கிருபானந்த வாரியாருக்கு நடந்தது..

கிருபானந்த வாரியாருக்கு நடந்தது இது தான்.

நெய்வேலி ஸத்-ஸங்கத்தில் வாரியார் ஸ்வாமிகளின் உபன்யாசம். அன்று ஸ்வாமிகளுக்குக் கடும் ஜூரம். சொற்பொழிவை ஓரிரு நாட்களுக்கு ரத்து செய்துவிடலாமா என்று ஸத்-ஸங்கம் மணித்வீபம் கமிட்டி தலைவர் சந்திரசேகரன் கேட்டார். ( அடியேனின் ‘பழைய கணக்கு’ நூலில் ‘தரிசனம்’ கதையில் வரும் டி.ஆர்.சி. மாமா இவரே) வாரியார் ஒப்புக்கொள்ளவில்லை. ‘முடிந்தவரை சொல்கிறேன். முருகன் பார்த்துக்கொள்வான்’ என்று, அன்று மாலை உபன்யாசம் நடந்தது.

அன்றிரவு ஸ்வாமிகளுக்குக் கடும் காய்ச்சல். விடியற்காலை 2 மணி சுமாருக்கு, பல காலிகளை உள்ளடக்கிய தி.க.கும்பல் ஸத்-ஸங்கம் மணித்வீபம் வீட்டில் ஜூரத்துடன் உறங்கிக்கொண்டிருந்த வாரியார் ஸ்வாமிகளை, வீடு புகுந்து தாக்கி, அவர் வழிபடும் லிங்கம், மற்றும் அவர் கழுத்தில் இருந்த லிங்கம் இரண்டையும் கீழே போட்டுத் தாக்கி அவமதித்தனர்.

தாக்குதலினால் மேலும் உடல் உபாதைக்கு உள்ளானார் ஸ்வாமிகள்.

கூச்சல் கேட்டு பிளாக்-2ல் இருந்து, அக்கம் பக்கம் வீட்டு மக்கள் ஓடி வர, கும்பல் கலைந்தது. சுமார் 20 ஊழியர்கள் போலீசில் புகார் பதிந்தனர் ( என் தந்தையார் உட்பட).

கடலூரில் இருந்து கலெக்டர் வந்திருந்தார் என்று என் தந்தையார் தெரிவிக்கிறார்.

ஸ்வாமிகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நெய்வேலி நிறுவனத்தின் சைனிக் பிரிவினர் காவல் இருந்தனர்.

தன் வாழ் நாளின் இறுதி வரை ஸத்-ஸங்கம் மணித்வீபத்திற்கு அவர் எழுந்தருளவே இல்லை. ஆனால் பல முறை ஸத்-ஸங்கம் தபோவனம் வந்தார். சிறுவனாக அவரது சொற்பொழிவுகளை முதல் வரிசையில் இருந்து கேட்டுள்ளேன். தேரழுந்தூர் கம்பன் விழாவிற்கும் வந்திருந்தார். புலவர் கிரன். ஸ்வாமிகள் மற்றும் என் பெரியப்பா முதலானோர் பங்குபெற்ற கம்ப ராமாயணப் பட்டிமன்றங்கள் தற்போதும் நினைவில் உள்ளன.

தாக்குதலுக்குப் பல ஆண்டுகள் கழித்து வாரியார் ஸ்வாமிகளிடம் ஒரு பெண்மணி ‘என் கணவருக்கு சிறுநீர் பிரிவதில் பிரச்னை உள்ளது. காப்பாற்றுங்கள்’ என்று வேண்ட, ‘நீ யாரம்மா?’ என்ற ஸ்வாமிகளிடம் கண்ணீர் விட்டபடி அந்தப் பெண்மணி ‘தங்களைத் தாக்கிய கூட்டத்தில் முக்கிய பங்காளி என் கணவரே’ என்ற அழுதார். ‘முருகா’என்று வேண்டியபடி ஸ்வாமிகள் விபூதிப் பிரசாதம் அளிக்க, அதை சுத்தமான நீரில் கலந்து உட்கொண்ட குற்றவாளிக்குக் குணமானது என்று அறிந்தோம். வாரியார் ஸ்வாமிகளும் தனது சுயசரிதையில் இவற்றைச் சுட்டியுள்ளார்.

ஆக, வாரியார்க்கு நடந்தது இது தான்.

வாழ்நாளின் இறுதி முச்சு வரை, தமிழையும், முருகப்பெருமானையும் மட்டுமே பேசி வந்த ஆன்மீகச் செம்மல் வாரியார் ஸ்வாமிகளை, தமிழை வாழ வைத்ததாகச் சொல்லிக் கொள்ளும் திக சமூக விரோதக் கும்பல்கள் நடத்திய விதம் இது தான்.

இது தான் திராவிட மாடலின் லட்சணம்.

ஆனால், அதற்கான பலனையும் எம்.ஜி.ராமச்சந்திரன் மறையும் வரை வனவாசத்திலேயே கழித்தனர் திமுகவினர். ‘ராமனுக்கே 14 ஆண்டுகள் தான், எனக்கு மட்டும் இன்னும் அதிகமாக உள்ளதே’ என்றும், ‘அமெரிக்காவில் தேறிவரும் எம்.ஜி.ஆர். திரும்பி வரும் வரை நான் ஆட்சியில் இருக்கிறேன். அவர் வந்தவுடன் அவரிடமே தந்துவிடுகிறேன். என்னை ஆட்சியில் அமர்த்துங்கள்’ என்று வெளிப்படையாகக் கேட்டவர் தான் கருணாநிதி.

மீண்டும் கிருபானந்த வாரியார் நிகழ்வு நடந்தால், 14 ஆண்டுகள் மட்டும் அன்றி, 140 ஆண்டுகள் பதவியும், கட்சியும் இல்லாமல் அல்லல் பட வேண்டியது தான்.

‘அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை’

நெய்வேலிக் கதைகள் – மதிப்புரை

கலைமகள் பத்திரிக்கையில் ‘நெய்வேலிக் கதைகள்’ நூல் மதிப்புரை வந்துள்ளது. வெளியிட்ட கலைமகள் நிறுவனத்தாருக்கு நன்றி.

நெய்வேலிக் கதைகள்

நூல் வாங்க, இங்கே சொடுக்கவும்.

கிண்டிலில் வாசிக்க இங்கே சொடுக்கவும்.

நெய்வேலிக் கதைகள் – விரைவில்

ஆ..பக்கங்கள்  ஃபேஸ்புக்கில் ‘நெய்வேலிக் கதைகள்’ என்றொரு தொடரைக் கடந்த ஒரு மாதமாக எழுதி வந்ததை நீங்கள் அறிவீர்கள். வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடராக அமைந்தது. இத்தொகுப்பின் முதல் தொகுதி நூலாக வெளிவருகிறது. இது குறித்த அறிவிப்புகளை விரைவில் வெளியிடுகிறேன்.

பேஸ்புக் தளத்தில் நீங்கள் இந்தக் கதைகளை வாசித்திருந்தால் உங்கள் மதிப்புரை / வாசிப்பனுபவம் எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுத்த சில மதிப்புரைகளை நூலில் சேர்க்கிறேன். முகவரி: amaruvi (@) gmail (.) com

நன்றி.

உபன்யாசங்கள் – சில நினைவுகள்

உ.வே.சா. தனது தந்தையாரின் காலத்தில் நடந்த உபன்யாசங்களைப் பற்றி ‘என் சரித்திரம்’ நூலில் எழுதுகிறார்.

அவரது தந்தையார் ஆற்றிய இராமாயண பிரசங்கம் பற்றி அனுபவித்து எழுதுகிறார். அனுமன் சஞ்சீவி மலையைக் கொண்டு வரும் முன்பு இருந்த நிலையைப் பற்றிய வர்ணனையில் சாதாரண மக்களும் பெரும் பாதிப்படைந்து அதிர்ச்சியில் ஆழ்ந்தனர் என்கிறார். அனுமன் வருகைக்குப் பிறகு மக்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர் என்கிறார். மக்களின் உற்சாகம் உபன்யாசகரையும் பீடித்தது என்கிறார்.

நான் இந்த நிலையைப் பல முறைகள் அனுபவித்துள்ளேன். நெய்வேலியில் புலவர் கீரன் உபன்யாசங்களின் போது கூட்டம் ஒரு பரவச நிலையிலேயே இருக்கும். வில்லிபாரதம் உபன்யாசத்தில் அவர் பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தையும் கொண்டு வந்து தக்க இடத்தில் சேர்த்து பெரும் உணர்ச்சி பொங்க ‘மாமனே மாமனே, யார் சொல்வார் இந்த ஆலோசனை?’ என்று துரியோதனன் சொல்வது போல பேசி நடித்து உரையாற்றுவார். ‘தாயம் உருட்டலானான், ஆங்கே சகுனி வென்று விட்டான்’ என்று ஒவ்வொன்றாக வைத்துத் தோற்கும் போதும் சொல்வார். என் பாட்டி கண்ணீர் விட்டதைப் பார்த்திருக்கிறேன்.

ஒருமுறை பாரத உபன்யாசத்தின் போது கூட்டத்தில் ஒரு பூரான் வந்துவிட, மக்கள் எழுந்து நின்றனர். ‘அப சர்ப்ப சர்ப்ப’ ஸ்லோகம் சொல்லுங்கோ. பூரான், உள்ளே பூரான்’ என்றூ சிலேடையாக அவர் பேசி நிலைமையைச் சமாளித்தார்.

அடியேனின் பெரியப்பாவின் உபன்யாசத்தில் பக்தி பெருகி வழியும். வால்மீகியில் துவங்கி, கம்பனில் திளைத்து, துளசியில் மூழ்கி, ஆழ்வார்களில் அமிழ்ந்து, நாராயணீயத்தில் நீந்தி அவர் சொல்லும் பாங்கே தனியாக இருக்கும். பலமுறை பாக்யம் பெற்றிருந்தேன். நெய்வேலியைத் தொடர்ந்து பம்பாயிலும், சென்னை வீனஸ் காலனியிலும்.

நெய்வேலிக்குக் கிருபானந்த வாரியார் அடிக்கடி வருவார். ஸத்ஸங்கம் மணித்வீபம் வராமல் தபோவனம் செல்வார். மணித்வீபக்காரர்கள் கீரனை அழைப்பார்கள். இப்படி ஒரு போட்டி நடக்கும். குழந்தைகளாக இருந்த எங்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – மணித்வீபத்தில் கீரன், முடிந்தவுடன் தபோவனத்தில் வாரியார். வாரியார் கேள்வி கேட்டுப் பதில் சொன்னால் குழந்தைகளுக்குப் புத்தகங்கள் பரிசளிப்பார். இதற்காக முன் வரிசையில் சென்று அமர்ந்துகொள்வதுண்டு.

ஒருமுறை சுவாமி சின்மயானந்தா வந்திருந்தார். பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசினார். கீதை பற்றிப் பேசினார் என்று நினைவு.

80களின் இறுதியில் ஶ்ரீவத்ஸ ஜெயராம சர்மா வந்திருந்தார். நாராயணீயம் பெரும் அமர்க்களமாக நடப்பதுண்டு. ந்ருஸிம்ஹாவதரம் அன்று தூண் பிளக்கும் நேரத்தில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்படும். தீபாராதனை மட்டும் உண்டு. அப்போது ந்ருஸிம்ஹாவதார சுலோகம் உச்ச ஸ்தாயியில் சர்மா அவர்கள் சொல்ல, அந்த நேரம் அங்கு ந்ருஸிம்ஹன் வருவான். மயிற்கூச்செறியும். இருமுறை அனுபவித்துள்ளேன். சிலர் மீது ந்ருஸிம்ஹன் வந்து கர்ஜனை செய்வான். பின்னர் அடங்கும்.

இவர்கள் தவிர, கருணாகரன் அவர்களின் உபன்யாஸம் நடந்ததுண்டு. ஆச்சாரிய ஸ்வாமிகள் வரும்போதெல்லாம் 10 நாட்களும் உபன்யாஸங்கள் உண்டு. ஸ்வாமிகள் செய்வதும், பண்டிதர்கள் செய்வதும் என்று ஜேஜே என்று ஸ்டோர் ரோடு மணித்வீபம் களைகட்டும்.

ராதா கல்யாணம், வினாயகர் சதுர்த்தி, ராம நவமி என்று ஆண்டு தோறும் உபன்யாசத் திருவிழாதான்.

இக்காலப் பிள்ளைகளுக்கு அம்மாதிரியான அனுபவங்கள் இல்லையே என்று பலமுறை எண்ணி வருந்தியதுண்டு.

அந்த நாட்கள் இனி வரப்போவதில்லை என்று தெரிகிறது. ஆனாலும் மனம் கேட்க மறுக்கிறது.

ஜீன்ஸ் மஹாத்மியம்

வெள்ளிக்கிழமை என்றால் ஜீன்ஸ் அணிந்து வர வேண்டும் என்பது என்ன கட்டாயம்? ஜீன்ஸ் பேண்ட் இல்லையென்றால் ஐயோ பாவம் போல் பார்க்கிறார்கள்.

ஜீன்ஸ் பேண்ட் மேல் எனக்கொன்றும் கோபமில்லை. ஆனால் இதுவரை அணிந்ததில்லை.

நான் 6 ம் வகுப்பு படிக்கும் போது அப்பா வேலை விஷயமாக டில்லி சென்றார். ‘எல்லாரும் வாங்கினாளேன்னு வாங்கினேன், குளிருக்கு அடக்கமா இருக்குமோன்னோ ‘ என்று எனக்கு ஒரு ஜீன்ஸ் வாங்கி வந்தார். நெய்வேலியில் அவ்வப்போது குளிரும்.

அந்த ஜீன்ஸ் தாராளமாகவே இருந்தது. தரையில் விரித்துப் படுத்துக் கொள்ளலாம். ஜில்லுப்பு ஏறாது. நானும் என் தம்பியும் பக்கத்து வீட்டு ரமேஷும் ஒரே நேரத்தில் அதனுள் புகுந்துகொள்ள அவ்வளவு தாராளமாக இருந்தது ஜீன்ஸ்.

3-4 வருஷங்கள் கழித்து ஜீன்ஸ் ஓரளவுக்கு முன்னேறியிருந்தது. அப்போது ரமேஷ் தேவைப்படவில்லை. நானும் தம்பியும் மட்டும் போதும்.

காலேஜ் போனபோது ஜீன்ஸை விட நான் வளர்ந்து விட்டதால் ஒருவழியாக அது வாசல் மிதியடியாக அம்மாவால் மாற்றி அமைக்கப்பட்டது. கடைசிவரை கிழியவே இல்லை. யாரும் போட்டுக்கொள்ள்வும் இல்லை. பாபு மட்டும் ரொம்ப தூரம் மூச்சிரைக்க ஓடிவிட்டு வந்தால் அதில் படுத்துக்கொள்வான். சிறிது நேரம் வால் ஆட்டிவிட்டுத் தூங்கிவிடுவான்.

டெக்ஸஸில் மாடு பிடிப்பவர்கள் ஜீன்ஸ் அணிவார்களாம். ஆமருவி என்று பெயர் இருப்பதால் நான் ஜீன்ஸ் அணிய வேண்டுமா என்ன? இன்று வரை அணிந்ததில்லை. அது மட்டும் அல்ல. ஜீன்ஸ் தயாரிக்க சாதாரண துணிக்குத் தேவைப்படுவது போல் பல மடங்கு தண்ணீர் தேவையாம். அந்தப் பாவம் வேறு வேண்டுமா என்ன? ஒரு வேளை இந்தக் குற்ற உணர்ச்சியால்தான் அதை அணிபவர்கள் ஜீன்ஸைத் துவைப்பதே இல்லையோ என்பதை முரணியக்கவாதிகள் ஆராயலாம்.

சில நாட்களுக்கு முன் ஒரு நாய்க்குட்டிக்கு ஜீன்ஸ் அணிவித்து அழைத்துச் சென்றுகொண்டிருந்தார் ஒரு பெண்மணி. இருவரில் யாரவது ஒருவர் தான் பூரணமாக உடை அணிந்திருக்க வேண்டும் என்று ஏதாவது அரசாணை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.சென்ற வாரம் ஐபோன்-எக்ஸ் ஏந்திய நவநாகரிகப் பெண்மணி ஒருவர் ரயிலில் வந்தார். கையில் லூயி வூட்டன் பை. அதனாலோ என்னவோ பாவம் முழங்கால்களில் கிழிந்த, வெளிறிய ஜீன்ஸ் அணிந்திருந்தார். ஐயோ பாவம், எவ்வளவுதான் செலவு செய்வார் என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த ஜீன்ஸ் விலை அதிகமாம். கிட்டத்தட்ட ஐபோன் விலையில் பாதி இருக்குமாம். இறைவன் அவருக்கு கிழியாத ஜீன்ஸ் அளிக்கட்டும்.இத்தனை செலவு செய்து கிழிந்த உடையைத் தேர்ந்தெடுப்பது ஏதாவது உளவியல் பிரச்சினையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இல்லை நான் தான் 16ம் நூற்றாண்டில் இருக்கிறேனோ தெரியவில்லை.பி.கு.: பாபு படுத்துறங்கிய ஜீன்ஸ் கடைசி வரை கிழியவில்லை. பாபுவும் அதைக் கிழிக்கவில்லை.

நெய்வேலியில் ஒரு இன்னொவேஷன்

‘இன்னொவேஷன்’ என்னும் சொல் இன்று படாத பாடுபடுகிறது. ஆனால் 80களிலேயே இன்னவேஷன் செய்ததைப் பகிர்கிறேன்.

1985ல் நெய்வேலியில் சைவர்கள் சிலர் சேர்ந்து நடராசர் கோவில் கட்டினார்கள். வெள்ளைவெளேரென்று சலவைக்கல் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, அதுவரை பார்த்திராத வகையில் அமைக்கப்பட்டது கோவில். ஏதோ ஆடிட்டோரியம் போல் இருக்கும் அக்கோவிலுக்குள் பளபளவென்று மின்னும் நடராஜர் கருணை மழை பொழிவார். ஆனால் நாங்கள் அங்கு போவதில்லை. போனாலும் போனதாக வெளியில் சொல்லிக் கொள்வதில்லை. இரண்டு காரணங்கள்.

  1. ஐயங்கார், சைவக் கோவில் பிரச்சினை.
  2. போனால் நடராஜர் மேல் சொல்வதற்கு சுலோகம் எதுவும் தெரியாது.

சிலமுறைகள் அங்கு சென்று பல்லாண்டுப் பாசுரம் பாடிய நினைவு உண்டு. ‘எல்லாரும் பெருமாள் தானேடா?’ என்று என் நண்பன் கிச்சியிடம் சொல்லியிருந்தேன். ‘இரு இரு, உங்காத்துல சொல்றேன் பார்,’ என்று சிலமுறைகள் மிரட்டியுள்ளான்.

சில நாட்கள் கழித்து, நடராஜர் கோவிலுக்குப் போவதற்குத் தடையாக இருந்த இரண்டாவது காரணத்தை உடைத்தான் என் தம்பி. இங்கு தான் ‘இன்னொவேஷன்’ வருகிறது.

அவன் நடராஜர் மேல் ஒரு பாடல் எழுதினான். இதோ அந்தப் பாடல்:

“ பாலும் தெளி தேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியின் தந்தையே நீ எனக்குச்

சங்கத்தமிழ் மூன்றும் தா “

சரி, சரி. இன்னொவேஷன் இல்லை. இம்ப்ரொவைசேஷன். போதுமா?

கொழுக்கட்டை மஹாத்மியம்

நெய்வேலியில் ஸத் சங்கத்துக்கு எதிரில் ஸ்டோர் ரோடு ஜங்ஷனில் மேடையில் நாலு பேரும், கீழே மூன்று பேரும், மொத்தமாக எட்டு பேர் (வாக்கிங் ஸ்டிக்குடன் நிற்கும் சிலையையும் சேர்த்து) கன்னா பின்னாவென்று வசை பாடிக்கொண்டிருந்தால் பிள்ளையார் சதுர்த்தி வந்துவிட்டது என்று அர்த்தம். சைக்கிளை சற்று வேகமாக மிதித்து வீடு வந்து சேர்ந்தால் பாட்டியாத்து கொழுக்கட்டை காத்திருக்கும்.
‘பாட்டி’ என்பது இரண்டு வீடுகள் தள்ளி இருந்த பிரகாஷின் பாட்டி, சுப்பிரமணியம் மாமாவின் மகன். பாட்டி எங்களுக்கும் பாட்டி தான். அவ்வளவு அன்பு. ‘பாட்டி ஆமருவிக்கும் கண்ணனுக்கும் குடுக்கச் சொன்னா’ என்று பிரகாஷ் கொண்டுவந்து கொடுத்திருப்பான்.
எங்கள் வீட்டில் விநாயகர் சதுர்த்து கொண்டாடுவதில்லை என்பதால் பசங்களுக்கு என்று பாட்டி கொடுத்தனுப்புவாள். அதை வெளிப்பாத்திரம் என்று சொல்லி தனியாக வைத்திருப்பார்கள். வெளியோ, உள்ளோ – எனக்கு அதனுள்ளிருக்கும் கொழுக்கட்டை தேவாம்ருதமாக இருக்கும்.
imagesஅதெப்படித்தான் ஐயர்கள் வெல்லம் வைத்து கொழுக்கட்டை செய்கிறார்களோ என்று வியந்ததுண்டு. எல்லா ஐயர் வீடுகளிலும் ஒரே சுவையுடன் பிள்ளையார் கொழுக்கட்டை இருப்பது ஆராயும் சீர்மைத்தே.
ஒருமுறை எங்கள் பிடுங்கல் தாங்காமல் வீட்டில் அதே போல் கொழுக்கட்டை செய்கிறேன் பேர்விழி என்று வெல்லம் போட்ட உப்புமா கீண்டப்பட்டதை நெய்வேலி கெஜட்டில் போட்டது லோக பிரசித்தம்.
பிறகு புதிய முறையில் ‘காரடையான் நோன்பு கொழுக்கட்டை’ செய்கிறேன் என்று துவங்கி, அதில் வெல்லம், உப்பு என்று இரண்டு வகை செய்யப்பட்டது. அடுத்த ஒரு வாரம் எங்களுக்கு கிரிக்கெட் விளையாட பந்துக்குப் பஞ்சமில்லாமல் ஆனது. Reduce, Reuse, Recycle என்று சிங்கப்பூரில் இப்போது சொல்கிறார்கள். நாங்கல்லாம் அப்பவே அப்புடி என்று சிங்கப்பூர் அரசுக்குச் சொல்லலாம்.
images-2ஐயங்கார்கள் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுவதை சாமர்த்தியமாகச் செய்வார்கள். மண் பிள்ளையாரை வாங்கி அவருக்குத் திருமண் இட்டு, ‘தும்பிக்கையாழ்வார்’ என்று நாமகரணம் பண்ணி, அவருக்குப் பக்கத்தில் பெருமாள் படத்தையும் ஏள்ளப்பண்ணிவிடுவது சில ஐயங்கார்களின் வழக்கம். யாராவது வைதீகர்கள் வந்துவிட்டால் ‘பசங்களுக்காக, கொஞ்சமா, நம்ம சம்பிரதாயப்படி..’ என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இவ்வளவு மழுப்பாமல் ‘கொழுக்கட்டை சாப்பிட ஆசையாக இருந்தது’ என்று சொல்லியிருக்கலாம்.
எங்கள் வீட்டில் இந்த வழக்கம் இல்லை. பிரகாஷின் பாட்டி இருந்தாரோ பசங்கள் நாங்கள் பிழைத்தோம்.
இப்படியாக இருந்த எங்கள் கொழுக்கட்டைத் தொடர்பு ஒரு நாள் நின்றுபோகும் போல் ஆனது. பிரகாஷ் பாட்டி காலமானார். பாட்டி போனது துக்கம் தான் என்றாலும் ‘இனி கொழுக்கட்டை கிடைக்குமோ கிடைக்காதோ’ என்கிற தவிப்பு இருந்தது வாஸ்தவம்.
அடுத்த வருஷம் பிள்ளையார் சதுர்த்தி அன்று வாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்து கொண்டிருந்தேன். நேரம் ஆகிக்கொண்டிருந்தது. பிரகாஷையோ, அவன் தம்பி ஶ்ரீதரையோ காணவில்லை. ‘சரி நமக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான்’ என்று எண்ணி நொந்து போய் பாடம் படிக்க உட்கார்ந்தேன்.
பிரகாஷ் வேகமாக வந்தவன், ‘அம்மா குடுக்கச் சொன்னா’ என்றான்.
பிள்ளையார் கைவிடவில்லை.

சொந்தம்

‘இதென்ன, ப்ராமினா? அப்பா பேர் ஏதோ ஐயங்கார்னு போட்டிருக்கு? இங்க வாங்க மிஸ்டர்,’ என்றார் டேவிட் ஞானாசீர்வாதம்.

கடலுர் எம்ப்ளாய்மெண்ட் ஆபீசில் இருந்து ஸ்டேட் எஜுகேஷன் டிபார்ட்மெண்ட்ல் எல்.டி.ஸி (Lower Division Clerk) வேலைக்குப் போகச் சொல்லி வந்த இண்டர்வியூ கார்டை பார்த்தபடியே வந்தான் 17 வயது தேவா. 1962ல் இப்படி இண்டர்வியூ கார்ட் வந்தால் வேலை உறுதி.

‘பெருமாள் கண்ணைத் தொறந்துட்டார். பத்தானியாத்து கடனை அடைச்சுடலாம். நன்னா பார்த்து வேலை செய்டா. நல்ல பேரோட நன்னா இரு,’ வாழ்த்தி அனுப்பியிருந்தாள் அம்மா.

‘நீயும் வாம்மா கடலூருக்கு. வந்து எனக்குத் தளிகை பண்ணிப்போடு,’ எப்படியும் வரப் போவதில்லை, கேட்டு வைப்போம், வந்தால் அவளுக்கும் ஒரு மாறுதலாக இருக்கும் என்ற நப்பாசையில் கேட்டான் தேவா. நார்மடிப் புடவையுடன் அவள் வீட்டை விட்டே வருவதில்லை என்றாலும் அம்மாவாயிற்றே, அழைத்துக் கொண்டு போகலாம் என்ற எண்ணம் தான்.

‘நன்னாருக்கு. நீ போய் வேலை செஞ்சுண்டு தனியா இருந்தா ரெண்டு காசு சேரும். அப்பாவோட காரியத்துக்கு வாங்கின கடன், பத்தானியாத்துக் கடன்னு ஏகப்பட்டது இருக்கு. என்னையும் அழைச்சுண்டு போனா, பொண்ணையும அழைச்சுண்டு வரணும். செலவு ஆகாதா? இதெல்லாம் எப்படி அடைக்கறது?’ என்ற எதிர்பார்த்த பதில் கிடைத்தது.

‘என்ன மிஸ்டர், இஸ் யுவர் பாதர்  அன் ஐயங்கார்? ஆர் யூ நாட் ப்ரம் பாக்வார்ட் கிறிஸ்டியன் கம்யூனிட்டி?’ என்ற டேவிட் ஞானாசீர்வாதம் அப்போது தான் நிமிர்ந்து, திருமண்ணுடன் நின்ற தேவாவை முதல் தடவையாகப் பார்த்து, கண்கள் விரிந்தார்.

‘ப்ளடி ஹெல். ஐம் சாரி மை பாய். இந்த எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ்ல கொழப்பிட்டாங்க. இந்த எல்.டி.சி. போஸ்ட் ரிஸர்வ்ட் கம்யூனிட்டிக்கு. உங்க பேர் கொஞ்சம் அப்பிடியும் இப்பிடியுமா இருக்கு. ப்ராமின்லயும் தேவநாதன்னு பேர் வைப்பாங்களா?’ என்றார்.

‘ஆமாம் ஸார். இங்க பக்கத்துல திருவஹீந்திரபுரம்னு ஒரு ஊர். அந்த பெருமாள் பேர் தேவநாதன்,’ வாய் மட்டும் சொல்லிக்கொண்டிருக்க, மனது பத்தானியாத்துக் கடன், கோபால் முதலியார் மாட்டுக் கடன் என்று கணக்குப் போட்டது.

‘ஓகே. ஐம் சாரி. நான் உங்கள முதல்லயே பார்த்திருக்கணும். யூ மே ஹாவ் டு லீவ்’ என்றவர் கீழே குனிந்து கொண்டார்.

‘அப்ப என் வேலை? நீங்க டைப் அடிக்க சொன்னதா ப்யூன் சொன்னாரே?’ வேலையை எப்படி விடுவது ?

‘அடுத்த அப்பாயிண்ட்மெண்ட் பையன் பார்த்துப்பான். நீ எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ் போப்பா.’

திடீரென உலகம் இருண்டு, கால்களில் வலு இன்றி சேரில் அமர்ந்த தேவாவின் தோளைத் தொட்ட டேவிட் ஞானாசீர்வாதம், ‘ஆர் யூ ப்ரம் எ புவர் பேமிலி?’ என்றார், தேவாவின் வேஷ்டியையம் கால் செருப்பையும் பார்த்தபடி.

எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸில் சூப்பரிண்டெண்ட், ‘மிஸ்டர் தேவநாதன், உங்க கேஸ் பத்தி டேவிட் சொன்னார். அடுத்த மாசம் நெய்வேலில எல்.டி.சி. வேலைக்கு ஆள் எடுக்கறாங்க. உங்க பேர மொதல்ல போடச் சோல்லியிருக்கார். நீங்க அவருக்குச் சொந்தமா?’ என்றார்.

‘சொந்தம் தான். ஒரு வகையில், எல்லாரும்’  நினைத்துக் கொண்டான் தேவா.

ஹிந்துல என்ன போட்ருக்கான் ?

‘இன்னிக்கு என்ன படிச்ச?’ என்று அப்பா கேட்டால் அது பாடம் தொடர்பான கேள்வி அல்ல. அன்றைய ஹிந்துவைப் பற்றியது. #நெய்வேலி நாட்கள் ஹிந்து இல்லாமல் இருந்ததில்லை.

தம்பிக்கு ரொம்ப சுலபம். கபில் தேவ், ஸ்ரீகாந்த், ரவி சாஸ்திரி என்று சொல்லி தப்பித்துவிடுவான். அவன் படிப்பது ஆர்.மோஹன் எழுதும் கிரிக்கெட் பக்கங்கள் மட்டுமே.

எனக்கு மார்கரெட் தாட்ச்சரில் இருந்து, ரீகன், டெங் ஷாபெங், ஜியா உல் ஹக் என்று பலரது பெயரையும் சொல்லியாக வேண்டும். இத்தனை பேரும் அந்தந்த நாட்டில் இல்லாமல் கண்டபடி ஊர் சுற்றி, ஒருத்தரை ஒருத்தர் பார்த்து, இப்படி தினமும் பிராணனை வாங்குவானேன்?’ என்று அவர்களைப் பலமுறை சபித்திருக்கிறேன்.

‘தாட்சர் என்ன சொன்னார்?’, ‘இந்திரா காந்தி பார்லிமெண்டில் என்ன பேசினார்?’, ‘ஜார்ஜ் பெர்னாண்டஸ்ற்கு பம்பாயில் என்ன நடந்தது?’ கேள்விகள் இப்படிப் போகும்.

தாட்சரும், இந்திரா காந்தியும் பேசாமல் இருந்தால்தான் என்ன ? கிளாசில் எங்களை எல்லாம் பேசாதே பேசாதே என்றுவிட்டு. இப்படித் தலைவர்கள் எதற்குப் பேச வேண்டும்? அவாளுக்குள்ள ஏதோ பேசிக்கறா, அதை இந்த ஹிந்து வேலை மெனக்கெட்டு எதுக்கு எழுதணும்? ‘என்ன பேசினா, என்ன பேசினான்னு இவர் ஏன் என் பிராணனை வாங்க வேண்டும்?’ என்று நினைத்ததுண்டு.

‘பேப்பர்ல என்னடா போட்ருக்கான்?’ என்று பாட்டி கேட்பதற்கு வேறு காரணம் உண்டு. ஹிந்துவில் கடைசிப் பக்கத்தில் ஆபிச்சுவரி பற்றியது பாட்டியின் கேள்வி. ‘ஏதாவது அய்யங்கார் பெயராக இருக்கக் கூடாதே’ என்று வேண்டாத பெருமாள் கிடையாது. ஏனென்றால் யாராவது ‘மல்லியம் கிருஷ்ணசுவாமி அய்யங்கார் ஆச்சாரியன் திருவடி அடைந்தார்’ என்று இருந்தால் எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். யாரோ ஊர் பேர் தெரியாத பிராமணன் மண்டையைப் போட்டு, இந்த வருஷம் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் உலை வைத்துவிடுவாரோ என்கிற பயம் தான்.

‘யாரும் அய்யங்கார் பேர் இல்லை பாட்டி’ என்று சொல்லி டபாய்க்கலாம் என்றால், மத்தியானம் பொழுது போகாத வேளையில் (அ) ஹிந்து பேப்பரில் மாவு சலிக்கும் சுபயோக சுப நாழியில், ‘கே ஆர் ஐ எஸ் எச் என் ஏ என்’ என்று எழுத்துக் கூட்டிப் படித்து அந்த வருஷம் தீபாவளிக்கு வேட்டு விழுந்ததும் உண்டு.

இதை ஒருவாறு அறிந்துகொண்ட அப்பா, பாட்டியிடம், ‘போட்டிருக்காம்மா. நம்மடவா பேரா இருக்கு. ஆனா டெல்லில இருந்தாளாம். நமக்கு யாரும் தாயாதி டெல்லில இல்லியோன்னோ?’ என்று சமாளிப்பார். எந்த தாயாதியும் இல்லாதிருக்க வேண்டுமே என்று ஸத்-ஸங்கம் பிள்ளையாரிடம் பலமுறை வேண்டியுள்ளேன். அய்யங்கார் பெயர் இல்லாமல் இருக்க பிள்ளையார் உதவி செய்தார். மத நல்லிணக்கம் இது தான் போல.

சில சமயம் யாராவது ‘சிவபதம் சேர்ந்தார்’ என்று போட்டு ஏதாவது பெயர் இருக்கும். அவர் சிவபதம் தான் சேர்ந்தாரா? அவருக்கு கிருஷ்ணன் மேல் அபிமானம் ஏற்பட்டு ஒரு வேலை வைகுந்தம் ஏகியிருக்க மாட்டாரா என்று யோசித்ததும் உண்டு. ஆனால் யாரிடமும் கேட்டல்லை. தைரியம் இல்லை. அவ்வளவுதான்.

ஆனால் இந்திரா காந்தி இறந்த போதும், அதன் பின்னர் ராஜிவ் காந்தி இறந்த போதும் அப்பாவும், பாட்டியும் ரேடியோவையும் ஹிந்துவையும் கட்டிக் கொண்டு அழுத அழுகை இன்றும் கண்ணில் நின்றாலும், எம்.ஜி.ஆர்.இறந்ததைக் கேள்விப்பட்டு பாட்டி,

‘வயசாயிடுத்து, போயிட்டுப் போறான். ஆனா அந்த பொம்மனாட்டியை இப்பிடிப் பாழாக்கிட்டுப் போக வாண்டாம். நன்னா கல்யாணம் பண்ணிண்டு கொழந்தை குட்டின்னு இல்லாம, இவுளும் அவன் பின்னாடியே போனா.வேற யாராவது பேர் போட்ருக்கானா பாருடா,’ என்றாள்.

2002ல் பாட்டி பெயர் வந்தது. பார்க்க பாட்டி தான் இல்லை.

தற்போதெல்லாம் ஹிந்து ஆபிச்சுவரி பார்ப்பதில்லை. ஏனெனில் ஹிந்து வாங்குவதில்லை.

சிந்துஜா

#நெய்வேலி ஸ்டோர் ரோடின் பெயர் ஏன் ஸ்டோர் ரோடு என்று வைத்தார்கள் என்று உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. ஏனெனில் ஊர்க்காரர்களுக்குமே தெரிந்திருக்கவில்லை.

அது ஒரு ஜங்ஷன். 12 தெருக்கள் ஒரு புள்ளியில் சேரும் இடம். 12 சந்தி என்று சொல்லலாம். அங்குதான் ராமசாமி நிற்பார். இரண்டெழுத்து இனிஷியல்காரர். ஹாஸ்பிடல் ரோடு என்று இருந்ததை மாற்றி, சிலை இருந்ததால் அவரது பெயரை வைத்தார்கள். சிலை இருந்தாலும், ஈரெழுத்து சதுக்கம் என்று பெயரிட்டாலும், அந்த ஜங்ஷன் ‘ஸ்டோர் ரோடு’ என்றே அறியப்பட்டது.நிற்க.

ஸ்டோர் ரோடை ஒட்டியே ஸத்-ஸங்கம் மணித்வீபம் அமைந்திருக்கும். அங்கு ஸத்-விஷயங்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். இனிஷியல்காரர் சிலையின் கீழ் அஸத்துகள் கூடி அசாத்யமாகப் பேசுவார்கள். பிள்ளையார் சதுர்த்தியின் போது ஏக விசேஷம். அதே வாரத்தில் ஈரெழுத்து இனிஷியல் சிலைக்கும் பிறந்தநாள் வரும். மண்டகப்படி ஆரம்பம்.

பிள்ளையாருக்கு அபிஷேகம் நடக்கும் போது சிலை தொழும் தொண்டர் சிலை கீழிருந்து சொல்மாலை புனைவர். அதான் ஸார், அவனே, இவனே என்று அர்ச்சனை. ‘தா’ என்றும் ‘ழி’ முடியும் வார்த்தைகள் சரளமாக வந்து விழும். இடையிடையே தமிழைப் பாதுகாப்போம் என்றும் செல்வார்கள்.

ஆனால் ஒன்று. அடுத்த நாள் பொழுது விடிந்ததும் ஸத்-ஸங்கத்தில் கூட்டம் மீண்டும் கூடி அபிஷேகம், ஆராதனை என்று இருக்க, சிலை தனியாக நிற்கும். முதல் நாள் இரவு பணம் வாங்கிக்கொண்டு பேசியவர்கள் அடுத்த கூட்டத்துக்குப் போக வேண்டாமா என்ன? பகுத்தறிவு முக்கியம் இல்லையா?

அந்தக் கூடடத்தில் தான் சிந்துஜா அறிமுகம். நல்ல பளீர் ரோஜா நிறம். பார்த்தால் நெய்வேலி போல் தெரியவில்லை. ஒரு வேளை ஸ்டேட் பாங்க் மானேஜர் பெண்ணாக இருக்கலாம் என்று நாங்கள் பேசிக்கொண்டோம். கொண்டோம் என்ன? கொண்டேன். போதுமா?

‘சுப்பு மாமா அபிஷேகத்துக்கு வரச் சொல்லியிருக்கார்’, ‘கோவில்ல பந்தி பரிமாற டி.ஆர்.சி. மாமா வரச் சொல்லியிருக்கார்’ , ‘பிரசாதம் பொட்டலம் , கவர் போட யஞ்ய நாராயணன் மாமா வரச்சொன்னார்’ என்று அன்று வரை கோவிலையே எட்டிப் பார்க்காத நண்பர்கள் திடீரென்று மணித்வீபத்தையே மொய்த்தனர்.

காரணம் பிள்ளையார் அல்ல என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

சில மாதங்கள் பக்தி பெருக்கெடுத்து ஓடியபின் நண்பர்களைக் கோவிலில் காணவில்லை.

‘டியூஷன் போறேன், நேரமில்லை’, ‘பார்ட் டைம்ல வள்ளி பிரிண்டர்ஸ்ல ஒர்க் பண்றேன், டைம் இல்லை’ போன்ற நம்பத்தகாத காரணங்களைக் கூறினார்கள்.

ஸ்டேட் பாங்கிற்குப் புது மானேஜர் வந்திருந்தார்.

%d bloggers like this: