. இன்னும் பல காலம் கேட்கப்படும். பலவிதமான விளக்கங்கள் அளிக்கப்படும். அது போலவே யார் க்ஷத்ரியன் என்பதும், யார் வைஸ்யன் என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.

‘ஸார்வாகரும் சரி, யாராக இருந்தாலும் சரி, ப்ரபத்தி என்ற சரணாகதி செய்துகொண்டால் அனைவரும் ஒன்றே. அவருக்கும் மோக்ஷம் உண்டு. அத்துடன் அதற்கு முன்னரே ஆத்ம அளவில் அளவில் அனைவரும் ஒன்றே. இதுவே விஸிஷ்டாத்வைத தத்துவம்’, என்றேன்.

‘வேதத்தின் முக்கிய பாகங்களான பூர்வ மீமாம்ஸை, உத்தர மீமாம்ஸை முதலியனவற்றில் உள்ள வேள்விகள் முக்கியம் இல்லையா ? வெறும் பிரபத்தி, சரணாகதி முதலியன மட்டுமே போதுமா மோக்ஷம் பெறுவதற்கு ? யாகங்களும் வேள்விகளும் தேவை இல்லையா ? நீங்கள் வேதத்தின் அடிப்படையையே அசைப்பதாக உள்ளதே?’, என்று கேள்வி எழுப்பினார் ஸ்ரௌதிகள்.

வாதம் வேறு திசையில் செல்வது போல் பட்டது. ஆனால் மிக அவசியமான விஷயங்களை நோக்கிச் செல்வதாக உணர்ந்தேன்.

—————————————————————————————

தூஷிப்பது – இழிவு படுத்துவது.

உப-நயனம் – பூணூல் அணிவிக்கும் சடங்கு.

க்ஷமிக்க – மன்னிக்க.

நான் இராமானுசன் – ஒரு தொடக்கம்

நான் இராமானுசன் – பகுதி 1

நான் இராமானுசன் – பகுதி 2

நான் இராமானுசன் – பகுதி 3

நான் இராமானுசன் – பகுதி 4

நான் இராமானுசன் – பகுதி 5

நான் இராமானுசன் – பகுதி 6

நான் இராமானுசன் – பகுதி 7

நான் இராமானுசன் – பகுதி 8

நான் இராமானுசன் – பகுதி 9

நான் இராமானுசன் பகுதி 9

ஸார்வாகர்களின் தலைவர் கேட்ட கேள்வி கூட்டத்தை நிதானமிழக்கச் செய்தது. சிறிது சலசலப்புக்கள் தோன்றின.

ஸார்வாகர்கள் சித்தாந்தம் அப்படியானது. அவர்கள் மரபுப்படி கண்ணால் காண்பது மட்டுமே உண்மை. மற்றது பற்றிப் பேசுவது எல்லாம் வீண்.

இந்த சித்தாந்தக்காரர்கள் இன்று நேற்று அல்ல பல ஆயிரம் ஆண்டுகளாகவே நமது தேசத்தில் உள்ளனர். இந்தப் பரந்த பரத கண்டத்தில் யாருக்கும் இடம் உண்டு. யாரும் எந்தக் கொள்கையும் கொண்டிருக்கலாம். ஏனெனில் நமது சித்தாந்தம் அப்படிப்பட்டது. உடல் வேறுபாடு உடையதே தவிர ஆன்மா வேறுபாடு இல்லாதது. அனைவரது ஆன்மாவும் ஒன்றே. அவற்றிடம் உயர்வு தாழ்வு இல்லை. இதுவே நமது விசிஷ்டாத்வைதம்.

ஸார்வாகர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறினேன்.

‘ஸார்வாகர்களே, பஞ்ச பூத சேர்க்கைவாதிகளே, உங்களுக்கு என் வந்தனங்கள். நீங்கள் கேட்டுள்ள கேள்வி நியாயமானது. வெற்றிலை பச்சை நிறம் உடையது. சுண்ணாம்பு வெள்ளை நிறம் கொண்டது. ஆனால் இரண்டையும் சேர்த்து உண்டால் சிகப்பு நிறம் உருவாகிறது. அதைப்போல பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உயிர்கள் உண்டாகின்றன. இதற்கு ஏன் இவ்வளவு கூப்பாடு, ஆத்தும விசாரம் என்ற போர்வையில் வீண் விவாதம் என்பது உங்கள் கேள்வி.

இந்தக் கேள்விகள் பல ஆயிரம் ஆண்டுகளாகவே கேட்கப்பட்டு வருகின்றன. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் கேட்கப்படும். வேறு பெயர்களில் இதே கேள்வியைக் கேட்பார்கள்.

ஸார்வாகரே, நீங்கள் எப்போதாவது ‘நமக்கும் ஆடு மாடுகளுக்கும் என்ன வேறுபாடு?’ என்று யோசித்ததுண்டா ? அவையும் உணவு உண்கின்றன, இனப் பெருக்கம் செய்கின்றன, சண்டையிடுகின்றன, செத்து மடிகின்றன. நாமும் அப்படியே தானா ?

உலகமே பஞ்சபூத சேர்க்கை மட்டும் தான் என்றால் ஆடு மாடுகளுக்கும் அவற்றைவிடக் கீழான உயிர்களுக்கும் நமக்கும் வேறுபாடு இல்லையா  என்று நினைத்துப்பார்த்ததுண்டா ?

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இன்னொரு தளத்தில் நல்லவர்கள் துன்பம் அடைவதும், தீயவர்கள் நன்மை அடைவதும் ஏன் என்றும் எண்ணிப்பார்த்ததுண்டா ?

மனிதர்கள் உடலினால் செய்யும் தீமைகள் அவர்களது தற்கால வாழ்க்கையைப் பாதிப்பதில்லை என்று நீங்கள் பார்த்ததில்லையா ?

ஆகவே, இக்காலத்தில் மனிதர்கள் செய்யும் செயலால் அவர்களுக்குப் பாதிப்பில்லை என்றால் வேறு ஏதோ காலத்தில் அவர்கள் செய்த செயலால் தற்போது பாதிக்கப் படுகிறார்கள் என்று தானே அர்த்தம் ?

ஆக, தற்காலத்தில் மனிதனின் வாழ்க்கைக்கும் முன் எப்போதோ அவன் செய்த செயலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு உள்ளது என்பது புரிகிறதா ?

ஆனால் உடல் அழிவு அடையுமே ? உடல் அழிந்தபின் அவனது செயல்களும் அழிய வேண்டுமே ? ஆனால் செயல்கள் அப்படி அழியாமல் மனிதனைப் பின்தொடர்கின்றனவே. அது எப்படி ?

எனவே மனித உடலுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு தொடர்பு தெரிகிறதா ? அதையே நாங்கள் ஆன்மா என்கிறோம்.

ஒரு உடலுக்கும் அது அழிந்தபின் ஏற்படும் இன்னொரு உடலுக்கும் உள்ள தொடர்பு ஆன்மாவினால் ஏற்படுவது. உடல் ஒரு அங்கவஸ்திரம் போன்றது. அங்கவஸ்திரம் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் அதை அணியும் மனிதன் மாறுவதில்லை.

அது போல் ஆன்மா அழிவதில்லை. அது அணியும் அங்கவஸ்திரமாகிய உடல் மாறும், அழியும், தோன்றும். அழிந்த ஒரு உடலுக்கும் பிறக்கும் இன்னொரு உடலுக்கும் உள்ள தொடர்பே ஆன்மா என்பது. இதனாலேயே ஒரு உடல் ஒரு பிறவியில் செய்யும் காரியம் ஆன்மாவில் தங்கி அந்த ஆன்மா இன்னொரு உடலில் இருக்கும்போது பலன் அளிக்கிறது. நல்லவர்கள் துன்பம் அடைவது, தீயவர்கள் சுக போகங்களில் திளைப்பது இதனால் தான்.

ஆக, பஞ்ச பூத சேர்க்கை தவிர வேறு ஏதோ ஒன்று உள்ளது என்பது புலனாகிறது அல்லவா ?’, என்று கூறி நிறுத்தினேன்.

‘அப்படியென்றால் ஆடு மாடுகள் நம்மைவிட தாழ்ந்தவை என்று கூறுகிறீரா ? உங்கள் சித்தாந்தத்தின்படி அனைத்து உயிர்களும் சமம் அல்லவா ?’, என்று கேள்வி எழுப்பினார் ஸார்வாகர்.

‘உடல் அளவில் மனிதனுக்கும் ஆடு மாடுகளுக்கும் வேறுபாடு இருக்கிறது. ஆனால் ஆன்ம அளவில் அனைத்தும் ஒன்றே. உயர்வு தாழ்வு என்பதெல்லாம் இல்லை. வேற்றுமை என்பது உண்டு ஆனால் அனைத்து உயிர்களும், ஏன் ஜடப் பொருட்களும் கூட சமானமானவையே. தத்துவ த்ரையம் என்பது அது தானே. சத், சித், ஈசன் மூன்றும் உண்மை. இதோ இந்தத் ‘த்ரி தண்டம்’  இருக்கிறதே – அது உணர்த்தும் பொருள் அது தானே’, என்று கூறி என் கையில் இருந்த ‘த்ரி தண்டம்’ என்னும் மூன்று மூங்கில் கழிகளின் ஒன்றாகப் பிணைந்த நிலையை உணர்த்தினேன்.

ஸார்வாகர்கள் மேலும் பேசவில்லை. ஆனால் அவர்கள் எப்போதும் பேசாமலே இருப்பார்கள் என்று அர்த்தம் இல்லை என்பது தெரிகிறது. ஸார்வாகர்கள் எப்போதும் இருந்துகொண்டே இருப்பார்கள். இந்த என் எழுத்தை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் போதும் ஸார்வாகர்கள் இருப்பார்கள். ஆனால் வேறு பெயரில், வடிவத்தில் இருப்பார்கள். ஆனால் எப்போதும் இருப்பார்கள். இப்படியாகக் கேள்விகள் கேட்டபடி இருப்பார்கள். சில நூறு ஆண்டுகள் கழித்து பாரசீகம் தாண்டி மிலேச்ச ராஜ்யங்களில் இருந்து சில பண்டிதர்களின் பேச்சும் இப்படியே இருக்கும். அவர்களின் உந்துதலால் பல ராஜ்ஜியங்கள் மாறும். அந்த இடங்களில் எல்லாம் ஸார்வாக சித்தாந்தம் பரவும். ஆனால் சில வருஷங்களிலேயே அவை அழியும். இப்படியாக எனக்குத் தென்படுகிறது.

ஆனால் ஒன்று. ஸார்வாகர்கள் நமது தத்துவ வெளியில் ஒரு சிறந்த படித்துறை போன்றவர்கள். அவர்களது கேள்விகள் விகாரமாகத் தோன்றினாலும் நமது பாரத தேசத்தின் சிந்தனையைத் தூண்டி விடுபவை. நமது சித்தாந்தங்கள் தெளிவான குளத்தின் நீர் போன்றவை. படித்துறை போன்ற ஸார்வாக தத்துவக் கேள்விகளின் வழியே நமது அத்வைத, விஸிஷ்டாத்வை சித்தாந்தங்களில் மூழ்க நமது பாரத கலாச்சாரம் ஏற்படுத்தியுள்ள வழிமுறை இது.

இந்த ஸார்வாகத் தனமான் கேள்விகள் எக்காலத்திலும் இருக்கப் போவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. வைதீக மதஸ்தர்கள் என்று சொல்லிக்கொண்டு, ஆச்சாரியர்களின் வழிகாட்டுதலைத் தவறாகப் புரிந்துகொண்டு அவற்றின் சத்தான உட்கருத்தை விட்டுவிட்டு மேலோட்டமான சில சடங்குகளை மட்டுமே பிடித்துக்கொண்டிருக்கும் வைதீக சம்பிரதாய மரபினர் வரப்போகிறார்கள். அவர்களினால் இந்த அத்வைத, விசிஷ்டாத்வைத சித்தாந்தங்களின் ஆழத்தை உணர முடியாது. எனவே அவற்றை மற்றவரிடமும்  எடுத்துரைக்க முடியாது. இதன் காரணமாக இந்த சம்பிரதாயங்கள் கேலிப்பொருட்களாகும். இதன் காரணமாக ஸார்வாகம் சிறந்த ஒரு மார்க்கம் போல் தோற்றமளிக்கும்.

ஆன்மீகம் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளாத, புரிந்துகொள்ள முயற்சி செய்யாத ஒரு வைதீகக் கூட்டம் ஏற்படும். அதன் காரணமாகவும், வெறும் சோறு மட்டுமே வாழ்க்கையின் இலட்சியம் என்று மக்களைத் திசை திருப்பும் மிலேச்ச அரசுகளின் காலம் ஏற்படும். அப்போது இந்த வைதீகக் கூட்டம் தன் இயல்பு மறந்து, தனது அறிவை உணவுக்கு அடகு வைத்து, வெறும் சடங்குகள் மட்டுமே ஆன்மீகம் என்று நம்பி அந்த வழியே வாழும் காலம் துவங்கும். அப்போது இந்த தேசத்தின் கலாச்சார வீழ்ச்சி அதிவேக அளவில் எற்படும்.

ஆன்மீகம் என்பது தளைகளிலிருந்து விடுபடுதல் என்ற பொருள் போய், வெற்று சடங்குகளின் அணிவகுப்பு என்ற கருத்து வலுப்படும் காலம் ஒன்று வரப்போகிறது. அப்போது ஸார்வாகம் மேலும் ஸ்திரப்படும். இப்படியாக என் கண்களுக்குத் தெரிந்துகொண்டிருந்தது.

‘ஸ்வாமி, தேவரீர் அத்வைதம் விடுத்து இப்போது ஸார்வாகம் சென்றுவிட்டீரே’, என்று சற்று புன்னகையுடன் கூறி மீண்டும் வாதப் பொருளுக்கு அழைத்து வந்தார் யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகள்.

நான் இராமானுசன் பகுதி 8

ஜைன துறவி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லத் துவங்கினேன். யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகள் கேள்வி கேட்கத் துவங்கி, அதனால் வளர்ந்து கொண்டிருந்த அந்த வாதம் குறித்து சற்று எண்ணிப் பார்த்தேன். பல மதஸ்தர்களும் வந்து கேட்பார்கள் என்று எண்ணியிருக்கவில்லை. நாம் நினைப்பது ஒன்று அவன் நினைப்பது இன்னொன்று என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும் என்று தோன்றியது.

ஜைன சன்யாசியின் இந்த அத்வைத சம்பிரதாயம் தொடர்பான கேள்வி என் காலத்து நாட்டின் நிலையை உணர்த்தியது. அறிவுத் தேடல் என்பது ஒரு சமயம் சார்ந்த ஆராய்ச்சி மட்டும் அல்ல. அறிவானது இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளது. எந்தத் திசையில் இருந்தும் அது நம்மை அடையும். ஆகவே நாம் நமது புலன்களைத் திறந்த படியே இருக்க வேண்டும். ஞானம் எங்கிருந்து வரும் என்பது தெரியாது. எனவே எந்தத் துவேஷமும் இன்றி அறிவுத் தேடலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தத்துவ விசாரத்தில் அறிவாளிகள் ஈடுபட்டு வந்தனர்.

‘ஜைனரே, இதோ விளக்குகிறேன்’, என்று சொல்லித் தொடர்ந்தேன்.

‘பிரதி பிம்ப வாதம், ஏகான்ம வாதம் இரண்டும் ஒன்றே. இவை அத்வைதத்தின் ஒரு விளக்க நிலை.

சந்திரன் ஒளி வீசுகிறதே பார்க்கிறீரல்லவா ? இன்று பௌர்ணமி ஆதலால் நன்றாக சந்திரன் பிரகாசிக்கிறான். ஆனால் சந்திரனிடம் உள்ள ஒளி ஒன்று தானே ? அது இந்த உலகில் பல படிவங்களின் மீதும் விழுகிறது. அதனால் அது பல ஒளிகளாகத் தெரிகிறது. ஆற்றின் மீது விழும் ஒளி ஒரு மாதிரியும், கலங்கிய குட்டையின் மீது விழும் சந்திர ஒளி ஒரு மாதிரியும் தெரிகிறது. ஆனால் சந்திரன் ஒளி ஒன்றே.

அது போல் பிரும்மம் ஒன்று. அவித்யையினால் அது பலது போல் தெரிகிறது. நீரில் சந்திர ஒளி விழும் போது, நீர் அசைந்தால் சந்திர ஒளியும் அசையும். நீர் அசைவில்லாதிருந்தால் ஒளியும் அவ்வாறே இருக்கும். இதனால் இந்த இரண்டு ஒளியும் வேறு என்று ஆகுமோ ? ஒளி ஒன்று தானே ?

அது போல ஒவ்வொரு ஆன்மாவிலும் பற்றி இருக்கும் அவித்யையின் காரணமாக அவற்றின் இயல்புக்கு ஏற்ப ஆன்மாவின் இயல்பும் வேறுபடும். நீர் நிலைகள் அனைத்தும் அழிந்தால் சந்திரன் ஒன்றே என்று நாம் அறிந்துகொள்ளலாம். அவ்வாறே அவித்யை அழிந்தால் ஆன்மா ஒன்று என்பது நமக்குப் புலப்படும் இதுவே ஏகான்ம வாதம்.

‘சேதம்’ என்றால் பிரித்தல் என்பது பொருள். ஒரு பரமாத்மா பல ஜீவாத்மாக்களாகப் பிரிந்து காணப்படுகிறது. இதற்கு மாயை காரணம். இப்படி ‘சேதம்’ ஆனமாதிரி பரமான்மா தெரிவதால், பிளவு பட்டது போல் தெரிவதால் இதற்கு ‘அவச்சேத வாதம்’ என்று ஒரு பெயர் உண்டு.

ஒரு உதாரணம் சொல்லலாம். இதோ இந்த மண்டபத்தில் இருப்பது ஒரே வெளி தான். இங்கே இருக்கும் குடத்தின் உள்ளே இருப்பது இதே வெளி தான். குடத்தை மூடினாலும் அதனுள் இருக்கும் வெளியும் அதன் வெளியே உள்ள வெளியும் ஒன்று தான். குடம் இந்த ஒரே வெளியை இரண்டாகச் ‘சேத’ப் படுத்துகிறது. ஆனால் குடம் உடைந்தால் இரண்டு வெளியும் ஒன்றாகிறது. குடம் என்பது மாயை. இந்த மாயை விலகினால் மாயையால் சூழப்பட்ட வெளியும் புறத்தில் உள்ள வெளியும் ஒன்றாகும். இப்படி பிரும்மத்தை ‘சேத’ப்படுத்தி விளக்குவது அவச்சேத வாதம். இதுவும் அத்வைதமே’, என்று கூறினேன்.

ஜைன சன்யாசிகள் தெளிவு பெற்றது போல் தெரிந்தது.

‘இந்த விளக்கங்களில் தேவரீர் என்ன தவறு கண்டீர்? அத்வைதம் சரிதானே?’, என்று கேட்டார் ஸ்ரௌதிகள்.

‘ஸ்வாமி, தவறு இங்கே தான் துவங்குகிறது’, என்று சொல்லி நிறுத்தினேன்.

ஸ்ரௌதிகளும், ஜைனத் துறவியரும் மற்றவரும் ஆவலாக   நோக்கினார்கள்.

கூட்டத்தில் இருந்த ஸார்வாகர்கள்* போன்றவர்கள் மேலும் முன்னேறி வந்து அமர்ந்தார்கள். வைதீக தத்துவங்களில் ஏதாவது குறை காண வழி கிடைத்தால் ஸார்வாகர்களுக்கு ரொம்பவும் சந்தோஷம் தான். ‘உலகாயதம்’ என்ற தத்துவத்தின் படி வாழ்ந்து வந்தவர்கள் அவர்கள். கண்களால் காணப்படுவதே மெய்; மற்றதெல்லாம் பொய் என்பதே அவர்களது வாதம்.

ஸார்வாகர்கள் இன்று நேற்று இருக்கவில்லை, திரௌபதியின் துகில் உரியப்பட்டதே ஹஸ்தினாபுர சபையில் ? அன்று அந்த சபையில் ஸார்வாகர்கள் இருந்தார்கள். இதைப்பற்றி திரௌபதியே மஹாபாரதத்தில் சொல்கிறாள்.

ஸார்வாகர்கள் ஏதோ கேள்வி கேட்க விரும்புவது போல் தோன்றியது. ஆனால் ஒன்றும் கேட்காமல் அப்படியே அமர்ந்தார்கள். நான் என்ன சொல்லப்போகிறேன் என்பதில் அவர்கள் குறியாக இருந்தார்கள் என்று தோன்றியது.

‘ஸ்ரௌதிகளே, ஜைனத் துறவியரே, அத்வைத்தத்தின் மூன்று வகைகளைச் சொன்னேன். ஆனால் தவறு இந்த மூன்றின் உள்ளேயே  தான் உள்ளது.

இருப்பது ஒரு வெளி , அது இரண்டாகப் பிரிவது மாயை, அப்படிப்பிரிப்பது மாயை. இது அத்வைத சாரம்.

இருப்பது ஒரு ஒளி ஆனால் அது படும் இடம் பொறுத்து அதன் அளவும், பிரகாசமும் அமையும். அழுக்கான குளமானால் அழுக்கான ஒளியே பிரதி பிம்பமாகத் தெரியும். இதுவும் அத்வைத சாரம்.

நான் கேட்கிறேன். பிரும்மம் ஒன்று மட்டும் தானே உள்ளது ? அப்போது அறியாமை எங்கிருந்து வந்தது ? அவித்யை எங்கிருந்து வந்தது ? அறியாமையும் அவித்யையும் இருப்பதால் தானே ஜீவாத்மாக்கள் இருப்பது போலவும், ஜடப் பொருட்கள் இருப்பது போலவும் தோன்றுகிறது ?

ஆக, அவித்யையும், அறியாமையும் பிரும்மத்திடமே உள்ளனவா ? அப்படியென்றால் பிரும்மம் பரிபூரண ஞானம் என்பது பிதற்றலா ? பிரும்மம் அறியாமையின் நிலைக்களன் என்பது ஏற்கமுடியுமா ?

அறியாமை ஆத்மாக்களினால் உருவாகிறது என்பது தவறு இல்லையா ? அறியாமையால் தான் ஆத்மாக்கள் இருப்பது போல் தோன்றுகிறது என்பது தனே அத்வைதம் ? ஆக, அறியாமை தான் முன்னது, ஆத்மாக்கள் பிந்தையவை. அப்படித்தானே ஆகிறது ? அப்படியென்றால் பின்னர் தோன்றும் ஆத்மா ( ஜீவாத்மா ) அதற்கு முன்னரே தோன்றும் அறியாமையின் தங்குமிடம் என்பது பகுத்தறிவுக்கு உட்பட்டதாக இல்லையே ?’, என்று கேட்டேன்.

மக்கள் சற்று தெளிவில்லாதது போல் தென்பட்டது.

மேலும் விளக்கினேன்.

‘இப்போது இங்கே கூரத்தாழ்வார் இருக்கிறார். அவரது மகன் பராசரன் அதோ அமர்ந்திருக்கிறான். கூரத்தாழ்வார் காரணம். அவரால் இந்த உலகிற்கு வந்தவன் பராசரன். கூரன் முன்னவர். பராசரன் பின்னவர். அப்படி இருக்க, பராசரனே கூரனின் நிலைக்களன் என்று சொல்ல முடியுமா ? காரணம் முன்னது. காரியம் பின்னது. காரணத்தால் காரியம் சாத்தியமாகிறது. காரியம் காரணத்தின் இருப்பிடம் என்பது சரி இல்லையே.

கூரன் இருப்பது உண்மை ஆனால் பராசரன் இருப்பது பொய் என்பது ஒப்புக்கொள்ள முடியவில்லையே.

இது போல் தான் உள்ளது அத்வைதமும். ஞான ஸ்வரூபம் பிரும்மம்; அப்பழுக்கில்லாதது. ஜீவன், ஜடப் பொருள் எல்லாம் பிரும்மத்தின் பிம்பம். ஆனால் அவை அறியாமையால், மாயையால் வேறு ஒன்றாகத் தெரிகின்றன என்பது உண்மை என்றால் அந்த அறியாமை எங்கிருந்து வந்தது ? பிரும்மத்திடமிருந்தா? பிரும்மம் தான் பரிபூரண ஞான ஸ்வரூபமாயிற்றே ?

ஆகவே அறியாமை, மாயை முதலியன பிரும்மத்தின் குணங்கள் இல்லை என்று ஆகிறது.

சரி, அறியாமையால் ஜீவன், ஜடப் பொருள் முதலியன தெரிகின்றன என்றால் ஜீவாத்மாக்களும் ஜடப்பொருட்களும் அறியாமையின் இருப்பிடமா ? காரண காரிய சம்பந்தம் உடைபடுகிறதே ? இதனால் தான் இந்த சித்தாந்தம் சற்று திடம் இல்லாதது என்று கூறுகிறேன்’, என்றேன்.

ஜைனத் துறவியர் சற்று ஆழமாக மூச்சை இழுத்து விட்டனர். விஷயங்களை கிரஹித்துக்கொள்வது போல் தெரிந்தது.

ஒன்று சொல்கிறேன். சங்கரர் விவர்த்த வாதி. காரணமாகிய பிரும்மம் உண்மை ஆனல் காரியமாகிய ஜீவன்களும், ஜடப்பொருட்களும் பொய் என்பது விவர்த்த வாதம்* தவிர வேறென்ன ?

ஆனால் அடியேன் விவர்த்த வாதி அல்ல. நான் பரிணாம வாதி. காரணமும் உண்மை; காரியமும் உண்மை; பிரும்மமும் உண்மை; ஜீவன்களும் உண்மை; உலகமும் உண்மை. தத்துவ த்ரயம் ( மூன்று உண்மைகள்)  என்பதே என் வாதம்’, என்று கூறி நிறுத்தினேன்.

கூட்டத்தில் பேரமைதி நிலவியது.  ஸார்வாகர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்; ஸ்ரௌதிகள் மௌனமானார்.

ஸார்வாகர்களின் தலைவர் போல் இருந்த ஒருவர் எழுந்தார்.

‘ஆத்மா, ஜீவன், பரமாத்மா என்றெல்லாம் நேரத்தை வீணடிக்க வேண்டுமா ? இதனால் என்ன பயன் ? உலகமே பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால் எற்பட்டது என்று நாங்கள் கூறுகிறோம். எப்படி வெற்றிலை, சுண்ணாம்பு இரண்டும் சேர்ந்தால் அதுவரை இல்லாத சிவப்பு நிறம் உண்டாகிறதோ அது போல் பஞ்ச பூதங்கள் ஒரு விகிதத்தில் சேர்வதால் உயிர் உண்டாகிறது. சிவப்பு என்பது ஒன்று தனியாக இல்லை. சிவப்பு என்பது முக்கியமும் இல்லை.

அது போல் உயிர் என்பதும் முக்கியம் இல்லை. வெற்றிலையுடன் சேர்க்கை எற்படுவதால் சிவப்பு நிறம் உண்டாகிறது. சேர்க்கை முறிந்ததும் சிவப்பு இல்லை, பஞ்ச பூத வஸ்துக்களின்* சேர்க்கை விகிதம் முறிவதால் உயிர் இல்லாமல் ஆகிறது. அவ்வளவே வாழ்க்கை. இங்கு ஆத்மா எங்கு வந்தது ? பிரும்மம் எங்கே வந்தது?’, என்று சொல்லி வெற்றிக் களிப்புடன் கூட்டத்தைப் பார்த்தார்.

கூட்டத்தார் என்னை நோக்கினர்.

———————————————————————————————————————–

ஸார்வாகர் – ஒரு பிரிவினர். கடவுளை ஏற்காதவர்கள். தற்காலத்தில் இடது சாரிகள் போல் இருப்பவர்கள்.

விவர்த்த வாதம் – முன் பின் முரணான வாதம்.

வஸ்து – பொருள்

———————————————————————————————————————–

நான் இராமானுசன் பகுதி 7

வைஷ்ணவம் ஆரம்பத்தில் இப்படி இருந்ததில்லை என்று சொல்லிய நான் சற்று நிறுத்தினேன்.

இவருக்கு எங்கிருந்து துவங்குவது என்பதில் எனக்கு ஒரு சம்சயம்* இருந்தது.

வேதத்திலிருந்து துவங்கி யஞ்ய மூர்த்தி ஸ்ரௌதிகளுக்கு விளக்கலாம் என்று முடிவு செய்தேன்.

ஆரியர்கள் என்றோரு இனத்தார் மாடு மேய்த்தபடி பாரசீகம் தாண்டியிருந்து வந்து திராவிட தேசத்தை அடிமைப்படுத்தினார்கள் என்று இன்னும் சில நூறு ஆண்டுகளில் பேசப்படப் போகிறது. அதுவே உண்மை என்றே பலராலும் ஒப்புக்கொள்ளப்படப் போகிறது. எனவே ஆரியர்கள் என்றொரு கூட்டத்தின் மேல் வன்மம் அவிழ்த்துவிடப் படப் போகிறது. அதனால் சரியான வரலாறு தெரியாமல் மிலேச்ச அரசர்கள் அளிக்கப் போகிற வரலாற்றை நம்பப்போகிறார்கள் மக்கள். இந்த என் எழுத்துக்களை நீங்கள் படிக்கும் காலத்திலும் அவ்வாறே மிலேச்ச அரசுகளின் தாக்கத்தால் உங்கள் வரலாறு தெரியாமல் இருப்பீர்கள் என்று தோன்றுகிறது.

ஒரு வேளை நான் எழுதுவது உங்களுக்குக் கிடைத்தால் உண்மை தெரிய வாய்ப்புள்ளது அல்லவா ?

சரி, விஷயத்திற்கு வருகிறேன்.  இதிஹாசம் என்றாலே பரிகாசம் செய்யப் போகும் ஒரு காலமும் வரப் போகிறது என்று என்னவோ மனதில் பட்டுக்கொண்டே இருக்கிறது. இதிஹாசங்களே பொய் என்று ஒரு நீண்ட நெடிய பிரச்சாரம்  நடைபெரும். இதி ஹாசம் என்பது என்ன ? ‘இது நடந்தது’ என்பதே இதி ஹாசம் என்பதன் பொருள்.

இப்படி இதிஹாஸங்கள் தோன்றுவதற்கு முன்னரே தோன்றியவை வேதங்கள். இவை எழுதப்படவில்லை. வேதங்கள் ரிஷிகளால் உணரப்பட்டன. உணரப்பட்டவை உபதேசிகப்பட்டன. ஆனால் எழுதப்படவில்லை. எனவே இவை ‘ஸ்ருதி’ என்று அழைக்கப்பட்டன ( ஸ்ருதி என்பது காதால் கேட்கப்படுவது என்று அர்த்தம்). தமிழில் கூட வேதங்களை ‘எழுதாக் கிளவி’ என்று சொல்வார்கள்.

இந்த வேதங்களின் சாரங்கள் உப-நிஷத்துக்கள் எனப்பட்டன. ‘உப-நிஷதம்’ என்றால் ‘அருகில் அமரவைத்தல்’ என்று பொருள். இவை கேள்வி- பதில் வடிவில் இருப்பன. பாரத கலாச்சாரத்தில் கேள்வி-பதில் என்பது ஆணிவேர். எதையும் கேள்வி கேட்கலாம். 108 உப-நிஷதங்கள் உள்ளன என்று தெரிகிறது.

‘ஸ்வாமி, தேவரீர் திடீரென்று வேதத்தின் அருகில் போகிறீரே, தங்கள் தத்துவம் என்ன ஆனது ?’, என்று கேட்டார் ஸ்ரௌதிகள். ஜைனத் துறவிகளும் ஆவலுடன் தலை அசைத்தனர். ஒரு சேர ஜைனமும் அத்வைதமும் அணிதிரண்டு வருவது போல் உணர்ந்தேன். கூட்டத்தில் பௌத்தர்கள் யாராவது உள்ளனரா என்று பார்த்தேன். ஏனெனில் அவர்களும் இருந்தால் அவர்களுடைய சந்தேகங்களுக்கும் விடை அளிக்கலாம் அல்லவா ?

நமது மடத்திற்கு யாரும் வரலாம். ஆத்ம விசாரத்தில் ஈடுபட ஒரு வேகம் வேண்டும்; ஒரு உள் உணர்வு வேண்டும்; அறிவுத்தேடல் வேண்டும். அது மட்டுமே ஒரே தகுதி.

பதில் தொடர்ந்தேன்.

‘வேதம் பற்றிச் சொன்னேன் இல்லையா ? அதன் உள்ளே உள்ள விஷயங்கள் அனேகம் பேருக்குப் புரிவதில்லை. அதன் உண்மை ஒன்று தான். ‘ஒன்று’ என்பது தான் அந்த உண்மை. புரியவில்லையா ? பலது என்பதெல்லாம் இல்லை. இருப்பது ஒன்றே’, என்று சொல்லி நிறுத்தினேன்.

‘பார்த்தீர்களா , எங்கள் ஆதி சங்கரர் சொன்ன ‘ஒரு பிரும்மம்’ விஷயத்திற்கு நீங்கள் வந்து விட்டீர்கள். பிரும்மம் ஒன்று தான்’, வெற்றிக் களிப்புடன் சொன்னார் ஸ்ரௌதிகள்.

‘ஸ்ரௌதிகளே, சற்று பொறும். நானும் சங்கரரும் சொன்னது ஒன்று தான். நானும் அவரும் வேதம் என்ன சொன்னதோ அதைத்தான் சொன்னோம். ஆனால் வேறு விதமாகச் சொன்னோம். அதில் அவரது வாதத்தில் சிறிது தவறு உள்ளது.

வேதம் என்ன சொன்னது ? ஆறு அங்கங்கள் கொண்ட நான்கு வேதங்கள் சொன்னது ‘பிரும்மம் ஒன்று’ . அதைப் பலவாறு விளக்கியது உப-நிஷத்துக்கள். உப-நிஷத்துக்களின் சாரம் பிரம்ம சூத்திரம். நானும் சங்கரரும் பிரம்ம சூத்திரத்துக்கு பாஷ்யம் எழுதினோம். அதில் எங்கள் அணுகுமுறை வேறு. அனுமானங்கள் வேறு. ஆனால் உண்மை ஒன்று’.

‘ஆனால் நீங்கள் உண்மை மூன்று என்று ‘தத்துவ-த்ரயம்’ என்று எழுதியுள்ளீர்களே ?’, என்றார் ஸ்ரௌதிகள்.

‘ஆமாம். மூன்றும் உண்மை தான். ஆனால் அந்த மூன்றும் ஒன்று தான்’, என்று சொல்லி நிறுத்தினேன்.

ஜைன சன்னியாசிகளும் சற்று குழம்பியதாகவே தெரிந்தது. ஸ்ரௌதிகளும் குழம்பியே காணப்பட்டார். கூரத்தாழ்வார் மட்டும் புன்னகைத்தபடி,’ இன்று எங்களுக்கு நல்ல பல காலக்ஷேப விஷயங்கள் அர்த்தமாகின்றன. நாங்கள் ரொம்பவும் தன்யர்களானோம்’, என்று கீழே விழுந்து சேவித்தார்.

கூரத்தாழ்வார் நம் சிஷ்யரானாலும் அவர் என்னை ஸேவிப்பது எனக்குக் கொஞ்சம் சங்கடம் தான். அவர் சிஷ்யர் என்றாலும் கைங்கர்யத்தில் உயந்தவர். சம்பிரதாயத்திற்காகத் தன் நேத்ரங்களை ( கண்களை ) இழந்தவர். சோழனின் சைவ மத ஈடுபாடு அப்படி இருந்தது.

உபன்யாசத்திற்கு வருகிறேன்.

‘சங்கர பகவத் பாதர் சொன்னது, பிரும்மம் மட்டுமே உண்மை. எனவே அவர் வேதத்தையும், உப-நிஷதத்தையும் ஒட்டி அதன் உண்மையைக் கூறுகிறார். ஆனால் வேறு ஒன்றுமே இல்லை என்று கூறுகிறார்.

நான் சொல்வது பிரும்மம் ஒன்று தான். அத்துடன் உயிர்களும், உலகமும் உண்மையே. ஆனாலும் இவை அனைத்தும் ஒன்றே. ஏனெனில் நமது உயிருக்கு உடல் நமது உடம்பு. அது போல் நமது உயிரை இறைவன் தனது உடம்பாகக் கொள்கிறான். இது சரீர- சரீரி பாவம். நமது ஆத்மா சரீரம். அவன் சரீரி. அவன் இன்றி நமது உயிரும் இல்லை, நமது உடம்பும், ஜடப் பொருட்களும் இல்லை. எல்லா உடல்களிலும் உள்ள உயிர்களின் உள்ளே அந்தர்யாமியாய் இருக்கிறான். ஆகவே அவன் ஒருவனே உண்மை என்பது சரியே’, என்று சொல்லி நிறுத்தினேன்.

அனைவரும் புரிந்த மாதிரி சற்று தெளிந்த முகத்துடன் தென்பட்டனர்.

‘அத்வைத சித்தாந்தத்தில் ‘பிரதி பிம்ப வாதம், அவச்சேத வாதம், ஏகான்ம வாதம் என்றெல்லாம் படிக்கிறோமே, அவை பற்றி சிறிது சாதிக்கப் பிரார்த்திக்கிறேன்’, என்று துவங்கினார் ஒரு ஜைன சன்யாசி.

அவர் அத்வைதம் பற்றியும் அதன் பல வாதங்கள் பற்றியும் கேட்டது ஆச்சர்யமாக உங்களுக்கு இருக்கலாம். ஆனால் ஒரு தத்துவத்தின்படி வாழ்ந்தாலும், மற்ற தத்துவங்களைப் பற்றித் தெரிந்துகொண்டு, துவேஷ மனப்பான்மை இல்லாமல் தர்க்க ரீதியாக அணுகும் ஒரு மனப்பான்மை இந்தப் பாரத தேசத்தில் என் காலகட்டத்தில் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் இந்தப் பரந்த நோக்கு அடியோடு அழிந்து போகும் காலம் இந்த தேசத்தில் வெகு தூரத்தில் இல்லை என்பது தெரிகிறது. ஒரு கையில் வாளையும் இன்னொரு கையில் மிலேச்ச மத புஸ்தகத்தையும் கொண்டு சாதாரண மக்களை நெருக்கும் காலம் வர இருக்கிறது. இன்னொரு புறம், நன்மை செய்கிறேன் என்ற போர்வையில் இன்னொரு மிலேச்ச மதத்தில் சேர்க்க அலையும் ஒரு கூட்டம் வரவிருக்கிறது. இவை எல்லாம் கலி காலத்தின் கோலங்கள்.

‘பிரதி பிம்ப வாதம், ஏகான்ம வாதம், அவச்சேத வாதம் முதலியன அத்வைதத்தின் சாரத்தை விளக்க வந்த விளக்கப் பிரிவுகளே. இவையும் அத்வைதத்துக்குள் அடக்கம்’, என்று சொல்லித் தொடர்ந்தேன்.

 

%d bloggers like this: