அது கெடக்கு வேலையப்பாரு ..

சங்கத்தமிழ் தெரியுமா ? கேட்டார் நண்பர்.

எந்த சங்கம் , என்றேன் நான். விடாப்பிடியாக ‘வன்னியர் சங்கமா?’, கொசுறு கேட்டு வைத்தேன். விடுவானேன் ..

கடுப்பானார் நண்பர். பின்னே அவர் தமிழ் ஆசிரியர் அல்லவா ?

என்னப்பா, தமிழ் நாட்டுலே சங்கத் தமிழ் தெரியலே, நீயெல்லாம் ஒரு தமிழனா? சீண்டினார் அவர்

விடுவேனா நான் ? மறத் தமிழன் ஆயிற்றே..

சரி ஐயா, எந்த சங்கத்துலே தமிழ் வளர்க்கறாங்க ? விடாமல் கேட்டேன்.

“முதல், இடை, கடை என்று மூன்று சங்கம் இருந்தது தம்பி, முதல் சங்கத்தை சிவ பெருமானே தொடங்கி வைத்தார்.அதில் அகத்தியர் பங்கு பெற்றார். பிறகு இடைச் சங்கம் என்று ஏற்பட்டது, பிறகு கடைச்சங்கம்.இதெல்லாம் பழைய காலம். இப்போ சமீபத்துலே பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கம் நடத்தினார்”, மூச்சு விட்டுக் கொண்டார்.

அவருடன் பேசியதில் தெரிந்து கொண்டது :

தமிழை வளர்ப்பதற்காக இறைவனே தொடங்கி வைத்த சங்கம் மதுரையில் நடந்தது.பெரிய தமிழ்ப் புலவர்கள் பங்கேற்றனர். சங்கப் பலகையில் அமர்ந்துகொண்டு புலவர்கள் தமிழ் வளர்த்தனர். பிறகு பல பாண்டிய மன்னர்கள் மதுரையில் தமிழ் வளர்க அரும்பாடு பட்டனர்.புலவர்களை அழைத்து பல வாதங்கள் நடத்தி ஐயங்கள் தீர்த்து அதன் மூலம் தமிழ் வளர்த்தனர். அதன் தொடர்ச்சியாக பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவி தமிழ் வளர்த்தார்.

“அது சரி. இந்த மாதிரி தமிழ் வளர்த்து என்ன பயன் ?”,  என் பகுத்தறிவு அவ்வளவு தான்.என்ன செய்வது ?

என் கேள்வியை புறந்தள்ளிவிட்டு ஆசிரிய நண்பர் மேலும் தொடர்ந்தார்.

“முதல் சங்கம் அகத்தியர் தலைமை தாங்கினார் என்றும் கூறுவர். இரண்டாம் சங்கத்தில் தொல்காப்பியம் அரங்கேறியது. மூன்றாம் சங்கத்தில் நக்கீரர் தலைமை தாங்கினார். பத்துப்பாட்டு,எட்டுத் தொகை, அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம், திருவாய்மொழி முதலியவை இந்த சங்க இலக்கியங்களில் அடங்கும்.இதில் முதல் சங்க இலக்கியங்கள் பல கிடைக்கவே இல்லை”, பெருமூச்சுடன் நிறுத்தினார்.

இந்த தமிழ் ஆசிரியர்கள் இப்படித்தான். இவர்கள் இப்படி இந்தக் காலத்திலும் சங்க காலம் பற்றியே பேசினால் தமிழன் முன்னேறுவது எப்படி ? விஞ்ஞான யுகத்தில் சங்கமாம் இலக்கியமாம். எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

“சரி தலைவா. இந்த சங்க இலக்கியம் பற்றி இப்போ என்ன ?”, கேட்டு வைத்தேன்.

மறுபடியும் நான் புறந்தள்ளப்பட்டேன். மேலும் தொடர்ந்தார்.

“இந்த சங்க இலக்கியம் எல்லாம் 6000  வருசம் பழமை கொண்டவை. இலங்கை ஆறுமுக நாவலர், உ.வே.சாமினாத ஐயர் முதலானவர்கள் தேடித் தேடி சேகரித்து இவை அனைத்தையும் நமக்கு அளித்துள்ளார்கள். சாமிநாத அய்யர் தான் கைப் பணம் போட்டு ஊர் ஊரா சுற்றி பல செல் அரித்துப்போன ஓலைச் சுவடிகள் எல்லாம் சேர்த்து புஸ்தகமா போட்டார்”.

“சரி சாமி. இந்த பழங்கதை இப்போ எதுக்கு? 21-ம் நூற்றாண்டுலே இந்த இலக்கியத்தாலே என்ன பயன் ?”, பொறுமை இழந்து கேட்டே விட்டேன்.

பொங்கி எழுந்தாரே பார்க்கலாம்…

“யோவ், நீ தமிழன் தானா ? உனக்குன்னு ஒரு வரலாறு இருக்கு தெரியுமா? அந்த வரலாற்றுலே இந்த புலவர்கள் எல்லாம் தான் முக்கிய பாத்திரங்கள். இவங்க எல்லாம் இல்லேன்னா நீ யாருன்னே இன்னிக்கி தெரியாது. ஆறுமுக நாவலர் யார் தெரியுமா ? இலங்கைக்காரர்.யாழ்ப்பாணம்.பெரிய தமிழ்ப் பண்டிதர்.வடலூர் ராமலிங்க அடிகளார் ‘திரு அருட்பா’ னு சைவ சமயத்தைத் தழுவி எழுதினார். அது சைவ சமயம் இல்லை, சிவன் வழிபாடு அப்படி இல்லைன்னு சொல்லி இந்த ஆறுமுக நாவலர் பிரிட்டிஷ் கோர்ட்லே வழக்கு போட்டார். அதோடு ‘திரு மறுட்பா’ னு இன்னொரு புத்தகம் எழுதினார். அப்பேர்ப்பட்டவங்க நம் முன்னோர் “, சற்று மூச்சு வாங்கிக் கொண்டார்.

கிடைத்த சந்தர்ப்பத்தை விடுவினா ?  தொடர்ந்தேன். “இலங்கைன்னு சொன்னீங்க. இலங்கையிலேயும் தமிழ்ச் சான்றோர்கள் இருந்தாங்களா?”

“அது சரி. அதுவே தெரியாதா?” என்றவர், “பகுத்தறிவு பேசறவங்க பல பேருக்கு இது தான் நிலைமை” என்றார்.

“பகுத்த்தறிவுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம்?”, சற்று கோபமாகவே கேட்டேன். என்ன இருந்தாலும் பகுத்தறிவாளர் என்றால் எனக்கு ஒரு பரிவு இருக்கத்தான் செய்தது.

“பகுத்தறிவுன்னு சொல்றவங்கள்ளாம் யாரும் இதைப் பத்தி எல்லாம் பேசறதில்லை. ஏதோ தமிழக் கலாச்சாரமே இங்கே பெரியார் அண்ணாதுரை காலத்துலேருந்து தொடங்கின மாதிரி  தானே பேசறாங்க. ஆன்மிகம் இல்லேன்னா இன்னிக்கி தமிழே இல்லை. ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழை வளர்க்கலேனா இன்னிக்கி தமிழ் எங்கே ? அவங்க பாடின பாசுரங்கள்ளேயும், பதிகங்கள்ளேயும் இல்லாத தமிழா ? அவங்களுக்கு ஒரு பெருமை உண்ட இங்கே ? ஆழ்வார்கள் பேர்லே ஒரு பல்கலைக் கழகம் உண்டா? எதுக்கேடுத்தாலும் அண்ணா பேர் தான். தெரியாம கேக்கறேன், தமிழ் வளர்க்க அவர் என்ன செய்தார்? ஒரு தலைவரா இருந்திருக்கலாம்.நல்லா மனிதரா இருந்திருக்கலாம்.ஆனா அவர் எழுதின தமிழ் இலக்கியம் என்ன? “, கண்கள் சிவக்க கேட்டார் ஆசிரியர்.

இருந்தாலும் ‘பகுத்தறிவுப் பாசறையில் ‘ வளர்ந்ததால் விட்டுக் கொடுக்க முடிய வில்லை.

“என்ன இருந்தாலும், ஆழ்வார், நாயன்மார் எல்லாம் கடவுள் பற்றியே பாடறாங்களே. அதப் பயன்படுத்தி ஒரு மதத்தைப் பரப்பறாங்களே. அதனாலே நமது மதச் சார்பின்மை வீணாகாதா?”, என்றேன் பெருமிதத்துடன்.

“நான் தமிழையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாதுங்கறேன். தமிழ் இலக்கணத்துலே முதல் விதி தெரியுமா?”, கேட்டார்.

நான் தமிழை மதிப்பெண் பெற மட்டுமே படித்தேன். அதனால் வழக்கம் போல் பதில் தெரியவில்லை.

“உடல் மீது உயிர் வந்து ஒன்றுவது இயல்பே”- அதாவது, உடம்பு ஒன்று இருந்தால் அதன் மீது உயிர் வந்து சேர வேண்டும். சேர்ந்தால் தான் அந்த உடம்பு உயிர் வாழும். அதே போலே, தமிழ் என்பது உடம்பு. ஆன்மிகம் என்பது உயிர். அந்த உயிர் உடம்பில் சேர வேண்டும். அப்போது தான் தமிழ் ஒரு உயிருள்ள மொழியாக இருக்கும். அதை விடுத்து பகுத்தறிவு பேசி, இந்து மத எதிர்ப்பு செய்கிறேன், மதச்சார்ப்பின்மை பரப்புகிறேன் என்று ஆன்மிகத்தை தமிழில் இருந்து பிரித்தால் தமிழ் ஒரு உயிருள்ள மொழியாக இருக்காது தம்பி. அது தான் வேண்டுமா ? வெறும் உடம்பு தான் வேண்டுமா ?

சைவம், வைணவம் எல்லாம் தமிழுக்கு அணி செய்கின்றன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழோடு இரண்டறக் கலந்தவர்கள்.அதே போலத் தான் தாயுமானவர், திருமூலர், பட்டினத்தார், கம்பர் எல்லாரும்.கம்ப ராமாயணத்துக்கு ஈடு உண்டா ? ஆனால் தமிழ் நாட்டுப் பாட நூல்களில் கம்ப ராமாயணம் எவ்வளவு உள்ளது ? ஒரு பாட்டு, அரைப் பாட்டு. அதுவும் கடவுள் சம்பந்தம் இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள்.

உருது மொழி இலக்கியங்களிலோ அராபிய இலக்கியங்களிலோ இஸ்லாமிய நம்பிக்கைகள் இல்லாமால் தவிர்க்க முடியுமா ? நான் கேட்கிறேன், ராமன் பெருமை பேசாமல் கம்ப ராமாயணம் எப்படி இருக்க முடியும் ? ராமனைப் பற்றி இருப்பதால் அது இந்து மத இலக்கியம் என்றால், எந்த நூலையுமே பாடப் புத்தகத்துலே வைக்க முடியாது. இந்த மாதிரி தான் வில்லி பாரதம், பெரிய புராணம் எல்லாம். சிவ பெருமானே சம்பந்தப்பட்ட சங்கத்தமிழில் இறைத் தொடர்பு இல்லாமல் செய்வது எங்ஙனம் ?

இப்போ பாரு தம்பி, ராவண காவியம் னு ஒண்ணு இருக்கு. அதைப் பாடப் புத்தகத்துலே வச்சிருக்காங்க.எதுக்கு ? ராவணன் உத்தமன் என்பதாலா ? இல்லை மாற்றான் மனைவியை விழைவதால் மாணவர்களும் ஒரு உதாரணமாக வைத்துக் கொள்ளட்டும் என்றா ? இல்லை ராவண காவியம் எழுதிய புலவர்.குழந்தை தமிழ் நாட்டில் தி.மு.க.அனுதாபி என்பதாலா? என்ன நடக்கிறது இந்த தமிழ் நாட்டில் ?”.

பதில் சொல்லத் தெரியாமல் வாயடைத்து  நின்றிருந்தேன். அவரே தொடர்ந்தார்.

“இது ஒன்றும் வேண்டாம். எல்லாம் போகட்டும். வள்ளுவர் சிலை இப்போ கன்யாகுமரியில் இருக்கிறதே அதுவும் கடலைப் பார்த்துக்கொண்டு ? முதலில் சிலை எதற்கு அவருக்கு , அதுவும் அவ்வளவு செலவில் அதுவும் கன்னியாகுமரியில் ? வள்ளுவருக்கும் கன்னியாகுமரிக்கும் என்ன தொடர்பு ? அவர் திருவல்லிக்கேணியில் அல்லவா இருந்தார்? அங்கே அவருக்கு ஒரு கோவிலே இருக்கிறதே ! அவர் சொன்னது எல்லாம் விட்டுவிட்டோம் ஆனால் சிலை ஒரு கேடு. அவர் கள் உண்ணாமை பற்றி சொல்லி இருக்கிறார். ஆனால் அரசாங்கமே கள்ளுக்கடை நடத்துகிறது. அதனால்தானோ என்னவோ வள்ளுவர் நாட்டைப் பார்க்காமல் கடலைப் பார்த்துக்கொண்டு நிற்கிறார் …”. இப்போது ரொம்பவே கோபமாக இருந்தார் ஆசிரியர்.

“தமிழை வளர்க்கிறோம் என்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கினார்கள். என்ன வளர்ந்தது? எவ்வளவு ஆராய்ச்சி நூல்கள் வெளியிட்டுள்ளார்கள் ?  உலகப் பல்கலைக்கழகங்கள் வரிசையில் எந்த இடம் ? ஏன் இந்த வீழ்ச்சி ? தமிழர்கள் தான் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் மொழி என்று மார் தட்டிக் கொள்கிறோமே, தமிழ்ப் பல்கலைக்கழகம் இப்போது உலக அளவில் எந்த நிலையில் உள்ளது ? தமிழ் அறிஞர்கள் எல்லாரும் ஆட்சி செய்தார்களே அப்படியும் இந்த சீர்கேடு ..ஏன் என்று எபோதாவது கேட்டோமா ?

இந்த பல்கலைக்கழங்கள் நம் வரிப்பணத்தைத் தான் கொண்டு செயல் படுகின்றன. குடிமக்கள் கேட்டோமா ? ஆனால் விஸ்வரூபம் என்று ஒரு திரைப்படம் வெளியீடு தொடர்பாக இந்த நாடே கொதித்ததே , சமூக வலைத் தளங்கள் பற்றி எறிந்தனவே இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் ?

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த காலம் போய் இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கும் இந்த தமிழ்ச் சமுதாயம் எப்படி உருப்படப்போகிறது ?”   ரொம்பவே கொதித்துப் போயிருந்தார் ஆசிரியர்.

அவர் கேட்ட கேள்விகளுக்கும் பதில் தெரியவில்லை. மறுத்துப் பேசவும் புலமை இல்லை. அது கெடக்கு வேலையப்பாரு என்று கைத் தொலைபேசியில் “கோபமான பறவைகள்” விளையாடிக்கொண்டிருந்தேன் நான். வேறு என்ன செய்வது ? என் பகுத்தறிவு அவ்வளவே .