நான் வேங்கடநாதன் – தாற்காலிக நிறுத்தம்

‘நான் வேங்கடநாதன்’ தாற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. விவரங்களுக்குத் தொடர்ந்து வாசியுங்கள்.

‘நான் வேங்கடநாதன்’ தொடரைத் தாற்காலிகமாக நிறுத்த வேண்டியுள்ளது.

8 வாரங்களுக்கான கட்டுரைகளை எழுதி, தகவல்களில் பிழைகள் உள்ளனவா என்று பார்க்கச்சொல்லி.  ஒரு சம்ஸ்க்ருத பண்டிதருக்கு அனுப்பியிருந்தேன்.

என்னை அழைத்த அவர் இரு சிறு பிழைகளைச் சுட்டினார். மற்றபடி இது ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பும், நிறைய எதிர்ப்புகள் வரும். ஆனாலும், நீங்கள் சொல்லும் பலதிற்கும் ஆதாரங்களைச் சொல்லியுள்ளதால் உங்களால் பதில் அளிக்க முடியும். ஆனால், இதில் சுமார் 200 ஆண்டுகளாக நடைபெற்றுள்ள வழக்குகள் பற்றி எழுதியுள்ளதால் என் நண்பரும் வழக்கறிஞருமான பெரியவர் ஒருவரிடம் அனுப்பட்டுமா என்று கேட்டிருந்தார். சரியென்றேன்.

மறு நாள் அந்தப் பெரியவர் அழைத்தார். முதலில் ஆசீர்வாதங்களைச் சொன்னார். பின்னர் ‘நீ 52 வாரம் வராப்ல எழுதப்போறேங்கற. இப்ப 9 வாரத்துக்கு வந்திருக்கு. அதுனால இப்பவே சொல்றேன். இது புஸ்தகமா வந்தா இதுக்கு கேஸ் போடுவா. ஏன்னா, சுமார் 100 வருஷத்துக்கு மேல நிறைய கேஸ் இருக்கு. எனக்குத் தெரிஞ்சு 10 கேஸ் இருக்கு. மொதல்ல எல்லா கேசையும் முழுசாப் படி. அப்பறம் எழுதினா சட்டப் பிரச்னை வராது’ என்றார்.

குழப்பமாக இருந்தது.

‘இந்தத் தொடரோட நேக்கம் என்ன?சம்பிரதாயத்தத் தெளிவு படுத்தறதா? இல்ல சட்டப்படி எது சரின்னு சொல்றதா?’ என்றார்.

‘ரெண்டுமே தான் சார். அதோட வரலாறும் கோண மாணலா இருக்கு. அதையும் வரிசைப்படி சொல்லணும்னு நினைக்கறேன். சம்பிரதாயத்துக்கு நிறைய பேர் எழுதறா. ஆனால், ரெண்டையும் கலந்து எழுதறதுக்கு யாரும் இல்ல. அந்த இடத்தப் பூர்த்தி பண்ணலாம்னு முயற்சி பண்றேன்’ என்றேன்.

‘அப்படீன்ன எல்லா கேசையும் முழுக்க படி. நிறைய அப்பீல் எல்லாம் போயிருக்கா. குறிப்பா ஶ்ரீவில்லிபுத்தூர் கேஸ், ஶ்ரீரங்கம் கேஸ், காஞ்சிபுரம், திருப்பதி கேஸ் – இப்பிடி நிறைய நிக்கறது. மங்காப்புரம் கேஸ் ரொம்ப விசேஷம். இதுல பலதுக்கும் தொடர்பு உண்டு. அதனால, இதுல வரலாறு வேற பெரிய அளவுல வர்றது. என்னக் கேட்டா, கேஸ்கள் எல்லாத்தையும் வாசிக்காம இத எழுதக் கூடாதும்பேன்’ என்றார்.

‘நான் இராமானுசன்’ எழுதிய போது இவ்வாறாக ஒரு அத்வைத பண்டிதர் கேள்விகள் கேட்டு, ‘இதுக்கு பதில் சொல்லிட்டு மேல எழுது’ என்று சொன்னதால் அவ்வாறே செய்தேன். ‘நான் இராமானுசனி’ல் சட்டப் பிரச்னைகள் ஒன்றும் இல்லை. தற்போது இம்மாதிரியான பிரச்னைகள் வரக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கையாக நடந்து கொண்டிருந்தேன். தேசிகன் விஷயத்தில் சட்ட விஷயங்கள் நிறைய உள்ளன. சிலதைப் பற்றி எழுதியிருந்தேன். அதன் விளையே மேற்சொன்ன சம்பாஷணை.

அந்த மூத்த வழக்கறிஞர் சொன்னது சரியென்றே படுகிறது. ’52 வாரம் வெளியிட்டு, அப்பறம் மாத்த வேண்டியிருந்தா என்ன பண்றது?’ என்ற அவரது கேள்வி நியாயமானதே என்று தோன்றுகிறது.

‘இப்ப நான் என்ன செய்யணும்?’ என்றேன்.

‘எல்லா கேஸ்களையும் படி. ஒவ்வொண்ணும் 70-80 பக்கங்கள் இருக்கும். முழுசாப் படி. புரியல்லேன்னா கேளு. ஆனால், கேஸ்களப் படிக்காம எழுதாதே’ என்றார்.

இந்தத் தொடரில் சம்பிரதாய விஷயங்களில் தெளிவு உள்ளது. கொஞ்சம் தெரியாத விஷயங்களையும் கூட தெளிவுபடுத்த அறிஞர்கள் உள்ளனர். ஆனால், சட்ட விஷயங்களில் எனக்கு முழுமையாகத் தெளிவு இல்லை. அதனால் அந்த மூத்த வழக்கறிஞரின் அறிவுரையை ஏற்கிறேன்.

‘மொத்தமா 10 கேஸ் தான் இருக்கா?’ என்றேன்.

‘இல்லை. எனக்குத் தெரிஞ்சு 10. இன்னும் இருக்கும். உங்கடவா இதுக்குன்னே ரொம்ப மெனக்கெட்டிருக்கா, 200 வருஷமா. நிறைய இருக்கும்னு தோணறது’ என்றார்.

‘சார், தொடர் வரப்போறதப் பத்தி வாசகர்கள் கிட்ட சொல்லிட்டேனே. இப்ப நிறுத்தணும்னா காரணத்தையும் சொல்லணும். உங்க பேரச் சொல்லலாமா?’ என்றேன்.

‘காரணத்தச் சொல்லு. என் பேர் வேண்டாம். நான் அனேகமா ரிடையர் ஆயிட்டேன். உங்க ஆட்கள் கிட்ட மாட்டிண்டு முழிக்க எனக்கு வயசு இல்லை’ என்றார் வருத்தத்துடன். வழக்கறிஞர் ஸ்மார்த்தர்.

ஆக, தற்போதைக்கு ‘நான் வேங்கடநாதன்’ பேசமாட்டார்.

வழக்குகள் அனைத்தையும் வாசித்து, தெளிவுபெற்று, பின்னர் தொடர்கிறேன்.

நான் வேங்கடநாதன்

பின்னாட்களில் எழப்போகும் கேள்விகள் அனைவற்றிற்கும் என்னால் இந்த லிகிதத்தில் பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இது வரை வரதன் என் கூட  இருந்து வழி காட்டினான். கூரேசருக்கு நேத்ரங்களை மீண்டும் அருளி வழி நடத்திச் சென்றது போல்,  தற்போதும் அவனே என்னுடனும் இருந்து என்னை எழுதப் பண்ண வேண்டும். 

உடையவர் திருவடிகளையே ஆஸ்ரயித்த நான் எம்பெருமானாரைப் போலவே நூற்றியிருபது பிராயம் ஜீவித்திருப்பேன் என்கிற எண்ணம் எல்லாம் இல்லை. நல்ல நினைவுடன் இருக்கும் போதே, என்னுடைய கைகள் என் மனதில் இருப்பதைத் தெரிவிக்கும் ஆற்றலுடன் இருக்கும் போதே, நான் யார், என்னென்ன செய்தேன், காஞ்சி வரதனும், அரங்கனும் என்னை என்னென்ன செய்யப் பண்ணினார்கள் என்பதை எழுதி வைத்துவிட எண்ணுகிறேன்.

என்ன எழுதப்போகிறேன் என்பதைத் தற்போது அறியேன். நான் யார் என்று தெரிவிப்பதாகச் சொல்லித் துவங்கியிருந்தேன். ஆகவே நான் யார் என்பதைத் தெரிவிக்கிறேன். 

ஆக, நான் யார்? அதைத் தேடியே இன்னமும் பிரயத்னப் பட்டுக்கொண்டு இருக்கிறேன். நான் யார் என்பதை முழுமையாக அறிந்துவிட்டேனா என்று தெரியவில்லை. ஆனால், அந்த ‘நான்’ என்பது என்ன என்பதைப் பற்றி அறிந்துகொண்டேன். அதாவது இப்போது வயோதிகத்தில் தளர்ந்திருக்கும் இந்த சரீரம் ‘நான்’ இல்லை என்பதை அறிந்துகொண்டுள்ளேன். 

இதைத் தெரிந்துகொள்ள ஒரு நூறு வருஷங்கள் தேவைப்பட்டுள்ளன. உடையவர் வழி காட்டிச் சென்றாரோ என்னால் நூறு வருஷங்களுக்குள் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், உடையவர் வழியில் செல்லா மானுடர் தம்மைப் பற்றி எப்படித் தெரிந்துகொள்வரோ என்கிற கவலையும் என்னுள் இருக்கிறது. அதையும் எழுதிவிடுகிறேன். 

நான் என்னென்ன செய்துள்ளேன் என்பதை நீங்கள் அறிந்துகொண்டிருப்பீர்கள். ஆனால், நான் செய்யாத சிலதையும் கூட நான் செய்துவைத்ததாகவும் நீங்கள் தெரிந்துகொண்டிருப்பீர்கள் என்றே தோன்றுகிறது. நான் தற்போது என்னதான் செய்தாலும், என்னதான் சொன்னாலும், நீங்கள் வாசிக்கும் காலத்தில் இதெல்லாம் எப்படிச் சொல்லப்பட்டிருக்கும் என்பதை நான் அறிகிலேன். 

முக்கியமான அபாண்டம் ஒன்றும் என் மீது ஏற்றப்படும். உடையவர் சம்பிரதாயத்தைப் பிளவு படுத்த என் நேரத்தைப் பயன்படுத்தினேன், வாழ்நாளைச் செலவிட்டேன் என்றும் சொல்வர். ஆனால், உண்மை என்ன? நான் உடையவர் காட்டிய வழியில்தான் சென்றேனா, எம்பெருமானார் ஸாதித்த ஶ்ரீவைஷ்ணவத்தையே விருத்தி செய்ய என் வாழ்நாள் பயன்பட்டதா என்பதை நான் சொல்லவிரும்பவில்லை. என்னென்ன செய்தேன் என்பதை, ரங்கநாதன் என்னை ஒரு கருவியாகக் கொண்டு என்னென்ன நிகழ்த்தினான் என்பதை, அவற்றுள் என் நினைவில் உள்ளதை எழுதுகிறேன். 

பின்னாட்களில் எழப்போகும் கேள்விகள் அனைவற்றிற்கும் என்னால் இந்த லிகிதத்தில் பதில் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இது வரை வரதன் என் கூட  இருந்து வழி காட்டினான். கூரேசருக்கு நேத்ரங்களை மீண்டும் அருளி வழி நடத்திச் சென்றது போல்,  தற்போதும் அவனே என்னுடனும் இருந்து என்னை எழுதப் பண்ண வேண்டும். 

மீண்டும் சொல்கிறேன். ‘நான் செய்தேன்’ என்று வருகிற இடங்களில் எல்லாம் ‘அரங்கன் ஆணையிட்டு இந்த உடம்பு செய்தது’ என்று புரிந்துகொள்ளுங்கள்.

முழுதும் எழுத முடியுமா, அதற்கு எனக்குப் ப்ராப்தம் உள்ளதா என்று தெரியவில்லை. முடிந்தவரை எழுதுகிறேன்.  இந்த லிகிதத்தை நீங்கள் எத்தனை வருஷங்கள் கழித்து வாசிகிறீர்களோ,  தற்காலத்தில் நான் பயன்படுத்தும் சொற்கள் அப்போது இருக்கின்றனவோ – இவை நான் அறிகிலேன். உங்களுக்குப் ப்ராப்தம் இருந்து, இந்த நூல் உங்கள் கைகளில் கிடைத்து, இதை வாசிக்கும் போது இதில் உள்ளதெல்லாம் உங்களுக்குப் புரிந்தால் ஶ்ரீரங்நாயகித் தாயாரும், பெருந்தேவித் தாயாரும் உங்களைக் கடாக்ஷித்துள்ளார்கள் என்று உணர்ந்துகொள்ளுங்கள்.   

எனக்கு என்னவெல்லாமோ பட்டங்கள் கொடுத்துள்ளார்கள். ரங்கநாதனின் பாதுகைகளின் மீது உள்ள அசஞ்சலமான பக்தியினாலும், அப்பாதுகைகளைப் பற்றி நான் பாடியதாலும் என் மீது அன்பு கொண்டு பல பட்டங்கள் கொடுத்தனர் அரங்கனின் பக்தகோடிகள்.  ரங்கநாதனே கொடுத்த பட்டமும் உண்டு.

ஆனால், நான் வேங்கடநாதனே. வேங்கடநாதனாகவே எழுதுகிறேன். 

அடியேன், வேங்கடநாத தாஸன். 

%d bloggers like this: