அ.முத்துலிங்கத்தின் 'நிலம் என்னும் நல்லாள்' சிறுகதை

அ.முத்துலிங்கத்தின் ‘நிலம் என்னும் நல்லாள்’ சிறுகதை கன்னத்தில் ஓங்கி அறைந்து உண்மையை உணர்த்தி, நிதர்சன உலகத்தைக் காட்டும் முயற்சி. இரண்டு விஷயங்கள் சொல்லப்படுகின்றன. நீண்ட நாள் போராளிகளாக இருப்பவர்கள் அந்தப் போராடடம் முடிவுற்று, பின் அந்தச் சூழலில் இருந்து விலகினால் யதார்த்த உலகத்தை எதிர்கொள்வது முடியாத ஒன்று.

இரண்டாவது: தான் எதற்காக தன்னையே அழித்துக்கொண்டு போராடினானோ, அந்தப் பிரக்ஞையே இல்லாமல் புலம் பெயர்ந்த மக்கள் படாடோப்பமான வாழ்வு வாழ்வதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. போராளிகள் எப்போதும் போராளிகளாகவே இருக்கிறார்கள். மண்ணுக்காகப் போராடியவர்கள் எந்த நாட்டினதாக இருந்தாலும் அந்த நாட்டின் மண்ணுக்கு விதையாகிறார்கள் என்பதாக அந்தக் கதை முடிகிறது. கதையின் முடிவு உணர்த்திடும் நிதர்சனம், ஒன்றரை டன் எடை திடீரென்று விழுந்தால் ஏற்படுத்தும் அதிர்வலைகளை மனதில் ஏற்படுத்துகிறது.

பிரபாகரன், ஈழம், புலிகள், மற்ற ஈழக் குழுக்கள், ஈழப் போராட்ட அரசியல் என்று ஆறு அதி-தீவிர புத்தகங்களைப் படித்தபின் இந்தக் கதையைப் படிக்க நேர்ந்தது. ஒரு நிஜமான போராளி இப்படித்தான் நடந்துகொண்டிருப்பான் என்னும் எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

தனி மனிதனின் பிடிவாதத்தின் காரணமாக மாண்டொழிந்த ஒரு லட்சம் மக்கள், கரு சுமக்க வேண்டிய பெண்டிர் வெடி சுமந்து அழிந்த  அவலம், பென்சில் பிடிக்கும்    பொடியன்கள் எரிகுண்டு கையாண்ட கொடுமை, இந்தப் படுகொலைகளுக்கு உரமளித்த புலம் பெயர்ந்தோர் மற்றும் அந்நிய அரசுகள், இவர்கள் அனைவரையும் வைத்து அரசியல் நடத்திய தமிழினத் தலைவர்கள் – இவை எல்லாம் ஒருசேரக்  கண் முன் வந்து சென்றன(ர்) இக்கதையைப் படித்து முடித்த போது.

‘பிள்ளை கடத்தல்காரன்’ என்னும் கதைத்தொகுப்பில் உள்ளது இக்கதை.

%d bloggers like this: