
வழக்கமான கிருஷ்ண ஜெயந்தி தான் என்று நினைத்திருந்தோம். பரத்ராமின் கால் கொண்டு கண்ணன் பாதங்கள் பதித்தோம். முறுக்கு, சீடை, சீயன் என்று பட்சணங்கள் தயார். ஆனால் கண்ணன் தான் வரவில்லை.
ஆண்டாள் அழைத்தவுடன் வந்த கண்ணன் நாங்கள் அழைத்து வரவில்லை. ஒரு தந்திரம் செய்தோம்.
ஆண்டாள் செய்ய முடியாததைச் செய்தால் வருவான் என்று ஒரு உபாயம். சொல்கிறேன் கதையை.
ஆண்டாள் திருமாலிருஞ்சோலைப் பெருமாளுக்கு நூறு தடா வெண்ணையும் நூறு தடா அக்கார அடிசிலும் கண்டருளப் பண்ணுவதாகப் பாடுகிறாள். ஆனால் அவளால் செய்ய முடியவில்லை.
ஆனால் 300 ஆண்டுகள் வழித்து அந்த ஊருக்கு வந்த இராமானுசர் ஆண்டாளின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார். நூறு தடா சமர்ப்பிக்கிறார். வில்லிபுத்தூரில் ஆண்டாள் அவரை ‘அண்ணரே’ என்று அழைக்கிறாள்.
எங்களால் நூறு தடாவெல்லாம் சமர்ப்பிக்க முடியாது. அதனால் ஒரு கையளவு கண்டருளப்பண்ணி அதை நூறு தடாவாக்கினோம். எப்படி ?
ஆண்டாளின் பாசுரத்தை சேவித்தோம் ( படித்தோம் ). இதோ அந்தப் பாசுரம் :
நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ
ஒரு மாற்றமும் இல்லை. இன்னுமொரு பாசுரம் சேவித்தோம். இதோ அது :
இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்நான்
ஒன்றுநூ றாயிரமாக் கொடுத்துப்பின்னும் ஆளும்செய்வன்
தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ் சோலைதன்னுள்
நின்ற பிரான்அடியேன் மனத்தேவந்து நேர்படிலே
ஒரு நிமிடத்தில் ஒரு கையளவு நூறு தடாவானது போன்ற ஒரு பாவனை ஏற்பட்டது.
வீட்டின் அழைப்பு மணி அடித்தது.
கண்ணன் வந்தான் 10 வயது கரண் வடிவில்.
கரண் பரத்ராமின் விளையாட்டுத் தோழன். சிங்கப்பூரில் இவனது முதல் நண்பனும் கூட.

பி.கு.: கரணின் தந்தை பெயர் கண்ணன் !!